Monday, February 20, 2017

இளம் ஆலிம்களே! உங்களைத்தான்!

- அ. முஹம்மது கான் பாகவி


ரபி மத்ரஸாக்களின் மாணவக் கண்மணிகளே! குர்ஆனிய கலைகள் நம் பார்வையில் ஐந்து என முந்தைய தொடரில் குறிப்பிட்டிருந்தோம். அதில் முதலாவது, திருக்குர்ஆனைத் திருத்தமாகவும், இராகமாகவும் ஓதக் கற்பிக்கின்றதஜ்வீத்எனும் கலையாகும் என்றும் விவரித்திருந்தோம்.

திருக்குர்ஆன் மனனப் பிரிவு


அடுத்து இரண்டாவது, திருக்குர்ஆனைத் தவறோ தடுமாற்றமோ இல்லமால் மனனம் செய்கின்ற அற்புதமான கலை. பொதுவாக எல்லா முஸ்லிம்களும் குர்ஆனின் சில பகுதிகளையேனும் மனனம் செய்திருக்க வேண்டும். அப்போதுதான், தொழுகைகளில் குர்ஆன் அத்தியாயங்களை (சூரா) ஓதி, முறையாகத் தொழுகையை நிறைவேற்ற இயலும்.

குர்ஆனின் தோற்றுவாயானஅல்ஃபாத்திஹாஎனும் முதல் அத்தியாயத்தை ஓதாதவருக்குத் தொழுகையே இல்லைஎன நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரீ - 756)

அது மட்டுமன்றி, நபித்தோழர் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

இறைமறையில் ஒன்றுமே இல்லாத உள்ளம், குடியிருப்பவர் இல்லாத இல்லம் போன்றது. அந்த இல்லம் சிதிலமடையும்; அந்த உள்ளமும் சிதிலமடையும். (தாரிமீ)

இதன்றி, முழு குர்ஆனையும் முறையாக மனனம் செய்து, தொடர்ந்து ஓதிவருபவர்களுக்குத் தனிச்சிறப்பு உண்டு. நபித்தோழர் அபூஉமாமா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

குர்ஆனை (மனனமாக) ஓதிவாருங்கள்! இந்தப் பிரதிகள்தான் இருக் கின்றனவே! (பார்த்து ஓதிக்கொள்வோம்) என ஏமாந்துவிட வேண்டாம்! ஏனெனில், குர்ஆனை மனனம் செய்த இருதயத்தை அல்லாஹ் நிச்சயமாக ஒருபோதும் வேதனை செய்யமாட்டான். (தாரிமீ)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குர்ஆனை நன்கு மனனமிட்டுத் தங்குதடையின்றி ஓதுகின்றவர், கண்ணியம் நிறைந்த தூதர்(களான வானவர்)களுடன் இருப்பார். குர்ஆனை (மனனம் செய்திராவிட்டாலும் அதை) சிரமத்துடன் திக்கித் திணறி ஓதிவருகின்றவருக்கு இரு மடங்கு நன்மைகள் உண்டு. (முஸ்லிம் - 1462)

ஆக, திருக்குர்ஆனை மனனமிட்ட ஹாஃபிள்கள் வானவர்களுடன் இருக்கும் மரியாதையைப் பெறுகிறார்கள். மறுமையில் ஹாஃபிள்களுக்குக் கிடைக்கும் மாபெரும் தகுதியைப் பாருங்கள்; நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

குர்ஆனை மனனமிட்டவர் சொர்க்கத்தினுள் நுழையும்போது, “ஓதுங்கள்! (படித்தரங்களில்) ஏறிக்கொண்டே இருங்கள்என்று கூறப்படும். அவ்வாறே, அவரும் ஓதுவார். ஒவ்வொரு வசனத்திற்கும் ஒரு படித்தரத்தில் ஏறிக்கொண்டிருப்பார்; அவருக்கு மனனமாக உள்ள கடைசி வசனத்தை ஓதுகின்றவரை. (இப்னுமாஜா)

மனனப் பிரிவில் இருக்கும் மாணவர்களே! அல்லாஹ்விடம் உங்களுக்குள்ள மரியாதையைப் பார்த்தீர்களா? நன்கு தஜ்வீதுடன் தடுமாற்றமின்றி, பிழையின்றி, மனனம் செய்யுங்கள். வசனங்களின் வரிசைக் கிரமம் மாறிவிடாமல், ஒரே சொல் மறுபடி வரும் இடத்தில் குழப்பமடைந்துவிடாமல், உச்சரிப்பில் குளுறுபடி நேராமல், உருப்போடும்போதே மிகச் சரியாகவும் தரமாகவும் உள்ளத்தில் பதியச் செய்துவிடுங்கள்.

புனித ரமளானில் மட்டும் பயிற்சி எடுப்பது, மற்ற நாட்களில் தளர்ச்சி அடைவது என்று இருந்துவிடாதீர்கள். ஏனெனில், மறப்பதில் குர்ஆனுக்கே முதலிடம் என்றுதான் சொல்ல வேண்டும். நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கிறார்கள்:

குர்ஆனை (ஓதி அதை) கவனித்துவாருங்கள். ஏனெனில், என் உயிர் எவன் கையிலுள்ளதோ (ந்த இறை)வன் மீதாணையாக! கயிற்றில் கட்டி வைக்கப்பட்டுள்ள ஒட்டகத்தைவிட மிக வேகமாக குர்ஆன் (நினைவிலிருந்து) தப்பக்கூடியதாகும். (புகாரீ-5033)

குர்ஆன் மொழிபெயர்ப்பு:


திருக்குர்ஆன் கலைகளில் நாம் கற்க வேண்டிய மூன்றாவது கலை, திருக்குர்ஆனின் வசனங்களுக்கான பொருளை அறிவதாகும். குர்ஆனைப் பார்த்து ஓதவும் மனனம் செய்யவும் முடிந்த ஒருவருக்கு அதன் அர்த்தம் தெரியாது என்பது எவ்வளவு பெரிய இழப்பு! கையில் கருவூலத்தை வைத்துக்கொண்டு, அதை அனுபவிக்காமல் சுவைக்காமல் எடுத்தெடுத்துப் பார்த்துவிட்டுத் திரும்ப அதே இடத்தில் வைத்துப் பூட்டுகின்ற மனிதனுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?

இன்றெல்லாம், பொருள் அறிந்து குர்ஆனை ஓத வேண்டும் என்ற ஆர்வம் சாதாரண பொது மக்களுக்கே உருவாகியிருப்பதைப் பார்க்கிறோம். இதற்காக நடக்கும் சிறப்பு வகுப்புகளுக்கு வயதானவர்களும் இளைஞர்களும் படையெடுக்கிறார்கள். வாய்ப்பு இல்லாதவர்கள் மொழிபெயர்ப்புகளை வாசித்துத் தங்கள் அறியாமையை அகற்றிக்கொள்கிறார்கள். இன்னும் சிலர், தொழுகைக்குப்பின் வாசிக்கப்படும் மொழிபெயர்ப்பைக் கேட்டுப் பயனடைந்துவருகிறார்கள்.

அப்படியிருக்க, மத்ரஸா மாணவர்கள் இதில் எவ்வளவு கவனம் செலுத்த வேண்டும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? பொருள் தெரியாமல் பொதி சுமப்பதற்கு நாமென்ன இஸ்ரவேலர்களா?

திருக்குர்ஆனில், அதை அருளியவன் அறைகூவல் விடுக்கின்றான்:

உறுதியாக, இந்த குர்ஆனை அறிவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பினை பெறுபவர் உண்டா? (54:17)

இது, குர்ஆனை ஓத, மனனம் செய்ய, பொருள் அறிய.. என எல்லாவற்றையும் குறிக்கும். குர்ஆனின் சொல்லையும் பொருளையும் அறிவிதை எளிதாக்கியுள்ளோம். யார் அதை நாடி முயல்கிறாரோ நிச்சயமாக அவருக்கு அது சாத்தியப்படும்.

அவ்வாறே, நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

உங்களில் மேலானவர் யாரெனில், குர்ஆனைத் தாமும் கற்று, பிறருக்கும் கற்பிப்பவர்தான் (புகாரீ - 5028)

இதனாலேயே, சில அரபிக் கல்லூரிகளில் குர்ஆன் மொழிபெயர்ப்புக்கு மட்டும் தனியாக நேரம் ஒதுக்கப்படுகிறது. பெரும்பாலும் அரபி மொழி, அரபி இலக்கணம் அறிந்த பிறகே இவ்வகுப்பு நடத்தப்படும். மொழிபெயர்ப்பைக் கற்கும் முறை என்ன என்று பார்ப்போம்.

முதலில் வசனங்களில் இடம்பெறும் புதிய சொற்களுக்குப் பொருள் புரிய வேண்டும்; குறிப்பேட்டில் பதிந்துகொள்ள வேண்டும். அச்சொல்லின் வேர்ச்சொல்லைக் கண்டுபிடித்து அதன் பொருளைக் குறித்தால் போதும். அதன் வினைவடிவங்களையும் வாய்ப்பாடு வினையெச்சங்களையும் (சீஃகா, வஸ்ன்) இலக்கணப் பாடத்தை நினைவுகூர்ந்து அறிந்துகொள்ள முடியும்.

.கா: இக்கா(க்) நஅபுது. இதில், நஅபுது نعبد என்பதன் வேர்ச்சொல் (மஸ்தர்) இபாதத், இதன் பொருள்: வழிபாடு. பின்னர்நஅபுதுஎனும் வினைவடிவம் நிகழ்கால தன்மைப் பன்மை ஆகும். அப்படியானால், ‘வழிபடுகிறோம்என்பது பொருளாகும் என்பதை இலக்கண அறிவு சொல்லிக்கொடுத்துவிடும். பிறகென்ன? இய்யா(க்)என்பதற்குஉன்னைஎன்று பொருள். இது செயப்படுபொருள் (மஃப்ஊல்). பின்னால் இடம்பெற வேண்டிய இது, முன்னால் இடம்பெற்றதால், பொருளில் அழுத்தம் கொடுக்கும். எனவே, ‘உன்னையேஎனப் பொருள் செய்யவேண்டும் என்பதும் உங்களுக்குத் தெரிந்துவிடும்.

அடுத்து தனிச் சொற்களை, இலக்கணம் அறிந்து இணைத்து மொத்த வாக்கியத்திற்கான பொருளை அறிய வேண்டும். “உன்னையே வழிபடுகிறோம்என்பதுதான் மேற்சொன்ன (1;5ஆவது) வசனத்தொடரின் அர்த்தம் என்பது புரிந்துபோகும்.

திருக்குர்ஆன் விரிவுரை


குர்ஆனிய கலைகளில் நான்காவது, அதன் விளக்கவுரை (தஃப்சீர்). மொழிபெயர்ப்பில் பொருள் மட்டுமே நமது இலக்கு என்பதால், வசனத்தின் மேல்விளக்கம் புரிய வாய்ப்பில்லை. ஆனால், தஃப்சீரில் நீங்கள் அறிய வேண்டியது நீண்ட விளக்கமாகும். ஒரு வசனத்தின் கருத்து, அது அருளப்பெற்ற பின்னணி, அது சொல்லும் வரலாறு, அல்லது அறவுரை, அல்லது சட்டம், அது குறித்த இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துகள்.. முதலான விவரங்களை எடுத்துரைப்பதே தஃப்சீர் ஆகும்.

திருக்குர்ஆனின் பிரபலமான அரபி விரிவுரைகளில் ஒரு போக்கு உண்டு. ஒரு வசனத்திற்கு இன்னொரு வசனத்தைக் கொண்டு விளக்கம் அளிப்பார்கள். இந்த வசனம் எந்தப் பொருள் குறித்துப் பேசுகிறதோ அதே பொருள் வேறொரு வசனத்தில் விரிவாகப் பேசப்பட்டிருக்கும்; அல்லது இந்த வசனத்தின் பூடகத்திற்கு மற்றொரு வசனம் தெளிவைத் தரும். அல்லது இதன் பின்னணி அதில் தெரியவரும்.

அடுத்து திருக்குர்ஆன் வசனத்திற்கு நபிமொழியில் விளக்கம் கிடைக்கும். எனவே, அவ்வசனம் தொடர்பான நபிமொழிகளை அறிதல் வேண்டும் நபிமொழிகளில் வசனத்தின் கருத்து மட்டுமன்றி, அதிலிருந்து கிடைக்கும் பாடம், நடைமுறைப்படுத்தல், வசனத்தில் நமக்கு எழும் ஐயத்திற்கான விடை முதலான அரிய தகவல்களும் கிடைக்கும்.

அடுத்து நபித்தோழர்கள், இமாம்கள், சான்றோர்கள், விற்பன்னர்கள் ஆகியோர் அளித்திருக்கும் விளக்கங்களைப் படித்தறிய வேண்டும். மொழி வல்லுநர்கள், இலக்கிய மேதைகள், வரலாற்றாசிரியர்கள், சட்ட அறிஞர்கள் கூறும் நுணுக்கங்களையும் தேடிப் பிடித்துப் படிக்க வேண்டும்.

இதவெல்லாமே, வசனத்தின் உள்ளீட்டை உள்வாங்க உதவும் காரணிகளாகும். வசனத்தின் பொருளை மட்டும் மேலோட்டமாகப் பார்த்துவிட்டு, வசனம் சொல்ல வரும் தகவல் இதுதான் என, அவசரப்பட்டுத் தீர்மானித்துவிடக் கூடாது. எந்தத் துறையானாலும், துறை சார்ந்த அறிஞர் பெருமக்கள், ஆராய்ச்சியாளர்கள், அனுபவசாலிகள் ஆகிய மூத்தோரின் கருத்துகளைக் கவனத்தில் கொள்வது அவசியமாகும்.

மாணவச் செல்வங்களே! இதைப் பார்க்கும்போது உங்களுக்குப் பிரமிப்பாகவும் மலைப்பாகவும் தோன்றலாம். வகுப்பறையில் ஆசிரியர் சொல்லிக்கொடுப்பது கொஞ்சம்தான். அதையும் தவறவிடாமல் குறிப்பெடுத்துக்கொண்டு, மேல் விளக்கங்களை இயன்றவரை நீங்கள்தான் பெரிய நூல்களில் தேட வேண்டும்.

திருக்குர்ஆன் ஒரு ஆழ்கடல்! அதுவும் வற்றாத சமுத்திரம். அள்ள, அள்ள வந்துக்கொண்டிருக்குமே தவிர, தீர்ந்துபோகாது. நம்முடைய சிற்றறிவெனும் குழாய் மூலம் உறிஞ்சுவதால் எவ்வளவு நீர் கிடைத்துவிடப் போகிறது? அதற்காக கையளவுகூட அள்ளமாட்டேன் என்றுநேரத்தின்மீது பழிபோட்டுசுற்றிக்கொண்டிருந்தால், குர்ஆனின் ஒரு துளி ஞானம்கூட பெறாத பேதைகளாகிவிடுவோம். இழப்பு, கடலுக்கு அல்ல; நதிக்கு அல்ல. தாகமும் தேவையும் உள்ள நமக்கே இழப்பு!

திருக்குர்ஆன் எனும் வற்றா நதியில் மூழ்கி நீந்துங்கள்; அந்தக் கடலின் ஆழம் சென்று முத்து எடுங்கள்! சிப்பிதான் கிடைக்கும். பக்குவமாக, அதை உடைத்துப் பாருங்கள்! மின்னும் முத்து கண்களைக் கூசச் செய்யும்.

அவர்கள் இந்த குர்ஆனை ஆழ்ந்து சிந்திக்க வேண்டாமா? அல்லது உள்ளங்கள் மீது அதன் பூட்டுகள் உள்ளனவா? (47:24)

என அல்லஹ் கேட்கின்றான். இது, பொதுவான அறைகூவலாக இருந்தாலும் மார்க்க அறிவைத் தேடும் நமக்கல்லவா மிகவும் பொருந்தும்!


(சந்திப்போம்)