Saturday, August 04, 2018

*காலச்சுவடு இதழுக்கு என் கடிதம்*

*காலச்சுவடு இதழுக்கு என் கடிதம்*

*அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு…*

‘வன்கொடுமைகளின் களியாட்டம்’ எனும் மொழிபெயர்ப்புத் தலையங்கம் கண்டேன். சீர்மரபினர் சாதிக்காரர் ஒருவரின் கிணற்றில் நீச்சலடித்த குற்றத்திற்காக (?) மகாராஷ்டிரா கிராமம் ஒன்றில், தலித் சிறுவர் இருவருக்கு நடந்த வன்கொடுமையானது, நாகரிக உலகத்தின் அவமானச் சின்னம் என்பதில் இரு கருத்திற்கு இடமில்லை என்றே சொல்ல வேண்டும்.

அச்சிறுவர்கள் செய்த பாவம்தான் என்ன? தலித் குடும்பத்தில் பிறந்ததா? பிறப்பு மனிதன் கையில் இல்லையே! இதே தலித்களை அழைத்துத்தானே கிணற்றைத் தோண்டுகிறார்கள்! சுற்றுச்சுவர் எழுப்புகிறார்கள்! கிணற்று நீரைச் சுத்தப்படுத்துகிறார்கள்! தூர் வாருகிறார்கள்! அப்போதெல்லாம் தீண்டாத தீட்டு, நீந்துவதால் மட்டும் எப்படித் தொற்றும்?

இதுவென்ன கொடுமை? தலித் சிறுவர்களின் உடம்பிலுள்ள அழுக்கு நீரில் கலந்துவிடும் என்றால், யார் நீந்தினாலும் அப்படித்தானே! கிணற்றிலுள்ள மீன்கள் அழுக்கைச் சுத்தம் செய்துவிடுமே! மீனுக்குத்தான் சாதி இல்லையே!

இவர்களின் ஆட்சியில் சமூகநீதி செத்துப்போய் பல ஆண்டுகளாகிவிட்டன. விளிம்புநிலை மக்களுக்குச் சமூகநீதி கிடைக்க இவர்கள் பாடுபடுகிறார்கள் என்பதெல்லாம், காதில் பூச்சுற்றும் வடிகட்டிய பொய். மத்தியிலும் மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் இவர்களின் ஆட்சிதான் நடக்கிறது. அங்கெல்லாம் தலித்கள், சிறுபான்மையினர் போன்ற விளிம்புநிலை மக்கள் நாள்தோறும் அனுபவிக்கும் வன்கொடுமைகள் கொஞ்சமா?

அற்பக் காரணங்களைச் சொல்லி, பட்டப்பகலில் அடித்துக் கொல்வதும், அக்கொலைகள் படமாக்கப்பட்டு, சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவுவதும், பார்த்துவிட்டு நாலுபேர் கொதிப்பதும், அத்தோடு மூச்சுப்பேச்சு இல்லாமல் அடங்கிப்போவதும் வாடிக்கையாகிவிட்டன.

இந்த வன்கொடுமை குற்றவாளிகளில் எத்தனை பேர் கைது செய்யப்படுகின்றனர்? எத்தனை பேர்மீது வழக்குத் தொடரப்பட்டு விசாரணை நடக்கிறது? எத்தனை பேர் தண்டனை அனுபவிக்கின்றனர்? எத்தனை இடங்களில் இக்கொடுங்குற்றங்கள் குறைந்துள்ளன? ஏதாவது கணக்கோ புள்ளிவிவரமோ இருக்கிறதா?

போலீஸ் கண்முன்னே கொடுமைகள் அரங்கேறுகின்றன. ஊரே கூடி வேடிக்கை பார்க்கிறது. கொடுமைகளின் அரங்கேற்றத்திற்கு அனைவரும் சாட்சிகள். பெயருக்குச் சில கொலையாளிகள் கைது; வழக்கு; பின்வழியாக ஜாமின்; கொஞ்ச நாளில், குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று சொல்லி விடுதலை. இதுதானே தொடர்கதை!

யாருக்குத் தெரியாது இந்தக் கண்துடைப்பு நாடகமெல்லாம்? சட்டத்தின் கரங்கள் கட்டப்பட்டுள்ளன. உண்மை பேச வேண்டியவர்கள் வாய் திறக்க அஞ்சுகிறார்கள். குற்றவாளிகளின் கழுத்தைத் தொடாமல் தூக்கக் கயிறு பம்முகிறது. அரசு மரியாதையுடன் சிறைக் கதவு திறக்கிறது. மாலை மரியாதையோடு குற்றவாளி வெளியே வருகிறான். அடுத்த ஆட்டம் ஆரம்பமாகிறது.

ஹிட்லரோ முசோலினியோ இருந்திருந்தால், இந்த ஆட்சித் தலைமைக்கு நோபல் பரிசு வழங்கியிருப்பார்கள். இனியும் இங்கே நீதி கிடைக்கும் என்றா எதிர்பார்க்கிறீர்கள்? அப்படியென்றால், நீங்கள் ஓர் அப்பாவி!

சென்னை
*அ. முஹம்மது கான் பாகவி*

No comments:

Post a Comment