Sunday, July 05, 2020

அன்பர்களே!விதியை வெல்ல முடியாது; என்றாலும் ...

~~~~~~~~~~~~~
அன்பர்களே!விதியை வெல்ல முடியாது; என்றாலும் ...
~~~~~~~~~~~~~
அண்மைக் காலமாக வரும் மரணச் செய்திகள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. 

உறவுகள், ஆசிரியர்கள், உடன் கற்றவர்கள்,நம்மிடம் கற்றவர்கள், சமூக ஆர்வலர்கள்,சமுதாயத் தலைவர்கள், அதிகாரிகள், அமைச்சர்கள், சாமானியர் ...என எல்லாத் தரப்பினரும் இந்தப் பெருநோயால் பாதிக்கப்பட்டும் பலர் உயிர்நீத்தும் வருகின்ற செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

இதற்கு வயது வித்தியாசமோ பார்க்கின்ற தொழில் வித்தியாசமோ கிடையாது.தலைவிதி எதுவோ அது நடந்தே தீரும். யாராலும் ஒரு விநாடிகூடத் தள்ளிப்போட முடியாது. ஜனாஸாவைக்கூட உறவினரும் சம்பத்தப்பட்டவரும் பார்க்க முடியாத, இறுதிப் பிரார்த்தனையில் கலந்துகொள்ள முடியாத பரிதாபம் இருக்கிறதே சொல்லிமாளாது.

இருப்பினும், நமக்கென சில தற்காப்பும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தேவைதானே! அதைக் கடைப்பிடிப்பதில் நம்மிடம் கவனம் இருக்க வேண்டும் அல்லவா? 

முதலில் வெளியே போவதை இயன்ற வரை தவிருங்கள். அடுத்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை அலட்சியமின்றி மேற்கொள்ளுங்கள். திக்ர் மற்றும் துஆக்களில் அதிகம் ஈடுபடுங்கள்.அலுவலகப் பணியை வீட்டில் அல்லது பாதுகாப்பான இடத்தில் செய்யுங்கள்.கரோனா தொடர்பான செய்திகளை அதிகம் பார்க்காதீர்கள். அதைப் பற்றியே எப்போதும் பேசாதீர்கள்.சிந்திக்காதீர்கள்.

இறுதியாக இறைவன் மீது பாரத்தை போட்டுவிட்டு ரிலாக்ஸாக இருங்கள்.உடன் இருப்போரையும் ரிலாக்ஸாக வைத்துக்கொள்ளுங்கள்.

ஒளிந்திருந்த குகை வாயிலை எதிரிகள் ஆயுதத்துடன் நெருங்கிவிட்ட நெருக்கடியான நிலையிலும் தோழரிடம் , மூன்றாவதாக நம்முடன் இறைவன் இருக்கிறான் என்று நபிகளார் சொன்ன ஆறுதலை அடிக்கடி நினைத்துக்கொள்ளுங்கள்.

அனைவருக்கும் அவனே போதுமானவன். حسبنا الله ونعم الوكيل

அன்புடன் உங்கள் கான் பாகவி

Wednesday, July 01, 2020

கிடைத்த ஓய்வு வீண்போகலாமா?

*கிடைத்த ஓய்வு வீண்போகலாமா?*

*அ. முஹம்மது கான் பாகவி*

பொது முடக்கம் என்றும் முழு ஊரடங்கு என்றும் அரசு ஆணை பிறப்பிக்க, நாமெல்லாரும் வீட்டுக்குள் முடங்க வேண்டிய கட்டாயம் நேர்ந்து பல மாதங்களாகிவிட்டன. இது எப்போது முடியும்; விடிவு பிறக்கும் என ஒவ்வொருவரும் ஏங்கித் தவிக்கும் பரிதாபத்தைக் கண்டு நெஞ்சு வெம்பித்தான் போகிறது. எல்லாம் கரோனா கொடுத்த ‘சீர்’கள்.

‘சும்மா’ இருப்பதைப் போன்றதொரு தண்டனை வேறு இருக்காது. நகராமை உயிரின்மையின் அடையாளம் அல்லவா? உயிர் வாழ்கிறோம் என்பதற்குச் சான்றே இயக்கம்தானே! அதுவே நின்றுபோனால், மூச்சு நின்றுவிட்டது என்றுதானே பொருள்! சிலவேளை இது மன அழுத்தத்திற்குக் காரணமாகி மரணத்திற்கே வழிவகுத்தாலும் வியப்பதற்கில்லை.

இப்போது தெரிகிறதா? பணி செய்வதன் அருமை! சரி! விதியை நோகக் கூடாது. ஏன், இதையே நமக்குக் கிடைத்த ஓர் ஓய்வாகக் கருதி, புண்ணியங்கள் தேடிக்கொள்ளக் கூடாது? காலம் கையிலிருக்கும்போது பயன்படுத்தத் தவறினால், பின்னர் கெஞ்சினாலும் கிட்டாது காலத்தின் ஒரு கணம்கூட.

மாணவக் கண்மணிகளே! பள்ளி, கல்லூரி, மத்ரஸா ஆகிய கலைக் கூடங்களில் பயின்றுவரும் நீங்கள், உங்களுக்குக் கிடைத்த ஓய்வு காலத்தை வீணாகக் கழிக்காமல், வினயமாகக் கழித்தால் என்ன என்று யோசித்துப்பாருங்கள்!

முதலில் மத்ரஸாக்களில் கற்ற, அல்லது கற்றுக்கொண்டிருக்கிற மார்க்கக் கல்வியாளர்களுக்குச் சில யோசனைகள்! பரிந்துரைகள்:

1. “கற்றது கைமண் அளவு; கல்லாதது உலகளவு” -என்பார்கள். மத்ரஸா பாடத்திட்டத்தில் இல்லாத, அதே நேரத்தில் நமக்கு மிகவும் இன்றியமையாத நூல்கள் எத்தனையோ உண்டு. அவற்றைக் கண்டுபிடித்து நீங்களே வாசிக்கலாம்! முக்கியக் குறிப்புகளைப் பதிவு செய்துகொள்ளலாம்! தெரிய முடியாததை அருகிலுள்ள அறிஞர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

இஸ்லாமிய வரலாறு, நபிமார்கள் வரலாறு, நபித்தோழர்கள் வரலாறு, இந்திய வரலாறு, முடிந்தால் உலக வரலாறு, இதிய சாசன சட்டம், இஸ்லாமிய அறிவியல், பொருளியல், அரசியல், சட்டவியல், குடும்பவியல், சமூகவியல், தனிமனித ஒழுக்கவியல், உளவியல், வணிகவியல்... என நிறைய துறைகள் நமக்கு அந்நியமாக உள்ளன.

இவற்றை உங்களால் சுயமாகக் கற்க முடியும் என்பதைவிடக் கற்றாக வேண்டும். அதற்கு இந்த ஓய்வைப் பயன்படுத்துங்கள்.

2. இமாம்களாக இருப்பவர்களுக்கு, ஏன் எல்லா ஆலிம்களுக்கும் ‘தஜ்வீத்’ கலை மிகமிக அவசியமானது. இக்கலைக்காக நேரத்தைச் செலவிட்டுப் பயிற்சியாளர்கள் மூலம் தரமான பயிற்சி பெறலாம்.

3. ஜும்ஆ உரை மட்டுமன்றி, பல்வேறு நிகழ்ச்சிகளில் நாம் உரையாற்ற வேண்டியவர்களாக உள்ளோம். உரைக்குக் குரல் மட்டும் போதாது. மொழியும் தேவை. அத்துடன் காலத்திற்கேற்ற தகவல்களும் தரவுகளும் தேவை. இவற்றைத் தலைப்புகள் வாரியாகத் திரட்டிப் பதிவு செய்துகொண்டால், நம் உரைகள் அர்த்தமுள்ளவையாக அமையும்.

அடுத்து பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர். வீட்டுக்குள் அடைந்து செல்பேசியைக் கையில் வைத்துக்கொண்டு, எப்போது பார்த்தாலும் இணையத்திலேயே நேரத்தைக் கழிப்பதைக் கைவிடுங்கள்! உங்கள் எதிர்காலத்திற்கு உதவக்கூடிய துணைக் கலைகளைக் கற்றுப் பயிற்சி பெறுவதில் இந்த ஓய்வு நாட்களை உருப்படியாகச் செலவிடுங்கள்.

1. ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்பயிற்சி. என்னதான் திறமையாகப் படித்திருந்தாலும், வேலைவாய்ப்புக்கு மிகவும் அவசியமானது மொழியாற்றல். நுழைவுத் தேர்வு அல்லது நேர்காணலில் நீங்கள் வெல்ல வேண்டுமென்றால், மொழித் திறன்தான் முதல்படியாக உள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள்.

மொழித் திறனை வளர்த்துக்கொள்வதற்கான ஆன்லைன் வகுப்புகள் நடக்கின்றன. அவற்றில் சேர்ந்து, உங்கள் பொன்னான நேரத்தைப் பயனுள்ள வகையில் கழியுங்கள்.

2. கணினிப் பயிற்சி. கணினியில் தட்டச்சுப் பயிற்சி, கணக்குப் பதிவுப் பயிற்சி, செயலிகளை (ஆப்) உருவாக்கி இயக்கும் பயிற்சி என வகைவகையான துறைகள் உள்ளன. இவற்றை நீங்கள் இப்போதே கற்றுக்கெண்டால், பின்னால் துணை நிற்கும்.

கையால் யாரும் எழுதுவதில்லை இப்போதெல்லாம்; எல்லாம் கணினிமயமாகிவிட்டன என்பதை மறவாதீர்!

3. கைத்தொழில் ஏதேனும் ஒன்றைக் கற்கலாம்! வயரிங், ஃபிட்டிங், ரிப்பேரிங்... என ஏராளமான -லாபகரமான- தொழில்கள் எப்போதும் உங்களுக்கு உதவும்.

4. நீங்கள் கல்லூரி அல்லது பள்ளி மாணவர்கள். உங்களால் எத்தனை பேருக்குத் தொழுகைமுறை தெரியும்? குர்ஆன் பார்த்து ஓதத் தெரியும்? சூராக்கள் மனப்பாடமாக ஓதத் தெரியும்? தஸ்பீஹ், திக்ர், துஆக்கள் ஆகியன முறையாகக் கற்றவர்கள் எத்தனை பேர்?

அன்றாட வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய சுன்னத்தான நடைமுறைகள், ஹலால் (அனுமதிக்கப்பட்டது), ஹராம் (தடை செய்யப்பட்டது), ஈமான் மற்றும் இஸ்லாம் பற்றிய விளக்கங்கள் போன்ற மார்க்க விஷயங்களைக் கற்றவர்கள் உங்களில் எத்தனை பேர்?

இதையெல்லாம் கற்க இந்த ஊரடங்கை ஏன் நமதாக்கிக்கொள்ளக் கூடாது? அருகிலுள்ள ஆலிம்களைச் சந்தித்து, இதற்கான டியூஷன் நடத்தச் சொல்லுங்கள்! ஆங்கிலமும் கணினியும் தொழில்நுட்பமும் இம்மையில் சோறுபோடும் என்றால், மார்க்கம்தான் மறுமையில் சோறுபோடும் என்பதை மறந்துவிடாதீர்கள்!