வெற்றி அல்லது தோல்வியைத் தீர்மானிப்பது அந்த ஒரு விநாடிதான். ஒரு நிமிடம் என்பது எவ்வளவு நீளமானது என்பதை, சாலையில் சிக்னலுக்காகக் காத்திருக்கும்போது ஒவ்வொருவரும் உணர்வார்கள்.
இழந்ததைத் திரும்பப் பெற்றுவிடலாம். கல்வி, ஆற்றல், செல்வம், பதவி ஆகிய எல்லாவற்றுக்கும் இரு பொருந்தும். ஆனால், இழந்த ஒரு விநாடியை மீண்டும் பெறுவது நடக்க முடியாத காரியம். நாட்காட்டியில் ஒரு தாளைக் கிழிக்கிறோம் என்றால், ஆயுளில் ஒரு நாள் குறைகிறது என்று பொருள்; மரணத்தை நோக்கி ஓர் அடி எடுத்துவைக்கிறோம் என்று அர்த்தம்.
இதனால்தான் 'பண்ம்ங் ண்ள் ஏர்ப்க்' (நேரம் பொன் போன்றது) என்பர். காலம் கண் போன்றது என்றும் சொல்லலாம். நேரம் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டால், அது உங்களை மீளாத் துயரத்தில் ஆழ்த்திவிடக்கூடும். நேரத்தின் மீது உங்கள் ஆளுமை இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது நேரத்தைப் பகுத்து, கால அட்டவணை வகுத்து, அதைக் கவனமாகச் செயல்படுத்துவதுதான்.
வல்ல இறைவன் தன் படைப்புகள் சிலவற்றைக் குறிப்பிட்டுச் சத்தியம் செய்வதைக் குர்ஆனில் காணலாம். பின்னால் சொல்லும் விஷயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதே அங்கு நோக்கம். அதே நேரத்தில், எந்தப் பொருளைக் குறிப்பிட்டுச் சத்தியம் செய்கிறானோ அந்தப் பொருள், அவன் படைப்புகளில் முக்கியமானது என்பதையும் காட்டும்.
இந்த வரிசையில், ஓர் அத்தியாயத்தில்,
"காலத்தின் மீதாணையாக! மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்; இறைநம்பிக்கை கொண்டு, நல்லறங்களைப் புரிந்து, பரஸ்பரம் சத்தியத்தை எடுத்துரைத்துப் பொறுமையையும் போதிப்பார்களே அவர்களைத் தவிர'' (103:1-3)
என்று அல்லாஹ் கூறுகின்றான்.
இஸ்லாத்தில் தொழுகை, நோன்பு, ஹஜ் ஆகிய முதல் தரமான வழிபாடுகளெல்லாம் குறித்த நேரத்தில் நிறைவேற்ற வேண்டியவை. இவை காலம் தவறாமையை நமக்கு உணர்த்துகின்றன. வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நேரம் தவறாமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதையே இதன் மூலம் அல்லாஹ் உணர்த்துகின்றான்.
நாளை மறுமையில், செல்வத்திற்கு மட்டுமன்றி நேரத்திற்கும் கணக்குக் காட்ட வேண்டும். "ஓர் அடியார், தமது ஆயுளை எதில் அழித்தார்? தாம் கற்ற கல்வியால் என்ன சாதித்தார்? தமது செல்வத்தை எவ்வழியில் ஈட்டினார்? ஈட்டிய பணத்தை எப்படிச் செலவழித்தார்? உடலை எவ்வாறு பயன்படுத்தினார் என்ற கேள்விகளுக்கு உட்படுத்தப்படாமல் நின்ற இடத்தைவிட்டு நகர முடியாது'' என்பது நபிமொழி. (திர்மிதீ)
ஆக, நேரம் ஓர் அருட்கொடை அதை உருப்படியான வழியில் செலவிட்டு வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லவராக வாழ்வது உங்கள் கையில்தான் உள்ளது. வாய்ப்புகள் வரும். பயன்படுத்தத் தவறிவிட்டால் அடுத்த தடவை உங்கள் கதவை தட்டாது. பிறகு காலத்தின் மீது பழி போட்டு உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ள வேண்டியதுதான்.
காலம் என்பது என்ன? சூரியனின் உதயமும் மறைவும்தான். உதயமோ அஸ்தமோ ஆக்குவதோ அழிப்பதோ அல்ல. மாறாக, அதை இயக்கும் ஆற்றல் மிக்க இறைவனே காலம். காலத்தைப் பழிக்கிறீர்கள் என்றால், அதைப் படைத்த இறைவனைப் பழிக்கிறீர்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறினான்: மனிதன் காலத்தை ஏசுகிறான். நான்தான் காலம். இரவும் பகலும் என் வசமே. (முஸ்லிம்)
ஆகவே, காலத்தைக் கண் போன்று மதித்து, பொன் போன்று பாவிப்போம். நேரத்தை மேலாண்மை செய்வோம். திட்டமிட்டுச் செயல்படுவோம்.
No comments:
Post a Comment