#நல்லடியார்_மறைந்தார்! #முன்னோடியை_இழந்தோம்!
#மௌலவி, அ. #முஹம்மது_கான்_பாகவி
கண்ணியத்திற்கும் மேன்மைக்கும் உரிய மௌலானா M. முஹம்மது யஅகூப் காசிமி ஹள்ரத் அவர்கள் (85), உலமாக்களின் ஒரு பெருங்கூட்டத்தைத் தவிக்க விட்டுவிட்டு மறைந்துபோனார்கள் என்ற செய்தி கிடைத்தபோது, வெளியூரில் இருந்தேன். உடனே புறப்பட்டுவந்து ஜனாஸாவில் கலந்துகொள்ள இயலாத தொலைவில் இருந்தவண்ணம் இதை எழுதுகிறேன்.
எண்ணம் பின்னோக்கிப் பயணித்தது. ஹள்ரத் அவர்கள் பற்றிய நினைவலைகள் நிழலாடின. நான் பாக்கியாத்தில் கல்வி கற்றபோதும், பின்னர் ஆசிரியனாகப் பணியாற்றியபோதும் ஹள்ரத் அவர்கள் பாக்கியாத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்துவந்தார்கள். ஆனால், ஹள்ரத் அவர்களிடம் கல்விப் பாடம் கற்றவன் அல்லன் நான்; வாழ்க்கைப் பாடம் நிறைய படித்திருக்கின்றேன்.
முதலில் அவர்களிடம் என்னைக் கவர்ந்திழுத்து என்னை அவர்களின் ஒரு ரசிகனாக மாற்றியது, அன்னாரது எளிமைதான். இருக்கும் இடமே தெரியாத அளவுக்கு, எதிலும் அலட்டிக்கொள்ளாத ஒரு நடைமுறை. பியுசிவரைப் பள்ளிப்படிப்பை முடித்ததால் ஆங்கிலம் வாசிக்கும் திறன் இருந்தது. உருது, தமிழ், அரபி ஆகிய மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றிருந்தார்கள். 5 ஆண்டுகள் அன்னார் தாய்க் கல்லூரியில் கல்வி பயின்ற காலத்தில் பாகியாத் பள்ளிவாசலில் இமாமாக மட்டுமன்றி, தராவீஹும் தொழவைத்தார்கள். கிராஅத், தஜ்வீத் உயர் தரத்தில் இருக்குமாம்!
ஸஹீஹுல் புகாரி போன்ற நபிமொழி நூல்கள், பலரும் நடத்தியிருக்கலாம்! என் போன்றோர் மொழிபெயர்ப்பும் செய்திருக்கலாம்! ஆனால், ஸஹீஹுல் புகாரியாகவே வாழ்ந்துகாட்டியவர்களில் ஹள்ரத் அவர்களும் ஒருவர். சுன்னத்தைப் பின்பற்றுவதில் சமரசம் செய்துகொள்ளாத மகான்தான் யஅகூப் ஹள்ரத் அவர்கள்.
விஷாரத்தில் அவர்களது வீடு மிகச் சாதாரணமானது. அபிமானிகள் புதிய வீடு கட்டிக்கொடுக்க முன்வந்தபோதும் மறுத்துவிட்ட பெருமகனார். தஹஜ்ஜுத் விடாத வணக்கசாலி. நடை, உடை, பாவனை அனைத்திலும் சுன்னத் கமழும். பண ஆசை, பதவி ஆசை, புகழ், பரபரப்பு, தன்முனைப்பு போன்ற சாமானியர்களின் ஆசைகளுக்கு அடிபணியாத மேன்மகன். கொள்கைப் பிடிப்பில் சற்றும் தளராத மனஉறுதி, அனாசாரங்களின் எதிரி; ஆசாரங்களின் தொண்டர்.
#தாய்க்_கல்லூரியில்
பாகியாத்தில் நியூலைன் வலப் பகுதி மாடியில் இறுதி அறைதான் ஹள்ரத் அவர்களின் வகுப்பறை. அதில் முதல் அறைதான் எனது வகுப்பறை. நேரமேலாண்மையில் அன்னாரை மிஞ்ச எவராலும் முடியாது. பாடநேரத்திற்கு முன்பே கல்லூரி வந்துவிடுவதும், பாடங்களுக்கு விடுப்பில்லாமல் சரியாக நடத்துவதும், தொழுகைகளுக்கு வந்து சேர்வதும் எனக்கெல்லாம் பாடமாக அமைந்தது என்றால், மிகையாகாது.
என் அறை வழியாகச் செல்லும்போதும் திரும்பும்போதும் ஒரு கண் என்னைத் திரும்பிப் பார்த்துவிட்டுப்போவது அன்னார் வழக்கம். சில நாட்கள் தொடர்ந்து என் அறைப் பூட்டிக் கிடந்தது. இதைப் பார்த்த ஹள்ரத் அவர்கள் விவரம் கேட்க, மூலநோய்க்காக கான் ஹள்ரத் அறுவை சிகிச்சை செய்திருக்கிறார் என்று அறிந்துகொண்டார்கள் ஹள்ரத் அவர்கள்.
மறுநாளே வீடுதேடி வந்து என்னை நலம் விசாரித்துவிட்டுச் சென்றார்கள். என்னால் மறக்கமுடியாத, என்னை மெய்சிலிர்க்கவைத்த இந்நிகழ்ச்சிக்கும் நபிவழியைப் பேணியதுதான் காரணம். இத்தனைக்கும் நான் அவர்களது சர்வீஸுக்கு முன்னால் ஒரு பொடியன்.
#தொடர்ந்த_தொடர்பு
பாக்கியாத்திலிருந்து விருப்ப ஓய்வு பெற்று, கேரளாவுக்கும் அதையடுத்து சென்னை காஷிஃபுல் ஹுதாவுக்கும் யஅகூப் ஹள்ரத் அவர்கள் சென்றபின்பும் அவர்களுடனான தொடர்பு எனக்கு நீடித்துவந்தது. இதற்குக் காரணமாக அமைந்தது, ஹள்ரத் அவர்களின் தலைமையில் தொடங்கப்பட்ட ‘லஜ்னத்துல் ஹுதா’ எனும் சமூக சீர்திருத்த அமைப்புதான். லஜ்னாவின் ஆலோசனைக் கூட்டங்கள், சொற்பொழிவு நிகழ்ச்சிகள், பிரசுரங்கள் வெளியீடு என ஒவ்வொரு சேவைகளிலும் என்னை ஹள்ரத் அவர்கள் மனம் விரும்பி பயன்படுத்திக்கொண்டார்கள்.
அதே நேரத்தில், பழைய வடஆற்காடு மாவட்டத்தில், அதுவரை தொடங்கப்படாதிருந்த தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா கிளை தொடங்குவதிலும் நான் மும்முரமாக ஈடுபட்டிருந்தேன். அப்போது சபையின் மாநிலச் செயலாளராக இருந்த ஈரோடு மௌலானா, உமர் ஃபாரூக் தாவூதி ஹள்ரத் அவர்களின் வழிகாட்டல்பேரில் இப்பணியில் முனைப்புக் காட்டினேன்.
ஒவ்வோர் ஊராகச் சென்று ஆலிம்களையும் இமாம்களையும் தனித்தனியாகச் சந்தித்து, ஜமாஅத்துல் உலமா சபை குறித்த அவர்களின் ஐயங்களைப் போக்கி, கணிசமானோரை உறுப்பினர்களாகச் சேர்த்து, மாவட்ட கிளை உருவாகத் துணையாக நின்றேன். மாவட்ட சபையின் துணைச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தேன்.
#மனாருல்_ஹுதா
ஒரு கட்டத்தில், லஜ்னத்துல் ஹுதா சார்பாக ஒரு மாத இதழ் தொடங்க வேண்டும் என்ற யோசனை லஜ்னாவின் செயற்குழுவில் முன்வைக்கப்பட்டது. அப்போது மாத இதழில் ஆசிரியராக யஅகூப் ஹள்ரத் அவர்கள் என்னையே தேர்ந்தெடுத்தார்கள். இதற்குக் காரணம் ஒன்று இருந்தது. ‘ஹிலால்’ எனும் பெயரில் இதழ் ஒன்றை பாக்கியாத்தில் ஆசிரியராக இருந்துகொண்டே நான் நடத்திவந்ததுதான். இச்சிற்றிதழ் மாணவர்களின் உதவியோடு, ஆசிரியர்களின் கட்டுரைகளுடன் வெளிவந்த இஸ்லாமிய பல்கலை இதழாகும்.
பின்னர் லஜ்னாவின் இதழ் முதலில் ‘அல்ஹுதா’ என்ற பெயரிலும், அதையடுத்து ‘மனாருல் ஹுதா’ என்ற பெயரிலும் வெளிவரலாயிற்று. ஹிலாலின் அனுபவம் மனாரில் கைகொடுத்தது. பாகவிகள், காஷிஃபிகள் போன்ற இளம் ஆலிம்கள் மட்டுமன்றி, தமிழ் அறிஞர்களையும் இஸ்லாமிய இதழில் தொடர்ந்து எழுதவைத்த பெருமை மனாருக்கே உண்டு.
அதுவரைப் பொதுப் பத்திரிகைகளில் மட்டுமே கவிதை, கட்டுரை எழுதிவந்த கவிக்கோ அப்துர் ரஹ்மான், கவிஞர் தி.மு. அப்துல் காதிர், பேராசிரியர் அப்துர் ரஹ்மான், அப்துல்லாஹ் அடியார் போன்ற தமிழறிஞர்களின் கட்டுரைகள், கவிதைகள், பேட்டிகள் முதலான ஆக்கங்கள் முதன்முதலில் மனாரில் வெளிவரத் தொடங்கின. மனாரையும் ஓர் இஸ்லாமியப் பல்கலை இதழாகவே நடத்திவந்தோம்.
அப்போது மனாரில் வெளிவரும் ஆக்கங்களை யஅகூப் ஹள்ரத் அவர்கள் கூர்மையாக வாசித்துக் கருத்துச் சொன்னதுண்டு. ஒருதடவை, தமிழக அரசியல் கட்சிகளில் ஒன்றைக் கடுமையாக விமர்சித்துத் தலையங்கம் தீட்டியிருந்தேன். அவ்விதழ் வெளியான சில தினங்களில் ஹள்ரத் அவர்களைச் சந்தித்தபோது, விமர்சனத்தில் இவ்வளவு கடுமை தேவையா, மௌலவி சாஹிப்? என்று கேட்டு, எனக்குப் பாடம் எடுத்தவர், யஅகூப் ஹள்ரத் அவர்கள்தான். அதன்பின் எழுத்தில் நயத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்கினேன்.
#திசை_காட்டி
அதுபோலவே, எழுத்துத் தளத்தில் சத்தியத்தைச் சொன்னதற்காகக் கடுமையான சோதனைகளை நான் சந்தித்தபோதெல்லாம் எனக்கு ஆறுதலாகவும் ஊக்குவிப்பவராகவும் இருந்த அந்தப் பெருமகனார் இன்று இல்லை என நினைக்கும்போது என்னால் அழாமல் இருக்க முடியவில்லை.
இன்னும் சொல்லப்போனால், நீர் செல்ல வேண்டிய திசை இதுதான் என்று எனக்குப் பாதை காட்டிய வழிகாட்டியை இழந்தது, என்னைப் பொறுத்தவரையில் தனிப்பட்ட பேரிழப்பாகும்.
உடல்நலம் குன்றி, நினைவு தடுமாற்றம் ஏற்பட்ட பிறகு ஒரு தடவை ஹள்ரத் அவர்களைச் சந்தித்தபோது, பழைய நினைவில் “நீங்கள்தானே, ‘ஜவாஹிருல் குர்ஆன்’ தஃப்சீர் செய்துவருகிறீர்கள்!” என்று கேட்க, இல்லை; நான் தஃப்சீர் இப்னு கஸீர் மொழிபெயர்ப்பைக் கவனித்துவருகிறேன் என்று திருத்த வேண்டியதாயிற்று.
அதன்பின் அவர்களை இந்நிலையில் சந்திக்க எனக்குத் தைரியமில்லை. ஹள்ரத் அவர்களின் மறுமை வாழ்க்கை வளமாக இருக்க, அல்லாஹ் அருள் புரிவானாக!
No comments:
Post a Comment