- கான் பாகவி
பு
|
னித ரமளான் மாதம் வந்துவிட்டது; வசந்தத்திற்கான வாய்ப்பு
வந்துவிட்டது. வாழ்நாள் முழுவதையும் ஒரே நாளாகக் கருத முடியுமா? பல மடங்கு நன்மைகளைத் தரும் நாளும் மற்ற நாளும் சமமாக முடியுமா?
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள வேண்டும். திட்டமிட்டு ரமளானின் நாட்களைப் புண்ணியமானதாக
ஆக்கிக்கொள்வதும் சுரணையே இல்லாமல் இந்நாளையும் அந்நாளைப்போல் வீணாகக் கழிப்பதும் நம்
கையில்தான் உள்ளது.
புனித ரமளானில் செய்ய வேண்டிய முதல்தரமான வழிபாடு உண்ணா நோன்புதான்.
“உங்களில் அம்மாதத்தை அடைந்தவர் அதில் நோன்பு நோற்கட்டும்!” (2:185) என்பது இறைக்கட்டளையாகும்.
“யார் ரமளானில் நம்பிக்கையுடனும்
நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர் (அதற்கு)முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்” என்பது நபிமொழியாகும். (புகாரீ)
மற்றொரு நபிமொழி இவ்வாறு கூறுகிறது: சொர்க்கத்தில் ‘ரய்யான்’ எனும் ஒரு நுழைவாயில் உள்ளது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகளே நுழைவார்கள்; அவர்களைத் தவிர வேறுயாரும் அதன் வழியாக நுழையமாட்டார்கள். (புகாரீ)
அடுத்து ஐவேளை தொழுகைகளை ஜமாஅத்துடன் நிறைவேற்றல் மிகவும் முக்கியமானது. மூன்றாவதாக
இரவுத் தொழுகை. இதில் தராவீஹ் மற்றும் தஹஜ்ஜுத் அடங்கும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வழிபடுகிறாரோ அவர்
முன்புசெய்த பாவங்கள் மன்னிக்கப்படும். (புகாரீ)
அடுத்து திக்ர் மற்றும் தஸ்பீஸ். இதில் அநேக பலன்கள் உண்டு. முக்கியமாக, மனஅமைதியும் தெளிவும் கிடைக்கும்.
திருக்குர்ஆன் கூறுகின்றது:
அல்லாஹ்வை நினைவுகூர்வதால் உள்ளங்கள் அமைதி பெறுகின்றன. (13:28)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தம் இறைவனை நினைவுகூர்ந்து போற்றுகின்றவரின் நிலை
உயிருள்ளவரின் நிலையையும் தம் இறைவனை நினைவுகூர்ந்து போற்றாதவரின் நிலை உயிரற்றவரின்
நிலையையும் ஒத்திருக்கிறது. (புகாரீ)
மற்றொரு ஹதீஸில், “தனிமையில் அல்லாஹ்வை நினைத்து (அவன்மீது கொண்ட
அச்சத்தால்) கண்ணீர் சிந்தியவருக்கு மறுமையில் அல்லாஹ்வின் அர்ஷுடைய நிழலில் இடம் கிடைக்கும்” என்று நபியவர்கள் தெரிவித்துள்ளார்கள். (புகாரீ)
அடுத்தது துஆ. பாவமன்னிப்பு (தவ்பா) நல்வழி (ஹிதாயத்), வாழ்க்கையில் வளம் (பரகத்), வாழ்வாதாரம் (ரிஸ்க்), ஆரோக்கியம் (ஸிஹ்ஹத்), கல்வி (இல்ம்) முதலான தேவைகளை முறையிட்டு
அல்லாஹ்விடம் இறைஞ்ச வேண்டும். வேண்டுதல் ஏற்கப்படும் நாள் என்பதால், நல்ல பலன் கிடைக்கும்.
புனித ரமளான் மாதத்தில் அதிகமதிகம் குர்ஆன் ஓத வேண்டும். வானவர் ஜிப்ரீல் (அலை)
அவர்கள் ரமளானின் ஒவ்வோர் இரவிலும் நபி (ஸல்) அவர்களைச் சந்திப்பார்கள். அப்போது (அதுவரை
அருளப்பெற்ற) குர்ஆனை ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு நினைவுபடுத்துவார்கள்.
(புகாரீ)
அவ்வாறே, ரமளான் மாதத்தில் நபி (ஸல்) அவர்கள், மக்களிலேயே அதிகமாக வாரிவழங்குபவர்களாகத்
திகழ்ந்தார்கள். தொடர்ந்து வீசும் மழைக்காற்றைவிட அதிகமாக நல்லதை வாரிவழங்குவார்கள்.
(புகாரீ)
எனவே, ரமளானில் ஸகாத்,
ஸதகா, இஃப்தார் உணவு,
ஸஹர் உணவு போன்ற தர்மங்களை இயன்றவரை அதிகமாகச்
செய்ய வேண்டும். பேச்சைக் குறைத்து, பொய், கோள், புறம் ஆகியவற்றைக் கைவிட்டு நாவைப் பேணிக்கொள்ள வேண்டும்.
“யார் (நோன்பு நோற்றுக்கொண்டு)
பொய்யான பேச்சையும் அதன்படி செயல்படுவதையும் கைவிடவில்லையோ அவர் (வெறுமனே) தமது உணவையும்
பானத்தையும் கைவிடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை” என்பது நபிமொழி. (புகாரீ)
கால அட்டவணை [TIME TABLE]
நோன்பு காலத்தில் இதோ இப்படி ஓர் அட்டவணையை வகுத்துக்கொண்டு செயல்பட்டால் என்ன? இதில் அவரவர் பணிகள் மற்றும் வாய்ப்புகளுக்கேற்ப சிறிது மாற்றம் செய்துகொள்ளலாம்!
assalamu alaukkum . romba arumai jazakallah
ReplyDelete