ரபிக் கல்லூரி மாணவக் கண்மணிகளே! திருக்குர்ஆன் கலைகளில் 5ஆவதாக, குர்ஆன் வசனங்கள் சுட்டிக்காட்டும் பல்துறை தத்துவங்கள் தொடர்பான ஆராய்ச்சியைக் குறிப்பிடலாம். இது, திருவசனங்களின் பொருள், விரிவுரை ஆகியவற்றை நன்கு அறிந்தபிறகு அறிய வேண்டிய ஆழமான, நுணுக்கமான விஷயமாகும்.
அரசியல், அறிவியல், இறையியல், ஒழுக்கவியல், சட்டவியல், குடும்பவியல், குற்றவியல், பொருளியல், வணிகவியல், வாழ்வியல், வேளாண்மை.. என மனிதனின் அமைதியான வாழ்விற்குத் தேவையான பல்வேறு இயல்கள் குறித்து குர்ஆன் கூறும் கருத்துகளையும் வழிகாட்டல்களையும் துறைவாரியாகக் கண்டறிதல் அவசியம். இதையே ஆய்வு, அல்லது ஆராய்ச்சி என்கிறார்கள்.
ஏற்கெனவே செய்யப்பட்டுள்ள ஆய்வுகளை, நூல்கள் மற்றும் இணையதளம் வாயிலாகத் தேடிக் கற்பது ஒரு வகை! இந்தத் தேடலே பெரிய விஷயம்தான். இயன்றால், நாமே இத்துறைகள் தொடர்பான கூறுகளை குர்ஆனில் தேடிக் கண்டுபிடிப்பது இன்னொரு வகை. இந்த இரண்டாம் வகை ஆராய்ச்சி, உலக அளவில் எங்கேனும் நடக்கிறதா என்பது தெரியவில்லை.
ஏனெனில், பெரும்பாலும் என்ன நடக்கிறது என்றால், அறிவியல் அரங்கில் ஏதேனும் ஒன்றைப் புதிதாகக் கண்டுபிடிப்பார்கள். அது, குர்ஆன் அல்லது ஹதீஸில் வந்துள்ள பொருளை உறுதி செய்யக்கூடிய, மெய்ப்பிக்கக்கூடிய சான்றாக அமைந்துவிடும். அதை எடுத்துப் பேசியும் எழுதியும் புளகாங்கிதம் அடைந்துகொள்கிறோம். அவ்வளவுதான். இதையே முஸ்லிம் உலகம், குர்ஆனைப் பார்த்து, ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்திருந்தால் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே அறிவியல் உலகத்திற்குக் கிடைத்த பெருங்கொடையாக இருந்திருக்கும் அல்லவா?
இந்தச் சரிவுக்குக் காரணம், அறிவியல் உள்ளிட்ட பல துறைகளுக்கு வித்திட்ட முஸ்லிம் அறிஞர்களும் ஆராய்ச்சியாளர்களும் போட்ட அஸ்திவாரத்தில் முஸ்லிமல்லாதவர்கள் -குறிப்பாக மேற்கத்தியர்கள்- பெரிய பெரிய கட்டடங்களை எழுப்பி எங்கோ உயரத்திற்குச் செல்ல, தம் முன்னோர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றத் தவறினார்கள் முஸ்லிம் கல்வியாளர்கள்.
இதனால் இன்னும் தரைமட்டத்திலேயே கிடக்கிறார்கள். பாதங்களுக்குக் கீழே கொட்டிக் கிடக்கும் பெட்ரோல் உள்ளிட்ட கனிமச் செல்வங்களைக்கூட, அடுத்தவர் வந்து இனம் காட்ட வேண்டிய அவல நிலையில் தத்தளிக்கின்றன முஸ்லிம் நாடுகள்.
முஸ்லிம் விஞ்ஞானிகள்
மருத்துவம், வேதியியல், கணிதம், வடிவியல் (Geometry), தத்துவம் போன்ற கலைகளுக்கு விதை தூவிய முஸ்லிம் விஞ்ஞானிகள் சிலரைப் பற்றி அறிவோம்.
1. ராஸேஸ் (Razes). இவர் கி.பி. 864இல் பிறந்து, 932இல் மறைந்தார். ஊர், ஈரானில் உள்ள ரய்யு. இவரது பெயர்: முஹம்மத் பின் ஸகரிய்யா அர்ராஸீ. ராஸீ என்பதைத்தான் ராஸேஸ் என்று மாற்றி உருக்குலைத்திருக்கிறார்கள். இவர் இயற்றிய இரண்டு நூல்கள், அறிவியல் உலகில் பிரசித்திபெற்றவை. 1. மருத்துவக் கலைக் களஞ்சியமான ‘தி காம்ப்ரஹன்சிவ் புக். 2. வேதியியலில் பிரபலமான நூல்: ‘தி ஸ்பிரிச்சுவல் ஃபிஸிக் ஆஃப் ராஸேஸ்.
2. அவிசென்னா (Avicenna). கி.பி.980இல் பிறந்து 1037இல் மறைந்த மேதை. ஊர்: உஸ்பெகிஸ்தானிலுள்ள புகாரா. அலீ பின் சீனா என்பதுதான் ‘அவிசென்னா’ ஆகி அடையாளம் இழந்திருக்கிறது. இவர் எழுதிய இரு நூல்கள் மருத்துவத்தில் பெயர்போனவை. 1. கேனன் ஆஃப் மெடிசன் (அல்கானூனு ஃபித்திப்பி); 2. தி புக் ஆஃப் ஹீலிங் (கிதாபுஷ் ஷிஃபா); இவையன்றி, 3. ‘தி புக் ஆஃப் சால்வேஷன்’ 4. தி புக் ஆஃப் டைரக்டிவ்ஸ் அண்ட் ரிமார்க்ஸ்’ ஆகியவையும் இவர் எழுதியவையே! ஆக, இப்னு சீனா அவர்கள் ஒரு மருத்துவர்; கணித மேதை; விஞ்ஞானி; தத்துவ அறிஞர்.
3. அல்காரிதம். இராக்கில் கி.பி. 780இல் பிறந்து 850இல் மறைந்த கணித மேதை. பெயர்: முஹம்மத் பின் மூசா அல்குவாரிஸிமீ. இதையே ‘அல்காரிதம்’ என்று மாற்றிவிட்டார்கள். இவர் ‘அல்ஜிப்ரா’ எனும் கால்குலேஷன் கணிதத்தின் முன்னோடி. இவர் எழுதிய நூல்: தி கம்பென்டியஸ் புக் ஆஃப் கால்குலேஷன், பை கம்ப்ளீஷன் அண்ட் பாலன்சிங்க் (அல்கிதாபுல் முக்தஸர் ஃபீ ஹிசாபில் ஜப்ரி வல்முகாபலா).
இந்நூல், கோட்ட அளவு, இரு விசைப்படி சமன்பாடுகளுக்கான தீர்வு, வடிவியல், தகவுப் பொருத்த செயல்பாடுகள் ஆகியன குறித்து விவாதிக்கிறது.
இன்னும் எத்தனையோ முஸ்லிம் அறிவியலாளர்கள் ஆராய்ச்சித் துறைக்குக் கோடு போட்டுவிட்டுச் சென்றனர். மேலை நாட்டினர் ரோடே போட்டுவிட்டனர். அறிவியல் துறை சாதனைக்காக நோபல் பரிசு பெறுவோரில் அவர்களே அதிகம். ஆனால், முஸ்லிம்களுக்குத் தங்கள் முன்னோர் போட்ட கோடும் தெரியாது; மற்றவர்கள் போட்ட ரோடும் தெரியாது. இந்த அறிவியலை வைத்துத்தான், இஸ்ரேலும் அமெரிக்காவும் உலகையே ஆட்டிப் படைக்கின்றன என்பதை மறக்க முடியாது; மறுக்கவும் முடியாது.
இதனால்தான், கல்வியாளர் மு. ஆனந்த கிருஷ்ணன் ஒரு கட்டுரையில் இப்படிக் குறிப்பிடுகிறார்:
எட்டாம் நூற்றாண்டு முதல் 15ஆம் நூற்றாண்டுவரை ஒன்பது நுற்றாண்டுகள் அறிவியல் அரங்கில் கொடிகட்டிப் பறந்த முஸ்லிம்கள், அதன்பின் அத்தகைய அறிஞர்களை உருவாக்கத் தவறிவிட்டனர்.
கண்டுபிடிப்புகளையாவது...?
சரி! அறிவியல் உலகில் யாரோ கண்டுபிடித்த விஞ்ஞான உண்மைகளையாவது குர்ஆன், ஹதீஸுடன் ஒப்பிட்டுப்பார்த்து, அல்லது ஏற்கெனவே ஒப்பிட்டுப்பார்க்கப்பட்ட தகவல்களையேனும் கண்டறிந்து மார்க்க அறிஞர்கள் அறிவியலை நுகர வேண்டுமா? இல்லையா? அந்த நுகர்வுக்கு, நீ திசை காண வேண்டும்.
மத்ரஸாவில் திசை காண தவறிவிட்டதற்காக இப்போதும் குர்ஆன் கூறும் அறிவியலை அடையாளம் காணாமல் அசட்டையாக இருந்துவிடாதீர்கள். நூல்களைத் தேடுங்கள்! இணைய தளத்தை நாடுங்கள்! எப்பாடுபட்டேனும் அறிந்துகொள்ள முயலுங்கள்!
எடுத்துக்காட்டுக்காகச் சில வசனங்களை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன்:
‘அல்அன்பியா’ அத்தியாயத்தில் ஒரு வசனம்: “வானங்களும் பூமியும் ஒன்றாக இணைந்திருந்தன. நாம்தான் அவற்றை வெடித்துச் சிதறவைத்தோம். (21:30)
1973ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றுத்தந்த அறிவியல் ஆய்வே இப்பொருள்தான். ‘பெருவெடிப்பு’ (Big Bang) எனும் பிரபஞ்சக் கோட்பாடுதான் அது. மிகமிக அதிகமான வெப்ப நிலையும் அடர்த்தியும் மிகுந்த ஒரு வெடிபொருள் வெடித்துச் சிதறியதில் உண்டானதே இந்தப் பிரபஞ்சம் என்கிறது இக்கொள்கை.
இத்திருவசனம் அருளப்பெற்று பலநூறு ஆண்டுகளுக்குப் பிறகுதான், ‘பெருவெடிப்பு’ கோட்பாடே மனிதனுக்குத் தெரியவந்திருக்கிறது. இவ்வசனத்தை அறிவியல் கண்ணோட்டத்தோடு ஆய்வு செய்திருந்தால், என்றோ ‘பெருவெடிப்பு’ கொள்கை மனிதகுலத்திற்குக் கிடைத்திருக்குமல்லவா? வசனத்தைத் திரும்பத் திரும்பப் படியுங்கள். உண்மை தெரியும்.
சரி! இப்போதாவது, இவ்வசனத்தைப் படிக்கும்போதும் படிப்பிக்கும்போதும் -இது ‘Big Bang’ கொள்கையைக் குறிக்கிறது என இலேசாகவேனும் சுட்டிக்காட்டப்பட வேண்டுமல்லவா?
‘அல்பகரா’ அத்தியாயத்தில் ஒரு வசனம்: மணவிலக்குச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் (முடியும்)வரை (மறுமணம் செய்யாமல்) தங்கள் விஷயத்தில் காத்திருக்க வேண்டும். (2:228)
விவாகரத்துச் செய்யப்பட்ட பெண், உடனுக்குடன் மறுமணம் செய்துகொள்ளக் கூடாது. 3 மாதவிடாய்க் காலம் –சுமார் 3 மாதங்கள்- காத்திருந்து, அப்பருவம் கடந்தபிறகே மற்றோர் ஆணை மண முடிக்கலாம். இது ஏன்?
1. முதல் கணவரால் உருவான கரு அவள் வயிற்றில் இருந்து, மறுமணத்திற்குப் பின் குழந்தை பிறக்க, குழந்தை யாருடையது என்ற குழப்பம் தோன்ற வாய்ப்பு உண்டு என்பது ஒரு காரணம். அதுதான் இன்றைக்கு ஒரு டெஸ்ட் பண்ணிவிட்டாலே விஷயம் தெரிந்துவிடப்போகிறது என்ற கேள்வி எழும். அதற்கும் ஒரு பதிலைக் கூறிவிடலாம்! டெஸ்டில் தவறு ஏற்பட இடமுண்டு எனும்போது எப்படி நம்புவது என்று பதிலளிக்கலாம்!
2. கணவன் – மனைவி உறவு முறிந்துபோனது ஒரு துக்கமான நிகழ்வு; துக்கத்தைக் காட்டும் முகமாகவே 3 மாதக் காத்திருப்பு என்பது இரண்டாவதாகச் சொல்லப்படும் காரணம். இதிலும், உறவு முறிந்ததால் இருவரும் நிம்மதி அடைந்துள்ளனர் என்றாலோ, மனைவிக்கு இதில் ஏகப்பட்ட சந்தோசம் என்றாலோ துக்கம் போலியானதாகிவிடுமே! என்ற கேள்விக்கு இடமுண்டு.
3. அண்மையில் ஒரு யூத விஞ்ஞானி கண்டுபிடித்த காரணம் ஒன்று உண்டு. இதனால் அவர் இஸ்லாத்தில் இணைகின்ற நிலையும் ஏற்பட்டது.
ராபர்ட் கில்ஹாம்
கருவியல் ஆராய்ச்சியாளரான ராபர்ட் கில்ஹாம் ஒரு யூதர். இவர் நீண்ட காலமாக ஓர் ஆய்வை மேற்கொண்டிருந்தார். ஆணின் ரேகைப்பதிவு (DNA Finger Printing) தொடர்பானது அந்த ஆய்வு. ஓர் ஆண், பெண்ணிடம் விட்டுச்செல்லும் டி.என்.ஏ. ரேகைப் பதிவு 3 மாதங்களுக்குப் பிறகு அழிந்துபோகும் என்று ஆய்வில் அவர் கண்டுபிடித்தார்.
அதாவது தம்பதியர் உடலுறவு கொண்டால், ஆண் தனது பாலின ரேகையைப் பெண்ணிடத்தில் விட்டுச்செல்கிறான். அது 3 மாதங்களுக்குப் பிறகே முற்றாக அழியும் என்பதே அவரது கண்டுபிடிப்பு. இதை அவர் பரிசோதித்துப் பார்த்து உறுதியும் செய்துகொண்டார்.
இதிலிருந்து 3 மாத ‘இத்தா’ ஏன் என்பதற்கான காரண விளக்கமும் வெளிவந்தது. முதல் கணவனின் டி.என்.ஏ. ரேகைப் பதிவு முற்றாக அழிய 3 மாதங்கள் பிடிக்கும். அதன்பின் மறுமணம் செய்துகொண்டால், டி.என்.ஏ பரிசோதனையில் குழப்பம் இராது. இல்லையேல் மறுமணத்திற்குப்பின் பிறக்கும் குழந்தையின் டி.என்.ஏ.வும் பழைய கணவனின் டி.என்.ஏ.வும் ஒத்துப்போக வாய்ப்பு உண்டு.
அரபி இதழ் ஒன்றில் அண்மையில் வெளியான இத்தகவலை மொழிபெயர்த்து தமிழுலகிற்கு அறிமுகப்படுத்தினேன். பலரும் எடுத்தாண்டுள்ளார்கள். இதற்கு உதவியது நவீன அரபிமொழி அறிவுதான் என்பது குறிப்பிடத் தக்கது.
திருக்குர்ஆனில் அறிவியல்
இப்படி ஏராளமான எடுத்துக்காட்டுகளை அடுக்கிக்கொண்டே போகலாம்! ‘அருள்மறை குர்ஆனும் அறிவியல் கண்டுபிடிப்புகளும்’ என்றொரு நூல் உண்டு. நான் எழுதி, சாஜிதா புக் சென்டர் வெளியிட்டிருக்கிறது. இதில் 77 தலைப்புகளில், குர்ஆனில் புதைந்துள்ள அறிவியல் தத்துவங்கள் இடம்பெறுகின்றன.
அவ்வாறே பொருளியல், அரசியல், பெண்ணியல், குடும்பவியல்.. எனப் பல்வேறு துறைகளுக்கும் குர்ஆன் வழிகாட்டுகிறது. இதையெல்லாம் மாணவர்கள் கற்பது எப்போது? குர்ஆனை ஆய்வு செய்வது எப்படி? ஆராய்ச்சித் துறையில் ஆலிம்களின் பங்களிப்பு என்ன?
இதுவெல்லாமே மாணவர்களான உங்கள் கையில்தான் உள்ளன. ஆர்வமும் விடாமுயற்சியும் சாதிக்க வேண்டும் என்ற வெறியும்தான் உங்களை முன்னேற்றும் துடுப்புகளாகும்; தூண்டில்களாகும் என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்!
(சந்திப்போம்..)