Monday, April 29, 2013

செயற்கைக் கருத்தரிப்பும் வாடகைத் தாயும்


மௌலவி, அ. முஹம்மது கான் பாகவி


பொ
ருளே வாழ்க்கை என்றாகிவிட்ட பிறகு தன்னலம் ஒன்றே இலக்கு   என்றாவதில் வியப்பென்ன இருக்க முடியும்?

இங்கே தனிமனித வாழ்விலும் சமூக வாழ்க்கையிலும் மனசாட்சிக்கோ பண்பாட்டிற்கோ அறவே இடமில்லை. தனிமனிதன் தன் நலத்தைப் பேணுவதிலும் எவ்வழியிலாவது வாழ்க்கையை அனுபவிப்பதிலும் மட்டுமே குறியாக இருக்கின்றான்.

பொதுவாழ்வோ முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மாசுபட்டுக் கிடக்கிறது. பொதுவாழ்க்கையின் அடிப்படையே பொதுநலன்தான். ஆனால், இன்றைய சமூக அவலங்களை நோக்கும்போது தன்னலத்தின் தன்னிகரற்ற போட்டிக் களமாகப் பொதுவாழ்வு மாறிவிட்டிருக்கிறது.

இதற்கிடையில், சுயநலத்தைக் காப்பதிலும் வளர்ப்பதிலும் அறிவியல் முன்னேற்றமும் புதிய கண்டுபிடிப்புகளும் பெரும்பங்காற்றிவருகின்றன. தொலைக்காட்சியும் இணையதளமும் குடும்ப உறுப்பினர்களிடையே பெரிய தடுப்புச் சுவரை ஏற்படுத்தி, ஒட்டாமல் செய்துவிட்டன. ஒவ்வொருவரும் தனித்தனி உலகத்தில் சஞ்சரிப்பதால் அடுத்தவரைப் பற்றிக் கவலைப்பட யாருக்கும் நேரமில்லை.

கைப்பேசி வந்ததிலிருந்து சாலையில் செல்லும் மனிதனுக்கு, எதிரில் வருபவனைக் கண்டு முகம் மலரவோ முகமன் கூறவோ தோன்றுவதில்லை. உடன் இருப்பவனை மறந்து, எங்கோ இருப்பவனுடன், அல்லது இருப்பவளுடன் கதைப்பதற்கே அவனுக்கு, அல்லது அவளுக்கு நேரம் போதவில்லை.

இந்த லட்சணத்தில் இறையுணர்வு, இறைவன் எழுதிய விதியைப் பொருந்திக்கொள்ளல், உள்ளதைக் கொண்டு போதுமாக்கல், இருப்பதைவிட்டு பறப்பதைப் பிடிக்க ஆசைப்படாமை, நாம் வாழ பிறர் வாழ்க்கையைக் கெடுக்காமலிருத்தல் என்பன போன்ற உயர்பண்புகளுக்கு எங்கே இடமிருக்கப்போகிறது!

குழந்தைச் செல்வம்


குழந்தைப் பாக்கியம் என்பது, உண்மையிலேயே இறைவன் வழங்கும் மாபெரும் கொடை என்பதில் இரு கருத்துக்கு இடமில்லை. கோடி கோடியாகப் பணம் இருந்தும் சொத்துப்பத்துகள் இருந்தும் எல்லாம் யாருக்காக என்ற கேள்வி எழும்போது, குழந்தைச் செல்வம்தான் பதிலாக வந்து நிற்கும்.

சிலர் ஆண் குழந்தையை விரும்புவர்; அவர்களுக்குப் பெண்குழந்தையே திரும்பத் திரும்பப் பிறக்கும். சிலர் பெண் குழந்தைக்காக ஏங்குவதுண்டு; ஆனால், ஆண் குழந்தைகளே அவர்களுக்குக் கிடைக்கும். சிலருக்கு ஆணும் பெண்ணும் கலந்து பிறக்கும். அவ்வாறுதான், சிலருக்குக் குழந்தை பாக்கியமே இல்லாமல் போய்விடும். எல்லாம் இறைவனின் நாட்டம்; அவனது எழுத்து.

அல்லாஹ்வுக்கே வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் உண்டு. தான் நாடுவதை அவன் படைக்கின்றான். தான் நாடுவோருக்குப் பெண் குழந்தைகளை (மட்டும்) அருள்கின்றான்; தான் நாடுவோருக்கு ஆண் குழந்தைகளை (மட்டும்) அருள்கின்றான். அல்லது ஆண்களையும் பெண்களையும் கலந்து கொடுக்கின்றான். தான் நாடுவோரை மலடியாக்கிவிடுகின்றான். நிச்சயமாக அவன் நன்கறிந்தவன்; பேராற்றல் மிக்கவன் (42:49,50) -என்கிறது திருக்குர்ஆன்.

இந்தத் தத்துவத்தைப் பொருந்தியே முன்னோர்கள் வாழ்ந்தார்கள்; அதிலும் திருப்தியோடுதான் வாழ்ந்தார்கள். அவர்களது வாழ்க்கையில் வசதிப் பற்றாக்குறை இருந்திருக்கலாமே ஒழிய, நிம்மதிக்கும் மகிழ்ச்சிக்கும் குறை இருந்ததில்லை. காரணம், வாழ்வின் எதார்த்தத்தை அவர்கள் புரிந்திருந்தார்கள். இன்று வசதிகளுக்குக் குறைவில்லை; ஆனால், நிம்மதிதான் காசு கொடுத்தாலும் கிடைப்பதில்லை. காரணம், வாழ்க்கையின் நிஜத்தை யாரும் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை.

மேற்கண்ட வசனத்தின்படி, நபி லூத் (அலை) அவர்களுக்குப் பெண் குழந்தைகள் மட்டுமே பிறந்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு ஆண் பிள்ளைகள் மட்டுமே பிறந்தார்கள். இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு ஆணும் பெண்ணும் பிறந்தனர். நபி யஹ்யா (அலை), ஈசா (அலை) ஆகியோருக்குக் குழந்தைகளே பிறக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

ஆக, இவ்வகையில் மனிதர்கள் நான்கு வகைப்படுவர். இந்த நான்கு வகைகளுக்கும் நபிமார்களிலேயே அல்லாஹ் உதாரணங்களை ஏற்படுத்தியிருந்ததுதான் முக்கியமானது.

அவ்வாறே, படைக்கப்பட்ட விதத்திலும் மனிதர்கள் நான்கு வகைப்படுவர்.

1. ஆதித்தூதரும் ஆதி மனிதருமான ஆதம் (அலை) அவர்கள் ஆண் மற்றும் பெண்ணின் துணையின்றி, மண்ணிலிருந்து படைக்கப்பட்டார்கள்.

2. அன்னாரின் துணைவியார் ஹவ்வா (அலை) அவர்கள் ஆண் துணைகொண்டு மட்டுமே -ஆதமின் விலா எலும்பிலிருந்து- படைக்கப்பட்டார்கள்.

3. நபி ஈசா (அலை) அவர்கள் ஆண் துணையின்றி மர்யம் (அலை) அவர்களுக்குப் பிள்ளையாகப் பிறந்தார்கள்.

4. மற்றெல்லாரும் ஆண் மற்றும் பெண் துணையுடன் பிறந்தவர்கள் ஆவர்.

இவர்கள், பெற்றோர் வழியில் நான்கு வகை மனிதர்கள் என்றால், முன்பு கூறப்பட்டவர்கள் பிள்ளை வழியில் நான்கு வகை மனிதர்கள் ஆவர். இவையெல்லாம் வல்ல இறைவனின் வகைவகையான படைப்பாற்றலுக்குச் சான்றுகளாகும். (தஃப்சீர் இப்னு கஸீர்)

மலட்டுத் தன்மை


மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்களுக்குக் குழந்தைகளும் குட்டிகளும் பிறப்பது எப்படி இயல்பான ஒன்றோ, அப்படியே குழந்தைப் பேறு இல்லாத மலடிகளாக மனிதர்கள் இருப்பதும் இயல்பான ஒன்றுதான் என்பது இத்திருவசனத்திலிருந்து உறுதியாகிறது. எனவே இது, குறைகூறும் அளவுக்கான பெரிய குறைபாடு அல்ல. குழந்தை பேறற்றவர்களை, இருவழி உறவினர்களும் மனம் புண்படும்படி பேசி நோகச்செய்யக் கூடாது.

பொதுவாக எட்டில் ஒரு ஜோடி -அதாவது 12.5 விழுக்காட்டினர்- மலடியாக இருக்க வாய்ப்பு உண்டு என்கிறது ஒரு கணக்கு. இவர்களில் 50 முதல் 60 விழுக்காடு பெண்களும் 30 முதல் 40 விழுக்காடு ஆண்களும் பிள்ளைப்பேறில்லாமைக்குக் காரணம். 10 விழுக்காடு காரணம் கண்டுபிடிக்க முடியாத அம்சங்களால் மலட்டுத்தனம் ஏற்படுகிறதாம்!

குறைபாடுகள்


குழந்தைப் பேறின்மைக்குப் பெண்களிடம் காணப்படும் குறைபாடுகள் மூன்று:

1. சினைமுட்டை வெளியாவதில், அல்லது ஹார்மோன்களில் காணப்படும் பிரச்சினைகள்.

2. அண்டக் குழாய் (Ovary) குறைபாடுகள்; சினைமுட்டைகளையும் ஹார்மோன்களையும் உற்பத்தி செய்யும் உறுப்பே அண்டகம், அல்லது அண்டக்குழாய் எனப்படுகிறது.

3. விந்தணுவைச் செயலிழக்கச் செய்கின்ற வேதியியல் (கெமிக்கல்) குணமேதும் பெண்கள் உடலில் இருத்தல்.

அவ்வாறே ஆண்களில் காணப்படும் குறைபாடுகளும் மூன்று:

1. ஆண்மைக் குறைவு (Impotence).

2. ஆண்களின் ஒவ்வொரு விந்துத் துளியிலும் 60 மில்லியன் உயிரணுக்கள் இயல்பாக இருக்கும். இந்த விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது.

3. விந்துயிரணு ஒவ்வொன்றும் பேரிக்காயின் தோற்றத்தில் தலை, கழுத்து, உடம்பு, சாட்டை போன்ற வால் ஆகியவை கொண்ட உயிரி ஆகும். முன்னோக்கி மிக வேகமாக நகரும் இதனை நுண்ணோக்கி (Microscope) மூலம் காணலாம். இந்த உயிரணுக்களின் இயக்கத்தில் ஏற்படும் கோளாறும் மலட்டுத் தன்மைக்குக் காரணமாகலாம்.

அறிவியல் உலகம் சொல்லாமல் மறைக்கின்ற ஒரு காரணமும் குழந்தைப் பேறின்மைக்கு உண்டு. அதுதான், திருமணத்திற்குமுன் ஆண்கள் விந்தை வீணாக்குவது. சுய பாலின்பம், கெட்ட கனவு ஆகியவற்றால் விந்தை வீணாக வெளியேற்றிப் பழகிவிட்ட ஒருவனுக்கு, தாம்பத்திய உறவில் நாட்டம் குறையும். அப்படியே தாம்பத்திய உறவில் விந்து வெளிப்பட்டாலும் அதிலுள்ள உயிரணுக்களில் வீரியம் இருக்காது.

அடுத்து குழந்தையின்மைக்கு இருவருக்கும் பொதுவான காரணங்கள் எனச் சிலவற்றைக் கூறலாம்:

1. ஆணுக்கோ பெண்ணுக்கோ, விந்தணு பயணிக்கும் பாதையில் அடைப்பு இருக்கலாம். ஒன்று, ஆணிலிருந்து விந்தணு வெளியேறுவதில் தடங்கல் ஏற்படலாம். அல்லது வெளியேறியபின் பெண்ணின் கருமுட்டையுடன் இணைவதில் பிரச்சினை ஏற்படலாம். ஆனால், இந்த அடைப்பை, அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த இடமுண்டு.

2. உணர்வு மற்றும் மனரீதியிலான விஷயங்கள் காரணமாக இருக்கலாம். கணவனுக்கு மனைவியுடன் சேர்வதில், அல்லது மனைவிக்குக் கணவன் அருகில் வந்துவிட்டாலே, அல்லது இருவருக்குமே அந்த உறவில் மனரீதியான தடைகள் இருக்க வாய்ப்பு உண்டு. இதற்குக் கலந்தாய்வு ஆலோசனைகள் (கவுன்சிலிங்) மூலம் தீர்வுகாணலாம்.

3. ஆண், அல்லது பெண், அல்லது இருவருமே புகைப்பழக்கத்திற்கோ போதைப் பழக்கத்திற்கோ அடிமையாக இருத்தல்.

4. ஆண் பெண்ணை, அல்லது பெண் ஆணை அடிக்கடி அதிக இச்சையுடன் பார்ப்பது. சினிமா, தொலைக்காட்சி, ஆபாச புத்தகம், நேரில் பார்த்தல் ஆகியவற்றால் உணர்ச்சியை இழத்தல்.

5. மரபு வழி காரணங்களும் குழந்தைப் பேறின்மைக்குக் காரணமாக இருக்கலாம்.

6. புதுவகை உணவுகள். இவற்றில் கலக்கும் பொடி வகைகள், வேதியியல் பொருட்கள் உயிரணுவையோ கருமுட்டையையோ பெரிதளவில் பாதிக்கலாம்.

7. கடின வேலைகள். இவற்றால் உடம்பின் ஆற்றல்களை இழந்து, சத்துகள் குறைந்து குழந்தை பெற்றுக்கொள்ள முடியாமல் போகலாம்.

தீர்வுகள்


குழந்தைப் பேறின்மைக்கு இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் இரண்டு தீர்வுகளைக் கூற முடியும்:

1. உடல் ரீதியிலான குறைகள் இருக்குமானால், அவற்றைக் களைய மருத்துவ சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகளைத் தாராளமாக மேற்கொள்ளலாம்.

2. மனரீதியிலான குறைகள் இருந்தால், உளவியல் சிகிச்சை முறைகள், கவுன்சிலிங் ஆலோசனைகள் ஆகியவற்றை மேற்கொள்ளலாம்.

3. முடியாதபோது தத்து எடுத்துக்கொள்ளலாம். ஆனாலும், வளர்ப்புக் குழந்தை சட்டப்படி சொந்தக் குழந்தை ஆக முடியாது; வளர்ப்புத்தாய் அல்லது தந்தையின் சொத்திலிருந்து வாரிசுரிமைச் சட்டப்படி பாகப்பிரிவினை கோர முடியாது; அவர்களுடைய உறவுகள் இவனுக்கு முறைப்படியான உறவுகளாக முடியாது.

செயற்கைக் கருத்தரிப்பு


இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ரஷியாவில் கால்நடைகளின் இனப்பெருக்கத்தை அதிகமாக்கிக் கூடுதல் வருவாய் ஈட்டுவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட புதிய நடைமுறையே செயற்கைக் கருத்தரிப்பு (Artificial Insemination) முறையாகும்.

பின்னர் இது மனிதர்களுக்கும் பரவியது. செயற்கைக் கருத்தரிப்பு முறையோ சோதனைக் குழாய் (Test Tube) குழந்தை முறையோ மேலைநாடுகளில் உள்ள அளவுக்கு முஸ்லிம் உலகில் இல்லை.

இதற்குக் காரணம், ஒரு முஸ்லிம் நான்கு மனைவியர்வரை மணமுடிக்க இஸ்லாத்தில் அனுமதி இருப்பதுதான். ஒரு மனைவிமூலம் குழந்தைப் பாக்கியம் கிடைக்காதபோது இன்னொரு பெண்ணை மணமுடித்துக் குழந்தை பெற்றுக்கொள்ள வாய்ப்பு உண்டு. குழந்தைப் பேறின்மைக்கு 60 விழுக்காடு காரணம் பெண்ணிடம் உள்ள குறைபாடே என முன்பே குறிப்பிட்டுள்ளோம்.

ஏழு வகைகள்


செயற்கைக் கருத்தரிப்புக்கு ஏழு முறைகள் அறிவியலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் முதலாவது முறை மார்க்கத்திலும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் முறைக்குச் சில நிபந்தனைகளுடன் அனுமதி உண்டு.

இதர ஐந்து முறைகளுக்கு மார்க்கத்தில் அனுமதி கிடையாது; அவை தடை செய்யப்பட்டவை ஆகும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

1. கணவனின் விந்தை எடுத்து, மனைவியின் புணர்புழையில், அல்லது கருப்பையின் கழுத்துப் பகுதியில் வைத்து வளரச்செய்யும் முறை.

கணவனின் விந்திலுள்ள உயிரணு மனைவியின் கருமுட்டையுடன் இணைந்து, கருப்பைச் சுவரில் ஒட்டிக்கொண்டு கருத்தரிப்பு ஏற்படும். விந்து உயிரணு இயற்கையாகக் கருப்பைக்குள் சென்று கருமுட்டையுடன் இணைவதில் தடை ஏற்படுவதால் குழந்தை பெற முடியாத தம்பதியருக்கு, இந்தச் செயற்கை முறைமூலம் குழந்தை உண்டாக வாய்ப்பு இருக்கிறது.

இதில், தம்பதியரல்லாத மற்றவர்களுக்குக் குழந்தை பிறப்பில் எந்தப் பங்கும் இல்லை. கருத்தரிப்புக்கு வேண்டிய விந்தணுவும் கருமுட்டையும தம்பதியருக்குரியதே. இருப்பினும், அவசியம் ஏற்பட்டால் மட்டுமே இம்முறையையும் கையாள வேண்டும்.

2. கணவனின் விந்து, மனைவியின் கருமுட்டை ஆகிய இரண்டையும் தனித்தனியே எடுத்து, ஐ.வி.எஃப் சோதனைக் குழாயில் வைத்துக் கருவுறச் செய்தல். ஒருபுறம் அடைப்பும் குறைந்த சுற்றளவும் கொண்ட கண்ணாடிக் குழாயே சோதனைக் குழாய் எனப்படுகிறது.

பின்னர் உரிய காலத்தில், குழாயிலிருந்து எடுத்து, மனைவியின் கருப்பையில் செலுத்தும் முறையே இது. இதிலும், கருப்பையின் சுவரைப் பிடித்துக்கொண்டு கரு வளரும். இதற்கு மூன்று லட்சம் ரூபாய்வரை செலவாகுமாம்! ஐந்து சதவீதம் பேரே இந்தச் சிகிச்சை முறையை மேற்கொள்கின்றனர். விந்தணுவும் கருமுட்டையும் இணைந்த பிறகு கருவை வளர்க்கும் சக்தி கருப்பைக்கு இல்லாதபோது, இம்முறை உதவலாம்.

இந்த முறையிலும், கருவூட்டலில் தம்பதியர் தவிர மற்றவர்களின் பங்களிப்பு இல்லை. தந்தையின் விந்தணுவும் தாயின் கருமுட்டையுமே கருத்தரிக்க அடிகோலுகிறது. எனவே, பெற்றோர்-பிள்ளை உறவுமுறை இதிலும் ஏற்படும்.

இருப்பினும், சோதனைக் குழாயில் வைத்து விந்தணுவையும் கருமுட்டையையும் வளர்க்கும் வேளையில், குழாய் மாறிவிடக் கூடாது; வேறு யாருடைய விந்தணுவோ கருமுட்டையோ இந்தத் தாயின் கருப்பையில் செலுத்தப்படுகின்ற தவறு நடந்துவிடக் கூடாது. இதில் எச்சரிக்கை தேவை.

இந்த இரு வகைகளிலும் வாடகைத் தாய்க்கு வேலை இல்லை; சொந்தத் தாயே குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். விதையும் சொந்தப் பெற்றோருடையதே. எனவே, இரு முறைகளும் செல்லும் என்று மார்க்க வல்லுநர்கள் ஃபத்வா அளித்துள்ளனர்.

வாடகைத் தாய்கள்


3. கணவனின் முதல் மனைவிக்காக, அவனுடைய விந்தை எடுத்து இரண்டாவது மனைவியின் கருப்பையில் செலுத்தி கருவூட்டும் முறை.

இக்கருவில் உண்டாகும் குழந்தை இரண்டாவது மனைவிக்குரிய குழந்தையாகுமே தவிர, முதல் மனைவியின் குழந்தையாக ஆக முடியாது. ஆக, இதில் தாய் வேறு என்பது குறிப்பிடத் தக்கது. கணவனின் இன்னொரு மனைவியாக இருந்து, வாடகைப் பணம் வாங்காவிட்டாலும் அவளும் வாடகைத் தாய்தான். இம்முறை கூடாது.

4. கணவனின் விந்தை எடுத்து, மற்றொருவனுடைய மனைவியின் கருப்பையில் செலுத்தி கருவூட்டல். இது அப்பட்டமான வாடகைத் தாய் முறையாகும். கணவன் அப்பெண்ணுடன் உறவு கொள்ளாவிட்டாலும், தவறான வழியில் பிறந்த குழந்தையைப் போன்றே இது கருதப்படும்.

5. கணவனின் விந்தையும் வேறொரு பெண்ணின் கருமுட்டையையும் எடுத்து, சோதனைக் குழாயில கருவுறச்செய்து, பின்னர் அதை மனைவியின் கருப்பையில் வைப்பது.

இந்த முறையில், அந்த வேறொரு பெண்ணே குழந்தையின் தாய் ஆவாள். மனைவி பெற்றெடுத்தாலும், கரு அவளுக்குரியதன்று. எனவே, அவள் வாடகைத் தாய்போல் செயல்பட்டிருக்கிறாள். இம்முறையும் கூடாது.

6. கணவனின் விந்தையும் வேறொரு பெண்ணின் கருமுட்டையையும் எடுத்துச் சோதனைக் குழாயில் கருவூட்டி, யாரோ ஒரு பெண்ணின் கருப்பையில் விதைப்பது.

இதில், மனைவிக்கு எந்தத் தொடர்பும் இல்லை. அவளுடைய கணவனின் விந்தணுவாக இருந்தாலும், அவன் யாருடனோ தவறாக உறவுகொண்டு பிறந்த குழந்தையைப் போன்றதே இது. ஆக, தாயும் வாடகை; சுமந்தவளும் வாடகை. பலநேரங்களில் அந்த வாடகைத் தாய்கள் யாரென்றே தெரியாது.

7. கணவனின் விந்தையும் மனைவியின் கருமுட்டையையும் எடுத்துச் சோதனைக் குழாயில் வளர்த்து, வாடகைத் தாயின் கருப்பையில் செலுத்தும் முறை.

இதில், பெற்றெடுப்பவள் அந்நியப் பெண். அவள் யாரென்று தெரிந்தாலும் தெரியாவிட்டாலும், குழந்தைக்குத் தாய் நான்தான் என்று அவள் உரிமை கொண்டாடக்கூடும்.

இந்தப் பிந்திய ஐந்து வகைகளிலும், ஒரே தம்பதியரின் விதையிலிருந்து கரு உருவாகவில்லை; அல்லது சுமந்து பெற்றவள் அந்நியப் பெண்ணாக இருக்கிறாள். எனவே, இவை அனைத்தும் செல்லத் தக்கவை அல்ல.

இந்திய வாடகைத் தாய்கள்


இந்தியாவில் ஆண்டுதோறும் 25 ஆயிரம் குழந்தைகள் வாடகைத் தாய்களால் பிறக்கின்றனவாம்! இதன்மூலம், ஆண்டுக்கு 200 கோடி டாலர்கள் வருமானம் கிடைக்கிறதாம்! இது ஒரு தொழிலாகவே நடக்கிறது.

இந்திய வாடகைத் தாய்களை இரு வகைப்படுத்தலாம். 1. கருமுட்டை, விந்து இரண்டையுமே வெளியிலிருந்து பெற்று, செயற்கையாக இணையவைத்து, கருவை வாடகைத் தாயின் கருப்பையில் வளரச் செய்தல். குழந்தைக்கும் வாடகைத் தாய்க்கும் எந்தவிதமான இரத்த உறவும் இருக்காது.

2. கருமுட்டையை வாடகைக்கு வாங்கி, கணவனின் விந்துடன் இணைத்துக் கருவுறச் செய்யும் முறை.

இதற்காகச் செயற்கை கருவூட்டல் கிளினிக்கள் (IVF) உள்ளன. வாடகைத் தாயின் உயிருக்கோ உடலுக்கோ எந்தப் பாதுகாப்பும் கிடையாது. இந்தச் செயற்கை முறைகளில் குழந்தைக்கே முக்கியத்துவம். லட்சக்கணக்கான டாலர்கள் அதற்காக முதலீடு செய்யப்பட்டிருப்பதே காரணம்.

பெரும்பாலும் மேலைநாடுகளின் தம்பதியினருக்காகவே குழந்தை பெற்றுக் கொடுக்கின்றனர். குழந்தை உண்டாகி, பிரசவிப்பதில் உள்ள அவதிகளை அனுபவிக்க மேலைநாட்டினர் தயாராக இல்லை. செல்லப் பிராணிகளைப் போன்றே பிள்ளைகளையும் காசு கொடுத்து வாங்கவே விரும்புகிறார்கள்.

மிருகங்கள் எவ்வளவோ பரவாயில்லை. கருத்தரித்து, ஈன்று, சிரமப்பட்டுக் கண்ணுங்கருத்துமாகக் குட்டிகளை வளர்க்கின்றன.

வாடகைத் தாய் பாதிக்கப்பட்டால், வாடகைக்கு அமர்த்திய பெற்றோர், அவர்களுக்குத் தரகர்களாகச் செயல்பட்டவர்கள், மருத்துவர்கள், வழக்குரைஞர்கள் ஆகியோரெல்லாம் சாமர்த்தியமாகத் தப்பிவிடுகின்றனர்.

சுமந்து பெற்ற தாய்க்கும் சேய்க்கும் உள்ள உறவு, பெற்றுக்கொடுத்ததோடு முடிந்துவிடும். இதையெல்லாம்விடப் பெருங்கொடுமை ஒன்று உண்டு. வாடகைக்கு விந்து கொடுத்தவன் யார்? கருமுட்டை வழங்கியவள் யார்? வாடகைக்காக வயிற்றைக் கொடுத்தவள் யார்? எதுவுமே தெரியாது. இரகசியம் (?) காக்கப்படும்.

இதனால், கருமுட்டை கொடுத்தவளின் சொந்த மகளை, கருமுட்டையில் பிறந்த வாடகை மகனே காதலித்துத் திருமணம் செய்துகொள்கின்ற அவலம் ஏற்படலாம். விந்து கொடுத்தவனின் சொந்த மகன், அவன் தானம் செய்த விந்தின் மூலம் பிறந்த மகளைத் திருமணம் செய்துகொள்கின்ற கொடுமையும் அரங்கேறலாம்.

வாடகைத் தாயின் துயரங்கள்


கரு கலையாமல் இருக்க, ஏராளமான ஹார்மோன் ஊசிகள் தொடர்ச்சியாகப் போடப்படுவதுண்டு. இதனால் வாடகைத் தாயின் உடல் நலம் பாதிக்கப்படும்; மாதவிடாய் சுழற்சிமுறை சீர்குலையும்.

வாடகைக்கு எடுத்தவரின் வசதிக்கேற்பவே சிசேரியன் மூலம் குழந்தை வெளியே எடுக்கப்படும். வாடகைத் தாயின் உடல் நிலையோ வேறு சூழல்களோ கணக்கில் கொள்ளப்படுவதில்லை. இதனால் வாழ்நாள் முழுக்க அவளுக்குப் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.

ஒரே தடவையில் நான்குக்கு மேற்பட்ட கருக்கள் வாடகைத் தாயின் கருப்பையில் வைக்கப்படும். கருக்களில் சில கலைந்துபோனாலும் ஒன்றாவது தப்புமல்லவா? பிறகு தேவைக்கேற்ப கருக் குறைப்பு செய்யும் தவறும் நடக்கும்.

சுருங்கக் கூறின், பணம் சம்பாதிக்க கருப்பை ஒரு மூலதனம். தாய்மை என்ற தியாகமே இங்கு விலைபேசப்படுகிறது. காசுக்காக மனிதன் எதையும் செய்யத் துணிந்துவிட்டான். பெரும்பாலும் அப்பாவிப் பெண்களே இக்கொடுமைக்குப் பலியாகின்றனர். இதன் பின்னணியில் செயல்படும் முகவர்கள், மருத்துவர்கள், வாடகைத் தாயின் பொறுப்பாளர்கள், இந்திய அரசாங்கம் என யாருக்கும் மனசாட்சியே கிடையாதா?

இஸ்லாத்தின் தூய்மை


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் தெரிந்துகொண்டே தம்மைத் தம் தந்தையல்லாத வேறொருவருடன் இணைத்து (நான் அவருடைய மகன்தான் என்று) வாதிடுகிறாரோ அவருக்குச் சொர்க்கம் தடை செய்யப்பட்டதாகும். (புகாரீ)

தன் தந்தை அல்லாத ஒருவரைத் தன் தந்தை என வாதிடுபவனுக்கு, அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து மக்களின் சாபமும் ஏற்படும். அவன் செய்த கடமையான வழிபாடு, கூடுதலான வழிபாடு எதையுமே மறுமை நாளில் அல்லாஹ் ஏற்கமாட்டான். (முஸ்லிம்)

ஒரு குழந்தை ஒரு பெண்ணிடம் பால் அருந்துவதன் மூலம், பிறவியால் உண்டாகும் உறவுமுறைகள் அனைத்தும் உண்டாகும் என்பது இஸ்லாத்தின் விதி. அவ்வாறிருக்கும்போது, விந்து, கருமுட்டை, கருவை சுமத்தல் போன்ற குழந்தை பிறப்புக்கு அடிப்படையான அம்சங்களால் அந்த உறவு ஏற்படத்தானே செய்யும்?

வாடகைத் தாய் முறையால், அண்ணன் தன் தங்கையை, மகனே தாயை, தந்தையே மகளை மணக்கும் ஆபத்து உண்டு. இந்த அசிங்கத்திற்கு இஸ்லாத்திலும் அனுமதியில்லை; மனித நாகரிகமும் இதை ஏற்காது.

(நன்றி: திருவல்லிக்கேணி வட்டார ஜமாஅத்துல் உலமா
மாநாட்டு மலர்
– 2013)

Monday, April 22, 2013

மியான்மர் முஸ்லிம்களும் நவீன ‘அஸ்ஹாபுல் உக்தூது’களும்


கான் பாகவி


மு
ற்காலத்தில் ஓரிறைக் கொள்கையில் உறுதியோடு வாழ்ந்த சிலர் இருந்தனர். இவர்கள் பாரசீகர்கள் என்பர் சிலர்; இஸ்ரவேலர்கள் என்பர் வேறுசிலர். அல்லாஹ்வை மட்டுமே வழிபட்டுவந்த அந்த மக்களை, சர்வாதிகாரியும் சிலை வணங்கியுமான அரசன் ஒருவன் நிர்ப்பந்தப்படுத்தி, சிலைகளை வழிபட உத்தரவிட்டான்.

ஆனால், அம்மக்கள் மாறவில்லை; கொள்கையைக் கைவிடவில்லை. மிரட்டிப்பார்த்தான். அவர்கள் மசியவில்லை. சித்திரவதை செய்வேன் என்று பயமுறுத்தினான். அவர்கள் கலங்கவில்லை.

இறுதியாக, பெரிய குழி தோன்டி, அதில் நெருப்பை வார்த்து, தீக்குண்டம் (உக்தூத்) தயாரித்தான். அந்த முஸ்லிம்களை ஒவ்வொருவராக தீக்குண்டத்தில் தள்ளிவிட்டான். இன்முகத்தோடு இந்த வேதனையை ஏற்றார்களே தவிர, ஈமான் இழக்கவில்லை. தீ சுடுவதற்கு முன்பே அவர்களின் உயிரை அல்லாஹ் கைப்பற்றிக்கொண்டான்.

மறுமை தீக்குண்டத்தை (நரகத்தை)விட இம்மை தீக்குண்டம் (உக்தூத்) எவ்வளவோ மேல் என்று அம்மக்கள் தீர்மானித்தனர். ஆனால், கொடுமைக்காரர்களை இறைவன் விட்டுவைப்பானா? குண்டத்தில் இருந்த நெருப்பு மேலே பரவியது. சுற்றி அமர்ந்திருந்த சர்வாதிகாரியையும் அவன் ஆட்களையும் சுட்டெரித்தது!

இந்தக் கொடுமைக்காரர்களைத்தான் தீக்குண்டத்தார்’ (அஸ்ஹாபுல் உக்தூத்) என்கிறார்கள். திருக்குர்ஆன் இவர்களைச் சபிக்கிறது; அந்த முஸ்லிம்கள் செய்த பாவமெல்லாம் ஏக இறையை நம்பியது மட்டும்தான் என்கிறது. (85: 4-8)

நவீன உக்தூதுகள்


இந்தக் கொடுமையான காட்சி நவீன யுகத்திலும் நடக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? நம்பத்தான் வேண்டும். மியான்மர் முஸ்லிம்கள் இக்கொடுமையை, பௌத்த காட்டுமிராண்டிகளின் கரங்களால் இன்று அனுபவித்துவருகின்றனர்.

மியான்மரில் நடக்கும் கொடுமைபோன்று நவீன உலகின் வரலாற்றில் எங்கும் கண்டிருக்க முடியாது. அங்கு அரசுக்குத் தெரிந்தே தீக்குண்டம் உருவாக்கப்படுகிறது. அரசு அதிகாரிகளாலேயே தீ மூட்டப்படுகிறது. ஊடகங்கள் கண்ணெதிரிலேயே வீடுகள் எரிக்கப்படுகின்றன. உலகமே பார்த்துக்கொண்டிருக்க முஸ்லிம்கள் கொல்லப்படுகின்றனர். முஸ்லிம் குழந்தைகளும் மாணவர்களும் பள்ளிகளோடு சேர்த்துப் பொசுக்கப்படுகிறார்கள்.

முஸ்லிம் குடும்பங்கள் தம் இருப்பிடங்களிலிருந்து துரத்தப்படுகிறார்கள். அவர்கள் வசித்த நகரங்களும் அரங்குகளும் காலி செய்யப்படுகின்றன. முஸ்லிம்களைத் துடைத்தெறியும் தமது திட்டத்தை பௌத்த பயங்கரவாதிகள் செயல்படுத்திவருகின்றனர். முஸ்லிம்களுக்கு அந்த நிலத்தில் வாழ உரிமையே கிடையாது என்பதுபோல் எல்லாக் கொடுமைகளும் தங்குதடையின்றி அரங்கேறிவருகின்றன.

மியான்மர் முஸ்லிம்கள் தம் சொந்த மண்ணில் கொல்லப்படுவது மட்டுமன்றி, இலட்சக்கணக்கானோர் அண்டை நாடுகளுக்கு விரட்டியடிக்கப்படுகிறார்கள். அவர்களின் குடியுரிமை பறிக்கப்படுகிறது. அவர்களின் தனித்தன்மைகள் தடுக்கப்படுகின்றன. சொந்த மண்ணிலேயே அந்நியர்களைப்போல் நடத்தப்படுகிறார்கள். அந்நாடு அவர்களுக்குரியதன்று; அவர்கள் அந்நாட்டின் பூர்வீகக் குடிகள் அல்லர்; வெளியிலிருந்து வந்து குடியேறிய அந்நியர்கள் என்பதுபோல் நடத்தப்படுகிறார்கள்.

முஸ்லிம்கள் மியான்மரில் வசிக்கவோ அதைச் சொந்தம் கொண்டாடவோ முடியாது. நிலம் வாங்க முடியாது. வீடுகளை உடைமையாக்க முடியாது. மீறினால் தண்டிக்கப்படுவார்கள். உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டு பௌத்தனுக்குத் தரப்படும்.

அங்குள்ள பர்மா அரசு, முஸ்லிம்களுக்கு (மட்டும்) குடும்பக் கட்டுப்பாடு சட்டத்தை அமல்படுத்துகிறது. 25 வயதுக்குமுன் முஸ்லிம் பெண் மணமுடிக்கக் கூடாது. ஆண்கள் 30 வயதுக்குமுன் திருமணம் செய்தால் தண்டனை கிடைக்கும்; ஆண்மை இழப்பு மருந்து கொடுக்கப்படும்; பெண்களை மலடியாக்கும் ஊசி போடப்படும்.

குறித்த காலத்திற்குமுன் திருமணத்திற்குத் தடை விதிக்கப்படுவதால் பாலியல் குற்றங்களை அரசே ஊக்குவிக்கிறது; முஸ்லிம்களிடையே விபசாரமும் சீர்குலைவும் ஏற்பட வழிவகுக்கிறது.

சட்டத்தை மீறி திருமணம் செய்வோர் பத்தாண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும்.

முஸ்லிம் கர்ப்பிணிப் பெண் மாதாந்திரக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகிறாள். அதுவும் பெண் மருத்துவர் முன்னிலையில் அல்ல; குழந்தையின் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக அல்ல. முஸ்லிம் பெண்ணுக்கு நெருக்கடி கொடுத்து, ஆடையைக் கட்டாயப்படுத்தி அகற்றி, வயிற்றைத் திறந்து ஸ்கேன் எடுத்து வண்ணப் புகைப்படங்களை எடுப்பதற்காக!

குழந்தைகளைக் கணக்கெடுப்பதும் முஸ்லிம் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதுமே நோக்கம். கட்டாய பருவகால மருத்துவ சோதனைகளுக்குக் கர்ப்பிணி பெண் பெரிய விலை கொடுக்க வேண்டும். சில வேலைகளில் பாலியல் வன்முறைகளுக்கு அவள் ஆளாகிவருகிறாள். இதை சர்வதேச மன்றங்கள் பல உறுதி செய்துள்ளன.

பள்ளிவாசல்கள் கூடாது

மியான்மரில் முஸ்லிம்கள் சுயமாகத் தொழில் செய்யவோ வணிகம் செய்யவோ அனுமதிக்கப்படுவதில்லை. அடிமைகள்போல் தாழ்ந்த வேலைகளில் மட்டுமே ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

மியான்மரில் முஸ்லிம்களுக்கென தனியான பள்ளிவாசல்களோ வழிபாட்டுத் தலங்களோ இருக்கலாகாது. தொன்மையான பள்ளிவாசல் புதுப்பிக்கப்படவோ மராமத்துப் பார்க்கவோ அனுமதி கிடையாது. தனி கப்ரஸ்தான்கள் அமைத்து அடக்கம் செய்வதற்கோ இஸ்லாமிய நிகழ்ச்சிகள் நடத்துவதற்கோ தடை உள்ளது. குர்ஆன் ஓதுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மார்க்க மதரசாக்கள் நடத்த முஸ்லிம்களுக்கு உரிமை இல்லை. தனியான கல்வி போதனைக்கும் உரிமை கிடையாது. முஸ்லிம் ஆசிரியர்கள் எங்கெல்லாம் பணியாற்றுகிறார்களோ அவர்களை நீக்கிவிட்டு, தீவிரவாத பௌத்த மத ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

வெளிநாடுகளில் கல்வி கற்கவோ வெளிநாட்டு ஆசிரியர்களிடம் கல்வி பயிலவோ முஸ்லிம் மாணவர்களுக்கு அனுமதி இல்லை. மியான்மர் பல்கலைக் கழகங்களில் பல்கலைக் கல்வியைத் தொடரும் உரிமையும் அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. முஸ்லிம்கள் தங்களுக்கென நூல்களையோ வெளியீடுகளையோ அச்சிட்டு வெளியிட முடியாது.

பௌத்த குடியேற்றம்


முஸ்லிம் கிராமங்களும் ஊர்களும் பௌத்த குடிகளால் கண்காணிக்கப்படும். இதற்காக முன்மாதிரி கிராமங்களை உருவாக்கும் பணியில் அரசு ஈடுபட்டுவருகிறது; முஸ்லிம் தெருக்களின் மையப்பகுதியில் பௌத்தர்களை அரசு குடியேற்றிவருகிறது. அதற்கு வேண்டிய எல்லா சலுகைகளையும் அரசு அளிக்கும்.

இதன்மூலம் முஸ்லிம் குடியிருப்புகளுக்கான தனித்தன்மைகள் அகற்றப்படும். புதிய குடியேற்றப்பகுதிகளில் வேலை செய்து பிழைப்பதைத் தவிர முஸ்லிம்களுக்கு வேறு வழியில்லாமல் செய்யப்படும். முஸ்லிம்கள் தம் வீடுகளில் உடன்பிறப்புகளையோ உறவினர்களையோ முன் அனுமதி பெறாமல் புதிதாகச் சேர்த்துக்கொள்ளக் கூடாது; புதியவர்கள் இரவில் தங்க அனுமதியே கிடையாது. அவ்வாறு தங்கிவிட்டால், வீட்டு உரிமையாளருக்குத் தண்டனை நிச்சயம். அவர் வீடு இடிக்கப்படலாம்; அவரும் குடும்பத்தாரும் நாட்டைவிட்டுத் துரத்தப்படலாம்.

மியான்மரில் முஸ்லிம்கள் சந்திக்கும் அனைத்து நெருக்கடிகளுக்கும் அரசு நிர்வாகமே பொறுப்பாகும். ஏனெனில், வீடுகளும் வணிக நிறுவனங்களும் எரிக்கப்படுவதும் குடியிருப்பாளர்கள் துரத்தப்படுவதும் குடிமக்கள் கொல்லப்படுவதும் மதமாற்றி பௌத்த மதத்தில் இணைக்க நிர்ப்பந்திக்கப்படுவதும் அரசு ஒத்துழைப்பில்லாமல் நடக்க முடியாது. அதிகாரபூர்வமாகக் காவலர்களே சீருடை அணிந்துகொண்டு இக்கொடுமைகளைச் செய்துவருகிறார்கள் என்பதுதான் உண்மையாகும். இராணுவ முகாம்களிலும் பாலங்கள் கட்டுவதிலும் சுரங்கம் தோண்டுவதிலும் முஸ்லிம்களைக் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்துவது, அரசின் மேலிட உத்தரவின்றி எப்படி நடைபெறும்?

ஆக, மியான்மரில் முஸ்லிம் ஆண்கள் கொல்லப்படுகிறார்கள். பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். பள்ளிவாசல்களும் மதரசாக்களும் இடிக்கப்படுகின்றன. மதச் சுதந்திரம் பறிக்கப்படுகிறது. வீடுகளும் வணிகத் தலங்களும் தீக்கிரையாக்கப்படுகின்றன. முஸ்லிம்கள் நாட்டிலிருந்தே துரத்தப்படுகிறார்கள். எல்லா மனித உரிமைகளும் அங்கு முஸ்லிம்களுக்கு மறுக்கப்படுகின்றன.

காரணம் சீனா


இனி வேறென்ன நடக்க வேண்டும்? உலக ஏழை நாடுகளின் வரிசையில் ஒன்பதாவது இடத்திலுள்ள ஒரு நாடு, சுமார் நாலரைக் கோடி மக்கள் தொகையையும் ஆறேமுக்கால் லட்சம் சதுர கி.மீ. பரப்பளவையும் கொண்ட ஒரு சிறிய நாட்டிற்கு இவ்வளவு துணிச்சல் எங்கிருந்து வந்தது?

அருகிலுள்ள கம்யூனிஸ நாடான சீனா தரும் ஆதரவுதான் இத்தனை அட்டூழியங்களுக்கும் காரணம். ஆயுதங்கள் வழங்கி, பர்மாவின் இனவெறி அரசியலுக்குத் தூபம்போட்டு, முஸ்லிம்களின் படுகொலைக்கு எல்லா உதவிகளையும் செய்துவருவது சீனாதான். இந்த சீனாவுடன் முஸ்லிம் மற்றும் அரபு நாடுகளுக்குப் பெரிய அளவில் உறவு இருந்துவருகிறது. இவர்கள் சீனாவுக்கு அழுத்தம் கொடுத்து, மியான்மர் படுகொலையை ஏன் தடுத்து நிறுத்தக் கூடாது?

அவ்வாறே, பர்மாவிலிருந்து பெரிய எண்ணிக்கையில் குடிபெயர்ந்து அகதிகளாகத் தங்களிடம் வரும் மியான்மர் முஸ்லிம்களை வங்காளதேசம் அடித்துத் துரத்துகிறதே! உலக முஸ்லிம் நாடுகள் வங்காளத்திற்கு நெருக்கடியை உருவாக்கி, மியான்மர் முஸ்லிம் அகதிகளை அரவணைக்கச் செய்ய ஏன் முன்வரக் கூடாது?

எல்லாம் பில்டப்தானா?


இராக்கிலும் ஆப்கானிஸ்தானத்திலும் மனித உரிமைகள் மீறப்படுவதாகச் சொல்லி மூக்கை நுழைத்த ஐ.நா. சபை, மியான்மருக்கு நேட்டோ படைகளை ஏன் அனுப்பக் கூடாது. இதற்கெல்லாம் உதவாத ஐ.நா. சபை இருந்தென்ன? இல்லாமலிருந்தென்ன?

மனித உரிமைகளைக் காக்க உருவாக்கப்பட்டதே ஐ.நா. சபை என்பது பில்டப்தானா?

அவ்வாறே, புத்த மதம் அகிம்சையைப் போதிக்கிறது என்றும் பௌத்தர்கள் இளகிய மனம் படைத்தவர்கள் என்றும் ஈ, எறும்புக்குக்கூட தீங்கு நினைக்காதவர்கள் என்றும்  சொல்கிறார்களே! எல்லாம் பில்டப்தானா?

Monday, April 15, 2013

ஐ.நா. சபையின் ‘பெண் விடுதலை’ கோஷம் - ஒரு கபட நாடகம்


- கான் பாகவி

க்கிய நாடுகள் சபை (United Nations Organization - UNO) இரண்டாம் உலகப் போருக்குப்பின் 1945ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. போரைத் தடுத்தல், மனித உரிமை, சுதந்திரம், பண்பாடு போன்றவற்றைப் பாதுகாத்தல் ஆகிய நோக்கங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட, உலக நாடுகளை உறுப்பு நாடுகளாகக் கொண்ட ஒரு சர்வதேச அமைப்பே ஐ.நா. சபை.

2002ஆம் ஆண்டின் கணக்குப்படி இந்த அமைப்பில் 191 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இதன் உலகத் தலைமையகம் நியூயார்க்கிலும் ஐரோப்பியத் தலைமையகம் ஜெனிவாவிலும் உள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவில் (செக்யூரிட்டி கவுன்சில்) அமெரிக்கா, ஃபிரான்ஸ், பிரிட்டன், ரஷியா, சீனா ஆகிய ஐந்து நாடுகளே நிரந்தர உறுப்பினர்கள். இந்நாடுகளுக்கு மட்டுமே, ‘வீட்டோ அதிகாரம் உண்டு. எந்தவொரு தீர்மானத்தையும் ‘எதிர்க்கிறேன் என்ற ஒற்றைச் சொல்லால் தோற்கடிக்கும் வலிமையே ‘வீட்டோ அதிகாரம் எனப்படுகிறது.

ஸீடாவ் தீர்மானம்


ஐக்கிய நாடுகள் சபைக்கு பாதுகாப்புக் குழு உள்பட 6 முக்கிய துணைக் குழுக்கள் உள்ளன. இவைதவிர 14 சிறப்பு முகமைகளும் உள்ளன. வேறுபல துணை அமைப்புகளும் உண்டு. அவற்றில் ஒன்றுதான் CSW 57 எனப்படும் பெண்களின் தகுதிநிலை ஆணையம்.

இந்த ஆணையத்தின் சார்பாக 1979 டிசம்பர் 18ஆம் நாள் ஓர் உடன்பாடு அறிக்கை வெளியானது. பெண்களுக்கெதிரான எல்லா பாரபட்சங்களுக்கும் முடிவு கட்டுதல்என்பதே அறிக்கையின் தலைப்பு. இதைச் சுருக்கமாக ஆங்கிலத்தில் ஸீடாவ் (CEDAW) என்பர். இதன் முழுப் பெயர்Convention on the Elimination of All Forms of Discrimination Against Women என்பதாகும்.

அரபு மற்றும் முஸ்லிம் பெண் இனத்தை, ‘சர்வதேச உடன்படிக்கைஎன்ற பெயரில் சிக்கவைத்து, அவர்களின் கலாசாரப் பாரம்பரியத்திலிருந்து கட்டாயமாக வெளியேற்றி, மேற்கத்திய அநாகரிக வாழ்க்கை முறையில் தள்ளிவிடுவதே இந்த ஸீடாவின் குறிக்கோள்.

இந்த உடன்படிக்கை (180/34) ஒப்புதலுக்காக 1979 டிசம்பர் 18இல் சமர்பிக்கப்பட்டது. இது சர்வதேச மகளிர் உரிமைச் சட்டம்என வர்ணிக்கப்பட்டது. 1981 டிசம்பர் 3இல் செயல்பாட்டுக்கு வரத்தொடங்கியது.

இதில் பெரிய விநோதம் என்னவென்றால், ‘ஸீடாவ்உடன்பாட்டிற்கு அமெரிக்கா உடன்படவில்லை என்பதுதான். அத்துடன் வேறு எட்டு நாடுகளும் அடிப்படையிலேயே இதில் சேர மறுத்துவிட்டன. அவற்றில் ஈரான், வாடிகன், சூடான், சோமாலியா, தான்ஜானியா ஆகிய நாடுகள் அடங்கும்.

உடன்படிக்கையில் முதலில் கையெழுத்திட்ட நாடு ஸ்வீடன். பின்னர் 20 நாடுகள் திட்டத்தில் சேர்ந்தன. 2009 மேயில் 186 நாடுகள் சேர்ந்தன. அவற்றில் கத்தரும் ஒன்று. இருப்பினும், இவ்வாறு ஒப்பந்தத்திற்கு ஆதரவு தெரிவித்த நாடுகளில் சில, பாதுகாப்பு திருத்தங்கள் சிலவற்றை முன்வைத்தன.

இந்தத் திட்டத்தின் முதல்முக்கிய விதியே, உள்ளூர் சட்டங்களில் ஆண்-பெண் பாலினச் சமத்துவத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதுதான். பாலுறவு சுதந்திரம், தவறான பாலுறவுக்கு அனுமதி போன்ற ஷரீஅத் சட்டத்திற்கு எதிரான அம்சங்களே இச்சட்டத்தை ஆக்கிரமித்துள்ளன.

பெய்ஜிங் தீர்மானம்


இந்நிலையில், 1995இல் பெய்ஜிங் தீர்மானம் ஒன்று வெளியானது. ஐ.நா. சபையின் மேற்பார்வையில் மகளிர் மற்றும் குடும்பம் தொடர்பாக வெளியிடப்பட்ட இத்தீர்மானம், சொல்லில்கூட ஆண்-பெண் பாலின வேறுபாடு இருக்கக் கூடாது என அறிவித்தது. இதற்கு ஜென்டர்’ (Gender Perspective)  என்று பெயர்.

120 ஷரத்துகளைக் கொண்ட இத்தீர்மானம், மனித இயற்கைக்கும் இஸ்லாமிய நம்பிக்கைக்கும் முரணான பிரிவுகளையும் கொண்டிருந்தது. குடும்ப அமைப்பிலிருந்து வெளியேறி, விபசாரம் செய்துகொள்ளவும் கருக்கலைப்பு செய்துகொள்ளவும் பெண்களுக்கு உரிமை அளித்தது. இதுவே உலக முஸ்லிம் குடும்பங்களுக்கெதிரான சதியின் தொடக்கமாகக் கருதப்படுகிறது.

ஆனால், 2000இல் நடந்த பெய்ஜிங் + 15 மாநாட்டில் இத்தீர்மானத்திற்கு முஸ்லிம் உலகம் தெளிவான எதிர்ப்பைப் பதிவு செய்தது. அத்துடன் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டாய்வு அறிக்கை மாற்றுத் திட்டத்தையும் முன்வைத்தது. ஆனால், இதைக் கண்டுகொள்ளாத ஐ.நா. சபை அமைப்பு அடுத்தடுத்த மாநாடுகளில், ஐ.நா. மகளிர் ஆணையத்தின் தீர்மானங்களை மறுக்கும் நாடுகளுக்கு உத்தேச தண்டனைகளை அறிவித்தது.

இதில் மிகப்பெரிய கொடுமை என்னவென்றால், 2005இல் நியூயார்க்கில் நடந்த பெய்ஜிங் + 10ஆவது மாநாட்டில் கலந்துகொண்ட அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளின் பிரதிநிதிகளில் ஒருவர்கூட, தீர்மானத்தை எதிர்த்து ஒரு வரிகூடப் பதிவு செய்யவில்லை என்பதுதான்.

முஸ்லிம் பிரதிநிதிகளின் அறியாமை இதற்கு ஒரு காரணம் என்றால், ‘‘இஸ்லாம் ஒரு பிற்போக்கு மதம்’’ என்று சொல்லிவிடுவார்களோ என்ற அச்சம் இன்னொரு காரணம். இத்தனைக்கும், தீர்மானத்தை அப்போது எதிர்த்த நாடுகளின் வரிசையில் அமெரிக்காவும் வாடிகனும் இருந்தன.

இஸ்லாத்திற்கெதிரான தீர்மானங்கள்


தொடர்ந்து நடந்த மாநாடுகளில் பல்வேறு தலைப்புகளில் அமர்வுகள் நடந்தன. முஸ்லிம் மகளிருக்கென சிறப்புக் கூட்டங்களும் நடத்தப்பட்டன. முஸ்லிம் மகளிரின் சுதந்திரத்திற்காகவும் ஷரீஅத் சட்ட விதிகளுக்கு எதிராகவும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
உச்சகட்டமாக, முஸ்லிம் பெண்கள் திருக்குர்ஆன் வசனங்களுக்கு எப்படி விளக்கமளிக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் மீள்பார்வை செய்ய வேண்டும் என்றும் அறைகூவல் விடுக்கப்பட்டது.

2009 மார்ச்சில் நடந்த ஐ.நா. சபை மகளிர் ஆணையம் நடத்திய மாநாட்டில், முஸ்லிம் நாடுகளின் பிரதிநிதிகள் யாரும் கலந்துகொள்ளாத ஒரு கூட்டத்தில் இஸ்லாத்திற்கெதிரான தீர்மானங்களை நிறைவேற்றி, உலக நாடுகள் இவற்றைச் செயல்படுத்த வேண்டும் என்று ஆணையம் கட்டாயப்படுத்தியது.

அவற்றில், பாகப்பிரிவினைச் சட்டத்தில் ஆண்-பெண் சமநிலை, நிர்வாகத்தில் ஆண்-பெண் சமத்துவம், திருமணத்திற்குமுன் கர்ப்பமடைய அனுமதி, கருக்கலைப்பு செய்துகொள்ள அனுமதி, ஆண்-பெண் வேறுபாடுகள் அனைத்தையும் முற்றாக ஒழித்தல் ஆகிய அணுகுண்டுதீர்மானங்களும் இடம்பெற்றிருந்தன. பெரும்பாலான முஸ்லிம் நாடுகள் மௌனமாக இருக்க, எதிர்ப்பு தெரிவித்த ஒருசில நாடுகளின் குரலையும் ஐ.நா. அமைப்பு கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.

2010 மார்ச்சில் நடந்த பெய்ஜிங் + 15 மாநாட்டில் ஸீடாவ்தீர்மானம் முதலிடத்தைப் பிடித்தது. சூடான், அமெரிக்கா, இஸ்ரேல் நீங்கலாக மற்ற எல்லா நாடுகளும் ஏற்றன.

ஜென்டர்சமத்துவம், ‘ஸீடாவ்ஒப்பந்தம், திருமணத்திற்குமுன் கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்தும் பயிற்சி, வீட்டு வேலை, குழந்தை பராமரிப்பு, கணவனின் தேவைகள் ஆகியவற்றைப் பெண்ணே செய்வதற்குக் கடுமையான எதிர்ப்பு முதலான தீர்மானங்கள் அவற்றில் இடம்பெற்றன.

மனாமா மாநாடு


இதற்கிடையில்தான், 2010 ஏப்ரலில் பஹ்ரைன் நாட்டுத் தலைநகரம் மனாமாவில் முஸ்லிம் நாடுகளின் மாநாடு ஒன்று நடந்தது. சர்வதேச மகளிர் மாநாட்டுத் தீர்மானங்களும் முஸ்லிம் உலகின் மீது அதன் தாக்கமும்என்ற தலைப்பில் அம்மாநாடு நடந்தது. அதில் கலந்துகொண்ட முஸ்லிம் அறிஞர்களும் நிபுணர்களும் ஐ.நா. சபையின் மகளிர் ஆணையத் தீர்மானங்களுக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தார்கள்.

ஆணையத்தின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்திற்கும் பெண்களின் இயல்புகளுக்கும் எதிரானவையாகும்; ஆண்-பெண்களிடையிலான இயற்கை வேறுபாடுகளைக்கூடப் புறக்கணிக்கும் இத்தீர்மானங்கள், குடும்ப அமைப்பைச் சீர்குலைத்துவிடும்; ஒழுக்கச் சீரழிவை உண்டாக்கிவிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளை முஸ்லிம்கள் முறையாக வழங்கிடவும் தங்கள் குடும்பப் பிரச்சினைகளுக்குத் தாங்களே தங்கள் மார்க்க முறைப்படி தீர்வு கண்டிடவும் அந்நியர்கள் யாரும் இதில் மூக்கை நுழைக்க இடமளித்திடலாகாது எனவும் மனாமாமாநாடு உலக முஸ்லிம்களைக் கேட்டுக்கொண்டது.

ஐ.நா. சபை வெளியிட்டுள்ள தீர்மானங்களை மதிக்க வேண்டும் என்று காரணம் காட்டி, அவற்றை அரபு நாடுகளிலும் முஸ்லிம் நாடுகளிலும அமல்படுத்த வேண்டும் என முஸ்லிம் அரசுகளோ சமூக அமைப்புகளோ கோர வேண்டாம் என்றும் மாநாடு வலியுறுத்தியது.

மீண்டும் மீண்டும்


இந்த நிலையில்தான் 2013 மார்ச்சில் ஐ.நா. மகளிர் ஆணையம் கசப்பான 9 தீர்மானங்களை மீண்டும் நிறைவேற்றி, இஸ்லாமிய மாண்புகளையும் நாகரிகத்தையும் குழிதோண்டி புதைக்க முடிவு செய்திருக்கிறது. இத்தீர்மானங்கள் விரிவாக முந்தைய கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளன.

இத்தீர்மானங்களை எதிர்ப்பதென எகிப்து உள்ளிட்ட 17 முஸ்லிம் நாடுகள் தீர்மானித்திருக்கின்றன. இதற்கான முன்முயற்சியை எகிப்து எடுத்துள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கத்தர், சஊதி, ஈரான் முதலான நாடுகளும் இதில் இடம்பெறுகின்றன. இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களுக்கு எதிரான இத்தீர்மானங்களைக் கடுமையாக எதிர்ப்போம் என இந்நாடுகள் முடிவு செய்துள்ளன.

ஜனநாயகம், சுதந்திரம், பெண்கள் விடுதலை, ஆண்-பெண் பாலினச் சமத்துவம் என்ற கவர்ச்சிகரமான பெயர்களில் மனிதகுலத்தை நரகப் படுகுழியில் தள்ள ஐ.நா. சபை முடிவு செய்துவிட்டதுபோலும்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் உண்மையில் நினைத்திருந்தால், இத்தீர்மானங்களை முளையிலேயே கிள்ளி எறிந்திருக்கலாம். தீர்மானங்ளில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்று சொல்லிக்கொண்டே, மற்ற நாடுகள்மீது -குறிப்பாக முஸ்லிம் உலகின்மீது- திணிக்க அவை சதி செய்கின்றன.

எனவே, முஸ்லிம் நாடுகள் விழித்துக்கொள்ள வேண்டும். முஸ்லிம் சமூக அமைப்புகள் ஐ.நா.வின் இந்தக் கேவலமான முயற்சிக்குக் கடும் எதிர்ப்பலைகளை உருவாக்க வேண்டும். ஆலிம்கள், தாஇகள், சமூக ஆர்வலர்கள் பிரசாரத்தை முடுக்கிவிட வேண்டும்!
(அல்முஜ்தமா)