Wednesday, October 28, 2015

கவிக்கோ எங்கள் தமிழ் ஆசான்



விக்கோ அப்துர் ரஹ்மான் அவர்களை நான்அண்ணன்என்றுதான் அழைப்பேன். அவரிடம் கவிதை மொழியைவிட அன்புமொழி தூக்கலாக இருப்பதே காரணம். அதனால் என்னையும் அறியாமல்அண்ணன்உறவு ஒட்டிக்கொண்டுவிட்டது. அநேகமாக அவரும் அதை நேசிக்கிறார் என்றே எண்ணுகிறேன்.

1980 மற்றும் 90களில் வேலூர் பாகியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் நான் ஆசிரியராகப் பணியாற்றியபோதுதான் கவிக்கோ அண்ணனின் அறிமுகம் ஏற்பட்டது. வேலூர் நகரில் அப்போதெல்லாம் அவரது கவியரங்கம் அடிக்கடி நடக்கும். அரபிக் கல்லூரி மாணவர்கள் சிலர் அதில் தவறாது கலந்துகொள்வார்கள். அவர்கள் என்னிடம் வந்து கவியரங்கம் பற்றியும் அண்ணன் பொழிந்த கருத்துரைகள் பற்றியும் சிலாகித்துச் சொல்வார்கள்.

ஜூனியர் போஸ்டில் வெளிவந்த ‘ஆறாவது விரல்’, ஜூனியர் விகடனில் வெளிவந்த ‘சிறகுகளின் நேரம்’ ஆகிய தொடர்கள் மூலம் அண்ணனை நான் வாசித்திருந்தாலும் சந்தித்தது இல்லை. வேலூர் சோலைநாதன் அவர்களின் சோலை ஹோட்டலில் தங்கும் அண்ணன், அதே தெருவில் உள்ள எங்கள் கல்லூரிக்கு ஒருநாள் வருகைதந்தார். எனக்கோ பூரிப்பு; மாணவர்களுக்கோ வியப்பு. கல்லூரி முதல்வரைச் சந்தித்து, மாணவர்களுடன் அளவளாவி, என்னுடன் நீண்ட நேரம் உரையாடிவிட்டு விடைபெற்றார்.

இடைவெளி குறைந்தது


முன்பெல்லாம், மார்க்கம் கற்ற ஆலிம்களுக்கும் முஸ்லிம் பட்டதாரிகளான பேராசிரியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்குரைஞர்கள், கவிஞர்கள் போன்ற அறிஞர்களுக்கும் இடையே இனம்புரியாததோர் இடைவெளி இருந்ததை மறுக்க முடியாது. ஒரு பெரிய கவிஞரும் தமிழ் பேராசிரியருமான கவிக்கோ அவர்களின் நெருக்கம் கிடைத்தபிறகு, அவரைக் கொண்டே இடைவெளியைக் குறைத்தால் என்ன என்று யோசித்தேன்.

என்னை ஆசிரியராகக் கொண்டு அப்போது வெளிவந்துகொண்டிருந்தஅல்ஹுதா’ (இப்போது மனாருல் ஹுதா) மாத இதழில் அண்ணன் கவிக்கோ அவர்களைத் தொடர்ந்து எழுதுமாறு கேட்டுக்கொண்டேன். அதுவும் மார்க்கம் தொடர்பாக எழுதச் சொன்னேன். நான் ஆசிரியராக இருந்த ஐந்தாண்டுகளில் வெளிவந்த பெரும்பாலான இதழ்களில் அண்ணனின் கட்டுரைகள் வெளிவந்தன. இந்த இதழ் வாசகர்களில் கணிசமானோர் ஆலிம்கள். அண்ணனின் எழுத்துகளுக்கு அமோக வரவேற்பு.

அவ்வாறே, மற்றொரு கவிஞரும் பேராசிரியருமான தி.மு. அப்துல் காதிர் அவர்களிடமும் கட்டுரைகள் பெற்று வெளியிட்டோம். நானே சுவைத்து வாசித்த கட்டுரைகள் இவை. வார இதழ்கள் வாயிலாகத் தமிழ் ஆர்வமுள்ள ஆலிம்களுக்கு முன்பே அறிமுகமாயிருந்த கவிக்கோ அவர்கள், மேலும் பலருக்கு அறிமுகமாகவும் நெருக்கமாகவும் ‘அல்ஹுதா தொடர்கள் பெரிதும் துணை நின்றன.

மொழிபெயர்ப்பு வழிகாட்டி


சென்னை ரஹ்மத் பதிப்பகத்தில் 1998ஆம் ஆண்டு தலைமை மொழிபெயர்ப்பாளராக நான் பொறுப்பேற்றதிலிருந்து அண்ணன் கவிக்கோ அவர்களுடனான தொடர்பும் நெருக்கமும் எனக்கு மேலும் வலுப்பெற்றது. மொழிபெயர்ப்பாளர் குழுவில் இருக்கும் ஆலிம்கள் அண்ணனின் குடும்ப நண்பர்களாயினோம். குழுவில் ஒருவராகவே இருந்து தமிழாக்க ஆலோசகராகவும் மேற்பார்வையாளராகவும் அன்றுமுதல் இன்றுவரை அண்ணன் கவிக்கோ செயல்பட்டுவருகிறார்.

இஸ்லாத்தின் மூலாதார நூல்களான திருக்குர்ஆன் விரிவுரை, நபிமொழித் தொகுப்புகள் ஆகிய பெருநூல்களை அரபி மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பதே இக்குழுவின் பணியாகும். இதுவரை இருபது தொகுதிகள் வெளிவந்துள்ளன. ஒவ்வொரு தொகுதியும் ஏறத்தாழ ஆயிரம் பக்கங்களைக் கொண்டது. மொழிபெயர்ப்பாளர்கள் மொழிபெயர்த்து, கணினியில் தட்டச்சு செய்து பிரதியெடுத்து, மேலாய்வுக்காக என்னிடம் வழங்குவர்.

மொழிபெயர்ப்பிலுள்ள தவறுகளைத் திருத்தி, சொல்லாக்கத்தைச் சீராக்கி எளிமைப்படுத்தி, அடிக்குறிப்புகள் வரைவதே என் பணி. திருத்தங்களையும் விளக்கக் குறிப்புகளையும் கணினியில் ஏற்றி வடிவமைத்து மீண்டும் படியெடுப்பார்கள். அதனை குழுவிலுள்ள அனைவரும் பார்வையிட்டுப் பக்குவப்படுத்துவார்கள். இதில் ஒரு படி அண்ணன் கவிக்கோ அவர்களின் பார்வைக்கு அனுப்பிவைக்கப்படும்.

தமிழாக்கத்தைப் படித்துப்பார்த்து, தேவையான இடங்களில் தமிழைச் செழுமைப்படுத்தி, தகுதிவாய்ந்த அணிந்துரை ஒன்று வழங்குவது அண்ணனின் பொறுப்பு. தொடக்கத்தில் சில தொகுதிகளை முழுவதும் வாசித்து, தமிழ் மொழிபெயர்ப்பு எந்தெந்த இடங்களில் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை மொழிபெயர்ப்பாளர்களுக்குச் சொல்லிக்கொடுத்தார். இது, எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது; மொழிபெயர்ப்பின் தரத்தைக் கூட்ட துணை புரிந்தது. அடுத்தடுத்த தொகுதிகளில் புதியதாக வரும் சொற்கள், வாக்கியங்களுக்கு மட்டும் நல்ல தமிழை எங்களுக்கு அறிமுகப்படுத்துவார்.

திருக்குர்ஆன் மற்றும் நபிமொழி என்பதால், மூலத்திற்குச் சற்றும் வேறுபடாத வகையில், அதே நேரத்தில் எளிதில் புரிகின்ற சரளமான நடையில் மொழிபெயர்ப்பு அமைய வேண்டும் என்பது எங்களுக்கு நாங்களே விதித்துக்கொண்ட கட்டுப்பாடு. இதனால் அரபி மூலத்தைச் சொல்லுக்குச் சொல் ஒரு சொல்கூட விடுபட்டுவிடாத முறையில்- மொழிபெயர்க்கின்ற இக்கட்டான நிலை எங்கள் குழுவிற்கு. அதற்காக, அரபிக்கே உரிய சில தனி நடைகளைத் தமிழில் திணித்துவிடவும் கூடாது.

இந்த இறுக்கத்தைத் தளர்த்த அண்ணன் கவிக்கோ அவர்கள் சொன்ன யோசனைகள் ஆக்கபூர்வமானவை. அந்த வழிமுறைகளைப் பின்பற்றிவருவதால் மூலமொழியான அரபியின் தனித்தன்மையும் பேணப்படுகிறது; மொழிபெயர்ப்பு மொழியான தமிழின் மரபும் கவனத்தில் கொள்ளப்படுகிறது. இதையடுத்து மொழிபெயர்ப்பு இயல்பானதாகவும் எளிமையாகவும் அதே நேரத்தில் சுவையாகவும் அமைய ஏதுவாகிறது.

அண்ணன் காட்டிய வழியை நாங்களும் உள்வாங்கிக்கொண்டுவிட்டதால் நாளடைவில் திருத்தங்களுக்கு அவசியமில்லாமல்போனது. சிற்சில புதிய திருத்தங்களை மட்டும் ஒரு தாளில் எழுதிக்கொண்டுவந்து அண்ணன் காட்டுவார். தேவையானவற்றை எடுத்துக்கொள்வோம். எனவே, அண்ணனின் மொழிப்புலமை தமிழுக்கு மட்டுமன்றி, திருக்குர்ஆன் மற்றும் நபிமொழி விளக்கங்கள் மக்களைச் சென்றடைவதற்கும் பயன்பட்டிருப்பது நன்றியோடு என்றும் நினைவுகூரத் தக்கது.

அணிந்துரைக்கு அணிசெய்தவர்


மலேசியா ஈப்போவில் நூல் அறிமுக விழாவில் (2009)
ஒரு நூலுக்கு, புகழ்பெற்ற ஒருவர் தரும் அறிமுகம்தான் அணிந்துரை. ரஹ்மத் பதிப்பகத்தின் ஒவ்வொரு வெளியீட்டிலும் அண்ணன் கவிக்கோ அவர்களின் அழகானதோர் அணிந்துரை கட்டாயம் இருக்கும். அணிந்துரை எப்படி எழுத வேண்டும் என்பதைக் கவிக்கோ அவர்களிடம்தான் கற்க வேண்டும். அவரது அணிந்துரையை வாசித்து முடிக்கும்போது, அந்த நூலையே ஒருமுறை வாசித்த திருப்தி ஏற்படும்; நிதானமாக இன்னும் வாசிக்க வேண்டும் என்ற ஆர்வமும் பிறக்கும்.

இறைமறைக்கோ நபிமொழிக்கோ அறிமுகம் அவசியமில்லைதான்; மொழிபெயர்ப்புக்கு அது தேவைதானே! இறைவாக்கையும் நபிமொழியையும் எடுத்துவைத்துக்கொண்டு, தற்கால சூழலோடு பொருத்தி எழுதுவார் பாருங்கள்! திரும்பத் திரும்ப சுவைக்கலாம்! கவிக்கோ அவர்கள் இங்கு எழுதிய அணிந்துரைகள் சில, கட்டுரைகளாக இதழ்களில் வெளிவந்திருக்கின்றன என்றால், அதன் அருமை எத்தகையது என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.

தஃப்சீர் இப்னு கஸீர்திருக்குர்ஆன் விரிவுரை ஆறாவது தொகுதிக்கு அண்ணன் கவிக்கோ வழங்கிய அணிந்துரையில் பின்வருமாறு குறிப்பிடுவார்:

இஸ்லாத்தைப் பற்றிச் சரியாகப் படித்துப் புரிந்துகொள்ளாத சிலர், ‘இஸ்லாம் வாளேந்திய மதம்என்று குற்றம் சுமத்துவதுண்டு. இஸ்லாம் வெறும் ஆன்மிக விஷயங்களைப் பற்றி மட்டும் கூறும் வழிபாட்டு நெறியன்று. அது மனித வாழ்க்கை முழுமைக்குமான வழிகாட்டி. அதில் அரசியலும் உண்டு. இஸ்லாம்தான் முதன்முதலாக இவ்வுலகத்தில் ஆன்மிகத்திற்காக அரசை அமைத்த மார்க்கம்!

ஏக இறைவனை வணங்குதல் என்ற உண்மையான, தூய இறைநெறியைப் பின்பற்றியதற்காக மக்காவின் குறைஷிகள் முஸ்லிம்களைக் கொடுமைப்படுத்தினர். இக்கொடுமைகளிலிருந்து தப்பிக்க அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களோடு மதீனாவுக்குக் குடிபெயர்ந்தார்கள். ஆனால், குறைஷிகள் முஸ்லிம்களை முழுமையாக அழித்துவிடும் நோக்கத்தில் மதீனாவின் மீது படையெடுத்து வந்தனர்.

இந்தச் சூழ்நிலையில்தான் ஏகத்துவச் சுடர் அணையாமல் காக்க ஆயுதம் ஏந்துமாறு இறைவன் முஸ்லிம்களுக்கு ஆணையிடுகின்றான். இது ‘தாக்குதல் போர்’ (Offense) அல்ல; ‘தற்காப்புப் போர்’ (Defence).

முஸ்லிம்கள் வாளேந்த வேண்டிய அவசியம் பற்றிக் குறிப்பிடுகிற இறைவன், போர் தொடுக்கப்பட்டோர் அநீதியிழைக்கப்பட்ட காரணத்தால் (பகைவர்களை எதிர்த்துப் போரிட) அவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது”. (22:39). “நியாயமே இன்றித் தம் இல்லங்களிலிருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். அல்லாஹ்தான் எங்கள் இறைவன் என்று கூறியதைத் தவிர வேறு எதையும் அவர்கள் செய்யவில்லை (22:40) என்று கூறுகிறான்.

இந்தத் தொகுதியில் இடம்பெற்ற இரு திருவசனங்களை எடுத்துக்கொண்டு ஆய்வு நோக்கில் விளக்கம் கூறியிருப்பதுடன், ஒரு முக்கியமான விவாதத்திற்கு இதன்மூலம் முற்றுப்புள்ளியும் வைத்துவிட்டார் கவிக்கோ; அதுவும் சில வரிகளில்.

அவ்வாறே நபிமொழித் தொகுப்புகளில் மூன்றாம் இடம் வகிக்கும்ஜாமிஉத் திர்மிதீமூன்றாவது தொகுதிக்கு கவிக்கோ வழங்கிய ஆய்வுரையிலிருந்து சில துளிகள்:

தர்மம் என்பது பணக்காரர்களாலேயே செய்ய முடியும்; ஏழை எளியவர்களால் இயலாது என்று பொதுவாகக் கருதப்படுகிறது. ஆனால், பெருமானார் (ஸல்) அவர்கள்,

உன் சகோதரனின் முகத்தைப் பார்த்து முறுவலிப்பதும் தர்மம். நன்மை செய்ய ஏவித் தீமையைத் தடுப்பதும் தர்மம். திக்குத் தெரியாமல் தடுமாறும் ஒருவருக்கு வழிகாட்டுவதும் தர்மம். பார்வையற்றவருக்கு உதவுவதும் தர்மம் (நபிமொழி-1879)

என்று கூறுவது வியப்பை அளிக்கிறது. எளியவர்க்கும் இவை எளிதானவைதாமே!

மற்றொரு நபிமொழியைக் குறிப்பிட்டு ஆய்வு செய்கிறார் கவிக்கோ:

உனக்கு நீ எதை விரும்புகிறாயோ அதையே மற்ற மக்களுக்கும் விரும்பு! நீ முஸ்லிமாக இருப்பாய். (நபிமொழி-2227)

இது கவனத்திற்குரிய மிகச் சிறந்த அறிவுரையாகும். முஸ்லிமின் இலக்கணத்திற்கு இதைவிடச் சுருக்கமாக, ஆனால் மிக ஆழமாக வேறோர் அறிவுரை இருப்பது அரிது.

இதில் கவனிக்க வேண்டியதுவியப்புக்குரியது என்னவென்றால், இந்த அறிவுரை இடம்பெறாத சமய நூல்களே இல்லையென்று சொல்லிவிடலாம். யூதர்களின் வேதமாகியதவ்ராத்’ (தோரா), கிறித்தவ வேத நூலாகிய புதிய ஏற்பாடு, பௌத்த வேதமாகிய தம்ம பதம், மகாவீரரின் பொன்மொழிகள், மகாபாரதம், ஜொராஸ்டிர வேதமாகிய ஸென் அவெஸ்தா, திருக்குறள் ஆகிய சமய நூல்கள் அனைத்திலும் இந்த அறிவுரை இடம்பெற்றிருக்கிறது. அவ்வளவு ஏன் மதங்களையே வெறுக்கும் பெரியாரின் பொன்மொழிகளிலும் இது இடம்பெற்றிருக்கிறது.

சோகம் என்னவென்றால், இந்த அறிவுரை தங்கள் வேதத்தில் இருக்கிறது என்பதை அறிந்தவர் சிலரே. அனைத்து மதத்தவரிடமும் இருக்கும் பொதுப்பண்பு. இதை யாருமே பின்பற்றுவதில்லை. அப்படிப் பின்பற்றியிருந்தால், உலகில் மதச் சண்டைகளே இரா. மனிதனுக்கு மனிதன் இழைக்கும் கொடுமைகளும் இரா. உலகம் அமைதிப் பூங்காவாகிவிடும்.

நபிமொழிகளில் கவிக்கோ அவர்களின் நிகழ்காலப் பார்வை மயிர் சிலிர்க்கவைக்கிறதல்லவா?

உரையழகு


அண்ணன் கவிக்கோ அவர்களின் உரைகள் பலவற்றைக் கேட்டிருக்கிறேன். எந்தத் தலைப்பைக் கொடுத்தாலும் அதன்கீழ் பேசுகின்ற ஆற்றல் அவருக்கு உண்டு. அதிலும் மேலோட்டமான அணுகுமுறை இருக்காது. ஆழம் இருக்கும். நாங்கள் மாதாந்தி ஆய்வுரை நிகழ்த்த ஒருமுறை கவிக்கோ அவர்களை அழைத்திருந்தோம். நாங்கள் கொடுத்த தலைப்பு: வீணாகும் மனித வளம்.

சுமார் ஒன்றரை மணி நேரம்நேரமே போனது தெரியாமல்- அருவியாகக் கொட்டியது அவரது உரை. மனிதனுக்குள்ள ஆற்றல்களை வகைப்படுத்தி, அவை எங்கே, எப்படி, ஏன் வீணாகின்றன என்பதை ஓர் ஆய்வுக் கட்டுரைபோல அள்ளித் தெளித்தார்.

அண்ணன் ஒரு கவிஞர்; உரையாளர்; எழுத்தாளர்; நூலாசிரியர்; சமூகவியலாளர்; பேராசிரியர். எல்லாவற்றுக்கும் மேலாகக் குழந்தை மனம் படைத்த ஒரு நல்ல மனிதர். வெளிநாட்டுப் பயணங்களில் கவிக்கோவுடன் நான் பலமுறை சென்றுள்ளேன். என் சுமைகளையும் தன் சுமைகளாகத் தூக்கி வருவார் பாருங்கள்! நமக்குக் கூச்சமாக இருக்கும். வக்ஃப் வாரிய தலைவராக இருந்தபோது சாதாரண கவிக்கோவாகவே நடந்துகொண்டது பலருக்கும் வியப்பைத் தந்தது. வீட்டுக்குச் சென்றால், தாயுள்ளத்தோடு உபசரிக்கும் நற்குணம் எல்லாருக்கும் வந்துவிடுவதில்லை. அவரிடம் உண்டு.

மொத்தத்தில் கவிக்கோ அப்துர் ரஹ்மான் மொழியை மட்டும் வளர்க்கவில்லை; இறைமொழியையும் நபிவழியையும் வளர்த்தவர். நல்ல பண்பாளர். நல்ல மனிதர். வாழ்க அவர் புகழ்!

திருக்குர்ஆன் விரிவுரை (இப்னு கஸீர்) அறிமுக விழாவிற்காக கோலாலம்பூரிலிருந்து பினாங்கு சென்ற வழியில் கவிக்கோ உடன் கான் பாகவி படகில் (2009)

(கவிக்கோ கருவூலம் சிறப்பு மலருக்கு எழுதப்பட்ட கட்டுரை)

Tuesday, October 06, 2015

பிரிட்டனில் இஸ்லாம் பரவுவதற்குக் காரணம் என்ன? - சர்வதேசப் பார்வை



தமிழில்: கான் பாகவி
ன் இஸ்லாம் (on Islam) இணையதளத்தின் பெண் நிருபர் கேத்தரீன் ஷக்டாம் அண்மையில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். ‘பிரிட்டிஷார் இஸ்லாத்தை ஏன் ஏற்கிறார்கள்?’ என்ற தலைப்பில் அவர் குறிப்பிட்டிருந்த தகவல்கள்அல்அலூகாஅரபி இணையதளத்தில் வெளியாகியுள்ளன.

பிரிட்டனின் சமய வரலாற்றில் கிறித்தவம் பிரிக்கவே முடியாத ஓர் அங்கமாக விளங்கிவருகிறது. அதே நேரத்தில், கடந்த சில தசாப்தங்களாக இஸ்லாம் வலுவான போட்டியாக உருவெடுத்துள்ளது. ஒவ்வோராண்டும் ஆயிரக்கணக்கோனோர் இஸ்லாத்தில் இணையும் செய்தி பதிவாகிவருகிறது.

சமய ஒப்பாய்வு மற்றும் ததுதவத் துறைகளில் முனைவர் பட்டம் பெற்றுள்ள அன்னி சிம்ப்ஸன் கூறுகிறார்: எல்லைமீறிய தனிமனித சுதந்திரம், கட்டுப்பாடற்ற நுகர்வு, பண்பாட்டுச் சுதந்திரம் ஆகிய எல்லாம் சேர்ந்து பிரிட்டிஷின் பண்பாட்டு அஸ்திவாரத்தையே ஆட்டம்காணச் செய்துவிட்டன.

கணிசமானோர், இஸ்லாத்தின் தயவில் தங்களுக்கான பாதுகாப்பைத் தேடிக்கொண்டுவிட்டார்கள். தெளிவான நல்வழியைக் கண்டுகொண்டார்கள். ஐரோப்பிய சமூகம் சுயவிருப்பப்படி வாழ்கின்ற சமூகமாக மாறிப்போனது; பல்வேறு தளங்களில் சமயக் கட்டுப்பாட்டை இழந்துபோனது. இந்நிலையில்தான், ‘கடவுள் நம்பிக்கைஎனும் விசாலமான தளத்தில் தங்கள் வாழ்க்கை கட்டடத்தை எழுப்பிக்கொள்ள பலரும் தாயராகிவிட்டனர். இஸ்லாம் இறைநம்பிக்கையை ஊட்டுவதால், பெரும்பாலோரின் வாழ்க்கையின் அச்சாணியாக அது விளங்குகிறது. அதன்மூலமே உலக வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் உண்டு என்பதைக் கண்டறிகிறார்கள்; குழப்பத்திலிருந்து அமைதிக்குத் திரும்புகிறார்கள்.

அரசாங்க அறிக்கையின்படி, 2011இல் பிரிட்டன் குடிமக்களில் 2.7 விழுக்காடாக முஸ்லிம்கள் உள்ளனர். இவ்வாறு மக்கள் இஸ்லாத்தில் இணைவதே, ஆன்மிக வழிட்டல்மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிடிப்பிற்குச் சான்றாக அமைகிறது என்பதைப் பலரும் உணர்கிறார்கள். 2011இல் 'Faith Matters' நிறுவனம் நடத்திய ஆய்வில் உறுதிசெய்யப்பட்ட ஒரு விஷயம்:

இந்தப் புதிய முஸ்லிம்கள், மேற்கத்திய வாழ்க்கை முறையைத் தகர்ப்பதற்கு உறுதி எடுத்துக்கொண்ட ஐந்தாம் படை அல்ல. அது ஒரு தவறான கண்ணோட்டமாகும். மாறாக, இஸ்லாம் என்ற மார்க்கம், மேற்கத்திய வாழ்க்கைச் சூழலோடு பெரும்பாலும் ஒத்துப்போகின்ற, கடைப்பிடிப்பதற்கு ஏற்ற மார்க்கம் என்றே அந்தச் சாமானிய மக்கள் கருதுகின்றனர்.

அல்மதீனாபள்ளிவாசல்

அல்மதீனா பள்ளிவாசல்
 எடுத்துக்காட்டாக, Brighton நகரில் (East Sussex) ‘அல்மதீனாபள்ளிவாசல் இரண்டு மாடிகளில் ஆரம்பமாகக் கட்டப்பட்டது. அதில் வெள்ளிக்கிழமை இரண்டு கட்டங்களாக ஜுமுஆ தொழுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், தொழுகையாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமானதையடுத்து பள்ளிவாசல் மேலும் விரிவாக்கப்பட்டது. அந்நகரில் முஸ்லிம்களின் எண்ணிக்கை நான்கு மடங்காக உயர்ந்துவிட்டதே காரணம்.

தொண்ணூறுகளில் யமன் நாட்டிலிருந்து அமெரிக்கா வந்து குடியேறிய முஸ்லிம் அறிஞர்களில் ஒருவரான ஷைகு ஹுசைன் அலீ பூஃகீத்தி கூறுகிறார்:

தெளிவான இஸ்லாமியச் சட்டத் தொகுப்புகளும் இஸ்லாமியத் தூதுவத்தின் பொதுத் தன்மையும் அதன் ஒளிவுமறைவற்ற போதனைகளும் பிரிட்டனின் இளைய தலைமுறை மத்தியில் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளன. இஸ்லாம் அவர்களின் ஐயங்களுக்குப் பதிலளிக்கிறது; மனஅழுத்தங்களுக்கு ஆறுதல் அளிக்கிறது.

உண்மை என்பது வலுவான ஒன்று. அதன் எதிரொலி மனிதனின் ஆன்மாவில் தர்க்கரீதியாக ஒலித்துக்கொண்டிருக்கும்; சிந்தனையைத் திருப்பிவிடும். புதிய முஸ்லிம்கள் இஸ்லாத்தின் ஆகர்ஷ சக்தியாக விளங்குகிறார்கள். இருளை அகற்றி ஒளியைப் பாய்ச்சுவதில் இஸ்லாம் தொடர் பங்காற்றிவருகிறது.
சிவில் இன்ஜினியர் LISA

Bournemouthவாசியான Lisa Hamilton சிவில் இன்ஜினியர் ஆவார். அவரும் அவர் கணவரும் டுனூசியாவில் விடுமுறையைக் கழித்தபிறகு கிட்டத்தட்ட இஸ்லாத்தை ஏற்கும் நிலைக்கு வந்துவிட்டனர். அதுகுறித்து அவரே விவரிக்கிறார்:

என் குழந்தைப் பருவமும் இளமையைத் தொடும் பருவமும் அமைதியான முறையில் கழிந்தன. பிரிட்டனில் ஒரு சாதாரண குடும்பத்தில் நாத்திகப் பெற்றோருக்குப் பிறந்தவள் நான். இருப்பினும், கடந்த இரண்டாண்டுகளாக நண்பர்களுடன் டுனூசியா சுற்றுப் பயணம் மேற்கொள்ள வேண்டும்; வரலாறு மற்றும் பண்பாடுகள் குறித்துத் தரவாகத் தெரிந்துகொள்ள வேண்டும் எனத் தீர்மானித்தேன்.

கைரவான் நகரின் தெருக்கள்
சுற்றுப் பயணத்தில், பயணத் திட்டத்திற்கு அப்பால் வரலாற்றுச் சிறப்புமிக்ககைரவான்நகரத்தைச் சுற்றிக்காட்ட ஒரு வழிகாட்டி கிடைத்தார். இஸ்லாமிய உலகில் கைரவானுக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் உண்டு; மார்க்கத்தின் மையமாக அது கருதப்படுகிறது. குறிப்பாக, மாபெரும் பள்ளிவாசல் ஒன்று இருப்பதாக அறிந்தோம். அதைக் காணப் புறப்பட்டோம்.

அங்கு LISA முதன்முறையாக பாங்கோசையைக் கேட்கும் அரிய வாய்ப்பைப் பெற்றார். அதுவே, அவரது வாழ்க்கையைத் தலைகீழாகத் திருப்பிப்போட்ட நிகழ்வானது. அவரே சொல்கிறார்.

துனூஷியாவின் கைரவான் நகரம்
கைரவான் மஸ்ஜித்
லுஹருக்குப் பிந்திய நேரத்தில் கைரவான் போய்ச் சேர்ந்தோம். லாட்ஜ் அறையில் தங்கிவிட்டு, அமைதியான மாலைப் பொழுதில் வெளியே புறப்பட்டோம். அங்கு பாங்கொலி கேட்டது. அந்த அமைதியான சூழலில் அந்த இனிய நாதம் நகரத்தின் வான்வெளியெங்கும் அலைமோதியது; ஒவ்வொருவரையும் திரும்பிப் பார்க்கச் செய்தது. இந்தப் பாங்கோசைக்கு ஈடான ஒன்றை அன்றுவரை நான் கேட்டதே இல்லை என்று எண்ணினேன். அதே நேரத்தில், அதில் ஒலித்த சொற்களின் பொருள் குறித்து அந்த நேரம்வரை எனக்கு எந்த  அபிப்பிராயமும் இல்லை. ஆனால், அதன் எழில் என் உள்ளம் முழுவதையும் நிறைத்துவிட்டதை உணர்ந்தேன்.

மறுநாள் கைரவான் பள்ளிவாசலுக்குச் சென்ற போது, அதன் கட்டட அமைப்பும் செதுக்கிய பிரமாண்டமும் இஸ்லாமியச் சின்னங்களும் என்னை மெய்மறக்கச் செய்தன. இஸ்லாத்தின் அழகும் இஸ்லாமியக் கலாசாரமும் என்னை வெகுவாகக் கவர, பிரிட்டன் திரும்பியவுடனேயே இஸ்லாத்தைப் படிக்க வேண்டும் என்ற தீர்மானத்திற்கு வந்தேன்.

இஸ்லாத்தில் LISA

அன்றுமுதல் இஸ்லாம் சுமந்திருக்கிற, அவர் அறிந்திராத உண்மைகளையும் பேரழகையும் LISA அறியத் தொடங்கினார். அமெரிக்கா செல்ல கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அங்கே பல மாதங்கள் இஸ்லாத்தை ஆராய்ந்தார். இரவுகளில் குர்ஆனில் மூழ்கிப்போனார். இறுதியாக, அவர் மனமும் அறிவும் ஒருசேர முடிவு செய்தன. இஸ்லாத்தில் LISA இணைந்தார். பல்லாண்டுகளாக அவர் தேடிக்கொண்டிருந்த நிம்மதியும் புண்ணியமும் கிடைத்துவிட்டதாக உணர்ந்தார்.
LISA சொல்கிறார்:

ஈமான் ஓர் அற்புதமான விஷயம். கொஞ்சத்தைக் கொண்டே திருப்திகொள்ளச் சொல்கிறது. உள்ளத்தில் ஈமான் குடியேறியபின், என் அறிவும் என் புதிய உலகத்தைப் புரிந்துகொள்ளத் தயாராகிவிட்டது.

என்னில் இஸ்லாம் ஒவ்வொன்றையும் ஒழுங்குபடுத்துகிறது. அதன் புத்தொளியால் என் வாழ்வில் ஒவ்வொரு நிலையையும் செதுக்கிவருகிறது. சிலநேரங்களில் அவ்வொளி உச்சகட்டத்தை அடைகிறது. அப்போதும் எனக்கு ஆற்றலையும் மனஅமைதியையும் வழங்குகிறது. இஸ்லாத்திலன்றி வேறெங்கும் அந்த ஆற்றலையோ அமைதியையோ அடைய முடியாது என்பது என் நம்பிக்கை.

இப்போது நான் ஒரு முழுமையான முஸ்லிம் பெண்மணி. சரியாக இஸ்லாத்தைப் புரிந்து செயல்படுகிறேன். இதற்குமுன் இத்தகைய பெரும்பேற்றினை நான் நுகர்ந்ததில்லை. என்னைப் பார்த்து யார் என்ன சொன்னாலும் இஸ்லாம் என்னிலிருந்து பிரிக்க முடியாத ஓர் அடிப்படை அங்கம் என்பதை என் குடும்பத்தார் நன்றாகவே புரிந்துள்ளனர்.

இஸ்லாம் என் எல்லைகளை வரையறுத்துள்ளது.

அது என் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்துகிறது.

எனக்கு நல்வழி காட்டுகிறது.