Thursday, December 19, 2013

டிசம்பர் - 18 உலக அரபி மொழி தினம்

- அ. முஹம்மது கான் பாகவி


ஐக்கிய நாடுகள் சபையின் ‘யுனெஸ்கோ’ அமைப்பு, ஆண்டுதோறும் டிசம்பர் 18ஆம் நாளை உலக அரபி நாளாக 2010இல் அறிவித்தது. முக்கிய அம்சங்களுக்கு ஒரு குறிப்பிட்ட நாளை அறிவித்து, அதை உலகெங்கும் கொண்டாடுவதும் கொண்டாடச் சொல்வதும் ஐ.நா.வின் பணிகளில் ஒன்று. அவ்வாறு செய்ய வேண்டுமானால், அப்பொருள் சர்வதேச அளவில் அறியப்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத் தக்கது.

மொழிதான் ஒரு சமூகத்தின் வரலாறு; காலசாரம்; புவியியல்; சிந்தனை; கனவு….. எல்லாம். உலகத்தில் சுமார் 10 ஆயிரம் மொழிகள் உள்ளதாக ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது. 1977ஆம் ஆண்டு வெளிவந்த ‘உலக மொழிகளின் பதிவு’ என்ற நூல் 20ஆயிரம் மொழிகளும் வழக்குகளும் இருப்பதாகக் கணக்கிட்டுள்ளது. மூலமொழிகள் நான்காயிரத்திற்குக் குறைவில்லாமல் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

இவற்றில் 18 மொழிகள் செம்மொழிகளாக அறியப்படுகின்றன. அவற்றுள் அரபிமொழியும் ஒன்று. செம்மொழிக்கான அனைத்துத் தகுதிகளும் அரபிக்கு உண்டு. உலக அளவில் அரபி மொழி பேசுவோர் 323 மில்லியன்பேர் என்கிறது ஒரு புள்ளி விவரம். அரபு நாடுகளின் மக்கட் தொகையின்படி இந்த எண்ணிக்கை சரியாக இருக்கலாம். இதற்கேற்ப உலக மொழிகளில் மூன்றாவது இடத்தை அரபி பெறுகிறது. சீனாவும் ஸ்பெய்னும் முதலிரு இடங்களைப் பெறுகின்றன.

கணக்கெடுப்பின்படி பார்த்தால் உலகில் அரபிமொழியைத் தாய் மொழியாகக் கொண்ட வர்கள் சுமார் 175-185 மில்லியன்பேர் உள்ளனர். இதன்படி அரபி மொழிக்கு 25ஆம் இடம் கிடைக்கும்.

அரபிமொழியின் தனித்தன்மைகள் என்று பார்த்தால் நிறைய உண்டு. முதல் தரமாக, அது இறுதி வேதமாம் திருக்குர்ஆனின் மொழி என்ற சிறப்பே அதற்குக் கிடைத்த மாபெரும் செல்வாக்கு ஆகும். அவ்வாறே நபிமொழியின் மொழியாகவும் அவ்விரண்டின் தொடர்பில் பிறந்த இலக்கியங்களின் மொழியாகவும் அரபி விளங்குகிறது.

மூன்றெழுத்து மொழி என்பது அரபியின் அடுத்த சிறப்பாகும். பெயரில் மட்டும் மூன்றெழுத்து (ஐன், ரா, பா) இருப்பதாகக் கருத வேண்டாம். அரபிச் சொற்களின் வாய்பாடுகள் பெரும்பாலும் மூன்றெழுத்து கொண்டவையாகவே இருக்கும். இதனாலேயே ‘ஃபஅல’ எனும் வாய்பாட்டை அடிப்படையானதாக அரபியர் கொண்டனர். அத்துடன் வினைவடிவங்கள் சொல்லிலேயே முக்காலத்தில் ஒன்றைப் பிரதிபலிப்பவையாக இருப்பது தனிச்சிறப்பாகும்.

அரபி மொழிக்குள்ள மிகப்பெரும் தனிச் சிறப்பு என அதன் இரத்தனச் சுருக்கத்தைக் கூறலாம். பொதுவாக உரை என்பது, இயல்பிலேயே சுருக்கமானதாக இருப்பதுதான் அதன் பலமே. இதனாலேயே, ஒரு வரி அரபி வாக்கியத்தைப் பிறமொழிகளில் பெயர்க்கும்போது குறைந்தபட்சம் மூன்று வரிகள் தேவைப்படுகின்றன.

திருக்குர்ஆன் இதற்கு மிகச் சரியான சான்றாகும். நபிமொழிகள் அடுத்த சான்று.

கனடாவைச் சேர்ந்த ஒரு தத்துவ அறிஞரிடம் அவருடைய மாணவர்கள், இந்த குர்ஆனைப் போன்ற ஒன்றை எங்களுக்காக நீங்கள், ஏன் படைக்கக் கூடாது? என்று பேச்சோடு பேச்சாகக் கேட்டுவைத்தனர். சரி என்று ஏற்றுக்கொண்ட தத்துவமேதை ஒருசில வரிகளை எழுதிக் கொடுத்துவிட்டு, நீண்டநாள் தலைமறைவாகிவிட்டார்.

பிறகு ஒருநாள் வெளியே வந்து நண்பர்களிடம் சொன்னார்: சத்தியமாகச் சொல்கிறேன்; இது என்னாலும் முடியாது; வேறு யாராலும் முடியாது. குர்ஆனைத் திறந்தேன்; ‘அல்மாயிதா’ அத்தியாயம் கண்ணில் பட்டது. அதன் முதலாம் வசனத்தை நோட்டமிட்டேன். இரண்டு வரிகள்தான். ஆனால், அதில் ஒளிந்திருந்த பொருள்கள் பல!

ஆம்! ஒப்பந்தங்களை நிறைவேற்றச் சொல்கிறது! மோசடிக்குத் தடை விதிக்கிறது. சிலவற்றைப் பொதுவாக ஹலால் ஆக்குகிறது. பிறகு ஒன்றன்பின் ஒன்றாக விலக்கு அளிக்கிறது. இறைவனின் ஆற்றலையும் சட்டமியற்றும் வல்லமையையும் பறைசாற்றுகிறது…. எல்லாம் இரண்டே இரண்டு வரிகளில்.

இறைநம்பிக்கை கொண்டோரே! ஒப்பந்தங்களை நிறைவேற்றுங்கள். உங்களுக்குச் சொல்லப்பட இருக்கின்றவை நீங்கலாக, மற்ற கால்நடைகள் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. நீங்கள் ‘இஹ்ராம்’ கட்டியிருக்கும்போது வேட்டையாடுவது அனுமதிக்கப்பட்டதெனக் கருதிவிடக் கூடாது. அல்லாஹ், தான் நாடுவதைச் சட்டமாக்குகின்றான். (5:1) இதுதான் அந்த வசனம்!

அரபி மூலத்தில் இரண்டு வரிகள்தான் உள்ளன. தமிழாக்கத்தில் அடைப்புக் குறியை நீக்கிய பிறகும்கூட இத்தனை வரிகள் தேவை! இதுதான் அரபிமொழியின் – திருக்குர் ஆனின் சொல்லாட்சி மகத்துவம். (அபூபக்ர் அந்நக்காஷ்)

இன்னொன்றைச் சொல்லலாம்! அரபிமொழியில் உள்ள நெடுங்கணக்கு 28 எழுத்துக்களைக் கொண்டது. இவற்றில் குறைந்தது 6 எழுத்துகளின் உச்சரிப்போ மொழிதலோ வேறு மொழிகளில் இல்லை. ளாத், ஐன், ஃகா, ஸாத், தோ, காஃப் ஆகியவையே அந்த ஆறு எழுத்துகளாகும்.

அரபிமொழி ஏற்கெனவே ஐ.நா. சபையால் அங்கீகர்க்கப்பட்ட 6 மொழிகளில் ஒன்றாகும். இப்போது டிசம்பர் – 18ஆம் நாளை உலக அரபி நாளாகவும் ஐ.நா. சபை அறிவித்துள்ளது. ஐ.நா. சபையின் அங்கீகாரம் கிடைத்தது 1973 டிசம்பர் – 18ஆம் நாள் என்பதால் அந்தத் தொடர்பிலேயே டிசம்பர் – 18ஐ உலக நாளாக ஐ.நா. அறிவித்துள்ளது.

இந்நாளை, அரபிமொழி கற்பிக்கும் மதரசாக்கள், அரபிக் கல்லூரிகள், பள்ளிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் பயன்படுத்தலாம். சென்னைப் பல்கலைக் கழகத்தின் அரபி மற்றும் உருது, ஃபார்சி துறை சென்ற ஆண்டிலிருந்து இந்நாளைச் சிறப்பாக அனுசரித்துவருகிறது.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் அரபி உரைகள், சிறப்பு விருந்தினரின் நிறைவான அரபி உரை, உரை நாடகம்… என அரபித் துறை பல நிகழ்ச்சிகளை நடத்துகிறது. சென்னை புதுக்கல்லூரி, வண்டலூர் புகாரியா, பிலாலியா ஆகிய கல்லூரிகளும் இவ்வாண்டு முதல் இந்நாளைச் சிறப்பாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.


கடந்த 18.12.2013 புதன் காலை சென்னைப் பல்கலை அரபித் துறை நடத்திய உலக அரபி நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மாணவ, மாணவியர் ஆற்றிய அரபி உரைகளைக் கேட்டுச் சிலிர்த்துப்போனேன். அழகான உரைகள்; ஆழமான கருத்துகள். முனைவர் ஜாகிர் ஹுசைன் பாகவி, முனைவர் அன்பர் பாதுஷா உலவி முதலான பேராசிரியர்களின் உழைப்பு நன்றாகவே வெளிப்பட்டது.

இன்னும் முஸ்லிம் கல்லூரிகள், பெண்கள் மதரசாக்கள், அரபிக் கல்லூரிகள் என எத்தனையோ கல்லூரிகள் உள்ளன. அங்கெல்லாம் இந்நாளை ஏன் நல்ல முறையில் பயன்படுத்தக் கூடாது? அரபி மெழியில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கருத்தரங்கம், கவியரங்கம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி, பரிசுகள் கொடுத்து மாணவர்களை உற்சாகப்படுத்தலாம் அல்லவா?

இதன்மூலம், மாணவர்களின் அரபிமொழி ஆற்றல் வளரவும் குர்ஆனின் மொழி கௌரவப்படுத்தப்படவும் இதை முன்னிட்டு சமுதாய மக்களுக்கு அரபிமொழி மீதான ஆர்வம் பிறக்கவும் வழி உண்டாகுமல்லவா? சொல்லுங்கள்!

வாழ்க! அரபிச் செம்மொழி!

No comments:

Post a Comment