Tuesday, June 25, 2013

முஸ்லிம் நாடுகளில் என்ன நடக்கிறது?

கான் பாகவி



2010
ஆம் ஆண்டு மத்தியக்கிழக்கு நாடுகளிலும் வட ஆப்ரிக்கா நாடுகளிலும் மன்னர் ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2010 டிசம்பர் 18ஆம் நாள் எகிப்திலும் துனூசியாவிலும் மக்கள் போராட்டம் வெடித்தது. யமனில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது; லிபியாவில் உள்நாட்டுப் போர்; சிரியாவில் எழுச்சி; அல்ஜீரியாவில் பெரிய போராட்டம் வெடித்தது.

அவ்வாறே ஆர்மீனியா, பஹ்ரைன், இராக், ஜோர்டான், மொராக்கோ, அம்மான், துருக்கி ஆகிய நாடுகளிலும் பெரும் போராட்டங்கள் வெடித்தன. ஆதர்பீஜான், குவைத், லெபனான், சஊதி, சூடான் போன்ற நாடுகளில் சிறிய அளவிலான மக்கள் போராட்டங்கள் நடந்தன.

இப்போராட்ட எழுச்சியையே -குறிப்பாக எகிப்தில் நடந்த 2011 ஜனவரி 25 புரட்சியை- அரபு வசந்தம்என்று அழைக்கின்றனர். இப்போராட்டங்களுக்குப் பெரும் வெற்றி கிடைத்தது. அதையடுத்து எகிப்தில் இக்வானுல் முஸ்லிமீன்களின் அரசியல் கட்சியான நீதி மற்றும் வளர்ச்சி’ (அல்அதாலத்து வத்தன்மியா) கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. பொறியாளர் முஹம்மது முர்சீ அதிபரானார்.

துனூசியாவில் அந்நஹ்ழா’ (எழுச்சி) கட்சியும் துருக்கியில் நீதி மற்றும் வளர்ச்சிகட்சியும் ஆட்சிக்கு வந்தன. பாலஸ்தீனத்தின் ஃகஸ்ஸாவில் ஹமாஸ்கட்சியும் மொராக்கோவில் நீதி மற்றும் வளர்ச்சிகட்சியும் ஆட்சியில் அமர்ந்தன.

இந்தப் போராட்டங்களின் எதிரொலியாகவே இராக், சிரியா போன்ற நாடுகளில் இன்றும் பொதுஜன ஆர்ப்பாட்டங்கள் பெரிய அளவில் நடைபெற்றுவருகின்றன. சுருக்கமாகச் சொன்னால், அரபுலகில் இஸ்லாமிய எழுச்சி ஏற்பட்டு, ஆட்சியிலும் நிர்வாகத்திலும் இஸ்லாம் பின்பற்றப்பட வேண்டும் எனற அவா பெரும்பான்மை மக்களின் எதிர்பார்ப்பாக அமைந்துவிட்டது. அல்ஹம்து லில்லாஹ்.

எதிர்ப்பலை

நல்லது நடக்கும்போது கெட்டவன் ஷைத்தான் அமைதியாக இருப்பானா? நாம் குறிப்பிட்ட எல்லா நாடுகளிலும் மதச்சார்பின்மை பேசும் இடதுசாரிகள், அல்லது ஈரானிய ஷியாக்கள் அந்த அரசுகளுக்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்திவருகின்றனர்; முன்னேற்றத்திற்குத் தடைக்கல்லாக விளங்குகின்றனர்.

இந்த எதிர்ப்பு சக்திகளுக்குத் திரைமறைவில் வழக்கம்போல் அமெரிக்காவும் இஸ்ரேலும் தூபம் போட்டுவருகின்றன; எல்லா உதவிகளையும் தாராளமாக வழங்கிவருகின்றன. ஆயுத உதவி, நிதியுதவி, புலனாய்வுத் தகவல் பரிமாற்றம், சீர்குலைவுத் திட்டங்கள் என அனைத்துத் துரோகங்களையும் அரங்கேற்றி, அந்நாடுகளைத் துண்டாட காய்களை நகர்த்திவருகின்றன.

எகிப்தில் கிப்தி (Coptic) கிறித்தவர்களின் கட்சி (கிப்திகள் ஃபிர்அவ்னின் பரம்பரை என்பது குறிப்பிடத் தக்கது), மதச்சார்பின்மை பேசும் இடதுசாரி கட்சிகள், தொழிலாளர் கட்சி, இவர்களுடன் இராணுவத்திலுள்ள கறுப்பு ஆடுகள் என எல்லாம் சேர்ந்து ஆட்சிக்கெதிராகக் குழப்பம் விளைவித்துவருகின்றன.

முர்சீ அரசு கொண்டுவரும் அரசியல் சாசன மாற்றம், சீர்திருத்த நடவடிக்கை, இஸ்லாமியக் கலாசார வாழ்க்கைமுறை ஆகிய ஒவ்வொரு முயற்சிக்கும் எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை போட்டு தடுக்கப்பார்க்கின்றன. ஆளும் கட்சியின் ஆதரவாளர்களும் எதிர்ப்போராட்டங்களை நடத்தத் தவறவில்லை.

எத்தியோப்பியாவில் அந்நஹ்ழாஅணை

எதிரிகளின் உச்சகட்ட சதித்திட்டமாக, எகிப்தின் பொருளாதாரம், தானிய உற்பத்தி, விளைச்சல், குடிநீர் ஆகிய உயிர்நாடியில் கைவைக்கத் திட்டமிடப்படுகிறது. நீல்நதியில் எகிப்துக்குரிய நீர் உரிமையைப் பறிக்கும் வகையில், எத்தியோப்பியாவைத் தூண்டிவிட்டு, ‘அந்நஹ்ழாஎனும் அணையைக் கட்டி நீரைத் தடுக்கப்போகிறார்கள்.

நீல் நதியில்தான், நபி மூசா (அலை) அவர்கள் குழந்தையாக இருந்தபோது, அன்னாரின் தாயார் பேழைக்குள் குழந்தையை வைத்து போட்டுவிட்டார்கள். ஃபிர்அவ்னின் துணைவியார் எடுத்து வளர்த்தார்கள். உலகிலேயே மிக நீளமான நதியான நீல், 6,650 கி.மீ. தொலைவுவரை பாய்கிறது; பத்து ஆப்பிரிக்க நாடுகளைக் கடக்கிறது.

நீல் நதியின் பிரதான உற்பத்தித் தலங்கள் என இரண்டைக் குறிப்பிடலாம். 1. எத்தியோப்பியா (அபிசீனியா). 2. சமதளத்தில் உள்ள ஏரிகள். எத்தியோப்பியாவிலிருந்து எகிப்துக்கு வரும் நீல் நதி நீரே 85 விழுக்காடு (71 பில்லியன் சதுர மீட்டர்) ஆகும். ஏரிகளிலிருந்து எகிப்துக்குக் கிடைக்கும் பங்கு 15 விழுக்காடு (13 பில்லியன் ச.மீ.) மட்டுமே.

1957ஆம் ஆண்டு -எகிப்தில் கமால் அப்துந் நாஸிர் அதிபராக இருந்தபோதே- எத்தியோப்பியாவுக்கு அமெரிக்கா திட்டம்போட்டுக் கொடுத்தது; நீல் நதியின் குறுக்கே அணை கட்டினால் பாசனத்திற்கும் மின்சார உற்பத்திக்கும் வழிகாணலாம் என ஆசைவார்த்தை காட்டியது. இந்த அணைகள் மூலம் தெற்கிலிருந்து எகிப்துக்கு வரும் நீரின் அளவைக் கட்டுப்படுத்திவிடலாம் என்பதே எதிரிகளின் திட்டம்.

1964ஆம் ஆண்டிலேயே அணை கட்டுவதற்காக 4 இடங்களைத் தேர்ந்தெடுத்து எத்தியோப்பாவின் இசைவுக்காகக் கொடுத்தது அமெரிக்கா. பல்வேறு பிரச்சினைகளால் திட்டம் தள்ளிப்போனது. இப்போது மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

அதன்படி, மேற்கு எத்தியோப்பியாவில் நீல் நதியில் 5,250 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் நோக்கத்தில் அந்நஹ்ழாஅணை கட்டும் திட்டம் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த அணை சூடானுடனான எத்தியோப்பியா எல்லையிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் கட்டப்படுகிறது. 4.8 பில்லியன் டாலர் செலவு என்று கூறப்பட்டாலும் 2017இல் அணை கட்டி முடிக்கப்படும்போது 8 பில்லியன் டாலரை எட்டலாம். இத்தாலியின் சாலினிநிறுவனம் பொறுப்பேற்றுள்ளது.

இந்த அணை எத்தியோப்பியா - எகிப்து இடையே போர் மூள்வதற்குக்கூட காரணமாகலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். எகிப்தின் ஜீவாதாரப் பிரச்சினையாக இது இருப்பதால், அந்நாடு நீர்போரைத் தொடுக்க வாய்ப்பு உண்டு எனக் கருதப்படுகிறது.

துருக்கியில்

துருக்கியில் 1940களில் முஸ்தஃபா கமால் அதாதுர்க் அழித்துவிட்டுப்போன இஸ்லாமியப் பாரம்பரிய நடைமுறைகளுக்கு உயிர் கொடுக்க இன்றைய துருக்கி அரசு முயன்றுவருகிறது. படிப்படியாக முழு மதுவிலக்கைக் கொண்டுவரவும் மூடிக்கிடக்கும் பள்ளிவாசல்கள், மதரசாக்கள், இஸ்லாமிய மையங்கள் ஆகியவற்றைத் திறக்கவும் மாணவிகள் புர்கா அணிந்து பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லவும் துருக்கி அதிபர் உர்துகான் முயன்றுவருகிறார்.

இதற்கு அங்குள்ள கம்யூனிஸ, மதச்சார்பற்ற, தேசிய சக்திகள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துவருகின்றன. வெளியிலிருந்தும் இவர்களுக்கு உதவிக்கரம் நீள்கிறது. மேற்கத்திய மற்றும் சியோனிச கரம்தான் அது எனச் சொல்லத் தேவையில்லை.

இராக், சிரியா

இராக்கில் இப்போது ஆட்சியில் இருக்கும் நூரீ மாலிகீ ஒரு ஷியா முஸ்லிம். இவர் சன்னி முஸ்லிம் அறிஞர்களையும் பொதுமக்களையும் கொத்துக் கொத்தாக சிறைப்பிடித்து தூக்கு தண்டனை நிறைவேற்றிவருகிறார். தன்னைக் கொல்வதற்குத் திட்டமிட்டார்கள் என்று குற்றம்சாட்டி கடந்த ஏப்ரலில் 21 சன்னி முஸ்லிம்களைக் கைது செய்த இவர், ஐவரைத் தூக்கிலிட்டார்.


சிரியாவில் பஷ்ஷார் அல்அசத் எனும் சர்வாதிகாரியின் ஆட்சி நடக்கிறது. இவரது ஆட்சியை அகற்ற வெகுஜன மக்கள் உயிரைக் கொடுத்துப் போராடி வருகின்றனர். இவருக்கு இஸ்ரேல் உதவுகிறது. அடுத்து ஈரான் பன்மடங்காக உதவி செய்துவருகிறது.


போராட்டக் களத்தில் இருப்போர் பெரும்பாலும் சன்னி முஸ்லிம்கள்தான். இவர்களை பஷ்ஷாரின் படைகளும் ஈரானிய ஷியா (ஹிஸ்புல்லாஹ்) படைவீரர்களும் இலட்சக்கணக்கில் கொன்று குவித்துவருகின்றனர். பல லட்சம் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாகச் சென்று அல்லல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு புறம் பஹ்ரைன் நாட்டைக் கைப்பற்ற ஷியாக்கள் சண்டை போட்டுவருகிறார்கள். சஊதி, குவைத் போன்ற அரபு நாடுகளிலும் ஷியாக்களின் கை ஓங்கிவருகிறது.

முஸ்லிம் நாடுகள் உஷார்

ஆக, அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளில் ஏற்பட்டுள்ள இஸ்லாமிய எழுச்சியையும் பாரம்பரிய இஸ்லாமியக் கலாசாரத்தின் மீது பிறந்துள்ள விழுமங்களையும் நசுக்க விரோதிகள் ஒன்றுகூடி சதி செய்துவருகிறார்கள். மேற்கத்திய, சியோனிச வல்லூறுகள் ஒரு பக்கம்; நபிகளாரின் துணைவியரையும் பெரியவர்களான அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரையும் ஏசுவதையே தலையாயக் கொள்கையாகக் கொண்டுள்ள ஷியாக்கள் இன்னொரு பக்கம்.


இவர்களை உலக முஸ்லிம்கள் இனம்கண்டுகொள்ள வேண்டும். முஸ்லிம் மற்றும் அரபு நாடுகள் ஓரணியில் திரளும் நேரம் வந்துவிட்டது. இனியும் சொந்தப் பகையையும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பையும் பாராட்டிக்கொண்டிருந்தால், முஸ்லிம் நாடுகளை அழிப்பதில் எதிரிகள் வெற்றி கண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

முஸ்லிம் ஆட்சியாளர்கள் அபூபக்கர்களாக உமர்களாக ஸலாஹுத்தீன் அய்யூபிகளாக மாறியாக வேண்டும்; அல்லது மாறுவதற்கான திசையை நோக்கி அடி எடுத்துவைக்க வேண்டும். இல்லையேல், அவர்களை அல்லாஹ் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கமாட்டான்.
________________________

Sunday, June 23, 2013

‘அல்அக்ஸா’ பள்ளிவாசலைத் தகர்க்க சதி

கான் பாகவி

மூன்று புனிதப் பள்ளிவாசல்களில் மூன்றாவதான அல்மஸ்ஜிதுல் அக்ஸாபள்ளிவாசல், இன்று சியோனிஸ்டுகளின் கரங்களில் சிக்கித் தவிக்கிறது. பைத்துல் மக்திஸில் உள்ள இப்பள்ளிவாசலுக்குத்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இஸ்ராஎனும் இரவுப் பயணத்தை மேற்கொண்டார்கள்.

உலக முஸ்லிம்களுக்கு, திருமக்காவில் உள்ள புனித கஅபா முதலாவது புனிதப் பள்ளிவாசலாகும். அடுத்தது ஆறாம் நூற்றாண்டில் மதீனாவில் நபிகளார் எழுப்பிய மஸ்ஜிதுந் நபவீபள்ளிவாசலாகும். மூன்றாவதுதான் ஜெருசலேமில் இருக்கும் அல்அக்ஸாபள்ளிவாசலாகும். இப்பள்ளிவாசலை இறைத்தூதர் சுலைமான் (அலை) அவர்கள் புணரமைத்தார்கள்.

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல்என்ற தேள் கொடுக்கை அமெரிக்கா உருவாக்கியதிலிருந்து இந்தப் பள்ளிவாசலுக்கும் பாலஸ்தீன மக்களுக்கும் பெரும் துயரம்தான். பயங்கரவாத யூதர்களான சியோனிஸ்டுகளின் அசிங்கமானதொரு போரை அக்ஸா பள்ளிவாசல் எதிர்நோக்கியுள்ளது. இப்போரில் யூதர்களின் அனைத்துப் பிரிவினர்களும் பங்கெடுத்துள்ளனர்.

அண்மையில் உள்ளூர் யூதர்கள் சுமார் நூறுபேர், இஸ்ரேல் காவல்துறை பாதுகாப்புடன் அக்ஸாமீது தாக்குதல் தொடுத்தனர். அத்துடன் அங்குள்ள முஸ்லிம்களிடம் எல்லைமீறி நடந்துகொண்டனர். அவர்களையும் உலக முஸ்லிம்களின் உயிரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் அருவருப்பாக ஏசினர்.

இன்னொரு பக்கம், மஸ்ஜிதின் அஸ்திவாரத்தில் பள்ளங்கள் தோண்டும் வேலையும் தொடர்கிறது. சியோனிஸ்டுகளின் திட்டப்படி நடக்கும் சதிவேலையாகும் இது. பள்ளிவாசலின் தூண்களும் கட்டடமும் இயல்பாக இடிந்துவிழுந்துவிட்டன என்று உலகை நம்பவைப்பதற்காக அஸ்திவாரத்தை இரகசியமாக அரிக்கும் வேலையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

புனித அக்ஸா பள்ளிவாசல், பாறைகள் நிறைந்த மலைக்குன்றின் மீது கட்டப்பட்டிருப்பது அவர்களுக்குப் பெரிய தடையாக அமைந்துள்ளது. அவ்வாறு மட்டும் இல்லாதிருந்தால், அவர்கள் தோண்டியுள்ள ஏராளமான குழிகளுக்குப் பின்பும் பள்ளிவாசல் உறுதியாக நின்றிருக்காது.

இன்னொரு திட்டமும் அந்தக் கயவர்களிடம் உள்ளது. அக்ஸா பள்ளிவாசலை முஸ்லிம்களுக்கும் யூதர்களுக்கும் என இரண்டாகப் பிரிப்பதே அத்திட்டம். மிஅராஜ் இரவில் நம் நபி (ஸல்) அவர்கள் நுழைந்த தலைவாயிலை (பாபுந் நபி), பள்ளிவாசலுக்குள் யூதர்கள் நுழைவதற்கான நுழைவாயிலாக அமைப்பதும் அவர்களின் திட்டங்களில் ஒன்றாகும்.

தலைமை காஜி



பாலஸ்தீனத்தின் தலைமை காஜியும் ஷரீஅத் தீர்ப்பகத்தின் உயர்மன்ற முன்னாள் தலைவருமான டாக்டர், தைசீர் தமீமீ அவர்கள் அண்மையில் அளித்த பேட்டியில் இத்தகவல்களைத் தெரிவித்துள்ளார் என்கிறது அல்முஜ்தமா வார ஏடு.

அக்ஸா பள்ளிவாசலின் அஸ்திவாரத்தில் உள்ள பாறைகளைத் தகர்க்க சியோனிஸ்டுகள் ரசாயானத் தூள்களைப் பயன்படுத்துகின்றனர். இந்த வேதியல் பொருள் பாறைகளைத் தூளாக்கி, மண் போன்று கரைத்துவிடுமாம்! யூதப் பத்திரிகையில் வெளிவந்த தகவல்தான் இது. மஸ்ஜிதின் அஸ்திவாரத்திற்குக் கீழே தோண்டப்படும் குழிகளைப் பார்க்க முஸ்லிம்களுக்கு அனுமதி கிடையாது.

நடக்கும் கொடுமைகளைக் கண்டறிய உண்மையறியும் குழுக்களை அனுப்பிவைக்குமாறு யுனெஸ்கோ அமைப்பிற்கு நாங்களும் பலமுறை கோரிக்கை வைத்துவிட்டோம். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால், மஸ்ஜிதின் அஸ்திவாரத்தின்கீழ் சுரங்க வழி திறக்கப்பட்டிருப்பதும் மஸ்ஜிதின் சுவர், வளாகம் ஆகியவற்றில் விரிசல் தோன்றியிருப்பதும் கண்கூடாகும் என்கிறார் காஜி தமீமீ.

சோனிக் பேரியர்


அக்ஸாவில், ஒலிவிசை எதிர் அழுத்தம் (Sonic Barrier) ஏற்படுத்துவதற்கும் சியோனிஸ்டுகள் முயன்றுவருகின்றன ராம்! அண்மையில் தீவிரவாத யூதக் குழுக்கள் லாவ்ராக்கெட்களைத் திருடியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அக்ஸா பள்ளிவாசலைத் தகர்க்க அவற்றை அவர்கள் பயன்படுத்தும் ஆபத்து உண்டு.


வெடி சப்தத்தை உருவாக்கும் அளவுக்குப் பயங்கரமான ஒலி விசையுடன் விமானங்களை மஸ்ஜித்மேல் பறக்கவிடும் திட்டமும் அவர்களிடம் உள்ளது. இதன்மூலம் நிலஅதிர்வு போன்ற இயற்கையான பாதிப்புகள் உருவாகி, கட்டடத்தைச் சேதப்படுத்துகின்ற வாய்ப்பு உண்டு. இது இயல்பாக நடந்தது என்று காட்டிவிடலாம். இதுவெல்லாம் புனித அக்ஸா பள்ளிவாசலை இடித்துவிட்டு, அங்கு யூதக் கோயிலை எழுப்பும் திட்டத்தின் ஆரம்ப சதிவேலைகளாகும்.


நபி (ஸல்) அவர்கள் நுழைந்த நபிகளார் தலைவாயிலை (பாபுந் நபி) யூதமயப்படுத்துவதற்கு எல்லா முயற்சிகளும் நடக்கின்றன. 1967இல் ஜெருசலேமை ஆக்கிரமித்த நாளிலேயே பாபுந் நபியின் சாவியை யூதர்கள் கைப்பற்றிவிட்டனர்; அவ்வாயிலை முஸ்லிம்கள் பயன்படுத்துவதற்குத் தடையும் விதித்துவிட்டனர். அந்த வாயிலுக்குச் செல்லும் வழியை 2006இல் தகர்த்துவிட்ட இஸ்ரேல் அரசாங்கம், இப்போது புதிய வழித்தடம் ஒன்றை உருவாக்க முயன்றுவருகின்றது. அவ்வழியாக இஸ்ரேல் படைகள் அதிக எண்ணிக்கையில் செல்லவும் இடிப்பு வேலையை எளிதாக முடிக்கவும் இது உதவும்.

புராக் சுவர்


அக்ஸா பள்ளிவாசலின் மேற்குச் சுவர் புராக்சுவர் என அழைக்கப்படுகிறது. நபிகளார் தமது விண்ணுலகப் பயணத்தின்போது இச்சுவரில் உள்ள ஒரு வளையத்தில்தான் தமது புராக்வாகனத்தைக் கட்டிப்போட்டார்கள். 1929இல் பாலஸ்தீனர்கள் நடத்திய புராக்புரட்சியை அடுத்து யூதர்கள் இச்சுவரில் ஏறி சியோனிஸக் கொடியை ஏற்றினர்; தவ்ராத் பாடல்களைப் பாடினர்.

பாலஸ்தீனர்களின் கடுமையான எதிர்ப்பையடுத்து 1931ஆம் ஆண்டு உண்மையறியும் சர்வதேச குழு ஒன்று அங்கு சென்றது. நூற்றுக்கும் அதிகமான மக்களை நேரில் சந்தித்து தகவல் திரட்டியது. இறுதியாக இக்குழு வெளியிட்ட அறிக்கை என்ன தெரியுமா?

ஜெருசலேமில் உள்ள அல்அக்ஸா பள்ளிவாசலும் அல்கலீல்நகரில் உள்ள ஹரம் இப்ராஹீமும் இஸ்லாமியப் புனிதத் தலங்களாகும். யூதர்களுக்கு இவற்றில் எந்த உரிமையும் கிடையாது. மனிதாபிமான அடிப்படையில் புராக் சுவருக்கு எதிரில் உள்ள நடைமேடையில் -அதுவும் சுவரிலிருந்து 7 மீட்டர் தூரத்தில்- வேண்டுமானால் யூதர்கள் நிற்கலாம். ஹரம் இப்ராஹீமின் சுவருக்கு வெளியே நிற்கலாம் -என்று அறிவித்தது அக்குழு.

யூதரின் சாட்சியம்

அங்கு யூதக் கோயில் இருந்ததற்கான எந்தத் தடயமும் கிடைக்கவில்லை என்று தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணரும் யூதருமான மயீர் பின் தவ்ஃப் அறிவித்து பல்லாண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும், அஸ்திவாரத்தைத் தோண்டி பள்ளமாக்கும் வேலை தொடரவே செய்கிறது.

உண்மையில் யூதர்கள் கண்டுபிடித்திருப்பதாகச் சொல்லிக்கொள்ளும் எல்லா அடையாங்களுமே இஸ்லாமிய ஆட்சிக் காலத்தை, குறிப்பாக அய்யூபிகளின் ஆட்சிக்காலத்தைச் சேர்ந்தவையாகும். இருந்தாலும் பைத்துல் மக்தசில் உள்ள எல்லா இஸ்லாமிய மற்றும் அரபிய அடையாளங்களை யூதமயமாக மாற்றுவோம் என்று யூதர்கள் கொக்கரிக்கின்றனர்.

பாலஸ்தீனர்களைப் பிரித்தாள்வதிலும் யூத சக்திகள் வெற்றிகண்டுள்ளன. ஃபத்ஹ் மற்றும் ஹமாஸ் கட்சிகளிடையே பிரிவினையை உண்டாக்கிவிட்டனர். அரபு நாடுகளுக்கிடையேயும் இஸ்லாமிய நாடுகளுக்கு மத்தியிலும் பிளவை உருவாக்கிவிட்டனர்.

உலக முஸ்லிம்கள் என்றுதான் விழிக்கப்போகிறார்களோ!
______________________

Saturday, June 01, 2013

சர்வதேசப் பார்வை - செய்தித் துளிகள்...!

இராக் போரில் இலட்சம் பேர் படுகொலை


 ராக் மீது அமெரிக்கா ஆக்கிரமிப்புப் போர்   தொடுத்திருந்த காலத்தில், சரியான காரணமின்றி ஒரு  லட்சம் இராக்கியர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்; குறிப்பாக, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் ஆட்சிக் காலமான 2004 முதல் 2009 வரை இப்படுகொலைகள் அரங்கேறியுள்ளன என்று விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜாலியன் அசான்ஜ் தெரிவிக்கிறார்.

இந்த எண்ணிக்கையை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் விக்கிலீக்ஸிடம் உள்ளன. இவர்களில் 80 விழுக்காட்டினர் சிவிலியன்கள் என்பது குறிப்பிடத் தக்கது. பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது பேசிய அசான்ஜ், இந்த ஆவணங்களைக் கசியவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமெரிக்க ராணுவ வீரர் பிராட்லி மானேங்க் கடுமையான குற்றச்சாட்டுகளின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்றார்.

‘அல்காயிதா’ அமைப்புக்கு உதவியதாகவும் எதிரிக்குத் துணைபோனதாகவும் அவ்வீரர்மீது குற்றம் சாட்டியுள்ள அமெரிக்க அரசின் செயலை, சர்வதேச அமைப்புகள் வேடிக்கை பார்ப்பதாக அசான்ஜ் கண்டித்தார்.

ஒரே ஆண்டில் 26 ஆயிரம் பாலியல் குற்றங்கள்


மெரிக்க பாதுகாப்பு அமைச்சகமான பென்டகன் புதிய ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க ராணுவப் படை வீரர்கள் மத்தியில் 2012ஆம் ஆண்டில் மட்டும் 26 ஆயிரம் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளனவாம்! இது, முந்தைய ஆண்டில் நடந்த குற்றங்களைவிட 37 விழுக்காடு அதிகமாகும். இதன்படி நாளொன்றுக்கு சராசரியாக 70 பாலியல் குற்றங்கள் அமெரிக்க ராணுவப் படையினரால் நடந்தேறியுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை வெளியுலகுக்குத் தெரிவதில்லை.

இவற்றை அமெரிக்க அதிபரும் பாதுகாப்பு அமைச்சரும் வன்மையாகக் கண்டித்தனர் என்று தகவல்கள் கூறுகின்றன.

துருக்கி விமானங்களில் புதிய நடைமுறைகள்



து
ருக்கி ஏர்லைன்ஸ் விமானங்களில் இஸ்லாமிய நடைமுறைகள் அமலுக்கு வருகின்றன. அதன்படி விமானப் பணிப்பெண்கள் உதட்டுச் சாயம் பூசுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது. மதசசார்பற்ற சக்திகள் இதைக் கடுமையாக எதிர்த்துள்ளன. பிரதமர் ரஜப் தய்யிப் உர்துகான், இஸ்லாமிய நடைமுறைகளை ஓசையின்றி கொண்டுவருகிறார் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

உஸ்மானிய டர்கி தொப்பி (டர்பூஷ்), நீளமான சீருடை அணிவது, மது வகைகளுக்குத் தடை, இறுதியாகச் சிவப்பு உதட்டுச் சாயத்திற்குத் தடை ஆகியவற்றை துருக்கி ஏர்லைன்ஸ் நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளது. இது பாரம்பரிய உஸ்மானிய நடைமுறைக்குத் திரும்புகின்ற நல்ல தொடக்கமாகும் என்று நிறுவனம் வர்ணித்துள்ளது.

கர்ளாவி ஒரு ஜிஹாதி -
சியோனிஸ்டு ஏடு வர்ணனை



டா
க்டர் யூசுஃப் அல்கர்ளாவி அவர்கள் இன்றைய இஸ்லாமியப் பேரறிஞர்களில் ஒருவர்; சர்வதேச உலமாக்கள் ஒன்றியத்தின் தலைவர். அண்மையில் பாலஸ்தீனத்தின் ஃகஸ்ஸா பகுதிக்கு கர்ளாவி 60 உலமாக்களுடன் வருகை புரிந்தார். இதை, சியோனிஸ்டு எபிரேய ஏடு ஒன்று, “ஆபத்தானது; அவர் ஒரு ஜிஹாதிய ஷைகு’’ என்று வர்ணித்தது.

கர்ளாவியின் மார்க்கத் தீர்ப்புகள் இஸ்ரேலுக்கு எதிரானவை; இஸ்ரேல்மீதான போரைத் தூண்டுபவை. அரபு மற்றும் இஸ்லாமிய உலகில் அவருடைய ஃபத்வாக்கள் பின்பற்றப்படுகின்றன. அவரது வருகை மார்க்க மோதல்களையும் சர்வதேச அளவில் பாதிப்பையும் உருவாக்கும் என்று அந்த ஏட்டில் யூதர் ஒருவர் எழுதியுள்ளார்.

அப்துல் மலிக் பின் மர்வான்
காலத்து பொற்காசு ஏலம்



லா
இலாஹ இல்லல்லாஹ்; வஹ்தஹு லா ஷரீக்கலஹு என்ற கலிமா அரபி மொழியில் பொறிக்கப்பட்ட முதலாவது தங்க நாணயம் ஒன்று அண்மையில் ஏலத்திற்கு வந்தது. உமய்யா கலீஃபாக்களில் ஐந்தாமவரான அப்துல் மலிக் பின் மர்வான் காலத்தில் கி.பி. 690இல் டமாஸ்கஸில் தயாரிக்கப்பட்ட அந்தப் பொற்காசு ‘தீனார் 77 என்று அழைக்கப்படுகிறது.

அபூர்வமான வேலைப்பாடுகளுடன் கூடிய இப்பெற்காசு லண்டனில் மே மாதம் பகிரங்க ஏலத்திற்கு வந்தது. 20 மி.மீட்டர் விட்டம் கொண்ட இந்தச் சிறிய பொற்காசு 4.25 கிராம் எடை கொண்ட 22 காரட் தங்க நாணயமாகும். அதில், கூஃபா அரபி எழுத்து வடிவத்தில் ஒரு பக்கத்தில் ‘குல் ஹுவல்லாஹு’ அத்தியாயம் பொறிக்கப்பட்டுள்ளது. மறுபக்கத்தில் ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ என்று எழுதப்பட்டுள்ளது. சுற்றுப்புறத்தில் ‘கலிமா’ காணப்படுகிறது. ஹிஜ்ரீ 77ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டதற்கு அடையாளமாகவே ‘தீனார் 77 என்று அதில் குறிப்பிடப்படுகிறது.

எகிப்தில் மது இல்லாத சுற்றுலா விடுதி



கிப்து நாட்டில் செங்கடற்கரையில் மது இல்லா முதலாவது சுற்றுலா விடுதி திறக்கப்பட்டுள்ளது. அல்ஃகர்தகா நகரில் தொடங்கப்பட்டுள்ள இவ்விடுதியில், போதைக்கு இடமில்லை. மற்றெல்லா வசதிகளும் சுற்றுலாப் பயணிகளுக்குக் கிடைக்கும்.

இந்தச் சுற்றுலா விடுதியில் 134 அறைகளும் 35 பகுதிகளும் உள்ளன. நீச்சல் குளமும் உண்டு. கடைசி மாடி பெண்களுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் பெண்களுக்கான நீச்சல் குளம், அரங்கம், பெண் காவலர்கள் போன்ற ஏற்பாடுகள் உள்ளன.

விடுதியின் திறப்பு விழா நிகழ்வுகள், மது கண்ணாடிக் கிண்ணங்கள் உடைப்பைக் கொண்டு துவங்கின.

ஸ்வீடன் நாட்டில் பாங்கொலி



ஸ்
வீடன் நாட்டில் வெடியா பள்ளிவாசலில் முதல்முறையாக பாங்கொலி வெளியே கேட்டது. சுமார் மூன்று நிமிடங்கள் நகரில் ஒலித்த தொழுகை அழைப்பு முஸ்லிம்களை பரவசப்படுத்தியது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமிற்குத் தெற்கே வெடியா நகரம் உள்ளது.

இந்தப் பள்ளிவாசலில் சுமார் ஏழாயிரம்பேர் தொழுதுவருகிறார்கள். இதுவரை சப்தமிட்டு பாங்கு சொல்வதற்குத் தடை இருந்தது. ஸ்டாக்ஹோம் காவல்துறையினர் இப்போதுதான் அனுமதி வழங்கியுள்ளனர்.

சுவீடன் நாட்டில் சுமார் 200 பள்ளிவாசல்கள் உள்ளன. அவற்றில் சில பள்ளிவாசல்களில் மட்டுமே பாங்கு மேடை உள்ளது. பெரும்பாலான பள்ளிவாசல்கள் தாற்காலிகக் கட்டடங்களிலேயே இயங்கிவருகின்றன.

பிரிட்டனில் சரிந்துவரும் கிறித்தவம்



டெ
ய்லி டெலிகிராஃப் ஏடு ஒரு செய்தி வெளியிட்டுள்ளது:

பிரிட்டனில் கிறித்தவ மதம் முன்எப்போதும் இல்லாத சரிவைச் சந்தித்துவருகிறது; அபாயகரமான அளவில் நசிந்துவருகிறது. பிரிட்டனைச் சேர்ந்த 25 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு பத்துப்பேரில் ஒருவர் முஸ்லிமாக உள்ளார்.

2011ஆம் ஆண்டு புதிதாக மேற்கொள்ளப்பட்ட ஒரு கணக்கெடுப்பைச் சுட்டிக்காட்டியுள்ள பிரிட்டன் ஏடு, கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்ட குடியேற்றம் கிறித்தவத்தின் சரிவுக்கு உதவியுள்ளது; அதேநேரத்தில், இஸ்லாத்தை ஏற்கும் நிகழ்வுகள் குறிப்பாக இளைஞர்களிடையே பெரிய அளவில் அதிகரித்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளது.

இந்தக் கணக்கெடுப்பின்படி, இங்கிலாந்து ஸ்காட்லாண்டு, வேல்ஸ் ஆகிய பகுதிகளில் மட்டும் கிறித்தவர்களின் எண்ணிக்கை 4.1 மில்லியன், அதாவது 10 விழுக்காடு குறைந்துள்ளது. ஆனால், இப்பகுதிகளில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 75 விழுக்காடு அதிகரித்துள்ளது.


(அல்முஜ்தமா)