உங்களுடன் நான் மனம்விட்டு... - 17
1980
|
ஆம் ஆண்டு ஆகஸ்டு 23ஆம் தேதி வேலூர் பாகியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்தேன். தாய்க் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்ற வேண்டும் என்பதே என் வாழ்நாள் இலட்சியமாக இருந்தது. அதற்காகத் தொடர்ந்து ஐந்தாண்டுகள் முயற்சி செய்தபின் அந்த வாய்ப்பினை இறைவன் அருளினான். எதிர்பார்ப்புக்குப்பின் கிடைக்கும் ஒன்றின் மீது அதிக ஈடுபாடு காட்டுவது மனிதனின் இயல்பு. 35 ஆண்டுகளுக்குமுன் பாகியாத்தில் ஆசிரியராகச் சேர்ந்தபோது என் ஊதியம் ரூ. 365/- அதேயாண்டு ரூ. 100/- அதிகமாக்கப்பட்டது.
தாருல் ஹதீஸ் பிரிவின் பழைய கட்டடம் |
19 ஆண்டுகள் பணியாற்றிய அந்தப் பருவத்தில் பட்ட அனுபவங்கள் அனந்தம். சந்தித்த மேடுபள்ளங்கள் பல. கிடைத்த அறிமுகங்கள் பல்துறை. பேச்சு, எழுத்து, கற்பித்தல் ஆகிய துறைகளில் கண்ட முன்னேற்றங்கள் உற்சாகமும் உத்வேகமும் தர வல்லவை. ஆசிரியர்கள் பல மாநிலத்தவர். மாணவர்கள் பல நாட்டவர்; பல மொழியினர். தமிழ், உருது, அரபி எனப் பலமொழிகளில் வகுப்பு எடுக்க வேண்டிய புதிய பரிணாமம். பெரிய மாணவர்களுக்குக் கற்பிக்கும் வாய்ப்பு. சொந்தப் பிள்ளைகளின் படிப்பு; வளர்ச்சி. இப்படி முப்பரிமாணங்களும் ஒன்றுகூடி வந்த வசந்த காலம்.
பழைய கட்டடத்தின் எழில்மிகு தோற்றம் |
மாணவர்களுக்குப் பாடம் போதிப்பதோடு நின்றுவிடுவதில்லை என் பழக்கம். வாழ்க்கையின் நெளிவுசுளிவுகளையும் சொல்வதுண்டு. ஆலிம்கள் திறமைகளை வளர்த்துக்கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று வலியுறுத்துவதோடு, சுயமரியாதை, தன்மானம் காக்க வேண்டும் என்று வற்புறுத்துவதுமுண்டு. மனிதவளத்தைப் பெருக்கிக்கொள்வதில் நேரத்தைச் செலவிட வேண்டுமே தவிர, சடங்கு சம்பிரதாயங்களை நடத்திவைப்பதில் நம் பொன்னான நேரங்களைக் கழித்துவிடக் கூடாது என உணர்த்துவதுண்டு. இன்னும் எத்தனை காலத்திற்கு இதிலேயே நம் நேரங்களைச் செலவழிப்பது என்ற ஆதங்கம்தான் காரணம்! மாணவனாக இருந்த நாட்களில் ஓர் ஊரில் விருந்து ஒன்றுக்காகச் சென்றபோது, ‘‘வந்துண்டானுகடா! பஞ்சைப் பராரிகள் (பரம ஏழைகள்)’’ என்று காதுபட சொன்னதன் வலிதான் காரணம்!
இரவில் அன்றைய பாடங்களைத் திரும்பப் படிக்கும் பழக்கம் அங்கு உண்டு. அதைக் கண்காணிக்க ஆசிரியர்களும் வருவார்கள். அப்படி நான் போகும் நாட்களில் மாணவர்களிடம் இலக்கிய ஆர்வத்தை ஊட்டுவதுண்டு; அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துக் கேட்டறிந்து யோசனைகள் சொல்வதுண்டு. எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக மாணவர்களுடன் விவாதிப்பதுண்டு. கவலையோடு காட்சியளிக்கும் மாணவனை அழைத்து ஆறுதல் கூறுவதுண்டு. இதனாலெல்லாம், நம்முடன் உரையாடுவதற்கும் கருத்துப் பரிமாறுவதுக்கும் ஓர் ஆள் உண்டு என மாணவர்கள் ஊக்கத்தோடு செயல்பட உதவலாம் அல்லவா? ஆறுதலும் தெம்பும் அவர்களுக்குக் கிடைக்குமல்லவா?
வியாழன்தோறும் நடக்கும் மாணவர்கள் சொற்பயிற்சி மன்றத்தில் அவ்வப்போது ஆர்வத்தோடு கலந்துகொள்வேன். பட்டிமன்றம், கருத்தரங்கம் போன்ற சிறப்புக் கூட்டங்களில் நடுவராக இருந்து தீர்ப்புச் சொல்வேன். நன்றாகப் பேசக்கூடிய, வாதிடக்கூடிய மாணவர்களை அகம் குளிரப் பாராட்டி ஊக்குவிப்பேன். மாணவர்களின் கையெழுத்து இதழான அல்இர்ஷாதில் வாழ்த்துரை வழங்கி எழுத்தை ஊக்கப்படுத்துவேன். அவ்விதழை நானே கேட்டுவாங்கிப் படிப்பேன். நல்ல கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் எழுதும் மாணவர்களை அழைத்துப் பாராட்டுவேன். ஒரு மாணவர் எழுதியிருந்த கவிதையைப் படித்துக் கண்கலங்கிவிட்டேன். என் அறைக்கு வரச்சொல்லி, தழுதழுத்த குரலில் புகழ்ந்தேன். அந்த அளவுக்கு அவரது கவிதை உருக்கமாகவும் ஒய்யாரமாகவும் அமைந்திருந்தது. அப்படி உருவான பலர் இன்று சமுதாய அரங்கில் பெயர் சொல்லும் அளவுக்கு மிளிர்கிறார்கள் என்பது உண்மை.
பாகியாத்தின் புதிய கட்டத்தின் எழில்மிகு காட்சி |
பாகியாத்தின் புதிய மஸ்ஜிதின் கம்பீரமான காட்சி |
பா
|
கியாத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய நாட்களில் என் கவனத்தை ஈர்த்த மாணவர்கள் பலர் இருந்தனர். அவர்களில் 1980களில் பயின்ற தொட்டப்பநாயக்கனூர் மௌலவி, நூர் முஹம்மது ஃபாஸில் பாகவி ஒருவர். கெட்டிக்கார மாணவர். ஆசிரியர்கள் சொல்லும் கருத்துகளைச் சட்டெனப் புரிந்துகொண்டு, எதிர்க்கேள்வி தொடுக்கும் திறன் படைத்தவர். பிற்காலத்தில் பாகியாத்தின் ஆசிரியராகப் பணியாற்றியவர். தற்போது மதுரையில் பள்ளிவாசல், மத்ரசா உருவாக்கி நிர்வகித்துவருகிறார். இன்னொருவர் சித்தார்கோட்டை நூர் முஹம்மது ஹைதர் அலீ பாகவி, காஸிமி. நல்ல திறமைசாலி; பேச்சாளர்; வகுப்பில் கேள்வி கேட்டு மடக்குபவர். இவரும் பிற்காலத்தில் பாகியாத்தின் ஆசிரியராகப் பணியாற்றியவர். தற்போது அதிராம்பட்டினத்தில் பள்ளி ஆசிரியராகவும் பரப்புரையாளராகவும் பணிபுரிகிறார்.
இலங்கை மௌலவி, ஏ.சி. முஹம்மது பாகவி. மத்ரசா கல்வியோடு கல்லூரி கல்வியும் பெற்றவர். எதையும் சூட்சுமத்தோடு புரிந்துகொள்கின்ற ஆற்றல் படைத்தவர். நல்ல தமிழ். சரியான பேச்சாளர். இப்போது எங்கே, என்ன செய்கிறார் என்ற தகவல் இல்லை. இவரைப் போன்ற மனிதவளம் மிக்கோரை இனம் கண்டு சமுதாயம் பயன்படுத்த வேண்டும். மலேசியா மௌலவி, முஹம்மது கபீர் பாகவி. நல்ல குரல் வளம். தொழுகை அறிவிப்பாளராக பாகியாத் பள்ளிவாசலில் பணியாற்றிக்கொண்டே கல்வி கற்றவர். நான் அரபியில் பேசுவதற்கு, எனக்குக் கிடைத்த காது. தற்போது கோலாலம்பூரில் மார்க்கப் பணியாற்றுகிறார்.
கோவை மௌலவி, அப்துல் அஸீஸ் ஃபாஸில் பாகவியைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. மதிப்பெண்கள் எப்படி என்பது சரியாக நினைவில்லை. ஆனால், நல்ல விளக்கமும் வித்தியாசமான பார்வையும் உள்ளவர். பேச்சிலும் எழுத்திலும் சிறந்து விளங்கியவர்; விளங்கிக்கொண்டு இருப்பவர். அவரது அறைக்குச் சென்று அவருடன் நீண்ட நேரம் உரையாடும் பழக்கம் எனக்கு இருந்தது. பல்துறை விஷயங்களை விவாதிப்பதுண்டு; கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்வதுண்டு. பட்டம் பெற்றபின் கோவை, தூத்துக்குடி ஆகிய அரபிக் கல்லூரிகளில் ஆசிரியராகச் சிறிது காலம் பணியாற்றினார். சிங்கப்பூரில் இமாமாகவும் பணியாற்றியுள்ளார். தற்போது கோவையிலேயே ‘இமாமத்’ பணியில் இருந்துவருகிறார். அவரது பேச்சும் எழுத்தும் வீச்சும் வீரியமும் உள்ளதாக இருக்கும்.
இவருடைய வகுப்புத் தோழர் மேலப்பாளையம் மௌலவி, காஜா முஹ்யித்தீன் பாகவி. மன்றங்களில் அன்றே திரும்பிப் பார்க்கவைக்கும் பேச்சாற்றல். இன்று மேலப்பாளையம் அரபிக் கல்லூரியில் பேராசிரியர் மற்றும் இமாம். கொஞ்சும் குரலில் கெஞ்சிப் பேசும் நாவன்மை அவருக்கு உண்டு. ஏரல் பீர் முஹம்மது பாகவி மற்றொருவர். இவர் சிறந்த கவிஞர்; இனிய குரல்வளம் படைத்த பாடகர். ‘சிந்தனைச்சரம்’ என்ற மாத இதழைப் பல்லாண்டுகளாக நடத்திவந்தார். காலம் கை கொடுக்கவில்லைபோலும்! வணிகராக வலம் வருகிறார். புரட்சிகரமான கருத்துகளைத் துணிவோடு முன்வைத்த பெருமை சிந்தனைக்கு உண்டு. இஸ்லாமிய எழுத்தாளர்கள் சிந்தனையில் எழுத வேண்டுமென ஆசைப்பட்டதுண்டு.
1990
|
களில் பயின்ற மாணவர்களில் தக்கலை மௌலவி, அ. ஜாகிர் ஹுசைன் பாகவியை முதலில் குறிப்பிடலாம். பல்வேறு திறமைகள் அவரிடம் உண்டு. பாடத்தில் திறமையானவர். அதைவிட மத்ரசாவில் கற்றுக்கொண்டே சுயமுயற்சியில் கல்லூரி படிப்புகளையும் தொடர்ந்து கற்றுவந்ததுதான் அவரை வித்தியாசப்படுத்திக் காட்டியது. பட்டம் பெற்றபின் பல்கலைக்கழகப் பட்டங்களைப் பெற்று முனைவர் ஆனார். சென்னை ரஹ்மத் பதிப்பகத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றியபின், தற்போது சென்னைப் பல்கலைக்கழக அரபித் துறை பேராசிரியராகவும் துறை சேர்மனாகவும் பணியாற்றிவருகிறார். நல்ல பேச்சாளர்; எழுத்தாளர். திருக்குறளை அரபியில் மொழிபெயர்த்தவர்.
அடுத்து மேட்டுப்பாளையம் மௌலவி, சதீதுத்தீன் பாகவி. வகுப்பில் திறமையான மாணவர். சொல்வதை உள்வாங்கிக் கொண்டு, அதைப் பிரதிபலிக்கும் திறன் பெற்றவர். போட்டி போட்டுக்கொண்டு முன்னேறும் குணம் அப்போதே தென்பட்டது. மன்றங்களில் அழகுபட உரையாற்றுவார். அவரது கம்மிய குரல் எனக்கெல்லாம் சற்று கம்மியாகத் தெரிந்தது. அதுவே இன்று ரம்மிய குரலாகப் பார்க்கப்படுகிது. பின்னாளில் சுயமாகப் படித்துப் பல்கலைக்கழகப் பட்டங்களையும் பெற்றுள்ளார். தற்போது சென்னையில் இமாமாகவும் அரபிக் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றுகிறார்.
அவ்வாறே, சென்னை ரஹ்மத் பதிப்பகத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றிவரும் மதுரை பூதமங்கலம் எஸ். அப்துல்லாஹ் பாகவி, முன்பு பணியாற்றிய மேட்டுப்பாளையம் அப்துந் நாசிர் பாகவி, வடகரை ஷாகுல் ஹமீது பாகவி (தேரிழந்தூர்), மௌலவி, Z. பரக்கத் அலீ பாகவி (பி.எஸ்.பி. அவர்களின் மகன்), வெளிநாடுகளில் பணியாற்றுவோரில் மேலப்பாளையம் மௌலவி, எஸ்.எஸ். அஹ்மத் பாகவி (கோலாலம்பூர்), முன்பு கோலாலம்பூரில் பணியாற்றிய திண்டுக்கல் மௌலவி, அப்துல்லாஹ் பாகவி, அதிரை நிஜாமுத்தீன் பாகவி (குவைத்), எஸ்.பி. பட்டினம் மௌலவி, அப்துல் கய்யூம் பாகவி (சிங்கப்பூர்) ஆகியோரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்! இவர்களுக்கெல்லாம் ஆற்றலுடன் இறையச்சமும் அமைய வேண்டும் எனப் பிரார்த்திப்போம். அப்போதுதான் சேவைகளும் தொண்டுகளும் மக்களுக்கு உண்மையான பயனைத் தரும்; இறைவனால் ஏற்கவும்படும்.
பா
|
கியாத்தில் பணியாற்றும் காலத்திலேயே அரபிக் கல்லூரிகளில் செய்ய வேண்டிய சில மாற்றங்கள் குறித்து என் கருத்துகளைத் தெரிவித்துவந்தேன். பாடத்திட்டத்தில் சேர்ப்பன, நீக்குவன தொடர்பாக முதன் முதலில் ஈரோடு தாவூதிய்யா அரபிக் கல்லூரியின் வெள்ளி விழா மலரில்தான் (1990) எழுதினேன். அதைக்கூட ‘இது கட்டுரையாளரின் கருத்து’ என்று அடையாளப்படுத்தியே வெளியிட்டார்கள். 25 ஆண்டுகளுக்குப்பின் அதைத் திரும்பிப் பார்க்கிறேன். அதன் தேவை அப்படியே இருக்கிறது.
அப்படி நான் என்ன சொல்லிவிட்டேன்! இஸ்லாத்தின் முதல் மூலாதாரமான திருக்குர்ஆனை முழுமையாகப் பொருளோடும் விளக்கத்தோடும் கற்பியுங்கள்! அவ்வாறே இரண்டாவது மூலாதாரமான நபிமொழித் தொகுப்புகளில் ஒன்றையாவது முழுமையாக விளக்கத்தோடு கற்பியுங்கள்! அடுத்து இறையியல் (அகீதா) பாடத்தில் சமகாலச் சமயங்களைப் பற்றியும் சமகால உட்பிரிவுகள் பற்றியும் ஒரு தெளிவை மாணவர்களுக்கு ‘ஒப்பியல்’ நோக்கில் கற்றுத் தர வேண்டும்.
மடிந்துபோன கிரேக்கத் தத்துவப் பாடங்களை அகற்றிவிட்டு, இன்று ஜீவித்திருக்கும் எதிர் தத்துவங்கள் தொடர்பான பாடங்களைச் சேருங்கள். நாத்திகம் (இறைமறுப்பு), பல தெய்வம் (ஷிர்க்), போன்ற கோட்பாட்டாளர்கள் வாதங்கள் என்ன? அரசியல் மற்றும் பொருளியலில் முதலாளித்துவம், கம்யூனிஸம், சோசலிஸம், மக்களாட்சி, மன்னராட்சி, இஸ்லாமிய ஆட்சி முறை போன்ற இயல்கள் ஓர் ஆலிமுக்குத் தெரிந்திருக்க வேண்டுமா, இல்லை? அறிவியல்தான் இன்று உலகை ஆட்டுவிக்கிறது. திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் புதைந்துள்ள அறிவியல் கருத்துகள் என்ன? அதற்கும் இன்றைய அறிவியலுக்கும் உள்ள ஒன்றுமை அல்லது வேற்றுமை என்ன? அறிந்திருக்க வேண்டுமா? இல்லையா? வணிகவியலில் புதிது புதிதாகத் தோன்றியுள்ள நடைமுறைகள், நிதிப் பயன்பாடு, முதலீடு ஆகியவை சொல்லிக் கொடுக்கப்பட்டால்தானே! இது ஹலால்; இது ஹராம் எனப் பளிச்சென்று பதில் சொல்ல முடியும்!
மருத்துவச் சாதனைகள் என்ற பெயரில் உலகெங்கும் பரவிவரும் இரத்தானம், உறுப்புதானம், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, பால் மாற்று அறுவை சிகிச்சை, செயற்கைக் கருத்தரிப்பு, வாடகைத் தாய், சோதனைக் குழாய் குழந்தை, மூன்றாம் பாலினம், கருணைக் கொலை, கௌரவக் கொலை, கருக்கலைப்பு... என ஏகப்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வென்ன என்பதை மாணவர்கள் எப்போது அறிவார்கள்? பட்டம் பெற்றபின் சுயமாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று, உலகமே பின்பற்றத் தலைப்பட்டுவிட்ட வழிமுறைகள் குறித்து அலட்சியமாகப் பதில் சொன்னால், எத்தனை பேருக்குச் சுயமாக ஆய்ந்து அறிகின்ற வாய்ப்பும் வேகமும் உண்டு?
இஸ்லாமிய வரலாறு, இந்திய வரலாறு, இந்திய அரசியல் சாசனம், சிறுபான்மையினர் உரிமை, நவீன அரபி மொழி, உலக & மற்றும் அலுவலக மொழியான ஆங்கிலம், பிழையின்றி தாய்மொழியில் பேசவும் எழுதவுமான பயிற்சி, கணினிப் பயிற்சி & இவையெல்லாம் ஓதிமுடித்தபின்தான் கற்றுக்கொள்ள வேண்டுமா? எத்தனை பேருக்கு முடியும்? எப்படி முடியும்?
கலாசார சீரழிவுக்கு முழு முதல் காரணமாக இருக்கின்ற பெண்ணியக் கோட்பாடு பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? பெண் சுதந்திரம் என்ற பெயரில் ‘மை&சாய்ஸ்’ என்று சொல்லிக்கொண்டு, இஸ்ரேலிய & மேற்கத்திய கலாசாரங்களைத் தூக்கிப் பிடிக்கும் சமுதாயப் பெண்டியருக்கும் வக்காலத்து வாங்கும் சமுதாய ஆண்களுக்கும் என்ன பதில்? அந்தப் பதில் விளக்கத்தை யாரோ படித்தவர்கள் சொல்ல, வாய் பிளந்து ஆலிம் கேட்டுக்கொண்டு இருக்க வேண்டுமா? கேட்பதற்குக்கூட எத்தனை ஆலிம்களுக்குச் சூழ்நிலை சாதகமாக அமையும்?
‘இஸ்லாமோ ஃபோபியா’ என்ற பெயரில், உலக ஊடகங்கள் திட்டமிட்டே இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்தவும் இஸ்லாத்தின் மீது வெறுப்பை உமிழவும் செய்கின்றனவே! ஊடகத்தைப் பற்றி உலமாக்களுக்கு என்ன தெரியும்? எப்படி தெரியும்? அச்சு ஊடகங்கள் முதல் காட்சி ஊடகங்கள்வரை அனைத்துமே பேசிவைத்தாற் போன்று செயல்படுகின்றனவே! இதற்கு நாம் என்ன வழிகாட்ட முடியும்? எப்படி வழிகாட்ட முடியும்?
மொத்தத்தில் அகிலத்தைப் படிக்காமல் அகிலத்தாருக்கு வழிகாட்ட முடியாது. உலகம் தெரியாமல், உலகத்தில் எப்படி வாழ வேண்டும் எனக் கற்பிக்க இயலாது. கொஞ்சம் கண் விழித்து அவனியையும் அவதானிக்க வேண்டும் என்று சொல்வதில் என்ன தவறு? பாடத்திட்டத்தில் சேர்க்காவிட்டாலும் சிறப்பு வகுப்புகள் நடத்தி, கற்பிக்கலாம் அல்லவா?
அ
|
வ்வாறே, கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ‘உங்கள் தூதுவன்’ மாத இதழில், ‘ஓர் ஆலிம் எழுத்தாளராகிறார்’ எனும் தொடரை ஓராண்டு காலம் எழுதிவந்தேன். மத்ரசாக்களில் என்ன நடக்கின்றன? என்னென்ன மாற்றங்கள் தேவை? மாணவர்களின் கல்வி மட்டுமன்றி, அவர்களின் பழக்கவழக்கங்கள், நடைமுறைகள் ஆகியவற்றில் எத்தகைய மாற்றம் செய்ய வேண்டும் என்பன போன்ற விஷயங்களை அத்தொடரில் எடுத்துரைத்தேன். குறிப்பாக விருந்துகள், இறந்தவர்களுக்குச் செய்கின்ற சடங்குகள், திருமணங்களில் பின்பற்றப்படும் சம்பிரதாயங்கள் போன்றவற்றுக்கு மாணவர்களையும் ஆலிம்களையும் அழைத்து, அவர்களின் நேரங்களையும் சுயமரியாதைகளையும் பாழ்படுத்துவதை முதலில் நிறுத்த வேண்டும் என்று வாதிட்டேன். நான் சந்தித்த சொந்த கசப்பான அனுபவங்களையும் விளக்கி எழுதினேன்.
வெளியே பலர் ஆதரித்து ஊக்கம் கொடுத்தாலும் உள்ளே தடைதான் வந்தது. சில பாடநூல்களைக் குறிப்பிட்டு, இவற்றை நீங்களே மாணவர்களுக்குக் கற்பித்துக்கொண்டு, குறையும் சொல்லலாமா என்று கேட்கப்பட்டது. கற்பிப்பதால்தான் அதிலுள்ள விஷயங்கள் புரிகின்றன; புரிவதால்தான் விமர்சனத்தை வெளியிடுகிறேன் என்று பதிலளிக்க வேண்டியிருந்தது. இருப்பினும் தொடரைத் தொடர்வது உசிதமல்ல என்ற நிலையில், முற்றுப்புள்ளி வைக்க வேண்டியதாயிற்று.
‘ஃபதாவா பாகியாத்’ (பாகியாத்தின் மார்க்கத் தீர்ப்புகள்) எனும் உருது நூலின் முன்னுரையைத் தமிழாக்கம் செய்ததால் நான் அனுபவித்த தொல்லைகள், பாபர் மசூதி இடிக்கப்பட்ட நேரத்தில் மத்ரசாவில் ஏற்பட்ட கொந்தளிப்பு, மாணவர்களை அமைதிப்படுத்தப்போக, தூண்டிவிடுவதாக எழுந்த தவறான குற்றச்சாட்டு, நிர்வாகம் கேட்டுக்கொண்டதற்கிணங்கப் புதிய ஆசிரியர்கள் சேர்ப்பில் உதவியதையடுத்துப் பரவிய அவதூறு போன்ற வலிகள் வாழ்க்கையில் மறக்க இயலாதவை. வலியில்லாத வாழ்க்கை ஏது?
எ
|
ழுத்தின் மீது கொண்ட ஆர்வம் ஒரு பக்கம்; மாணவர்களை எழுதவைக்க வேண்டும் என்ற வேட்கை மறுபக்கம்! 1986ஆம் ஆண்டு ஒரு புதுமையான மாத இதழ் தொடங்கினேன். பெயர்: ஹிலால் (பிறை). அது ஒரு தட்டச்சு இதழ். டைப்ரைட்டரில் தட்டச்சு செய்து, ஜெராக்ஸ் எடுத்து, அட்டையை இணைத்து ‘பின்’பண்ணி தனிச்சுற்றுக்கு மட்டும் வெளியிட்டு வந்தோம். ‘இஸ்லாமியப் பல்கலை இதழ்’ எனும் அடையாளத்தோடு வெளிவந்த ஹிலாலில், சூடான தலையங்கம், திருக்குர்ஆன், நபிமொழி, சட்டம், கொள்கை, வரலாறு, அரசியல், அறிவியல், பொருளாதாரம், கேள்வி&பதில், மருத்துவம், ஊர்வலம்... எனப் பல்வேறு இயல்களாகப் பிரித்து, ஒவ்வோர் இயலுக்கும் தகுதிவாய்ந்த அறிஞர்களைக் கண்டறிந்து கட்டுரைகள் வாங்கி பிரசுரித்தோம்.
மாணவர்கள் சிலரும் ஹிலாலில் எழுதினார்கள். சில மாதங்களிலேயே அச்சுக்கு மாறியது; பின்னர் வடிவம் சற்றுப் பெரியதாக மாற்றப்பட்டது. மாணவர்களின் உதவி, ஆசிரியர்கள் சிலரின் ஒத்துழைப்போடு ஹிலால் வளர்ந்தது. பத்திரிகை அச்சாகி வந்தபின் கவர் சுற்றி, முகவரி எழுதி, அஞ்சலில் சேர்ப்பது போன்ற பணிகளில் என் குடும்ப உறுப்பினர்களும் ஈடுபட்டதுண்டு. இருப்பினும், நிதி நெருக்கடி, விநியோகம், சந்தா புதுப்பித்தல் ஆகிய பணிகளைச் சீராகத் தொடர முடியவில்லை. இனியும் வெளியிட்டால் கையைக் கடிக்கும் என்ற கட்டத்தில் -வேறு வழியின்றி- இதழை நிறுத்த வேண்டியதாயிற்று.
சில ஆண்டுகளுக்குப்பின் ‘லஜ்னத்துல் ஹுதா’ என்ற மன்றத்தின் சார்பாக ‘அல்ஹுதா’ எனும் மாத இதழ் தொடங்கப்பட்டது. அதற்கு ஆசிரியராக என்னை நியமித்தனர். பின்னர் ‘அல்ஹுதா’வே ‘மனாருல் ஹுதா’ எனப் பெயர் மாறியது. ஹிலாலில் பின்பற்றிய அதே அடிப்படையில் பல்கலை இதழாக மானருல் ஹுதா மலர்ந்தது. ஆலிம் எழுத்தாளர்கள் மட்டுமன்றி, கவிக்கோ அப்துர் ரஹ்மான், தி.மு. அப்துல் காதிர், வழக்குரைஞர் நீடூர் சயீத் போன்ற பிரபலங்களும் மனாரில் எழுத முன்வந்தார்கள்.
நான் ஆசிரியராகப் பணியாற்றிய 5 ஆண்டுகளும் அனைத்துத் துறைகளிலும் இஸ்லாத்தின் வழிகாட்டல்களையும் சமூகப் பிரச்சினைகளையும் இவ்விதழ் இதமாக விவாதித்தது. வாசகர்களின் ஐயங்களுக்கு ஒளிவுமறைவின்றி விளக்கமாக விடை பகர்ந்தது. குறிப்பாக, கடைசிப் பக்கம் கலாசாரச் சீரழிவுகளைப் படம்பிடித்துக் காட்டியது. இதனாலேயே அப்பக்கம் பலரால் துண்டுப் பிரசுரங்களாய் வெளியிடப்பட்டுப் பரவலாக்கப்பட்டது.
அ
|
வ்வாறே, பாகியாத் சார்பாக ‘தஃப்சீர் ஜவாஹிருல் குர்ஆன்’ எனும் திருக்குர்ஆன் விரிவுரை தமிழில் வெளியிடுவதென நிர்வாகம் முடிவு செய்து, அதற்காக நான்கு ஆசிரியர்களைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. மரியாதைக்குரிய கமாலுத்தீன் ஹள்ரத், பி.எஸ்.பி. ஹள்ரத், சதகத்துல்லாஹ் ஹள்ரத் ஆகியோருடன் நானும் இக்குழுவில் நியமிக்கப்பட்டேன். 1992இல் முதல் தொகுதி வெளியிடப்பட்டது.
இவ்வாறு, நான் இருந்தபோதே மூன்று பாகங்கள்வரை தஃப்சீர் ஜவாஹிருல் குர்ஆன் பணி நிறைவடைந்தது. மக்களிடம் நல்ல வரவேற்பும் பாராட்டும் கிடைத்தது.
1994
|
ஆம் ஆண்டு, சென்னை ரஹ்மத் அறக்கட்டளை சார்பாக ஸஹீஹுல் புகாரீ நபிமொழித் தொகுப்பின் தமிழாக்கம் முதல் பாகம் வெளிவருகறிது. அப்போது பாகியாத் முதல்வராக இருந்த மௌலானா, பி.எஸ்.பி. ஜைனுல் ஆபிதீன் ஹள்ரத் அவர்களிடம் அணிந்துரை வாங்குவதற்காக அறக்கட்டளை நிர்வாகிகள் வேலூர் வந்தனர். தமிழாக்கத்தின் அச்சுப் படியையும் உடன் எடுத்துவந்திருந்தனர்.
முதல்வர் அவர்கள் உடனே என்னை அழைத்து, அப்பிரதியைக் கொடுத்து, இதைப் பார்வையிட்டு திருத்தங்கள் இருப்பின் எழுதிக்கொடுக்குமாறு பணித்தார்கள். நானும் படித்துப் பார்த்துச் சில திருத்தங்களைப் பரிந்துரைத்தேன். அத்தோடு முதல்வருடன் சேர்ந்து அணிந்துரையையும் தயார் செய்து கொடுத்தேன். அந்த முதல் பாகத்தின் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு நூலை ஹள்ரத் அவர்களே வெளியிட்டார்கள். இப்படித்தான் ரஹ்மத் அறக்கட்டளையோடு என் உறவு தொடங்கியது.
புகாரியின் இரண்டாவது பாகத்திற்கு இதே விதமாகப் பங்காற்றினேன். மூன்றாம் பாகத்தின் மேலாய்வுப் பணியை, பாகியாத்தில் இருக்கும்போதே என்னிடம் ஒப்படைத்தார்கள். அறிமுகம் ஏற்பட்டதிலிருந்தே சென்னைக்கு வந்துவிடுமாறு அழைக்க ஆரம்பித்துவிட்டார்கள். நான் செவிசாய்க்கவில்லை. தொடர்ந்து கடிதம் எழுதினார் அறங்காவலரும் நிறுவருமான முஸ்தஃபா பாய் அவர்கள்.
நெருங்கிய ஆசிரியர்களிடமும் நண்பர்களிடமும் நான் ஆலோசனை கேட்க, சிலர் வேண்டாம் என்றனர்; சிலர் யோசித்துக்கொள்ளுங்கள் என்றனர்; பலர் பச்சைக்கொடி காட்டினர். அல்லாஹ்வும் நாடிவிட்டான். 1998 பிப்ரவரி 4ஆம் நாள் சென்னை ரஹ்மத் பதிப்பகத்தின் தலைமை மொழிபெயர்ப்பாளராகப் பொறுப்பேற்றேன். பாகியாத்திலிருந்து விடைபெற்றபோது ரூ. 3650 என் ஊதியம். பணிக்கொடையாக (கிராஜுடி) ரூ. 34,355 வழங்கப்பட்டது.
http://www.baqiyath.com/english/index.php
நன்றி:
படங்கள் பாகியாத் இணையதளம்http://www.baqiyath.com/english/index.php