Thursday, November 03, 2016

இந்தியாவில் ‘தலாக்’ சர்ச்சை - உண்மை என்ன?

இந்தியாவில் ‘தலாக்’ சர்ச்சை - உண்மை என்ன?

மணவிலக்கு (தலாக்) என்பது இஸ்லாமிய சமுதாயத்தில் மட்டுமல்ல; நுகர்வு கலாசாரத்திற்குக் கிடைத்த வெற்றியின் விளைவால் எல்லா சமுதாயங்களையும் ஆட்டுவித்துவருகிறது. விழுக்காடு அடிப்படையில் பார்த்தால் முஸ்லிம் சமுதாயத்தில் மணமுறிவு குறைவே. ஆனாலும் அந்த விழுக்காடைக்கூட, சமூக ஆர்வலர்களால் வரவேற்கவோ சீரணிக்கவா இயலவில்லை என்பது உண்மையே!

மார்க்க அறிஞர்கள், பள்ளிவாசல் இமாம்கள் மணவிலக்கைக் குறைப்பதற்காக, உள்ளே இருந்துகொண்டு போராடிவருகிறார்கள். அதற்காக மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் நடைமுறையில் இருப்பதைப் போன்று இங்கும் கவுன்சிலிங் நடத்த ஏற்பாடுகள் செய்துவருகிறோம். இன்றைய இளைஞர்கள் படித்துமுடித்து, வேலையில் அமர்ந்து, நாலு காசு சம்பாதிக்கத் தொடங்கிய கையோடு மணமேடையில் வந்து அமர்ந்துவிடுகிறார்கள்.

மணவாழ்க்கை என்றால் என்ன? அதை எப்படிக் கையாள வேண்டும்? இல்லறத்தில் பிரச்சினை ஏற்படின் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? கணவன் - மனைவி இருவரின் கடமைகள் என்ன? உரிமைகள் என்ன? குழந்தையை வளர்ப்பது எப்படி? இரு பக்க உறவுகளை எப்படிப் பேணி பராமரிக்க வேண்டும்... என்பதையெல்லாம் அறியாத அப்பாவிகளாகத்தான் மணவாழ்வில் அடியெடுத்துவைக்கிறார்கள். இவர்களுக்குத் திருமணத்திற்கு முன்பே ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்குவது சமூக அக்கறையுள்ள ஒவ்வொருவரின் கடமையல்லவா! அதற்காகவே இந்த கவுன்சிலிங் ஏற்பாடு. இது ஒரு தாமதமான முயற்சி என்பதில் ஐயமில்லை. இன்னும் பரவலாக்கப்படவில்லை என்பதும் உண்மைதான்!

இந்த முயற்சி வெற்றிபெற்றாலே, மணவிலக்கின் வேகத்தைக் கட்டுப்படுத்திவிடலாம். மணவிலக்கு ஒரு சங்கடமான முடிவு என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் கத்தி போன்றதுதான் தலாக். அதை எடுத்த எடுப்பிலேயே ஆள்வது அறியாமை மட்டுமல்ல; கொடுமையும்கூட. இதனாலேயே, இறைவனால் அனுமதிக்கப்பட்டுள்ளதும் அதே நேரத்தில், அவனது கடும் கோபத்திற்கு உரியதும் ‘தலாக்’தான் என்றுரைத்தார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். (நூல்: அபூதாவூத்)

கடைசி ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டியதை முதல் தீர்வாக எடுத்துக்கொண்டுவிடுகிறார்கள். கணவன் -தான் ஒரு ஆண் என்ற வீராப்பிலும் மனைவி -தன்னிடம் பட்டமும் வேலைவாய்ப்பும் உள்ளது என்ற மிதப்பிலும் அழகான வாழ்க்கையைக் கிழித்தெறிந்துவிடுகிறார்கள். அவன் ‘தலாக்’ எனும் கத்தரியால் கிழித்தால், அவள் ‘குலா’ எனும் சவரக்கத்தியால் கிழிக்கிறாள். இதைக் கண்டு நொந்துபோன அறிவுஜீவிகள் விழித்துக்கொண்டு வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

சரி! அந்த ‘தலாக்’கையும் எப்படி பிரயோகிக்க வேண்டும் என்பதும் இன்றைய இளசுகளுக்குத் தெரிவதில்லை. தெரிந்தாலும் முன்கோபமும் தன்முனைப்பும் அவர்களை – இல்லற தற்கொலைக்குத் தூண்டிவிடுகின்றன. அந்தக் கொதிப்பில், திருக்குர்ஆனின் வழிகாட்டலோ நபிகளாரின் அறவுரையோ அவர்களின் கண்களுக்குப் படுவதில்லை.

திருக்குர்ஆனின் வழிகாட்டல் (2:229) இதோ: தம்பதியரிடையே பிணக்கு ஏற்பட்டால், பேசித் தீர்க்க வேண்டும். இணங்க மறுப்பவரை வழிக்குக் கொண்டுவர சில வழிகளைக் கையாள வேண்டும். எதிலும் சமரசம் ஏற்படாதபோது, இறுதிக் கட்டமாக ஒருமுறை ‘தலாக்’ சொல்ல வேண்டும். அதற்கும் சில நிபந்தனைகள் உண்டு. ‘தலாக்’ சொன்னபிறகு கணவனின் பராமரிப்பிலேயே மனைவி இருக்க வேண்டும். மூன்று மாதங்கள் கணவனின் வீட்டிலேயே, மறுமணம் செய்துகொள்ளாமல் (‘இத்தா’) காத்திருக்க வேண்டும்.

இந்தக் காலகட்டத்தில் இருவரும் மனம்மாறி, மணவாழ்க்கையைத் தொடர வாய்ப்பு உண்டு. 3 மாதக் கெடு முடிந்துவிட்டாலும், மண ஒப்பந்தத்தைப் புதுப்பித்துக்கொண்டு இல்லறத்தைத் தொடரலாம். அப்படிச் சேர்ந்து, வாழ்ந்துவரும்போது மீண்டும் பிணக்கு ஏற்படின் சமாதானத்திற்கான வழிகளைத் தேட வேண்டும். இணைப்புக்கு வழியே இல்லாத நிலையில், இரண்டாவதாக ஒருமுறை ‘தலாக்’ சொல்ல வேண்டும்.

இதன் பிறகும் மனைவி 3 மாதங்கள் கணவன் வீட்டிலேயே காத்திருப்பாள். இந்நாட்களில் சினம் தணிந்து மனம் மாறக்கூடும். அப்போதும் சேர்ந்து வாழ முடியும். கெடுவே முடிந்துவிட்டாலும் மணஒப்பந்தத்தைப் புதுப்பித்துக்கொண்டு சேர்ந்து வாழ முடியும்.

இங்கே சேர்ந்து வாழ்வதற்கு 6 மாத அவகாசம் கிடைக்கிறது. ஆனால், இக்காலகட்டத்தில் பெண் வீட்டார் மகளை கணவன் வீட்டில் வாழ அனுமதிப்பதில்லை. இது, தம்பதியரிடையே இணக்கம் காண்பதற்கான வாயிலை அடைந்துவிடுகிறது. இதற்குப் பின்பும் சச்சரவு எழுந்தால், மூன்றாவது முறையாக ‘தலாக்’கைப் பயன்படுத்துவதற்கு முன்பு, ஒன்றுக்குப் பலமுறை யோசிக்க வேண்டும்; அவகாசம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், மறுபடியும் இனி சேர்ந்து வாழ வேண்டுமென்றால், கடுமையான பரிசோதனைக்கு உட்பட வேண்டும்.

மூன்றாவது முறையாக மும்மாதம் மனைவி காத்திருந்து, கணவனிடமிருந்து பிரிந்து, மற்றோர் ஆணை மணந்து, அவனுடன் இல்லறம் நடத்தி, அவ்விருவரிடையே இயல்பாகப் பிரிவினை உண்டாகி, அதற்கான ‘இத்தா’ பருவமும் முடிந்தபின்பே அப்பெண்மணியை முதல் கணவன் மணந்துகொள்ள முடியும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்தில், ருகானா (ரலி) என்ற நபித்தோழர், தம் மனைவியை ஒரே அவையில் மூன்று முறை ‘தலாக்’ சொல்லிவிட்டார். பின்னர் அதை எண்ணிப் பெரிதும் வருந்தினார். நபிகளாரிடம் வந்து விவரம் சொன்ன அவரிடம், எப்படி தலாக் செய்தீர்? என்று வினவினார்கள். ‘மூன்று முறை’ என்றார். ஒரே இடத்திலா? என்று வினவியதற்கு ‘ஆம்!’ எனப் பதிலளித்தார். அப்படியானால், அது ஒருமுறை சொன்ன ‘தலாக்’தான். விரும்பினால் அவரோடு சேர்ந்து வாழலாம் என்றார்கள் நபி (ஸல்) அவர்கள். (நூல்: அஹ்மத்)

ஒரே சமயத்தில் மூன்று முறை தலாக் செய்து, உறவை முற்றாக முறித்துக்கொள்ளும் நடைமுறை அப்போது இல்லாத காரணத்தால்தான், ஒருவர் அப்படிச் செய்துவிட்டார் என்ற செய்தி நபி (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டபோது, கடுமையாகக் கோபமடைந்தார்கள். அத்துடன், “நான் உங்களிடையே இருக்கும்போதே, அவர் இறைமறையுடன் விளையாடுகிறாரா?” எனக் காட்டமாகக் கேட்டார்கள். (நூல்: நஸயீ)

இரண்டாம் கலீஃபா உமர் (ரலி) அவர்கள் தமது ஆட்சிக் காலத்தில், யாரேனும் மூன்று முறை தலாக் சொல்லிவிட்டால், முதுகு வலிக்குமளவுக்குச் சாட்டையால் அடிப்பார்களாம்! (நூல்: சுனன் சயீத் பின் மன்சூர்)

ஆனால், அவர்களது ஆட்சியில் இது தொடர்கதையானபோது –அதாவது மூன்று முறை தலாக் செய்துவிட்டு ஒன்றுதான் எனது எண்ணமாக இருந்தது என ஆண்கள் தொடர்ந்து சொல்லிவந்தபோது- இனிமேல் யாரேனும் அவ்வாறு சொன்னால் மூன்றே நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்தார்கள். இனி சேர்ந்து வாழ்வது பிரச்சினையாகிவிடும் என்பதால், அவ்வாறு யாரும் செய்யக் கூடாது என எச்சரிக்கும் முகமாகவே இந்த அறிவிப்பை கலீஃபா வெளியிட்டார்கள்.

இதன் அடிப்படையிலேயே, முஸ்லிம் சட்ட அறிஞர்கள் இவ்வாறு கூறுவார்கள்: திருக்குர்ஆனின் அறிவுறுத்தலின்படி, இடைவெளிவிட்டு ஒன்று ஒன்றாக ‘தலாக்’ சொல்வதே சிறந்த, உன்னதமான, நபிவழியின்படி அமைந்த ‘தலாக்’ முறையாகும். ஒரே மூச்சில் மூன்று முறை தலாக் செய்து, எடுத்த எடுப்பிலேயே மணவாழ்வை அழித்துக்கொள்வதும் பெண்கள் வாழ்க்கையில் விளையாடுவதும் பாவகரமான, மிக அருவருப்பான, அனாசாரம் (பித்அத்) ஆகும்.

உணர்ச்சிவசப்பட்டு, தொலைநோக்கு இல்லாமல் இவ்வாறு செய்வதற்கு எதிரான பரப்புரையை, மார்க்க அறிஞர்களும் (உலமா) சமூக மற்றும் பெண்ணுரிமை ஆர்வலர்களும் முனைப்போடு மேற்கொண்டுள்ளனர். விவரம் தெரியாமலும் பொறுப்புணர்வு இல்லாமலும் சிலர் செய்துவிடும் குற்றத்திற்காக, ஒட்டுமொத்த சமூகத்தையும் சமயச் சட்டங்களையும் குறைகூறுவது எப்படி தகும்? அதைவிட, சட்டத்தையே மாற்ற வேண்டும் என்று சொல்லி பதற்றத்தை உருவாக்குவதும் சமயச்சார்பற்ற ஒரு நாட்டில், ஒரு வகுப்பார்மீது வேறு குடிமைச் சட்டங்களைத் திணிக்க முனைவதும் எப்படி ஜனநாயகமாகும்?

முஸ்லிம்களின் சமய நம்பிக்கையை, காலங்காலமாக அவர்கள் பின்பற்றிவரும் தனியார் குடிமைச் சட்டங்களை மாற்றவோ திருத்தவோ முயல்வதென்பது, அரசியல் சாசனத்தையே மிதிப்பதற்குச் சமம்!

Wednesday, November 02, 2016

இளம் ஆலிம்களே! உங்களைத்தான்! (5)




அரபிக் கல்லூரி மாணவக் கண்மணிகளே!

இதுவரை குர்ஆன் மற்றும் ஹதீஸைப் படித்தறிவதற்கு அடிப்படைத் தேவையான கலைகள் பற்றி அறிந்தோம். சொல் இலக்கணம், பொருள் இலக்கணம், பொருள் இலக்கியம், சொல்லணிக் கலை, பேச்சுக் கலை, அணியிலக்கணம், நவீன அரபிமொழி, அவற்றுக்கான கலைச்சொற்கள் பட்டியல் (10) ஆகியவற்றைப் பார்த்திருப்பீர்கள்; பாடங்களைப் பத்திரப்படுத்தியும் இருப்பீர்கள் என்று கருதுகிறேன்.

மாணவ - மாணவிகளுக்காக நடத்தப்படும் இந்த வலைதள வகுப்பு அவர்களை எட்டியதா? படிக்கிறார்களா என்பதை அறிய முடியவில்லை. எனினும், ஆசிரியர்கள், பெரியவர்கள் படித்துவிட்டு வரவேற்று கருத்துகள் எழுதியுள்ளனர்; பலருக்கு ஷேரும் செய்துள்ளனர். குறிப்பாக, கலைச்சொற்கள் பட்டியலுக்கு நல்ல வரவேற்பு. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! இனி குர்ஆனிய கலைகளைப் பார்ப்போம்.

குர்ஆனிய கலைகள்

நம்மைப் பொறுத்த வரை குர்ஆனிய கலைகள் என்று ஐந்தைக் கூறலாம். 1. சீராக ஓதுதல், அல்லது இராகமாக ஓதுதல் (தஜ்வீத் – Intonation). ஆரம்பப் பாடசாலையிலேயே (மக்தப்) திருக்குர்ஆனைப் பார்த்து ஓதக் கற்றிருப்பீர்கள். அரபி அட்சரங்கள்,ஒலிக்குறியீடுகள், வார்த்தைகளை எழுத்துக்கூட்டி வாசித்தல், ஒரு வசனத்தின் அரபி வாசகத்தை வேகமாக ஓதுதல் போன்ற பயிற்சிகள் எல்லாம் அங்கே அளிக்கப்பட்டிருக்கும். இது வெறும் ‘ஓதல்’ (திலாவா) மட்டுமே!

‘தஜ்வீத்’ என்பது, அந்த ஓதலை அழுத்தம் திருத்தமாகவும் நீட்டி நெளித்து சீராகவும் இராகத்தோடும் ஓதக் கற்பதே! எழுத்துகளைச் சரியாகவும் சீராகவும் உச்சரித்தல், குறில்-நெடில் அறிந்து குறுக்கியும் நீட்டியும் ஓதுதல், நெடிலில் (மத்து) எத்தனை ஸ்டெப், எந்த இடத்தில் என்பதைக் கவனத்தில் கொண்டு நீட்டியும் குறிலில் எந்த அளவிற்குச் சுருக்க வேண்டும் என்பதை அறிந்து குறுக்கியும் ஓதுதல், மூச்சுவிட வேண்டிய இடத்தில் விட்டு, நிறுத்த வேண்டிய கட்டத்தில் நிறுத்தி, நிறுத்தக் கூடாதஇடத்தில் சேர்த்து ஓதுதல்... என ஓதுதலுக்கான நெறிமுறைகளை அறிந்து ஓதுவதே ‘தஜ்வீத்’ ஆகும்.

மிகவும் கவனம் தேவை

இவற்றில், மிகமிக எச்சரிக்கையோடு அணுகவேண்டியது ஒன்று இருக்கிறதென்றால், அட்சரங்களின் உச்சரிப்புதான். எடுத்துக்காட்டாக, தொண்டைப் பகுதியிலிருந்து ஒலிப்பதே ‘ஹா’ (ح). இன்னொரு எழுத்து சற்று அதிர்வோடு ஒலிப்பது ‘ஹா’ (ه).மற்றொரு எழுத்து சற்றுக் காறலுடன் ஒலிப்பது ‘கா’ (خ). இம்மூன்றில் முதல் எழுத்து (ح) இடம்பெறுகிற சொல்: حَلَقَ (ஹலக). பொருள் (தலைமுடி) வழித்தான். இரண்டாம் எழுத்து (ه) இடம்பெறும் சொல்: هَلَكَ (ஹலக). பொருள்: அழிந்தான்.மூன்றாம் எழுத்து இடம்பெறும் சொல்: خَلَقَ (கலக). பொருள்: படைத்தான்.

இன்னொரு உதாரணம்: ت (தா); د (தால்); ط (தோ). இந்த மூன்று எழுத்துகளும் உச்சரிப்பில் நெருக்கமானவை. உச்சரிப்பு தவறினால், பொருளில் விபரீதம் ஏற்பட்டுவிடும். تِيْن (தீன்-அத்திப்பழம்), دِيْن (தீன்-மார்க்கம்); طِيْن (தீன்-களிமண்).

பொருளில் எவ்வளவு பெரிய வித்தியாசம்! எப்படி வேறுபடுத்துவது? எழுத்தில் சரி! மொழியில் உச்சரிப்பு ஒன்றே வழி. அவ்வாறே, அரபி அச்சரங்களில்

ت - ث - د - ذ - ط / ز - ج / ص - ش - س / ل - ظ - ض / ف - ب / ك - ق / ع - غ
ஆகிய ஏழு அணிகள் நெருக்கமான –சற்றே வேறுபடக்கூடிய- ஒலிகளை எழுப்பும் எழுத்துகளாகும். ஒவ்வொன்றுக்கும் இடையிலான உச்சரிப்பு வித்தியாசம் நாசூக்கானது. முறையாக ‘தஜ்வீது’ கற்று,பயிற்சியும் எடுத்தால்தான் பிசிறின்றி அட்சரங்கள் ஒலிக்கும். கொஞ்சம் தவறினாலும் சருக்கிவிடும்; பொருள் வழுக்கிவிடும்; குற்றம் நெருக்கிவிடும்.

அதுவும் திருக்குர்ஆன் வசனங்கள் எனும்போது, எவ்வளவு பிரயாசித்தமும் எச்சரிக்கை உணர்வும் தேவை என்பதைச் சிறிது சிந்தித்துப்பாருங்கள். நம் தொழுகை மட்டுமல்ல; பின்தொடர்ந்து தொழும் அப்பாவி மக்களின் தொழுகையும் சிறு பிழைகூடஇல்லாமல் நிறைவாக அமைய வேண்டுமா? இல்லையா?

திருக்குர்ஆனில் அல்லாஹ் தன் தூதருக்கு ஆணையிடுவதைப் பாருங்கள்: (நபியே!) குர்ஆனைத் திருத்தமாக ஓதுவீராக! (73:4) அதாவது நிறுத்தி நிதானமாக ஓதுவீராக! அப்போதுதான் பொருள் விளங்கி, சிந்திக்க முடியும்.

நான்கு நிலைகள்

‘தஜ்வீத்’ கலையில் நான்கு நிலை உச்சரிப்புகளும் ஒலிப்புகளும் உள்ளன. 1. குரல் நாள அதிர்வொலி (இழ்ஹார் – Voice). ஒவ்வொரு எழுத்தையும் அதனதன் பிறப்பிடத்திலிருந்து மூக்கொலிப்பின்றி வெளியிடல். எகா: مِنْ عَمَلٍ (மின் அமல்). இதில் ن எனும் எழுத்துஅதன் இயல்பாக ஒலிக்க வேண்டும்.

2. ஈர் உயிரொலி ஒன்றிய உச்சரிப்பு (இத்ஃகாம் – Synizesis). அசைவற்ற ஒலிக்குறியீடு (சுகூன்) உள்ள ஓர் எழுத்து, அசைவுள்ள ஒலிக்குறியீடு (ஹரகத்) உள்ள ஓர் எழுத்துடன் இணைந்து, ஈரெழுத்துகளும் ஓரெழுத்தாக அழுத்தத்துடன் ஒலிப்பது. எகா: مِنْ رَّبِّهِما (மிர்ரப்பிஹிமா). இதிலுள்ள ‘நூன்’ எனும் எழுத்து, அசைவற்ற ஒலிக்குறியீடு பெற்றது. இதை, அடுத்த எழுத்தான ‘ரா’ (ر) உடன் இணைத்து அழுத்தம் கொடுத்து உச்சரிக்க வேண்டும். நூனும் ‘ரா’வும் சேர்ந்து உச்சரிப்பில் ‘ரா’ எனும் ஒரே எழுத்தாகிவிடும்.

3. உருமாறிய ஒலி (இக்லாப் – Transposition). அசைவற்ற ஒலிக்குறியீடு (சுகூன்) உள்ள ‘நூன்’ (ن) எனும் எழுத்தை ‘மீம்’ (م) எனும் எழுத்தாக உருமாற்றி, ‘பா’ (ب) மற்றும் மூக்கொலிப்புடன் ஒலிப்பது. எகா: அம் பூரிக (أن بُورِك) இதிலுள்ள சுகூன் உள்ள ‘நூன்’ எனும்எழுத்தை ‘மீம்’ எழுத்தாக மாற்றி, அன் பூரிக என்பதை, ‘அம் பூரிக’ என உச்சரிக்க வேண்டும்.

4. கம்மு குரல் ஒலிப்பு (இக்ஃபா – Veiling). முதலிரண்டு வகைகளுக்கும் இடையிலான தன்மையில் அழுத்தக் குறியின்றி ஓர் எழுத்தை மொழியுதல். எகா: மின் குல்லின் (مِنْ كُلٍّ). இதிலுள்ள ‘நூன்’ (ن) எழுத்துக்கும் சரி! அடுத்த எழுத்தான ‘காஃப்’ (ك) எனும்எழுத்துக்கும் சரி! தனித்தனி உச்சரிப்பு உண்டு. எனினும், ‘நூனை’ அழுத்தாமல் உச்சரித்து ‘காஃப்’ உடன் சேர்த்து ஒலிக்க வேண்டும்.

இனிய குரலில் இராகமாக...

திருக்குர்ஆன் வசனங்களை, நாளிதழ் வாசிப்பதைப் போன்று உரைநடையில் வாசிக்காமல், ஓசை நயத்துடன் இராகமிட்டு ஓத வேண்டும். அதையும் இனிய குரலில் ஓதும்போது, செவிகளைக் கவர்ந்திழுத்து, கேட்போரை குர்ஆனுடன் ஒன்றச் செய்யும்அற்புதம் அங்கு நடக்கும். கேட்பவர், பொருள் புரிந்தவராக இருந்து, வசனத்தின் காட்சியைக் கண்ணில் கொண்டுவர முடிந்தவராகவும் இருந்துவிட்டால், அதைப் போன்ற பரவசம் வேறு இருக்க முடியாது. அனுபவித்தால்தான் தெரியும். இமாம், அதற்குள் ஏன் குனிந்துவிட்டார் என எண்ணத் தோன்றும்.

இன்றைக்கெல்லாம் சிறுவர், சிறுமியர், இளைஞர், பெரியவர் எனப் பலரும் பல்வேறு நாடுகளில் இனிய குரலில் ஓதி, மயக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பது பெருமைப்படும் உண்மை. குரலுக்காக மயங்குபவர்களே அதிகம். அத்துடன் பொருளுக்காகவும சேர்த்து கண்மூடி ரசிப்பவர்கள் சிலரே. இவர்களைப் பொருளின்பால் இழுக்கும் காந்தம் ‘காரி’யின் குரலே!

நபி (ஸல்) அவர்கள் ‘தர்ஜீஉ’ எனும் ஓசை நயத்துடன் ஓதுவார்கள். (புகாரீ – 5047); ஒரே எழுத்தைத் திரும்பத் திரும்ப தொண்டைக்குக் கொண்டுவந்து ஓசை எழுப்பி ஓதுவதே ‘தர்ஜீஉ’ (மீட்டல்) எனப்படுகிறது. எகா: அலிஃப் (ألِف) எனும் எழுத்தை ஆ... ஆ... ஆ... எனஇழுத்து ஓதும்போது ஒரே அட்சரத்தின் ஒலி நீண்டு ஒலிக்கும். இவ்விதம் ஓசை நயத்துடன் நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை ஓதியுள்ளார்கள். (ஃபத்ஹுல் பாரீ)

நபித்தோழர் அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது: (நான் இனிய குரலில் குர்ஆன் ஓதுவதைப் பாராட்டி) நபி (ஸல்) அவர்கள், “அபூமூசா! (இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த (சங்கீதம் போன்ற) இனிய குரல் உங்களுக்கும்வழங்கப்பட்டுள்ளது என என்னிடம் கூறினார்கள். (புகாரீ – 5048)

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் வழக்கம் நீட்டி ஓதுவதுதான். ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்’ என்பதில் பிஸ்மில்லா...ஹ் என நீட்டுவார்கள். அர்ரஹ்மா...ன் என்றும் நீட்டுவார்கள். அர்ரஹீ...ம் என்றும் நீட்டுவார்கள். (இதற்கு மத்துல் கிராஅத் – என்று பெயர்.) (புகாரீ – 5045)

மாணவச் செல்வங்களே!

குர்ஆனை ஆசையோடும் ஆர்வத்தோடும் ஓதிப் பழகுங்கள்! தஜ்வீதுடனும் இனிய குரலுடனும் ஓதுகின்ற இந்த உயர்ந்த கலையை இப்போதே –மத்ரஸாவிலேயே- கற்று, பயிற்சி பெற்று, தரமாக வெளியே வாருங்கள்! அல்லாஹ்விடம் நன்மையும் மக்களிடம் வரவேற்பும் இக்கலைத் திறனுக்கு உண்டு.







(சந்திப்போம்)