Thursday, December 23, 2021

18இல் வளையாதது 21இல் வளையப்போகிறதா?

18இல் வளையாதது 
21இல் வளையப்போகிறதா?
~~~~~~~~~~~~~~~~~~~
பெண்களின் திருமண வயதை 21ஆக உயர்த்தி சட்டமியற்றத் துடிக்கிறது ஒன்றிய அரசு. பொதுவாக இந்த அரசுக்கு இப்படி சர்ச்சைக்குரிய வேண்டாத வேலைகளைச் செய்வதே வேலையாகிப்போனது.

சரி! என்னதான் காரணம் சொல்கிறார்கள்? பாலின சமத்துவம் வேண்டுமாம்!ஆணுக்குத் திருமண வயதாக 21 இருக்கும்போது பெண்ணுக்கு மட்டும் 18 என்பது பாலினப் பாகுபாடு அல்லவா? இரு பாலினருக்கும் இயற்கையிலேயே பருவ வேறுபாடுகள் இருக்கும்போது அதைப் புறம் தள்ளிவிட்டு கல்யாண வயதைக் கூட்டுவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை இவர்கள் மறைக்கப்பார்க்கிறார்கள். 

பருவமடைவதில் தொடங்கி, பாலியல் இச்சை, குழந்தைப்பேறு, நோய் நொடிகள்,உடலமைப்பு, குழந்தை வளர்ப்பு, ஆயுள் காலம்...என ஒவ்வொரு கட்டத்திலும் ஆண்- பெண் வேறுபாடு என்பதை இவர்களால் மறுக்க முடியுமா?

பள்ளிப் பருவத்திலேயே பாலியல் கொடுமைகளுக்கு இலக்காகி வரும் பெண்களை கல்லூரிப் பருவம் வரை இழுத்து , இன்னும் மூன்றாண்டுகளுக்குக் கொடுமைகளை அனுபவியுங்கள் என்று வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதுதான் பாலின சமுத்துவமா?

 ஆண்களுக்குக் கருப்பை இல்லை. புகுந்து விளையாடுகிறார்கள். பெண்ணோ என்னதான் தடுப்புச் சாதனங்களைப் பயன்படுத்தினாலும் கருக்கலைப்பு வரை போகிறதே எப்படி? 


பாலின சமத்துவம் பேசி எல்லா அரங்குகளுக்கும் மகளிரை இழுத்துவந்து விட்ட இந்த அநாகரிக உலகில், ஆண்களின் வக்கிரப் புத்திக்கு மேலும் கால அவகாசம் தரவா? இந்த ஏற்பாடு?

படிப்பு, வேலைவாய்ப்பு, சுயமுன்னேற்றம் என்றெல்லாம் கதைகட்டிவிட்டு மங்கையரின் மானமிகு வாழ்க்கைக்கு வேட்டுவைப்பது எந்தவகை தத்துவம்?

ஒரு பெண்ணின் குடும்பச் சூழ்நிலை, வரன் தாமதம், உடல் நிலைப் பாதிப்பு போன்ற நியாயமான காரணங்கள் இருந்து, தாமே முன்வந்து 21 என்ன? 31இல் திருமணம் செய்துகொண்டால் அஃது அவளது உரிமை. அதைவிடுத்து, எல்லாம் சாதகமாக இருக்கும்போது ஒரு பெண் 18இல் திருமணம் செய்ய விரும்பினால் அதை எப்படி சட்டம் போட்டுத் தடுக்கலாம்?


இல்லை. முன்னேற்றம், பக்குவம், வளர்ச்சி...என நீங்கள் காரணத்தை அடிக்கினால் ,18இல் வளையாதது 21இல் வளையப்போகிறதா?

இறைவனே!காப்பாற்று எம் இளவரசிகளை.
வேறு என்ன சொல்ல?