என் ஆசிரியப் பெருந்தகைகளில் என்னால் என்றும் மறக்க இயலாத ஓர் ஆளுமைதான், 2003 ஜூன் 22ஆம் தேதி மறைந்த மாமேதை மௌலானா, சையித் அப்துல் ஜப்பார் ஹள்ரத் அவர்கள்.
1971ஆம் ஆண்டு, "மௌலவி ஆலிம்' பட்டப் படிப்பில் எனக்கு ஆறாம் ஆண்டு. அந்த ஆண்டின் இறுதித் தேர்வுக்காக முதன் முதலில் அப்துல் ஜப்பார் ஹள்ரத் அவர்கள் முன்பு அமர்ந்தேன். வாய்மொழித் தேர்வு. நல்ல மதிப்பெண் கிடைத்தது. பெயரைக் கேட்டவுடன், முன்பொரு காலத்தில் புகழோடு விளங்கிய கான் முஹம்மத் ஹஜ்ரத் அவர்களை நினைவுகூர்ந்து, அன்னாரைப் போன்று வர வேண்டும் என அன்னார் என்னை வாழ்த்தியது இன்றும் நினைவில் நிழலாடுகிறது.
ஏழாம் ஆண்டு "தஹ்ஸீல்' (முக்தஸர்) வகுப்பில் திருக்குர்ஆன் விரிவுரை பாடநூலான "தஃப்சீர் பைளாவி' ஹஜ்ரத் அவர்களிடம் கற்றேன். ஆந்திர மாநிலம் கடப்பாதான் அன்னாரின் சொந்த ஊர். ஆனால், கல்வி கற்றது, கற்பித்தது, வாழ்ந்தது எல்லாம் தமிழ்நாடு வேலூரில்தான். தமிழ் பேசத் தெரியாவிட்டாலும், பேசுவதை நன்கு புரிந்துகொள்வார்கள். தாய்மொழியான உர்துவில் பேசத் தொடங்கினால், கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
ஆம்! தூய்மையான எளிய நடை. மனதைக் கொள்ளை கொள்ளும் இனிமை. ஆழமான கருத்து. வாழ்க்கைக்கு வழி காட்டும் தத்துவம். மறக்க முடியாத சொல்லாடல். அவர்களின் சொற்பொழிவைக் கேட்கும்போது, இப்படியும் ஒரு பேச்சாளரா என வியக்காமல் இருக்க முடியாது. எதையும் நயமாக நளினமாக எடுத்துரைக்கும் பாங்கு அனைவருக்கும் அமைவதில்லை. அதில் உறுதியும் திண்மையும் சேர்ந்துகொண்டால் கேட்கவும் வேண்டுமா?
வேலூர் ஜாமிஆ அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா எனப் பல்வேறு மாநில மாணவர்கள் கல்வி கற்கிறார்கள். தமிழ்வழி, உர்து வழி என இரு வழிப் பாடவகுப்புகள் அங்கு நடந்தாலும், "மௌலவி ஆலிம்' இளங்கலை இறுதி ஆண்டிலும் "மௌலவி ஃபாஸில்' முதுகலை ஈராண்டுகளிலும் உருது அல்லது அரபியில் மட்டுமே பாடம் நடக்கும்.
மேல் வகுப்புகளுக்கு வகுப்பு எடுத்துவந்த அப்துல் ஜப்பார் ஹள்ரத் அவர்கள் அனைத்து மாணவர்களும் புரிந்துகொள்வதற்கு வசதியாக எளிமையான உர்து மொழியையே பயன்படுத்துவார்கள். அதிகமாக அரபிச் சொற்களைக் கையாள்வார்கள். இதனால் உருது தெரியாத தமிழ் மற்றும் மலையாள மாணவர்கள்கூட ஹள்ரத் அவர்கள் நடத்தும் பாடங்களை எளிதில் புரிந்துகொள்வர்.
அன்றைய பாடத்தின் கருவைச் சுருக்கமாகவும் அழகாகவும் விளக்கிச் சொல்லும் ஆற்றல் அன்னாருக்கு இருந்தது. மாணவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு -அந்தக் கேள்விகளைப் பொறுத்து- நிதானமாகவும் நறுக்குத் தெறித்தாற்போன்றும் பதில் சொல்லும் லாவகம் அலாதியானது. குறும்பான கேள்விகளுக்குக் குறும்பான -அதே நேரத்தில் சுவையான பதில் கிடைக்கும்.
முதல்வர் பதவியில்
வேலூர் பாகியாத் அரபிக் கல்லூரியில் கல்வி பயின்று முடித்த கையோடு, அங்கேயே ஆசிரியராகச் சேர்த்து முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஹள்ரத் அவர்கள் பணியாற்றினார்கள். அதில் பதினான்கு ஆண்டு காலம் முதல்வராகப் பணியாற்றினார்கள். நிர்வாகத் திறமையும் சூழ்நிலை அறிந்து முடிவுகள் எடுக்கும் சமயோசித அறிவும் மிகுந்த பாகியாத் முதல்வர் எனக்குத் தெரிந்த வரை ஜப்பார் ஹள்ரத் அவர்கள்தான்.
நான் ஆசிரியர் பணியில் சேர்வதற்குமுன் சென்னைப் பல்கலைக் கழக அரபு மொழித் தேர்வான அஃப்ஸலுல் உலமா இறுதித் தேர்வு எழுத பாகியாத் சென்று தங்கியிருந்த காலம். கல்லூரி சார்பாக ஓரிரு பாடங்கள் நடத்திவந்தேன். இரவு நேரங்களில் மேல்வகுப்பு மாணவர்களுக்குச் சில பாடங்களும் சொந்த விருப்பத்தின்பேரில் நடந்திவந்தேன். இரவு நேரம்தானே என்று, கல்லூரி சீருடையான ஜுப்பா அணியாமல் சட்டை அணிந்து மாணவர்கள் விடுதியில் வகுப்பு எடுத்துவந்தேன்.
ஒருநாள் இரவு கல்லூரி முதல்வர் அப்துல் ஜப்பார் ஹள்ரத் அவர்கள் விடுதியைச் சுற்றிப் பார்க்க வந்திருந்தார்கள். சட்டை அணிந்து நான் பாடம் நடத்திக்கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டார்கள். கல்லூரி விதிக்கு மாறாக நான் சட்டை அணிந்திருந்ததை அங்கேயே கண்டித்திருக்க முடியும். பண்பாடு கருதி பேசாமல் சென்றுவிட்டார்கள். ஓரிரு நாள் கழித்து நான் இரவில் பாடம் எடுக்கும் மாணவர்களின் வகுப்பைக் குறிப்பிட்டு, இன்ன வகுப்பு மாணவர்கள் சிலர் விதிக்கு மாறாகச் சட்டை அணிகிறார்கள்; நீங்கள்தான் அவர்களுக்கு அறிவுரை கூற வேண்டும் என்று சொன்னார்களே பாருங்கள்!
நான் ஆடிப்போய்விட்டேன். இது பண்பாடும் நாகரிகமும் மட்டுமல்ல; என்னைத் திருத்தும் ஓர் அழகான நடவடிக்கை. மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய நீயே இப்படிச் செய்யலாமா என்று நயமாகச் சுட்டிக்காட்டிவிட்ட பெருந்தன்மை என்னை அசரவைத்துவிட்டது.
நான் பாகியாத்தில் ஆசிரியராகச் சேர்ந்த புதிது. முதலாமாண்டு மாணவர்களுக்கு என்னிடம் பாடம். வயதில் சிறியவர்களான அவர்கள் பாடத்தில் கவனக்குறைவாக இருந்தது இயல்புதான். ஆனால், ஒருநாள் ஒரு மாணவர் பாடம் சொல்லவில்லை என்பதற்காகப் பிரம்பால் அடித்துவிட்டேன்.
முதல்வர் ஜப்பார் ஹள்ரத் அவர்களிடம் புகார் சென்றது. சொல்லால் திருத்துவதுதான் ஓர் ஆசிரியரின் திறமை; அடித்துத்தான் திருத்த வேண்டும் என்றால், அது ஆசிரியரிடமுள்ள குறையாகத்தான் இருக்கும். நாம் மாணவர்கள்மீது காட்டும் அன்பு கலந்த கண்டிப்புதான் மாணவர்களைச் சிந்திக்கத் தூண்டி திருத்தும் என்று நயமாக எடுத்துச்சொல்லி என்னை அனுப்பினார்கள். அன்று பிரம்பைக் கீழே போட்டவன்தான்; பிறகு அதை நினைத்தும் பார்க்கவில்லை.
பாசமிக்க ஆசான்
ஹள்ரத் அவர்களைப் பார்த்தாலே மாணவர்கள் பயப்படுவார்கள். மெலிந்த உடல்தான்; ஆனால், கம்பீரமான உடை. கோட்டு (ஷேர்வானி) சுர்வால்தான் ஹள்ரத் அவர்கள் அணிவார்கள். அந்த உடையில் பார்த்தவுடன் மரியாதை செய்யத் தூண்டும் மிடுக்கான தோற்றம்; எடுப்பான பார்வை; வசீகரமான முகம்.
வெளித் தோற்றத்தில்தான் கண்டிப்பு; உள்ளத்திலோ கனிவு. தந்தையின் பாசத்தை விஞ்சும் வாஞ்சை. மாணவர்களுக்குத் தண்டனையும் கொடுத்துவிட்டு, துடித்துப்போகும் தாய்மை. தண்டனை, பொறுப்பின் விளைவு என்றால், துடிப்பு மனிதத்தின் நிறைவு. இப்படித்தான் ஓர் ஆசிரியர், அதுவும் முதல்வர் பொறுப்பில் உள்ள ஆசான் இருக்க வேண்டும் என்பதற்குச் சரியான முன்னோடி.
இறுதி வகுப்பு மாணவர் ஒருவர், திடீரென ஏற்பட்ட நோயின் காரணத்தால் கல்லூரியிலேயே இறந்துவிட்டார். நீராட்டி சவக்கோடி அணிவித்து இறுதித் தொழுகையும் கல்லூரி அரங்கில் நடந்தது. முதல்வராக இருந்த ஹள்ரத் அவர்கள்தான் தொழுகை நடத்தினார்கள்.
தொழுகை முடிந்தபின், "என் கையால் பட்டமும் புத்தாடையும் கொடுத்து அனுப்ப வேண்டிய என் மகனைப் பிணமாக அனுப்பிவைக்கிறேன்!'' என்று ஹள்ரத் அவர்கள் சொன்னதுதான் தாமதம். அதுவரை அடக்கிவைத்திருந்த கண்ணீர் அங்கிருந்த அனைவரின் கட்டுப்பாட்டையும் மீறி எல்லார் கண்களிலும் பொழியத் தொடங்கியது. அந்த ஈரமான நேரம் இப்போதுகூட என் நெஞ்சை நனைக்கிறது.
மாணவர்கள் இரவு நேரங்களில் அன்றைய பாடங்களை ஒரு தடவைத் திருப்பிப் பார்ப்பார்கள். ஒருவர் வாசிக்க மற்றவர்கள் கேட்டுக்கொண்டிருப்பார்கள்; கருத்துகளைப் பரிமாறிக்கொள்வார்கள்; குறிப்பெடுத்துக்கொள்வார்கள். இதைக் கண்காணிக்க இரு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.
கனம் அப்துல் ஜப்பார் ஹள்ரத் அவர்கள் முதல்வராக இருந்தபோது அவ்வாறு நியமிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். அந்தத் தருணங்கள் எனக்கு மிகவும் பயனுள்ளவையாகக் கழிந்தன. மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பது, சோர்வடைந்துள்ள மாணவர்களுக்கு ஊக்கமளிப்பது, யோசனைகள் கூறுவது, எழுத்து மற்றும் பேச்சுத் துறைகளில் ஆர்வமூட்டுவது, இலக்கியம் தொடர்பாக விவாதிப்பது எனப் பரந்த பயன்பாடுகளுக்கு அந்த நேரம் உதவியது.
இரவு நேரத்தில் கல்லூரி விடுதியில் இல்லாத, இருந்தாலும் பாடங்களைத் திருப்பிப் பார்க்க வராத, வந்தாலும் வேறு பணிகளில் ஈடுபட்டிருக்க மாணவர்களைக் கணக்கெடுத்து, தினமும் முதல்வருக்கு அறிக்கை அளிப்பது கண்காணிப்பாளரின் கடமை. இந்த அறிக்கை காலையில் கிடைத்தவுடன் தவறிழைத்த மாணவர்கள்மீது முதல்வர் நடவடிக்கை எடுப்பார்.
இவ்வாறு மாணவர்களைப் பாடத்தில் கவனம் செலுத்தவைப்பது, முறையாகத் தேர்வுகள் நடத்துவது, தேர்வில் பாஸ் - ஃபெயில் முறைக்கு முக்கியத்துவம் அளிப்பது, எழுத்து மற்றும் பேச்சுப் பயிற்சி அளிப்பது, கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் போன்ற தளங்களில் மாணவர்களுக்கு உற்சாகமூட்டுவது, செய்தித்தாள்கள், பத்திரிகைகள் படிப்பதன் மூலம் உலக அறிவை மாணவர்கள் பெற்றுக்கொள்ள வகை செய்வது, பல்கலைக்கழகப் படிப்புகளிலும் பங்கெடுத்துக்கொள்ள மாணவர்களை ஊக்குவிப்பது போன்ற பல்துறை பயிற்சிகள்தான் பாகியாத்தின் தனித்தன்மைகள் ஆகும்.
இரவு நேரக் கண்காணிப்பாளரின் அறிக்கையின்படி மாணவர்மீது நடவடிக்கை எடுக்கும்போதுகூட ஜப்பார் ஹள்ரத் அவர்களிடம் அதிகாரத்தைவிட அன்பே மேலோங்கியிருக்கும். ஆனால், தண்டனை வழங்காமல் மன்னிப்பதானாலும் சரி; தண்டனையைக் குறைப்பதானாலும் சரி; புகார் கொடுத்த ஆசிரியரிடம் மாணவர் சென்று மன்னிப்புக் கடிதம் முதலில் வாங்கி வர வேண்டும் என்றொரு மரபை ஹள்ரத் அவர்கள் கடைப்பிடித்துவந்தார்கள். இது அன்னாரின் பெருந்தன்மையைக் காட்டுகிறது.
திறமையான நிர்வாகி
முதல்வராக இருந்த ஹள்ரத் அவர்கள் ஒரு முறை வெளியூர் சென்றிருந்தார்கள். அப்போது பார்த்து மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்; கல்லூரி விடுதி உணவை உண்ணமாட்டோம் என்று பிடிவாதம் பிடித்தனர். ஹள்ரத் அவர்கள் உள்ளூரில் இருந்திருந்தால், மாணவர்களை அமைதிப்படுத்திப் போராட்டத்தைத் தொடங்கவிடாமலேயே செய்திருப்பார்கள். அந்தத் திறமை அவர்களிடம் நிறையவே இருந்தது.
பொறுப்பில் இருந்த ஆசிரியரிடம் விவகாரம் செல்ல, அவரது முடிவுக்கு மாணவர்கள் கட்டுப்படாமல் போராட்டத்தைத் தொடர, பிரச்சினை முற்றிவிட்டது. அப்போது முதிர்ச்சி இல்லாமல் நடந்துகொண்ட மாணவர்கள் சிலர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
வெளியூரிலிருந்து திரும்பிய ஹள்ரத் அவர்கள், மாணவர்களை அமைதிப்படுத்தி போராட்டத்தைக் கைவிடச் செய்ததுடன் கல்லூரியில் இயல்பு நிலையைக் கொண்டுவந்தார்கள். அதே நேரத்தில், நடவடிக்கைக்கு உள்ளான மாணவர்களை நீக்கும் முடிவில் உறுதியாக இருந்தார்கள். மற்ற ஆசிரியர்களின் கௌரவத்தைக் காக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு.
பாகியாத் வரலாற்றிலேயே ஓர் அதிசயம் என்றுதான் சொல்ல வேண்டும்; ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டே ஒருவர் மாணவர்களின் ஒத்துழைப்புடன் பத்திரிகை, அதுவும் தமிழ் மாத இதழ் நடத்தியது. இது நடந்தது அப்துல் ஜப்பார் ஹள்ரத் அவர்கள் முதல்வராக இருந்த காலத்தில்தான்.
என்னை ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும் கொண்டு ‘ஹிலால்' எனும் மாத இதழ் 1986 மார்ச் மாதம் வெளியானது. வேடிக்கை என்னவென்றால், இதன் ஆரம்ப நான்கு இதழ்கள் தட்டச்சில் வெளிவந்தன. பின்னர்தான் அச்சில் ஏறியது. இதன் எழுத்தாளர்கள் பாகியாத் மாணவர்கள்; இதழின் ஊழியர்களும் அவர்களே.
இந்த இதழை நடத்த அனுமதியும் ஆலோசனையும் வழங்கியதுடன், தம் கரத்தாலேயே இதழை ஜப்பார் ஹள்ரத் அவர்கள் வெளியிட்டார்கள். வேலூர் ஜாமிஆ மஸ்ஜிதில் 6.3.1986 அன்று நடந்த வெளியீட்டு விழாவில் ஹள்ரத் அவர்கள் இதழை வெளியிட, நகர்மன்ற உறுப்பினர் ஹெச்.இ. ஃபாரூக் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.
இது இளைய தலைமுறையைத் தட்டிக்கொடுத்து முன்னேற்றும் அவர்களின் அரிய குணத்தைக் காட்டியது.
ஒருமுறை என்னிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஹள்ரத் அவர்கள் கூறியது:
சொற்பொழிவாற்றும்போது கனமான விஷயங்களை மட்டுமே சொல்லிக்கொண்டிராமல், நகைச் சுவையையும் கலந்தே கூற வேண்டும். அப்போதுதான் மக்களிடம் மலர்ச்சி ஏற்படும். அதையடுத்து நாம் எடுத்துவைக்கும் ஆழமான தகவல்கள்கூட கேட்போரின் உள்ளத்தில் எளிதாகப் பதிந்துவிடும்.
ஹள்ரத் அவர்கள் மட்டுமன்றி, சில நண்பர்களும் இக்கருத்தை என்னிடம் வலியுறுத்தியுள்ளனர். எனக்குத்தான், சுட்டுப்போட்டாலும் அத்தகைய நகைச்சுவை சம்பவங்கள் வருவதில்லை.
கருத்து வேறுபாடுகள்
கருத்து வேறுபாடுகள் பகைக்குக் காரணமாகிவிடக் கூடாது என்பது ஹள்ரத் அவர்களின் அறிவுரைகளில் ஒன்று. இதைச் சொன்னதோடு நில்லாமல், பல சமயங்களில் செயல்படுத்தியும் காட்டினார்கள்.
ஹள்ரத் அவர்களுக்கு மௌலானா அபுஸ் ஸஊத் ஹள்ரத் அவர்கள் மீது உயர்ந்த மரியாதை உண்டு. அன்னாருடன் நடந்த கலந்துரையாடல்களின்போது பல நேரங்களில் நான் உடன் இருந்துள்ளேன். மாற்றமான கருத்துகள் பரிமாறிக்கொள்ளப்பட்டதுண்டு. இருப்பினும் மதிப்பிலும் மரியாதையிலும் அது வெளிப்பட்டதில்லை.
தேவ்பந்த் தாருல் உலூம் அறிஞர்கள் பலர் கல்லூரி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதுண்டு. முதல்வராக இருந்த அப்துல் ஜப்பார் ஹள்ரத் அவர்கள், சிறப்பு விருந்தினர்களுக்குத் தரும் வரவேற்பிலோ உபசரிப்பிலோ சற்றும் குறை வைத்ததில்லை.
பொதுவாக ஆசிரியர்களின் எல்லாக் கருத்துகளுக்கும் மாணவர்கள் உடன்படுவார்கள் என்றோ, மாணவர்கள் விரும்பும் கருத்துகளையே ஆசிரியர்கள் வெளியிட வேண்டும் என்றோ எதிர்பார்க்க முடியாது; எதிர்பார்க்கவும் கூடாது. அதிலும் முதல் வகுப்பில் ஒரு கருத்தும், அடுத்த வகுப்பில் நேர் எதிரான கருத்தும் முன்வைக்கப்படும் சூழலில் மாணவன் தமது கருத்தையே ஏற்க வேண்டும் என்று ஒவ்வோர் ஆசிரியரும் எதிர்பார்த்தால், அது நடக்குமா? நடைமுûறை சாத்தியமா?
அநேகமாக பாகியாத் வரலாற்றில், ஓர் ஆசிரியரைப் பற்றி ஆலோசித்து முடிவெடுக்க ஆசிரியர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது அதுதான் முதல் முறையாக இருக்கும் என்று நினைக்கிúறன். பாகியாத் ஃபத்வா தொகுப்பு உருதுவில் வெளிவந்த புதிது. அதன் முன்னுரையை மட்டும் தமிழில் மொழிபெயர்த்து 1987ஆம் ஆண்டு வெளியிட்டனர். மொழிபெயர்த்தவன் நான்.
பெரும் பரபரப்பை உருவாக்கிய அந்த 70 பக்கங்கள்தான் என்னைப் பற்றி ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தக் காரணம். அப்போது நான் அடைந்த துயரத்திற்கு அளவே இல்லை. தனிமையில் இருந்த எனக்கு ஆறுதல் கூறுவதற்கு ஓர் ஆசிரியரும் இல்லை. மாணவர்கள் சிலர்தான் என்னை ஆசுவாசப்படுத்தினார்கள்.
“பாகியாத் ஃபத்வா ஓர் அறிமுகம்' என்ற அந்த மொழிபெயர்ப்பு நூலுக்கு ‘மதிப்புரை' என்ற பெயரில் ‘மதிப்புரை' எழுதியிருந்த ‘மணிச்சுடர்' நாளிதழுக்கு நான் எழுதிய மறுப்புரைக்கு மறுப்பு வெளியிட வேண்டும் என்பதே கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு.
மறுநாள் கல்லூரி முதல்வர் மௌலானா, சையித் அப்துல் ஜப்பார் ஹள்ரத் அவர்களைச் சந்தித்தபோது அவர்கள் கூறிய ஆறுதல் மொழி ஊக்கமளித்தது. அவர்கள் தலைமையில்தான் எனக்கெதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது; என்றாலும், இதை மனதில் வைத்துக்கொண்டு கவலையோடு இருக்க வேண்டாம்! எப்போதும் போல உங்கள் பணியை ஆற்றுங்கள் என்று ஹள்ரத் அவர்கள் நெஞ்சைத் தடவிக்கொடுத்தார்கள்.
இதே ‘மணிச்சுடர்' நாளிதழில் (27.06.2003) ஹள்ரத் அவர்களின் இறப்புச் செய்தியை வெளியிடச் செய்து, இரங்கல் தெரிவித்தவனும் நான்தான். ‘மறக்க முடியாத ஆசான் - கான் பாகவி புகழாரம்' என்ற தலைப்பில் அச்செய்தி வெளிவந்திருந்தது.
ஆக, இப்படிப்பட்ட ஓர் அற்புத மனிதரை, தன்னிகரற்ற நிர்வாகியை, வியத்தகு நல்லாசிரியரை, அருமையான பேச்சாளரை, அனுபவமிக்க அறிஞரை இனி காண முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். அவர்களின் மறுமை வாழ்வை அல்லாஹ் சிறப்பானதாக அமைப்பானாக! ஆமீன்
No comments:
Post a Comment