Friday, February 26, 2016

உலக உலமாக்களின் முன்னோடி இமாம் ஹசனுல் பன்னா (ரஹ்)

- கான் பாகவி

மாம் அஷ்ஷஹீத் ஹசனுல் பன்னா (ரஹ்) அவர்களின் நினைவு நாள் பிப்ரவரி -12. எகிப்து நாட்டில் அல்பஹீரா மாவட்டம் அல்மஹ்மூதிய்யா நகரில் 1906 அக்டோபர் (ஹிஜ்ரீ 1324 ஷஅபான்) மாதம் அன்னார் பிறந்தார்கள். அவர்களின் தந்தை ஷைகு அஹ்மத் அப்துர் ரஹ்மான் அல்பன்னா (ரஹ்) அவர்களும் ஒரு பெரிய மார்க்க அறிஞர். நபிமொழி தொடர்பாகப் பல நூல்கள் எழுதியவர். ‘அல்பத்ஹுர் ரப்பானி லி தர்தீபி முஸ்னதில் இமாம் அஹ்மத்’ எனும் நூல் அவற்றில் பிரபலமானது; முதன்மையானது.

ஹசனுல் பன்னா அவர்கள் சிறுவயதிலேயே மார்க்க சேவையில் ஈடுபட்டார்; ‘தஅவாபணியில் ஆர்வம் காட்டினார். மத்ரசாவில் சகமாணவர்களுடன் சேர்ந்து ‘மார்க்கப் பண்பியல் மன்றம்’ ஒன்றைத் தொடங்கினார். பின்னர் ‘தீமைகள் ஒழிப்பு மன்றம்’ ஒன்றைத் தொடங்கினார். 1919இல் தமது 12ஆவது வயதில் நடந்த புரட்சியிலும் பங்கு பற்றினார்.

1927ஆம் ஆண்டு ‘தாருல் உலூம்’ கல்லூரியில் பயின்று முதல் மாணவராகத் தேர்வாகிய ஹசனுல் பன்னா அவர்கள், ‘அல்இஸ்மாயீலிய்யா’ மத்ரசாவில் ஆசிரியராகப் பணியைத் தொடங்கினார். 1928 மார்ச் மாதம் ஆறு பேருடன் சேர்ந்து ‘இக்வானுல் முஸ்லிமீன்’ (முஸ்லிம் சகோதரர்கள்) எனும் சீர்திருத்த மற்றும் விழிப்புணர்வு சங்கத்தை ஆரம்பித்தார். முஸ்லிம் சமூகத்தை அரித்துக்கொண்டிருந்த உட்பூசல்களைக் களைந்து, சகோதரத்துவத்தை நிலைநாட்டுவதில் ஆரம்பத்திலிருந்தே அதிகக் கவனம் செலுத்திவந்தார்.

1932ஆம் ஆண்டில் கெய்ரோ குடிபெயர்ந்த இமாம் ஹசனுல் பன்னா அவர்கள், அங்கே பரப்புரைக்கான பொது மையம் ஒன்றை நிறுவினார். எகிப்தில் மட்டுமன்றி இதர முஸ்லிம் நாடுகளுக்கும் அவரது பிரசாரம் பரவியது. இதனால், அவர் அதிகமாகப் பயணத்திலேயே நாட்களைக் கழிக்க வேண்டியதாயிற்று. அன்னாரின் மனத்தூய்மையுடன் கூடிய சொற்பொழிவுகள் மக்களின் மனதைக் கவர்ந்ததில் வியப்பில்லை. ஆனால், நல்லது நடந்தால் ஷைத்தானுக்குப் பிடிக்காது.

வீர மரணம்

1948 டிசம்பர் 9ஆம் தேதி, எகிப்து ஆட்சித் தலைவர் கலீஃபா மஹ்மூத் ஃபஹ்மீ அந்நக்ராஷி, இக்வானுல் முஸ்லிமீன் அமைப்பிற்குத் தடை விதித்ததுடன், ஜமாஅத்தின் சொத்துகளைப் பறிமுதல் செய்யவும் அங்கத்தினர்களைக் கைது செய்யவும் உத்தரவிட்டார். தம் சகோதரர்களுடன் கைதாக ஹசனுல் பன்னா அவர்கள் முன்வந்தும் அரசு அனுமதிக்கவில்லை.

சில நாட்களுக்குப்பின், இமாம் ஹசனுல் பன்னா அவர்களின் கார் பறிமுதல் செய்யப்பட்டது. ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். அனுமதிக்கப்பட்டிருந்த தற்பாதுகாப்பு ஆயுதங்களையும் திரும்பப் பெற்றார்கள். உதவியாக இருந்த அவருடைய சொந்தச் சகோதரர்கள் இருவர் பிடிக்கப்பட்டார்கள்.

1949 பிப்ரவரி 12ஆம் நாள் முஸ்லிம் இளைஞர்கள் மன்றத்திற்கு முன்னால் இமாம் அவர்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அக்குளுக்குக் கீழே குண்டு பாய்ந்த்து. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இமாம் அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், “அபாய கட்டத்தில் இல்லை; காப்பாற்றிவிடலாம்என்றே அறிவித்தார்கள். ஆனால், அரசின் சதியால் மருத்துவமனைக்குள் இமாம் கொல்லப்பட்டார்கள்.

இமாம் ஹசனுல் பன்னா (ரஹ்) அவர்களின் ஜனாஸாவில் ஆண்கள் யாரும் கலந்துகொள்ளக் கூடாது என்று அரசாங்கம் தடை விதித்தது. எனவே, பெண்கள்தான் அன்னாரின் ஜனாஸாவைத் தூக்கிச் சென்றார்கள். ஆனால், கிப்தியர்களில் ஒருவரான உபைத் பாஷா அரசாங்கத்தைக் கண்டித்ததுடன், பன்னா அவர்களின் குடும்பத்தாருடன் ஜனாஸாவில் கலந்துகொண்டாராம்! இது அன்னாரின் சுருக்கமான வரலாறு.

அறிஞர் பன்னாவின் பத்துக் கட்டளைகள்

  1. பாங்கொலி கேட்டவுடன் நீ எங்கிருந்தாலும் தொழுகைக்குச் செல்!


  2. திருக்குர்ஆனை, ஒன்று ஓத வேண்டும்! அல்லது வாசித்துணர வேண்டும்! அல்லது குர்ஆன் ஓதப்படுவதைக் கேட்க வேண்டும்! அல்லது அல்லாஹ்வை நினைவுகூர வேண்டும்! பயனில்லாத வகையில் ஒரு நிமிடத்தைக்கூடச் செலவிடாதே!


  3. தெளிவான அரபியில் பேச முயல வேண்டும்! அது இஸ்லாமிய அடையாளங்களில் ஒன்றாகும்.


  4. எந்த விஷயமாக இருந்தாலும் தர்க்கம் செய்துகொண்டே இராதே! தர்க்கம் நன்மையைத் தருவதில்லை.


  5. அதிகமாக சிரிக்காதே! அல்லாஹ்வுடன் தொடர்புள்ள உள்ளம் அமைதியாகவும் கண்ணியமாகவும்தான் இருக்கும்.


  6. கேலி செய்யாதே! விழிப்புள்ள சமுதாயம், வீரியத்தை மட்டுமே அறிந்த்தாக இருக்கும்!


  7. தேவையைவிடக் கூடுதலாகக் குரலை உயர்த்தாதே! அது, பதற்றத்தையும் தொல்லையையும்தான் தரும்.


  8. அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசாதே! யாரையும் காயப்படுத்தாதே! நல்லதையே பேசு!


  9. நீ சந்திக்க வேண்டிய சகோதரர்களைப் பற்றி அறிந்துவைத்திருக்க வேண்டும்! அவருக்கு உன்னிடம் தேவையில்லாமல் இருக்கலாம்! ஆனால், ‘தஅவாவின் அடிப்படை என்ன தெரியுமா? அன்பும் அறிமுகமும்தான்.


  10. கடமைகள் காலத்தைவிட அதிகம். எனவே உனக்கு அலுவல் இருந்தாலும் பிறர் தமது நேரத்தால் பயனடைய உதவு! (என்ன அருமையான கட்டளைகள்!)


முக்கியமான இருபது அடிப்படைகள்

1. இஸ்லாம் என்பது, வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய அமைப்பாகும். இஸ்லாம் ஒரு நாடு; தேசம். அல்லது அரசாங்கம்; சமுதாயம். அதுவே நற்பண்பு; ஆற்றல். அல்லது கருணை; நீதி. அதுவே கலாசாரம்; சட்டம். அல்லது அறிவு; தீர்ப்பு. அதுவே பொருள்; செல்வம். அல்லது உழைப்பு; தன்னிறைவு. அதுவே போராட்டம்; அழைப்பு. அல்லது பாதுகாப்புப் படை; சிந்தனை. மேலும், அதுவே உண்மையான நம்பிக்கை; சரியான வழிபாடு. இவ்விரு பார்வைகளும் சரிக்குச் சமமாக ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகும்.
2. திருக்குர்ஆனும் தூய நபிவழியும்தான் ஒவ்வொரு முஸ்லிமின் பற்றுக்கோடாகும். இஸ்லாமிய விதிகளை அனைவராலும் அறிய முடியும். சிரமமோ சுமையோ இல்லாமல், அரபு மொழி விதிகளுக்கேற்ப குர்ஆனை அறியலாம். நபிமொழி அறிவிப்பாளர்களின் நம்பகத் தன்மையைக் கொண்டு தூய நபிவழியை அறிந்துகொள்ள முடியும்.
3. மெய்யான இறைநம்பிக்கை, ஏற்கப்பட்ட வழிபாடு, மனப் போராட்டம் ஆகியவற்றுக்கு ஓர் ஒளி உண்டு; சுவையும் உண்டு. அல்லாஹ், தான் நாடும் அடியார்களின் உள்ளத்தில் அந்த ஒளியையும் சுவையையும் போடுவான். அதே நேரத்தில், அகத்தூண்டல், எண்ணங்கள், கனவுகளெல்லாம் மார்க்கச் சட்டத்தின் அடிப்படைகளுக்கும் மூலாதாரங்களுக்கும் முரண்பட்டால், அவை ஏற்கப்படா. 

4. சோதிடம், ஆரூடம், பெயர் ராசி, மணல் ராசி, நாள் நட்சத்திரம், குறி பார்த்தல், கயிறு கட்டுதல், மந்திரித்தல் போன்றவை எல்லாம் நிராகரிக்கப்படும்; குர்ஆன் வசனங்கள் மற்றும் அறிவிக்கப்பட்ட துஆக்களைக் கொண்டு ஓதிப்பார்த்தல் தவிர மற்றவற்றுக்கெதிராகப் பிரசாரம் செய்து முஸ்லிம்களைக் காக்க வேண்டும். 

5. குர்ஆனிலோ ஹதீஸிலோ நேரடியாக்க் குறிப்பு இல்லாத விஷயங்களிளோ, பல கருத்துகளுக்கு இடமளிக்கும் ஒன்றிலோ, பொது நன்மைகள் தொடர்பானதிலோ ஆட்சித் தலைவர், அல்லது அவரது பிரிதிநிதியின் கருத்தை ஏற்றுச் செயல்பட வேண்டும். ஆயினும் ஷரீஅத்தின் அடிப்படை பொது  விதிகளுக்கு அது முரண்பட்டதாக இருக்கலாகாது. இத்தகைய சட்டங்கள், காலம், நேரம், வழக்கு, பழக்கம் ஆகியவற்றுக்கேற்ப மாறுபடலாம். வழிபாடுகளைப் பொறுத்தவரை அடிபணிதலும் வணக்கமும்தான் நோக்கமே தவிர, சொற்களின் பொருள்கள் அல்ல; அவ்வாறே, பழக்கவழக்கங்களைப் பொறுத்தமட்டில் நோக்கமும் காரணங்களும்தான் முக்கியம்.

6. ஒருவர் தம்மைப் பற்றித் தாமே அளிக்கும் தன்னிலை விளக்கமே அவர் தொடர்பாக முடிவெடுப்பதில் கருத்தில் கொள்ளப்படும். குர்ஆனுக்கும் ஹதீஸிற்கும் ஒத்ததாக இருக்கும் முன்னோர்களின் கருத்துகளை ஏற்போம்; இல்லையென்றால், இறைவேதத்திற்கும் இறைத்தூதரின் வழிக்குமே முன்னுரிமை அளிப்போம். அதே நேரத்தில், கருத்து வேறுபாடுள்ள விஷயங்களில் தனிமனிதர்களைத் தாக்கவோ காயப்படுத்தவோ மாட்டோம். அவர்களின் எண்ணம் என்ன என்பதை அல்லாஹ் அறிவான் என ஒதுங்கிவிடுவோம். 

7. சட்டப் பிரிவுகளில் சுயமாக ஆதாரம் தேடி மூலாதாரஙகளை அறியும் தகுதி யாருக்கு இல்லையோ அவர்கள், ஓர் இமாமின் வழியைப் பின்பற்றுவதைத் தவிர வேறு வழி கிடையாது. அத்தோடு, தாம் பின்பற்றும் அந்த வழிக்கான ஆதாரங்களை அறிய இயன்ற வரை அவர் முயற்சி செய்ய வேண்டும். எவ்வழி மிகச் சரியானது என்பதற்கு எப்போது ஆதாரம் கிடைத்தாலும் அதை ஏற்றுச் செயல்படுவதில் தவறில்லை. கல்வியாளர்களாக இருப்பவர்கள், ஆய்வு செய்யும் தகுதியை வளர்த்துக்கொண்டு, குறையை அகற்ற முன்வர வேண்டும். 

8. சட்டப் பிரிவுகளில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு, மார்க்கத்தில் பிரிவினையாக மாற இடளித்துவிடக் கூடாது; பகை, குரோதம் ஆகிய மோசமான முடிவுகளுக்கு அவை காரணங்களாக அமைய அனுமதித்துவிடக் கூடாது. ஆய்வு செய்யும் ஒவ்வொரு முஜ்தஹிதுக்கும் நற்கூலி உண்டு. இறையன்பு, உண்மைத் தேடல் ஆகிய நோக்கில் இருக்கும்போது, கருத்து வேறுபாடு தடையாக இருந்துவிடக் கூடாது. அது தர்க்கத்திற்கோ பிடிவாதத்திற்கோ கொண்டுசென்றுவிடக் கூடாது. 

9. அமலுக்கு அடிப்படையாக இல்லாத எந்தக் கருத்து வேறுபாட்டிலும் சிரத்தை காட்டுவது மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட செயலாகும். நிஜத்தில்  நிகழாத, வெறும் ஊகத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட சட்டப் பிரிவுகள் இந்த வகையில் அடங்கும். அவ்வாறே, இதுவரை அறுதியிட்டுச் சொல்ல இயலாத திருவசனங்களின் பொருள்களிலும் அதிகக் கவனம் செலுத்த வேண்டியதில்லை. அவ்வாறே, நபித்தோழர்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வு காட்டும் விவாதம், அவர்களிடையே எழுந்த சர்ச்சைகளில் மூக்கை நுழைப்பது ஆகியவை கைவிடப்பட வேண்டும். நபித்தோழர்களைப் பொறுத்தவரை, ஒவ்வொருவருக்கும் நபியின் தோழமை, எண்ணத்திற்கான நற்கூலி உண்டு. 

10. உயர்ந்தோன் அல்லாஹ்வை அறிவது, அவனது ஒருமை, பரிசுத்த தன்மை ஆகியவையே இஸ்லாத்தின் நம்பிக்கைகளில் உன்னதமான கோட்பாடுகளாகும். இறைப் பண்புகள் (ஸிஃபாத்) தொடர்பாக வந்துள்ள குர்ஆன் வசனங்களையும் ஆதாரபூர்வமான நபிமொழிகளையும் அப்படியே ஏற்க வேண்டும். குறுக்கு விளக்கம் அளிப்பதோ முற்றிலும் ஒதுக்கிவிடுவதோ கூடாது. இது தொடர்பாக வந்துள்ள அறிஞர்களிடையிலான கருத்து வேறுபாடுகளில் நாம் தலையிட வேண்டாம்! 

11. இறைமார்க்கத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள நவீன அனுஷ்டானங்கள் அடிப்படையற்றவை ஆகும். மக்கள் தம் விருப்பத்திற்கேற்ப கூட்டியோ குறைத்தோ இவற்றை உருவாக்கி, நன்மைகளென நம்பிவிட்டனர். இந்தத் தவறான வழிமுறைகளை எதிர்த்துப் போராடுவதும் அவற்றை ஒழிப்பதும் கடமையாகும். அதே நேரத்தில், அவற்றைவிட மோசமான ஒன்றுக்குத் தள்ளிவிடாத வழிகளில்தான் இந்தப் போராட்டம் அமைய வேண்டும். 

12. பொதுவாகச் சொல்லப்பட்டுள்ள வழிபாடுகளில் புது இணைப்புகள், குறைப்புகள், கடைப்பிடித்தல் ஆகியவற்றில் கருத்து வேறுபாடு காணப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் தத்தமது கருத்தைச் சொல்ல உரிமையுண்டு. எந்த வகையிலாவது ஆதாரத்தைக் கொண்டு உண்மை வெளிப்பட்டால், நல்லதுதான். 

13. நல்லோர்மீது அன்பு கொள்வதும் அவர்களைக் கண்ணியப்படுத்துவதும் அவர்கள் புரிந்த நல்லறங்களைச் சொல்லிப் பாராட்டுவதும் அல்லாஹ்வின் நெருக்கத்தைத் தரும் செயல்கள்தான். இறைநம்பிக்கை கொண்டு, இறையச்சத்தோடு நடந்தவர்களே இறைநேசர்கள். இதன்படி, அவர்களுக்கு மார்க்கரீதியாக மரியாதை உண்டு. அதே நேரத்தில் (அல்லாஹ்வின் நாட்டமின்றி) அவர்கள் தம் ஜீவியத்திலோ இறந்தபிறகோ தாமே நன்மையோ தீமையோ செய்துகொள்ள முடியாது எனும்போது, பிறருக்கு எவ்வாறு அருள் பாலிப்பார்கள்? 

14. அடக்கத் தலங்களை (கப்றுகள்) ஸியாரத் செய்வதுஅதற்கான அறியப்பட்ட முறையில்- சுன்னத்தாகும். அதே நேரத்தில், அடக்கப்பட்டவர்களிடம் உதவி தேடுவது, அதற்காக அவர்களை அழைப்பது, உடனுக்குடனோ தாமதமாகவோ தேவைகளை நிறைவேற்றுமாறு கோருவது, அவர்களுக்காக நேர்த்திக்கடன் செய்வது, கட்டடம் எழுப்புவது, திரைபோட்டு மறைப்பது, விளக்குகளால் அலங்கரிப்பது, தொட்டு முத்தமிடுவது, அல்லாஹ் அல்லாதவர் பெயரில் சத்தியம் செய்வது போன்ற பித்அத்கள் பெரும் பாவங்களாகும். இவற்றுக்கெதிராகப் பிரசாரம் செய்வது கடமையாகும். இவற்றை அனுமதிப்பதற்காகச் சாக்குப்போக்குகளோ மாற்று விளக்கங்களோ சொல்லமாட்டோம். 

15. யாரையும்வசீலாவாக்கி அல்லாஹ்விடம் துஆ செய்வது, துஆவின் நடைமுறையில் ஏற்பட்ட சட்டப்பிரிவு தொடர்பான கருத்துவேறுபாடாக இருக்குமே தவிர, கொள்கைப் பிரிவில் இது சேராது. 

16. மக்களின் தவறான சொல்வழக்கை வைத்து ஷரீஆவின் சொற்களுக்கான உண்மைப் பொருள்களை மாற்றுவது கூடாது. மாறாக, ஷரீஆவின் சொற்கள் குறிக்கும் பொருளின் எல்லையை உறுதிப்படுத்துவதும் அதையறிந்து செயல்படுத்துவதும் அவசியமாகும். மார்க்கத்திலாகட்டும்! உலகவியலில் ஆகட்டும்! சொல் மோசடியில் ஈடுபடுவதிலிருந்து தவிர்ந்துகொள்ள வேண்டும். கவனிப்பு, பெயர்களுக்கு அல்ல; பொருட்களுக்குத்தான். 

17. கொள்கைதான் செயலின் அடிப்படை; உள்ளத்தின் நடவடிக்கையே உறுப்புகளின் செயலைவிட முக்கியம். இரண்டிலும் நிறைவை அடைவதே ஷரீஆவின் நோக்கம். இரண்டின் தரம் வேறுபடலாம். 

18. இஸ்லாம் அறிவுக்குச் சுதந்திரமளிக்கிறது; பிரபஞ்சத்தை ஆய்வு செய்யுமாறு தூண்டுகிறது; அறிவு மற்றும் அறிஞர்களின் தகுதியை உயத்தியிருக்கிறது; எல்லாவற்றிலும் நல்லதையும் பயனுள்ளதையும் வரவேற்கிறது. ஞானம் எங்கு கிடைத்தாலும் அதை இறைநம்பிக்கையாளர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 

19. ஆய்வுக்குரிய விஷயங்களில் ஒருவரின் பார்வை மற்றவரின் பார்வைக்கு வேறுபடலாம். ஆனால், உறுதி செய்யப்பட்ட விஷயங்களில் கருத்து வேறுபாட்டிற்கு இடமில்லை. சரியான அறிவியல் உண்மை எதுவும் உறுதி செய்யப்பட்ட ஷரீஅத் விதியோடு மோதுவதற்கு வாய்ப்பில்லை. அறிவியல் கருத்து, மார்க்கவியல் கருத்து ஆகிய இரண்டில் எது ஊகக்கருத்தாக உள்ளதோ அது, உறுதி செய்யப்பட்ட மற்றொன்றோடு இணங்கிப்போகும் வகையில் விளக்கம் அளிக்கப்பட வேண்டும். இரண்டுமே ஊகங்களாக இருப்பின், மார்க்கவியல் ஊகத்தையே பின்பற்ற வேண்டும். 

20. கலிமா சொல்லி, அதற்கேற்ப செயல்பட்டு, கட்டாயக் கடமைகளை நிறைவேற்றிவரும் எந்த முஸ்லிமையும்அவர் சொன்ன ஒரு கருத்துக்காகவோ அவர் செய்த ஒரு பாவத்திற்காகவோ- இறைமறுப்பாளர் (காஃபிர்) என்று நாம் சொல்லமாட்டோம். அவர் இறைமறுப்பு சொல்லைச் சொன்னாலோ, மார்க்கத்தில் கட்டாயமாக அறியப்பட்ட ஒன்றை மறுத்தாலோ, குர்ஆனின் வெளிப்படையை ஏற்க மறுத்தாலோ, அல்லது எந்த வகையிலும் அரபி மொழி வழக்கத்திற்குப் பொருந்தாத விளக்கமளித்தாலோ, இறைமறுப்பைத் தவிர வேறொன்றுக்கு இடமளிக்காத வகையில் ஒன்றைச் செய்தாலோ தவிர காஃபிர்எனத் தீர்மானிக்கமாட்டோம்.

இமாம் ஹசனுல் பன்னா (ரஹ்) அவர்கள் மார்க்கத்திற்காகவும் சமுதாயத்திற்காகவும் அரும்பாடுபட்டு, தம் இன்னுயிரை அதற்காகவே அர்ப்பணித்து வீரமரணமடைந்த பேரறிஞர் ஆவார். சின்னச் சின்ன விஷயங்களுக்காகப் பிளவுபட்டு, உம்மத்தின் ஆற்றல் சிதறடிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்து, ஐக்கியப்படுத்த உழைத்த உத்தமர் ஆவார். அன்னாருடைய கருத்துகளும் வழிகாட்டல்களும் இன்றைய இஸ்லாமிய சமுதாயத்திற்கு ஆக்கபூர்வமான, அவசியமான போதனைகளாகும். அன்னாருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!

Wednesday, February 03, 2016

திருமண ஆலோசனை கவுன்சிலிங் பயிற்றுநருக்கான பயிற்சி முகாம்


-கான் பாகவி

டந்த ஜனவரி 30,31 ஆகிய இரு தினங்கள் சென்னை ஆயிரம் விளக்கு ஆஷா நிவாசில் திருமண ஆலோசனை கவுன்சிலிங் பயிற்றுநர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. ஆண் மற்றும் பெண் பயிற்றுநர்கள் சுமார் 100 பேர் முகாமில் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

இளம் ஆலிம்கள், வழக்குரைஞர்கள், பேராசிரியர்கள், இறையில்லப் பொறுப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பல்வேறு துறையினர் ஆர்வத்தோடு முகாமில் பங்கேற்றனர். சென்னையிலிருந்து மட்டுமன்றி திருச்சி, சேலம் போன்ற வெளிமாவட்டங்களிலிருந்தும் பயிற்றுநர்கள் கலந்துகொண்டது இந்த முகாமின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைந்தது.

முதல்நாள் காலை 9.00 மணியிலிருந்து 10.00 மணிவரை வருகையாளர்களின் பெயர் பதிவு முறைப்படி நடந்தது. பத்து மணிக்கு மௌலவி, . முஹம்மது கான் பாகவி அனைவரையும் வரவேற்று, இப்பயிற்சி முகாமின் அவசியம் குறித்து விவரித்தார். இந்த இயந்திர உலகில் சிதைந்துபோய்க்கொண்டிருக்கும் குடும்பப் பாரம்பரியத்தை மீட்டெடுக்க வேண்டும்; அவசர கதியில் இல்லறத்தின் மாண்பு அழிந்துவருவதைத் தடுத்து நிறுத்தியாக வேண்டும் என்று வலியுறுத்திய கான் பாகவி, அதற்கான தீர்வையும் எடுத்துரைத்தார்.

மணமுடிப்பதற்குமுன் திருமணம், கணவன்-மனைவி கடமைகள் மற்றும் உரிமைகள், இல்லற வாழ்வில் சந்திக்கும் பிரச்சினைகளும் அவற்றைச் சுமுகமாக எதிர்கொள்ளும் வழிமுறைகளும், மணவிலக்கால் ஏற்படும் இழப்புகள், மணவிலக்கைத் தவிர்க்கும் வழிமுறைகள் முதலான விஷயங்களை மணமக்கள் அறிந்துகொள்ள வேண்டும். அவ்வாறு அறியச் செய்வதற்கான ஒரு வகுப்புதான் ஆலோசனை கவுன்சிலிங். அந்த வகுப்பை நடத்த மார்க்க அறிஞர்கள், சட்ட நிபுணர்கள், உளவியல் அறிஞர்கள் முதலானோரின் உழைப்பு தேவை. இந்தப் பயிற்றுநர்களை உருவாக்கவே இந்த முகாம் -என்று அவர் விளக்கினார்.

மௌலானா, ஃபய்யாஸ் ஆலம் உமரீ
அதையடுத்து மௌலானா, ஃபய்யாஸ் ஆலம் உமரி அவர்கள் உருதுமொழியில் சுருக்கமாக அறிமுக உரையாற்றினர். நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய வழக்குரைஞர் முனீருத்தீன் ஷரீஃப், அறிமுக உரையைத் தமிழில் மொழிபெயர்த்தார்.

முதல் அமர்வு
மௌலவி, சா. யூசுஃப் சித்தீக் மிஸ்பாஹி
தேநீர் இடைவேளைக்குப்பின், முதல் அமர்வு தொடங்கியது. மௌலவி, யூசுப் சித்தீக் மிஸ்பாஹி, “திருமணம் என்றால் என்ன? திருமணம் ஏன்? காதலும் காதல் திருமணமும்; துணையைத் தேர்வு செய்யும் முறை என்ன?” ஆகிய அடிப்படை விஷயங்களை விவரமாக எடுத்துச்சொன்னார். நெறியாளர் டாக்டர் அம்ஜத் கான் இதற்கு முன்னுரையாக முதலில் பேசினார்.

மௌலவி, நூஹ் மஹ்ளரி
கணவன் மற்றும் மனைவியின் கடமைகள் என்ன? உரிமைகள் என்ன? என்பதை மௌலவி, நூஹ் மஹ்ளரி சுவைபட எடுத்துரைத்தார். இத்தலைப்புக்கு நெறியாளராக இருந்த ஃபாத்திமா முஸஃப்பர் தம் கருத்துகளைச் சுருக்கமாகப் பதிவு செய்தார்.

இரண்டாவது அமர்வில் மௌலவி, முஜீபுர் ரஹ்மான் உமரி, மஹ்ர் மற்றும் வரதட்சிணை, திருமணத்தில் பெற்றோரின் பங்கு ஆகிய கருத்துகளை பவர்பாயிண்ட் மூலம் விளக்கினார். இதற்கு நெறியாளராகப் பொறியாளர் P.K. ஷப்பீர் அஹ்மத் பொறுப்பேற்று, தம் கருத்துகளைப் பதிவு செய்தார்.


மௌலவி, மன்சூர் காஷிஃபி, எளிமையான திருமணம் குறித்தும் மணவிருந்து (வலீமா) குறித்தும் வகுப்பெடுத்தார். சமுதாயத்தின் அவலங்களை அவர் பட்டியலிட்டபோது அனைவரின் கண்களிலிருந்தும் நீர் வழிந்தது. அழுகையைக் கட்டுப்படுத்த சிரமப்பட்டனர். நெறியாளராக இருந்த குர்ஷித் பேகம் ஏற்கெனவே கவுன்சிலிங் நடத்திவருபவர். தம் அனுபவங்களை உருக்கமாக விவரித்தார்.

இரண்டாம் நாள்


காலையில் தொடங்கிய முதல் அமர்வில் சகோதரர் S.K. ஷமீமுல் இஸ்லாம் திருமண குத்பா உரையின் மகத்துவத்தை விளக்கியதுடன், திருமணங்களில் காணப்படும் ஆடம்பரம், சடங்குகள் குறித்து விவரித்தார். இறையச்சம் (தக்வா) ஒன்றுதான் குடும்பங்களில் நடக்கும் தவறுகளையும் அக்கிரமங்களையும் தடுக்கவல்லது; அதனால்தான், இறையச்சத்தை வலியுறுத்தும் திருவசனங்களை நிகாஹ் குத்பாவில் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள் என விளக்கினார்.

இதற்கு
நெறியாளராக இருந்த மௌலானா, ஃபய்யாஸ் ஆலம் உமரி, திருமண உரை, திருமணத்தின் வாழ்த்து மற்றும் பிரார்த்தனை ஆகியவற்றை விரிவாக எடுத்துரைத்தார்.

மௌலவி, முஜீபுர் ரஹ்மான் உமரி (மௌலவி, இல்யாஸ் ரியாஜி வெளியூர் சென்றுவிட்டதால்) மீண்டும் வகுப்பெடுத்தார். உடலுறவுச் சட்டங்கள், உணர்வுகளுக்கு மதிப்பளித்தல் ஆகியன குறித்து உமரி விளக்கினார்.

இந்த
வகுப்பின் நெறியாளர் டாக்டர் குர்ஷித் நசீர், கவுன்சிலிங் துறையில் புகழ்பெற்ற உளவியல் நிபுணர். இவர் பவர்பாயிண்ட் மூலம் நீண்ட நேரம் கவுன்சிலர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய நடைமுறைகளை எடுத்துச்சொன்னார். இத்துறையில் தாம், எதிர்கொண்ட சிக்கல்களைவும் அவற்றைச் சமாளிக்கும் முறைகளையும் அவர் எடுத்துரைத்தவிதம் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

ரண்டாவது அமர்வில் மௌலவி, கான் பாகவி மணவிலக்கு (தலாக்) தொடர்பாகப் பாடம் எடுத்தார். சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் 4 குடும்பநல நீதிமன்றங்கள் உள்ளன. 2013 ஆகஸ்டுவரை 15,324 குடும்ப வழக்குகள் நிலுவையில் இருந்தன. 2016 ஜனவரியில் 8 ஆயிரம் மணவிலக்கு வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே, மேலும் 4 குடும்பநல நீதிமன்றங்கள் தேவைப்படுகின்றன.

புதிதாகத்
திருமணமாகும் தம்பதியரில் 10 விழுக்காட்டினர் 6 மாதத்திற்குள் விவாகரத்து வழக்கு தொடுக்கின்றனர். காதலித்தபோது பார்த்த காதலனின் பிம்பம் கல்யாணத்திற்குப்பின் நிஜ வாழ்க்கையில் மாயமாகிவிடுகிறதாம்! பெண்களுக்குக் கல்வி, வேலை, கைநிறைய சம்பளம் ஆகியவை கிடைத்துவிடும் துணிச்சலில் விவாகரத்திற்குச் சர்வசாதாரணமாக முனைகின்றனர்.

இதுவெல்லாம்
, தமிழகப் பெண் வழக்கறிஞர் அமைப்பின் தலைவியான சாந்தகுமாரி அண்மையில் கொடுத்த செய்திகளாகும் எனக் குறிப்பிட்டார். தம்பதியரிடையே எழும் கருத்துமோதல்களும் முரண்பாடுகளும் மணவிலக்கைத் தவிர்த்தல், மணவிலக்கின் பின்விளைவுகள், மணவிலக்கின் சரியான -சுன்னத்தான- நடைமுறை ஆகியவை குறித்து பவர்பாயிண்டுடன் விளக்கினார் கான் பாகவி.


இறுதியில், கலந்துரையாடல் நடந்தது. முகாமில் கலந்துகொண்ட பயிற்றுநர்கள், திருமண ஆலோசனை கவுன்சிலிங் நடைமுறையின் அவசியத்தை வழிமொழிந்தனர். சிலர் இதைக் கட்டாயமாக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்தனர். பலரும் தங்கள் பகுதிகளில் கவுன்சிலிங் முறையை நடத்துவோம் என்று உறுதியளித்தனர்.

வரதட்சிணைக்கு
எதிராகவும் ஆண்கள் தலாக் உரிமையை முறைதவறி பயன்படுத்துவதாகவும் பெண் பயிற்றுநர்கள் தம் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். அதே நேரத்தில், ‘குலாஎனும் உரிமையைப் பெண்கள் சின்னச்சின்ன காரணங்களுக்காகவெல்லாம் பயன்டுத்தத் தொடங்கிவிட்டனர் என்ற கசப்பான உண்மையையும் பெண் பயிற்றுநர்கள் வெளிப்படுத்தத் தவறவில்லை.

நீங்களும் செயல்படுத்தலாம்!

இனி, ஆங்காங்கே தத்தமது ஊர்களிலும் மஹல்லாக்களிலும் திருமண ஆலோசனை கவுன்சிலிங் வகுப்புகளை ஆர்வலர்கள் நடத்த முன்வர வேண்டும். இனியும் தாமதித்து, நம் குடும்பங்கள் சிதைவதை அனுமதிக்கக் கூடாது. இறைமறையும் நபிவழியும் காட்டியுள்ள இல்லற இலக்கணங்களை அனைவரும் பின்பற்றி நடப்பதை உறுதி செய்ய வேண்டும்.

பயிற்சி
முகாமில் கலந்துகொள்ளாத தகுதிமிக்க ஆலிம்கள், பேராசிரியர்கள், வழக்குரைஞர்கள், உளவியல் படித்தவர்கள், ஏற்கெனவே கவுன்சிலிங் நடத்திவருபவர்கள் ஆகியோரை உங்கள் பகுதியில் ஒன்றிணையுங்கள். கவலையைப் பகிர்ந்துகொள்ளுங்கள். அவசியத்தை உணர்த்துங்கள். வழிகாட்டல் தேவைப்படின், கீழ்க்கண்ட எண்களுடன் தொடர்புகொள்ளுங்கள்!

இதற்குப்
பெரிய பொருட்செலவோ இடப் பிரச்சினையோ இராது. உள்ளூர் பள்ளிவாசலின் ஒரு ஓரத்தில், அல்லது குர்ஆன் மதரசாவில், அல்லது ஏதேனும் ஒரு அரங்கத்தில் இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தை முதலில் நடத்துங்கள். வட்டாரத்தில் புதிதாகத் திருமணம் செய்யவிருக்கும் ஜோடிகளையும் அவர்களின் பெற்றோர்களையும் அணுகி, மணமக்களும் மணமக்களின் பெற்றோரும் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யுங்கள்.


மஹல்லா இமாம், பள்ளிவாசல் நிர்வாகிகள் ஆகியோரைச் சந்தித்து, கவுன்சிலிங்கின் அவசியத்தை எடுத்துரைத்து, அவர்களின் இசைவையும் ஒத்துழைப்பையும் பெற ஆவன செய்யுங்கள்! பிறர் குடும்பத்தில் அமைதி நிலவ நீங்கள் பாடுபட்டால், உங்கள் குடும்பத்தை அல்லாஹ் காப்பான். மறக்க வேண்டாம்! தாமதிக்க வேண்டாம்! அலட்சியம் வேண்டாம்.

தொடர்புக்கு:

94440 54119, 94443 16031, 97911 17765

__________________