- அ. முஹம்மது கான் பாகவி
நன்கு ஆண்டுகளுக்குமுன் 2006ல் பள்ளிக்குச் செல்லாத குழந்தைத் தொழிலாளர்கள் உலக அளவில் 25 கோடிப் பேராக இருந்தனர். இந்தியாவில் மட்டும் 8 கோடி குழந்தைத் தொழிலாளர்கள்; குழந்தைத் தொழிலாளர்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று என அப்போதைய புள்ளிவிவரம் தெரிவித்தது.
மத்திய - மாநில அரசுகளின் நடவடிக்கைகளாலும், சமூக ஆர்வலர்களின் பெருமுயற்சியாலும் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து, படிக்கும் குழந்தைகளின் சதவீதம் நாட்டில் உயர்ந்துள்ளது. இதில் முஸ்லிம் குழந்தைகளும் விதிவிலக்கல்ல.
நேஷனல் யுனிவர்சிடி ஆஃப் எஜுகேஷன் பிளானிங் அன்டு அட்மினிஸ்ட்ரேஷன் [NUEPA] என்ற அமைப்பு 2009ஆம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பில் முஸ்லிம் குழந்தைகளின் கல்வி வளர்ச்சி தேசிய அளவில் உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.
தேசிய அளவில் 1.48 கோடி முஸ்லிம் குழந்தைகள் ஆரம்பக் கல்வி பயில்கின்றனர். இது மொத்த எண்ணிக்கையில் 11.3 சதவீதம் ஆகும். இது முந்தைய ஆண்டு 10.49 சதவீதமாக இருந்தது. நடுநிலை வகுப்புகளில் 40.87 லட்சம் முஸ்லிம் குழந்தைகள் படிக்கின்றனர். இது மொத்தத்தில் 9.13 சதவீதமாகும். முந்தைய ஆண்டு இது 8.54 சதவீதமாக இருந்தது.
கடந்த ஆண்டு 48.67 சதவீதமாக இருந்த முஸ்லிம் பெண் குழந்தைகளின் சேர்க்கை 48.93 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது தேவிய விகிதாச்சாரமான 48.38 சதவீதத்தைவிட அதிகம் என்பது குறிப்பிடத் தக்கது.
தமிழகத்தைப் பொருத்தவரையில் இந்தச் சதவீதம் இன்னும் கூடுதலாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதிலும் முஸ்லிம் மாணவிகள் மாநில அளவில் பள்ளிப் படிப்பில் முதலிடம் பெறும் அளவுக்குக் கல்வியில் முன்னேறியுள்ளனர் என்பது ஆறுதல் தரும் தகவலாகும்.
முஸ்லிம் மாணவ - மாணவிகள் முன்புபோல் இல்லாமல் உயர்கல்வி பெறுவதிலும் தகுதி வாய்ந்த வேலைவாய்ப்புகளை அடைவதிலும் முனைப்புக் காட்டிவருகின்றனர். முஸ்லிம் பெற்றோர் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வும் மனமாற்றமுமே இதற்குக் காரணம்.
உலகமயமாக்கல், தாராளமயப் பொருளாதாரக் கொள்கை, உலகமே ஒரு குக்கிராமமாகச் சுருங்கிவிடும் அளவுக்கு வளர்ந்துள்ள தகவல் தொழில்நுட்பம், உலக அளவிலும் தேசிய அளவிலும் ஏற்பட்டுள்ள கடுமையான போட்டி முதலிய இன்றைய நிஜங்கள், மற்றெல்லா மாணவர்களையும் உந்தித் தள்ளுவதைப் போன்றே முஸ்லிம் மாணவர்களையும் யோசிக்கவைத்துள்ளன.
எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழக முஸ்லிம் கட்சிகள், நல அமைப்புகள், அறக்கட்டளைகள், அறிஞர்கள், சமூக மற்றும் கல்வி ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரும் கல்விக்கு முன்னுரிமை கொடுத்து அரும்பாடு பட்டுவருகிறார்கள்.
ஆனால், படிப்பு வளர்ந்த அளவுக்குப் பண்பாடுகள், ஒழுக்க மாண்புகள் வளரவில்லையே என்பதுதான் பெரிய கவலையாக இருக்கிறது. ஒரு பக்கம் சமுதாயத்தின் கல்வித் தகுதி உயர்ந்துகொண்டிருக்க, மறு பக்கம் சமூக ஒழுக்கமும் தனிமனித ஒழுக்கமும் சரிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன.
இந்த ஆபத்து எல்லாச் சமுதாயப் பெரியவர்களையும் பயமுறுத்திக்கொண்டிருப்பது மறுக்க முடியாத உண்மையாகும். இது சர்வதேச அளவில் பல நாடுகளையும் மிரட்டுகின்ற பேராபத்தாகக் கணிக்கப்படுகிறது.
இறைமறுப்பு முதல்...
சாதாரண மக்களுடன் ஒப்பிடுகையில் அறிவாளிகளுக்கு இறைநம்பிக்கை குறைவாக உள்ளதாக லண்டன் அல்ஸ்டெர் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் தெரிவித்துள்ளனர். தாங்கள் புத்திக்கூர்மையோடு திகழ்வதற்குத் தங்களது திறமையே காரணம் என்றும், இதற்கு வேறு காரணம் எதுவும் இல்லை என்றும் பிரிட்டன் பேராசிரியர்களில் பெரும்பாலோர் தெரிவித்தனராம்!
பிரிட்டனில் ஆரம்பக் கல்வி பயில்வோர் மத்தியில் இறைநம்பிக்கை அதிகம் உள்ளது. அவர்கள் வளர்ந்து அறிவு முதிர்ச்சி பெறப் பெற அவர்களிடையே இறைநம்பிக்கை மெதுவாகக் குறைய ஆரம்பித்துவருகிறதாம்! இந்த வகையில் இருபதாம் நூற்றாண்டில் 137 வளரும் நாடுகளில் மக்கள் மத்தியில் சமய நம்பிக்கை குறைந்துவருவதாகவும், மக்கள் அறிவியல் துறையில் வளர்ந்துவருவதே இதற்குக் காரணம் என்றும் 2008 ஜூனில் நடந்த அந்த ஆய்வு கூறுகின்றது.
இதுதான் இப்படி என்றால், கற்பொழுக்கம், விலை என்ன என்று கேட்கும் அளவுக்கு அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்டது. 2003ஆம் ஆண்டு கணக்குப்படி அமெரிக்காவில் திருமணமாகாத பெண்களுக்குப் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 14 லட்சம் ஆகும். இது அங்கு பிறந்த குழந்தைகளின் மொத்த எண்ணிக்கையில் 34.6 சதவீதமாகும். அதாவது மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் அங்கு தவறான வழியில் பிறக்கின்றன.
2009ல் இந்திய தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்ட தகவல் அதிர்ச்சி தருகிறது. இந்தியா முழுவதும் 28 லட்சம் பெண்கள் பாலியல் தொழிலில் (?) ஈடுபட்டுள்ளனர். இவர்களில் சிறுமிகள் 43 சதவீதம்பேர்; 15-35 வயதுக்கு இடைப்பட்டோர் 2.4 சதவீதம்பேர்.
இந்தியாவில் 1997ல் நடந்த 41ஆயிரம் கருக்கலைப்புகளில் 21.7 சதவீதம் 15 வயதுக்குக் குறைவான இளம்பெண்களுக்கு நடந்தது என்பது எவ்வளவு பெரிய அதிர்ச்சிக்குரிய செய்தி! படித்தவர்கள் அதிகம் உள்ள கேரளாவில் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் மாதத்துக்கு 110 கருக்கலைப்புகள் நடந்தால், அதில் 12 சதவீதம் மணமாகாத பெண்களுக்கு நடக்கிறதாம்!
இன்னொரு பக்கம், இந்தியாவில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே போவதாக பிரிட்டிஷ் பத்திரிகை ‘இண்டிபெண்டன்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது. 1981ல் ஆறு வயதுவரையிலான 1000 ஆண் குழந்தைகளுக்கு 962 பெண் குழந்தைகள் இருந்தனர். இது 1991ல் 945ஆகவும், 2001ல் 927ஆகவும் குறைந்துபோனதாம்!
போதைப் பழக்கம்
2008ஆம் ஆண்டு சாஃப்ட்வியூ நிறுவனம் நடத்திய ஆய்வில் கிடைத்த தகவல்கள் இந்திய இளைஞர்களின் போதை நிலையைப் படம்பிடித்துக் காட்டுகிறது. நண்பர்கள் மூலமாக 55 சதவீத ஆண்களும் 35 சதவீத பெண்களும் கெட்ட பழக்கங்களுக்கு அடிமை ஆகின்றனர்.
பள்ளி, கல்லூரி பருவத்திலேயே 42 சதவீத மாணவர்களும் 22 சதவீத மாணவிகளும் சிகரெட் பிடிக்க கற்றுக்கொள்கின்றனர். மதுப் பழக்கத்திற்கு 32 சதவீத ஆண்களும் 26 சதவீத பெண்களும் அடிமைகளாக உள்ளனர். தவறான தோழியரின் சேர்க்கையால் 35 சதவீத பெண்கள் மது, சிகரெட், போதை ஊசி ஆகியவற்றுக்கு அடிமையாகின்றனர்.
இதன்றி ராகிங், ஈவ்டீசிங், டேட்டிங் போன்ற அநாகரிகங்களும் கொடிகட்டிப் பறக்கின்றன. அலைபேசி, இணையதளம் போன்ற தகவல் தொடர்புச் சாதனங்கள் இளவல்களைப் பொருத்தமட்டில் நன்மைக்குப் பயன்படுவதைவிடத் தீமைக்கே அதிகம் பயன்படுகின்றன.
இந்த ஒழுங்கீனங்களுக்கு மத்தியில் தனிமனித ஒழுக்கமும் சமூக ஒழுக்கமும் ஓடி ஒளிந்துகொள்கின்றன; வெட்கப்பட்டு தலைமறைவாகிவிடுகின்றன. ஒழுக்கமுள்ள மாணவனோ மாணவியோ மாணவர் விடுதியில் நீண்ட நாள் தங்கி படிக்க முடியாத நிலையே பெரும்பாலான இடங்களில் காணப்படுகிறது.
இன்றைய கல்வி முறையே இவை அனைத்துக்கும் அடிப்படைக் காரணம் எனலாம். ஆம்! பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களை உருவாக்கும் தொழிற்சாலைகளாகவே கல்வி நிலையங்கள் உள்ளன. இதனால்தான், இந்தத் தொழிற்சாலைகளில் இடம் பிடிக்க லட்சக்கணக்கில் கொட்டிக் கொடுக்க வேண்டியதிருக்கிறது. கல்வி நிலையங்கள் அறிவாளிகளை உருவாக்கினால் போதாது; அறவாளிகளையும் உருவாக்க வேண்டும். அறிவை ஊட்டினால் போதாது; அறத்தையும் சேர்த்து ஊட்ட வேண்டும். அப்போதுதான், அறிவிற் சிறந்த ஒழுக்கமுள்ள தலைமுறையை உருவாக்க முடியும்.
பெற்றோர் கவனத்திற்கு
கடனை வாங்கி பிள்ளையை பெரிய பட்டதாரி ஆக்கி, கைநிறைய சம்பாதிக்கும் நிலைக்கும் உயர்த்தி விடுகிறீர்கள். இதில் உங்களுடைய தியாகம், அர்ப்பணிப்பு, கண்விழிப்பு, சகிப்பு என எல்லாம் உண்டு. ஆனால், பிள்ளைக்கு இறைஉணர்வு, இறையச்சம், மார்க்கப் பிடிப்பு ஆகியவற்றை நீங்கள் போதிக்கத் தவறினால், முதுமையில் முதியோர் இல்லத்தில்தான் இறுதி நாட்களை நீங்கள் கழிக்க வேண்டியதிருக்கும். அங்கு உணவு, உடை கிடைக்கும்; பொழுது போக்க வண்ணத் தொலைக்காட்சி இருக்கும்; உரையாட உங்களைப் போன்ற ஒரு முதுமை கிடைக்கும். ஆனால், பாசத்தைப் பரிமாற, அன்போடு நாலு வார்த்தைகள் பேச நீங்கள் ஈன்றெடுத்த செல்வம்தான் இருக்கமாட்டான்.
மகள்மீது பாசம் காட்டலாம்; உயர் கல்வியும் கொடுக்கலாம்; செல்லமாக வளர்க்கலாம். ஆனால், மகளுக்கும் சமய போதனை, உறவுகளின் மகிமை, புகுந்த வீட்டில் நடந்துகொள்ள வேண்டிய அழகிய நடைமுறை போன்றவற்றைக் கட்டாயமாக ஊட்ட வேண்டும். தவறினால், மகளின் இல்லற வாழ்க்கை மட்டுமன்றி, மருமகனின் நிம்மதியும் தொலைந்துபோகும்.
யாருக்கும் அடங்காமை, கணவனை மதியாமை, வாக்குவாதம், ‘தான்’ என்ற இறுமாப்பு - இவைதான் பண்பாடு இல்லாத படித்த பெண்ணிடம் காண முடியும். நம் முன்னோர்கள் கஷ்டப்பட்டுக் கட்டிக்காத்த கூட்டுக் குடும்பத்தை உடைத்து, தாய்க்கு மகனோ, மகனுக்குத் தந்தையோ இல்லாமல் செய்துவிடுவார்கள். இதனால், அந்தக் குடும்பம் மட்டும் சீரழியாது; பெண்ணைப் பெற்ற உங்களுக்கும் அவமானம்; அவதி!
ஆதலால், பெற்றோர்களே! குழந்தைப் பருவத்திலேயே குர்ஆன் ஓதுதல், தொழுகை, நோன்பு, பெரியவர்களை மதித்தல், பணிவு, நாணம், நபி (ஸல்) அவர்களின் அரிய போதனை எல்லாவற்றையும் எப்பாடு பட்டாவது குழந்தைகளுக்கு ஊட்டிவிடுங்கள். நல்ல தரமான, கட்டுப்பாடுகள் மிகுந்த பள்ளி, கல்லூரிகளில் சேர்த்து படிக்கவையுங்கள். கண்ணுக்குப் பிறகு உங்கள் பெயர் சொல்லும் தலைமுறையை உருவாக்குங்கள்!
No comments:
Post a Comment