Monday, May 07, 2012

திருப்புமுனையாகும் புனிதப் பயணம் - 3

அ. முஹம்மது கான் பாகவி

புனித ஹஜ் கிரியைகள் உண்மையில் துல்ஹிஜ்ஜா மாதம் பிறை 8ல் இருந்துதான் தொடங்குகின்றன. அன்று ஹாஜிகள் மக்காவில் தங்கள் இருப்பிடங்களிலேயே ஹஜ்ஜுக்காக நிய்யத் செய்து இஹ்ராம் கட்டிக்கொள்ள வேண்டும். பின்னர் ‘மினா’ புறப்படவேண்டும்.

‘மினா’ என்பது, புனித ஹரம் எல்லைக்குட்பட்ட ஒரு திறந்தவெளியாகும். மஸ்ஜிதுல் ஹராம் புனிதப் பள்ளிவாசலுக்கு வடகிழக்கே 8கி.மீ. தொலைவில் இது உள்ளது. ஹாஜிகள் நடந்துசெல்வதற்கான சுரங்கப்பாதையில் சென்றால் 4கி.மீ. தூரம்தான் இருக்கும்.

இங்குதான் இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்கள் ஷைத்தானை நோக்கிக் கல் எறிந்தார்கள்; தம் அருமைப் புதல்வர் இஸ்மாயீல் (அலை) அவர்களுக்குப் பதிலாக ஓர் ஆட்டை குர்பானி கொடுத்தார்கள். விடைபெறும் ஹஜ்ஜின்போது நபி (ஸல்) அவர்கள் கல் எறிந்தது, குர்பானி கொடுத்தது எல்லாம் ‘மினா’வில்தான். இங்கு ‘அல்கைஃப்’ பள்ளிவாசல் உண்டு; கல்லெறியும் 3 இடங்கள் உண்டு.

அன்சாரி தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்த முதலாவது மற்றும் இரண்டாவது ‘அகபா’ ஒப்பந்தங்கள் மினாவில்தான் நடந்தன. இங்குதான், ‘அந்நஸ்ர்’ அத்தியாயம் (110) அருளப்பெற்றது.

இந்திய ஹஜ் கமிட்டியில் செல்கின்றவர்களைப் பெரும்பாலும் துல்ஹிஜ்ஜா மாதம் பிறை 7 இரவிலேயே மினா அழைத்துச் சென்றுவிடுகின்றனர். 

மினாவில் கூடாரங்கள்

இப்போது மினாவில் தீப்பிடிக்காத கூடாரங்களை சஊதி அரசு அமைத்துள்ளது. குளிர்சாதன வசதியும் உள்ளது. ஒரு பெரிய கூடாரத்தில் நூற்றுக்கணக்கான ஹாஜிகள் தங்கவைக்கப்படுகின்றனர். அளவான சிறிய மெத்தை விரிப்பு, தலையணை, போர்வை வழங்கப்படுகின்றன.

பல்லாயிரக்கணக்கான பயணிகளைக் கொண்ட பல தொகுதிகள் [BLOCKS] உள்ளன. அவற்றில் குறைந்த எண்ணிக்கையிலேயே கழிப்பறைகள், உளூ செய்வதற்கான இடங்கள் இருப்பதால், மினா வாழ்க்கையை ஹாஜிகள் எளிதில் மறக்கமாட்டார்கள். அதைவிட, உணவு, தேநீர், பால் போன்ற தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள ஹாஜிகள் படும் அவதி சொல்லி மாளாது.

பல நேரங்களில் பட்டினிதான். படுக்கை, கப்று வாழ்க்கையை நினைவூட்டும். எல்லா கூடாரங்களும் பிளாக்களும் ஒரே மாதிரி இருப்பதால், கூடாரத்தைவிட்டு வெளியேறியவர்கள் அடையாளம் கண்டுபிடித்து தங்கள் இடத்திற்குச் சரியாகத் திரும்பிவருவதற்குள் போதும் என்றாகிவிடும். இதற்கு அஞ்சிக்கொண்டே முக்கிய தேவைக்காகத் தவிர பெரும்பாலோர் கூடாரத்தை விட்டே வெளியேறுவதில்லை.

பிறை – 8

துல்ஹிஜ்ஜா 8ஆம் நாள் ஹாஜிகள் மினாவில் லுஹ்ர், அஸ்ர், மஃக்ரிப், இஷா அடுத்த நாள் ஃபஜ்ர் ஆகிய தொழுகைகளை நிறைவேற்றுவார்கள். மினாவில் கூடாரங்களில்தான் பெரும்பாலும் ஹாஜிகள் தொழுகிறார்கள். மஸ்ஜிதுல் கைஃப் சற்று தள்ளி இருப்பதாலும் போய்வருவதில் சிரமம் இருப்பதாலும் கூடாரங்களிலேயே தொழுகின்றனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் விடைபெறும் ஹஜ்ஜில் கலந்து கொண்ட நபித்தோழர்கள் முதலில் உம்ராவை நிறைவேற்றி, இஹ்ராமிலிருந்து வெளியேறியபின், பிறை எட்டில் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டியவர்கள்தான். அவர்களில் பெரும்பாலோர் மதீனாவிலிருந்து வந்தவர்கள். நபி (ஸல்) அவர்கள் மட்டும் ‘கிரான்’ ஹஜ்ஜை நிறைவேற்றியதால் இஹ்ராமைக் களையவில்லை.

இருந்தாலும், நபி (ஸல்) அவர்களும் மதீனா நபித்தோழர்களும் மினாவில் தொழுதபோது, நான்கு ரக்அத்களை இரண்டு ரக்அத்களாகவே தொழுதார்கள். மக்காவாசிகளும் இரண்டு ரக்அத்களாகவே தொழுதனர். மக்கவாசிகளுக்குப் பயணத்தின் காரணத்தால் மினாவில் சுருக்கிக்தொழுதல் இல்லை என்றாலும், ஹஜ் கிரியைகளில் ஒன்றாக இவ்வாறு சுருக்கித் தொழுதார்கள். இதனால்தான், இஹ்ராம் கட்டாத மக்காவாசி ஒருவர் மினாவில் ஹாஜிகளுடன் சேர்ந்து தொழுதால், அவர் சுருக்கித் தொழமாட்டார்.

ஆனால், தமிழ்நாடு ஹாஜிகள் இந்த விஷயத்தில் பெரும் குழப்பத்திற்கு ஆளாகின்றனர். ஒரே கூடாரத்தில் பல ஜமாஅத்கள் நடக்கின்றன. சிலர் சுருக்கியும் சிலர் முழு ரகஅத்களைத் தொழுவதும் அதுதான் சரி; இதுதான் சரி என்ற விவாதங்கள் அடிக்கடி நடப்பதும் அதை முன்னிட்டு ஹாஜிகளிடையே மனஸ்தாபங்கள் ஏற்படுவதும் வாடிக்கையாகிவிட்டது.

கூடாரத்தில் தொழுகை, திக்ர், தஸ்பீஹ், குர்ஆன் ஓதுதல், துஆ ஆகிய வழிபாடுகளில் ஹாஜிகள் ஈடுபட வேண்டும். நபி (ஸல்) அவர்கள் மினாவில் மஸ்ஜிதுல் ஃகைஃபில் ஃபஜ்ர் தொழுதிருக்கிறார்கள். அப்போது ஜமாஅத்துடன் சேர்ந்து தொழாமல் இருந்த இருவரிடம் நபியவர்கள் விசாரித்தபோது, நாங்கள் கூடாரத்திலேயே தொழுதுவிட்டோம் என்றனர். அதற்கு நபியவர்கள், உங்கள் இருப்பிடத்தில் ஒரு தொழுகையை நிறைவேற்றியபின், ஜமாஅத் நடக்கும் இடத்திற்கு வந்தால், ஜமாஅத்துடன் சேர்ந்தும் தொழுதுகொள்ளுங்கள். அது உங்களுக்கு கூடுதல் (நஃபில்) ஆகும் என்று கூறினார்கள். (திர்மிதீ)

மஸ்ஜிதுல் கைஃப் பள்ளிவாசலுக்குத் தெற்கே உள்ள ஒரு மலையில் ‘அல்முர்சலாத்’ குகை உண்டு. அக்குகையில் நபித்தோழர்களுடன் நபி (ஸல்) அவர்கள் இருந்தபோதுதான் குர்ஆனில் ‘அல்முர்சலாத்’ அத்தியாயம் (77) அருளப்பெற்றது. (புகாரீ)

பிறை - 9

துல்ஹிஜ்ஜா ஒன்பதாவது நாள் அரஃபா தினம். அன்று சூரியன் உதித்தபின் ஹாஜிகள் மினாவிலிருந்து அரஃபாத் புறப்பட வேண்டும். இதுவே விரும்பத் தக்கதாகும். ஆனால், இந்திய ஹஜ் கமிட்டியினர் அன்று இரவோடு இரவாக மினாவிலிருந்து பேருந்தில் அழைத்துக்கொண்டு அரஃபாத் கொண்டுபோய்ச் சேர்த்துவிடுகின்றனர். ஆக, அரஃபா நாள் நள்ளிரவே நம் ஹாஜிகள் அரஃபாத் வந்துவிடுகின்றனர்.

‘அரஃபாத்’ என்பது, மஸ்ஜிதுல் ஹராம் புனிதப் பள்ளிவாசலுக்குத் தென்கிழக்கே 22 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு திறந்தவெளியாகும். மினாவிலிருந்து அரஃபாத் சுமார் 15 கி.மீ. தூரத்தில் உள்ளது. ஆனால், இந்தத் தூரத்தை கடக்க பலமணி நேரம் பிடிக்கிறது. அவ்வளவு நெரிசல்.

அரஃபாத் மைதானத்தில் இந்திய ஹாஜிகள் தங்க விசாலமான கூடாரங்கள் அமைக்கப்படுகின்றன. கூடாரம் வெயிலைத் தாங்கும்; மழையைத் தாங்காது; வேகமாகக் காற்று வீசினால் கூடாரம் சாய்ந்துவிடும். அதிகாலைக்கு முன்பே அங்கு ஹாஜிகள் சென்றுவிடுவதால் குளிக்க விரும்பும்போது, போதுமான கழிப்பறைகளோ குளியறைகளோ அரஃபாத்தில் கிடைப்பதில்லை. காலையில் பல் விளக்கவே சிரமப்படுகின்றனர்.

அன்றைய காலை உணவும் மதிய உணவும் சஊதி மன்னர் சார்பாக வழங்கப்படுகிறது என்று சொன்னார்கள். காலை உணவு கிடைப்பது கஷ்டம். மதிய உணவு கூடாரத்திலேயே பரிமாறப்படுகிறது. அன்று தஹஜ்ஜுத், ஃபஜ்ர் ஆகிய தொழுகைகளைக் கூடாரத்தில் நிறைவேற்றுகிறார்கள். திக்ர், தஸ்பீஹ், குர்ஆன் ஓதுதல், துஆ என்று அன்றைய பொழுதைப் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும். முக்கியமாகப் பாவமன்னிப்பு (தவ்பா) கோர வேண்டும். அந்த நாளும் அந்த இடமும் கிடைப்பதற்கரிய வாய்ப்புகளாகும்.

அரஃபா நாளில் லுஹ்ரையும் அஸ்ரையும் லுஹ்ர் நேரத்தில் இரு, இரு ரக்அத்களாக ஒரே பாங்கு இரண்டு இகாமத்களைக் கொண்டு நிறைவேற்ற வேண்டும். அத்தொழுகைகளுக்கு முன்னால் இமாம் சிறிது நேரம் உரையாற்றுவதும் அடுத்துச் செய்ய வேண்டிய கிரியைகளை மக்களுக்கு விளக்குவதும் நபிவழி ஆகும்.

அரஃபாத்தில்தான் ‘நமிரா’ பள்ளிவாசல் உள்ளது. அந்தப் பள்ளிவாசலுக்கு மேற்கே ‘நமிரா’ எனும் சிறுமலை உண்டு. இந்தப் பள்ளிவாசல் இருக்கும் இடத்தில்தான் நபி (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்தின் மீதிருந்தவாறு மக்களுக்கு உரையாற்றினார்கள். ஆனால், இந்தப் பள்ளிவாசலின் முற்பகுதி அரஃபாத் எல்லைக்கு வெளியிலும் பிற்பகுதி அந்த எல்லைக்கு உள்ளேயும் உள்ளது.

எனவே, இப்பள்ளிவாசலில் தங்கும் ஹாஜிகள் அரஃபாத் எல்லைக்கு உட்பட்ட இடம் பார்த்துத் தங்க வேண்டும். அரஃபாத்தில் தங்குவது ஹஜ்ஜின் முக்கிய கிரியை ஆகும். அதன் எல்லையில் தங்காவிட்டால் ஹஜ் நிறைவேறாது. நமிரா பள்ளிவாசல் ஹாஜிகள் தங்கும் கூடாரத்திற்குச் சற்று தொலைவில் இருப்பதால் பெரும்பாலோர் அப்பள்ளிவாசலுக்குச் செல்வதே இல்லை.

அரஃபாத்திற்குக் கிழக்கே ஒரு மலை உண்டு. அதுதான் ‘அர்ரஹ்மத்’ மலை (ஜபலுர் ரஹ்மத்) எனப்படுகிறது. ‘நமிரா’ பள்ளிவாசலில் இருந்து ஒன்றரை கி.மீ. தொலைவில் உள்ள இம்மலைக்குக் கீழே ‘அஸ்ஸக்ராத்’ (பாறைகள்) பள்ளிவாசல் உண்டு. இப்பள்ளிவாசல் உள்ள இடத்தில் நபி (ஸல்) அவர்கள் அன்றைய மாலைப்பொழுதில் தமது ஒட்டகத்தின் மீது அமர்ந்திருந்தார்கள்.

முஸ்தலிஃபா

அரஃபா நாளன்று சூரியன் மறைந்தபின் ஹாஜிகள் அரஃபாத்திலிருந்து முஸ்தலிஃபா புறப்பட வேண்டும். முஸ்தலிஃபா என்பது மினாவுக்கும் அரஃபாத்துக்கும் இடையே உள்ள மலைகள் நிறைந்த ஓரிடமாகும். இதற்கு ‘ஜம்உ’ எனும் பெயரும் உண்டு. 12.25 சதுர கி.மீ. பரப்பளவுள்ள இந்த இடத்தின் இரு மருங்கிலும் மலைகள்தான். இரவு நேரத்தில் ஹாஜிகள் அங்கு தங்குவதால் அந்த இடத்தின் முழுப் பரிமாணம் தெரிவதில்லை.

முஸ்தலிஃபா எல்லையில் ஹாஜிகள் அன்றைய இரவைக் கழிக்க வேண்டும். ‘அல்முஹஸ்ஸிர்’ எனும் இடத்தைத் தாண்டி ‘மஃஸிமைன்’ எனும் இடம்வரை சுமார் 4 கி.மீ. தூரத்திற்கு முஸ்தலிஃபாவின் எல்லை உள்ளது. இந்த எல்லைக்கு உட்பட்ட இடத்தில்தான் ஹாஜிகள் தங்க வேண்டும். எனவே, தங்குவதற்குமுன் அந்த இடம் எல்லையில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். எல்லையின் தொடக்கமும் முடிவும் பெயர்ப் பலகையில் எழுதப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கதாகும்.

முஸ்தலிஃபாவில் ஹாஜிகள் அன்றைய (துல்ஹிஜ்ஜா ஒன்பது) மஃக்ரிப் மற்றும் இஷா தொழுகைகளைச் சேர்த்து இஷா நேரத்தில் தொழ வேண்டும். ஒரே பாங்கு இரண்டு இகாமத்கள் சொல்லி, இஷாவை இரு ரக்அத்களாகச் சுருக்கித் தொழ வேண்டும்; துஆ செய்ய வேண்டும்.

முஸ்தலிஃபாவில் ஒரு பள்ளிவாசல் உண்டு. ‘மஷ்அருல் ஹராம்’ பள்ளிவாசல் என்பது அதன் பெயராகும். நபி (ஸல்) அவர்கள் இந்தப் பள்ளிவாசலின் கிப்லா உள்ள இடத்தில் தங்கியுள்ளார்கள். இப்போது இப்பள்ளி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 5 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் 12 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் தொழுவதற்கு வசதியாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மினாவிலுள்ள மஸ்ஜிதுல் கைஃபிலிருந்து 5கி.மீ. தொலைவிலும் அரஃபாத்திலுள்ள நமிரா பள்ளிவாசலில் இருந்து 7 கி.மீ. தூரத்திலும் இப்பள்ளிவாசல் அமைந்துள்ளது.

ஆனால், லட்சக்கணக்கான ஹாஜிகள் ஒரே நேரத்தில் முஸ்தலிஃபாவில் ஒன்றுகூடுவதால், கூட்ட நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர். அரஃபாத்திலிருந்து எட்டு கி.மீ. நடந்தே முஸ்தலிஃபா வர வேண்டியுள்ளது. வாகன ஏற்பாடு சரியில்லை என்பதோடு, வாகனத்தில் பயணித்தால் பலமணி நேரம் பிடிக்கும் என்பதும் உண்மையாகும்.

இரவோடு இரவாக நடந்தே முஸ்தலிஃபாவை அடைந்துவிட்டாலும் ஜமாஅத்தாக நின்று தொழுகையை நிறைவேற்றவோ நிம்மதியாக அமர்ந்து துஆவில் ஈடுபடவோகூட இயலவில்லை. சொல்லப்போனால், கால்வைக்கவே இடம் கிடைப்பது கஷ்டம். இந்நிலையில், இரவெல்லாம் விழித்திருந்து, கிடைத்த இடத்தில் முடிந்ததைத் தொழுதுவிட்டு, நின்றுகொண்டே இரவைக் கழிப்பவர்களும் உண்டு. 

அடுத்த நாள் துல்ஹிஜ்ஜா 10ஆவது நாள் ஃபஜ்ர் தொழுகையை முஸ்தலிஃபாவில் நிறைவேற்றிவிட்டு, மீண்டும் மினா செல்ல வேண்டும். இதுவும் பெரும்பாலும் நடைப்பயணம்தான். வாகனத்தில் பயணித்தால் இரண்டரை கி.மீ. தூரத்தில் உள்ள மினாவை அடைய பலமணி நேரமாகும். காலை 8.00 மணிக்கு பஸ்ஸில் புறப்பட்ட நாங்கள் 12.00 மணிக்குத்தான் மினா வந்து சேர்ந்தோம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

பிறை - 10 

சூரியன் உதயமாவதற்கு முன்பே முஸ்தலிஃபாவைவிட்டுப் புறப்படுவதும் வழியில் சிறுகற்களைப் பொறுக்கிக்கொள்வதும் நல்லது. பிறை பத்தில் – அதாவது ஹஜ் பெருநாளன்று – மினாவில் ஹாஜிகள் ஷைத்தானுக்குக் கல் எறிய வேண்டும். ‘ஜம்ரத்துல் அகபா’ எனப்படும் பெரிய ஜம்ராவில் ஏழு கற்களை மட்டும் அன்று எறிய வேண்டும்.

இப்போது நெரிசலில்லாமல் ஷைத்தானுக்கு ஹாஜிகள் கல் எறிவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. கீழே மூன்று தூண்கள், இடைவெளிவிட்டு அமைக்கப்பட்டுள்ளது. அத்தூண்களைச் சுற்றி கல் விழுவதற்கு வசதியாகத் தொட்டிகள் கட்டப்படுள்ளன. பெரிய ஜம்ராவிலிருந்து 247 மீட்டர் இடைவெளியில் நடு ஜம்ராவும் அங்கிருந்து 200 மீட்டர் இடைவெளியில் சிறிய ஜம்ராவும் உள்ளன.

கீழே மட்டுமன்றி நான்கு மாடிகளிலிருந்தும் கல் எறியலாம். அந்த மாடிகளுக்குச் செல்ல மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ‘ஜம்ரா மேம்பாலம்’ என இது அழைக்கப்படுகிறது. அங்கிருந்து லிஃப்ட் வசதியும் உள்ளது. நெரிசலின்றி மேம்பாலம் வழியாக ஹாஜிகள் ஏறிச்சென்று அந்தந்த மாடிகளில் உள்ள தூண்கள்மீது கல் எறிந்தால், அக்கல் அப்படியே கீழ்த்தளத்தில் இருக்கும் தொட்டியில் வந்து சேர்ந்துவிடும்.

நபி (ஸல்) அவர்கள் பிறை பத்தாம் நாளன்று பஜ்ருக்குப்பின் சூரியன் உதிப்பதற்குமுன் முஸ்தலிஃபாவிலிருந்து மினா நோக்கிப் புறப்பட்டார்கள். மினாவில் முற்பகல் (ளுஹா) பெரிய ஜம்ராவில் ஏழு கற்கள் எறிந்தார்கள். ஆக, அன்று சூரியன் உதித்தபின் சூரியன் மறைவதற்குமுன் கல் எறிந்துவிடுவது நல்லது. இரவிலும் எறியலாம்.

கல் எறிந்தபின் குர்பானி கொடுக்க வேண்டும். குர்பானியை பொறுத்தமட்டில் ஹாஜிகளுக்குச் சிரமமில்லாத வழி யாதெனில், சஊதி அரசிடம் பணம் கட்டிவிடுவதுதான். மக்காவில் இருக்கும்போதே ஹரமுக்கு அருகில் உள்ள இஸ்லாமிக் டெவலெப்மென்ட் வங்கியில் சுமார் 400 ரியால் கட்டிவிட்டால், பணம் கட்டியதற்கு அடையாளமாகக் கூப்பன் தருவார்கள். அரசே ஆடுகளை வாங்கி, அறுக்க வேண்டிய நாளில் அறுப்பதற்கு ஏற்பாடு செய்துவிடும். அது மட்டுமன்றி, குர்பானி இறைச்சி வீணாகிவிடாமல் பதப்படுத்தப்பட்டு, ஏழை முஸ்லிம் நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.

இத்திட்டத்தால் இரண்டு நன்மைகள். 1. குர்பானி எளிதாக நிறைவேறிவிடும். 2. குர்பானி இறைச்சி வீணாகாமல் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுவிடும். ஆனால், நம் ஊர் ஹாஜிகளில் சிலர், தாங்களே நேரடியாக குர்பானி கொடுக்க வேண்டும்; அதன் இறைச்சியைச் சமைத்து உண்ண வேண்டும் என்ற ஆவலில் தேவையில்லாத சிரமங்களுக்கு ஆளாகின்றனர். அறிமுகமில்லாதவர்களிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்து போவோரும் உள்ளனர்; அல்லது காலதாமதம் ஏற்பட்டு, மற்றக் கிரியைகள் செய்வதில் பின்தங்கிவிடுகிறார்கள். இது தேவைதானா?

தவாஃபுல் இஃபாளா

குர்பானி கொடுத்தபின், அல்லது ஏற்கனவே குர்பானிக்குப் பணம் கட்டியிருந்தால் கல் எறிந்தபின் தலைமுடியைக் களைய வேண்டும்; அல்லது குறைத்துக்கொள்ள வேண்டும். இத்துடன் ஹாஜிகள் ஹஜ்ஜின் இஹ்ராமிலிருந்து வெளியேறிவிடுவர். இஹ்ராம் ஆடைகளைக் களைந்து சாதாரண ஆடைகளை அணிந்துகொள்ளலாம். எனினும், தவாஃபுக்குப் பிறகே தாம்பத்திய உறவுக்கு அனுமதி உண்டு.

அடுத்து ‘தவாஃபுல் இஃபாளா’ செய்ய வேண்டும். இதற்கு ‘தவாஃபுஸ் ஸியாரா’ என்றும் கூறுவர். இது ஹஜ்ஜின் முக்கிய அங்கங்களில் ஒன்றாகும். இந்த தவாஃபை பத்தாவது நாளன்றே செய்வது நல்லது. முடியாவிட்டால் அடுத்தடுத்த நாட்களிலும் நிறைவேற்றலாம். முதலில் கஅபாவை தவாஃப் செய்துவிட்டு, பிறகு ஸஃபா – மர்வா இடையே சயியும் செய்ய வேண்டும்.

பெரும்பாலான ஹாஜிகளுக்கு பிறை பத்தில் இந்த தவாஃபை செய்ய முடிவதில்லை. அன்றைக்கு முஸ்தலிஃபாவிலிருந்து மினாவுக்குத் திரும்பி, கல் எறிந்து குர்பானி கொடுத்து, முடி களைவதற்குள் இரவாகிவிடுகிறது. அதற்குமேல் மக்கா சென்று, தவாஃபையும் சயியையும் முடித்துக்கொண்டு, இரவோடு இரவாக மினா திரும்புவதில் பெரும் சிக்கல் உண்டு. இதனால் அடுத்தடுத்த நாள்களிலேயே இந்த தவாஃபை நிறைவேற்றுகிறார்கள்.

பிறை – 11,12,13

துல்ஹிஜ்ஜா பிறை 11,12 ஆகிய இரு நாட்களின் இரவுகளிலும் ஹாஜிகள் மினாவில் தங்க வேண்டும். பிறை 11ல் சூரியன் உச்சி சாய்ந்தபின் ஷைத்தானுக்குக் கல் எறிய வேண்டும். சிறிய ஜம்ரா, நடு ஜம்ரா, பெரிய ஜம்ரா ஆகிய ஒவ்வொன்றிலும் தலா 7 கற்கள் வீதம் 21 கற்கள் எறிய வேண்டும். அவ்வாறே பிறை 12 அன்றும் 21 கற்கள் எறிய வேண்டும். கற்கள் தூண்மீது பட்டு தொட்டிக்குள் விழுமாறு எறிய வேண்டும். இத்துடன் மொத்தம் 49 கற்கள் (7+21+21) ஆகின்றன.

பிறை 13 இரவன்றும் மினாவில் தங்கியிருந்து காலையில் சூரியன் உச்சி சாய்ந்தபின் 21 கற்கள் எறிந்துவிட்டு மக்கா திரும்புவதுதான் நல்லது. இதன்படி 70 கற்கள் (7+21+21+21) ஆகும். நபி (ஸல்) அவர்கள் அவ்வாறே செய்துள்ளார்கள். கூடுதல் அமல் செய்வதற்கும் இதுவே ஏற்றதாகும். இருப்பினும், கூடாரத்தில் அனைவரும், அல்லது பெரும்பாலோர் பிறை 12 அன்று கல் எறிந்த கையோடு மக்கா திரும்பிவிடுகின்றனர். இதற்கும் அனுமதி உண்டு.

பிறை 12 அன்று சூரியன் மறையும்வரை மினாவிலேயே இருந்துவிட்டு, பயணம் புறப்படுவதற்கான ஏற்பாட்டிலும் ஒருவர் ஈடுபடாமல் இருந்துவிட்டால், அன்றைய இரவு மினாவிலேயே தங்கிவிட வேண்டும். காலையில் கல் எறிந்துவிட்டே புறப்பட வேண்டும். எந்தத் திசையில் தூணை நோக்கிக் கல் எறிந்தாலும் செல்லும். இருப்பினும், பெரிய ஜம்ராவில் எறியும்போது ஹாஜிகளுக்கு வலப்பக்கம் மினாவும் இடப்பக்கம் மக்காவும் இருக்குமாறு நின்று எறிவது சிறந்ததாகும்.

அடுத்து ஹாஜிகள் மக்காவைவிட்டுப் புறப்படுவதற்குமுன் ‘தவாஃபுல் வதா’ (விடைபெறும் சுற்று) சுற்ற வேண்டும். அத்துடன் ஹஜ் நிறைவடையும்.
(...தொடரும்)

No comments:

Post a Comment