*நிதானம் மிகவும் தேவை*
*கான் பாகவி*
மே 23ஆம் தேதி தேர்தல் முடிவு எல்லாராலும் ஆவலோடு எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் தேர்தல் முடிந்து ஒரு மாதம் கழித்து தமிழகத்தில் முடிவு வெளிவருகிறது.
வாக்குப் பதிவும் பதிவான வாக்கின் எண்ணிக்கையும் எளிதாகவும் விரைவாகவும் முடிவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டதே வாக்குப் பதிவு இயந்திரம். மிகவும் பாதுகாப்பானது எனத் தேர்தல் ஆணையம் என்னதான் அடித்துச் சொன்னாலும், மக்கள் நம்புவதற்குத் தயாராக இல்லை. தில்லுமுல்லு செய்ய முடியும் எனச் சிலர் செயல்பூர்வமாக நிரூபித்தும் ஆணையம் நம்பவில்லை.
பலத்த எதிர்பார்ப்பிற்கும் ஏக்கத்திற்கும் மத்தியில் வெளிவரும் தேர்தல் முடிவு எப்படியும் இருக்கலாம்! கருத்துக் கணிப்புகளை உண்மைப்படுத்தலாம்! அல்லது பொய்யாக்கலாம்! எல்லாவற்றையும்விட, இந்திய ஒருமைப்பாட்டின் மீதும் தேச ஒற்றுமைமீதும் உண்மையிலேயே கவலை கொண்டுள்ள நல்ல இதயங்களுக்கு ஆறுதலான முடிவு வரலாம். அல்லது அதிர்ச்சியான முடிவும் வரலாம்.
முடிவு எதுவாக இருந்தாலும், மக்கள் அமைதி காப்பது மிகவும் முக்கியமான ஒன்று. பாதகமான முடிவைப் பார்த்துப் பொங்கி எழுவதோ, சாதகமான முடிவைப் பார்த்து ஆனந்தக் கூத்தாடுவதோ இரண்டும் கூடாது.
பாதகமான முடிவே வந்தாலும், தெம்போடு நின்று எதிர்கொள்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? சொல்லுங்கள்! உரிமைகள் பறிக்கப்படும்போது, அரசியல் சட்டம் மீறப்படும்போது, மொழி மற்றும் மதச் சிறுபான்மையினர் நசுக்கப்படும்போது சக்தியைத் திரட்டிப் போராடித்தான் ஆக வேண்டும்.
போராட்டமே வாழ்க்கையாகிவிட்ட சமூகம், நம்பிக்கையில் சமரசம் செய்துகொள்வதோ, உரிமைகள் களவாடப்பட வாளாவிருப்பதோ, அதிகார சக்திக்குமுன் மண்டியிடுவதோ ஒருபோதும் ஏற்புடையதல்ல.
*நம்பிக்கையோடு எதையும் எதிர்கொள்வோம் துவண்டுபோகமாட்டோம்!*
No comments:
Post a Comment