Friday, January 31, 2014

சர்வதேசப் பார்வை (செய்தித் துளிகள்)

ரஷிய பத்திரிகையாளர் இஸ்லாத்தில்...


சைரஜீ ஜன்னாத் மார்கோஸ் என்பது அவரது பெயர். ரஷியாவில் அவரைத் தெரியாதவர் இருக்க முடியாது. நாளேடுகள், மாத-வார இதழ்களில் கலை, கலாசாரம் குறித்து எழுதிவரும் பிரபல பத்திரிகையாளர். கலாசார விழாக்களில் அவரது பங்கு ரஷியாவில் முக்கியமானது.

‘அல்முஜ்தமா’ ஏட்டுக்கு அவர் அளித்த பேட்டியில், இஸ்லாத்தை நோக்கிய தமது பயணம் குறித்து விவரிக்கிறார்:

சிறுவயது முதலே, மகா வல்லமை படைத்த இறைவன் ஒருவன் இருக்கிறான் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. ஆனால், அவனுக்கு எந்தப் பெயரையும் நான் சூட்டிக்கொண்டதில்லை. நாத்திகக் கல்வியால் எனது இயல்பான தேட்டத்தைத் தடுக்க இயலவில்லை. இருந்தாலும், எதற்கும் ஒரு நேரம் வந்தாக வேண்டுமல்லவா?

கிறித்தவ மதத்திலிருந்தே என் ஆராய்ச்சியும் தேடலும் தொடங்கியது. அப்போது எனது மத நடவடிக்கைகள் சட்டப்புறம்பானவையாகக் கருதப்பட்டன. மூன்றாண்டு சிறைத் தண்டனையும் 1982இல் விதிக்கப்பட்டது. சீனா-மங்கோலியா எல்லையில் தென் சைப்ரஸில் உள்ள ‘தோபா’’வில் சிறை தண்டனையை அனுபவித்தேன்.

1985இல் மாஸ்கோ திரும்பினேன். அங்கு அடிப்படை மாற்றங்கள் தொடங்கியிருந்தன. சமயக் குழுக்களுக்குச் சுதந்திரம் கிடைத்தது. நாட்கள் செல்லச் செல்ல 1990இல் ரஷிய வானொலியில் சமய நிகழ்ச்சிகளுக்கு டைரக்டராக நியமிக்கப்பட்டேன். இதனால், ரஷியாவில் பரவியுள்ள எல்லா மதங்களின் நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் பொறுப்பு என்னிடம் வந்தது. அரசாங்க ஒலிபரப்பில் முழு ரஷியாவுக்கும் சமய நிகழ்ச்சியைத் தயாரித்தேன்.

கிறித்தவம், பௌத்தம் ஆகிய நிகழ்ச்சிகளுக்கு முதலிடம் கொடுத்தேன். இஸ்லாமிய நிகழ்ச்சிகள் ஒலிபரப்புவதில் சிக்கல் ஏற்பட்டது. காரணம், இஸ்லாமிய அறிவு படைத்த ஊடகவியலாளர்கள் யாரும் கிடைக்கவில்லை. ஒலிபரப்பு தொடங்கி ஆறாண்டுகளுக்குப் பிறகு லைலா ஹசீனோவா தலைமையில் ஒரு குழுவை உருவாக்கினோம். ரஷியாவில் இஸ்லாமிய நிகழ்ச்சிகளை இக்குழு தொடர்ந்து ஒலிபரப்பியது. இந்நிகழ்ச்சிக்கு ‘இஸ்லாத்தின் ஓசை’’ எனப் பெயரிட்டோம். வெள்ளிக்கிழமை தோறும் இந்நிகழ்ச்சி ஒலிபரப்பானது.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு இஸ்லாமிய உலகின் முக்கிய அறிஞர்கள், சிந்தனையாளர்கள், முஃப்திகள் ஆகியோருடனான தொடர்பு எனக்கு ஏற்பட்டது. இது இஸ்லாத்துடனான அறிமுகத்திற்கும் அதைப் பற்றிய அறிவுக்கும் வழிவகுத்தது.

தொடர்ந்து ஆறாண்டுகளாக இஸ்லாமிய நிகழ்ச்சியை ஒலிபரப்பிவந்த லைலா சோர்வடைந்து விலகிவிட்டார். எனவே, நிகழ்ச்சி தடைபட்டது. இதை அறிந்த பிரதமர் விக்டர் வானொலி மேலாளரைத் தொடர்புகொண்டு, இஸ்லாமிய நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஒலிபரப்ப வேண்டுமென்றும், இல்லாவிட்டால் ரஷியாவின் உள்நாட்டு அரசியலில் பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்றும் சொன்னார். 20 மில்லியன் முஸ்லிம்கள் ரஷியாவில் இருப்பதே அவரது அச்சத்திற்குக் காரணம்.

நானே இஸ்லாமிய நிகழ்ச்சியை ஒலிபரப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஆரம்பத்தில் மலைப்பாக இருந்த எனக்குப் பிறகு தைரியம் வந்தது. புனைபெயரில் நிகழ்ச்சியைத் தொடங்கினேன். இதையடுத்து இஸ்லாத்தைப் பற்றி ஆழமாக ஆய்வு செய்தேன். என் நிகழ்ச்சியைக் கேட்டுவிட்டு, நெருங்கிய நண்பர்கள் நீ முஸ்லிமாகிவிட்டாயா என்றுகூட கேட்டார்கள். நான் இல்லை என்று மறுத்தேன்.

பிறகு 2000ஆம் ஆண்டில் ஓர் இரவில் என்னை ஒரு கேள்வி உலுக்க ஆரம்பித்தது. உண்மையிலேயே நான் இஸ்லாத்தை ஏற்றால் என்ன? என்பதே அக்கேள்வி. கிறித்தவ மதத்தில் என்னை நச்சரித்துக்கொண்டிருந்த ஏராளமான கேள்விகளுக்கு இஸ்லாத்தில்தான் எனக்கு விடை கிடைத்தது. எனவே, இறுதியாக இஸ்லாத்தின் இணைந்தேன்.

http://www.magmj.com/index.jsp?inc=5&id=15098&pid=4327&version=236

தொன்மையான பள்ளிவாசலை மீட்டெடுத்த
ரஷிய முஸ்லிம்கள்

ஷியாவில் ‘காசிமோவ்’’ கிராமத்தில் ‘மஸ்ஜிது கான்’’ எனும் பள்ளிவாசலைப் பெரும் போராட்டத்திற்குப்பின் ரஷிய முஸ்லிம்கள் மீட்டனர். 15ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தப் பள்ளிவாசலை 1702ஆம் ஆண்டு ரஷிய மன்னர் பீட்டர் தி கிரேட் இடித்துத் தள்ளினார். பாங்குமேடை மட்டுமே எஞ்சியிருந்தது.

பின்னர் 1768ஆம் ஆண்டு அப்பள்ளிவாசல் மீண்டும் கட்டப்பட்டது. 1835ஆம் ஆண்டு தாத்தாரிய தலைவர்கள் பள்ளிவாசலை விரிவுபடுத்தி, தற்போதைய வடிவில் சீரமைத்தனர். பாரம்பரியமிக்க இந்தப் பள்ளிவாசல் கடந்த 30 ஆண்டுகளாக அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு, தொழுகைக்குத் தடையும் விதிக்கப்பட்டிருந்தது. நீண்டகால சட்டப் போராட்டத்திற்குப்பின் நீதிமன்றத் தீர்ப்பின்படி ரஷிய முஸ்லிம்கள் ‘மஸ்ஜிது கான்’’ பள்ளிவாசலை மீட்டெடுத்தனர்.

இதற்கிடையில் ரஷியாவின் கிறித்தவப் பெண்மணி ஒருவர் இஸ்லாத்தை ஏற்றார். ஒலிஜா சைரஜீ சோர்கீனா என்ற அப்பெண்மணி பாலஸ்தீன மக்களை ‘ஃகஸ்ஸா’வில் சந்தித்து தமது விருப்பத்தை வெளிப்படுத்தினார். ஃகஸ்ஸாவில் உள்ள ஷரீஆ உயர்நீதிமன்றத்தின்முன் ஆஜரான அவர், தமது சுயவிருப்பத்தின்பேரில் கலிமா சொல்லி இஸ்லாத்தில் இணைந்தார்.

இன்னொரு புறம், ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் தாஃகிஸ்தானைச் சேர்ந்த முஸ்லிம் பெண்மணி ஒருவர் கொல்லப்பட்டார். அவரது உடலில் சிலுவை அறையப்பட்டு, கைகால்கள் வெட்டப்பட்டு, அடுக்குமாடி கட்டிடத்தின் லிஃப்டில் பிணமாகக் கிடந்தார்.

ரஷியாவின் மொத்த மக்கட்தொகையில் 15 விழுக்காடு முஸ்லிம்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. ரஷியாவிலிருந்து தனிநாடாகப் பிரிவதற்காகப் போராடிவரும் கௌகாஸ் மாகாணத்தில் மட்டும் 23 மில்லியன் முஸ்லிம்கள் உள்ளனர்.

யூரோ பகுதியில் முதலாம் இஸ்லாமிய வங்கி



ரோப்பிய நாடுகளின் யூரோ ஏரியாவில் முதலாவது இஸ்லாமிய வங்கி விரைவில் உருவாகிறது. ‘ஊரீஸ் பேங்க்’ எனும் பெயரில் லக்ஸம்பர்கில் உருவாகும் இந்த வங்கியின் மூலதனம் 60 மில்லியன் யூரோ ஆகும். தனி நபர்கள், நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கு வங்கிச் சேவைகளை இது வழங்க இருக்கிறது.

ஊரீஸ் வங்கியின் கிளைகள் ஃபிரான்ஸ் தலைநகர் பாரீஸ், பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ், ஜெர்மனியின் ஃபிரான்க்ஃபோர்ட், ஹாலந்த் ஆகிய இடங்களில் செயல்பட இருக்கிறது. இந்த வங்கியின் முதன்மை முதலீட்டாளர்களாக வளைகுடா தொழிலாளர் மன்றம், எமிரேட்ஸ் அரச குடும்பம் ஆகியோர் உள்ளனர்.

கடைசி சில ஆண்டுகளாக –குறிப்பாக மேற்கில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பிறகு- இஸ்லாமியப் பொருளாதார அமைப்பின் இலாபமும் நிலைத்த தன்மையும் மேற்கத்திய நாடுகள் பலவற்றையும் கவர்ந்துள்ளது குறிப்பிடத் தக்கது.

காமரூனில் வேகமாகப் பரவும் இஸ்லாம்


மேற்கு ஆப்பிரிக்க நாடான காமரூனில் இஸ்லாம் வேகமாகப் பரவிவருகிறது. உலக நாடுகளிலேயே இஸ்லாம் அதிவேகமாகப் பரவும் நாடும் காமரூன்தான். காமரூன் முஸ்லிம்கள் பின்பற்றிவரும் இஸ்லாமியக் கலாசாரமும் பண்பாடும்தான் அந்நாட்டு மக்களை வெகுவாகக் கவர்ந்து, இஸ்லாத்தின்பால் ஈர்த்துவருகிறது.

கடற்கரை நகரமான ‘டவ்லா’ காமரூன் நாட்டின் பொருளாதார தலைநகராக விளங்குகிறது. தென்மேற்கு காமரூனில் உள்ள இந்நகரத்தின் உள்ளூர் முஸ்லிம்கள் ஆண்டுதோறும் ஒரு புதுப் பள்ளிவாசலை எழுப்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். புதிதாக இஸ்லாத்தில் இணையும் மக்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகமாகிவருவதே காரணம்!

இந்நகரத்தின் பெரிய இமாமான ஷைகு முஹம்மது மாலிக் ஃபாரூக் கூறுகிறார்: பள்ளிவாசல்கள் விரிவுபடுத்தப்படுவதும் புதிய பள்ளிவாசல்கள் கட்டப்பட்டுவருவதும் ‘டவ்லா’ நகரில் குறிப்பாகவும் காமரூனில் பொதுவாகவும் பெரிய அளவில் இஸ்லாம் வளர்ந்துவருகிறது என்பதையே காட்டுகிறது. அல்ஹம்து லில்லாஹ்! எங்களிடம் ஏராளமான பள்ளிவாசல்கள் உள்ளன; ஜும்ஆ தொழுகை நிறைவேற்றப்பட இவை வசதியாக உள்ளன.

முஸ்லிம் தலைவர்களில் ஒருவர் கூறியதாவது: காமரூனில் 19ஆம் நூற்றாண்டில்தான் முதல்முறையாக இஸ்லாம் கால் பதித்தது. வடக்கு காமரூனிலிருந்து முஸ்லிம்களும் வெளிநாட்டு வணிகர்களும் கடற்கரை நகரமான ‘டவ்லா’வுக்கு வந்தபிறகு 1922ஆம் ஆண்டில்தான் இந்நகருக்கு இஸ்லாம் வந்துசேர்ந்தது. 1922இல்தான் இந்நகரில் முதலாவது பெரிய பள்ளிவாசல் கட்டப்பட்டது.

இந்த நகரத்தில் மட்டும் 90க்கும் அதிகமான பள்ளிவாசல்கள் உள்ளன. 30 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்நகரில் 5 லட்சம் முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.

http://www.magmj.com/index.jsp?inc=5&id=15131&pid=4336&version=236

மேற்குலகம் இஸ்லாத்தை அழிக்க விரும்புகிறது?


ரோப்பிய ஒன்றியத்தில் வாழும் முஸ்லிம்களில் மூன்றில் ஒரு பங்கினர், ஐரோப்பிய சட்டங்களின்படி தமது சமய நம்பிக்கைகளைச் செயல்படுத்திவருகின்றனர். அதே நேரத்தில், அவர்களில் 45 விழுக்காட்டினர், மேற்குலகம் இஸ்லாத்தை அழிக்க விரும்புகிறது என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் சமூகவியலாளர்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் இத்தகவல் தெரியவந்துள்ளது. ஹாலந்து, ஜெர்மன், ஃபிரான்ஸ், ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் வாழும் 12 ஆயிரம் வெளிநாட்டுத் தொழிலாளர்களிடம் நடத்திய ஆய்வில்தான் இந்த விவரம் வெளியாகியுள்ளது.

ஹாலந்தில் வாழும் முஸ்லிம்கள் ஜெர்மன் முஸ்லிம்களைவிட அதிகமாக மார்க்கத்தைப் பின்பற்றிவருகின்றனர். ஹாலந்து முஸ்லிம்களைவிடக் குறைவான உரிமைகளே ஜெர்மன் முஸ்லிம்கள் அனுபவித்துவருகின்றனர் என்ற தகவலும் கிடைத்திருக்கிறது.


பிரேசிலில் முஸ்லிம் ‘தாஇ’க்கு மரியாதை


தென்அமெரிக்க நாடான பிரேசிலில் ‘பரானா’ மாநிலத்தில் இஸ்லாமிய அழைப்புப் பணி செய்துவரும் ஷைகு அஹ்மத் முஹாயிரீ அவர்களுக்கு லவ்ண்டரேனா நகரசபை கண்ணியம் செய்து பாராட்டு விழா நடத்தியது. இவர் இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் வக்ஃப் அமைச்சகத்தின் முன்னாள் தூதர் ஆவார். பரானா மாநிலத்தில் அவர் ஆற்றிய பிரசார மற்றும் பரிபாலனப் பணிகளுக்காக இந்தப் பாராட்டு வழங்கப்பட்டது.

விழாவில் லவ்ண்டரேனா நகர இந்நாள் ஆர்ச்பிஷப், முன்னாள் ஆர்ச்பிஷபான கார்டினல் பானு, காவல்துறை தளபதி, இராணுவப் படை அதிகாரிகள் ஆகியோர் ஆர்வத்தோடு கலந்துகொண்டனர். அத்துடன் யாரும் எதிர்பார்க்காத வகையில் இஸ்லாத்தைப் பற்றியும் இப்பகுதியில் நடக்கும் அழைப்புப் பணி குறித்தும் வெகுவாக சிலாகித்துப் பேசினர். விழா நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பாயின.

No comments:

Post a Comment