Thursday, March 28, 2013

இலங்கையில் முஸ்லிம்கள் - அன்றும் இன்றும்


தமிழில்: கான் பாகவி


இலங்கைத் தீவில் ஆரம்பக் காலத்திலேயே இஸ்லாம் அறிமுகமாகிவிட்டது. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு நபித்தோழர் சிலோன் வருகைதந்தார் என்றும் பிறகு அங்கிருந்து சீனா சென்றார் என்றும் இலங்கை முஸ்லிம்கள் சொல்லிக்கொள்வதுண்டு. பின்னர் அவர், கலீஃபா உஸ்மான் (ரலி) அவர்களது காலத்தில் அரேபிய தீபகற்பம் சென்றார் என்று கூறுவர்.

அடுத்து அரபியர் வருகை தொடர்ந்தது. அங்கேயே திருமணமும் செய்துகொண்டனர். இஸ்லாம் பரவியது; முஸ்லிம்களின் எண்ணிக்கை கூடியது. ஆக, தங்களின் மரபுமூலம் அரபுகள்தான் என்று இலங்கை முஸ்லிம்கள் பெருமிதம் கொள்கின்றனர்.

இலங்கைக்கு அரபியர் வந்ததற்குக் காரணம் இரண்டு. 1. வணிகம். இலங்கையில் உற்பத்தியாகும் மிளகு, நறுமணப் பொருட்கள் வாங்கிச் சென்றனர். 2. முற்காலத்திலிருந்தே முஸ்லிம்களிடம் ஒரு கருத்து நிலவிவருகிறது. ஆதி மனிதர் ஆதம் (அலை) அவர்கள் சிலோனில்தான் இறங்கினார்கள் என்பதுதான் அந்த நம்பிக்கை. ஆதம் மலைஇலங்கையில் உண்டு. இன்றுவரை மக்கள் அதைக் காண வருகிறார்கள். அவ்வாறு அரபியரும் வந்திருக்கலாம்.

பிறகு இந்தியா, மலாயா, ஜாவா, இந்தோனேஷியா ஆகிய பகுதிகளிலிருந்து முஸ்லிம்கள் இலங்கை வந்து குடியேறினர். ஆக, இலங்கை முஸ்லிம்கள் என்போர் இவர்கள் எல்லாரும் சேர்ந்தவர்களே. இதனால்தான், இலங்கை முஸ்லிம்கள் பல மரபுவழியைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

மக்கட்தொகை

இலங்கையில் 2012ஆம் ஆண்டு நடந்த அதிகாரபூர்வ மக்கட் தொகைக் கணக்கெடுப்பு கூறுகிறது:

கிழக்கு மாகாணம்
இலங்கையின் மொத்த மக்கட்தொகை 2 கோடியே 2 லட்சத்து 63 ஆயிரத்து 723. இவர்களில் பௌத்தர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள், கிறித்தவர்கள் ஆகியோர் அடங்குவர். இருப்பினும் பௌத்தர்களே பெரும்பான்மை மக்களாவர். அவர்கள் 1,42,22,844பேர் உள்ளனர். இது மொத்த மக்கட்தொகையில் 70.2 விழுக்காடு ஆகும்.

அடுத்து இந்துக்கள் 25,54,606பேர். இது 12.6 விழுக்காடு. முஸ்லிம்களைப் பொறுத்தவரை 19,67,227 பேர்; சுமார் 2 மில்லியன். இது மொத்த எண்ணிக்கையில் 9.7 விழுக்காடு. இலங்கை முஸ்லிம்களில் 40 சதவீதம் பேர் கிழக்கு மாகாணத்தில் வசிக்கின்றனர். ஏனையோர் நாட்டில் பரவலாக வாழ்கின்றனர்.

கல்வி நிலை

இலங்கை முஸ்லிம்களின் கல்வி நிலையைப் பார்த்தால், முன்பெல்லாம் பள்ளிவாசல்களில் உள்ள ஆரம்ப மதரசாக்களில் (மக்தப்களில்)தான் கல்வி கற்றுவந்தனர். அரசு பள்ளிகளுக்கு அருகிலும் மதரசாக்கள் உருவாக்கப்பட்டிருந்தன. அந்நிய காலனியாதிக்கக் காலத்தில், முஸ்லிம்களுக்கென தனியான அரசு பள்ளிகள் நடந்துவந்தன.

தற்போது முஸ்லிம்கள் வாழும் ஊர்களில் 780 அரசாங்கப் பள்ளிகள் முஸ்லிம்களுக்காக நடந்துவருகின்றன. இவற்றில் 3 லட்சம் மாணவ மாணவியர் பயில்கின்றனர்; 14 ஆயிரம் முஸ்லிம் ஆசிரிய, ஆசிரியைகள் கல்வி போதிக்கின்றனர்; போதனை மொழி தமிழ்.

இதன்றி, 55 ஆயிரம் முஸ்லிம் மாணவ, மாணவியர் பௌத்தர்கள் பள்ளிகளில் சிங்கள மொழியில் கல்வி கற்றுவருகின்றனர். மொத்த முஸ்லிம் மாணவர்களில் இவர்கள் 17 விழுக்காடு. இவர்களுக்குச் சில பிரச்சினைகளும் உண்டு.

எடுத்துக்காட்டாக, சிங்களப் பள்ளிகள் சிலவற்றில் படிக்கும் முஸ்லிம் மாணவர்களால் வெள்ளிக்கிழமைகளில் ஜுமுஆ தொழ முடிவதில்லை. முஸ்லிம் மாணவிகள் தலையை மறைப்பதற்கோ பர்தா அணிவதற்கோ தடை உள்ளது. சில நேரங்களில், பள்ளி வளாகத்தில் நடக்கும் புத்த மத விழாக்களில் கலந்துகொள்ள வேண்டிய கட்டாயம் முஸ்லிம் மாணவர்களுக்கு ஏற்படுத்தப்படுகிறது.

இதற்கெல்லாம் காரணம், முஸ்லிம் பள்ளிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதும் இருக்கும் பள்ளிகள் போதிய வசதி இல்லாதிருப்பதும்தான். முஸ்லிம் பெற்றோர்களிடம் உள்ள ஒரு தவறான எண்ணமும் காரணம்தான். பெற்றோர்களும் இத்தகைய பள்ளிகளிலேயே கற்றார்கள்; முஸ்லிம் பள்ளிகளில் தரம் இல்லை; அரசால் கண்டுகொள்ளப்படாமல் உள்ளன என்று பெற்றோர்கள் கருதுகின்றனர்.

பௌத்தர்கள் நடத்தும் பள்ளிகளில் படித்தவர்களுக்கே மற்றவர்களைவிட அதிகமாக அரசு வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன என்று நினைக்கின்றனர். இது தவறான எண்ணமாகும். மார்க்கத்தைப் பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாததே இதற்குக் காரணம். இப்பள்ளிகளில் படிக்கும் பெரும்பாலான மாணவர்களிடம் பௌத்த சிங்களக் கலாசாரத்தின் தாக்கம் உள்ளது. பெற்றோர்களிடம் விழிப்புணர்வும் சீரான வளர்ப்பு முறையும் இருந்தால் மட்டுமே மாணவர்களை இந்த அழிவிலிருந்து காக்க முடியும்.

மொழிப் பிரச்சினை

எதில்காலத்தில் பேராபத்து ஒன்று காத்திருக்கிறது எனலாம். இலங்கை முஸ்லிம் சமூகம் மொழி ரீதியாக மூன்றாகப் பிரியக்கூடிய ஆபத்துதான் அது. தமிழ், சிங்களம், ஆங்கிலம் என்று பிரிந்து போவார்கள்போலும். சிங்களமும் தமிழும் அதிகாரபூர்வ அரசாங்க மொழிகளாக இருந்தாலும், அரசு அலுவலகங்களில் தமிழ் நடைமுறையில் இல்லை; சிங்களமும் ஆங்கிலமுமே அங்கு கோலோச்சுகின்றன.

கடந்த நூற்றாண்டின் ஐம்பதுகளில் தமிழை ஆட்சிமொழியாக ஏற்காததே பௌத்தர்களுக்கும் இந்துத் தமிழர்களுக்கும் இடையிலான இனமோதல்களுக்கு அடிப்படைக் காரணமாயிற்று என்பது ஊரறிந்த இரகசியமாகும். இந்தப் புறக்கணிப்பே, ஈழத் தமிழர்களின் விடுதலைப் புலிகள் இயக்கம் பிறக்கவும் வழிவகுத்தது.

இலங்கையில் தமிழ் மொழியானது, இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் பேசும் மொழியாக இருக்கிறது. இருப்பினும், பெரும்பாலான முஸ்லிம்கள் பௌத்தர்கள் மத்தியில் பரவலாக வாழ்ந்துவருவதால், அதிகமானோர் சிங்கள மொழியையும் நன்கு அறிந்துள்ளார்கள்; அதை ஒரு முட்டுக்கட்டையாக அவர்கள் கருதுவதில்லை.

ஆனால், வடக்கு, வடமேற்கு, வடகிழக்கு மாகாணங்களில் திரளாக வாழும் இந்துத் தமிழர்கள் அவ்வாறல்ல. அவர்கள் சிங்கள மொழியைக் கற்பதில்லை. தமிழை ஆட்சிமொழியாக ஏற்க வேண்டும் என்பதில் அழுத்தமாக உள்ளனர்.

சமூக நல்லிணக்கம்

நீண்ட காலமாக முஸ்லிம்களும் பௌத்தர்களும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு இணக்கமாகவே வாழ்ந்துவந்தனர். அண்மைக் காலமாக அங்கு சில தீவிரவாத அமைப்புகள் தலைதூக்கிப் பிரச்சினை செய்துவருகின்றன. இந்த அமைப்புகளுக்கு புத்த பிக்குகளே தலைமை தாங்குகின்றனர்.

முஸ்லிம்கள் தங்களின் வழிபாட்டுக் கடமைகளை நிறைவேற்றுவதையும் பள்ளிவாசல்கள் எழுப்புவதையும் இந்த அமைப்பினர் தடுத்துவருகின்றனர். சில பள்ளிவாசல்களை இடிப்பதற்கும் திட்டமிடுகின்றனர். முஸ்லிம்களின் குடியுரிமையில் குழப்பம் விளைவிக்கின்றனர்.

ஜம்இய்யத்துல் உலமா தலைவர் முஃப்தி ரிஸ்வி
அத்துடன், முஸ்லிம்களின் வணிக நடவடிக்கைகளைத் தடுக்க பல வழிகளில் முயற்சி செய்கின்றனர். எடுத்துக்காட்டாக, சிறு வெளியீடுகள், கட்டுரைகள் வாயிலாக முஸ்லிம்களைப் பற்றி தவறான கருத்துகளை விதைத்தல், இன அழிவு செய்வோம் என மிரட்டல் விடுத்தல் ஆகியவற்றைக் கூறலாம்.

இந்தத் தீவிரவாதிகளுக்குப் பின்னால் மறைமுகமாக சில சக்திகள் இருந்துகொண்டு, இலங்கையில் இனப் போர் மூள வேலை செய்கிறார்கள் எனத் தெரிகிறது. விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்தபிறகு, தம் ஆயுதங்களைக் காசாக்க ஆயுத வியாபாரிகள் செய்யும் சதியாக இது இருக்குமோ என்ற ஐயமும் உண்டு.

கடந்த ஓராண்டாக, முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் அதிகமாகியுள்ளன. பள்ளிவாசல்களை இடித்தல், பள்ளிவாசல்களில் தொழுகை நடைபெறாமல் தடுத்தல், பள்ளிவாசல்களை மூட முயற்சி செய்தல் என அவர்களின் அராஜகம் அதிகமாகிக்கொண்டிருக்கிறது.

இவர்களின் ஆர்ப்பாட்ட நெருப்பில் எண்ணெய் வார்ப்பதைப் போன்று முஸ்லிம்கள் சிலரது நடிவடிக்கைகளும் அமைந்துவிடுகின்றன. தேவையோ அவசியமோ இல்லாத இடங்களில்கூட -கொடையாளர்களைத் திருப்திப்படுத்துவதற்காக- பள்ளிவாசல்களை எழுப்புவது, முஸ்லிம்கள் அல்லாதோர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் ஒலிபெருக்கியின் மூலம் பாங்கை சப்தமாகக் கூறுவது போன்ற வேலைகளில் நம்மவர் ஈடுபடுவது, தீவிரவாத பிக்குகளின் வாதத்திற்கு வலு சேர்ப்பதைப்போல் அமைந்துவிடுகிறது.

தஅவாகளம்

இலங்கையில் முஸ்லிம்களுக்கிடையே மார்க்கப் பரப்புரை செய்கின்ற இஸ்லாமிய இயக்கங்கள் பல செயல்பட்டுவருகின்றன. தப்லீஃக் ஜமாஅத், ஜமாஅத்தே இஸ்லாமி, சலஃபீ ஜமாஅத் முதலான அமைப்புகளும் தற்கால இஸ்லாமிய அமைப்புகளும் இவ்வாறு பணிகளைச் செய்துவருகின்றன. இலங்கை முஸ்லிம் சமூகத்தில் மார்க்க விழிப்புணர்வு நன்றாகவே உள்ளது. சூழ்நிலை அறிந்து, அதற்குத் தக்கவாறு புரிந்துணர்வோடு செயல்படுகின்றனர்.
இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அமைப்பின் செயல்பாடு குறிப்பிடத் தக்கது. அரபிக் கல்லூரிகளின் பட்டதாரிகளும் பள்ளிவாசல்களின் இமாம்களும்தான் இதன் அங்கத்தினர்கள். அதிகாரபூர்வமாக முஸ்லிம்களை வழிநடத்தும் அமைப்பாக இதுவே இருக்கிறது.



முஸ்லிம்களின் விவகாரங்களைக் கண்காணிப்பது, இமாம்களுக்கும் மதரசா ஆசிரியர்களுக்கும் வழிகாட்டுவது போன்ற பணிகளை இது மேற்கொண்டுவருகிறது. மற்ற இஸ்லாமிய அமைப்புகள் இதனுடன் ஒத்துழைக்கின்றன.

அமைப்புகளிடையே சிற்சில கருத்துவேறுபாடுகள் இருந்தாலும், பொதுவான பிரச்சினைகளில் ஜம்இய்யத்துல் உலமாவின் ஒரே கொடியின்கீழ் அனைவரும் ஐக்கியமாகிவிடுகின்றனர். ஆறு ஆண்டுகளுக்குமுன் விடுதலைப் புலிகள், குறிப்பிட்ட பகுதியிலிருந்து முஸ்லிம்களைத் துரத்திவிட்டனர். உடனே முஸ்லிம் அமைப்புகள் ஒன்றுசேர்ந்து பிரச்சினைக்குத் தீர்வு கண்டனர். அவ்வாறே, ‘தம்புள்ளபகுதியில் பள்ளிவாசல் ஒன்று இடிக்கப்பட்டது. அப்போதும் ஜம்இய்யாவின் தலைமையில் செயலாற்றினர்.

முஸ்லிம்களின் கோரிக்கைகள்

இலங்கை அரசாங்கத்திடம் முஸ்லிம்களுக்குச் சில அடிப்படை கோரிக்கைகள் உள்ளன. அரசாங்கப் பணிகளிலும் தொகுதிகள் ஒதுக்குவதிலும் முஸ்லிம்களின் மக்கட்தொகைக்கேற்ப, விகிதாச்சார அடிப்படையில் இடங்கள் தர வேண்டும். தற்போதைய அரசில் பத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் அமைச்சர்கள் இருப்பது உண்மைதான். ஆனாலும், அவர்களுக்கான வாய்ப்புகள் வரையறுக்கப்பட்டவை; அவர்களால் சுதந்திரமாகச் செயல்பட முடியாது.

இதே கோரிக்கையை, முஸ்லிம்களுக்கு முன்பிருந்தே இந்துக்களும் அரசிடம் வைத்துவருகின்றனர். குறிப்பாக, விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்த பிறகு இக்கோரிக்கை வலுத்துவருகிறது. ஆனால், இந்துக்களும் முஸ்லிம்களுக்கு உரிமை அளிப்பதை எதிர்க்கின்றனர்.

எனவே, உலக முஸ்லிம் மற்றும் அரபு நாடுகள் இலங்கை அரசை வற்புறுத்தி, இலங்கை முஸ்லிம்களின் கோரிக்கைகள் நிறைவேற முயல வேண்டும். இலங்கையுடன் அரபு நாடுகளுக்கு நெருங்கிய நட்புறவு இருந்துவருவது ஒரு சாதகமான அம்சமாகும்.
(அல்முஜ்தமா)
http://magmj.com/index.jsp?inc=5&id=12522&pid=3535&version=194#

No comments:

Post a Comment