Saturday, December 22, 2018

சர்வாதிகாரத்தின் உச்ச கட்டம்

+++++++++++++++++++
# சர்வாதிகாரத்தின்
                 உச்ச கட்டம் #
+++++++++++++++++++
ஒரு நிறுவனம் அரும்பாடுபட்டு பெருநிதி செலவிட்டு ஒரு பிராஜக்ட்டை வெற்றிகரமாகத் தயாரித்து ,தன் விசுவாச ஊழியர்களுக்குக் கணினியில் அனுப்பிவைத்துக் கருத்துக் கேட்கிகறது.இது எப்படியோ போட்டி நிறுவனத்திற்குக் கசிய, பிராஜக்ட் உருவாக்கிய நிறுவன ஊழியர்களுக்கு வலைவீசுகிறது.அவர்களோ எதற்கும் மசியாத உண்மை விசுவாசிகள் என்பதை நிரூபிக்கின்றனர்.

இந்நிலையில்தான், நடுவண் அரசின் பத்து விசாரணை அமைப்புகளின் அதிகார வீச்சு போட்டி நிறுவனத்தின் நினைவுக்கு வந்தது.
ஐபி. என்சிபி. இடி. சிபிடிடி .டிஆர்யூ. என்ஐயூ .ரா. முதலான பத்து அரசு அமைப்புகள் எந்த கம்ப்யூட்டரையும் கண்காணிக்கலாம்.ஒத்துழைக்க மறுப்பவர்களுக்கு ஏழாண்டு சிறையும் அபராதமும் விதிக்கப்படும் என்ற மத்திய அரசின் புதிய சட்டம் போட்டி நிறுவனத்திற்கு வசதியாகப் போய்விட்டது.

இந்த அமைப்புகளின் அதிகாரிகளுக்குத் தரவேண்டியதைத் தந்து கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்தால் பிராஜக்ட் உருவாக்கிய கம்பெனியின் டேட்டா போட்டி கம்பெனியின் பாக்கெட்டில்.

இது என்ன அநியாயம் ?இது மட்டுமா ? கிளைண்டுகளுக்கு இது தெரிந்தால் இந்திய ஐடி கம்பெனிகளுக்கு யார் பிராஜெக்ட் கொடுப்பார்கள்? அல்லது நம் அதிகாரிகள் அப்படியொல்லாம் செய்யமாட்டார்கள் என்று சொல்வதற்கு அவர்கள் என்ன சொக்கத் தங்கமா?

சுருங்கச் சொன்னால் சர்வாதிகாரத்தின் உச்சத்தை தொட்டிருக்கிறது இந்த அரசாங்கம்.
+++++++++++++++++++

Monday, December 03, 2018

# காலச்சுவடு இதழுக்கு கான் பாகவி கடிதம் #

# காலச்சுவடு இதழுக்கு கான் பாகவி கடிதம் #

*வாசகர் கடிதம்*

‘அரசு – ரிசர்வ் வங்கி மோதல்கள்’ எனும் மொழிபெயர்ப்புத் தலையங்கம் கண்டேன்.

தன்னாட்சி அதிகாரம் படைத்த ரிசர்வ் வங்கியின் உள்விவகாரங்களில் மத்திய அரசு தன் எல்லையை மீறி தலையிடுகிறது என்ற குற்றச்சாட்டு ஒருபக்கம்! ஆர்.பி.ஐ. சட்டம் 1934இன் 7ஆம் பிரிவின்படி மத்திய அரசுக்குச் சகல உரிமைகளும் உண்டு என்ற வாதம் இன்னொரு பக்கம்! இரு அதிகார மையங்களும் உள்ளுக்குள்ளே ஒன்றையொன்று அனுசரித்தே முடிவெடுக்கின்றன என்ற தகவல் மற்றொரு பக்கம்!

இவற்றில் எது எதார்த்தம் என்பதைப் பற்றியெல்லாம் ஆராய்ந்து அறியும் நிலையில் சாமானிய இந்தியக் குடிமகன் இல்லை. அவன் முன்னுள்ள கேள்வியே வேறு. வங்கியல்லாத (தனியார்) நிதிநிறுவனங்களுக்குக் கடன் கொடுத்தது, மோசமான நிதிநிலைமையில் இருக்கும் மூன்று பொதுத்துறை வங்கிகளுக்கு பி.சி.ஏ. விதியை விட்டுக்கொடுத்தது. ஆர்.பி.ஐ.யின் மொத்த இருப்பையும் உபரியையும் அரசுக்கு மாற்றுவதற்கான அசாதார நடிவடிக்கை ஆகியனமூலம், நாட்டின் ஒட்டுமொத்த நிதிநிலைமைக்குப் பாதிப்பா, இல்லையா? பாதிப்புதான் என்றால், அதற்கு யார் பொறுப்பு? பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ள அந்தப் பொறுப்புதாரி நோக்கிச் சட்டத்தின் கரங்கள் நீண்டனவா?

இதுதான், கடைசி இந்திய வாக்காளனின் கவலையெல்லாம்! மொத்த வாராக்கடன்களில் முக்கால் பங்கை விழுங்கிய பெரிய வர்த்தக கார்ப்போரேட் நிறுவனங்களுக்கு, திரும்பிவராத இவ்வளவு பெரிய தொகையை அளிக்க ஊக்குவித்த அதிகார மையம் அடைந்த அணுகூலங்கள் என்ன? இந்த அபத்தமான முடிவை, யாரைக் கேட்டுப் பொதுத்துறை வங்கிகள் எடுத்தன? இத்தனை கோடி வாராப் பணத்திற்கு ‘மஞ்சள் நோட்டீஸ்’ ஒன்றுதான் விடையா? ஐந்தும் பத்தும் வாங்கிவிட்டுக் கடனைத் திருப்பித் தராத அப்பாவி விவசாயிமீது பாயும் சட்டம், இந்த அறக்குற்றவாளிகள்மேல் வீரியத்தோடு பாயாதது ஏன்?

இதற்கு முன்னர் ஒரு தடவை (2014-16) ரிசர்வ் வங்கி தன் வருமானம் முழுவதையும் ‘உபரி’ என்று சொல்லி அரசுக்குத் திருப்பிவிட்டது; அதுவும் அரசு கொடுத்த நெருக்கடியின்பேரில். இதைக் காட்டிலும் 63 விழுக்காடு கூடுதலான உபரியைக் கைப்பற்ற 2018 நிதியாண்டில் அரசு ஒரு கொள்கையைப் பயன்படுத்தியது என்றால், இது எதில்போய் முடியும் என்ற அச்சம் ஏற்படுகிறதா, இல்லையா? வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாத பெரிய கார்ப்போரேட் நிறுவனங்களிடம் முக்கிய அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதைப் பார்க்கும்போது, தேசத்தின் பொருளாதாரம் அவர்களிடம் அடகு வைக்கப்பட்டுவிட்டதோ என்ற ஐயத்தை இது தருகிறதா, இல்லையா?
+++++++++++++++++++