இறக்கும் வயதன்று; ஆனாலும்...
+++++++++++++++++++
சைதங்கநல்லூர் அரபிக் கல்லூரி நிறுவனரும் தாய்க்கல்லூரி பாகியாத்தின் முன்னாள் ஆசிரியருமான மெளலானா ஆதம் முஹ்யித்தீன் ஃபாஸில் பாகவி அவர்கள் மறைவு செய்தி கேட்டுத் திடுக்குற்றேன்.
ஆலிம் பப்ளிகேஷன்ஸ் மெளலானா யூசுஃப் சித்தீக் மிஸ்பாஹி அவர்கள் ஆதம் ஹழ்ரத் அவர்களின் உடல் நிலை குறித்து சில தினங்களுக்கு முன்பு தான் விரிவாகத் தெரிவித்திருந்தார். இருந்தாலும் மவ்த் அளவுக்கு எண்ணத் தோன்றவில்லை. வயது அதற்கு இடம் கொடுக்கவில்லை.சர்க்கரை நோய்க்கப்பால் வேறு ஏதோ நோய் பாதித்திருக்க வேண்டும்.
எப்படியானாலும் திறமை வாய்ந்த ஓர் நல்லாசிரியர் நம்மை விட்டுப் பிரிந்து விட்டார்.எப்போதும் சிரித்த முகத்துடன் காட்சியளிக்கும் ஆதம் ஹழ்ரத் , மாணவர்களிடம் பரிவோடு நடந்துகொள்ளும் பண்பாளர்.பாடத்தில் திறமைசாலி. இலங்கை மத்ரஸாவில் பணிபுரிந்தவர்.தம் சொந்த மண்ணில் சொந்தமாக மத்ரஸா உருவாக்கி நடத்திவந்தவர்.
மன்திக் (லாஜிக்),ஃபல்ஸஃபா ( கிரேக்கத் தத்துவம்), ஃபலக் (வானவியல்) ஆகிய கலைகளில் தனி ஆர்வம் கொண்டவர். ஃபிக்ஹில் ஒரு நூல் எழுதியவர்.
இப்படி திறமையான மார்க்க அறிஞர்கள் ஒருவர் பின் ஒருவராக மறைந்து கொண்டிருப்பது சமுதாயத்திற்குப் பேரிழப்பாகும்.இழப்பை ஈடு செய்யத்தான் ஆளில்லை. இறைவன் காக்க வேண்டும்.
எஞ்சியிருப்போர் தம் வாழ்நாளைப் பயனுள்ள வழியில் செலவிட வேண்டும் என்பதையே இத்தகைய மரணங்கள் நமக்கு உணர்த்துகின்றன.
மறைந்த வரின் பிழைகளை மன்னித்து மறுமை வாழ்வை வசந்தமானதாக ஆக்கி இறைவன் அருள் புரிவானாக. ஆமீன்.
ஏக்கத்துடன் கான் பாகவி.