*இப்போதும் விழிக்காவிட்டால்..?*
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. அநேகமாக, தமிழகத்தில் ஈரணிகள் களம் காண்பதற்கே வாய்ப்பு அதிகம். ஒன்று, ஆளுங்கட்சியான அ.தி.மு.க. தலைமையில் ஓரணி. பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. தலைமையில் மற்றோர் அணி. அப்படி மூன்றாவது அணி உருவானாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு, அதன் பாதிப்புகள் இருக்கமா என்பது கேள்விக்குறியே!
இந்நிலையில், முஸ்லிம் அரசியல் கட்சிகள் தி.மு.க. அணியில் அங்கம் வகிப்பதுதான் எழுதப்படாத விதியாகிவிட்டது என்பதே அரசியல் கணிப்பாக உள்ளது. முஸ்லிம் கட்சிகள், அதிலும் தேர்தல் களம் காணும் கட்சிகள் என்று நான்கைக் குறிப்பிடலாம். 1. பாரம்பரியக் கட்சியான இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் (IUML). 2. வளர்ந்துவரும் மனிதநேய மக்கள் கட்சி (MMK).
3. SDPI கட்சி. இது, தமிழகத்தில் மட்டுமன்றி வேறுபல மாநிலங்களிலும் தேர்தல் களம் கண்டுவரும் கட்சி. 4. சட்டமன்ற உறுப்பினர் தமீம் அன்சாரி தலைமையில் உள்ள மனிதேநேய ஜனநாயகக் கட்சி (MJK). இது அண்மையில் உருவாகி, தேர்தல் களம் கண்டு வெற்றிவாகை சூடிய புதிய கட்சி என்பது தெரிந்ததே!
இந்த நான்கு கட்சிகள் என்ன முடிவு எடுக்கப்போகின்றன என்ற எதிர்பார்ப்பு முஸ்லிம் வாக்காளர்களிடையே மட்டுமல்ல; பொதுவான வாக்காளர்களின் எதிர்பார்ப்பும்கூட. இவை அனைத்தும் ஓரணியில் நின்று, அதிகபட்சமாக 10 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி வெற்றியே ஈட்டிவிட்டாலும், சமுதாயத்திற்குச் சொல்லிக்கொள்ளும் அளவிற்குப் பெரிய சாதனை எதையும் படைத்துவிடப் போவதில்லை என்ற கருத்தும் உலவுகிறது.
சரி! அப்படி நான்கு கட்சிகளும் ஓரணியில் இணையுமா? அக்கட்சிகளே அதற்கு முன்வருமா? முன்வந்தாலும் அணியின் பெரிய கட்சி எந்த அளவிற்கு வரவேற்கும்? வரவேற்றாலும், பாதகமின்றி ஒவ்வொரு கட்சியின் செல்வாக்கைச் சரியாகக் கணித்து நியாயமான தொகுதிகளை ஒதுக்குமா? அல்லது பெரியண்ணன் எண்ணத்தில் கெடுபிடியைக் காட்டுமா?
எல்லாமே தெளிவற்ற நிலைதான். விடை கிடைக்காமல் திணறவைக்கும் கேள்விகள்தான். அநேகமாக, முதலிரு கட்சிகளுக்குத் தி.மு.க. கூட்டணியில் இடம் கிடைக்கலாம்! அதிலும் முதல் கட்சிக்கு ஓரிரண்டு தொகுதிகள் கூடுதலாகக் கிடைக்க வாய்ப்பு உண்டு என்பது அரசியல் பார்வையாளர்களின் கணிப்பாகத் தெரிகிறது. எப்படிப்போனாலும், இரண்டுக்கும் சேர்த்து ஐந்தைத் தாண்டாது என்பதும் மேல்மட்டத்தில் அடிபடும் பேச்சு என்கிறார்கள்.
அப்படியானால், கடைசி இரண்டு கட்சிகளின் நிலை என்ன என்பதே இப்போதைய பட்டிமன்றத் தலைப்பாக மாறியிருக்கிறது. தி.மு.க. கூட்டணியில் இடம் கிடைக்காவிட்டால், மாற்று அணிக்குச் சென்றுவிடுவார்களா? அல்லது மூன்றாம் அணி காண்பார்களா? அல்லது தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தாமல், மற்றக் கட்சிகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவார்களா? அல்லது எதிலும் தலையிடாமல் ஒதுங்கிவிடுவார்களா? விடை தெரியா வினாக்கள்.
அரசியல் கட்சிகள் உருவாக்குவதும் அதை முன்னிட்டு ஓடியோடி உழைப்பதும் சட்டமன்றத்தில், அல்லது பாராளமன்றத்தில் நாற்காலியில் அமரத்தான். அதுவே உச்சபட்ச அரசியல் முன்னேற்றம். அதையடுத்து ஆட்சி நாற்காலியைப் பிடிப்பதுதான் அடுத்த கட்ட வாழ்நாள் கனவு. இதை யாரும் மறுக்கமாட்டார்கள். இதுவெல்லாம் எங்களுக்குத் தேவையில்லை என்போர் கட்சியே தொடங்கியிருக்கமாட்டார்கள்.
அப்படியிருக்க, நீங்கள் தேர்தலில் நிற்காதீர்கள்! அல்லது எங்களுக்கு ஆதரவு தெரிவிரித்துவிட்டுப் பெரிய மனதோடு நடந்துகொள்ளுங்கள்! –என்று அவர்களுக்கு ஆலோசனை கூறுவது, கடையைத் திறந்துவிட்டீர்கள்! வியாபாரம் செய்யாதீர்கள் என்ற நகைப்பிற்கிடமான யோசனையாகவே அமையும்.
மக்களவைத் தேர்தலாக இருந்தால்கூட, சட்டப்பேரவைத் தேர்தலில் சீட் கொடுக்க வேண்டும் எனப் பேரம் பேசலாம். இப்போது நடக்கவிருப்பதோ சட்டப்பேரவைத் தேர்தல்! இதை விட்டால், அக்கட்சிகள் எதைக் கொண்டு சமாதானம் அடைய முடியும்?
சரி! அப்படியானால் இக்கட்சிகள் என்னதான் செய்வது? இக்கட்சிகளின் மேலிடம் நேரடியாகக் களத்தில் இறங்கி, கூட்டணித் தலைமைக் கட்சியின் கதவைத் தட்ட வேண்டியதுதான். எங்களைக் கூட்டணியில் சேர்ப்பதுடன் தொகுதியும் ஒதுக்குவதால், கூட்டணிக்குக் கிடைக்கும் அனுகூலங்களைப் புள்ளிவிவரங்களுடன் எடுத்துரைத்து, கூட்டணித் தலைமையை இணங்கவைத்தாக வேண்டும்.
அதுவும் கைகூடாதபோது, வெற்றி – தோல்வியைப் பொருட்டாகக் கொள்ளாமல் மூன்றாம் அணி காண்பது ஒன்றுதான் அவர்கள் தங்களுடைய இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள இருக்கும் ஒரே வழி! ஆனால், இந்த முடிவால் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கு ஏற்படும் இழப்பையும் நினைவுபடுத்தாமல் இருப்பது நீதியாகாது. அதே நேரத்தில், இந்த இழப்பில், கூட்டணியில் சேர்க்காமல் உதாசீனம் செய்த பெரிய கட்சிகளுக்கும் பெரிய பங்கு உண்டு என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
இதுதான், தர்க்கரீதியான வாதம் என்பதை, நியாய உணர்வோடு சிந்திக்கும் யாரும் மறுக்கவியலாது எனலாம். ஆயினும்கூட, மிக அபூர்வமாகச் சாத்தியமாகின்ற ஒரு யோசனையும் உண்டு. அநேகமாக அதுதான் கடைசி யோசனையாகவும் இருக்கலாம்!
அது வேறொன்றுமில்லை; தி.மு.க. கூட்டணியில் உரிய இடம் கிடைக்காத கட்சிகள், வேண்டுமானால் தாமாக முன்வந்து இத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியை ஆதரிக்க முன்வருவதுதான், அந்த யோசனை. இது, இக்கட்சிகளுக்கு எட்டிக்கசப்பான தீர்வுதான். நாட்டின் நெருக்கடியான அரசியல் சூழ்நிலையைக் கவனத்தில் கொள்ளும்போது, தாற்காலிகமானதொரு முடிவாக இதை எடுத்தால் என்ன?
அதே வேளையில், இன்று சமூக வலைத்தளங்களில் நடந்துகொண்டிருக்கும் அநாகரிகமான, அசிங்கமான விமர்சனங்கள் சமுதாயத்தைத் தலைகுனியச் செய்து வருகின்றன என்பதை எம்மால் கண்டிக்காமல் இருக்க முடியவில்லை.
இந்த ஏச்சுப் பேச்சுகளால் யாருக்கு என்ன இலாபம்? அதிலும் இரு பக்கங்களிலும் மார்க்கம் படித்த ஆலிம்களும் அரசியல்வாதிகள்போல் தரம் தாழ்ந்து ஒருவரை ஒருவர் வசைபாடுவதை எந்த வகையில் சேர்ப்பது? இந்தப் போக்கானது, சாமானிய மக்களுக்கு எத்தகைய சமிக்ஞையைத் தரும் என்பதைக்கூட இவர்கள் நினைத்துப்பார்க்கவில்லையா? இனி எப்படி ‘மின்பர்’படிகளில் ஏறி நின்று பொதுமக்களுக்குச் சொல்லொழுக்கத்தைப் போதிப்பது என்று யோசித்துப் பாருங்கள்!
போதும்! இந்தச் சொற்போரை நிறுத்துங்கள். மற்ற அரசியல்வாதிகளுக்கு நல்ல முன்னுதாரணமாகத் திகழுங்கள்! பேசினால் நல்லதையே பேசுங்கள்! அதையும் நயமாகப் பேசுங்கள்! இல்லையேல், மௌனமாக இருந்துவிடுங்கள்!
அன்புடன் உங்கள்
*கான் பாகவி*
No comments:
Post a Comment