- அ. முஹம்மது கான் பாகவி
‘காமன் காஸ்’ என்ற தொண்டு நிறுவனம் அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தது. “இனிமேல் மருந்துகளால் குணப்படுத்திக் காப்பாற்ற முடியாது என்ற நிலைக்குச் சென்றுவிட்ட நோயாளிகளை அவர்களது விருப்பத்தின்பேரில் சட்டப்பூர்வமாகக் கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்” என்பதே அந்த வழக்காகும்.
தலைமை நீதிபதி உள்ளிட்ட ஐவர் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு இம்மனு விசாரணைக்கு வந்தது. “கருணைக் கொலையும் தற்கொலைதான்; தற்கொலைக்கு முயற்சிப்பதோ தூண்டுவதோ குற்றமாகும்” என்று அட்டர்னி ஜெனரல் வாதிட்டர்.
எனினும், கருணைக் கொலை செய்ய அனுமதிக்கலாமா என்பது குறித்து அனைத்து மாநில அரசுகளும் 8 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கருணைக் கொலை?
அருணா செண்பகம் கோமா நிலையில்... |
1973 நவம்பர் 27ஆம் தேதி மும்பை மருத்துவமனை ஒன்றில் செவிலியராகப் பணியாற்றிவந்த அருணா செண்பகம், மருத்துவமனை ஊழியரால் பலாத்காரம் செய்யப்பட்டு, சங்கிலியால் கழுத்து நெரிக்கப்பட்டு கோமா நிலைக்குத் தள்ளப்பட்டார். 37 ஆண்டுகளாக ‘கோமா’ நிலையில் படுத்த படுக்கையாகக் கிடந்த அவரைக் கருணைக் கொலை செய்ய சட்ட அனுமதி கோரிய மனுவை, 2011ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அப்போதிருந்தே கருணைக் கொலை தொடர்பான விவாதம் இந்தியாவில் சூடு பிடித்துவிட்டது. இனிமேல் குணப்படுத்த முடியாது என மருத்துவர்களால் கைவிடப்பட்டுவிட்ட நோயாளி வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல் தானும் வேதனையில் உழன்று, மற்றவர்களுக்கும் பாரமாக இருக்க வேண்டுமா? அவர்மீது கருணை காட்டி, சாத்வீகமான முறையில் கொன்றுவிட்டால் என்ன?
அதாவது உணவையும் மருந்தையும் நிறுத்திவிடலாம்; அல்லது நோயாளி மூச்சுவிட உதவும் கருவிகளை அகற்றிவிடலாம்; அல்லது டயாலிசிஸ் செய்தாக வேண்டிய நோயாளிக்கு அதைச் செய்யாமல் இருந்துவிடலாம். இதையெல்லாம் அவரது விருப்பத்தின்பேரில், அல்லது விருப்பம் தெரிவிக்க அவரால் இயலாதபோது காப்பாளர்களின் வேண்டுகோளின்பேரில் செய்துவிட்டால், நோயாளி தானாகவே மெல்ல உயிரிழந்துவிடுவார். இதுதான் ‘கருணைக் கொலை’ (Euthanasia) எனப்படுகிறது.
1980களில்தான் கருணைக் கொலை உலகின் கவனத்தை ஈர்த்தது. இதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுவதுண்டு. ஊடகங்கள் அளித்த முக்கியத்துவம், நெதர்லாந்தில் பரவிவரும் கருணைக் கொலை, எய்ட்ஸ் போன்ற நோய்களுக்கு மருந்து இல்லாமை, செல்வாக்குமிக்க மன்றங்களும் அமைப்புகளும் அரசுகளுக்குக் கொடுத்துவரும் நெருக்கடி ஆகியவை அவற்றில் அடங்கும்.
மேற்கின் அடிச்சுவட்டில்
வழக்கம்போல், மேற்கு உலகமே கருணைக் கொலைக்கும் வழிகாட்டி. பழங்காலத்து கிரேக்க தத்துவ ஞானிகள் விதைத்துவிட்டுப்போன சிந்தனைதான் இக்கொலைக்குக் காரணம் என்று சொன்னால், அது தவறாகாது.
பிளாட்டோ தமது ‘ஜனநாயகம்’ எனும் நூலில் எழுதுகிறார்: உடலும் அறிவும் நலமாக இருக்கும் குடிமக்களுக்கே எல்லாவற்றிலும் முன்னுரிமை தர வேண்டும்; உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை, அப்படியே சாக விட்டுவிட வேண்டும்.
சாக்ரடீஸ் கௌரவ மரணத்தையே தேர்ந்தெடுத்தார். சிறையிலிருந்து தப்பிக்க அவருடைய மாணவர்கள் செய்த ஏற்பாட்டை ஏற்க மறுத்து, விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். எஸ்கிமோ போன்ற பழங்குடி இனத்தாரிடையே –தண்டனையை அனுபவிக்காமல் கௌரவமாக இறந்துபோகும்- இப்பழக்கம் இன்றும் தொடர்கிறதாம்!
13ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேய தத்துவ ஞானியும் பாதிரியுமான ஃபிரான்க் பக்கோன் கருணைக் கொலை முறையை ஆதரித்த முதல் அறிஞர் (?) ஆவார். ஆங்கிலேய சிந்தனையாளர் தாமஸ் மூர், ஜெர்மனி தத்துவ அறிஞர் நீட்ஷா போன்றோரும் இக்கொலையை ஆதரித்து எழுதினர்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கங்களில் ஜெர்மனியில் கருணைக் கொலையை வலியுறுத்தும் இயக்கம் தொடங்கப்பட்டது. 1939இல் ஹிட்லர் வெளியிட்ட அரசாணை இதை உறுதிசெய்தது. மனநிலை பாதிக்கப்பட்டோர், உடல் ஊனமுற்றோர், தள்ளாமையில் சிரமப்படும் முதியோர் ஆகியோரைக் கொன்றுவிட அந்தச் சட்டம் அனுமதித்தது. இத்தாலியிலும் அந்தச் சிந்தனை பரவியது.
முதல்முதலாக ரஷியாதான், கருணைக் கொலைக்குத் தண்டனை இல்லை என்று அறிவித்தது. இது 1922இல் நடந்தது. விளைவு பாதகமாக இருந்ததால் சில மாதங்களிலேயே சட்டத்தைத் திரும்பப்பெற்றது. அமெரிக்காவில் ஒஹாயு மாநிலத்தில் 1906ஆம் ஆண்டு கருணைக் கொலைக்கு ஆதரவான சட்டம் கொண்டுவரப்பட்டது. பின்னர் அமெரிக்காவின் பிரதிநிதிகள் அவையின் எதிர்ப்பால் அந்தச் சட்டம் கைவிடப்பட்டது.
இருப்பினும், 1930இல் கருணைக் கொலைக்கு ஆதரவாக அமெரிக்க மன்றம் ஒன்று தொடங்கப்பட்டது. அதற்குமுன் 1823ஆம் ஆண்டிலேயே இது தொடர்பான முதலாவது வழக்கு அமெரிக்க நீதிமன்றத்திற்கு வந்தது. அதில் குற்றவாளி தன் மூன்று குழந்தைகளைத் தண்ணீரில் மூழ்கடித்துக் கொலை செய்தார். அவர்கள் நேரடியாகச் சொர்க்கம் செல்வார்கள் என்று காரணம் கூறினார். 1920இல் அமெரிக்கர் ஒருவர், நோயாளி மனைவி கேட்டுக்கொண்டதன்பேரில் விஷம் கொடுத்து மனைவியைக் கொன்றார்.
ஆக, அமெரிக்காவிலும் ஜரோப்பாவிலும் கிறித்தவப் பேராயர்கள், சிந்தனையாளர்கள், மருத்துவர்கள், முற்போக்கு (?) எழுத்தாளர்கள் எனப் பலரும் கருணைக் கொலைக்கு ஆதரவாகத் தீவிரமாகக் குரல் கொடுத்துவருகின்றனர். அமெரிக்காவில் 80 விழுக்காடு மருத்துவர்கள், குணப்படுத்த இயலாத நோயாளிகளை அவர்களுக்கோ குடும்பத்தாருக்கோ தெரியாமலேயே கருணைக் கொலை செய்துவிடுவதாக ஒரு கருத்துக் கணிப்பில் (1960) தெரிவித்திருந்தனர்.
சில புள்ளிவிவரங்கள்
- பிரிட்டனில் ஓராண்டில் 18 ஆயிரத்திற்கும் குறைவில்லாத கருணைக் கொலைகள் நடக்கின்றனவாம்!
- நெதர்லாந்தில் ஆண்டிற்கு 2 ஆயிரம் முதல் 10 ஆயிரம்வரை கருணைக் கொலைகள் நடக்கின்றன!
- பெல்ஜியத்தில் ஆண்டொன்றுக்கு 203 கருணைக் கொலைகளும் சுவிட்சர்லாந்தில் (1800 அழைப்புகள் வந்தாலும்) 300 கருணைக் கொலைகளும் நடக்கின்றன.
- மேற்கைப் பார்த்து முஸ்லிம் நாடுகளிலும் இக்கொடுமை நடப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. எகிப்தில் இஸ்கந்தரிய்யா பல்கலைக் கழக மருத்துவமனையில் ஒரேயொரு செவிலி மட்டுமே 13 கருணைக் கொலைகளை ஒரு கட்டத்தில் செய்துள்ளார்.
- துனூசியாவில் 18 வயது இளம்பெண், நான்கு வயதே ஆன தம்பியைக் கருணைக் கொலை செய்தார். அப்பெண்ணுக்குத் தண்டனை தீர்ப்பானபோது கடும் எதிர்ப்பு கிளம்பியது.
கருணைக் கொலை ஏன்?
நோயாளியைக் குணப்படுத்தி வாழவைக்க முடியும் என்ற நம்பிக்கை அடியோடு இல்லை. இயற்கையான மரணமும் கண்ணுக்கு எட்டும் தூரத்தில் இல்லை. வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல் ஒருவர் ஆண்டுக் கணக்கில் உயிருள்ள சடமாகக் கிடந்து தானும் அவதியுற்று, சுற்றியிருப்போரையும் விரக்தியும் வெறுப்பும் அடையச்செய்துகொண்டு எத்தனை நாட்கள்தான் இருப்பது?
அவரது சம்மதத்தைப் பெற்று, சாத்வீகமான முறையில் அவரைச் சாக விட்டுவிட்டால், எல்லாருக்கும் நிம்மதியல்லவா? பணம் மிச்சம்; நேரம் மிச்சம்; மனித ஆற்றல் மிச்சம்! இனி அவர் உயிருடன் மட்டும் இருந்துதான் யாருக்கு என்ன லாபம்?
இந்தக் கருணைக் கொலைக்குச் சட்ட அனுமதி கொடுத்தால் என்ன? என்பதே மேற்கைப் பின்பற்றும் கிழக்கின் ஆதங்கம்! இதில் ஆன்மிகம், தார்மிகம், சமயம், பண்பாடு, கலாசாரம் என்றெல்லாம் கவனிக்கவோ பாவம்-புண்ணியம் பார்க்கவோ இடமில்லை என்பது இந்த இடதுசாரிகளின் வாதமாகும். இதுதான் முற்போக்கு; இதை மறுப்பது பழமைவாதம் என்றும் இவர்கள் விமர்சிக்கத் தயங்குவதில்லை.
உண்மை என்ன?
- கொலை என்பதே கொடுமையானது; இதில் கருணைக்கு எங்கே இடம் உண்டு?
- நோயாளியே விரும்புகிறாரே என்று வாதிடலாம். தற்கொலை செய்பவனும் விரும்பித்தானே மரணத்தை வலிந்து தேடிக்கொள்கிறான்! தற்கொலைக்கும் சட்ட அனுமதி வழங்கலாமா?
- உறவினர் விரும்பிக் கேட்டுக்கொண்டாலும் மருத்துவர்கள் பரிந்துரை செய்தாலும் கொலை கொலைதானே!
- மரண தண்டனையே கூடாது என்று ஆர்ப்பாட்டம் நடத்தும் முற்போக்குவாதிகள் கருணைக் கொலையில் மட்டும் கருணையில்லாமல் நடந்துகொள்ளலாமா?
- கருணைக் கொலைக்குச் சட்ட அனுமதி கிடைத்துவிட்டால், சொத்துக்காகவும் சுயநலத்திற்காகவும் உறவினர்களே கொலை செய்துவிட்டு, கருணைக் கொலைதான் என்று சட்டத்தை நம்பவைக்க எவ்வளவு நேரமாகும்? இதற்கு மருத்துவர்கள் துணைபோகமாட்டார்கள் என்று உங்களால் அடித்துச்சொல்ல முடியுமா?
- பெற்றோரையே விஷ ஊசிபோட்டு கருணைக் கொலை செய்யும் பிள்ளைகளைத்தான் இந்தச் சட்ட அனுமதி உருவாக்கும்! இல்லையா?
- எல்லாவற்றையும்விட, அன்பு, பாசம், உறவு, நட்பு, மனிதநேயம் ஆகிய உயர் பண்புகள் ஏற்கெனவே நலிந்து மெலிந்து காணப்படுகின்றன. ஒரேயடியாக அவற்றையும் கருணைக் கொலை செய்யவே சட்ட அனுமதி உதவும்!
இஸ்லாம் சொல்வதென்ன?
1. அடிப்படையில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். மனிதனின் உயிர் அவனுக்குச் சொந்தமல்ல; அவனைப் படைத்த இறைவனுக்குச் சொந்தமானது. படைத்தவனே ஆணையிடுகிறான்:
உங்கள் உயிரை நீங்களே மாய்த்துக்கொள்ளாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்கள்மீது கருணையுள்ளவனாக இருக்கின்றான். (4:29)
2. உயிர்வாழ்வது சிரமம் என்பதற்காக யாரும் சாகத் துணியக் கூடாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் யாரும் தமக்கு ஏற்பட்ட துன்பத்தின் காரணத்தால் மரணத்தை விரும்பி வரவேற்க வேண்டாம்! (புகாரீ)
3. அறியாமைக் கால மக்கள் சிலர் வறுமை, அவமானம், அடிமைத்தளை ஆகியவற்றை அஞ்சி சிசுக்களை கொலை செய்துவந்தார்கள். இந்தக் கொடுஞ்செயலுக்கு குர்ஆன் தடை விதித்தது.
இல்லாமையை அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவாதாரம் அளிக்கிறோம். (17:31)
ஆக, காரணம் எதுவாக இருந்தாலும் உயிரை அழித்துக்கொள்ள மனிதனுக்கு உரிமையோ அதிகாரமோ கிடையாது என்பதே இஸ்லாத்தின் நிலையாகும்.
மார்க்கத் தீர்ப்பு
1. அனுமதிக்கப்பட்ட உயிரிழப்பு (கொலை) என்பது சத்தியத்திற்காக உயிர்நீப்பது மட்டுமே. உயிர், பொருள், மானம், மார்க்கம் ஆகியவற்றைக் காப்பதற்காக உயிரை இழப்பது, இறைவழியில் அறப்போரில் உயிரை இழப்பது ஆகியவை எடுத்துக்காட்டுகளாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று காரணங்களில் ஒன்று இருந்தால் மட்டுமே ஒரு முஸ்லிமின் உயிரைப் பறிப்பதற்கு அனுமதியுண்டு. 1. திருமணமானவர் விபசாரம் செய்தல். 2. அநியாயமாக ஒருவரைக் கொலை செய்தல். 3. மதம் மாறி, சமூகக் கட்டமைப்பைப் பிரிந்து செல்லல். (புகாரீ, முஸ்லிம்)
ஒரு நோயாளி –எந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும், அந்த நோயின் நிலை எப்படியிருந்தாலும்- குணமடைவார் என்ற நம்பிக்கை இல்லை என்பதற்காகவோ அடுத்தவருக்கு அவரது நோய் பரவுவதைத் தடுக்க முடியாது என்பதற்காகவோ அவரைக் கொலை செய்வது கூடாது. இறப்பு அல்லாஹ்வின் கையில் உள்ளது. நோயாளியைக் குணப்படுத்தும் ஆற்றல் அவனுக்கு உண்டு.
இந்நிலையில், குணப்படுத்தும் நம்பிக்கை இல்லாத கட்டத்தில்கூட நோயாளி தற்கொலை செய்துகொள்வதோ அவர் அனுமதியின் பேரில் மற்றவர் அவரைக் கொல்வதோ இரண்டுமே ‘ஹராம்’ ஆகும். முந்தியது தற்கொலை என்றால், பிந்தியது படுகொலை ஆகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள்: முற்காலத்தில் ஒருவர் வாழ்ந்தார். அவருக்கு ஒரு காயம். வலி தாங்காமல் துடித்தார். எனவே, ஒரு கத்தியை எடுத்துக் கையை கீறிக்கொண்டார். குருதி கொட்டத் தொடங்கியது. இறுதியாக, அவர் இறந்துபோனார். அப்போது உயர்ந்தோன் அல்லாஹ் கூறினான்: என் அடியான் தன் உயிர் விஷயத்தில் அவசரப்பட்டுவிட்டான். அவனுக்குச் சொர்க்கத்தை நான் தடை செய்துவிட்டேன். (புகாரீ, முஸ்லிம்)
ஆக, குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை அற்றுப்போன நோயாளியைக் கொலை செய்வது மார்க்கச் சட்டப்படி ‘ஹராம்’ ஆகும். நோயாளியே அனுமதித்தால் அது தற்கொலையில் சேரும்; அவரது அனுமதியின்றி நடந்தால் அது படுகொலையாகும். உயிர் என்பது இறைவனின் உடைமை; அதை அவன் அனுமதித்த வகையில் மட்டுமே இழக்கலாம். (‘அல்அஸ்ஹர்’ மார்க்கத் தீர்ப்பு)
2. சாத்வீக முறையில் கருணைக் கொலை செய்வது மார்க்கச் சட்டப்படி ‘ஹராம்’ ஆகும். எந்த வழியிலும் நோயாளியைச் சாகவிடுவது உறுதியாகத் தடை செய்யப்பட்டதாகும். அதைச் செய்யத் துணிந்தவர் திட்டமிட்டுக் கொலை செய்த குற்றவாளி ஆவார். மனித உயிரைக் கொல்வது ஹராம் என்று குர்ஆனும் ஹதீஸும் உறுதிப்பட தெரிவிக்கின்றன. (‘குவைத்’’ மார்க்கத் தீர்ப்பு)
No comments:
Post a Comment