- கான் பாகவி
இ
|
றைவன் படைத்த எல்லா நாட்களும் 24 மணி நேரம் கொண்ட ஒரே நாள்தான்; எல்லா ஆண்டுகளும் 12 மாதங்களைக் கொண்ட ஒரே ஆண்டுதான். நாளிலும்
மாதத்திலும் எந்த ஏற்றத்தாழ்வும் இல்லை. ஆயினும், ஒரு நாளில், அல்லது ஒரு மாதத்தில் நடந்த, நடக்கின்ற நிகழ்ச்சியைப் பொறுத்து அந்த
நாளுக்கோ மாதத்திற்கோ முன்னுரிமையும் முதலிடமும் கிடைப்பதுண்டு.
நீங்கள் பிறந்த நாளை உங்களால் மறக்க முடியுமா? உங்கள் தாய், அல்லது தந்தை மறைந்த நாள் கண்களைவிட்டு
மறையுமா? நீங்கள்
மணமுடித்த அந்த நேரத்தை உங்களால் எளிதில் புறந்தள்ள இயலுமா? உங்களுக்கு வேலை, அல்லது விசா கிடைத்த நாள், உங்கள் சகோதரன், அல்லது நண்பன் பிரிந்த நாள், உங்களுக்கு முதல் குழந்தை பிறந்த நாள்… இப்படி வாழ்க்கையில் நம்மால் அலட்சியப்படுத்த
முடியாத தருணங்கள் நிறைய உண்டு. அப்படித்தானே!
புனித ரமளான் மாதத்தில் மகத்துவமிக்க ஓர் இரவில் (லைலத்துல் கத்ர்), உலகத்தையே திரும்பிப் பார்க்கவைத்த ஒரு
நிகழ்ச்சி நடந்தது. அது, இப்பூவுலகிற்குக்
கிடைத்த ஒப்பற்ற புண்ணியம்; நிகரற்ற புனிதம்; மனிதர்களைப் புனிதர்களாக்க நிகழ்ந்த அற்புதம்; மனிதகுல வரலாற்றில் அதற்குமுன் நடந்திராத
அதிசயம். அதுமட்டும் நிகழ்ந்திராவிட்டால், மனித இனமே மிருக இனமாக மாறியிருக்கும்.
நாமெல்லாம் நாகரிகமே தெரியாத காட்டுமிராண்டிகளாக இருந்திருப்போம்; மனிதம் கொல்லப்பட்டிருக்கும். நல்ல வேளையாக
அது நடந்தது.
ஆம்! அந்தப் புனித இரவில் இறுதித் தூதர் அண்ணல் முஹம்மத் (ஸல்) அவர்கள் ‘ஹிரா’ குகையில் இறைச் சிந்தனையில் லயித்திருந்த
வேளையில், வானவர் தலைவர்
ஜிப்ரீல் (அலை) அவர்கள் அங்கே வருகை புரிந்தார்கள். ஓதியே பழக்கப்பட்டிராத
அப்துல்லாஹ்வின் புதல்வர் முஹம்மதை நோக்கி ‘ஓதுவீராக!’ (இக்ரஉ) என்றார்கள். அப்துல் முத்தலிபின்
பேரர் முஹம்மதோ, நான்
படித்தவனல்லவே! என்று வியப்போடு விடையளித்தார்கள்.
இறுதியாக இதழ்கள் விரிந்தன; இறைமறையின் முதல் வசனம் அவ்விதழ்களில்
ஒலித்தது. அப்துல்லாஹ்வின் புதல்வர், அல்லாஹ்வின் தூதர் ஆனார்கள். அத்தருணம்
புல்லரிப்பையும் சிலிர்ப்பையும் தரவல்லது. நினைக்கும்போது அக்காட்சி கண்களில்
விரிய, சிறகு முளைத்து
விண்ணில் பறப்பதைப் போன்ற உணர்வு மிகுகிறதல்லவா? அந்த மாதம்தான் புனித ரமளான்; அந்த இரவுதான் லைலத்துல் கத்ர். அந்த இரவின்
விடியலில்தான் ஆதமுடைய மக்களுக்கு விமோசனம் பிறந்தது.
தி
|
ருக்குர்ஆன் அருளப்பெறத் தொடங்கிய அப்புனித மாதத்தில் நோன்பிருந்து, நின்று வழிபட்டு, திருமறை ஓதி, இறையைப் போற்றிப் புகழ்ந்து அனைவரும் தனக்கு
நன்றி தெரிவிக்க வேண்டுமென அல்லாஹ் விரும்பினான்போலும்! இம்மாதத்தில் நோன்பைக்
கடமையாக்கிவிட்டான்.
மக்காவிலிருந்து மதீனா புலம்பெயர்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தொடக்கத்தில் மாதந்தோறும் 3 நாட்கள் நோன்பு நோற்றுவந்தார்கள். அத்துடன் ‘ஆஷூரா’ (முஹர்ரம் – 10ஆம்) நாளன்றும் நோன்பு நோற்றதுடன், மக்களையும் நோன்பு நோற்குமாறு
கட்டளையிட்டார்கள். பின்னர் ரமளான் மாத நோன்பு நோற்குமாறு அல்லாஹ் கட்டளையிட்டான்.
ஆயினும், சக்தியுள்ளவர்கள்கூட
நோன்பு நோற்காமல், ஒரு
நோன்புக்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிக்கலாம் என்ற சலுகை அளிக்கப்பட்டது (2:184).
பிறகு ரமளான் மாதத்தில் உடல் ஆரோக்கியத்தோடு உள்ளூரில் தங்கியிருக்கும்
ஒவ்வொருவரும் கட்டாயமாக நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டது. பயணத்தில் இருந்தாலோ
நோய்வாய்ப்பட்டு இருந்தாலோ அம்மாதத்தில் நோன்பு நோற்காமல், வேறு நாட்களில் நோற்றுக்கொள்ளலாம். இறுதிவரை
நோன்பு நோற்கவே முடியாத அளவுக்கு முதுமையால் பாதிக்கப்பட்டவர்கள் நோன்பைக்
கைவிட்டுப் பரிகாரம் செய்யலாம். அதாவது ஒருநாள் நோன்புக்கு ஓர் ஏழைக்கு உணவளிக்க
வேண்டும்.
புனித ரமளானில் எல்லா நன்மைகளையும் ஆர்வத்தோடு செய்வதில் முந்திக்கொள்ள
வேண்டும். “ரமளானின்
முதலாம் இரவு வந்துவிட்டால், பொது அறிவிப்பாளர் ஒருவர், ‘நன்மையைத் தேடுபவனே! முன்னேறி வா! தீமையைத்
தேடுபவனே! (பாவங்களைத்) தடுத்துவிடு!’ என்று அறிவிக்கிறார்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(திர்மிதீ)
இப்படிப் பொதுவாக எல்லா நன்மைகளையும் நோக்கி முன்னேற வேண்டும் இப்புனித
மாதத்தில். குறிப்பாக 7 ‘அமல்’களைச் செய்ய வேண்டும் என்று
பரிந்துரைக்கலாம்.
1. நோன்பு: இதன் கடமையை ஒப்புக்கொண்டு, நன்மையை எதிர்பார்த்து நோன்பு நோற்பவரின்
பாவங்கள் மன்னிக்கப்படும். ‘ரய்யான்’ எனும் சொர்க்கவாசலில் நுழைகின்ற பெரும்பேறு
கிடைக்கும். நோன்பாளியின் வேண்டுதல் (துஆ) ஏற்கப்படும். நோன்பாளிக்காக, நோன்பு மறுமை நாளில் பரிந்துரைக்கும். மேலும்
பல சிறப்புகளும் புண்ணியங்களும் நோன்பாளிக்கு உண்டு.
2. தொழுகை: ஐங்காலத் தொழுகையை ஜமாஅத்துடன்
கூட்டாக நிறைவேற்ற வேண்டும். இரவுத் தொழுகையை ஈடுபாட்டுடன் தொழ வேண்டும். இதனாலும்
நம் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. ‘தஹஜ்ஜுத்’ தொழுகையும் இம்மாதத்தில் தவறாமல்
தொழுதுவாருங்கள்! இது இறைவனுக்கு மிகவும் உவப்பான அமலாகும்.
3. திக்ர் மற்றும் இஸ்திஃக்ஃபார்: அல்லாஹ்வை
நாவாலும் மனத்தாலும் நினைவுகூர்வதால் இதயங்களுக்கு அமைதி கிடைக்கிறது. ‘யோகா’வே தேவையில்லை; ஒழுங்காக நாள்தோறும் திக்ர் செய்து வந்தாலே
மனதுக்கு நிம்மதியும் சுகமும் கிடைத்துவிடும். அடுத்து பாவமன்னிப்புக் கேட்பது
மிகமிக முக்கியம். அடியான் அல்லாஹ்வை நெருங்க முடியாமல் போவதற்கும் அவன் கேட்கும்
துஆ ஏற்கப்படாமல் நிராகரிக்கப்படுவதற்கும் அடிப்படை காரணமே, அடியானின் பாவங்களும் கறைபடிந்த
கரங்களும்தான்.
இப்பாவங்களுக்கு அழுது மன்றாடி இறையிடம்
மன்னிப்பு வாங்கிவிட்டால், அதைப் போன்றதொரு
அருட்கொடை வேறு இருக்க முடியாது.
4. துஆ - பிரார்த்தனை: நம் தேவைகளுக்காகவும்
மறுமையின் வசந்தத்திற்காகவும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
நோன்பாளியின் துஆ ஏற்கப்படுவதைப் போன்றே, ரமளான் இரவுகளில் செய்யப்படும் துஆவும்
ஏற்கப்படுகிறது. தஹஜ்ஜுத் தொழுதுவிட்டு, அந்த நடுநிசியில் நிசப்தம் நிலவும் அமைதியான
நேரத்தில் கேளுங்கள்! தரப்படும். நாமாக சில துஆக்களைக் கேட்பதைவிட, குர்ஆனிலும் ஹதீஸிலும் வந்துள்ள துஆக்கள்
சிறப்பானவை. அவ்வாறே, லைலத்துல் கத்ர்
இரவில் கேட்க வேண்டிய துஆக்களை முன்னோர்கள் நமக்கு வழங்கியுள்ளார்கள். அவற்றையும்
கண்டறிந்து கேட்க வேண்டும்.
இறைவனிடம் கையேந்துங்கள் |
(இந்த துஆக்கள் அனைத்தும் அரபி மூலத்துடனும்
மொழிபெயர்ப்புடனும் கிடைக்கின்றன. நான் மொழிபெயர்த்த ஒரு புத்தகமும் உண்டு.
தேவைப்படுவோர்: 91718 46184; 96001 25000 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டால்
அனுப்பிவைப்பார்கள்.)
5. குர்ஆன் ஓதுதல்: புனித ரமளானில் புண்ணியம்
தேட அதிகமதிகம் குர்ஆன் ஓதுங்கள். ஒரு நாளைக்கு 3 ஜுஸ்உகள் வீதம் ஓதிவந்தால் ரமளானில் 3 முறை குர்ஆனை ஓதிவிடலாம். அதற்கேற்றவாறு
நேரத்தை வகுத்துக்கொள்ளுங்கள்! மறுமை நாளில் குர்ஆனும் நமக்காக அல்லாஹ்விடம்
மன்றாடும்; பரிந்துரை
செய்யும்.
6. தர்மங்கள்: ஸகாத், ஸதகா ஆகிய தர்மங்கள் எப்போது செய்தாலும்
நன்மைதான். புனித ரமளானில் செய்யும்போது கூடுதல் நன்மை கிடைக்கும்.
உறவுக்காரர்களில் உள்ள ஏழை எளியோருக்கு இத்தருமங்களை வழங்கினால் இரட்டை நன்மை
கிடைக்கும். தர்மத்திற்கான நன்மை ஒன்று; உறவைப் பேணியதற்கான நன்மை மற்றொன்று.
7. இந்த எல்லா அமல்களையும் அல்லாஹ்வுக்கென்றே –விளம்பரம், சுயநலம் ஏதுமின்றி- தூய எண்ணத்தோடு
நிறைவேற்றுவதுடன், நாவைக்
கட்டுப்படுத்துவதும் முக்கியமான அம்சமாகும். பொய், புறம், கோள், குழப்பம், சாபம், ஏச்சு, பிறர் மனம் புண்படும்படி நடத்தல் ஆகிய
சாபக்கேடுகளிலிருந்து நம்மை நாம் தற்காத்துக்கொள்ள வேண்டும்.
பொய்யான பேச்சையும் வீணான செயலையும்
கைவிடாதவரின் பசியும் தாகமும் அல்லாஹ்வுக்குத் தேவையில்லை –என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
(புகாரீ)
No comments:
Post a Comment