காலம்தான் என்ன வேகமாக இறக்கை கட்டிப் பறக்கிறது! முப்பத்து எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன.அரபிக் கல்லூரிகள் வரிசையில் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது, கூத்தாநல்லூர் "மன்பஉல் உலா' மதரசா. அங்கு கல்வி பயின்றுவந்த ஐம்பது மாணவர்களில் நான் புதியவன்.
மூன்றாம் ஆண்டை முடித்துவிட்டு, நான்காம் ஆண்டில் சேர்வதற்காக அங்கு நான் சென்றேன். நுழைவுத் தேர்வு இன்றைய முதல்வர், மௌலானா, சர்தார் முஹ்யித்தீன் ஹள்ரத் அவர்களிடம். அரபி இலக்கண நூலில் தேர்வு முடிந்து, நான்காம் ஆண்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். என்னுடன் வந்த மற்றொரு மாணவர் தேறவில்லை.
தொடர்ந்து மூன்றாண்டுகள் அந்தக் கல்விப் பூங்காவில் மார்க்கத் தேன் அருந்தினேன். திருக்குர்ஆன் விரிவுரை, நபிமொழி, அரபி இலக்கணம், லாஜிக், உருது மொழி, சட்டவியல் உள்ளிட்ட பல்வேறு கலைகளை அங்குதான் நான் நுகர்ந்தேன்; ஆழமும் பார்த்தேன்.
அப்போது கல்வி போதித்த ஆசிரியப் பெருமக்களை என்னால் என்றைக்கும் மறக்க முடியாது. ஒவ்வொருவரிடமும் ஒரு வகையான திறமை. எல்லாரும் மாணவர்களின் கல்வி வளர்ச்சியிலும் ஒழுக்க மேம்பாட்டிலும் காட்டிய அக்கறை இன்றைக்கும் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.
ஆசிரியப் பெருமக்கள்
மறைந்த மாமேதை மௌலானா, அப்துல் கனி பாகவி ஹள்ரத் அவர்கள், அரபி இலக்கணத்தில் ஒரு கடல். ஓர் அரபிச் சொல்லின் ஒலிக்குறியீடு (ஹரகத் - Vicalise) ஆகட்டும்; வாக்கிய உறுப்பிலக்கணம் (இஃராப் - ஆய்ஹப்ஹ்ள்ண்ள்) ஆகட்டும்; அதன் வகைகள் அனைத்தும் அன்னாருக்கு அத்துப்படி.
எந்தப் பாடத்தில் சந்தேகம் கேட்டுச் சென்றாலும், பாடப் புத்தகத்தைப் பார்க்காமலேயே அதன் அடிக் குறிப்பு வாசகங்களைக்கூட மனப்பாடமாகச் சொல்லும் ஆற்றல் அநேகமாக கனி ஹள்ரத் அவர்களிடம் மட்டுமே காண முடியும். வகுப்பில் கருத்துகளும் தகவல்களும் மாணவர்களால் அள்ள முடியாத அளவுக்குப் பெருமழையாகப் பொழியும்.
இப்படியும் ஓர் ஆசிரியரா என்று வியக்காதவர்கள் இருக்க முடியாது. தலைமை ஆசிரியராக அன்னார் பணியாற்றிய காலத்தில், கண்டிப்புக்குப் பெயர்போன நிர்வாகியாகத் திகழ்ந்தார்கள். மாணவர்களிடம் ஒழுக்கச் சீரழிவைக் கண்டுவிட்டால், கொதிப்படைந்துவிடுவார்கள். எவ்வளவு பெரிய மாணவனாக இருந்தாலும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது.
மறக்க முடியாத மற்றோர் ஆசிரியர், நெல்லை மௌலானா, முஹம்மது அய்யூப் ஃபாஜில் பாகவி ஹள்ரத் அவர்கள். மாணவர்களுக்குப் புரியும் வகையில் எப்படிப் பாடம் நடத்த வேண்டும் என்பதை அவர்களிடம்தான் கற்க வேண்டும். சற்று பதற்றம் இருந்தாலும், மாணவர்களைப் புரியவைப்பதில் அவர்கள் காட்டும் அக்கறை அழகிய முன்னுதாரணமாகும்.
பிற்காலத்தில், வேலூர் பாகியாத்துஸ் ஸாலிஹாத் கல்லூரியில் நான் ஆசிரியராகப் பணியாற்றிய வேளையில், இந்த முன்மாதிரி எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. மாணவர்களுக்குத் தன்மான உணர்வையும் பளிச்சென்று ஆடை அணியும் பழக்கத்தையும் அவர்கள் வளர்த்தார்கள் என்றே சொல்ல வேண்டும்.
ஆயங்குடி மௌலானா முஹம்மது சாலிஹ் ஹள்ரத் அவர்கள், என்னால் மறக்க முடியாத ஆசிரியர் களில் ஒருவர். தஃப்சீர், ஹதீஸ் ஆகிய பாடங்கள் அவர்களிடம் கற்க வேண்டும். அந்த வசனத்தோடும் ஹதீஸோடும் ஒன்றிப்போய், மாணவர்களை நபியவர்களின் பொற்காலத்திற்கே அழைத்துச் சென்றுவிடும் நேர்த்தி அவர்களுக்கே உரியதாகும்.
உருது மொழியில் நன்கு பரிச்சயம் உள்ள சாலிஹ் ஹள்ரத் அவர்கள், மாணவர்கள்மீது காட்டும் பாசம் உணர்வுபூர்வமானது. தாம் உண்ணும் வடையையும், அருந்தும் தேயிலையையும் மாணவர்களுக்குப் பகிர்ந்தளித்துவிட்டு, தாய்போல் மகிழும் உள்ளம் அவர்களுக்குச் சொந்தம்.
இன்றைய முதல்வர் மௌலானா, சர்தார் முஹ்யித்தீன் உலவி அவர்கள், வானியல் பாடத்தில் வல்லவர். அவர்களிடம் வானியல் கற்கும் வாய்ப்பு எனக்கு வாய்க்கவில்லை என்றாலும், மற்ற மாணவர்களுக்குப் பாடம் எடுத்த நயம், அத்துறையில் அவர்களுக்கு உள்ள ஆற்றலைப் பறைசாட்டியது.
மற்றப் பாடங்களையும் சிரத்தையோடு நடத்தும் அவர்கள், மாணவர்களுடன் எளிமையாகப் பழகும் நற்குணம் உள்ளவர்கள். மாணவர்களை நண்பர்களாகவே பாவிக்கும் ஆசிரியர்கள் அபூர்வம்தான். சர்தார் ஹள்ரத் அந்த வகையில் ஒரு சிறந்த உதாரணம்.
லஜ்னத்து மன்பயில் வாயிழீன்
அரசியல் கூட்டங்கள் உள்படப் பலநூறு கூட்டங்களில் சொற்பொழிவாற்றியுள்ளேன்; பட்டிமன்றங் களில் நடுவராக இருந்துள்ளேன். அபுதாபி, துபை, சிங்கப்பூர், இலங்கை போன்ற வெளிநாடுகளிலும் உரையாற்றியுள்ளேன். மீடியாக்கள் வாயிலாகத் தொலைதூரத்து நாடுகளிலும் என் குரல் ஒலித்து வருகிறது.
இதற்கெல்லாம் ஆரம்பமாக வித்திட்டது, இன்று பவள விழா காணும் லஜ்னத்துல் மன்பயில் வாயிழீன் சொற்பயிற்சி மன்றம்தான். பலருக்குமுன் நின்று முதன் முதலில் நான் பேசக் கற்றுக்கொண்டது இந்த மன்றத்தில்தான். ஏதேனும் ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டு, அதற்கேற்ற குர்ஆன் வசனத்தையும் நபிமொழியையும் தேடிக் கண்டுபிடித்து, திக்கித் திக்கி, தட்டுத் தடுமாறி, கன்னிப் பேச்சு பேசியதை நினைத்தால் இன்றும் மலைப்பாக இருக்கிறது.
இதே மன்றத்தில்தான், மறைந்த பன்னூலாசிரியர் உத்தமபாளையம் மௌலானா, எஸ்.எஸ். அப்துல் காதிர் பாகவி அவர்கள் ஒரு நாள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு அறிவுரை கூறியது இன்னும் கண்களில் நிழலாடுகிறது.
அப்போது நாங்களெல்லாம் கேள்விப்பட்டிராத ஒரு துறையை அன்னார் எங்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள். அதுதான் "அஃப்ஸலுல் உலமா' பட்டயப் படிப்பு. அரசு பல்கலைக் கழகங்கள் நடத்தும் இப்படிப்பானது, அப்போது அரபி மதரசாக்கள் வட்டாரத்தில் மிகவும் அரிதான ஒன்றாகும்.
இந்தப் படிப்பின் முக்கியத்துவத்தையும், அதனால் கிடைக்கும் பயன்களையும் ஹள்ரத் அவர்கள் பட்டியலிட்டு, மாணவர்களுக்கு ஆர்வமூட்டினார்கள். பிற்காலத்தில் "அப்ஸலுல் உலமா' தேர்வுகள் எழுதி, மற்ற மாணவர்களையும் எழுதத் தூண்டி, இன்று "அஃப்ஸலுல் உலமாப் பட்டதாரிகள் பேரவை'யின் துணைத் தலைவராகவும் நான் உயர, அன்னார் போட்ட அஸ்திவாரம்தான் காரணம்.
சென்னை, திருச்சி, நெல்லை, மதுரை பல்கலைக் கழகங்கள் கீழ்த்திசை மொழிகளில் நடத்தும் ஒரு தேர்வுதான், அப்ஸலுல் உலமா. மூன்று தேர்வுகளைக் கொண்ட இத்தேர்வை எழுத வயது வரம்பு கிடையாது. அரபி மதரசா மாணவர்கள் யாரும் இதைத் தாராளமாக எழுதலாம். பி.ஏ. (அரபி) பட்டத்துக்கு இணையான இந்தப் பட்டயப் படிப்பு, எம்.ஏ. (அரபி) படிக்கவும், அதையடுத்து எம்.ஃபில்., பி.எச்.டி செய்யவும் வழிகோலும்.
ஆக, மாணவர்கள் பாடங்களில் திறமையை வளர்த்துக்கொள்வதோடு திருப்தி அடைந்துவிடாமல், பேச்சாற்றல், எழுத்தாற்றல், பட்டப் படிப்பு ஆகிய துறைகளிலும் கவனம் செலுத்தி முன்னேற உழைக்க வேண்டும். பத்தோடு பதினொன்று என்றில்லாமல், பேசப்படும் அறிஞனாக மாறுவதுதான் சாதனை ஆகும்.
அ. முஹம்மது கான் பாகவி
சென்னை
No comments:
Post a Comment