Monday, March 13, 2017

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் சொல்வதென்ன?
அ. முஹம்மது கான் பாகவி
அண்மையில் வடக்கே நடந்த ஐந்து மாநிலச் சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 11.3.2017 அன்று வெளியிடப்பட்டன. ஒரு மினி பொதுத் தேர்தல் முடிவுகள்போல் ஆவலோடு எதிர்பாக்கப்பட்ட இவற்றால் சிலருக்கு மகிழ்ச்சி; சிலருக்கு வருத்தம்; இன்னும் சிலருக்கு அச்சம்.
உத்தரப் பிரதேசம், அதிலிருந்து பிரிக்கப்பட்ட உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களிலும் ஆளும் கட்சிகள் அறுதிப் பெரும்பான்மையோடு வெற்றி பெறவில்லை என்பது முடிவுகளிலிருந்து தெரிகின்ற பொது அம்சம்.
பஞ்சாப் முடிவுகளைப் பார்ப்போம். சிரோன்மணி அகாலிதளம் – பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் இருந்தது. மொத்த இடங்களான 117இல் இக்கூட்டணி பெற்ற இடங்கள் 18 மட்டுமே! எதிர்க்கட்சியான காங்கிரஸ் 77 இடங்களில் அமோக வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது. ஆக, பி.ஜே.பி.க்குப் படுதோல்வி. கூட்டணியில் 23 இடங்களில் போட்டியிட்ட பா.ஜ.க. வெறும் 3 இடங்களில் மட்டுமே வெற்றி.
அடுத்து மணிப்பூர் வடகிழக்கு மாநிலம். மொத்த இடம் 60. ஆளும் காங்கிரஸ் 28 இடங்களில் வெற்றி. இன்னும் 3 உறுப்பினர்கள் ஆதரவு கிடைத்தால் அக்கட்சி மீண்டும் ஆட்சியில் அமரலாம். பா.ஜ.கட்சிக்கு 21 இடம் மட்டுமே! ஆனால், 36.3 விழுக்காடு வாக்குகள் பெற்றதாம்! காங்கிரஸிற்கு 35.1 விழுக்காடுதான் கிடைத்ததாம்! வாக்கு சதவீதத்திற்குத்தான் இங்கே மரியாதை இல்லையே! ஆக, மணிப்பூரிலும் பாஜகவிற்குத் தோல்வியே!
அடுத்து கோவா. மொத்த இடம் 40. ஆளும் கட்சியான பா.ஜ.க. 13 இடங்களையும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் 17 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. காங்கிரஸிற்கு இன்னும் 4 பேரின் ஆதரவு கிடைத்தால், அதன் கையில்தான் ஆட்சி. ஆக, கோவாவிலும் பா.ஜ.க.விற்குத் தோல்வியே!
உ.பி.யின் பங்காளி உத்தரகாண்டில் மொத்த இடம் 70. ஆளும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது. பெற்ற இடம் 11 மட்டுமே! எதிர்க்கட்சியான பா.ஜ.க. 57 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடிக்கிறது.
நாட்டிலேயே பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் மொத்த இடம் 403. ஆளும் கட்சி கூட்டணியான சமாஜ்வாதி – காங்கிரஸ் பெற்ற இடங்கள் 54. இதில் 298 இடங்களில் நின்ற சமாஜ்வாதிக்கு 47 இடங்களும் 105 தொகுதிகளில் நின்ற காங்கிரஸிற்கு 7 இடங்களும் கிடைத்துள்ளன. கூட்டணி இல்லாமலிருந்திருப்பின் இந்த இடங்கள்கூட சமாஜ்வாதிக்குக் கிடைத்திருக்குமா என்பது கேள்விக்குறிதான்.
எதிர்க்கட்சியான பா.ஜ.க. கூட்டணி 325 இடங்களைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. இதில் பாஜக.விற்கு மட்டுமே 312 இடங்கள் கிடைத்துவிட்டன. 403 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தித் தனியாகக் களம் கண்ட மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 19 இடங்களில் மட்டுமே வென்று பரிதாபமான தோல்வியைச் சந்தித்துள்ளது.
வெற்றி – தோல்வியின் பின்னணி?
தேர்தல் நடந்த 5 இடங்களில் 3 மாநிலங்களில் பாஜக.விற்குத் தோல்விதான். அவற்றில் இரண்டு இடங்களில் (பஞ்சாப், கோவா) ஆட்சியை இழந்துள்ளது; அல்லது ஆட்சியில் பங்கை இழந்திருக்கிறது.
வெற்றி – தோல்வியின் பின்னணியை ஆராயும்போது உ.பி., உ.கா இரண்டு மாநிலங்களையும் ஒன்றாக வைத்தே நோக்க வேண்டும். பூகோள, கலாசார, அரசியல், பொருளாதார மட்டங்களில் இரண்டும் ஒன்று என்பதே காரணம். இதன்படி, இரு மாநிலங்களின் மொத்த இடங்கள் 473 (403+70). பா.ஜ.க. பெற்ற இடங்கள் மொத்தம் 382 (325+57). இது மொத்தத்தில் 80.76 சதவீதமாகிறது.
உண்மையில் பெரிய வெற்றிதான். அதே நேரத்தில், எதிர்க்கட்சியின் பலம் – பலவீனத்தைக் கருத்தில் கொண்டால், வீரனைத் தோற்கடிக்கவில்லை என்பது புரியும். ஆளும் சமாஜ்வாதிக் கட்சியில் கடைசிவரை உட்கட்சிப் பூசல்; குடும்பச் சண்டை; ஒருவரை ஒருவர் காலை வாரிவிடுவதில் போட்டி. கூட்டணி அமைப்பதில் தெளிவின்மை. ஒருவாறு அகிலேஷ், கட்சியிலும் ஆட்சியிலும் தன்னை நிலைநிறுத்தி, தன்னைப் போன்ற இளைஞரான ராகுல் காந்தியுடன் கைகோத்து, ஆக்ரோஷமாகக் களத்தில் இறங்கினார். வாக்காளர்களின் பார்வை திரும்பத் தொடங்கியது.
ஆனால், அதற்குள் தேர்தல் வந்துவிட்டது. வாக்காளர்கள் தரப்பில் பார்க்கும்போதும் அகிலேஷ் ஆட்சியின் மீது தாபத்தைவிடக் கோபமே மிஞ்சியிருந்தது. சிறுபான்மையினர், தலித்கள் மத, சாதி வெறித் தாக்குதல்களுக்கு உள்ளானபோது அகிலேஷின் அணுகுமுறை கல்யாண்சிங் அணுகுமுறையையே நினைவுபடுத்துவதாக இருந்தது.
மாயாவதியோ தனிக்காட்டு ராணியாக வலம்வந்தார். யானையின் பலமே தனக்கு இருப்பதாகத் தப்புக் கணக்குப் போட்டார். போதாக்குறைக்கு பழைய குற்றச்சாட்டுகள் நீறுபூத்த நெருப்பாகக் கனன்றுகொண்டே இருந்தன. தன் கட்சி வேட்பாளர்களில் 106 முஸ்லிம்களுக்கு அவர் இடமளித்தும் முஸ்லிம்களை ஈர்க்க அவரால் இயலவில்லை.
காங்கிரஸ்மீது மக்களுக்கு ஏற்பட்ட அவநம்பிக்கையும் தண்டிக்க வேண்டும் என்ற வேகமும் ஒரு டிகிரிகூடக் குறையாமல் அப்படியே நீடித்தன. வசீகர பிம்பம் காங்கிரஸில் யாரிடமும் இல்லை. இமேஜ் மட்டுமல்ல; நல்ல வீரியமான பேச்சாளர்களுக்கும் அக்கட்சியில் பஞ்சம். (என்ன செய்ய! இந்நாட்டின் அரசியலில் இந்தப் போலிகள்தான் வெற்றி – தோல்வியை நிர்ணயிக்கின்றன!) இதனால் நேரு குடும்பத்தினரின் அமேதி மற்றும் ரேபரேலி மக்களவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட 10 சட்டப் பேரவைத் தொகுதிகளில் பெரும்பாலானவற்றை பா.ஜ.க. வென்றுள்ளது.

முஸ்லிம் வாக்காளர்கள்
உ.பி. வாக்காளர்களில் 21 விழுக்காடு முஸ்லிம்கள் என்று சொல்லப்படுகிறது. 60 தொகுதிகளில் முஸ்லிம் வாக்காளர்களே அதிகம். அது மட்டுமன்றி, பா.ஜ.கட்சி வேட்பாளர்களில் ஒருவர்கூட முஸ்லிம் கிடையாது.
அப்படியிருக்க, 80 விழுக்காட்டிற்கும் அதிகமான இடங்களை பா.ஜ.க.வால் எப்படிக் கைப்பற்ற முடிந்தது? மிலக் ரிசர்வ் தொகுதியில்தான் தேவ்பந்த் நகரம் உள்ளது. அங்குதான், பிரபலமான இஸ்லாமியப் பல்கலைக் கழகம் ‘தாருல் உலூம்’ உள்ளது. இப்பகுதியில் அஃஜம் கானுக்குச் செல்வாக்கும் உள்ளதாம்! இத்தொகுதியில் வென்றது யார் தெரியுமா? பா.ஜ.க. வேட்பாளர் பிரிஜேஷ்தான் வென்றுள்ளார்.
இதனால்தான், பா.ஜ.கட்சியின் அதிர்ச்சி தரும் வெற்றியை ஏற்க முடியாது என்கின்றனர் எதிர்க்கட்சிகள். வாக்குப் பதிவு இயந்தரங்களில் தில்லுமுல்லு நடந்துள்ளது; எந்தப் பட்டனை அழுத்தினாலும் பா.ஜ.க.வுக்கே வோட்டுப் பதிவாகும்படி ‘செட்டப்’ செய்யப்பட்டிருந்தது –என்கிறார் பகுஜன் சமாஜின் மாயாவதி. இவரது குற்றச்சாட்டை மறுக்கவியலாது என்று சொன்ன அகிலேஷ், மக்களை மிரட்டி வெற்றி பெற்றுள்ளனர் என்று குற்றம் சாட்டுகிறார். முஸ்லிம்கள் அதிகமாக வாழும் இடங்களிலும் பா.ஜ.கட்சிக்கு ஆதரவாகவே முடிவு வெளிவந்திருப்பதை நம்ப முடியவில்லை –என்றும் மாயாவதி கருத்துத் தெரிவித்துள்ளார்.
என்னதான் காரணமாக இருக்கும்!
இப்படி எதிர்க்கட்சிகள் புலம்பினாலும் “தோற்றவன் வாக்கு கச்சேரி ஏறாது” என்பதன்படி, 14 ஆண்டுகளுக்குப் பிறகு பா.ஜ.க. உ.பி.யில் அரியணையில் அமர்ந்தது அமர்ந்ததுதான்.
நமது பார்வையில் – முஸ்லிம் வாக்காளர்கள் தரப்பில் – நிறைய குளறுபடிகள் இருந்திருப்பதாகத் தெரிகிறது. முஸ்லிம்கள் கணிசமான எண்ணிக்கையில் வாழும் அப்பகுதியில், சோதனை மேகம் சூழ்ந்துள்ள ஒரு தேர்தலில் எவ்வளவு உஷாராக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் சொல்லுங்கள்!
1. வாக்குரிமை உள்ள ஒவ்வொரு முஸ்லிமும் தவறாது வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை முன்பே ஏற்படுத்தியிருக்க வேண்டும்!
2. முஸ்லிம் வாக்குகள் சிதறாமல் ஒருமுகப்படுத்த போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும்!
3. தலித்கள், சிறுபான்மையினர், மதச்சார்பின்மை சக்திகள், இடதுசாரிகள் முதலான ஆதரவுக் கரங்களை ஒருங்கிணைக்க ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.
4. மதச்சார்பற்ற வலுவான அணியை உருவாக்குவதில் முன்முயற்சி எடுத்து, அதில் வெற்றி கண்டிருக்க வேண்டும்.
5. பிரசாரப் படை அமைத்து, நம் முன்னுள்ள மிகப் பெரும் சவாலை எதிர்கொள்வதெப்படி என்ற வகுப்புகளை நடத்தியிருக்க வேண்டும்.
இந்த வியூகங்கள் எதுவும் நடந்ததா? எந்த வியூகமும் இல்லாமல் களத்தில் புகுந்தால், சாதகமான முடிவை எப்படி எதிர்பார்க்க முடியும்? அத்தகைய வியூகம் எதுவும் நடக்கவில்லையோ என்று எண்ணத் தோன்றும் வகையில் சில செய்திகள் வெளிவந்துள்ளன.
உ.பி.யில் முஸ்லிம் வாக்காளர்கள் பெருவாரியாக பா.ஜ.க.வுக்கு வாக்களித்திருக்காவிட்டால், இவ்வளவு பெரிய வெற்றியை அக்கட்சி ஈட்டியிருக்க முடியாது என்கிறார், தி இந்து பத்திரிகையின் செதியாளர் ஆர். ஷபிமுன்னா.
முஸ்லிம் வாக்குகள் பிரிந்ததே பாஜகவின் வெற்றிக்கு வழிவகுத்திருக்கிறது. வெற்றிபெறும் கட்சி எனக் கருதி சிலர் சில கட்சிகளுக்கு வாக்களிக்க, அதே தொகுதியில் சமூக வேட்பாளராகப் பார்த்து சிலர் வாக்களிக்க வாக்குகள் பிரிந்திருக்கலாம்!
வாக்குச் சிதறலுக்கு இன்னொரு காரணமும் உண்டு. பா.ஜ.கட்சிக்கு வாக்களிக்கக் கூடாது என்று கருதிய வாக்காளர்கள், சமாஜ்வாதிக்குச் சிலர், பகுஜன் சமாஜுக்குச் சிலர் என்று வாக்களிக்க, முஸ்லிம் வாக்குகள் பிரிந்தன. இது, பா.ஜ.கட்சிக்குச் சாதகமாகப்போனது –என்றும் சொல்லப்படுகிறது.
முஸ்லிம் வாக்காளர்கள் அதிகம் உள்ள ராம்பூர் மாவட்டத்தின் இரு தொகுதிகளில் ஒன்றான பிலாஸ்பூரில் முஸ்லிம் வேட்பாளர் யாரும் நிற்கவில்லை. அங்கு காங்கிரஸ் தோற்றது; பாஜக.வின் பல்தேவ் சிங் வெற்றி பெற்றார்.
ஆக, 69 முஸ்லிம் உறுப்பினர்கள் அங்கம் வகித்த உ.பி. சட்டப்பேரவையில், இப்போது இருப்பதோ 24பேர் மட்டுமே!
முஸ்லிம்களே பாஜக.வுக்கு வாக்களித்துள்ளனர்; அல்லது அவர்களின் வாக்குகள் பிரிய, பாஜக இலகுவாக வென்றுள்ளது. இதற்கு யார் பொறுப்பு? இனிமேலாவது நிலைமை சீரடையுமா? விடை வேண்டிய வினாக்கள்! இந்திய முஸ்லிம்களுக்குத் தேசிய அளவில் ஒரு அரசியல் தலைமை இல்லாத வரை, கருத்துவேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு ஜீவாதாரப் பிரச்சினைகளில் அவர்கள் ஒன்றிணையாத வரை இந்நிலையே நீடிக்கும்; சோதனைகள் தொடரும்.
___________________________

No comments:

Post a Comment