# காலச்சுவடு மாத இதழுக்கு கான் பாகவி யின் கடிதம் #
அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு…
‘நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு’ எனும் மொழிபெயர்ப்புத் தலையங்கம் கண்டேன். ஓர் ஆட்சியின் தகைமையைக் கணிக்க நான்கு ஆண்டுகள் என்பது, கூடுதல் கால அவகாசம்தான். இருப்பினும், ‘திருந்தலாம் அரசு’ எனும் எதிர்பார்ப்பைப் பொய்யாக்கும் அளவிற்கான இக்கால அவகாசத்தில் மேற்கொள்ளப்படும் சரியான மதிப்பீடு, அரசுமீதான நம்பிக்கையைக் கேள்விக்குரியதாக்கி, இனியும் சாக்குப்போக்குச் சொல்லி அரசு தப்பிக்க இயலாது என்ற நிஜத்தை உணர்த்தும் துலாக்கோலாக அமையும் என்பதை மறுக்கவியலாது.
ஓர் அரசாங்கம், குடிமக்களுக்கு நல்லது செய்யாவிட்டாலும், கெடுதி செய்யாமல் இருந்தாலே பேருதவியாக இருக்கும். இந்தியச் சமூகத்தில் குறிப்பிட்ட சில பிரிவினர்களைத் திட்டமிட்டே நசுக்கும் வேலையை மட்டுமே பா.ஜ.க. அரசு செய்துகொண்டிருக்கிறது. விளிம்பு நிலை மக்களான அப்பிரிவினரோ, தம் வாழ்வில் எத்திசையிலிருந்தாவது ஒளிக்கீற்று தென்பட்டுவிடாதா என ஆவலோடு காத்திருக்கும் வகையினர் ஆவர்.
ஆனால், அவர்களைப் பின்னுக்குத் தள்ளி, அடிமைகள்போல் ஆக்கி, சட்டபூர்வமான உரிமைகளைக்கூடப் பறித்து, தம் எதிர்காலம் என்னவாகுமோ என்ற அச்சத்திலேயே ஒவ்வொரு நொடியையும் கழிக்கின்ற அவல நிலையில்தான் அவர்களை வைத்திருக்கிறது இந்த அரசு. எம்மை நீங்கள் கைகொடுத்துத் தூக்கிவிடாவிட்டாலும் பரவாயில்லை; முதுகில் குத்திவிடாதீர்கள் என்று கெஞ்சுவதைப் போன்றுதான் அவர்களின் வாழ்நாள் இங்கே கழிகிறது. “இருக்கும் சுதந்திரத்தில் கை வைக்காதீர்கள்; அதுபோதும்” என்று, கூட்டம்போட்டு அவர்கள் கதறுகின்ற பரிதாப நிலையை உருவாக்கியதுதான், இந்த அரசின் நான்கு ஆண்டுகாலச் சாதனை!
நான் யாரை வழிபட வேண்டும்? எதை உடுத்த வேண்டும்? என்ன உண்ண வேண்டும்? எப்படிச் பேச வேண்டும்? எவ்வாறு சிந்திக்க வேண்டும்… என்பதையெல்லாம்கூட, இணை அதிகார மையங்கள் தீர்மானிக்கின்றன; மீறினால், வன்முறையை ஏவிவிடுகின்றன. அரசு நிர்வாகம் யார் பிடியில் சிக்கியுள்ளது என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்?
இதற்காகவா, எம் முன்னோர் விடுதலைப் போரில் பங்கெடுத்தனர்? வெள்ளையனே வெளியேறு என்று கர்ஜித்தனர்? நாட்டுப் பிரிவினையின்போது, இதுதான் எங்கள் தாய்மண் என்று கூறி தம் வாழ்வையும் சாவையும் இங்கேயே தீர்மானித்துக்கொண்டனர்?
வெட்டிக் கொல்வது, வன்புணர்ச்சி, ஊடக அராஜகம், சுய மரியாதை ஒழிப்பு, சமூகநீதி மறுப்பு, அரசியல் வெறுப்பு, மொழித் திணிப்பு, அதிகாரப் பறிப்பு ஆகியவற்றைத் தவிர, வேறு என்ன வளர்ச்சியைக் கண்டது நாடு?
இறுதியாக, இளைத்தவர்களின் இறை வேண்டல் இதுதான்: சமயச் சார்பற்ற சக்திகள் பலம்பெற வேண்டும்; மத துவேஷம், இன, மொழி வெறி அகல வேண்டும்; அரசியல் சாசனம் காக்கப்பட வேண்டும். எல்லோரும் எல்லாமும் பெற்று இன்புற வேண்டும்.
அன்புடன். அ. முஹம்மது கான் பாகவி
சென்னை-14.
30.06.2018