- அ. முஹம்மது கான் பாகவி
ஐரோப்பாவில் முதல் இஸ்லாமிய
அரசியல் கட்சி
நவீன ஐரோப்பாவின் வரலாற்றிலேயே முதலாவது இஸ்லாமிய அரசியல் கட்சி
உருவாகிறது. கட்சியை ஆரம்பிப்பவர் யார் என்று தெரிந்தால்
ஆச்சரியப்படுவீர்கள். நபி (ஸல்)
அவர்களையும் இஸ்லாத்தையும் கடுமையாகக் கொச்சைப்படுத்தி சினிமாப் படம்
எடுக்க மூளையாகச் செயல்பட்ட அதே Arnaud Van Doom
தான்.
ஹாலந்து நாட்டைச் சேர்ந்த இவர் ஐரோப்பாவில் இஸ்லாமிய அரசியல்
கட்சியொன்றைத் தொடங்கும் முதல்கட்டப் பணிகளை முடித்துவிட்டார். இதுதான்,
இஸ்லாமிய அடிப்படையில் ஐரோப்பாவில் தொடங்கப்படும் முதலாவது அரசியல்
கட்சியாகும். இக்கட்சி ஐரோப்பிய குடிமகனுக்கு இஸ்லாத்தின் மகிமையை
எடுத்துச்சொல்லும் என்கிறார் Arnaud.
இஸ்லாத்தின் மீது தீவிர எதிர்ப்பு சிந்தனை கொண்ட ஹாலந்து
சுதந்திரக் கட்சியின் (PW) முன்னாள் பிரதிநிதி ஆவார் இவர். இக்கட்சிதான்,
இஸ்லாத்திற்கெதிரான திரைப்படம் தயாரிக்கப் பின்னணியில் இருந்து எல்லா
உதவிகளையும் செய்தது. இவர் நபி (ஸல்)
அவர்களின் உண்மையான வாழ்க்கை வரலாற்றைப் படித்து மனம் மாறினார்; மதமும் மாறினார்.
முஸ்லிமானபின், ஹாலந்தில் மட்டுமன்றி,
முழு ஐரோப்பாவிலும் நபியவர்களின் மேன்மை குறித்த பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார்.
இப்போது முஸ்லிம் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
ஐரோப்பா எங்கும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் தமது கட்சி
சேவை செய்யும் என்று கூறுகின்ற Arnaud. முஸ்லிம்களைக் கணிசமான எண்ணிக்கையில் தம் கட்சியில் சேர்க்கப்போவதாக அறிவித்துள்ளார். முஸ்லிம்களுடன்
நல்லுறவு பாராட்டிவரும் நண்பர்களையும் உறுப்பினர்களாக்க முயல்வேன் என்கிறார்.
வரும் நாட்கள், இஸ்லாத்தைப் பற்றிய புரிதலைச்
செய்யும் பணியில் அதிகப் பங்களிப்பைக் காணும். அதற்காக
‘மனிதகுலத் தலைவர் முஹம்மத்’ எனும் ஒரு படம் தயாரிக்கப்போகிறேன்.
ஐந்து மொழிகளில் இப்படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளேன். இதற்கு கனடாவில் உள்ள தாவா சென்டர் உதவ முன்வந்துள்ளது.
அத்துடன் நபிகளாரின் வரலாற்று நிகழ்வுகளைக் கூறும் தொகுப்பு
ஒன்றை உருவாக்கி, ஐந்து மொழிகளில்
மொழிபெயர்த்து, ஐரோப்பிய நாடுகளில் அதிகமானோர் கையில் சேர்க்க
எண்ணியுள்ளேன் –என்றார் அவர். ‘எதிர்ப்பில்
வளர்ந்த மார்க்கம் இஸ்லாம்’ என்பது எவ்வளவு உண்மை பார்த்தீர்களா?
சத்தியம் அப்படித்தான்! இது நபிகளார் காலத்திலிருந்தே தொடரும் உண்மை!
வளைகுடா நாடுகளில்
அமெரிக்காவின் புதிய வியூகம்
இராக், ஆப்கானிஸ்தான் ஏன்,
ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில்கூட அமெரிக்காவின் கனவு நனவாகவில்லை.
மிகப்பெரும் விலை கொடுத்தும் நினைத்ததை முழுவதுமாகச் சாதிக்க முடியவில்லை.
எகிப்து, இராக், சிரியா ஆகிய
நாடுகளில் அமெரிக்காவின் பிடி தளர்ந்துபோனது.
மத்திய கிழக்கில் எண்ணெய் ஊற்றுகள்மீது அதிகாரம், இஸ்ரேல்
நாட்டின் பாதுகாப்பும் அதன் நலன்களும்தான் அமெரிக்காவின் இலக்கும் இலட்சியமும்.
எகிப்து, சிரியா ஆகிய நாடுகளின் பிரச்சினையில்
இனியும் வளைகுடா நாடுகளை நம்பிப் பயனில்லை என்ற முடிவுக்கு அமெரிக்கா வந்துவிட்டதுபோல்
தெரிகிறது.
இதனால் இன்றுவரை வளைகுடா நாடுகளுடன் நெருங்கிய தொடர்பும் பாதுகாப்பு
ஒப்பந்தமும் வைத்திருக்கும் அமெரிக்கா, அந்நாடுகளுடன் தள்ளி நின்று
கைகுலுக்கவே விரும்புகிறது. இப்போதைய அரசியல் மேகத்தில் ஈரானுடன்
நெருக்கமான உறவுவைத்துக்கொள்வதே அமெரிக்காவுக்குப் பல வகைகளிலும் நன்மை என்ற நிலையை
ஒபாமா எடுத்துவிட்டார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. எகிப்து,
சிரியா, இராக் ஆகிய நாடுகளில் ஈரான் வமிசாவளி ஷியாக்களின்
கையே இப்போது ஓங்கியுள்ளது. வளைகுடா அரபுகளுக்கு ஈரான் பிடிக்காது
என்பது அமெரிக்காவுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், தன் நலனுக்காக பழைய நண்பர்களைப் பலி கொடுக்க அமெரிக்கா தயங்காது என்பது தெரிந்ததே!
இதுவரை ஈரானின் ‘அகண்ட மத்திய கிழக்கு’
கனவிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள மலைபோல் நிம்பியிருந்த அமெரிக்காவே
ஈரானுடன் கைகோக்க ஆரம்பித்துவிட்டதைக் கண்டு வளைகுடாவே பீதியில் உறைந்துபோயிருக்கிறது.
சுயகாலில் நிற்கத் திராணியில்லாத எவரும் ஒருநாள் நடுரோட்டில் விடப்படுவார்
என்பது வளைகுடா அரபியர் விஷயத்தில் பலிக்கப்போகிறது. குறிப்பாக,
சஊதி, பஹ்ரைன், எமிரேட்ஸ்
ஆகிய நாடுகளுக்கு ஈரானிடமிருந்து மிகப்பெரும் அச்சுறுத்தல் காத்திருக்கிறது.
இனி என்ன செய்ய வேண்டும் என்று வளைகுடா அரசியல் நிபுணர்களும்
அறிவுஜீவிகளும் சில பரிந்துரைகளை முன்வைக்கிறார்கள். இனிமேலும் வங்காள தேசத்திலிருந்தோ யமனிலிருந்தோ கூலிக்கு இறக்குமதி
செய்யும் படைவீரர்களால் வளைகுடாவைக் காப்பாற்ற முடியாது. மாறாக,
சகோதர, பிராந்திய அளவில் ஓர் இராணுவ திட்டத்தை
உருவாக்குவதுதான் தீர்வாக இருக்க முடியும். எனவே, அவசரமாக அத்தகைய ஒருங்கிணைந்த வளைகுடா கூட்டுப் படையை உருவாக்க வேண்டும் என்பது
அப்பரிந்துரைகளில் முதன்மையானது. செய்வார்களா?
4 ஆயிரம் ஐரோப்பியர்கள்
முதல் தடவையாக ஹஜ்
ஐரோப்பிய நாடுகளில் புதிதாக இஸ்லாத்தில் இணைந்தவர்களில் 4,500 பேர் இவ்வாண்டு புனித ஹஜ்ஜை நிறைவேற்றினர். இஸ்லாமிய
சமூக அமைப்பொன்று இப்பனிதப் பயணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. முஸ்லிம்களை ஒருங்கிணைப்பதற்கான இந்த அமைப்பு ஐரோப்பா எங்கும் தன் கிளைகளை
அமைத்துள்ளது.
இந்த அமைப்பின் தலைவர் கமால் அர்கோன் கூறும்போது, ஒவ்வோர்
ஆண்டும் ஐரோப்பாவின் பல பகுதிகளிலிருந்து வரும் புதிய முஸ்லிம்கள் தங்களின் புனிதக்
கடமையை நிறைவேற்றுவதற்கு எங்கள் அமைப்பு ஏற்பாடுகளைச் செய்கிறது. உலகையே உலுக்கிய செப்டம்பர் 11 நிகழ்வு எங்கள் சங்கத்திற்கு
ஒரு சாதகமான நிலையையே ஏற்படுத்தியது.
ஐரோப்பிய சமூகங்களைச் சேர்நத் ஏராளமானோர் இஸ்லாத்தைப் பற்றிப்
படித்துத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டிவருகின்றனர். இதற்குக்
காரணம், நாங்கள் எதிர்நோக்கும் மோசமான பிரசாரம்தான்.
‘இஸ்லாம் ஒரு பயங்கரவாத மதம்’என்ற பரப்புரை அநியாயமாகப்
பரவிப்போயுள்ளது. உண்மையை அறிய விரும்பும் மக்கள் இவ்வாறு இஸ்லாத்தை
வாசிக்க வருகின்றனர் –என்றார்.
நீங்கள் ஒன்றை வெறுக்கலாம்; அதுவே உங்களுக்கு நன்மையாக அமையும்.
சுலேவீனியாவில் முதல் பள்ளிவாசல்
கிழக்கு ஐரோப்பிய நாடான சுலோவீனியாவில் 20 லட்சம் மக்கள்
வசிக்கின்றனர். பெரும்பான்மையினர் கத்தோலிக்க கிறித்தவர்கள். முஸ்லிம்கள் சுமார்
47 ஆயிரம்பேர் உள்ளனர். இதன் தலைநகர் லியுப்லியானா. இதுதான் அந்நாட்டின் பெரிய
நகரம்.
இங்குள்ள
முஸ்லிம்கள் தலைநகரில் 2016இல் திறக்கப்பட உள்ள முதல் பள்ளிவாசலின் கட்டட வேலையை இம்மாதம்
(நவம்பர்-2013) தொடங்கியுள்ளனர். இப்பள்ளிவாசல் தொழுமிடம், கலாசார மையம், நூலகம்,
வகுப்பறைகள் ஆகியவை கொண்ட பன்னோக்கு இல்லமாகச் செயல்படவுள்ளது.
இப்பள்ளிவாசலுக்கு சுலோவீனியக் குடியரசு தலைவி எலைங்கா
பிராடோஸ்க் அடிக்கல் நாட்டினார். தலைநகர் மேயர் சோரான் யான்கோவிச் உள்பட பல்லாயிரக்கணக்கானோர்
கூட்டத்தில் கலந்துகொண்டனர். கத்தர் நாட்டின் வக்ஃப் அமைச்சர் ஃகைஸ் பின் முபாரக்
சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். 1916இல் வடமேற்கு சுலோவீனியாவில் கட்டப்பட்டிருந்த
முதல் பள்ளிவாசல் முதலாம் உலகப் போருக்குப்பின் இடித்துத் தள்ளப்பட்டது.
இந்நாட்டு முஸ்லிம்கள் பெரும் ஆவலோடு
எதிர்பார்த்திருக்கும் இந்த இறையில்லம் 12 மில்லியன் யூரோ (15.9 மில்லியன் டாலர்) செலவில்
எழுப்பப்பட உள்ளது. இதில் 70 விழுக்காடு தொகை கத்தரிடமிருந்து
எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தாலி முஸ்லிம்களுக்கு
மார்க்க அறிஞர்கள் பஞ்சம்
இத்தாலியில் 1.5 மில்லியன் முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.
இவர்கள் பல்வேறு நாடுகளில் இருந்து குடியேறியவர்கள். 700க்கும் குறைவில்லாத
இஸ்லாமிய மையங்கள் இத்தாலியில் உள்ளன. வளைகுடா நாடுகள் உள்பட பல இடங்களிலிருந்து
அவர்களுக்கு உதவிகள் கிடைத்துவருகின்றன.
ஆனால், இந்த நிதி எங்கே போகிறது என்று எங்களுக்குத்
தெரியவில்லை; அதில் துளி அளவுகூட
இத்தாலி முஸ்லிம்களில் தேவையுள்ளோருக்குக் கிடைப்பதில்லை; அதேநேரத்தில்,
‘கார்டஸ்’ அமைப்பு மூலமாக வாடிகனிலிருந்து வரும் உதவிகள் சிரமப்படும் முஸ்லிம்களுக்குக்
கிடைக்கின்றன –என்று இத்தாலியில் வாழும் எகிப்திய முஸ்லிம்கள்
முகநூலில் தெரிவித்துள்ளனர்.
இதைவிடக் கொடுமை என்னவென்றால், இத்தாலி
மஸ்ஜிதுகளில் பணியாற்றும் இமாம்கள் முறையாக மார்க்கக் கல்வி கற்றவர்கள் அல்லர்.
அஸ்ஹர் (கெய்ரோ) பல்கலைக்
கழகத்திலோ வேறு அதிகாரபூர்வ மதரசாக்களிலோ அவர்கள் பயின்றவர்களாகத் தெரியவில்லை.
அவர்கள் சொல்லும் மார்க்கக் கருத்துகளும் ஃபத்வாக்களும் எங்கிருந்து
எடுத்தாளப்படுகின்றன என்பது யாருக்கும் புரியவில்லை.
இத்துணை பெரும் எண்ணிக்கையில் முஸ்லிம்கள் வாழும் ஒரு நாட்டில்
அஸ்ஹர் போன்ற கல்வி நிலையங்களின் பங்கு என்ன என்று வினா தொடுக்கும் இத்தாலிய முஸ்லிம்கள், இத்தாலி
இமாம்களில் மூன்றில் ஒரு பங்கினரே அஸ்ஹரில் படித்தவர்கள்; பெரும்பாலோர் பர்மாவையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் சேர்ந்தவர்கள்
என்று குறைபட்டுக் கொள்கிறார்கள்.
இதனால் இத்தாலி உள்பட ஐரோப்பிய முஸ்லிம்களை அஸ்ஹர் கண்டுகொள்ளவே
இல்லை; விவரம் தெரியாத அறிவிலிகளின் கையில் எங்களை அது காவுகொடுத்துவிட்டது
என்று ஆதங்கப்படுகின்றனர். ஆக, முஸ்லிம்
நாடுகளுக்கு வெளியே இஸ்லாம் அபாய கட்டத்தில் உள்ளது என்று இத்தாலி முஸ்லிம்களின் முகநூல்
விமர்சிக்கிறது.
பிரிட்டன் சிறைக்கைதிகள்
மத்தியில் பரவும் இஸ்லாம்
பிரிட்டனில் சிறைக் கைதிகளிடையே இஸ்லாமியர் ஊடுருவி, இஸ்லாமியப்
பிரசாரம் செய்வது மட்டுமன்றி, கட்டாய மதமாற்றம் செய்கின்றனர்
என்று பிரிட்டன் சிறைக்காவலர்கள் சங்கம் பதறுகிறது. புதிதாக வருபவர்கள்
‘இஸ்லாமிய தீவிரவாதத்தை’ வளர்க்கிறார்கள் எனக்
குற்றம்சாட்டுகிறது.
சங்கப் பொதுச் செயலாளர் ஸ்டீவ் கெய்லன் அளித்த நேர்காணலில், இஸ்லாத்தைத்
தழுவுமாறு இளைஞர்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்ற அச்சம் எழுந்துள்ளது என்றார்.
நாட்டில் பல இடங்களைச் சுற்றிப்பார்த்தபோது இது நாளுக்குநாள் அதிகமாவது
தெரிகிறது என்கிறார், பிரிட்டன் சிறைகள் சட்ட ஆலோசகர் ஜோ டிஷப்மேன்.
ஆனால், பிரிட்டன் சட்டத்துறை அமைச்சகப்
பேச்சாளர் ஒருவர் அளித்த விளக்கம் வேறுவிதமாக உள்ளது. அவர் சொன்னார்: பொதுவாகச் சிறைக்கைதிகளிடம் இறைநம்பிக்கை அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
இது அவர்களைத் திருத்துவதில் முக்கியப் பங்காற்றலாம். எனவே, இது ஆக்கபூர்வமான மாற்றம்தான். ஆனால், பலவீனமான சிறைக்கைதிகள்மீது கட்டாயத் திணிப்பை
ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
(அல்முஜ்தமா)