Thursday, March 25, 2021

முஸ்னது அஹ்மதுக்கு தினமனி நாளிதல் மதிப்புரை

Tuesday, March 16, 2021

முஸ்னது அஹ்மது தமிழாக்கம் முதலிரு பாகங்கள் திருச்சி வெளியீடு

முஸ்னது அஹ்மது தமிழாக்கம் முதலிரு பாகங்கள் திருச்சி வெளியீடு

Thursday, March 04, 2021

உனக்கும் வாழ்வு உண்டு!மயங்காதே மகனே!

உனக்கும் வாழ்வு உண்டு!
மயங்காதே மகனே!
பேராசிரியர், அ. முஹம்மது கான் பாகவி

எந்த உயிரினத்தையும் இறைவன் வீணாகப் படைக்கவில்லை. ஒவ்வொன்றின் படைப்பிலும் ஒரு நோக்கம் உண்டு; தத்துவம் உண்டு. ஆழ்ந்து சிந்திப்போருக்கு இந்த உண்மை புலனாகும். “நாம் வானத்தையும் பூமியையும் அவ்விரண்டுக்கும் இடையிலுள்ளவற்றையும் வீணாகப் படைக்கவில்லை” (38:27) என்றுரைக்கின்றான், படைத்தவன் அல்லாஹ்.
அது மட்டுமன்று. எல்லாப் படைப்புகளின் வாழ்வாதாரத்திற்கான பொறுப்பையும் படைப்பாளனே ஏற்றுக்கொண்டிருக்கின்றான். அப்படி இல்லை என்றால், படைப்புகளால் என்ன செய்ய இயலும்? கொடுப்பவன் அவன்; பெறுபவர்களே அவன் அடிமைகள்.
“பூமியிலுள்ள எந்த உயிரினமானாலும், தன் இறக்கைகளால் பறந்து செல்லும் எந்தப் பறவையானாலும் அவையும் உங்களைப் போன்ற இனங்கள்தான்” (37:38) என்று அறிவிக்கும் அருளாளன் அல்லாஹ், “பூமியில் உள்ள எந்த உயிரினமானாலும், அதற்கு உணவை(ப் பெறும் வழியைக் காட்டி) தருவது அல்லாஹ்வின் பொறுப்பாகவே உள்ளது” (11:6) என்று வாக்களிக்கின்றான்.
எல்லா உயிருக்கும் வாழ்வாதாரம்
ஆக, உலகில் படைக்கப்படும் ஒவ்வோர் உயிரினத்திற்கும் உரிய வாழ்வாதாரம், ஏற்கெனவே உலகில் எங்கோ ஓரிடத்தில் தயாராக வைக்கப்பட்டுள்ளது. உயிரினம் செய்ய வேண்டிய வேலை ஒன்று உண்டு. அதுதான் தேடல்; அல்லது முயற்சி. தேடலுக்கு முன்னால், அதற்கான அறிவையும் பயிற்சியையும் பெற்றாக வேண்டும். தேவையான தகைமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்; உழைக்க வேண்டும்; வியர்வை சிந்த வேண்டும்.
இருந்த இடத்தைவிட்டு நகரவேமாட்டேன்; யாரேனும் கை கொடுத்து என்னைத் தூக்கிவிட வேண்டும்; நான் ஊரைச் சுற்றிக்கொண்டு வீணாகப் பொழுதைக் கழிப்பேன்; என் குடும்பம், என் சமுதாயம், என் நாடு எனக்கு உதவ வேண்டும் -என்ற எதிர்பார்ப்பில் நாட்களைக் கழித்தால், யாரும் உதவ முன்வரமாட்டார்கள். மற்றவர்மீது பழியைப் போட்டு, தன் மீதுள்ள பொறுப்பை மறந்து உட்கார்ந்துகிடந்தால், வாழ்வாதாரம் என்ற கனியைப் பறிக்கவே இயலாது.
“படைத்தவன் கொடுப்பான்” என்ற அசைக்க முடியாத நம்பிக்கை (தவக்குல்) இருக்க வேண்டிய அதே நேரத்தில், இலட்சியத்தை அடைய நகர வேண்டும்; ஓட வேண்டும்; ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். நமக்கான வாழ்வாதார ஒதுக்கீடு எங்கே ஒளிந்திருக்கிறதோ அந்த இடத்தைப் பிடிக்கும்வரை ஓயக் கூடாது; ஓட்டத்தை நிறுத்தக் கூடாது.
முயன்றால் முடியும்
இறைவன் திருமறையில் பகர்வதைப் பாருங்கள்: மனிதனுக்கு, அவன் முயற்சி செய்ததைத் தவிர வேறு எதுவும் கிடைக்காது. (53:39)
இது, மறுமைக்கு மட்டுமன்றி, இம்மைக்கும் பொருந்தும். இம்மையில் நீங்கள் தேடிக்கொண்ட வினைக்கான பிரதிதான் மறுமையில் கிடைக்குமே தவிர, நீங்கள் தேடாத ஒன்றுக்கான பலன் கிடைக்காது. அவ்வாறுதான், இவ்வுலகிற்காக எதை நாம் தேடுகிறோமோ அதுதான் நமக்குக் கிடைக்கும். தேடாத ஒன்றுக்கு ஆசைப்படுவது அறிவீனமாகும்.
அவ்வாறு தேட முயலும்போது, நம் திறமையையும் உழைப்பையும் மட்டும் நம்பியிராமல், இறைவனின் அருளையும் ஆதரவையும் பலமாக நம்ப வேண்டும். நபி (ஸல்) அவர்களின் அழகான, ஆழமான தத்துவம் ஒன்றைப் பாருங்கள்:
நீங்கள் அல்லாஹ்வைச் சார்ந்திருக்க வேண்டிய விதத்தில் சார்ந்திருந்தால், பறவைகளுக்கு உணவளிக்கப்படுவதைப் போன்று உங்களுக்கும் உறுதியாக உணவளிக்கப்படும். பறவை ஒட்டிய வயிற்றுடன் காலையில் புறப்பட்டுச் செல்கிறது. நிரம்பிய வயிற்றுடன் மாலையில் (கூடு) திரும்புகிறது. (திர்மிதீ, ஹதீஸ் - 2266)
அதாவது ஆறறிவு அற்ற பறவை என்ன நம்பிக்கையோடு காலையில் கூட்டைவிட்டுப் புறப்படுகிறது! காலியான வயிற்றுடன் காலையில் புறப்படும் பறவை, மாலையில் நிரம்பிய வயிற்றுடன் திரும்புகிறதே! அது மட்டுமா? தன்னை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கும் தன் குஞ்சுக்கும் அல்லவா தீனியைத் தேடிக் கொண்டுவந்து ஆசையோடு ஊட்டுகிறது.
அந்தப் பறவைக்கு உணவளித்தவன் யார்? இதே நம்பிக்கை ஆறறிவு படைத்த மனிதனுக்கு மட்டும் ஏன் இல்லாமல்போய்விடுவிறது? இந்த நம்பிக்கையோடு உழைத்தால், உணவு மட்டுமன்றி உயர்வும் நிச்சயம்.
இதுதான் இறைசார்பு
இந்த நபிமொழி, ‘தவக்குல்’ என்ற இறைசார்புக்குச் சரியான விளக்கமளிக்கிறது எனலாம்! ‘தவக்குல்’ என்பது, நான் இறைவனை நம்பியிருக்கிறேன்! அவன் எனக்குச் சோறுபோடுவான் என்று உழைக்காமல் சோம்பிக் கிடப்பதற்குப் பெயரன்று. மாறாக, நம்பிக்கையுடன் முயற்சியும் மேற்கொள்ள வேண்டும். அந்த முயற்சியில் இறைவன் வெற்றியளிப்பான் என நம்ப வேண்டும்.
இதுதான், ‘தவக்குல்’ எனும் இறைசார்பு. வெற்றி கிட்டினால் இறைவனுக்கு நன்றி. வெற்றி கிட்டாவிட்டால் பொறுமை. பறவையேகூட படைத்தவன் பார்த்துக்கொள்வான் என்று கூட்டில் அடைந்து கிடக்கவில்லை. காலையில் இரையைத் தேடி கூட்டைவிட்டும் குஞ்சைவிட்டும் பறந்து செல்கிறது எங்கோ! இரையைத் தேடுகிறது எப்படியோ! மாலையில் திரும்பும்போது, அதன் வயிறும் நிரம்பியுள்ளது; குஞ்சுக்கு வேண்டியதும் வாயில் நிரம்பியுள்ளது.
ஆக, இரை கிடைத்தால், அது இறைக்கருணை. கிடைக்காவிட்டால், அது இறைவிதி. இரண்டையும் சமமாகப் பாவிக்கும் ஈமான் இருந்துவிட்டால், வாழ்க்கையே சொர்க்கம்தான். உயரும்போது மமதை கொள்ளவோ, தாழும்போது விரக்தி அடையவோ இடமிருக்காது; மன அழுத்தமும் வாட்டாது