Tuesday, April 03, 2012

அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்


மௌலவி, . முஹம்மது கான் பாகவி



வேலூர் அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் கல்வி பயின்ற நாட்களும் சரி; ஆசிரியர் பணியாற்றிய நாட்களும் சரி; என் வாழ்நாளில் மறக்க முடியாத அத்தியாயமாகும். அந்தப் பசுமையான நினைவுகள் சுகமான அனுபவங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். 

நான் மட்டும் என்றில்லை. பாக்கியாத்தில் கால்வைத்து, சில மாதங்கள் கல்வி பயின்ற யாரையும், பாக்கியாத்தின் மீது கொண்ட அன்பும் மாறாத பாசமும் கட்டிப்போட்டுவிடும். அந்த அளவுக்கு அதன் ஈர்ப்பு வசீகரமானது; வாடாதது. இது, அக்கல்விக்கூடத்தை நிறுவிய, அதன் உயர்வுக்காக உழைத்த பெரிய மனிதர்களின் தூய்மையான எண்ணத்தின் விளைவு என்றே சொல்லத் தோன்றுகிறது. 

மொத்தத்தில் பாக்கியாத் ஒரு பாக்கியம் என்றுதான் ஒவ்வொரு மாணவனும் கருதுவான். அங்கு ஆசிரியராகப் பணியாற்ற கிடைத்த வாய்ப்பை ஒவ்வோர் ஆசிரியரும் தம் பிறவிப் பலன் என்றே கருதுவார். அந்த வான்வெளியின் பெருமை அப்படி. 

கூத்தாநல்லூர் மன்பஉல் உலா அரபிக் கல்லூரியில் ஆறாம் ஆண்டு கல்வி பயின்றுவந்த வேளையில், இடையிலேயே வேலூர் பாக்கியாத்தில் மாணவனாகச் சேர வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது. அந்த ஆண்டின் துவக்கத்தில் பாக்கியாத்தில் சேர்வதற்காகச் சென்றுவிட்டு, அதன் பிரமாண்டத்தைப் பார்த்து அஞ்சி, மீண்டும் மன்பஉல் உலாவிற்கே திரும்பிய என்னை, அதே ஆண்டின் இறுதியில் பாக்கியத்திற்குக் கொண்டுவந்து சேர்த்தான் இறைவன். 

பாக்கியாத்தில் கல்வி கற்று முடித்த என் ஒரே கனவு, அங்கு ஆசிரியராவது மட்டுமே. உடனே அந்த அரிய வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், சில ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த்து. அது எனக்கு ஓர் இன்ப அதிர்ச்சியாகவும் பிறந்த பலனை அடைந்துவிட்ட மனநிறைவாகவும் அமைந்தது. 

பலவகை மாணவர்கள் 

பாக்கியாத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் பலவகை மாணவர்களைச் சந்தித்தேன்; பல்வேறு சிந்தனைகளும் குணங்களும் கொண்ட மாணவர்களுக்குப் பாடம் நடத்தினேன். 

மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பதோடு என் பணி முடிந்தது என்று நான் எப்போதும் எண்ணியதில்லை. மாணவர்களின் உடல்நிலை, அவர்களின் குடும்ப நிலவரம், எதிர்காலத் திட்டம் ஆகியவை பற்றியெல்லாம் கூட நான் சிந்திப்பதுண்டு; மாணவர்களின் திறமைக்கும் சுவைக்கும் ஏற்ற யோசனைகளை அவர்களிடம் கூறுவதுண்டு. 

பாடப் புத்தகங்களில் கவனம் செலுத்துகின்ற அதே நேரத்தில், பேச்சு, எழுத்து, இலக்கியம், பொதுஅறிவு முதலான துறைகளிலும் மாணவர்கள் சாதனை படைக்க வேண்டும் என்ற தனிப்பட்ட அக்கறையும் ஆர்வமும் எனக்கு இருக்கும். 

இதனால், மாணவர்களின் சொற்பயிற்சி மன்றத்தில் அடிக்கடி கலந்துகொண்டு, மாணவர்களுக்கு உற்காசமூட்டுவது என் பழக்கமாக இருந்தது. குறிப்பாக, மாணவர்கள் நடத்தும் பட்டிமன்றம், கவியரங்கம், கருத்தரங்கம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக்கொண்டு மாணவர்களை ஊக்குவிப்பது என் மனதுக்கு இதம் அளிக்கும். இன்றும் அத்தகைய மாணவர்கள் பல்துறைகளில் மிளிர்வது கண்டு பூரிப்படைபவன் நான். 

அவ்வாறே, மாணவர்களின் கையேட்டு இதழான ‘அல்இர்ஷாத்’ பயிற்சி இதழில் கட்டுரைகள், கவிதைகள் எழுதிப் பழகுவதற்கு மாணவர்களை உற்சாகப்படுத்துவேன். மாணவர்களின் கன்னிப் படைப்புகளைப் படித்து, அவர்களைப் பாராட்டுவதும் யோசனைகள் கூறுவதும் எனக்குப் பிடிக்கும். 

மதரசா பாடத்திட்டம் பற்றியும் மாணவர்களுக்கான வளர்ச்சித் திட்டம் பற்றியும் எனக்கென தனிக் கருத்து உண்டு. அவ்வாறே முஸ்லிம்களின் நடைமுறையில் புகுந்துவிட்ட சடங்குகள் குறித்தும் தனிப் பார்வை உண்டு. என் கருத்துகளை வகுப்பில் மாணவர்களுக்கு எடுத்துரைப்பேனே தவிர, திணிக்கமாட்டேன். மாறுபட்ட சிந்தனை கொண்ட மாணவர்கள்மீது பகைமை பாராட்டமாட்டேன். 

ஓர் ஆசிரியர், தந்தை என்றால், மாணவர்கள் அவருடைய பிள்ளைகள் ஆவர். பிள்ளைகளில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். உண்மை புலப்படும்போது உணர்வார்கள்; திருந்துவார்கள் என்ற நம்பிக்கைதான். எந்தவொரு தத்துவமும் உணர்ந்து ஒப்புக்கொள்ளப்படாத வரை, திணிப்பதில் பலனில்லை. எந்தவொரு கனியும் தானாக்க் கனியாத வரை அடித்துக் கனியவைப்பதில் சுவை இல்லை. 

நிறுவனத்தின் மீது திணிப்பு 

முஸ்லிம்களின் அன்றாட வாழ்க்கையில் மார்க்கத்தின் பெயரால் புகுந்துவிட்ட சடங்குகள், அல்லது ஆசாரத்தின் பெயரால் புகுந்துவிட்ட அநாசாரம், அல்லது நபிவழி (சுன்னத்) என்ற பெயரால் நுழைந்துவிட்ட புதுவழி (பித்அத்) குறித்து பாக்கியாத்தின் பழைய மாணவர்களான பாகவிகளுக்குத் தனிப்பட்ட முறையில் ஒரு கருத்து இருக்கலாம். அது அவரவர் சொந்தப் பிரச்சினை. 

ஆனால், இந்த விஷயங்களில் இதுதான் பாக்கியாத்தின் நிலை என்று நிறுவ, அல்லது பாக்கியாத்தின் மீதே திணிக்க என்ன உரிமை இருக்கிறது? 

அப்படியே ஒரு நிலைப்பாடு எடுத்தாக வேண்டும் என்ற நிலை ஏற்படும்போது, அதற்கு எதை அளவுகோலாகக் கொள்வது? பாக்கியாத்தில் இருந்துவரும் நடைமுறைகள் அளவுகோலாகுமா? அல்லது வகுப்பறையில் ஒவ்வோர் ஆசிரியரும் ஒரு விதமாகச் சொல்லிக்கொடுப்பார்களே அது அளவுகோலாகுமா? அல்லது இடைக்காலத்தில் வந்த முஃப்திகள் அளிக்கும் ஃபத்வா அளவுகோலாகுமா? எது அளவுகோல்? 

உண்மையில் இதற்கு அளவுகோலாக இருக்க, அளவுகோலாக எல்லாராலும் ஏற்கப்பட் முழுத் தகுதியும் பொருத்தமும், பாக்கியாத்தை ஒரு இலட்சியக் கனவோடு அரும்பாடுபட்டு உருவாக்கிய அண்ணல் அஃலா ஹள்ரத் (ரஹ்) அவர்களின் தீர்ப்புகளுக்கே உண்டு. 

சர்ச்சைக்குரிய பிரச்சினைகளில் பாக்கியாத்தின் நிலைப்பாடு, அல்லது போக்கு (மஸ்லக்) என்னவாக இருக்க வேண்டும் என்பதை நிர்ணயிப்பதற்கு, பாக்கியாத்தை நிறுவிய ஷம்சுல் உலமா அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்களுக்கே முழு அதிகாரம் உண்டு. இடையில் வந்த எனக்கோ உங்களுக்கோ அந்த அதிகாரமும் இல்லை; தார்மிக உரிமையும் இல்லை. 

சரியான அளவுகோல் 

பாக்கியாத் நிறுவனர் அண்ணல் அஃலா ஹள்ரத் (ரஹ்) அவர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் பாக்கியாத்தைத் தொடங்கியதற்கான காரணம், அப்போதைய காலச்சூழல், அன்னார் தம் வாழ்நாளில் வழங்கிய மார்க்கத் தீர்ப்புகள் ஆகிய அனைத்துக்கும் பதிவு உண்டு. 

இந்த விஷயத்தில், மற்றக் கல்வி நிறுவனங்களையோ அமைப்புகளையோ முன்மாதிரியாகக் கொள்ளவோ சம்பந்தப்படுத்தவோ தேவையில்லை. பாக்கியாத் ‘மஸ்லக்’ என்ன என்பதை அறிய தனி அளவுகோலாக, சரியான முன்மாதிரியாக அஃலா ஹள்ரத் அவர்கள் அளித்த ஃபத்வாக்களே போதும். இந்த ஃபத்வாக்கள் உருது மொழியில் தொகுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன. 

1987ஆம் ஆண்டு வெளிவந்த அந்த்த் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஃபத்வாக்களில் பெரும்பாலானவை அஃலா ஹள்ரத் (ரஹ்) அவர்கள் அளித்தவை. சில ஃபத்வாக்கள் மட்டும் அன்னாரின் புதல்வரும் முதல்வருமான மௌலானா ஜியாவுத்தீன் முஹம்மத் ஹள்ரத் அவர்கள் காலத்தில் அளிக்கப்பட்டவை. பெரும்பாலான ஃபத்வாக்களில், பாக்கியாத்தின் அப்போதைய ஆசிரியர்களும் ஒப்புதல் கையொப்பம் அளித்துள்ளார்கள். 

இந்த ஃபத்வாக்கள் அசலுக்கு மாற்றமாக உள்ளன என்று சிலர் புரளி கிளப்புகிறார்கள். அப்படி ஒரு சந்தேகம் இருந்தால், பாக்கியாத் ஆசிரியர்களைக் கொண்ட ஒரு குழு, அசலையும் தொகுப்பையும் ஒப்பிட்டுச் சரிபார்த்து, மாற்றம் இருப்பின் திருத்தி, அசல்படியே வெளியிடலாமே! இதைவிடுத்து, சிற்சில தவறுகள் இருப்பதாகப் படம் காட்டி, ஒட்டுமொத்த ஃபத்வாக்களையே இருட்டடிப்பு செய்ய நினைப்பது எந்த வகையில் நியாயம்? 

நமக்குத் தெரிந்த வரை, அசலுக்கும் தொகுப்புக்கும் உள்ள ஒரே வித்தியாசம், மொழிநடை மட்டுமே. இரண்டாவது, பாடத் தலைப்பு வாரியாக ஃபத்வாக்கள் பிரிக்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன. உட்பொதிவில் வித்தியாசமிருப்பதாகத் தெரியவில்லை. 

அஃலா ஹள்ரத் (ரஹ்) அவர்களின் தீர்ப்புகளையே அளவுகோலாகக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவதால், பாக்கியாத்தின் மற்ற முஃப்திகளை அலட்சியப்படுத்துகிறோம் என்பது பொருளாகாது. 

சர்ச்சைக்குரிய ஒரு பிரச்சினையில் அஃலா ஹள்ரத் அவர்களின் தீர்ப்பும் பிற்கால முஃப்திகளின் தீர்ப்பும் ஒரே மாதிரியாக இருந்துவிட்டால், பிரச்சினையே இல்லை. இரண்டும் வேறுபட்டால், யாருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது தெளிவு. ஏனெனில், பின்னால் முஃப்தியாக இருந்தவர்களுக்கு அஃலா ஹள்ரத் அவர்கள் ஆசிரியராக இருந்திருப்பார்கள்; அல்லது ஆசிரியரின் ஆசிரியராக இருப்பார்கள். 

ஒரு பிரச்சினைக்கு அன்னாரின் ஃபத்வாக்களில் தீர்ப்பு காணப்பட்டாதபோது, பின்னால் வந்த முஃப்திகளின் தீர்ப்பைத் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். 

எடுத்துக்காட்டுக்கு ஒன்று 

1918 நவம்பர் 19ஆம் தேதியிட்ட ஃபத்வா (பதிவேடு பக்கம்: 194, 195) ஒன்று, இன்றைய முஸ்லிம்களின் நடைமுறையில் இருக்கும் பல்வேறு சடங்குகள் பற்றிக் குறிப்பிடுகிறது. 

அண்ணல் அஃலா ஹள்ரத் (ரஹ்) அவர்கள் இறப்பதற்குச் சில மாதங்கள் முன்பாக, மைசூரைச் சேர்ந்த மௌலவி, சையித் அப்துல்லாஹ் அவர்களின் மகன் சையித் அஹ்மத் அவர்கள் ஒன்பது கேள்விகளைக் கேட்டிருந்தார். 

வினா: 

1. மய்யித்திற்கு அணிவிக்கப்படும் கஃபனில் திருக்கலிமாவையோ, திருக்குர்ஆனின் வசனங்களையோ எழுதி மய்யித்தை அடக்கம் செய்வது, இக்லாஸ் அல்லது தபாரக் சூராக்களை ஓதி மண் கட்டியில் ஊதி மய்யித்துடன் வைப்பது, பீர்களின் ஷஜராவை (வம்சப் பெயர்கள் அடங்கிய படம்) கப்றில் வைப்பது ஆகியன பற்றி தீர்ப்பு என்ன?
2. மய்யித்தை அடக்கம் செய்தபின் ஒரு தடவையும் 40 அடி நடந்தபின் ஒரு தடவையும், மய்யித்தின் வீட்டை அடைந்தவுடன் ஒரு தடவையும் ஃபாத்திஹா ஓதுவதைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்? 
3. மய்யித்தை அடக்கம் செய்த மூன்றாம் நாளில் ஜியாரத்துச் செய்து பேரீத்தம்பழம், மிட்டாய், சந்தனம், பூ ஆகியவற்றைப் பகிர்வதும் கப்றுமீது சந்தனம், பூ போடுவதும் கப்றில் ஊதுபத்தி கொளுத்தி வைத்து ஃபாத்திஹா ஓதுவதும், சம்பிரதாயப்படி ஏழு, பத்து, இருபது, முப்பது மற்றும் நாற்பதாம் நாள் ஃபாத்திஹா ஓதுவதும், ‘நாற்பது தபாரக் கலசங்கள்’ என்று சொல்லி மண் கலசங்களை கப்றுமீது சாத்துவதும் கூடுமா? 
4. மேற்கண்ட சடங்குகளை ‘கட்டாயம்’ எனக் கருதி செய்வதும், இச்சடங்குகளைத் தவிர்ப்போர் பழிப்புக்குரியவர்கள் எனக் கருதுவதும் சரியா? 
5. ஆண்டுதோறும் ஷைகு அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களது பெயரால் ‘கியார்வீன்’ செய்வது, அவர்களின் பரக்கத்தைப் பெறுவதாக எண்ணி அந்த உணவை மரியாதையோடு புசிப்பது, ஹள்ரத் ஸாலார் மஸ்ஊத் ஙாஸி பெயரால் கந்தூரி நடத்துவது, இமாம் ஜஅஃபர் சாதிக் (ரஹ்) அவர்களின் பெயரால் பூரியான் ஃபாத்திஹாவைக் கண்ணியத்துடன் செய்வது ஆகியன பற்றி சட்டம் என்ன? 
6. முஹர்ரம் மாதத்தில் வெள்ளிப் பெட்டி, ஷர்பத் முதலான பானங்களை வைத்து ஹுசைன் (ரலி) அவர்கள் பெயரால் ஃபாத்திஹா ஓதுதல், பஞ்சா மீது நடந்து ஜனங்களின் தலை மற்றும் முகத்தில் பூசுதல், மயில் இறக்கையை தடவுதல் ஆகியன பற்றி சட்டம் என்ன? 
7. கப்றாளிகளிடம் தேவைகளை முறையிடுவது கூடுமா? 
8. அவ்லியாக்கள் பெயரால் நேர்ந்துவிடப்பட்ட பிராணிகளை, ‘பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்’ சொல்லி முறைப்படி அறுத்திருந்தால், அதன் மாமிசத்தை சாப்பிடுவது கூடுமா? 
9. ‘உருஸ்’களின்போது, நிகழ்த்தப்படும் கவாலி, கவிதை, கதை ஆகியவற்றைக் கேட்பதால் நன்மை கிடைக்கும் என நம்புவது சரியா? 

இக்கேள்விகளுக்கு அஃலா ஹள்ரத் அவர்கள் அளித்த விடையைப் பார்ப்போம். 

விடை: 

நாம் அல்லாஹ், ரசூல்மீது விசுவாசங்கொண்டு கலிமாச் சொன்னவர்கள். இதிலிருந்து, வணக்கத்துக் குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்பது உறுதியாகிவிட்டது. அல்லாஹ் தஆலாவின் ஏவல் – விலக்கல்களுக்கு கீழ்ப்படிந்து நடப்பதே வணக்கம் என்பதன் பொருளாகும். ஏவல்களும் விலக்கல்களும் குர்ஆன் மற்றும் ஹதீஸிலிருந்து கிடைத்தவையாகும். நமது இறைவனின் ஏவல் – விலக்கலுக்கும், சுன்னத்துக்கும் மாற்றம் செய்வது, மேற்சொன்ன விசுவாச வாக்குமூலத்திற்கு எதிரானதாகும்; முஃமினுக்கு உகந்த செயலன்று. 

இந்தஅடிப்படையில், கேள்வியில் கண்டுள்ள விஷயங்கள் – காரியங்களைத் தவிர்ப்பது அவசியமாகும். ஏனெனில் இவை, குர்ஆன் மற்றும் ஹதீஸிலிருந்தோ, ஸஹாபா பெருமக்களின் சொல் மற்றும் செயலில் இருந்தோ, இமாம்களின் கூற்றுகள் மூலமோ உருவானவை அல்ல. இவை யாவும் பித்அத்து மற்றும் மக்ரூஹ்களாகும். அவற்றில் சில ஹராம் ஆகும். மற்ற சிலதில் குஃப்ரின் சாயல் உண்டு. இதன் முழு விபரம் மார்க்க நூல்களில் காணக்கிடைக்கிறது. இப்போது அவை ஒவ்வொன்றையும் விவரித்துக் கூற நமக்குப் போதிய சந்தர்ப்பம் இல்லை. இதனால் இறைவாக்கு ஒன்றை நினைவுபடுத்துவதோடு நிறுத்திக்கொள்கிறோம். 

அல்லாஹு தஆலா சொல்கிறான்: எவர் ஓர் அணுவளவு நன்மை செய்கிறாரோ அதனையும் அவர் (அங்கு) கண்டுகொள்வார். எவர் ஓர் அணுவளவு தீமை செய்கிறாரோ அதனையும் அவர் (அங்கு) கண்டுகொள்வார். (99:7,8) 

ஆக, முஃமின்கள் ஒவ்வொரு விஷயம் குறித்தும் மார்க்க அறிஞர்களிடம் கேட்டுத் தெரிந்து, அதன்படி செயல்பட வேண்டும். நபி (ஸல்) அவர்களின் ஷஃபாஅத்தைப் பெற்று, உயர் அந்தஸ்து பெற அவர்கள் முயல வேண்டும். நல்ல மனிதர் என்ற பெயரைப் பெறுவதற்கும், நல்ல எதிர்பார்ப்பை உடையவராக ஆவதற்கும் பாடுபட வேண்டும். 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சமூகம் ஒரு ஜனாஸா கொண்டுவரப்பட்டது. அங்கு குழுமியிருந்தோர் அந்த மய்யித்தைப் பற்றி ‘நல்ல மனிதர்’ எனப் புகழ்ந்து பேசிக்கொண்டார்கள். அதைச் செவியேற்ற அண்ணலார் ‘உறுதியாகிவிட்டது’ என்றார்கள். 

சற்று நேரத்தில் வேறொரு ஜனாஸா வந்தது. அந்த மய்யித்தைப் பற்றி ‘கெட்ட மனிதர்’ எனக் கூடியிருந்தோர் பேசிக்கொண்டனர். அப்போதும் ‘உறுதியாகிவிட்டது’ என நபியவர்கள் சொன்னார்கள். பின்னர், இரண்டு ஜனாஸா விஷயத்திலும் ஒரே வார்த்தையை ‘(உறுதியாகிவிட்டது)’ அண்ணலார் சொன்னதன் நோக்கம் என்ன என்று தோழர்கள் வினவினர். 

அதற்கு “நீங்கள் அல்லாஹ்வின் நிலத்தில் அவனது சாட்சியாளர்களாக இருக்கிறீர்கள். எவரை நீங்கள் ‘நல்லவர்’ எனப் புகழ்ந்து கூறுகிறீர்களோ அவருக்கு ‘சொர்க்கம்’ உறுதியாகிவிட்டது. எவரைக் ‘கெட்டவர்’ எனக் குறைகூறுகிறீர்களோ அவருக்கு ‘நரகம் உறுதியாகிவிட்டது’ – என அண்ணலார் விளக்கினார்கள். 

இன்னொரு விஷயத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம். அதாவது ரங்கூனிலிருந்து ஃபத்வா கேட்டு நம் மதரஸாவுக்குச் சில கேள்விகள் வந்தன. அதற்குப் பதில் தரப்பட்டது. அந்த பத்வா நகலையும் இத்துடன் இணைத்துள்ளோம். அதையும் கவனத்தில் கொண்டு, சுன்னத்துக்கேற்ப அமல் செய்யுங்கள். ஆதாரமற்ற – பித்அத்தான செயல்களை விட்டொழியுங்கள். 

(இதை தம் கைப்பட எழுதி, நகல் எடுக்குமாறும் பணித்தார்கள்.) 

ஒப்பம், 

அப்துல் வஹ்ஹாப்
(கானல்லாஹு லஹூ) 

பதில் சரியானதே ஒப்பம் 

முஹம்மது அப்துல் ஜப்பார், ஷைகு ஆதம்
(உஃபிய அன்ஹு) (உஃபிய அன்ஹு) 

அப்துர் ரஹீம் முஹம்மது யஃகூப்
(உஃபிய அன்ஹு) (உஃபிய அன்ஹு) 

முஹம்மது அப்துல் அலி முஹம்மது ஹஸன் பாஷா
(உஃபிய அன்ஹு) (உஃபிய அன்ஹு) 

தேதி: 19 நவம்பர், 1918.
பத்வா பதிவேடு பக்கம், 194, 195 





நிர்வாகத்தின் கவனத்திற்கு 

பாக்கியாத் அணுகுமுறை (மஸ்லக்) குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில், பாக்கியாத் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதும் மக்களுக்கு ஒரு தெளிவைத் தருவதும் காலத்தின் கட்டாயமாகும். 

பாக்கியாத் மௌனமாக இருக்க, அதன் நிலைப்பாடு குறித்து ஆளாளுக்கு ஒன்றைச் சொல்லி மக்களைக் குழப்பும் நிலை தொடர இடமளிக்கக் கூடாது. வெளியிலிருப்பவர்கள் – அவர்கள் பாக்கியாத்தின் மூத்த குடிமக்களாக இருந்தாலும் இளவல்களாக இருந்தாலும் – பாக்கியாத்தின் கண்ணியத்தைக் காக்க வேண்டும்; அதன் நிறுவனரின் கருத்துகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். 

இதுவே பழம்பெரும் கலைக்கூடமான பாக்கியாத்திற்கும் ஆயிரக்கணக்கான அதன் பிள்ளைகளுக்கும் சமுதாயத்திற்கும் நல்லது.

1 comment:

  1. மிக்க அருமை. இதைப் பொது மக்களுக்குக் கிடைக்கச் செய்தால் நன்றாக இருக்கும்.
    நூ. அப்துல் ஹாதி பாகவி

    ReplyDelete