Saturday, March 12, 2016

ஈரானின் அகண்ட பாரசீகக் கனவு


ன்றைய மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளைப் பற்றி எழுதுவதென்றாலே மனம் பதைக்கிறது. பேனா மறுக்கிறது. சிந்தனை தடைபடுகிறது. அந்த அளவிற்கு அங்கே ஓயாத மரண ஓலங்கள். பீரங்கி சப்தங்கள். துப்பாக்கி ரவைகளின் பாய்ச்சல்கள். கட்டட இடிபாடுகள். குடும்பங்குடும்பமாக அகதிக் கூட்டங்கள். பச்சிளங்குழந்தைகளின் அலறல்கள். ஒருவேளை சோற்றுக்கும் குடிநீருக்கும் கதறல்கள். தினமும் நெஞ்சைப் பிளக்கும் காட்சிகள்.

மனிதர்கள் வாழும் நாடுகளா? விலங்குகள் வசிக்கும் காடுகளா? பிரித்துப் பார்க்க முடியாத வன்கொடுமைகள். இரத்தக் கிளரிகள். சகிக்க முடியாத சண்டைகள். இரண்டு பக்கமும் மடிவது முஸ்லிம் உயிர்கள். அந்நிய சக்திகளின் உதவியோடும் கண்காணிப்போடும் அடித்துக்கொண்டு சாகும் ஒரே மண்ணின் மைந்தர்கள். எல்லாம் ஆட்சியதிகாரத்திற்காகவும் நாடு பிடிக்கும் பேராசைக்காகவும்தான்!

இதில் பழைய பாரசீகமான ஈரானுக்கே முதலிடம்! ஈரானுக்குள்ள வெறியைப் பற்றிஅல்முஜ்தமாஇதழுக்குக் கட்டுரை எழுதத் தொடங்கிய முஹம்மது ஃபாரூக் அல்இமாம் எனும் அரசியல் விமர்சகர் இப்படிக் குறிப்பிடுகிறார்:

முஹம்மது ஃபாரூக் அல்இமாம்
இதை எழுதுவதற்கு வருத்தமாக இருக்கிறது. இஸ்ரேல் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் மோஷா தய்யான் ஃபிரான்ஸ் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டியளிக்கிறார். 1967 ஜூன் 5ஆம் நாள் சினாய், ஜவ்லான், கிழக்குக் கரை ஆகிய பாலஸ்தீனப் பகுதிகளை இஸ்ரேல் படைகள் கைப்பற்றுவதற்குமுன் இப்பேட்டி நடக்கிறது. அதுவும் 18 நாட்களுக்குமுன்! செய்தியாளர், “இந்த ஆபத்தான திட்டத்தை எவ்வாறு தீட்டினீர்கள்?” என்று வியப்போடு வினவுகிறார். கிண்டலும் கேலியுமாக தய்யான் அளித்த பதில் என்ன தெரியுமா? “அரபுகள் படிக்கிறார்களா?” படிப்பதாக வைத்துக்கொள்வோம். இது செய்தியாளரின் இடைமறிப்பு. அதற்கு தய்யானின் பதில்: படித்தாலும் விளங்கமாட்டார்கள்.

உண்மை என்ன?


இது, நம்மைப் பற்றி நம் எதிரி சொன்னதானாலும் உண்மை என்ன? ஈரானின் ஆபத்தைப் பற்றி எத்தனை முறை எத்தனை எழுத்தாளர்கள் உணர்த்தியும் எச்சரித்தும் எழுதினார்கள்! அவர்களில் டாக்டர் அப்துல்லாஹ் நஃபீசி, குவைத் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும் வழக்குரைஞருமான நாஸிருத் துவைலா ஆகியோரும் அடங்குவர். ஆனால், இவர்களின் எச்சரிக்கை அரபுகளின் எள்ளலுக்கும் நகைப்புக்கும்தான் ஆளானது.

பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய பொன்மொழிகள் பலவற்றை நம் முன்னோர்கள் உதிர்த்துவிட்டுத்தான் சென்றுள்ளனர். “புழுக்கை கிடந்தால், அங்கு ஒட்டகம் இருக்கிறது என்று அர்த்தம்என்பதும் அவற்றில் ஒன்று. ஈரானின் புழுக்கைகள் நாள்தோறும் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களை அங்கும் இங்குமாக விதைத்துவருகின்றன; கலாசார மையங்களை உருவாக்கிவருகின்றன. ஈரான் சார்புள்ள அரசியல் தலைவர்களும் இராணுவ அதிகாரிகளும் மார்க்க ஆட்களும் வெளிப்படையாக அறிக்கைகளை வெளியிட்டுவருகின்றனர்.

நாம் நான்கு அரபு தலைநகரங்கள்மீது அதிகாரம் செலுத்துகிறோம் -என்று பஃக்தாத் (இராக்), பைரூத் (லெபனானன்), திமஷ்க் (சிரியா), ஸன்ஆ (ஏமன்) குறித்துச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

ஈரானின் கை ஓங்குகிறது


எதார்த்தமும் அதுதான். இராக் தலைநகர் பஃக்தாதில், ஈரானுக்கு ஆதரவான ஒரு குழுவே அதிகாரம் செலுத்துகிறது. இராக் இராணுவப் படை, குடிப்படை (Militia) எல்லாமே அக்குழுவைச் சேர்ந்தவையே. இந்தக் குடிப்படைதான் இராக்கில் சீரழிவைத் தூண்டிவருகிறது. அவ்வாறே, லெபனானை அதிகாரம் செய்யும்ஹிஸ்புல்லாஹ்வும் அதே குழுவினர்தான்.


சிரியாவில் என்ன நடக்கிறது? அங்கு ஈரான் புரட்சிப் படையினர் 2 லட்சம்பேர் இருக்கிறார்கள். அத்தோடுஹிஸ்புல்லாஹ்குடிப்படை, உலகம் முழுவதிலிருந்தும் ஈரான் திரட்டியுள்ள கொலைகாரக் கூலிப்படை ஆகியவையும் சிரியாவில் களமாடுகின்றன. கடந்த ஐந்தாண்டுகளாத் தன் சொந்த மக்கயே படுகொலை செய்துகொண்டிருக்கும் பஷ்ஷார் அசதுக்கு ஆதரவாக இக்குழுக்கள் போரிட்டுவருகின்றன.

ஏமன் நாட்டிலும் இதேநிலை. ஹூஸிக்களின் கை அங்கே ஓங்கியுள்ளது. தஹ்ரானின் (ஈரான்) கூலிப்படைகளும் அவர்களுடன் இணைந்து, பதவியிலிருந்து விரட்டப்பட்ட அலீ அப்துல்லாஹ் ஸாலிஹிற்கு ஆதரவாகப் போரிட்டுவருகின்றனர். தலைநகர் ஸன்ஆவிலும் ஏமன் நகரங்கள் அனைத்திலும் அதிகாரத்தைக் கைப்பற்ற களமிறங்கியுள்ளனர்.

சில வாரங்களுக்குமுன்பஹ்ரைன், ஈரானின் ஒரு மாகாணம்என்று அறிவித்துக்கொண்டார்கள். சுருங்கக் கூறின், வளைகுடா நாடுகளில் குற்றம், கொலை, நாசம் ஆகிய வலைகளை ஈரானிய ஷியாக்கள் பின்னிவருகின்றனர். சதிவலைகளில் சில கண்டுபிடிக்கப்பட்டாலும் வேறுசில திட்டமிட்டபடி செயல்படுத்தப்பட்டுவருகின்றன. ஆனால், அரபியர் உள்ளூர் சமாதானம், மனித உரிமைகள், சமூக இணக்கம் என்று சொல்லி உறங்கிக்கொண்டிருக்கிறார்கள் -என்று சாடுகிறார் விமர்சகர் ஃபாரூக் இமாம்.

தாஇஷ் - கொலைகாரர்கள்


இதற்கிடையே மத்தியகிழக்கில் பயங்கரவாத இயக்கமானதாஇஷ்’ (ஐஎஸ்) எனும் கொலைகாரக் கூட்டத்தை ஈரானும் அதன் ஏஜெண்டுகளும் உருவாக்கிவிட்டனர். “அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் சாவு; யூதர்களுக்கு சாபம்என்ற அதன் கோஷம் பொய் என்பது அனைவருக்கும் தெரிந்துவிட்டது. .எஸ். பயங்கரவாதத்தை எதிர்க்கிறோம் என்ற போர்வையில் இஸ்ரேல், ரஷியா, இராக் மற்றும் சிரியாவின் ஷியா அரசுகள் ஆகியவற்றுடன் கூட்டுச்சேர்ந்து அரபுகளுக்கெதிரான போரை ஈரான் நடத்திவருகிறது.

அரபுகளுக்கும் இஸ்லாத்திற்கும் எதிரான கூட்டுச் சதியே இது. கொலை வெறிபிடித்த அசதை எதிர்த்து சிரியாவில் போராடிவரும் ஆயுதக் குழுக்களை அழித்தொழிப்பதே இந்த .எஸ்.ஸின் முக்கிய இலக்காகும். ரஷியாவின் போர் விமானங்கள் சிரியாவின் நூற்றுக்கணக்கான கிராமங்களையும் கட்டடங்களையும் தரைமட்டமாக்கிவிட்டன. பெண்கள், குழந்தைகள், முதியோர், சிவிலியன்கள் என ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுவிட்டனர்.

ஈரானோ அதன் புரட்சிப் படைகளோ ஒரு சிறு துரும்பையும் பாதுகாக்கவில்லை. அப்படியானால், ஈரானின் நோக்கம் என்னவென்று புரிகிறதல்லவா?

இக்கட்டான இந்தச் சூழ்நிலையில், அரபுகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து, குறிப்பாக வளைகுடா நாடுகள் இணைந்து ஈரானை அதன் எல்லைக்குள் கட்டுப்படுத்திவைக்க சாத்தியமான எல்லா முயற்சிகளையும் ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டியதிருக்க, நடந்துகொண்டிருப்பது என்ன?

அநியாயமாக வீழ்த்தப்பட்ட முர்சி

எகிப்தின் முன்னாள் அதிபர் முஹம்மது முர்சீ
அரபுகளின் திண்ணையான எகிப்து நாட்டில், சுதந்திரமான தேர்தல்வாயிலாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அரபுத் தலைவரான முஹம்மது முர்சியை வீழ்த்த அரபுக் குழுக்களே வேலை செய்தன. (சலஃபிகளானஅந்நூர்கட்சியினரும் அவர்களில் அடக்கம்.)

முர்சியின் முதல் நடவடிக்கை என்னவாக இருந்தது தெரியுமா? கனரக ஆயுதங்களை சினாய் பகுதிக்குக் கொண்டுசென்று, ‘ஃகஸ்ஸாமீது கைவைத்தால் நடப்பதே வேறு என இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்ததுதான். ‘ஃகஸ்ஸாமக்கள்மீதான முற்றுகையை அகற்றுவதற்கு வசதியாக எகிப்தின் கடற்கரைப் பகுதியானரஃபஹ்வழியைத் திறந்துவிட்டதும்தான்.

சிரியா புரட்சிக்கு முர்சி ஆதரவளித்தார். இதையெல்லாம்விட, ஈரான் தலைநகர் தஹ்ரானில் நடந்த இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொண்டது மட்டுமன்றி, கண்ணியமிக்க நபித்தோழர்கள் ஏசப்படும் ஒரு நாட்டில் நபித்தோழர்களைக் கண்ணியத்தோடு குறிப்பிட்டு, மரபுப்படிரலியல்லாஹுசொன்னவர் முர்சீ. அமீருல் முஃமினீன் உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களைக் கொலை செய்த மஜூசியான அபூலுஃலுஆவுக்குமஸார்’ (நினைவிடம்) எழுப்பப்பட்டுள்ள ஒரே நாடு ஈரான்தான். அந்த நாட்டில் வைத்துத்தான் தைரியமாக, கலீஃபா உமர் (ரலி) அவர்களின் புகழ் பாடிவிட்டுவந்தார் முர்சி.

தற்போதுள்ள நிலை எகிப்தில் நீடித்தால்... சிரியாவின் புரட்சி அணைந்தால்... டமாஸ்கஸில் ஈரான் காலூன்றினால்... அரபுகள் கசப்பான, கடினமான, மிகத் தீங்கான முடிவை எதிர்பார்க்க வேண்டியதுதான். ஈரானியர் செய்துவரும் அட்டூழியங்களைப் பார்க்கும் எவருக்கும் ஈரான் ஒரு பேரபாயம் என்பது விளங்காமல்போகாது.

கேன்சர் கட்டி


எனவே, இந்த கேன்சர் கட்டியை அகற்றும் நேரம் முஸ்லிம்களுக்கும் அரபுகளுக்கும் வந்துவிட்டது. இந்த கேன்சர் அரபுடலைக் கொஞ்சம் கொஞ்சமாக அரித்துக்கொண்டிருக்கிறது. சியோனிஸ ஆபத்தைவிடப் பன்மடங்கு ஆபத்தானது. ‘தூ கார்சம்பவத்தின்போது நம் முன்னோர்களான அரபுகள் பாரசீகர்கள்மீது எடுத்த துணிச்சலான அதே நிலைப்பாட்டை இப்போது எடுத்தாக வேண்டும் -என்கிறார் அரசியல் விமர்சகர் முஹம்மது ஃபாரூக் அல்இமாம். (அல்முஜ்தமா)

இதிலிருந்து ஈரானின் கனவு என்ன என்பது புரிந்திருக்கும். ஈரானின் தலைமையில் இராக், ஏமன், பஹ்ரைன், லெபனான், சிரியா, சஊதி முதலான நாடுகளைக் கொண்ட அகண்ட பாரசீகத்தை உருவாக்குவதுதான்! அதாவது சுன்னத் ஜமாஅத் கொள்கைளை ஒழித்துவிட்டு ஷியாயிஸத்தை நிலைநாட்டுவதுதான் ஈரானின் கனவு! இதை எப்படி அனுமதிக்கலாம்?


_________________________