மௌலவி, அ. முஹம்மது கான் பாகவி
(முன்னாள் மாணவர், ஃபைளுல் பரகாத் அரபிக் கல்லூரி)
(தலைமை மொழிபெயர்ப்பாளர், ரஹ்மத் பதிப்பகம், சென்னை)
கோ
|
வை மாவட்டம் மேட்டுப்பாளையம் பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் மத்ரஸா ஃபைளுல் பரகாத் அரபிக் கல்லூரி நீண்ட நெடுங்காலமாக செயல்பட்டுவருகிறது. இந்த மத்ரஸாவில் எனக்குத் தெரிய, பழம்பெரும் உலமாக்கள் பலர் ஆசிரியர்களாகப் பணியாற்றியுள்ளனர். அவ்வாறே, அங்கு கல்வி பயின்ற மாணவர்கள் பலர் ஆசிரியர்களாகவும் இமாம்களாகவும் பேச்சாளர்களாகவும் எழுத்தாளர்களாகவும் விளங்கிவருகின்றனர்.
1967 மற்றும் 1968 ஆகிய இரண்டாண்டுகள் ஃபைளுல் பரகாத் மத்ரஸாவில் நான் கல்வி பயின்றேன். இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்புப் பாடங்களை அங்கு கற்றேன். எங்கள் ஊர், திண்டுக்கல் மாவட்டம் - சித்தையன்கோட்டையைச் சேர்ந்த மறைந்த மாமேதை மௌலானா, N. அப்துல்லாஹ் ஃபாஸில் பாகவி அவர்கள் மட்டுமே அப்போது ஆசிரியர். ஓராசிரியர் பள்ளி.
மேட்டுப்பாளையம் மௌலானா, அப்துர் ரஷீத் ஹள்ரத் அவர்கள் அவ்வப்போது சில பாடங்கள் எடுத்துள்ளார்கள். ‘பண்பியல்’ பாடநூலான ‘தஅலீமுல் முத்தஅல்லிம்’ அன்னாரிடம் கற்றதாக நினைவு. தங்கமான குணம்; பொன் மனம். இரைந்துகூடப் பேசிப் பழக்கமில்லாத அமைதியின் உருவம். குரல் செழுமையும் ஓசை வளமும் அமைந்த ரஷீத் ஹள்ரத் அவர்கள், அப்போது சின்னப் பள்ளிவாசலில் இமாமாகப் பணியாற்றினார்கள் என நினைக்கிறேன்.
அரபி இலக்கணம் (Grammar)
கனம் அப்துல்லாஹ் ஹள்ரத் அவர்களிடம் நான் கற்ற இயல்களில் அரபிமொழி இலக்கணம் முதன்மையானது. அங்கு போட்ட அந்த அஸ்திவாரம்தான், தாய்க் கல்லூரி பாகியாத்துஸ் ஸாலிஹாத்தில் 18 ஆண்டுகள் ஆசிரியராக நான் பணியாற்றியபோதும் இப்போது கடந்த 19 ஆண்டுகளாக மொழிப்பெயர்ப்புத் துறையில் மேலாய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளபோதும் கை கொடுக்கிறது; எந்த அரபி வாசகத்தையும் இலக்கணப் பிழையின்றி வாசிக்கவும் எழுதவும் பேசவும் வழிகாட்டுகிறது.
இரண்டாவது வகுப்பில் ‘தக்வீமுல் லிசான்’, ‘கத்ருந் நதா’ ஆகிய பாடநூல்களும் மூன்றாவது வகுப்பில் ‘அல்ஃபிய்யா’ என்ற இலக்கணச் செய்யுள் பாடநூலும் அப்துல்லாஹ் ஹள்ரத் அவர்களிடம் தெளிவாகக் கற்றோம். அரபி வாசகம் ஒன்றை -அதுவும் ஸேர், ஸபர் ஒலிக்குறியீடு (ஹரகத்) இல்லாத ஒரு வாக்கியத்தை- இலக்கணப் பிழையின்றி படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
அப்போதுதான், அரபிப் பாடநூல்கள், நபிமொழி தொகுப்புகள், திருக்குர்ஆன் விரிவுரைகள், தினசரி மற்றும் மாத, வார அரபி இதழ்கள் ஆகியவற்றை வாசித்துச் சரியான பொருளை அறிய முடியும்.
இலக்கண விதிகளை எடுத்துக்காட்டுகளோடு சொல்லிக்கொடுத்துவிட்டுப் பயிற்சிவைப்பார்கள். விதிகளைச் சரியாகப் புரிந்துகொண்டதற்கு அடையாளம் என்னவென்றால், ஒரு வாசகத்தில் இடம்பெறும் ஒவ்வொரு சொல்லும் உறுப்பிலக்கணத்தில் (இஃராப்) எந்த வகையைச் சேர்ந்தது என்பதை மாணவன் சொல்ல வேண்டும். அதாவது எழுவாய், பயனிலை, செயப்படு பொருள் (இரண்டாம் வேற்றுமை), செயப்பாட்டு வினை எழுவாய், தன்னிலைப் பெயர்ச்சொல், அடைமொழி, அருகமைவு, தழுவுசொல், ஆறாம் வேற்றுமை, பெயரடை... என ஒவ்வொரு சொல்லுக்கான நிலையை இனம் பிரித்துக் கூற வேண்டும். இதற்கு ‘தர்கீப்’ (சொற்றொடரியல் - Syntax) என்பர்.
முந்தைய நாள் பாடத்தை, இந்தக் கிரமப்படி, ஒப்புவிக்காமல் அடுத்த நாள் பாடம் நடத்தப்படாது. இதை உருப்போட்டு தயாரான பிறகே வகுப்புக்குச் செல்வோம். இப்படி ஒவ்வொரு வாசகத்தையும் இலக்கண அடிப்படையில் விலாவாரியாகப் பிரித்து மேயும்போதுதான் வாசகத்தின் முழுப் பொருள் தப்பே இல்லாமல் பிடிபடும்.
எடுத்துக்காட்டாக, திருக்குர்ஆனில் ‘அல்பகரா’ அத்தியாயத்தில் 251ஆவது வசனத்தில், “க(த்)தல தாவூது ஜாலூ(த்)த” எனும் தொடர் ஒன்று உண்டு. இதற்கு “தாவூது (அலை) அவர்கள் ஜாலூத் (ஜுல்யாத்) எனும் வீரனைக் கொன்றார்” என்று பொருள். இப்பொருள் வசப்பட வேண்டுமென்றால், ‘கதல’ - வினைச்சொல்; தாவூது - எழுவாய்; ஜாலுத - செயப்படு பொருள், அல்லது இரண்டாம் வேற்றுமை என்ற இலக்கணம் தெரிந்திருக்க வேண்டும்.
அதாவது வாக்கிய உறுப்பிலக்கணப்படி ‘தாவூது’ என்று எழுவாய் வேற்றுமை உருபு (ரஃபஉ) உடனும் ‘ஜாலூ(த்)த’ என இரண்டாம் வேற்றுமை உருபு (நஸப்) உடனும் வாசித்தல் வேண்டும். அப்போதுதான், கொன்றவர் தாவூத்; கொல்லப்பட்டவர் ஜாலூத் என்ற அர்த்தம் கிடைக்கும். இதை மாற்றி, ‘தாவூத’ என்றும் ‘ஜாலூத்து’ என்றும் படித்துவிட்டால், “தாவூதை ஜாலூத் கொன்றார்” என்ற அனர்த்தம் ஏற்பட்டுவிடும்.
சொல் இலக்கணம் (Morphology)
அரபு இலக்கணத்தில் சொல்லிணக்கம், அல்லது சொல்வடிவ அமைப்பியல் (Morphology) என்று ஒன்று உண்டு. அதாவது வேர்ச்சொல்லில் (Root) இருந்து பிறக்கும் பெயர்ச்சொல், வினைச்சொல், வினையாலணையும் பெயர் (இஸ்முல் ஃபாஇல்), செயப்பாட்டு எச்சவினை (இஸ்முல் மஃப்ஊல்), ஆக்கப் பொருட்பெயர், காலப் பெயர், இடப் பெயர், நிலைப் பெயர்... எனப் பல்வேறு சொற்கள் எப்படிப் பிறக்கின்றன? அதன் விதிகள் யாவை? என்பன போன்ற விவரங்களை இவ்விலக்கணம் சொல்லித்தரும்.
அத்துடன் பிறவினை (முத்தஅத்தீ), தன்வினை (லாஸிம்), மூல எழுத்து மட்டுமே உள்ள சொல் (முஜர்ரத்), கூடுதல் எழுத்து உள்ள சொல் (மஸீது ஃபீஹி) செய்வினை (மஅரூஃப்), செயப்பாட்டு வினை (மஜ்ஹூல்), உடன்பாடு (முஸ்பத்), எதிர்மறை (நஃப்யு), மூவெழுத்து வினைச் சொல் (ஸுலாஸி), நான்கெழுத்து வினைச்சொல் (ருபாயீ)... ஆகிய முரண்சொற்களை இனங்காண்பதற்கும் இக்கலை வழிகாட்டும்.
எடுத்துக்காட்டாக, ‘கல்க்’ என்பது வேர்ச்சொல். ‘படைத்தல்’ என்பது பொருள். இதிலிருந்து ‘கலக’ (படைத்தான்), ‘காலிக்’ (படைத்தவன்), ‘மக்லூக்’ (படைப்பு), ‘குலிக்(த்)த (நீ படைக்கப்பட்டாய்), ‘குலிக்ன’ (அவர்கள் - பெண்கள் - படைக்கப்பட்டனர்)... முதலான வினை வடிவங்கள் பிறக்கும்.
இந்த இலக்கணமும் மொழியை அறிய மிகவும் முக்கியமானது. முதலாவது வகுப்பில் இவ்விலக்கணம் கற்பிக்கப்படுகிறது. இதற்குமேல், மொழியியலும் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் சொற்கள், பெயர்கள், வினைகள், மரபுச் சொற்கள், வழக்குகள், வழக்கொழிந்தவை, உயர் வழக்கு, வட்டார வழக்கு ஆகியவற்றை அறிந்து பொருள் செய்ய இயலும்.
திருமறை அறிய
இவையெல்லாம் அரபி மத்ரஸாக்களில் கற்பிக்கப்படுவதற்கு அடிப்படைக் காரணமே, செம்மொழி அரபியில் அருளப்பெற்ற திருக்குர்ஆனையும் நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் என்ற ஹதீஸையும் படித்தறிய வேண்டும் என்பதுதான்! இஸ்லாமியச் சட்டப் புத்தகங்கள், வரலாறு, இறையியல் கொள்கை விளக்கம் போன்ற பிற கலைகளை அறியவும் இந்த இலக்கண அறிவுதான் முதல் தேவை.
மேட்டுப்பாளையம் ‘ஃபைளுல் பரகாத்’ அரபிக் கல்லூரியில் என்னுடன் கல்வி கற்றவர்களில் மேட்டுப்பாளையம் ஃபகீர் முஹம்மது பாகவி, திருப்பூர் அஹ்மதுல்லாஹ் பாகவி, சித்தையன்கோட்டை முஹம்மது இஸ்ஹாக் நூரி ஆகியோர் நினைவில் உள்ளவர்களாவர்.
பாக்குத் தோட்டம் சாயபு ராவுத்தர் அவர்களே அப்போது பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு முத்தவல்லியாக இருந்தார்கள். மீண்டும் ஒருமுறை நான் மேட்டுப்பாளையம் வந்திருந்தபோதுதான் அன்னார் மவ்த்.
பாகியாத்துஸ் ஸாலிஹாத்தில் கல்வி பயின்று, பட்டம் பெற்றபின், ஆசிரியராகச் சேரும் நோக்கத்தில் நான் மேட்டுப்பாளையம் வந்தேன். அப்போது மர்ஹூம் அப்துல்லாஹ் அவர்கள் முத்தவல்லி. என்னுடைய மச்சான் மர்ஹூம் மௌலவி, காதர் சையித் பாகவி அவர்களும் அங்கு ஆசிரியராகப் பணியாற்றினார். ஆனால், வேலை கிடைக்கவில்லை.
‘ஃபைளுல் பரகாத்’ கல்லூரி என் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஓர் அங்கம். அவ்வூர் மக்கள் மறக்க முடியாதவர்கள்.
நான் அங்கு மாணவனாக இருந்தபோது, ஒருநாள் இரவு ஒரு கனவு கண்டேன். என் தந்தை அல்ஹாஜ் M.M. அப்துல் அஸீஸ்கான் அவர்கள் இறந்துபோனதைப் போன்று கண்டு வெகுநேரம் அழுதுகொண்டிருந்தேன். ஆசிரியர் அப்துல்லாஹ் ஹள்ரத் அவர்கள் காலையில் ஆறுதல்கூறி தேற்றினார்கள். சிறிது நேரத்திலேயே ஒரு தந்தி வந்தது. அதில் சித்தையன்கோட்டையைச் சேர்ந்த பிரபல மார்க்க அறிஞர் ஸஃகீர் ஹள்ரத் அவர்கள் ஹஜ்ஜுக்குச் சென்ற இடத்தில் மக்காவில் இறந்துவிட்டார்கள் என்றது தந்தி.
ஒழுக்கப் பயிற்சி
மாணவர்களின் கல்வியில் மட்டும் ஃபைளுல் பரகாத் கவனம் செலுத்தவில்லை; அத்துடன் மாணவர்களின் ஒழுக்கத்திலும் முழுக் கவனம் செலுத்தியது. சிறுவயதில் அங்கு நான் பெற்ற ஒழுக்கப் பயிற்சி, இன்றும் என்னில் நிலையான சில நல்லறங்களை வழக்கமாக்கிவிட்டது.
ஐங்காலத் தொழுகையை ஜமாஅத்தோடு மாணவர்கள் தவறாமல் நிறைவேற்றியாக வேண்டும் அதைக் கண்கானிக்கும் பொறுப்பு, மாணவர்களின் அமீர் (தலைவர்) என்ற முறையில் என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. தவறிழைக்கும் மாணவர்களுக்கு, ஆசிரியர் அப்துல்லாஹ் ஹள்ரத் அவர்கள் தண்டனை விதிப்பார்கள்.
அவ்வாறே, குர்ஆன் ஓதுதல், தஸ்பீஹ் மற்றும் திக்ர் செய்தல், இஷாவுக்குப்பின் ஹள்ரத் அவர்கள் வாசிக்கும் தஅலீமில் கலந்துகொள்ளல், வெள்ளிக் கிழமை ஜுமுஆ தொழுகைக்கு, சற்று முன்பே பள்ளிவாசலுக்குச் சென்று நஃபில் தொழுகை, குர்ஆன் ஓதுதல், துஆ செய்தல் போன்ற வழிபாடுகளை மாணவர்கள் தொடர்ந்து செய்துவர பயிற்சி அளிக்கப்பட்டதை நன்றியுடன் நினைவுகூருகிறேன்.
ஊரில் நடக்கும் இஸ்லாமியக் கூட்டங்களில் மாணவர்கள் கலந்துகொண்டு, திருப்பூர் கமாலுத்தீன் ஹள்ரத், ஜமீனாத்தூர் நஸீர் ஹள்ரத் போன்ற பிரபல பேச்சாளர்களின் உரைகளைக் கேட்கின்ற வாய்ப்பும் எங்களுக்குக் கிடைத்ததென்பது மறக்க முடியாத அனுபவமாகும்.
வாழ்க! எங்கள் மத்ரஸா
இப்போது ‘ஃபைளுல் பரக்காத்’ அரபிக் கல்லூரிக்கென தனியான கட்டடம் எழுப்பப்பட்டு, புதிய பொலிவோடு கல்லூரி நடக்கவிருப்பது என் போன்ற பழைய மாணவர்களுக்கு ஆனந்தக் கண்ணீரை வரவழைக்கும் செய்தியாகும்.
இதற்காகத் திட்டமிட்டு, உழைத்து, உதவி புரிந்த அனைத்து நல்லிதயங்களுக்கும் என் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்வதில் பெருமிதம் அடைகிறேன். அவர்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்.
எங்களை உருவாக்கிய ‘ஃபைளுல் பரகாத்’ மேன்மேலும் வளர்ந்து, திறமை மிக்க அறிஞர்களை இந்தச் சமுதாயத்திற்கு உருவாக்கி வழங்க வேண்டும்; அதன் புகழ் பரவ வேண்டும்; உதவிக் கரங்கள் நீட்டிய அனைவருக்கும் இம்மையிலும் மறுமையிலும் வளமான வாழ்வு அமைய வேண்டும் என அல்லாஹ்வைப் பிரார்த்திக்கிறேன்.
வாழ்க! எங்கள் மத்ரஸா
நன்றி: கல்லூரி சிறப்பு மலர்
____________________