அஸ்ஸலாமு அலைக்கும்
சென்னையில் ஆங்கிலவழி ஆலிம் பட்டப் படிப்பு
----------------------------------------------
இறையருளால் சென்னை மாநகரில் ஆங்கிலவழி ஆலிம் பட்டப்படிப்பு இன் ஷா அல்லாஹ் தொடங்கவிருக்கும் நற்செய்தி உண்மையிலேயே வரவேற்கத் தக்கதாகும்.
இன்றைக்கு நம் சமுதாய இளைஞர்களும் இளைஞிகளும் பெரும்பாலும் ஆங்கிலவழிக் கல்வியே கற்றுவருகிறார்கள். தங்கள் மத்தியில் பலரும் ஆங்கிலத்திலேயே உரையாடிக்கொள்கிறார்கள். நம் சிறுவர், சிறுமியர் ஆங்கில எழுத்துகளை விரைவாக வாசித்துவிடுகிறார்கள். தமிழ், அல்லது உருது எழுத்துகளை வாசிக்கவோ எழுதவோ அறியாதவர்களாக உள்ளனர். தமிழ், அல்லது உருது எண்கள்கூட அவர்களுக்குத் தெரிவதில்லை.
நம் சமுதாயப் பட்டதாரி இளைஞர்களின் நிலையும் கிட்டத்தட்ட இதுவாகவே உள்ளது. ஜுமுஆவில் இமாம் தமிழ், அல்லது உருது மொழிகளில் உரை நிகழ்த்தினால், இளைய தலைமுறையினர் பலருக்கும் புரிய வேண்டிய விதத்தில் புரிவதில்லை; அரைகுறையாகவே -ஏனோ தானோ என்றுதான்- உரைகளைக் கேட்டுவிட்டுச் செல்கிறார்கள்.
இவர்களின் பேச்சு மொழியின் நிலையே இதுவென்றால், வாசிப்பு மொழியின் நிலைபற்றி சொல்லவும் வேண்டுமா? சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங் போன்ற நாடுகளில் வசிக்கும் தமிழ் முஸ்லிம்களின் மொழி நிலை, இங்கேயும் வந்துவிட்டதோ என எண்ணத் தோன்றுகிறது.
இதனாலெல்லாம், ஆங்கிலத்தைத் தூக்கிப் பிடிக்கிறோம் என்று கருதிவிடாதீர்கள். ஆங்கிலத்தையே தங்கள் கனவு மொழியாக்கிக் கொண்டுவிட்ட நம் பட்டதாரி இளைஞர்களும் இளைஞிகளும் நம் மார்க்கத்தைப் புரிந்துகொள்வது எப்படி என்பதுதான், நம்மை மிரட்டிக்கொண்டிருக்கும் கேள்வியாக உள்ளது; காலதாமதமின்றி விடை கண்டாக வேண்டிய வினாவாகவும் உள்ளது.
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும் எழுதவும் தெரிகின்ற மார்க்க ஆர்வலர்கள் சிலர் மார்க்க உரை நிகழ்த்துவதும், மார்க்க வகுப்புகள் நடத்துவதும் உண்மைதான். ஆனால், அவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அத்துடன், குர்ஆன், ஹதீஸ், ஷரீஆ, வரலாறு முதலான துறைகளை அவர்கள் முறையாகக் கற்றவர்கள் என்றோ, அவற்றில் பாண்டித்தியம் பெற்றவர்கள் என்றோ கூற முடியாது.
அப்படியானால், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன? ஒரு பெருங்கூட்டத்தை, இளைய தலைமுறையினரை மார்க்கம் அறியாத அனாதைகளாக விட்டுவிட முடியுமா? இது, ஒட்டுமொத்த சமுதாயத்தின் பொறுப்பற்ற தன்மையைக் காட்டாதா? குறிப்பாக, மார்க்க அறிஞர்களின் தோள்மேல் சுமத்தப்பட்டுள்ள மாபெரும் கடப்பாட்டினை அலட்சியம் செய்வதாகாதா?
ஒரே தீர்வு இதுவாகத்தான் இருக்க முடியும்! அதாவது பாரம்பரிய அரபி மத்ரசாக்களின் பாடத்திட்டத்தில் இடம்பெறுகின்ற அரபி இலக்கணம், இலக்கியம், மொழியியல், குர்ஆன், ஹதீஸ், ஃபிக்ஹு, வரலாறு முதலான எல்லாக் கலைகளையும் ஆங்கிலவழியில் கற்ற அறிஞர்களை உருவாக்குவது ஒன்றே இதற்குத் தீர்வாக இருக்க முடியும். ஏற்கெனவே, இலங்கை, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் ஆங்கிலவழி ஆலிம் பட்டதாரிகள் உருவாகிவருகின்றனர்.
இந்தியாவில் முதல்முறையாக ஆங்கிலவழி ஆலிம் பட்டப் படிப்பு சென்னை மாநகரில் சூளைமேடு, பாஷா தெருவில் உள்ள ஜாமிஆ இல்மிய்யா அரபிக் கல்லூரியில் இன் ஷா அல்லாஹ் தொடங்கப்படுகிறது. இங்கு மார்க்கக் கல்வியுடன், ஆட்சிப் பணி, பொருளியல், உளவியல், போன்ற கல்விப் பிரிவுகளும் இணைக்கப்பட்டுள்ளன. இந்திய அரசின் NIOS மற்றும் இலங்கை, கேரளா பல்கலைக்கழகங்களுடன் இணைந்த பாடத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இது ஏழாண்டு பாடத்திட்டம். 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன், குர்ஆன் சரளமாக ஓதத் தெரிந்திருக்க வேண்டும். ஆங்கிலம் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். 2021-2022 ஆண்டுக்கான விண்ணப்பப் படிவங்கள் 2021 பிப்ரவரி முதல் மார்ச் 30வரை கல்லூரி முகவரியில் பெற்றுக்கொள்ளலாம். மறந்துவிடாதீர்கள்; தகுதித் தேர்வு உண்டு.
இதுபோன்ற கல்லூரிகளில் ஆலிம் பட்டம் பெற்றவர்கள், டாக்டர்கள், பட்டதாரிகள், வணிகர்கள், வழக்குரைஞர்கள், வணிக நிறுவன அதிகாரிகள் போன்ற அறிஞர்களுக்கும் ஆளுமைகளுக்கும் மார்க்கக் கல்வி கற்பிக்கின்றனர். உரைகள் வாயிலாகவும் வகுப்புகள் வழியாகவும் இஸ்லாமிய போதனைகள், வழிபாடுகள், நன்னடத்தைகள், அனைத்துத் துறை சட்டங்கள், ஹலால் மற்றும் ஹராம் போன்ற எல்லா அறிவுகளையும் ஆங்கில மொழியில் போதிக்கின்றனர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
இன்றே முந்துங்கள்! உங்கள் வாரிசுகளை ஈருலகிற்கும் வழிகாட்டும் அறிஞர்களாக உருவாக்க முன்வாருங்கள்!
இது பெருமைக்காகப் படிப்பதில்லை; கடமைக்காகப் படிப்பது
அன்புடன் உங்கள்
அ. முஹம்மது கான் பாகவி
முதல்வர்
ஜாமிஆ இல்மிய்யா
அறிவியல் மற்றும் ஆய்வு அரபிக் கல்லூரி
No comments:
Post a Comment