Thursday, November 17, 2011

உலக மக்கள்தொகை ஓர் அச்சுறுத்தலா?


உலக மக்கள்தொகை ஓர் அச்சுறுத்தலா?
 கான் பாகவி
2011 நவம்பரில் உலக மக்கள் தொகை 700 கோடியை எட்டியது. இதில் 20 விழுக்காடு (அதாவது 140 கோடி மக்கள்) சீனாவில் உள்ளனர். இதில் 17.28 விழுக்காடு (அதாவது 121.1 கோடி மக்கள்) இந்தியர்கள். அமெரிக்கர்களின் மக்கள் தொகை வெறும் 35 கோடி (அதாவது 5 விழுக்காடு)தான்.
2025ல் இந்திய மக்கள் தொகை 150 கோடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் 2001ல் 15.8 கோடியாக இருந்த ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2011ல் 50 லட்சம் (அதாவது 31 விழுக்காடு) குறைந்துபோயிருக்கிறது. இருந்தாலும், 2001ல் 103 கோடியாக இருந்த இந்திய மக்கள் தொகை 20011ல் 121 கோடியாக உயர்ந்துள்ளது.
அதாவது 18 கோடி அதிகம். எண்ணிக்கையைப் பொருத்த வரை இது கூடுதலாக இருந்தாலும், வளர்ச்சி விகித்தைப் பொறுத்த வரை குறைவாகும். கடந்த 10 ஆண்டுகளை ஒப்பிடும்போது வளர்ச்சி விகிதம் 176 விழுக்காடு குறைந்துள்ளதாம்!
குடும்பக் கட்டுப்பாடு
மக்கள் தொகை அதிகரிப்பதால்தான் நாட்டில் வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டமும் ஏற்படுகிறது என்று மேற்கத்திய உலகம் தீவிரமாகப் பிரசாரம் செய்த்து. இதை நம்பிய சீனாவும் இந்தியாவும் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைத் தீவிரமாக்க் கடைப்பிடித்தன.
இந்த விஷயத்தில் இந்தியாவைவிட சீனாவே தீவிரம் காட்டியது. சீனாவில் குடும்பத்துக்கு ஒரு குழந்தை எனும் திட்டம் செயலில் உள்ளது. அரசின் கடுமையான விதியாக இது உள்ளதால், விதியை மீறினால் படிப்பு முதல் வேலைவாய்ப்பு வரையிலான அரசின் எந்தச் சலுகையும் அந்தக் கூடுதல் குழந்தைக்குக் கிடைக்காது. இதனால் அங்கு மக்கள் தொகை வெகுவாக்க் குறைந்துவருகிறது.
இந்தியாவில் குடும்பக் கட்டுப்பாடு நெருக்கடி காலத்தில் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டது. 1975ல் மட்டும் 70 லட்சம் பேருக்குக் கட்டாயக் கருத்தடை செய்யப்பட்டது. சஞ்சய் காந்தியின் இந்த அட்டூழியத்தால், அடுத்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த்து. பிறகு அரசு நிர்வாகம் சற்று நிதானம் காட்டிவருகிறது.
இருந்தாலும், நாம் இருவர்; நமக்கு இருவர் என்ற கோஷத்தை எழுப்பிவந்த அரசு இப்போது, வீட்டுக்கு ஒரு குழந்தைத் திட்டத்தைச் செயல்படுத்த முனைகிறது;  திட்டத்தைத் தீவிரப்படுத்த அஞ்சுகிறது.
உலக நிலப்பரப்பில் இந்திய நாட்டின் அளவு வெறும் 2.4 விழுக்காடுதான்; ஆனால் உலக மக்கள் தொகையில் இந்தியர்களின் அளவு 18 விழுக்காடு என்றால், நாட்டில் எப்படி வளம் கொழிக்கும் என்று கேட்போரும் உள்ளனர்.
அமெரிக்காவைப் பார்த்து...
அமெரிக்காவின் முன்னேற்றத்திற்கும் வளத்திற்கும் குறைந்த மக்கள் தொகையே காரணம் என்ற கருத்து உலகமெங்கும் பரப்பப்பட்டது. இதை நம்பியே, மூன்றாம் உலக நாடுகள் தம் மக்கள் தொகையைக் கடுமையாகக் குறைத்தன.
ஆனால், என்ன ஆனது? அமெரிக்காவில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லாதோரின் எண்ணிக்கை 10 விழுக்காடு அதிகமாகியுள்ளது. அங்கு மக்கள் தொகையில் ஐந்து விழுக்காடு உள்ள பெரும் பணக்காரர்களின் வருவாய் பெருகியது. நடுத்தர மற்றும் அடித்தட்டு வர்க்கத்தின் வருமானம் தேக்கம் கண்டுவிட்டது. நாட்டின் மொத்த வருவாயில் 8 விழுக்காடாக இருந்த மேல்தட்டு வர்க்கத்தின் பங்கு இப்போது 20 விழுக்காடாக உயந்திருக்கிறது.
நிகாராகுவா, கானா, துருக்மேனிஸ்தான் போன்ற பஞ்ச நாடுகளில் காணப்படும் பொருளாதார ஏற்றத்தாழ்வு இன்று அமெரிக்கர்களிடையே காணப்படுகிறது. ஆண்டுதோறும் பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்யும் அமெரிக்க அரசு நிதி நெருக்கடியைச் சமாளிக்க கூடுதல் வரி விதிக்கிறது. வரி உயர்வால் நுகர்வு குறைகிறது. இது உற்பத்தியையும் பாதிக்கும்; பங்குச் சந்தையில் முதலீடும் குறையும்.
ஐரோப்பிய நாடுகளையும் பொருளாதார நெருக்கடி விட்டுவைக்கவில்லை. கிரேக்கத்தில் தொடங்கிய இந்நெருக்கடி, போர்ச்சுகல், ஸ்பெயின், இத்தாலி என வேகமாக மற்ற நாடுகளுக்கும் பரவிவருகிறது. பொருளாதார நெருக்கடியால் ஐரோப்பாவே கலகலத்துப் போயிருக்கிறது.
முதலாளித்துவ கொள்கைக்கு எதிராக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ‘வால்ஸ்ட்ரீட்எனும் இடத்தில் 2011 அக்டோபர் 15ல் போராட்டம் வெடித்த்து. இப்போராட்டம் 82 மேலை நாடுகளில் உள்ள 951 நகரங்களுக்குப் பரவியது. இங்கிலாந்து, இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெய்ன், போர்ச்சுகல் என எல்லா ஐரோப்பிய நாடுகளும் இப்போராட்டத்தைச் சந்தித்தன.
பெரிய நிறுவனங்களுக்கும் முதலாளித்துவக் கோட்பாடுகளுக்கும் நிதிநிறுவனங்களின் நசிவுக்கும் எதிராகப் போராட்டக்காரர்கள் குரலெழுப்பினர். வால்ஸ்ட்ரீட்டை கைப்பற்றுவோம்; முதலாளித்துவத்தின் மேலாதிக்கம் ஒழிக; ஜனநாயகத்தை விற்காதீர்கள் என்பதே அவர்களின் கோஷமாக இருந்தது.
மக்கள் தொகை குறைந்ததால் அமெரிக்காவிலோ ஐரோப்பாவிலோ தேனாறும் பாலாறும் ஓடவில்லை. ஊரை அடித்து உலையில் போட்டு வயிறு வளர்க்கிறார்கள். வேலையில்லாத் திண்டாட்டம், கல்விக்கும் சுகாதாரத்துக்குமான மானியங்களைக் குறைத்ததுதான் மக்களைத் தெருவுக்கு அழைத்துவந்துவிட்டது.
1999ல் 17 ஐரோப்பிய நாடுகள் சேர்ந்து ‘யூரோவை தங்களின் பொது நாணயமாகப் பிரகடனப்படுத்தின. ஆனால், அமெரிக்க டாலரைப் போலவே ஐரோப்பாவின் யூரோவும் அடிவாங்க ஆரம்பித்துவிட்டது.
யூரோ மண்டலங்களிலும் பல பெரிய வங்கிகள் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. பங்குச் சந்தைகளில் ஐரோப்பிய பங்குகள் சரிவைச் சந்தித்துவருகின்றன. எல்லா ஐரோப்பிய நாடுகளும் கடனில் மூழ்கி த்ததளிக்கின்றன. 
சீனாவின் பரிதாபம்
இந்தியாவைவிடக் கூடுதல் மக்கள் தொகை கொண்ட சீனா, வறுமையைப் பயந்து குடும்பக் கட்டுப்பாட்டைக் கடுமையாகச் செயல்படுத்தியது; அடுத்த தலைமுறையை உருவாக்கத் தவறியது; உழைக்கும் இளம் கரங்களைக் கருவிலேயே அழித்தது.
இதனால் சீனாவில் சிறியவர்களைவிட முதியோரும் நடுத்தர வயதினருமே அதிகமாக உள்ளனர். அங்கே 20 வயது முதல் 30 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களின் மொத்த தொகையும் 50 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களின் மொத்த தொகையும் சமமாக உள்ளன.
எனவே, நாளைய சீனாவை உருவாக்கும் இளந்ததளிர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுவிட்டது. இதையடுத்து மனித ஆற்றல் குறைந்துபோய் சீனா விழிபிதுங்கிக்கொண்டிருக்கிறது.
இந்தியாவின் இரண்டுங்கெட்டான் நிலை
இந்தியாவில் படித்து நல்ல வேலையில் அமர்ந்து கைநிறைய சம்பாதிக்கும் ஒரு வர்க்கம் உருவாகிவிட்டது. தான், தன் சிறிய குடும்பம், தன் வேலை, தன் தேவைகள் என்ற குறுகிய வட்டத்திலேயே வாழ்ந்து பழகிவிட்ட இந்த இளம் தம்பதியினர், தங்களைத் தவிர வேறு யாரைப் பற்றியும் சிந்திப்பதே இல்லை. பெற்றோர், உடன்பிறந்தோர், உறவினர் எல்லாம் இவர்களுக்குக் கசப்பான சுமைகள்.
இவர்கள் எண்ணி, எண்ணி ஆளுக்கொரு பிள்ளை என ஆண் ஒன்று; பெண் ஒன்று பெற்றுக்கொள்கின்றனர். இரண்டோடு கர்ப்பத் தடை செய்துகொள்வோரே அதிகம். மிகச் சிலர், கர்ப்பத் தடை செய்துகொள்ளாமலேயே பிள்ளைப் பேற்றைத் தவிர்த்துவிடுகின்றனர். இவர்களுக்கெல்லாம் தங்கள் சுகம் மட்டுமே குறிக்கோள். கூடுதல் குழந்தைகள் சுகத்தைப் பங்குபோட்டுவிடும் என அஞ்சுகின்றனர். அதிக எண்ணிக்கையில் படித்த தலைமுறையை உருவாக்குகின்ற அரிய வாய்ப்பை இந்த வர்க்கம் திட்டமிட்டே வீணாக்கிவிடுகிறது.
இவர்களுக்கும் வறுமை பற்றிய பயம்தான் மேலோங்கி நிற்கிறது. பெரும் செல்வந்தர்கள்கூட, நான்கைந்து குழந்தைகளைப் பெற்றுக்கொண்டால் சொத்து பிரிந்து, வாரிசுகள் சிறிய செல்வந்தர்களாகிவிடுவார்கள் என்றே அஞ்சுகின்றனர். இவர்களும் ஒரு வகையில் அஞ்சுவது வறுமையைத்தான்.
இவர்களே இப்படியென்றால், நடுத்தரக் குடும்பத்தினரைப் பற்றிச் சொல்ல வேண்டுமா? மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் த்ததளிக்கும் அவர்களின் குடும்பங்களில் வாரிசுகளின் எண்ணிக்கை குறைவுதான். சிலர் மட்டுமே எதற்காகவும் அலட்டிக்கொள்ளாமல் நான்கைந்து குழந்தைகளைப் பெற்றுக்கொள்கிறார்கள்.
வறுமை கோட்டிற்குக் கீழே சாலைகளிலும் சேரிகளிலும் வசிப்பவர்களின் நிலை வித்தியாசமானது. அவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை; நிறைய குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள அவர்கள் அஞ்சுவதில்லை. பெற்றால் மட்டும் போதுமா? பேணி வளர்க்க வேண்டும் தெரியுமா? என்ற இலக்கணமெல்லாம் இவர்களுக்குத் தெரியாது. படிக்க வைத்தல், வேலை வாங்கித் தருதல், பண்பாடுகளைப் பழக்குதல், ஒழுக்கம் கற்பித்தல் போன்ற சுமைகளை இவர்கள் ஏற்பதில்லை. பிறந்தவன், தன் போக்கில் வளர்வான் என்பது இவர்களின் சித்தாந்தம்போலும்!
ஆனால், அவர்களின் நிலையிலும் இன்று நிறைய மாற்றங்கள் தென்படுகின்றன. நாம்தான், படிக்காமல் போனதால் இந்த நிலைக்கு ஆளாகிவிட்டோம்; நம் குழந்தைகளை அப்படி விட்டுவிடக் கூடாது என்ற விழிப்புணர்வு சாமானிய மக்களுக்கும் ஏற்பட்டுவிட்டது. இதனால், கஷ்டப்பட்டு பிள்ளைகளைப் படிக்கவைக்கிறார்கள். அரசு வழங்கும் பல்வேறு உதவிகள் அவர்களை ஊக்கப்படுத்துகின்றன.
இதனால், தாழ்த்தப்பட்டோரிலும் உயர் அதிகாரிகள், பட்டதாரிகள், உயர்பதவி வகிப்போர் ஆகியோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவருகிறது. வளர்ச்சி அடைந்தவுடன், அவர்களும் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்திற்குள் வந்துவிடுகின்றனர்.
உண்மை என்ன?
ஆக, ஒரு நாட்டின் மக்கள் தொகை அதிகமாவது அந்நாட்டின் வறுமைக்கு வழிவகுக்கும்; மக்கள் தொகை குறைவது அந்நாட்டின் வளமைக்கு வழிகாட்டும் என்பதே இன்றைய உலகத்தின் மதிப்பீடு. ஆனால், அது உண்மையன்று. படித்த, பண்பாடுள்ள, உழைக்கவும் உயரவும் தயாராக உள்ள மக்கள்தான் ஒரு நாட்டின் பலமே. அத்தகைய மக்களின் எண்ணிக்கை எந்த அளவுக்கு உயர்கிறதோ, அந்த அளவுக்கு நாடும் உயரும்.
படிப்பறிவில்லாத, படித்தாலும் பண்பாடில்லாத, உழைக்க வேண்டும் என்ற எண்ணமில்லாத, அந்த எண்ணம் இருந்தாலும் உயர வேண்டும் என்ற துடிப்பு இல்லாத மக்கள் ஒரு நாட்டில் இருந்தால், மக்கள் தொகை குறைவாக இருந்தாலும்  அந்நாடு முன்னேறப்போவதில்லை. இதுதான் உண்மை.
பூமி தாங்கும்
மனிதனைப் படைத்து, வாழ்வதற்காக பூமிக்கு அவனை அனுப்புவதற்கு முன்பே, பூமியை அவனது சிறந்த வசிப்பிடமாக இறைவன் அமைத்துவிட்டான். இந்த பூமி எத்தனை கோடி மக்களையும் தாங்கும் ஆற்றல் உள்ளது. இங்குள்ள காற்று, நீர், நெருப்பு உள்ளிட்ட எல்லா இயற்கை வளங்களும் பூமியில் பிறக்கும் எல்லா உயிரினங்களுக்கும் தேவையைவிடக் கூடுதலாகவே உள்ளன.
இயற்கை வளங்களை மனிதன் பாழ்படுத்தாமலும் ஒரு நாட்டின் வளத்தை மற்றொரு நாடு கொள்ளையடிக்காமலும் இருந்தாலே போதும். அவ்வாறே, மனிதகுலத்திற்கு இறைவன் வழங்கியுள்ள மனித ஆற்றல் வளம் வற்றாத ஒரு நீரூற்று. அதை மனிதன் வளர்க்காமல் வீணடித்தாலோ, தவறாகப் பயன்படுத்தினாலோதான் சிக்கலே பிறக்கும்.
அதற்கு அல்லாஹ், “நீங்கள் (சொர்க்கத்திலிருந்து) கீழிறங்கிச் சென்றுவிடுங்கள்; உங்களில் சிலர் சிலருக்குப் பகைவர்களாக இருப்பீர்கள். ஒரு காலம்வரை உங்களுக்குப் பூமியில் வசிப்பிடமும் வாழ்வாதாரமும் உண்டுஎன்று கூறினான். (7:24)
பிறக்கும் அத்தனை பேருக்கும் பூமியில் வசிப்பிடம் உண்டு; வாழ்வதற்கு வாழ்வாதாரமும் உண்டு என்பதை இத்திருவசனம் தெளிவுபடுத்துகிறது.
மற்றொரு வசனம், “பூமியில் உள்ள எந்த உயிரினமானாலும், அதற்கு உணவைத் தருவது –அதாவது உணவைப் பெறும் வழியைக் காட்டுவது- அல்லாஹ்வின் பொறுப்பாகவே உள்ளது. அதன் இடத்தையும் உறைவிடத்தையும் அவன் அறிவான்” (11:6) என்று விவரிக்கிறது.
அதாவது பூமியில் வசிக்கின்ற சிறிய மற்றும் பெரிய உயிரினங்கள் உட்பட அனைத்துப் படைப்புகளுக்கும் உணவளிக்கும் பொறுப்பை அல்லாஹ் ஏற்றுக்கொண்டுள்ளான். பூமியில் ஊர்வன, வானில் பறப்பன, நீரில் நீந்துவன என ஒவ்வொரு உயிரினத்திற்கும் அதனதன் இயல்புக்கேற்ப இறைவன் உணவளிக்கின்றான்.
உயிரினங்களில் சில தன் கொடுக்காலும், வேறுசில அலகாலும், இன்னும் சில நகங்களாலும், இன்னும் சில கோரப் பற்களாலும் தம் உணவைத் தேடிக்கொள்கின்றன. இவ்வாறு ஒன்றை உண்டு மற்றொன்று வாழாவிட்டால், பூமியில் உயிரினங்கள் பெருகி நெருக்கடி ஏற்படும்; அல்லது இயற்கையாகச் செத்து பூமியே நாறும். (தஃப்சீர் அல்மனார்)
 மனிதத் தவறுகளே காரணம்
உலக நாடுகளில் இன்று காணப்படும் பொருளாதார தேக்கம், உணவுப் பற்றாக்குறை, சுற்றுச் சூழல் பாதிப்பு முதலான இழப்புகளுக்கு மனிதத் தவறுகளே காரணம். இருப்பதை இழந்து இல்லாத்தைத் தேடும் உலகம் இது. இயற்கை வளங்களை முறையாகப் பாதுகாத்து, அவற்றை வளர்ச்சிக்குப் பயன்படுத்துவதும் இயலாதவனை இயன்றவன் சுரண்டுவதைக் கைவிட்டு, உரிமைகளைப் பாதுகாப்பதும் மனிதகுலத்தின் தலையாய பொறுப்பாகும்.
ஒரு வசனத்தில், “மனிதர்களின் கரங்கள் தேடிக்கொண்ட விளைவின் காரணத்தாலேயே தரையிலும் கடலிலும் சீரழிவு தென்படுகிறது” (30:41) என்று உயர்ந்தோன் அல்லாஹ் சாடுகின்றான்.
ஒரு நாட்டின் நிலப்பரப்பை மட்டும் வைத்து, உணவோ உறைவிடமோ கிடைக்காது என்ற வாதம் சரியன்று. எல்லா மக்களுக்கும் உணவும் காற்றும் போதுமான அளவுக்கு உலகில் உண்டு. சரியான நிர்வாகம், திட்டமிடல், ஊழலற்ற நேர்மையான ஆட்சி, இயற்கையைக் கொல்லாமை, சரியான பகிர்வு ஆகியவை தேவை.
இந்தியாவில் சமத்துவமின்மையால் 28 விழுக்காடு மனிதவளம் வீணடிக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவள ஆய்வு தெரிவிக்கிறது.
பொதுவாகக் கடின உழைப்பும் மனித ஆற்றலைப் பெருக்குவதும் ஆராய்ச்சியில் முனைப்புக் காட்டுவதும்தான் ஒரு நாட்டின் வளத்திற்கு அச்சாணியாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பலமற்ற இறைநம்பிக்கையாளரைவிட, பலமிக்க இறைநம்பிக்கையாளரே சிறந்தவரும் இறைவனின் அன்புக்குரியவரும் ஆவார். இருவரிலும் (இறைநம்பிக்கை எனும்) நன்மை உண்டு. உனக்குப் பயன் தருவதன்மீது பேராவர் கொள்! அல்லாஹ்விடம் உதவி கேள்! இயலாதவனாகிவிடாதே! (முஸ்லிம்)
மற்றொரு நபிமொழி இவ்வாறு கூறுகிறது: மக்களே! அல்லாஹ்வை அஞ்சி நடந்துகொள்ளுங்கள். (வாழ்வாதாரத்தைத்) தேடுவதில் அழகிய வழியைப் பின்பற்றுங்கள். தாமதமானாலும் எந்த உயிரும் தனக்குரிய உணவை முழுமையாகப் பெறாமல் இறக்கப்போவதில்லை. (இப்னுமாஜா)
எல்லாவற்றுக்கும் மேலாக, மனிதனிடம் கடின உழைப்புடன் இறைவன்மீது உறுதியான நம்பிக்கை இருக்க வேண்டும். அதுவும் ஆழ்மனத்தில் ஆழமாகப் பதிய வேண்டும்.
“இறைவன்மீது முறைப்படி நம்பிக்கை வைத்தால், பறவைக்கு உணவளிக்கப்படுவதைப் போன்று உங்களுக்கும் உணவளிக்கப்படும். பறவை ஒட்டிய வயிற்றுடன் காலையில் செல்கிறது; நிரம்பிய வயிற்றுடன் மாலையில் திரும்புகிறது” (திர்மிதீ) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆறறிவு இல்லாத பறவை, படைத்தவனை நம்பி கூட்டைவிட்டுப் புறப்படுகிறது. கிடைத்த ஆகாரத்தை உட்கொண்டுவிட்டு, குஞ்சுக்கும் இரையை எடுத்துக்கொண்டு கூடு திரும்புகிறது. ஆக, பறவைகூட நம்பிக்கொண்டு கூட்டிலேயே இருந்துவிடாமல், தீனியைத் தேடி வெளியே செல்கிறது கடினமகப் போராடுகிறது.
பறவைக்குக் கூடு என்றால், மனிதனுக்கு வீடு.

Tuesday, November 01, 2011

முஅம்மர் கதாஃபியின் மறுபக்கம்

- கான் பாகவி
கடந்த 21.10.2011 அன்று லிபியா அதிபர் முஅம்மர் கதாஃபி சரமாரியாகச் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சி கல் நெஞ்சையும் கரைத்துவிடும். உயிருக்குப் பயந்து ராட்சச நீர் குழாய்க்குள் ஒளிந்துகொண்டிருந்த கதாஃபியை, நேட்டோ படைகளும் லிபிய புரட்சிப் படைகளும் சேர்ந்து வெளியே இழுத்துப் போட்டுக் குண்டுகளுக்கு இரையாக்கியதை அல்ஜஸீரா தொலைக்காட்சியின் இணையதள ஒளிபரப்பில் கண்டபோது நாமும் துடித்துப்போனோம் என்பது உண்மைதான்.
கடந்த 42 ஆண்டுகாலமாக எதிர்ப்பே இல்லாமல், அல்லது எதிர்ப்பு இருந்தாலும் அதை எளிதாக முறியடித்துவிட்டு, தனிக்காட்டு ராஜாவாக ஆட்சி புரிந்தார் கதாஃபி. ஐக்கிய ஆப்ரிக்காவின் சிற்பிஎன அவருடைய ஆதரவாளர்களால் புகழ்ந்துரைக்கப்படும் கதாஃபியின் சொத்து மதிப்பு ரூ. 10 லட்சம் கோடி.
கதாஃபி தன்னை எப்போதும் ஏழைகளின் பங்காளிஎன்று வர்ணித்துக்கொள்வதில் புளகாங்கிதம் அடைவார். சாதாரண நிலையிலிருந்து பெரிய பதவிக்கு வந்த அவர், ‘ஆப்பிரிக்க அரபி முஸ்லிம்என்று வெளி உலகுக்கு அறிமுகமானவர். ஆப்ரிக்கர் என்பது உண்மை; அரபியர் என்பதும் உண்மை. அவர் ஒரு முஸ்லிம் என்பதுதான் சர்ச்சைக்குரியது என்கிறது குவைத் இஸ்லாமிய வார இதழ் அல்முஜ்தமா’.
வாழ்க்கைக் குறிப்பு
1942ஆம் ஆண்டு வட ஆப்ரிக்கா நாடான லிபியாவில் சரத்மாவட்டத்தில் ஜஹ்னம் எனும் கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் முஅம்மர் கதாஃபி பிறந்தார். லிபிய ராணுவத்தில் இடைநிலை ஆசிரியராகத் தமது பொதுவாழ்வைத் தொடங்கினார்.
தமது 27ஆவது வயதில் ஆட்சியைக் கைப்பற்றிவிட்ட கதாஃபி தனிப்பட்ட முறையில் திறமைசாலிதான் என்பதில் ஐயமில்லை. ஐக்கிய ஆப்பிரிக்காவை உருவாக்குவதுதான் அவரது முதல் கனவுத் திட்டமாக இருந்தது. இதையடுத்து எகிப்து, சூடான், லிபியா, சிரியா ஆகிய நாடுகளை ஆப்பிரிக்கக் கூட்டணியில் கதாஃபி இணைத்தார்.
எகிப்து முன்னாள் அதிபர் கமால் அப்துந் நாசிரின் ஆசி கதாஃபிக்குக் கிடைத்தது. நாசர் இறந்தபிறகு அவருடைய வாரிசாக இருந்து அல்ஜீரியா, துனூசியா, மெராக்கோ ஆகிய நாடுகளையும் இக்ககூட்டணியில் இணைத்தார்.
இதையடுத்து ஆப்பிரிக்காவின் ராஜாதி ராஜன்என்று தமக்குத் தாமே அவர் பட்டம் சூட்டிக்கொண்டர். அரசியல் மற்றும் சமூகநீதி என்பது, ‘மக்கள் ஜனநாயம்என்ற மூன்றாவது தூணால் மட்டுமே சாத்தியமாகும் என்று கதாஃபி வாதிட்டார்.
லிபியா நாட்டின் அரசியல் சாசனம் என்று சொல்லி, அவரே தயாரித்ததுதான் பச்சைப் புத்தகம்[Green Book] எனும் ஒரு நூல். இதில் தமது நாட்டுக்கு ஒரு நீண்ட பெயரைச் சூட்டினார். மக்கள் பொதுவுடைமை ஜனநாயக லிபிய அரபிக் குடியரசுஎன்பதே அப்பெயர்.
ஜனநாயகத்தின் எதிரி
மூச்சுக்கு மூச்சு மக்கள் ஜனநாயகம் பற்றி வாய்கிழிய கதாஃபி பேசினாரே தவிர, செயலில் ஜனநாயகத்தின் விரோதியாகவே விளங்கினார்.
கதாஃபி தமது ஆட்சியில் புரிந்த குற்றங்களின் பட்டியல் நீளமானது. 1978ஆம் ஆண்டு இமாம் மூசா ஸத்ர் அவர்களைக் கொலை செய்தார். சாட் நாட்டில் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாகச் செயல்பட்டார். 1984ல் லண்டனில் லிபியா தூதரகத்தில் பணியாற்றிய பிரிட்டன் பெண்மணியைக் கொன்றார்.
1992ல் லிபிய விமானத்தில் குண்டுவைத்து 150 லிபியர்களைக் கொன்றார். 1996ல் தலைநகர் திரிபோலியில் உள்ள பூசலீம் சிறையில் 1170 கைதிகளைக் கொன்றார். 2003ல் சஊதி அரபியா மன்னர் அப்துல்லாஹ்வைக் கொல்ல முயன்றார்.
இக்வானுல் முஸ்லிமீன் நண்பர்கள் மதம் மாறியவர்கள் என்று தீர்ப்பளித்தார். இக்வான்களைச் சிறையிலடைத்துக் கொடுமைகள் புரிந்தார்... இப்படி நீள்கிறது கதாஃபியின் ஜனநாயகப் படுகொலைகள் பட்டியல்.
குர்ஆனின் எதிரி
எல்லாவற்றுக்கும் மேலாக, முஅம்மர் ஒரு நல்ல முஸ்லிமே அல்ல. தாம் எழுதிய பச்சைப் புத்தகத்தை நவீன பைபிள்என வர்ணித்த அவர், இஸ்லாத்தைப் பற்றியும் குர்ஆனைப் பற்றியும் மனம்போன போக்கில் கிறுக்கிவைத்துள்ளார் என்பதுதான் பெரிய கொடுமை.
இஸ்லாமிய ஷரீஅத் சட்டம், மற்ற எல்லாச் சட்டங்களையும்போல மாற்றத்திற்குரியதுதான்; இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் ஒரு தபால்காரர்[Postman] என்பதற்கு மேலாக வேறொன்றுமில்லை. நபியவர்களின் பரப்புரை எல்லாம் அரபுகளுக்கு மட்டுமே உரியவை.
திருக்குர்ஆனில் எங்கெல்லாம் குல்’ (நபியே, கூறுவீராக) என்று வருகிறதோ அங்கெல்லாம் அச்சொல்லை அகற்றிவிட வேண்டும். நபி (ஸல்) அவர்களை நோக்கிச் சொல்லப்பட்ட இதுபோன்ற சொற்கள், நபியவர்களின் மறைவுக்குப் பிறகு அவசியமற்றவை -இதுவெல்லாம் கதாஃபியின் உளறல்களில் அடங்கும்.
இஸ்லாத்தின் எதிரி
உங்களைப் போன்று நான் வெளிப்படையாகத் தொழுகையை நிறைவேற்றமாட்டேன் என்று சொன்ன கதாஃபி, முழங்கால்களை இதைவிட அதிகமாகத் தாழ்த்தக் கூடாது என்று மருத்துவர்கள் என்னை அறிவுறுத்தியுள்ளார்கள் என்றார்.
அஸ்ர் தொழுகையை மாற்ற வேண்டும்; மஃக்ரிப் மற்றும் இஷா தொழுகைகளில் சப்தமிட்டு குர்ஆன் ஓதமாட்டேன். உங்களுடன் அதிக நேரம் பேசுவதால், அத்தொழுகைகளில் குரலெழுப்பி என்னால் ஓத முடியாது.
பகல் முழுக்க நோன்பு நோற்பது பேரிழப்பாகும். அது ஒரு வேதனை. இதில் சந்தேகமே இல்லை. நோன்பு சுகமான ஒன்று என யார் கூறுவார்? நோன்பு நோற்க வேண்டிய தேவை என்ன? சிரமமான, பிடிக்காத ஒரு தேவையே நோன்பு.
புனித கஅபா ஆலயம் இறுதிக் காலம்வரை இருக்கும் கடைசி விக்கிரகம். கஅபாவையும் ஸஃபா - மர்வாவையும் சுற்றிவருவதும் அரஃபாத் மலைமீது ஏறுவதும் சாதாரணமான ஒரு உடற்பயிற்சி அவ்வளவுதான்! இதுபோன்ற வழிபாடுகளையெல்லாம் அல்லாஹ் விரும்புவதில்லை.
ஹஜ்ஜில் ஷைத்தானுக்கு நீங்கள் கல் எறிகிறீர்கள். முறைப்படி பார்த்தால் பாலஸ்தீனில் யூதர்களை நோக்கியே கல் எறிய வேண்டும். நம்மில் ஒவ்வொருவரும் ஏழு கற்களை எடுத்துக்கொண்டு, பாலஸ்தீனம் செல்வதுதான் உண்மையான அறப்போர்; கல்லெறிதல். ஒரு சிலைமீது கல் எறிவதால் என்ன சாதிக்கப்போகிறீர்கள்? (பிற்காலத்தில் இஸ்ரேலின் நண்பராக கதாஃபி மாறியது தனிக் கதை.)
மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலுக்கு எந்தப் புனிதத்துவமும் கிடையாது. பெண்கள் ஹிஜாப் (பர்தா) அணிவது கடமையல்ல; முதல் பெண்மணி ஹவ்வாவை எப்படிப் படைத்தான் இறைவன்? அவரிடம் என்ன ஆடை இருந்தது? இதுதான் இயற்கை. இவ்வாறுதான் அல்லாஹ் நம்மை ஆரம்பத்தில் படைத்தான். ஷைத்தானால்தான் மனிதன் ஆடை அணிந்தான். ஹிஜாபே ஷைத்தானால் வந்ததுதான்.
பலதாரமணத்திற்கு இஸ்லாம் அனுமதி அளிக்கவே இல்லை. இரண்டு அல்லது நான்கு திருமணம் செய்துகொள்வது குர்ஆனில் இல்லவே இல்லை.
இப்படி குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் எதிராக ஏராளமான புரட்டுகளை எழுதியவரும் பிரசாரம் செய்தவரும்தான் கதாஃபி.
நபிமார்களையும் தோழர்களையும் திட்டியவர்
நபி யஅகூப் (அலை) அவர்கள் குறித்து கதாஃபி எழுதும்போது, ‘‘அவரும் அவர் குடும்பத்தாரும் மிகவும் மட்டமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்’’ என்று அபாண்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
நபித்தோழர்கள், குறிப்பாக நேர்வழி கலீஃபாக்களை ஏசுகின்ற கதாஃபி, நபி (ஸல்) அவர்கள் தமக்குப் பின்னால் வந்த கலீஃபாக்களைவிட்டு விலகியவர்கள் என்று புளுகுகிறார். அலீ (ரலி) அவர்கள், இறைத்தூதரின் கலீஃபா என்றால், அவரது காலத்தில் வாழ்ந்த முஸ்லிம்களில் பாதிப்பேர் அவரை ஏன் எதிர்த்தனர்? அவருக்குப்பின் அவருடைய மக்களை ஏன் கொன்றனர்?
உஸ்மான் (ரலி) அவர்கள் ஆட்சி புரியவே தகுதியில்லாதவர்; அவர் அரிஸ்டாட்டில் கொள்கையைப் பின்பற்றியவர்; உறவினர்களுக்குப் பொறுப்புகளைக் கொடுத்து இடைத்தரகர்களை உருவாக்கினார். இறுதியில் அவர்களாலேயே அவர் கொல்லப்பட்டார் என்று கடுமையாக விமர்சிக்கிறார் கதாஃபி.
மிஅராஜ்என்று ஒன்று நடக்கவே இல்லை; இதுவெல்லாம் கற்பனை; குர்ஆனில் இதற்கு இடமில்லை. குறிப்பாக, ‘புராக்என்பது சுத்தப் பொய்; அப்படி ஒன்று இல்லவே இல்லை. மிஅராஜ் நடந்திருந்தால், ‘அப்பெயர்நிச்சயம் குர்ஆனில் இடம்பெற்றிருக்கும்.
ஷெய்க் அப்துல்லாஹ் பின் பாஸ்
இக்வானுல் முஸ்லிமீன் பெரியவர்களை மதம் மாறியவர்கள்; பேன் பிடித்த தாடிக்காரர்கள் என்றெல்லாம் கதாஃபி ஏசுகிறார்.
மேற்சொன்ன வரிகள் கதாஃபியின் பச்சைப் புத்தகத்திலும் அவருடைய உரைகளிலும் வெளிப்பட்ட, இஸ்லாத்திற்கு விரோதமான கருத்துகளாகும்.
கதாஃபியின் இத்தகு கருத்துகள் இஸ்லாத்திற்குப் புறம்பானவை என மறைந்த முஃப்தி ஷைக் அப்துல்லாஹ் பின் பாஸ் முன்பே தீர்ப்பளித்துள்ளார்கள். சஊதி உலமாக்கள் அமைப்பும் கதாஃபியைக் கண்டித்துள்ளது.
உலக இஸ்லாமிய மையம் (ராபிதத்துல் ஆலமில் இஸ்லாமி) 27 ஆண்டுகளுக்கு முன்பே கதாஃபிக்கு எதிராக ஒரு நூலை வெளியிட்டது. கதாஃபியின் அவதூறுகளும் தக்க பதில்களும்என்பது நூலின் பெயர். ‘‘முஅம்மர் கதாஃபி எல்லைகள் அனைத்தையும் மீறிவிட்டார்; இஸ்லாத்தின் கொள்கை, நம்பிக்கை, சட்டம், வாழ்க்கை நெறி அனைத்தின் மீதும் தாக்குதல் தொடுத்துவிட்டார்’’ என்பதே நூலின் முதல் பக்க வாசகமாகும்.

இஸ்ரேலின் நண்பர்
ஹிஜ்ரீ காலண்டரை நீக்கிவிட்டு, லிபியாவுக்கென புதியதொரு காலண்டரை கதாஃபி உருவாக்கினார். அது நபி (ஸல்) அவர்களின் இறப்பிலிருந்து தொடங்குகிறது. பெண்கள் இல்லங்களில்தான் இருக்க வேண்டும் என்று பச்சைப் புத்தகத்தில் எழுதிவிட்டு, ஆண்களைவிடப் பெண்களையே எப்போதும் தம்முடன் வைத்திருப்பார் கதாஃபி. கடந்த ஆண்டு இத்தாலி சென்றிருந்தபோது அழகிகளுடன் தங்கிய அவர், அழகிகளுக்கு இஸ்லாமியப் பிரசாரம் செய்கிறேன் என்றார்.
எகிப்தின் ஹசனீ முபாரக்கைப் போன்றே லிபியாவின் முஅம்மர் கதாஃபியும் இஸ்ரேலின் இனிய நண்பர்களில் ஒருவராவார். இதனால்தான் இஸ்ரேலையும் ஃபாலஸ்தீனையும் இணைத்து இஸ்ராதீனம்எனும் புதிய நாட்டை உருவாக்க வேண்டும் என்று கதாஃபி கருத்துத் தெரிவித்தார்.
கடந்த 42 ஆண்டுகளாக கதாஃபியின் கொடுங்கோல் ஆட்சியைப் பொறுத்துப் பொறுத்து பொறுமை இழந்துவிட்ட லிபிய மக்கள், குறிப்பாக இளைஞர்கள் கதாஃபிக்கெதிராகப் போர் முரசு கொட்டத் தொடங்கி, இறுதியாகச் சுட்டுக்கொன்றுவிட்டனர். அல்லாஹ்வே மிகப் பெரியவன்.

நன்றி: அல்முஜ்தமா, (குவைத் அரபி வார இதழ்)
http://magmj.com/index.jsp?version=107&archive=true