க
|
ல்வியைத் தேடிச் செல்வதன் மகிமை குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடும்போது ஒரு நீண்ட ஹதீஸில் இப்படிச் சொன்னார்கள்:
ومن سلك طريقا
يلتمس فيه علما سهّل الله له به طريقا إلى الجيّة.
கல்வியைத் தேடி ஒருவர் ஒரு பாதையில் நடந்தால், அதன்மூலம் அவருக்குச் சொர்க்கம் செல்லும் பாதையை அல்லாஹ் எளிதாக்குகின்றான். (முஸ்லிம் - 5231)
இதிலிருந்து, கல்வி நோக்கிய பயணம், சொர்க்கம் நோக்கிய பயணமாகும் என்று அறியமுடிகிறது.
இதற்குக் காரணம் என்ன? இறைவேதத்தையும் இறைத்தூதரின் வழிமுறையையும் கற்றறிந்து, இறைவன் படைத்துள்ள இயற்கைச் செல்வங்களை நுணுகி ஆராயும்போது, அது மனிதனுக்கு இறையச்சத்தை ஊட்டும்; நற்பண்புகளை வளர்க்கும்; ஒழுக்கமிக்க உயர் வாழ்க்கைக்கு வழிகாட்டும்.
அந்த வழியில் நடப்பவர் சொர்க்கத்தை அடைவார் என்பதில் என்ன சந்தேகம் இருக்க முடியும்? சொல்லுங்கள்!
என்ன நடக்கிறது?
ஆனால், இன்று என்ன நடக்கிறது? உலக நடப்பைச் சற்று ஆழமாக நோக்கினால் ஒரு உண்மை வெளிச்சத்திற்கு வரும். ஆம்! இன்று உலக நாடுகளை ஆள்வது மன்னர்களோ பிரதமர்களோ அல்லர்.
அவர்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் மூன்று பிரதான சக்திகளே அவர்களை இயக்கிவருகின்றன. 1. அறிவியல் (العلوم); 2. தொழில் நுட்பம் (تِقْنِيّة); 3. கார்ப்பரேட் கம்பெனிகள் (شركات متّحدة). இவை ஒவ்வொன்றிலும் நன்மைகள் இருந்தாலும் தீமைகளே அதிகம். பயன்படுத்தும் நோக்கம், பயன்பாட்டு முறை ஆகியவற்றைப் பொறுத்தே பலனைத் தீர்மானிக்க முடியும்.
அறிவியலை எடுத்துக்கொள்வோம். அறிவியல் என்றால் என்ன? நிரூபணத்தின் அடிப்படையிலும் பரிசோதனை முறைகளைக் கொண்டும் இயற்கை உட்பட உலகத்திலுள்ள அனைத்தின் அமைப்பு, இயக்கம் ஆகியவற்றை விளக்கும் அறிவுத் துறையே அறிவியல். அல்லது விஞ்ஞானம் எனப்படுகிறது.
அதாவது இறைவனின் படைப்புகளை, அவை படைக்கப்பட்ட முறையை, அதன் இயக்கத்தை இயக்க விதியை ஆராய்ந்து அறிவதுதான் அறிவியல். படைப்புகளின் நுணுக்கங்களை அறியும்போது படைப்பாளனின் பேராற்றல் மனிதனை வியக்கவைக்கும். அவனுடைய ஆணைகளுக்கு மாற்றமாக நடந்தால், கடுமையாகத் தண்டித்துவிடுவான் என்ற அச்சம் பிறக்கும். அது மனிதனைப் பக்குவப்படுத்தும்; புனிதனாக்கும்.
திருக்குர்ஆன் கூறும் அழகைப் பாருங்கள்:
வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறிமாறி வருவதிலும் அறிவுடையோருக்குச் சான்றுகள் பல உள்ளன. அவர்கள் நின்ற நிலையிலும் அமர்ந்த நிலையிலும் ஒருக்களித்துப் படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைவுகூருவார்கள். -அதாவது நின்று தொழுவார்கள்; முடியாவிட்டால் அமர்ந்து தொழுவார்கள்; அதற்கும் முடியாதபோது படுத்துக்கொண்டு தொழுவார்கள்-
வானங்களும் பூமியும் படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள். (இறுதியில் இவ்வாறு கூறுவார்கள்:) எங்கள் இறைவா! இவற்றை நீ வீணாகப் படைக்கவில்லை; நீ தூயவன்; நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக! (3:190,191)
ஆராய்ச்சி, மனிதனை ஆன்மிகத்திற்குக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும். படைப்புகளை ஆராய்ந்து, படைப்பாளனிடம் சரணடைய வேண்டும். அறிவியல் ஆன்மாவைத் தூய்மைப்படுத்த வேண்டும். அதுதான், அறிவியலால் விளையும் உன்னதமான பலன்.
எனவேதான், “இந்த வசனங்களை ஓதிவிட்டு, அவை தொடர்பாகச் சிந்திக்காதவருக்குக் கேடுதான்” என நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (ஸஹீஹ் இப்னு ஹிப்பான்)
இன்றைக்கு, புதிய கோள் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார்கள் அறிவியலாளர்கள். அதன் நீள-அகலத்தையும் தட்ப வெப்பத்தையும் தோராயமாக அளந்து கூறுகிறார்கள். அதுவும் செயற்கைக் கோளின் துணையோடு!
அத்தோடு முடிந்து, அவர்களது ஆராய்ச்சியின் பலன். படைத்தவனைப் பற்றி எண்ணிக்கூடப் பார்ப்பதில்லை. சொல்லப்போனால், விஞ்ஞானிகளில் கணிசமானோர் கடவுள் மறுப்பாளர்கள். தங்களின் சுய ஆற்றலாலேயே சாதனை படைத்தோம் என்ற இறுமாப்பாளர்கள். இந்த அறிவியலால் என்ன இலாபம்?
தொழில் நுட்பம்
இன்று வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தால் மனிதன் நேரத்தை மிச்சப்படுத்த முடிகிறது; உடலுலைப்பு குறைகிறது. அரசவை முதல் அடுப்பங்கரை வரை வேலைகள் சுலபமாகின்றன. நினைத்தவுடன் நினைப்பவருடன் பேச முடிகிறது. நொடிப்பொழுதில் நம் எண்ணங்கள் உலகைச் சுற்றிவர முடிகிறது.
ஆனால், உறவுகள் உறங்குகின்றன. பாசம் பழுதாகிப்போய் கிடக்கிறது. பெற்ற பிள்ளையைத் தூக்கிக் கொஞ்ச நேரமில்லை. எதிரில் இருப்பவன் சொல்லும் சலாமுக்குப் பதில் இல்லை; யாருடனோ கருவியில் சலாம், கலாம், மனாம் எல்லாம் நடக்கிறது. இயந்திரமே வாழ்க்கையாகி, இவனே இயந்திர மனிதனாகிவிட்டான். நிஜம் நிழலாகி, நிழல் நிஜமாகிவிட்ட இந்தத் தொழில்நுட்பம், உண்மையில் நுட்பம்தானா?
தந்தை ஸ்மார்ட்போன் வாங்கித் தரவில்லை என்பதற்காகத் தற்கொலை செய்ய தூக்குக் கயிறை கழுத்தில் மாட்டிக்கொண்டிருக்கும் பத்து வயது சிறுவனைப் பார்க்கிறான் ஓர் இளைஞன். பார்த்தவுடன் காப்பாற்ற கால்கள் ஓடாமல், படம் பிடித்து வாட்ஸ்அப்பில் இறக்கிவிட ஸ்மார்ட்போனைத் தேடுகின்றன இளைஞனின் கைகள். மனிதம் எங்கே போயிற்று?
கார்ப்பரேட் கம்பெனிகள்
வணிகக் குழுமமும் அக்குழுமத்தின் மனைவி மக்களும் உல்லாச வாழ்க்கை வாழ வேண்டும் என்பதுதான் கார்ப்பரேட்களின் ஒரே இலக்கு. நுகர்வோர், நோயாளிகள், குழந்தைகள், ஏழைகள் என யாரைப் பற்றியும் அவர்களுக்குக் கவலை இல்லை.
நச்சு கலந்த உணவுகள், ரசாயணம் கலந்த தானிய விதைகள், பயங்கரமான பக்க விளைவுகளை உண்டாக்கும் மருந்துகள், அணுக்கதிர்களை வெளியிடும் தொழிற்சாலைகள், சுற்றுச் சூழலைக் கெடுக்கும் வாகனங்கள்... என எந்தப் படுகொலையும் செய்ய இந்தக் கம்பெனிகள் அஞ்சுவதில்லை.
பணம்! பணம்! பணம்! அது ஒன்றுதான் இவர்களின் இலட்சியம். மனசாட்சியே இல்லாமல் இயற்கை மருத்துவம், இயற்கை விவசாயம், இயற்கைச் செல்வங்களான நிலம், நீர், காற்று ஆகிய அனைத்தையும் அழித்துக் கொள்ளையடிக்கும் இவர்களிடம் மனித நேயம் எப்படி இருக்கும்?
ஆக, அறிவியலாகட்டும்! தொழில் நுட்பமாகட்டும்! பெரு வணிகங்களாகட்டும்! எல்லாமே இறையச்சத்தின் அடிப்படையில் அமையும்போதுதான் நன்மை பயக்கும்! சொர்க்கத்தை நோக்கி அழைத்துச் செல்லும்.
இதனாலேயே, மார்க்கக் கல்வி கலந்த உலகக் கல்வியை நம் குழந்தைகளுக்கு ஊட்ட வேண்டும் என்கிறோம்.
___________________________