Monday, April 12, 2021

மொழிபெயர்ப்பு ஒரு தனிக்கலை

*மொழிபெயர்ப்பு  ஒரு  தனிக்கலை*
                                              *ஆர்.ஷண்முகசுந்தரம்*

கிட்டத்தட்ட நூறு நாவல்களை மொழிபெயர்த்திருக்கிறேன்.இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே சில கவிதைகள் யாத்திருக்கிறேன். உரைநடைக்கவிகளும் எத்தனை எத்தனையோ சமைத்ததுண்டு. ஆனால், அழகான கவிதைகள், நாவல்களில் ஆங்காங்கு வரும் இடங்களில் நான் கைவைக்க அஞ்சுவேன். பாடலின் பொருளைக் கூறித் ‘தக்காரை’க் கொண்டே அப்பணிபுரிதல் என் வழக்கம்.

சொந்த பாஷையில் நன்கு எழுதக்கூடிய ஆற்றல் பெற்றவராக இருந்தால் அவர் செய்கின்ற மொழிபெயர்ப்பும் நன்றாக இருக்கும்.

மூல பாஷையில் – எந்தத் துறையிலிருந்து மொழிபெயர்ப்புச் செய்கிறாரோ – அத்துறையில் உள்ள புத்தகங்களை அவர் ஏராளமாகப் படித்திருக்க வேண்டும். கவிதைகளை மொழிபெயர்ப்பவர் நிச்சயம் கவிஞராகத்தான் இருக்க வேண்டும்.

விஞ்ஞான நூல்களை, அத்துறையில் ஈடுபாடும் பயிற்சியும் பெற்றவர் செய்தால்தானே சிறப்பாக இருக்கும்? சும்மா ‘மேதை’ ஒன்றையே நம்பிச் செய்கிற காரியம் அன்று இது. தன்னிடமிருக்கும் அபார எழுத்துத் திறன், சக்தி எல்லாக் கட்டங்களிலும் கை கொடுக்காது. 

*(அப்படியிருக்க, முறைப்படி மார்க்கம் கற்காத - அத்துறையில் ஈடுபாடும் பயிற்சியும் பெறாத ஒருவர், மார்க்கம் தொடர்பான ஆங்கிலம், அல்லது உருது மொழியிலிருந்து மொழிபெயர்த்தால் எப்படி அது சிறப்பாக இருக்கும்?)*

ஆக, பரிபூரண ஈடுபாடும் அனுபவமும் இல்லாத எந்தக் காரியமும் அரைவேக்காடாகத்தான் இருக்கும்;

வாசகருக்கு மொழிபெயர்ப்பு என்ற உணர்வே ஏற்படா வண்ணம் மொழிபெயர்ப்பு அமைய வேண்டும். அப்படிப்பட்ட ‘நிறை’வை நிரப்புவது எப்படி? தாய்மொழியில் மொழிபெயர்ப்பளாருக்கு நல்ல ஞானமும், இனிய நடையும், எதையும் சரளமாக எடுத்துக்கூறும் ஆற்றலும் அவசியம் வேண்டும்.

மொழிபெயர்ப்பாளாருக்கு வார்த்தைகள் சில விளங்கவில்லையா? அகராதி இருக்கவே இருக்கிறது. என்னதான் ‘புலமை’ பெற்றிருந்தாலும்.அனுபவமே ஏற்பட்டிருந்தாலும் எவ்வளவோ வார்த்தைகளைப் பார்க்க அகராதியின் துணை அவசியம் தேவை. அதை முதலிலேயே பார்த்துவைத்துக்கொள்ள வேண்டும்.

இருமொழியிலும் ‘புலமை’ இருக்கின்ற காரணத்தால், தமிழில் எழுதிவிட்டால் மட்டும் அது தமிழாகிவிடாது; மொழிபெயர்ப்பும் ஆகிவிடாது.சரியான  உணர்ச்சிகளைக் கொண்டுவந்துவிட்டதாகவும் கூறிக்கொள்ள முடியாது.

இதற்காகத்தான், தாய்மொழியில் மொழிபெயர்ப்பாளருக்குள்ள சக்திதான் மொழிபெயர்ப்பிலும் பிரதிபலிக்கும் என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டி இருக்கிறது. உயிர்த்துடிப்பும் மூர்ச்சனையும் பெயர்ப்பில் துள்ளிக் குதிக்க வேண்டும்.

மூல நூலாசிரியர் சொல்ல முயன்றது? என்ன அவர் நினைத்தவற்றையெல்லாம் – எழுத்தில் சேமித்து வைத்திருப்பதை – மொழிபெயர்ப்பிலும் கொண்டு வந்துவிட்டோமா என்பதை ஒரு கணம் ஆற அமர பெயர்ப்பாசிரியர் சிந்தித்துப்பார்த்து - திருப்தி அடைந்தால் – அது தெளிவான மொழிபெயர்ப்பாக இருக்கும் என நம்பலாம்.

எக்காரணம் கொண்டும், இஷ்டம்போல் எழுதியோ, கதை விட்டோ, ஒதுக்கியோ, கூட்டிக்குறைத்தோ மூல நூலாசிரியருக்குத் துரோகம் செய்துவிடக் கூடாது மொழிபெயர்ப்பாளர்.

*(மூலநூல் மார்க்கம் சமந்தப்பட்டதாக இருப்பின் மொழிபெயர்ப்பாளர் செய்யும் தவறு, மார்க்கத்திற்கே செய்யும் துரோகமாகிவிடும். எச்சரிக்கை)*

எல்லாத் தொழில்களுக்கும் எல்லாத் துறைகளுக்கும் பெரும்பாலும் பயிற்சி உண்டு . மொழிபெயர்ப்புச் செய்வதெப்படி என்பதற்கும் பயிற்சி அளிக்கிறார்கள். ஆனால் , இவை யாவும், சொல்லிக்கொடுத்த சொல்லும் கட்டிக் கொடித்த கட்டுச்சோறும் எவ்வளவு தூரகத்திற்கு வரும்? என்ற கணக்கில்தான் முடிகின்றன .வாட் பயிற்சி பெறுவோரெல்லாம் மாவீரக்களாகத் திகழ்வதில்லை.

மொழிபெயர்ப்புச் செய்வதே ஒரு தனிக்கலை! மொழிபெயர்ப்புச் செய்வதெப்படி என்பதை எழுதிக்காட்டுவது அதனிலும் நுட்பமானகலை அன்பை எழுதிக்காட்டுவது சிரமமான காரியம். இதயத்தின் மூலம்தான் சிலவற்றை அறிந்துகொள்ள வேண்டும். மணிக்கணக்கில் பேசலாம். பக்கம் பக்கமாக எழுதலாம். ஆனால் நமது நெஞ்சமே நமக்குத் தெளிவாகத் துலங்காமல் இருக்கும்போது , பிறமொழி ஆசிரியரின் மனத்தை எவ்வாறு படம் பிடிப்பது? 

சுருக்கமாகச் சொல்லப்போனால், மூல ஆசிரியரே மொழிபெயர்க்கப்படும் மொழியில் எழுதி இருப்பாரேயானால் . குறிப்பிட்ட ஒரு கருத்தை எம்மாதிரி எழுதி இருப்பாரோ அம்மாதிரிதான் மொழிபெயர்ப்பு இருக்க வேண்டும்.

(‘எழுதுவது எப்படி’ எனும் நூலில் இருந்து – காலச் சுவடு– ஏப்ரல்-2021)

No comments:

Post a Comment