Wednesday, March 21, 2012

பற்றாக்குறை பட்ஜெட்



லைப்பைப் பார்த்தவுடன் இது ஓர் அரசியல் கட்டுரை என்று எண்ணிவிடாதீர்கள். வாழ்வியல் தொடர்பான கட்டுரைதான்; குறிப்பாக, குடும்பங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான கருத்தியலாகும்.

இந்தியா போன்ற வளரும் நாடுகள் மட்டுமன்றி, அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளும் இப்போதெல்லாம் பற்றாக்குறை பட்ஜெட்தான் சமர்ப்பிக்கின்றன. தனிமனிதனோ ஒரு குடும்பமோ வரவுக்குமேல் செலவு செய்தால், எப்படி அன்றாட வாழ்க்கையில் திணÁறுவார்களோ அப்படித்தான் ஒரு நாடும் அந்நாட்டு குடிமக்களும் திணறுவார்கள்.

வரவு ஆயிரம்; செலவு இரண்டாயிரம் என்றால், துண்டுவிழும் ஆயிரத்தைச் சமாளிக்க கடன் வாங்க வேண்டும். சும்மா கடன் கொடுக்க யாருமில்லாத இந்தக் காலத்தில், வட்டி வாங்கவும் தயங்கமாட்டார்கள். ஒருவரிடம் வாங்கிய கடனை, அல்லது வட்டியை அடைக்க இன்னொருவரிடம் கடன் வாங்க வேண்டும். இது சுழற்சி முறையில் நடந்துகொண்டிருக்க, வாழ்க்கையில் சுதந்திரம், நிம்மதி, சுகாதாரம் எல்லாம் பறிபோய்விடும்.

இதற்கு இரண்டே வழிகள்தான் தீர்வாக இருக்க முடியும். துண்டுவிழும் ஆயிரத்தைச் சொந்தமாகச் சம்பாதிக்க வழிதேடி, கூடுதலாக உழைக்க வேண்டும். அல்லது வந்துகொண்டிருக்க வருவாய் ஆயிரத்தைக் கொண்டே தேவைகளை நிவர்த்தி செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். அதாவது தேவைகளைக் குறைத்துக்கொண்டு, சிக்கனமாகவும் கட்டுப்பாடாகவும் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த இரண்டாவது அம்சமே 90 விழுக்காடு மனிதர்களுக்கும் குடும்பங்களுக்கும் வசப்படும் என்று நினைக்கிறேன். நான் என் நிம்மதிக்காக வாழ வேண்டுமே தவிர, பிறர் பார்த்து மதிக்க வேண்டும் என்பதற்காக வாழக் கூடாது. அப்படி வாழ முனையும்போதுதான், தேவையில்லாத நெருக்கடிகளுக்கும் சிக்கல்களுக்கும் நான் ஆளாக வேண்டிவருகிறது.

அடுத்தவர் மதிப்பதால் கிடைக்கும் தாற்காலிக அற்ப சுகம் உங்களின் பசியைப் போக்கவோ அறியாமையை அகற்றவோ உதவப்போவதில்லை. அது ஒரு போலித்தனமான வெற்று மரியாதை என்பதை ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும். நான் நானாக இருந்தால்தான், என் அடையாளம் அழியாமல் இருக்கும்; பிறரிடம் பெயர் வாங்க, மரியாமதை பெற வாழத் தொடங்கினால், எனது சுய அடையாளம் தொலைந்துபோய்விடும்.

இது தனிமனிதனுக்கு மட்டுமன்றி, வீடு, நாடு, நிறுவனம், அமைப்பு ஆகிய அனைத்துக்கும் பொருந்தும்.

2012 – 2013 இந்திய பட்ஜெட்

2012 – 13ஆம் நிதி ஆண்டுக்கான இந்திய பட்ஜெட் பற்றாக்குறை மிக்கதாகவே இருக்கிறது. மொத்த வருமானம் 9,77,335 கோடி ரூபாய். மொத்த செலவு 14,90,925 கோடி ரூபாய். பற்றாக்குறை 5,13,590 கோடி ரூபாய்.

இவற்றில் திட்டச் செலவு 5,21,025 கோடி மட்டுமே. திட்டம் சாரா செலவு 9,69,900 கோடி. ஆக, வருமானத்தைவிட செலவு 29 விழுக்காடு கூடுதலாகும்.

இதையே எளிமையாக இப்படி விளக்கலாம்: வரவு ஒரு ரூபாய் என்றால், செலவு 1.29 ரூபாய் ஆகும். அதிலும், வரவாக வரும் ஒரு ரூபாயில் 29 காசுகள் கடனாக வாங்கப்பட்டவை; சொந்தக் காசு அல்ல. அதாவது இந்த நிதியாண்டில் அரசு வாங்கப்போகும் கடனின் அளவு 4.79 லட்சம் கோடியாக இருக்கும்.

அவ்வாறே, ஒரு ரூபாய் செலவில் 8 காசுகள், அரசு வாங்கிய கடன் தொகைக்கான வட்டிக்குச் செல்கின்றன.

இந்தியக் குடும்பங்களின் பட்ஜெட்

கிட்டத்தட்ட இந்தியக் குடும்பங்களின் பட்ஜெட்டும் இந்திய அரசின் பட்ஜெட் போன்றே பற்றாக்குறை பட்ஜெட்தான். வரவைவிட செலவு அதிகம் என்ற நிலையில், பெரும்பாலான இந்தியக் குடும்பங்கள் நிம்மதியிழந்து தவிக்கின்றன.

இந்தியச் சமூகச் சூழ்நிலையில், மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்குச் செலவிடுவதைக் காட்டிலும், ஆடம்பரங்களுக்கே அதிகமாகச் செலவிடுகின்றனர். 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பிலிருந்து இது தெரியவருகிறது.


இந்தியாவில் உள்ள மொத்த வீடுகளில், கழிப்பறை வசதி இல்லாத வீடுகள் 49.8 விழுக்காடு. அதே நேரத்தில் செல்போன் வசதி பெற்ற வீடுகள் 63.2 விழுக்காடு; தொலைக்காட்சி பெட்டி உள்ள வீடுகள் 47.2 விழுக்காடு.
இந்தியாவில் உள்ள 25 லட்சம் கிராமங்களில் வெறும் 25 ஆயிரம் கிராமங்களில் மட்டுமே கழிப்பறை வசதிகள் உள்ளன. மற்றக் கிராமங்களுக்கு திறந்தவெளியே கழிப்பிடம்.

இது அரசின் குற்றமா? அல்லது மக்களின் அலட்சியமா? இதைவிட இன்னொரு புள்ளிவிவரம் இந்திய மக்களின் ஆடம்பர மோகத்தை நன்கு படம்பிடித்துக் காட்டுகிறது.

2007 – 08ஆம் ஆண்டுக்கான நுகர்பொருள் செலவின இந்திய அரசு புள்ளிவிவரம் கூறுவதைப் பாருங்கள்:

நூறு ரூபாயில் 22 ரூபாய் மட்டுமே அவசிய செலவாகும். மீதி 78 ரூபாய் பகட்டுக்காகச் செய்யப்படும் செலவுகள்தானாம்.

அன்றைய விலைவாசியின்படி அவசிய செலவுகள் விவரம்:

அரிசி மற்றும் கோதுமை
ரூ. 9.60
பருப்பு வகை
ரூ. 1.10
சர்க்கரை
ரூ. 1.70
சமையல் எண்ணெய்
ரூ. 1.80
பழம் மற்றும் காய்கறி
ரூ. 7.70
மொத்தம்
ரூ. 21.90

பகட்டுச் செலவுகள் விவரம்:

புகை, பான்பராக், மது
ரூ. 4.80
தொலைபேசி
ரூ. 3.20
வாகனம் வாங்க
ரூ. 8.10
பஸ், ஆட்டோ
ரூ. 1.00
துணிகள்
ரூ. 4.60
மனமகிழ் செலவு
ரூ. 2.40
வீட்டு அலங்காரம்
ரூ. 3.30
பெட்ரால்
ரூ. 3.10
பால், டீ, காபி, ஐஸ்கிரீம்...
ரூ. 10.50
வாடகை
ரூ. 6.30
கல்வி
ரூ. 2.60
ஹோட்டல்
ரூ. 2.60
மருத்துவம்
ரூ. 5.70
இதரவை
ரூ. 19.90
மொத்தம்
ரூ. 78.10

இவற்றில் துணி, கல்வி, மருத்துவம் போன்ற செலவுகளையும் அத்தியாவசிய செலவினங்களில் சேர்த்துக்கொண்டாலும் நூறு ரூபாயில் 35 ரூபாய் மட்டுமே உருப்படியான செலவுகளாகும். மீதி 65 ரூபாய் பகட்டுக்காக, அல்லது ஊரார் மெச்சுவதற்காக வலிந்து செய்யப்படும் ஆடம்பரச் செலவுகளே. இச்செலவுகளில் பெரும்பாலானவை மனிதனைப் படுகுழியில் தள்ளக்கூடியவை என்பதும் கவனத்தில் கொள்ளத் தக்கதாகும்.
ஆக, அரசாங்கம் பற்றக்கூறை இல்லாத பட்ஜெட்டே போட்டாலும், மக்களிடம் சிக்கனம், சேமிப்பு, விரயமின்மை, எதிலும் நிதானம் ஆகிய உயர்பண்புகளும் பாரம்பரிய கலாசாரமும் இல்லாத வரை நிம்மதியான வாழ்வு கனவுதான்.

சிக்கனமும் சேமிப்பும்

ஒன்றைத் தேவையான அளவுக்கு மட்டுமே கவனமாகச் செலவு செய்யும் அல்லது பயன்படுத்தும் முறையே சிக்கனம்(Economy) எனப்படுகிறது. செலவு செய்வதில் கஞ்சத்தனமும் இல்லாமல், விரயமும் இல்லாமல் நடுநிலையான போக்கைக் கையாள்வது என்றும் கூறலாம்.

பசி எடுத்தும் கையில் காசு இருந்தும் மிச்சப்படுத்துவதே கஞ்சத்தனம். கையில் காசு இருக்கிறது என்பதற்காக, இரண்டு வெஞ்சனங்கள் (Side-Dish) போதும் என்றிருக்க ஐந்தாறு வெஞ்சனங்களைத் தயாரித்து, மிஞ்சுவதைக் குப்பையில் கொட்டுவது விரயம்ஆகும்.

இவ்விரண்டுக்குமிடையே தேவையை மட்டும் பூர்த்தி செய்வது சிக்கனம் ஆகும்.


அல்லாஹ் கூறுகின்றான்: (நல்லடியார்களான) அவர்கள் செலவிடும்போது விரயம் செய்யமாட்டார்கள்; கஞ்சத்தனமும் செய்யமாட்டார்கள். இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையாகவே அ(வர்களின் போக்கான)து இருக்கும். (25:67)


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நன்னடத்தை, நிதானம், சிக்கனம் ஆகியவை நபித்துவத்தின் 24 பாகங்களில் ஒரு பாகமாகும். (திர்மிதீ)


உணவு, உடை, உறையுள் ஆகிய அனைத்துத் தேவைகளிலும் மனிதன் நடுநிலைப் போக்கையே மேற்கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.


இருவரின் உணவு மூவருக்குப் போதும்; மூவரின் உணவு நால்வருக்குப் போதும். (புகாரீ)


அதாவது ஒருவர் வயிறு நிரம்பச் சாப்பிடும் உணவை இருவர் பகிர்ந்து உண்ணலாம். இருவர் வயிறு நிரம்ப உண்ணும் உணவைப் பகிர்ந்தால், அது மூவருக்குப் போதுமானதாகிவிடும்.


ஒரு விரிப்பு ஆணுக்குரியது; மற்றொரு விரிப்பு அவன் துணைவிக்குரியது; மூன்றாவது விரிப்பு விருந்தாளிக்குரியது. நான்காவது விரிப்பு ஷைத்தானுக்குரியது. (முஸ்லிம்)


அதாவது தேவைக்கு அதிகமான ஆடை அலங்காரங்கள் ஷைத்தானுக்கு விருப்பமான ஆடம்பரமாகவே கருதப்படும். படுக்கை விரிப்புகளில் கணவனுக்கு ஒன்று; மனைவிக்கு ஒன்று; யாரேனும் விருந்தாளி வந்துவிட்டால் அவருக்கு ஒன்று இருந்தால் போதும். அதற்குமேல் இருப்பது ஆம்பரமாகிவிடும். அதுவே ஷைத்தானுக்கான விரிப்பாகும்.

சிக்கனத்தைக் கைவிட்டுப் பகட்டுக்காக ஆடம்பரத்தில் மூழ்குவோர் குறித்து அல்லாஹ் இப்படிக் கூறுகின்றான்:


உண்ணுங்கள்; பருகுங்கள்; விரயம் செய்யாதீர்கள். விரயம் செய்வோரை அவன் நேசிப்பதில்லை. (7:31)


நிச்சயமாக விரயம் செய்வோர் ஷைத்தான்களின் சகோதரர்ககளாகவே இருக்கின்றனர். ஷைத்தான், தன் இறைவனுக்கு நன்றி கொன்றவனாக இருக்கின்றான். (17:27)


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: விரயமோ தற்பெருமையே இல்லாமல் (விரும்பியதை) நீங்கள் உண்ணுங்கள்; பருகுங்கள்; உடுத்துங்கள்; தர்மம் செய்யுங்கள். ஏனெனில், அல்லாஹ் தன் அடியார்மீது அவன் வழங்கிய அருட்கொடை(யின் அறிகுறி)யைப் பார்க்க விரும்புகிறான். (முஸ்னது அஹ்மத்)

சேமிப்பு

பணம், உணவுப் பொருள் போன்ற அத்தியாவசிய பொருட்களை, நாளைய தேவையைக் கருதி சேமித்துவைப்பது, இறைவன்மீது கொண்ட நம்பிக்கைக்கு முரணாகாது. மாறாக, குடும்பத்தாருக்காக உணவுப் பொருட்களைச் சேமித்துவைக்கலாம் என்பதற்கு ஆதாரம் உண்டு.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எந்தக் குடும்பத்தாரிடம் பேரீச்சம்பழங்கள் (சேமித்துவைக்கப்பட்டு) உள்ளனவோ அவர்கள் பசித்திருக்கமாட்டார்கள். (முஸ்லிம்)

மற்றொரு ஹதீஸில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), ‘ஆயிஷா! பேரீச்சம்பழம் இல்லாத வீட்டாரே பட்டினி கிடக்கும் வீட்டார் ஆவர் என்ற இரண்டு அல்லது மூன்று முறை கூறினார்கள். (முஸ்லிம்)

ஆக, சிக்கனமும் சேமிப்பும் இல்லாத குடும்பம் அல்ல்ல்படும். அரசாங்கம் என்னதான் திறமையாக பட்ஜெட் போட்டாலும், குடும்பங்கள் குறிப்பாக, தாய்மார்கள் சரியான குடும்ப பட்ஜெட் போடாவிட்டால் பற்றாக்குறையும் பதற்றமும்தான் வீடுகளில் எதிரொலிக்கும். பெண்கள் படிக்க வேண்டும் என்று சொல்வதே, குடும்பத்தின் வருமானத்தை அறிந்து பற்றாக்குறை இல்லாத பட்ஜெட் போட்டு, குடும்பத்தைத் திறமையாக நிர்வகிக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

ஒரு பெண், குடும்பப் பொறுப்புகளை உதறித்தள்ளிவிட்டு, வேலைக்குப் போய் பணம் சம்பாதிப்பதற்கல்ல படிப்பு. குழந்தைகளை அறிவார்ந்தவர்களாக, ஒழுக்கமுள்ளவர்களாக வளர்த்து வீட்டுக்கும் நாட்டுக்கும் நன்மை சேர்க்க வேண்டும்.

Wednesday, March 07, 2012

520 ஆண்டுகளுக்குமுன்... உட்பூசலால் ஆட்சியை இழந்த முஸ்லிம்கள்



கி.பி. 710 ஆம் ஆண்டில் வலீத் பின் அப்தில் மலிக் கலீஃபாவாக இருந்த காலத்தில் அண்டலூசியாவில் (ஸ்பெயின்) முஸ்லிம்கள் நுழைந்தனர். அப்போது முஸ்லிம் படைகளின் தளபதியாக இருந்தவர் தாரிக் பின் ஸியாத். படைகளை வழிநடத்தியவர் மூசா பின் நஸீர்.

கி.பி. 755ல் கலீஃபா அப்துல் மலிக் பின் மர்வானின் கொள்ளுப்பேரர் அப்துர் ரஹ்மான் பின் முஆவியா அண்டலூசியாவில் நுழைந்தார். அப்போது ஆப்பிரிக்க நாடுகளில் இருந்த அவருடைய மாமன்மார்கள் அவருக்கு உதவினர். 

அங்கு அவர் உமய்யாக்களின் ஆட்சிக்குட்பட்ட இஸ்லாமிய தனி நாடு ஒன்றை உருவாக்கினார். பிரஞ்சுக்காரர்களின் நாட்டில் தனிமனிதராக இருந்து இஸ்லாமிய நாடு ஒன்றை உருவாக்கிய இந்த அரபி இளைஞரை – அப்துர் ரஹ்மானை – அவருடைய எதிரிகளில் ஒருவரும் அப்பாசிய்யா கிலாஃபத்தை உருவாக்கியவர்களில் ஒருவருமான அபூஜஅஃபர் மன்சூர் வெகுவாகப் பாராட்டினார். அத்துடன் அப்துர் ரஹ்மானுக்கு ‘குறைஷி வல்லூறு’ என்ற புனைபெயரையும் மன்சூர் சூட்டினார். 

சோதனை ஆரம்பம் 

பின்னர் பனூ உமய்யா ஆட்சியாளர்கள் தொடர்ந்து அண்டலூசியாவை ஆண்டனர். கி.பி. 1046ல்தான் சோதனை ஆரம்பமானது. அதாவது இஸ்லாமிய ஆட்சி மேற்கில் உதயமாகி 290 ஆண்டுகளுக்குப் பிறகு உட்பூசல், கருத்து வேறுபாடு, பதவி மோகம் ஆகிய உள்ளறுப்பு வேலைகளால் அண்டலூசியா ஏறத்தாழ 30 குட்டி நாடுகளாகப் பிளவுண்டுபோனது. 


ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஓர் அமீர்; தனிப்படை; தனி வாழ்க்கை முறை என்று மாறியது. இவர்களுக்கு ‘கோஷ்டி மன்னர்கள்’ என்ற பெயர் நிலைத்தது. அப்படித்தான் பிரிந்தார்களே! ஒழுக்கத்தோடும் மார்க்கப் பிடிப்போடும் நல்லாட்சி தந்தார்களா என்றால், அதுதான் இல்லை. ஆடல், பாடல், இசை என யூதர்கள் விரித்த மோக வலையில் சிக்கினார்கள். 

இந்தத் தான்தோன்றித்தனம், அண்டலூசியாவில் இஸ்லாமிய நாட்டின் அஸ்திவாரத்தையே அசைக்கத் தொடங்கியது; அந்த வலுவான கோட்டையின் அடித்தளத்தைச் செல்லரித்து, உயிரற்ற சடலமாக நிறுத்திவிட்டது. இலேசான காற்று வீசினால்கூட விழுந்துவிடும் பரிதாப நிலையில் நாடு இருந்தது. 

இஸ்லாமிய மாநிலங்களின் நிலைமை தலைகீழாக மாறியது; அதன் தொடர்புகள் அறுந்தன. இதை ஸ்பெயின் கிறித்தவர்கள் நன்கு பயன்படுத்திக்கொண்டனர். கிறித்தவர்களால் முஸ்லிம் ஆட்சியாளர்கள் மோசமாக இழிவுபடுத்தப்பட்டனர்; அவமானம் அடைந்தனர். 

உதவிய முராவித்கள் 

யூசுஃப் பின் தாஷ்ஃபீன்
வேறு வழியின்றி, ஆப்ரிக்காவில் இருந்த ‘அல்முராவித்’ வம்ச பெர்பர் கூட்டமைப்பிடம் முஸ்லிம் ஆட்சியாளர்கள் உதவி கேட்டனர். அப்போது முராவித்களின் சுல்தானாக மிகப்பெரும் தளபதி யூசுஃப் பின் தாஷ்ஃபீன் இருந்தார். அவர் ஸ்பெயின் முஸ்லிம்களுக்கு உதவ முன்வந்தார். 

கடல் மார்க்கமாக ஒரு பெரும்படையை யூசுஃப் அனுப்பிவைத்தார். தாவூத் இப்னு ஆயிஷா அப்படையின் மாபெரும் தளபதியாக இருந்தார். இப்படை கிறித்தவ படையுடன் மோதியது. காஸ்டில் அரசர் அல்ஃபோன்ஸ் கிறித்தவப் படைக்குத் தலைமை ஏற்றார். வரலாற்றுப் புகழ் மிக்க ‘அஸ்ஸுலாகா’ போர் நடந்தது. ‘அல்முராவித்’ படையினர் மகத்தான வெற்றியை ஈட்டினர். படுகாயமடைந்த அல்ஃபோன்ஸ் வெருண்டோடினார். யூசுஃப் பின் தாஷ்ஃபீன் முஸ்லிம்களின் தலைவரானார். இது நடந்தது கி.பி. 1057ல். 

காலம் உருண்டோடியது. யூசுஃப் பின் தாஷ்ஃபீன் காலம் முடிந்தது. ‘கோஷ்டி மன்னர்கள்’ அன்டலூசியாவில் மீண்டும் பரஸ்பரம் மோதிக்கொள்ளத் தொடங்கினார்கள். அவர்களின் பலம் குன்றியது. முஸ்லிம் மாகாணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக கிறித்தவர்களின் கைக்கு மாறின. கிரேனடா (ஃகர்னாத்தா) மாநிலம் மட்டும் எஞ்சியிருந்தது. கி.பி. 1228ஆம் ஆண்டு இம்மாநிலத்தை முஹம்மத் பின் யூசுஃப் பின் நஸ்ர் (பின் அஹ்மர்) உருவாக்கினார். 

ஏறத்தாழ இரண்டரை நூற்றாண்டு காலமாக பின் அஹ்மர் மன்னர்கள், காஸ்டில் கிறித்தவர் அரசர்களுடன் தொடர்ந்து போரிட்டுவந்தனர். அந்தக் கிறித்தவர்கள் கிரேனடாவைச் சுற்றியுள்ள எல்லா நாடுகளையும் கைப்பற்றி, நாலாபுறமும் கிரேனடாவைச் சுற்றிவளைத்துக்கொண்டிருந்தனர். 

என்னதான் இருந்தாலும், விரைவில் கிரேனடா வீழப்போகிறது என்ற உண்மை மன்னர் இளைய அபூஅப்தில்லாஹ்வுக்குப் புலப்பட்டது. இந்நிலையில், காஸ்டில் மன்ன்ன் ஃபெர்டினாண்ட் கிரேனடாவை மூர்க்கமாகத் தாக்கினான். கி.பி. 1490 மார்ச்சில் நாட்டை முற்றுகையிட்டான். இந்த முற்றுகை 22 மாதங்கள் நீடித்தது. இக்காலத்தில் இத்தாலி தயாரிப்பான லோம்பர்டோ வகை ஏவுகணைகளால் கிறித்தவர்கள் தொடர்ந்து தாக்குதல் தொடுத்தனர். இதையடுத்து நகரின் உற்பத்திகள் சிதைந்தன. வருவாய் குறைந்த்து. உணவுப் பொருட்கள் தீர ஆரம்பித்தன. நகர மக்கள் பட்டினியின் பிடியில் சிக்கினர். 

உதவியாளர்களின் துரோகம் 

இந்நிலையில் மன்னர் அபூஅப்தில்லாஹ்வின் உதவியாளர்கள் மன்னருக்குத் துரோகமிழைக்கத் துணிந்தனர். எதிர்த்துப் போரிடுவதில் புண்ணியமில்லை; நகர மக்களின் உயிருக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் காஸ்டில்கள் சொல்லும் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு நகரத்தை அவர்களிடம் ஒப்படைத்துவிடுவோம் என்று வற்புறுத்தினர். 

அப்போது கிரேனடாவை முற்றுகையிட்டிருந்த படைகளில், ஐரோப்பாவின் பல பகுதிகளிலிருந்து யூதர்கள் விலைக்கு வாங்கியிருந்த கூலிப்படைகளும் இருந்தனர். அது மட்டுமன்றி, யூதர்களும் லோம்பர்டோ ஏவுகணைகளை வாங்கி, இத்தாலியிலிருந்து அல்பேஸ் மலைத்தொடர் வழியாக கிரேனடா சுற்றுச் சுவர்களுக்குக் கொண்டுவந்து சேர்த்தனர். 

நகரத்தையும் நரக மக்களையும் எதிரிகளிடமிருந்து காக்க வேண்டுமென்றால், எதிரிகளிடம் நகரத்தை ஒப்படைப்பதைத் தவிர அபூஅப்தில்லாஹ்வுக்கு வேறு வழி இருக்கவில்லை. எனவே, பேச்சுவார்த்தை ஆரம்பமானது. மன்னர் மற்றும் கிரேனடா முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் ஒரு பக்கம்; கிறித்தவ மன்னன் பெர்டினாண்ட் இன்னொரு பக்கம். 

முஸ்லிம்களின் உயிரையும் உடைமைகளையும் பாதுகாப்பதற்கு ஈடாக, கிரேனடா நகரத்தைக் கிறித்தவர்களிடம் கொடுப்பதென முடிவாயிற்று. முஸ்லிம்கள் தங்கள் ஷரீஅத்தைப் பின்பற்றி நடக்கவும் மார்க்கத்தின் எல்லா நெறிகளையும் கடைப்பிடிக்கவும் முழுச் சுதந்திரம் அளிக்கப்படும்; பள்ளிவாசல்களின் புனிதம் காக்கப்படும்; கிறித்தவனோ யூதனோ முஸ்லிம்களுக்கு எந்தத் தீர்ப்பும் வழங்குவதில்லை... என்றெல்லாம் சமாதான ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டது. 

உடனே மன்னர் அபூஅப்தில்லாஹ், மார்க்க அறிஞர்களையும் அதிகாரிகளையும் கூட்டி ஆலோசனை நடத்தினார். ஒப்பந்த விதிகள் தொடர்பாக விவாதம் நடந்தது. இறுதியில் அனைவரும் இசைவு தெரிவித்தனர். 

துக்க நாள் பிறந்தது 

கி.பி. 1492 ஜனவரி இரண்டாம் நாள் அந்தத் துக்க நாள் பிறந்தது. மன்னர் அபூஅப்தில்லாஹ், எதிரிகளை எதிர்த்துப் போரிடுவதற்குத் தடை விதித்தார். நகர வாயில்கள் திறக்கப்பட்டன. இளைய அபூஅப்தில்லாஹ் நகரை ஒப்படைக்கப் புறப்பட்டார். கிறித்தவ அரசன் பெர்டினான்ட், அரசி இசபெல்லா இருவரும் அமர்ந்திருக்க, அருகில் பெரிய கார்டினல் கம்னேஸ் (போப்பைத் தேர்ந்தெடுப்பவர்) இருந்தார். நகரத்தின் சாவிகள் ஒப்படைக்கப்பட்டன. 

அபூஅப்தில்லாஹ் அழுதுகொண்டே திரும்பினார்; தமது ஆற்றாமையால் நாட்டைக் காக்க முடியாமல், அது பாழடைவதற்கு விட்டுவிட்டு வந்தார். வீடு திரும்பிய அவரிடம் அவர் அன்னை சொன்னார்: ஆண்பிள்ளையாய் நாட்டைப் பாதுகாக்க வக்கில்லாமல், பெண் பிள்ளைபோல அழுதுகொண்டு வருகிறாயே! 

கிறித்தவர்கள் அணியணியாய் நகருக்குள் புகுந்தனர். புரியாத பாடல்களைப் பாடிக்கொண்டு ஆட்டம் போட்டனர். சமய குருக்கள் சிலுவைகளைச் சுமந்துகொண்டு முன்னால் சென்றனர். ‘அல்ஹம்ரா’ அரண்மனைக்கு, கிறித்தவ அரசனும் அரசியும் வந்துசேர்ந்தனர். 

கார்டினல் படைவீரர்களுக்குப் பிறப்பித்த முதல் ஆணை என்ன தெரியுமா? அரண்மனையில் பொறிக்கப்பட்டிருந்த குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் அழித்துவிடுங்கள்; அரண்மனையின் பிரதான வாயிலுக்குமேல் வெள்ளிச் சிலுவையை ஏற்றுங்கள் என்பதுதான். 

பின்னர் பாதிரிமார்கள் புடைசூழ கார்டினல் நகரின் பெரிய பள்ளிவாசலுக்குச் சென்றார். பயிற்சியளிக்கப்பட்ட பணியாளர்கள் பள்ளிவாசலின் பாங்கு மேடையில் ஏறி, அங்கிருந்த பாங்கு அறையை இடித்தனர்; கயிறுகளில் பெரிய மணியைக் கட்டி மாட்டினர். பாங்கு மேடைக்கும் அதன் தூபிக்கும் மேலே சிலுவையை வைத்தனர். 

கிறித்தவ படையினர், பள்ளிவாசலுக்கு உள்ளே புகுந்து, பள்ளிவாசல் சுவர்களில் பொறிக்கப்பட்டிருந்த குர்ஆன் வசனங்கள் எல்லாவற்றையும் அகற்றினர். அதே நேரத்தில், வேறுசிலர் பள்ளிவாசலின் நூலகத்திற்குள் நுழைந்து குர்ஆன் மற்றும் ஹதீஸ் பிரதிகளையும் அபூர்வமான ஃபிக்ஹ் நூல்களையும் எடுத்துவந்து தரையில் கொட்டினர். ஒரு பெருங்குவியல் சேர்ந்தது. 

கார்டினலே நேராக வந்து, புத்தகக் குவியலுக்குத் தீ வைத்தார். பொதுவாக, இஸ்லாம் ஒரு மண்ணில் கால் வைத்துவிட்டால், அங்கிருந்து ஒருபோதும் விடைபெறாது என்று சொல்வதுண்டு. அண்டலூசியா மட்டும் இதற்கு விதிவிலக்குபோலும். 

சாகும்வரை சித்திரவதை 

கிறித்தவ ஆட்சியாளர்கள் முஸ்லிம் மன்னர் அபூஅப்தில்லாஹ்வுடன் சமாதான ஒப்பந்தம் காண, கிறித்தவ பாதிரிகளும் குருக்களும் அந்த ஒப்பந்தத்தை வெளிப்படையாக மீறினர்; மனித வரலாறு காணாத கொடுமைகளை அரங்கேற்றினர். மங்கோலியர்களான தார்த்தாரியர்களைப் போன்று மக்களை ஒரேயடியாகக் கொல்லவுமில்லை; மற்றவர்களைப் போன்று, மக்களை நாட்டைவிட்டுத் துரத்தவுமில்லை. இவர்கள் ஒரு புது யுக்தியைக் கையாண்டனர். அதுதான், சாகும்வரை சித்திரவதை. 

இதற்காக, பாதிரிகள் விசாரணை மன்றங்களை ஏற்படுத்தினர். இவை உண்மையில் சோதனை மன்றங்களாகும். நகர மக்களில் முஸ்லிம்கள் யார்; அரபுகள் யார் என்பதைக் கண்டறிந்து, கிறித்தவர்களாக மாறுமாறு பாதிரிகள் கட்டாயப்படுத்தினர். மறுத்தால், வகைவகையான வன்கொடுமைகளுக்கு முஸ்லிம்களை ஆளாக்கினர். 

ஆரம்பமாக, இருட்டு பாதாள அறைகளில் அடைத்துவைப்பார்கள். அந்த அறைகளின் தரையும் சுவரும் எப்போதும் ஈரமாக இருக்கும். அறைகளுக்குள் பீரங்கி உருளைக் கம்பிகளை விட்டு, தோல்களைக் கிழிப்பர். இரும்புக் கவ்விகளால் சதைகளைப் பிய்த்தெடுப்பர். ஆணிகள் அறையப்பட்ட இரும்பு வளையங்களை, சித்திரவதை செய்யப்படுபவரின் நெற்றியில் மாட்டுவர். ஆணிகள் அவரது தலைக்குள் செல்லுமாறு வளையத்தை இறுக்குவர். 

நகங்களை வேரோடு பிடுங்க சில கருவிகள் இருந்த்தைப் போன்றே, பெண்களின் மார்பகங்களைக் கழற்றவும் கருவிகள் வைத்திருந்தனர். நாக்கு, பல், கண் ஆகிய உறுப்புகளைப் பிடுங்குவதற்கும் அந்த அயோக்கியர்களிடம் விதவிதமான கருவிகள் இருந்தன. சிவக்கவைக்கும் அளவுக்குச் சூடான காலணிகளை அணிவிப்பர். உடலில் சூடு போடுவதற்காக நீளமன கம்பிகளைப் பயன்படுத்தினர். 

சூடு போடப்படும் முஸ்லிம்களின் உடம்பிலிருந்து வெளிவரும் கரிந்த வாடையை நுகர்ந்து பாதிரிகள் குதூகலம் அடைந்தனர். பெரியவர்களை மட்டுமன்றி, சிறுவர்களையும் குழந்தைகளையும்கூட அந்த ஈவிரக்கமற்ற பாவிகள் விட்டுவைக்கவில்லை. குழந்தைகளை நிர்வாணப்படுத்தி, விருத்தசேதனம் செய்யப்பட்டிருந்தால் உடனே கொலை செய்துவிடுவார்கள். நகரின் பொதுக் குளியலறைகளை இடித்துத் தரைமட்டமாக்கினர். 

அரபி மொழியில் பேசுவதற்கும் தொழுவதற்கும் பெண்கள் பர்தா அணிவதற்கும் பாதிரிகள் தடை விதித்தனர். கிறித்தவர்களின் தொப்பியை அணிந்துகொண்டு தேவாலயங்களுக்குச் சென்று வழிபட வேண்டும் என்று நிர்ப்பந்தித்தனர். வெள்ளிக்கிழமைகளில் ஜுமுஆ தொழுவதற்கும் தடை விதித்தனர். அன்று வீடுகளில் யாரும் குளிக்கக் கூடாது என்பதும் அவர்களின் கட்டளையாகும். 

முஸ்லிம்கள் வெளியேற வேண்டும் 

இதற்கெல்லாம் மேலாக, அரசன் பெர்டினான்ட், அரசி இசபெல்லா ஆகியோர் பெயரால், முஸ்லிம்களைக் கொடுமை செய்வதற்குச் சில ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. அவற்றில் கி.பி. 1501ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி வெளியான ஆணையும் அடங்கும். முஸ்லிம்கள் யாரும் கிரேனடா நாட்டில் இருக்கக் கூடாது என்பதே அந்த ஆணையாகும். காஃபிர்களைவிட்டு கிரேனடாவைப் பரிசுத்தமாக்குவதற்காக எங்களையே கர்த்தர் தேர்ந்தெடுத்துள்ளார் என்று ஆணையில் அரசனும் அரசியும் குறிப்பிட்டிருந்ததுதான் வேடிக்கையாகும். 

முஸ்லிம்களைக் கிறித்தவர்களாக மாற்றுவது தாமதப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, முஸ்லிம்கள் வேறுயாருடனும் தொடர்புகொள்வதற்கு இந்த ஆணை தடை விதித்த்து. கிறித்தவர்களாக மாற்றும் வேலையைச் செய்வோருடனும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது; அந்தக் கிறித்தவர்களின் நம்பிக்கையை முஸ்லிம்கள் கெடுத்துவிடக்கூடும் என்ற அச்சமே இதற்குக் காரணம். 

இந்த அரசாணையை மீறுவோர் கொல்லப்படுவார்கள்; அவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என மிரட்டலும் விடுக்கப்பட்டது. 

கி.பி. 1502ஆம் ஆண்டு பிப்ரவரி 12 செவ்வாய்க்கிழமை ஓர் அரசாணை வெளியானது. முஸ்லிம் ஆண்களில் 14 வயது பூர்த்தியான ஒவ்வொருவரும் பெண்களில் 10 வயது நிறைந்த ஒவ்வொருவரும் வருகின்ற மே முதல் தேதிக்கு முன்பாக கிரேனடா நாட்டைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்று அந்த ஆணையில் கூறப்பட்டிருந்தது. 

கி.பி. 1502 செப்டம்பர் 12ல் மற்றோர் அரசாணை வெளியானது. இரண்டு ஆண்டுகள் கழியாமல் மக்கள் தம் சொத்துகளில் எந்த மாற்றமும் செய்வதற்கு இந்த ஆணை தடை விதித்த்து. மக்கள் காஸ்டில் நாட்டிலிருந்து எந்த முஸ்லிம் நாட்டுக்கும் செல்லக் கூடாது. அரகான், போர்ச்சுகல் ஆகிய கிறித்தவ நாடுகளுக்கு மட்டுமே செல்லலாம். 

அல்போன்ஸ் மான்ரீக் 

கார்டினல் கம்னேஸுக்கு அடுத்து அல்ஃபோன்ஸ் மான்ரீக் என்பவன் கார்டினல் பொறுப்பை ஏற்றான். அவனது கொடுமை எல்லை மீறியது. கிறித்தவராக மதம் மாறிய எந்த முஸ்லிமும் முஹம்மத் (ஸல்) அவர்களின் மார்க்கத்தைப் புகழ்ந்து பேசினாலோ, இயேசு கடவுள் அல்லர் என்று சொன்னாலோ அவர் முஸ்லிமாக மதம் மாறிவிட்டார் என்றே கருதப்படும் என்று அறிவித்தான் மான்ரீக். 

கிறித்தவராக மாறிய எந்த முஸ்லிமும் இஸ்லாமிய நடைமுறைகளைப் பின்பற்றினால் ஒவ்வொரு கிறித்தவனும் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். வெள்ளிக்கிழமை தூய்மையாக ஆடை அணிவது, ‘பிஸ்மில்லாஹ்’ கூறுவது, பன்றி இறைச்சி சாப்பிட மறுப்பது, குழந்தைகளுக்கு விருத்த சேதனம் செய்வது, அரபிப் பெயர் சூட்டுவது, நோன்பு நோற்பது, தொழுவது, குர்ஆன்மீது சத்தியம் செய்வது போன்ற நடைமுறைகளில் எதைச் செய்தாலும் சாகும்வரை சித்திரவதைதான். 

நெப்போலியன் படையெடுப்பு 

இவ்வாறு தொடர் வேதனைகளை முஸ்லிம்கள் அனுபவித்துக்கொண்டிருந்தனர். கி.பி. 1808ஆம் ஆண்டு நெப்போலியன் காலத்தில் பிரஞ்சுக்கார்ர்கள் ஸ்பெயினைக் கைப்பற்றினர். பிரஞ்சுப் புரட்சியின் தொடக்க காலமான அந்நேரத்தில், ஸ்பெயினில் இருந்த முஸ்லிம்களுக்கெதிரான சட்டங்களை உடனே அகற்ற வேண்டுமென நெப்போலியன் உத்தரவிட்டான். 

இருந்தாலும், ஏழாவது பெர்டினாண்ட் காலத்தில் –அதாவது கி.பி. 1814ஆம் ஆண்டு அதே நெருக்கடி நிலை மீண்டும் அமலுக்கு வந்தது. கொடுமைகள் தொடர்ந்தன. இறுதியாக கி.பி. 1834ஆம் ஆண்டு பிரதிநிதிகள் அவையில் இச்சட்டம் அடியோடு அகற்றப்பட்டது. 

இதன் பின்னர்தான் முன்பு அங்கு அரங்கேறிய கொலை, கொடுமை, சொத்துப் பறிப்பு ஆகிய வன்செயல்களின் பட்டியல் வெளியானது. 

இந்த வகையில், பெரிய கார்டினல் கம்னேஸ் உத்தரவின்பேரில் மட்டும் 50 ஆயிரம் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். அரசாணையின்பேரில், 31,912 முஸ்லிம்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டனர். 17,659 பேரின் நூல்களும் ஆவணங்களும் எரிக்கப்பட்டன; உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

2,71,450 பேர் பல்வேறு தண்டனைகளுக்கு ஆளாயினர். 10 லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் புலம்பெயர்ந்தனர். 

பிரான்ஸ் ஆய்வு மன்றம் கணக்கெடுத்து வெளியிட்ட அறிக்கையில் முத்தாய்ப்பாக ஒன்றைக் குறிப்பிட்டது. கிறித்தவர்கள் ஆட்சியில் நடந்த கொடுமைகளை விவரிக்க வார்த்தைகள் இல்லை; எழுத்துகளுமில்லை. இந்தக் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளை கற்பனைகூட செய்ய முடியாது. 

ஆக, முஸ்லிம் ஆட்சியாளர்களிடையே ஏற்பட்ட உட்பூசலும் ஒற்றுமையின்மையும்தான் ஸ்பெயினில் முஸ்லிம்களின் ஆட்சி வீழ்வதற்கும் ஸ்பெயின் முஸலிம்கள் கொடுமைகளை அனுபவித்ததற்கும் காரணமாயின. அத்துடன் முஸ்லிம் ஆட்சியாளர்கள் இஸ்லாத்தை மறந்து மனம்போன போக்கில் தங்களது வாழ்க்கை முறையையும் ஆட்சியமைப்பையும் வகுத்துக்கொண்டதும் இந்தச் சீரழிவுக்குக் காரணமாயிற்று. 

இன்றும் முஸ்லிம் நாடுகளில் இதே நிலைதான் காணப்படுகிறது. முஸ்லிம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வும் எழுச்சியும் மத்திய கிழக்கு நாடுகளில் ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டுள்ளன. ஆட்சிக்கு வருபவர்கள் இஸ்லாத்தை முறையாகக் கடைப்பிடித்தால் அல்லாஹ்வின் உதவி நிச்சயமாகக் கிடைக்கும். 

முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இயங்கும் முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கும் சமூக அமைப்புகளுக்கும் ஸ்பெயின் ஒரு நல்ல பாடமாகும். சிறுசிறு குழுக்களாக இருந்து, தங்களின் வலிமையைச் சிதறடித்துவிடாமல், பொதுப் பிரச்சினைகளில் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மறுமலர்ச்சி ஏற்பட வாய்ப்பு உண்டு. 

அல்லாஹ் கூறுகின்றான்: உங்கள் இறைவன் உங்கள் எதிரியை அழித்துவிட்டு, பூமியில் (அவனது இடத்தில்) உங்களை அமரவைக்கக்கூடும். பின்னர் நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்பதை அவன் கூர்ந்து கவனிப்பான். (7:129)

Friday, March 02, 2012

பங்களாதேஷில் பயங்கரம்


பங்களாதேஷில் பயங்கரம்
-          கான் பாகவி
தெ
ன் மத்திய ஆசியாவில் உள்ள ஒரு சிறிய நாடே பங்களாதேஷ்அல்லது வங்காளம், சுமார் ஒன்றரை லட்சம் சதுர கி.மீ. சுற்றளவுள்ள வங்களாத்தில் சுமார் 15 கோடி மக்கள் வசிக்கின்றனர்.
1947ல் பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியா விடுதலை பெற்றபோது கிழக்கு வங்களாம்’ என்ற பெயரில் பங்களாதேஷ் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருந்த்து. இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்போது, கிழக்கு பாகிஸ்தானாக பங்களாதேஷ் இருந்த்து. பின்னர் இந்தியாவின் தலையீட்டால் 1971ல் பங்களாதேஷ் தனிநாடாக உருவானது.
பங்களாதேஷில் 90 விழுக்காடு முஸ்லிம்களே வசிக்கின்றனர். 10 விழுக்காடு இந்துக்கள் உள்ளனர். கங்கை – பிரம்மபுத்திரா நதிகள் இணைந்து பத்மா ஆறாக வங்களாத்தில் ஓடுகின்றன. பல பகுதிகள் வண்டல் நிலங்கள். ஆண்டில் மே முதல் அக்டோபர்வரை கடுமையான மழைப்பொழிவு இருக்கும். எனவே, அடிக்கடி வெள்ளப் பெருக்கு ஏற்படுவது வங்காளத்தில் வாடிக்கை.
விவசாயத்தையே நம்பியிருக்கும் வங்காளிகளுக்கு இக்கனமழை பேரிடராகவே கருதப்படுகிறது. சணல், அரிசி, கோதுமை, கரும்பு, மீன் முதலிய பொருட்கள் உற்பத்தியாகின்றனவாம்! சணல், தேயிலை, தோல், மீன் ஏற்றுமதியாகின்றன. இயற்கை எரிவாயும் கிடைக்கிறது.
மண் வளமிக்க நாடு; நாட்டின் குறுக்கு நெடுக்காகப் பல ஆறுகள் பாய்கின்றன. இருந்தாலும், சீரான அரசு நிர்வாகம் இல்லாததாலும் நிலையான அரசமைப்பு இல்லாததாலும் மிக வறிய நாடாகவே பங்களாதேஷ் இருந்துவருகிறது. வாட்டும் வறுமை; எழுத்தறிவின்மை; வேலையில்லா திண்டாட்டம்; உற்பத்தியும் தொழிலும் போதிய அளவில் இல்லாமை... என எல்லாமும் சேர்ந்து வங்காளிகளை வதங்கவைக்கின்றன.
இதனால், அண்டை நாடுகளில் –குறிப்பாக இந்தியாவில்- சட்டவிரோதமாகப் பலர் குடியேறிவருகின்றனர். மிகப்பெரும் பயங்கரமும் கொடுமையும் என்னவென்றால், பெண்களும் குழந்தைகளும் பாலியல் தொழிலில் (?) ஈடுபடுத்தப்பட்டு, வெளிநாடுகளுக்கு விற்கப்படுவதுதான். பங்களாதேஷின் உயர்நீதிமன்றம், விபசாரத்தை ஒரு தொழிலாக அங்கீகரித்துத் தீர்ப்பு வெளியிட்டது அதைவிடப் பெரும் கொடுமை. இத்தீர்ப்பை அடுத்து சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான விலைமாதுகள் விடுதலை செய்யப்பட்டனர்.
அதிர்ச்சி தரும் புள்ளிவிவரம்
பங்களாதேஷில் விலைமாதுக்களின் எண்ணிக்கை துல்லியமாகத் தெரியாவிட்டாலும், பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் குற்றங்களில் பயன்படுத்துவதற்காக விலைக்கு வாங்கும் பாவச்செயலில் 10 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனராம்.
  • கடந்த பத்து ஆண்டுகளில் ஒரு லட்சம் பெண்கள் விபசாரத்திற்காக விற்கப்பட்டுள்ளனர். விபசாரிகளின் வயது 11ல் தொடங்குகிறது.
  • தலைநகர் டாக்காவில் மட்டும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் குழந்தைகள் – 12 வயதைத் தொடுவதற்கு முன்பே – விபசாரத்திற்காகச் சாலைகளில் திரிகின்றனராம்.
  • காவல்துறையின் கணக்கு என்னவென்றால், ஆண்டுதோறும் 15ஆயிரம் பெண்கள் வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுகிறார்கள். இவ்வாறு கடைசி சில ஆண்டுகளில் 2 லட்சம் பெண்கள் 6 லட்சம் குழந்தைகளுடன் கடத்தப்பட்டுள்ளனர். இவர்களெல்லாரும் காணாமல் போனவர்கள்’ என அறிவித்து வழக்கை முடித்திருக்கிறது காவல்துறை.
  • பொய்யான வாக்குறுதிகளை நம்பி வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு நிர்க்கதியாக நிற்கும் 2 லட்சம் பெண்களின் பரிதாப நிலையை நினைத்தால் நெஞ்சு பதறுகிறது. இவர்கள் இந்தியா, பாகிஸ்தான், மத்திய கிழக்கு நாடுகளில் பாலியல் வியாபாரிகளுக்கு விற்கப்பட்டவர்கள். இவர்களில் 27ஆயிரம் பெண்களும் குழந்தைகளும் இந்திய விபசார விடுதிகளில் கட்டாயப்படுத்தப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனராம்.
  • கடைசி 20 ஆண்டுகளில் ஒரு லட்சம் பெண்களும் குழந்தைகளும் மத்திய கிழக்கு நாடுகளுக்குக் கடத்தப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் 50 பெண்களும் குழந்தைகளும் (மற்றொரு தகவலின்படி 200) வங்காளத்தின் எல்லைக்கப்பால் கடத்தப்பட்டுவருகிறார்கள்.
  • ஒவ்வொரு நாளும் 200 பெண்கள் பங்களாதேஷிலிருந்து பாகிஸ்தானுக்குச் சட்டவிரோதமாகப் பயணிக்கின்றனர்.
  • மில்களில் வேலை பார்க்கும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.
  • பங்களாதேஷில் 18 வயதைத் தாண்டிய பெண்கள் யாரும் விபசாரத்தில் ஈடுபட்டால், அவர்களைச் சட்டப்படி தண்டிக்க முடியாது. வயதுச் சான்றிதழ் காட்டினால் போதும்; காவல்துறை அவர்களைக் கைது செய்யாது. அப்படியே சிறையில் அடைக்கப்படும் இளம் பெண்கள் காவலர்களால் களவாடப்படுகிறார்களாம்.

  • மனதைக் கல்லாக்கிக்கொள்ளுங்கள்பங்களாதேஷில் விபசாரிகள் மட்டுமே இருக்கும் கிராமங்கள் சில உள்ளன. டோலாதேத்தா’ என்ற கிராமம்தான், உலகிலேயே மிகப் பெரிய விபசார விடுதிகயாகக் கருதப்படுகிறது. அங்கு 1600 பெண்கள் தினமும் 3 ஆயிரம் ஆண்களுக்குத் தங்கள் உடலை விற்கிறார்கள்.


பயங்கர விளைவுகள்
விலைமாது, தான் சம்பாதிக்கும் (?) பணத்திற்காகக் கொடுக்கும் விலை மிகப் பெரியது. கற்பை இழக்கிறாள். மறுமையில் தீக்குண்டத்திற்கு இரையாகிறாள். ஹராமையே உண்கிறாள். இத்துடன் முடிவதல்ல ஆபத்து. சமூகரீதியாகவும் உடல் மற்றும் மனரீதியாகவும் அவள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறாள்.
ஏஜெண்டுகளின் அடிக்கும் உதைக்கும் அளவே இல்லை. சித்திரவதை நடக்கிறது. இழிவுபடுத்தப்படுகிறாள். சில வேளைகளில் படுகொலையே செய்யப்படுகிறாள். அல்லது பால்வினை நோய்களுக்கு இலக்காகி நொறுங்கிப்போகிறாள்.
மனரீதியாகப் பார்த்தால், விலைமாதின் நிலை பரிதாபக்குரியது. அந்நிய ஆணின் ஸ்பரிசம் ஏற்பட்டவுடனேயே அவளில் ஏற்படும் முதல் அதிர்ச்சியே பயங்கரமானது. போகப்போக உணர்ச்சியை இழந்து மரக்கட்டையாக மாறிவிடுகிறாள். கெட்ட கனவுகளால் தூக்கத்தைத் துறந்து அவதிப்படுகிறாள். எரிச்சல், கோபம், டுக்கம், பலவீனம் என எல்லாம் சேர்ந்து அவளை வாட்டி வதைக்கும். பணம் வந்து என்ன பயன்?
விலைமாதுகள் பெரும்பாலும் நீண்டநாள் வாழ்வதில்லை. சாதாரண பெண்களைவிட இவர்களின் ஆயுட்காலம் மிகவும் குறைவு. சமூகரீதியாகப் பார்த்தால், விபசாரிகள் சமூக மரணத்தையே அனுபவிக்கின்றனர். சமூகத்தைவிட்டு ஒதுங்கி, மற்றவர்களுடன் சகஜமாகப் பழக முடியாமல் தனிமையில் கிடந்து குமுற வேண்டியதுதான். குற்ற உணர்ச்சி, தாழ்வு மனப்பான்மை ஆகியவை விபசாரிகளைக் கொல்லாமல் கொல்லும் விஷங்களாகும்.
மேற்குலகின் சதி
பங்களாதேஷில் பெரும்பாலான மக்களுக்குச் சொந்த நிலம் கிடையாது. வங்காளிகளில் 45 விழுக்காட்டினர் வறுமைக் கோட்டுக்குக் கீழே அல்லல்படுகின்றனறர். அங்கு பெண்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தப்படுகின்றனர். பெண்களுக்கெதிரான கொடுமைகள் அங்கு அங்கீகாரம் பெற்றுள்ளன. பெண்ணை மனுசியாகப் பார்ப்பதைவிடக் காசு சம்பாதிக்கும் ஓர் இயந்திரமாகவே பார்க்கிறார்கள்.
இதுவெல்லாம் பெண்களை விபசார உலகிற்குத் தள்ளிவிடும் காரணிகளாகக் கூறப்படுகின்றன.
வங்காள மருத்துவர் ஃபைரோஸ் மஹ்பூப் கமால் ஓர் உண்மையைப் போட்டு உடைக்கிறார்பங்களாதேஷில் விபசாரம் பரவியிருப்பதற்கு முக்கியக் காரணம் மேற்குலகம்தான். இஸ்லாத்திற்கெதிரான முக்கிய ஆயுதங்களில் ஒன்றாக இதை மேற்கத்தியர் கையிலெடுத்துள்ளனர்.
ஐரோப்பிய காலணி ஆதிக்கப் பேர்வழிகள், இஸ்லாமிய நாடுகளிடமும் நலிந்த நாடுகளிடமும் அடித்த கொள்ளைகள், சுரண்டல்கள், அவற்றை அடிமைப்படுத்திச் சிறுமைப்படுத்திய கொடுமைகள், உடல்ரீதியான தொல்லைகள் ஆகியவற்றைத் தாண்டி வெகுதொலைவுக்குச் சென்றுவிட்டனர். முஸ்லிம்களின் கலாசாரத்தைச் சீரழிக்கத் திட்டமிட்டு வேலை செய்து வருகிறார்கள்.
கலாசார சீரழிவைச் செயல்படுத்த ‘நிறுவன’ நடைமுறையை அவர்கள் கையாண்டு வருகின்றனர். விபசாரத்தைப் பரப்பி, அதை ஒரு தொழிலாக ஏற்கும் மனநிலைக்கு மக்களை அடிமைப்படுத்திவிட்டனர். பங்களாதேஷில் பரவியுள்ள விபசாரம், உண்மையில் காலணி ஆதிக்கத்தின் காலடிச்சுவடு என்றே குறிப்பிட வேண்டும்.
மதச்சார்பின்மை, சுதந்திரம், ஜனநாயகம், மனிதஉரிமை ஆகிய போர்வைகளில் அநாகரிகங்களையும் அநாசாரங்களையும் சட்ட அனுமதியோடு அவர்கள் அரங்கேற்றிவருகின்றனர். விபசாரம் ஓரினச்சேர்க்கை போன்ற பண்பாட்டுச் சீரழிவுகளை மிக எளிதாகப் பரப்பிவிடும் உத்திகள் அவர்கள் வசம் உள்ளன. இந்த அநாகரிகங்களுக்கெதிராக்க் குரல் கொடுப்போர் யாராக இருந்தாலும், அவர்கள் மனித சுதந்திரத்திற்கும் முற்போக்கு கலாசாரத்திற்கும் எதிரானவர்கள் என முத்திரை குத்தப்படுவர்.
பாலியல் சுதந்திரம் என்பது, ஐரோப்பிய சமூக அமைப்பில் ஒரு குற்றமாகவே கருதப்படுவதில்லை. பங்களாதேஷ் மக்கள் மத்தியில் கலாசார சீரழிவுகள் வேகமாகப் பரவவில்லை. இதற்குக் காரணம் இஸ்லாம்தான். இஸ்லாம் இக்குற்றச் செயல்களுக்குக் கடுமையான தண்டனை விதிக்கிறது. இதனால், ‘பாலியல் கிளப்களை ஐரோப்பியர் உருவாக்கினர்.
ஐரோப்பியர் ஆக்கிரமித்திருந்த நாடுகளின் முக்கிய நகரங்களிலும் கடற்கரை ஓரங்களிலும் ‘கலைத் தீவுகள்’ என்ற பெயரில் ஆண் – பெண்கள் சுதந்திரமாகப் பழகும் இடங்களை உருவாக்கினர். இத்தீவுகள்தான் பாலியல் குற்றங்கள் அனைத்திற்கும் பாதுகாப்பான இடங்கள் என அவர்கள் கருதினர். ஆட்டம், பாட்டம், சூதாட்டம், விபசாரம், ஒருபால் சேர்க்கை ஆகிய எல்லா கூத்துகளும் அங்கு சட்ட அனுமதியுடன் நடக்கும்.
இந்தக் கலைத் தீவுகளுக்கு, எல்லா தண்டனைகளிலிருந்தும் விலக்கு அளிக்கப்பட்டது. ஐரோப்பியர் மட்டுமன்றி உள்ளூர் மக்களும் சிறிது சிறிதாக இத்தீவுகளுக்கு ஈர்க்கப்பட்டார்கள். விவசாயிகள், வணிகர்கள், தொழிலாளர்கள், மார்க்கமற்றவர்கள் எனப் பலரையும் இந்நோய் தொற்றிக்கொண்டது. ஐரோப்பியர் நாட்டைவிட்டு வெளியேறியபின்பும் உள்நாட்டு மக்கள் அந்த அழிவிலிருந்து மீளவில்லை.
குடும்ப அமைப்பு சிதைந்தது
திருமண வாழ்க்கை முறையையும் குடும்ப அமைப்பையும் சிதைப்பதில் இந்த விபசாரம் மிகப்பெரும் பங்காற்றியுள்ளது. முஸ்லிம் நாடுகள்கூட, தம் தீனை மறந்து அமெரிக்காவைப் பின்பற்றி விநோதமான சட்டங்களை இயற்றிவைத்துள்ளன. 18 வயது ஆகாமல் திருமணம் செய்யக் கூடாது என்ற விதி சில நாடுகளில் உண்டு. அதே நாடுகள், 18 வயதுக்குட்பட்டவர்கள் விபசாரம் செய்வதைக் குற்றமாக்க் கருதுவதில்லை. அதாவது ‘திருமணம்’ மட்டும் செய்துகொள்ளாதே. தவறான வழியில் எப்படி வேண்டுமானாலும் காமத்தைத் தீர்த்துக்கொள் என்கின்றன அந்த நாடுகள்.
ஆணும் பெண்ணும் சம்மதித்து சட்டப்படி திருணம் செய்வது தண்டனைக்குரிய குற்றம்; ஆணும் பெண்ணும் சம்மதித்து தவறான உறவு வைத்துக்கொள்வது குற்றமாகாது. பிறகு எதற்காகத் திருமணம்? பிறகு ஏன் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்? குடும்பம், அதற்குள் கட்டுப்பாடு, குடும்பச் சுமை... இப்படி மனித நாகரிகம் கண்ட அமைப்புகளெல்லாம் அழிந்து ஒழிந்துகொண்டிருக்கின்றன, இந்த காட்டுமிராண்டிகளால்.
வங்காளத்தில், திருமணத்திற்கு முன்பே பாதி இளைஞர்கள் பாலுறவு வைத்துக்கொள்கிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு. இதனால், பால்வினை நோய்கள் அங்கு வேகமாகப் பரவிவருகின்றன.
அல்லாஹ்வேநீதான் காப்பாற்ற வேண்டும்!