- அ. முஹம்மது கான் பாகவி
பலரும் கேட்கும் ஒரு கேள்வி: ‘அலி’கள் அல்லது ‘அரவானிகள்’தொடர்பாக இஸ்லாத்தின் கருத்தென்ன? அரவானிகளுக்கென தனிச்சட்டங்கள் உண்டா? அரவானிகளை சமுதாயம் எவ்வாறு நடத்த வேண்டும்? ஆண்பாலும் அல்லாத, பெண்பாலும் அல்லாத மூன்றாவது பாலினம் உண்டா?
‘அரவானி’ என்றால், வெளித்தோற்றத்தையும் உடலமைப்பையும் கொண்டு ஆண் என்றோ, பெண் என்றோ தீர்மானிக்க இயலாத மனிதர் என்று பொருள். ஷரீஆவின் பார்வையில், ஆணுறுப்பும் பெண்ணுறுப்பும் உள்ள, அல்லது இரண்டுமே இல்லாத மனிதருக்குத்தான் அடிப்படையில் ‘அரவானி’ அல்லது ‘அலி’ (குன்ஸா) எனப்படும். (அல்ஜுர்ஜானீ)
முதலில் ஓர் அடிப்படையைத் தெரிந்துகொள்வது அவசியம். ஒருவரை ‘அரவானி’ என்று எப்போது தீர்மானிக்க முடியும் என்றால், பருவ வயதை அடைந்தபிறகுதான் அந்த முடிவுக்கே வர முடியும். பருவமடைவதற்கு முன்பு ஆண் குறியும் பெண் குறியும் இருப்பதால் ஆண் என்றோ பெண் என்றோ தீர்மானிப்பதில் குழப்பம் ஏற்படும்.
பருவம் அடைந்தபிறகு பெரும்பாலும் ஆண், அல்லது பெண் என்பது இயல்புகளாலும் உடலமைப்பாலும் தெரிந்துவிடும். மார்பு பெரிதாவது, மாதவிடாய் வருவது, ஆண்மேல் ஈர்ப்பு போன்ற அடையாளங்கள் அவள் ஒரு பெண் என்பதைத் தீர்மானித்துவிடும். தாடி மற்றும் மீசை முளைப்பது, பெண்மேல் ஈர்ப்பு, ஆண்குறியிலிருந்து விந்து வெளிப்படுவது போன்ற அறிகுறிகள் அவன் ஆண் என்பதற்குச் சான்றுகள்.
இருபாலில் ஒருபால் முடிவாகிவிட்டால், மற்றொரு பாலின் உறுப்பை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிடலாம். இனி ஆணை ஆணாகவும் பெண்ணைப் பெண்ணாகவும் நடத்துவதில் சிக்கலும் இராது. அதுவரை எந்த முடிவுக்கும் வந்துவிடவோ திருமணம் செய்துவைக்கவோ கூடாது.
ஆனால், வெகுசிலருக்குப் பருவத்திறகுப் பின்பும் எந்த அறிகுறியும் தூக்கலாக வெளிப்படாமல் சமநிலையில் இருந்துவிடலாம். இத்தகைய அரவானிகளே சிக்கலானவர்கள். அரபியில் இவர்களையே ‘குன்ஸா முஷ்கில்’ என்பர். வாரிசுரிமைச் சட்டப்படி இவர்களுக்கு ஆணின் பங்கில் பாதியும் பெண்ணின் பங்கில் பாதியும் வழங்கப்படும் என்று ஷைகு இப்னு பாஸ் தீர்ப்பு அளித்துள்ளார்கள்.
கெய்ரோ அஸ்ஹர் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள ‘ஃபத்வா’வின்படி, ஆண் அல்லது பெண்ணின் பங்குகளில் எது குறைவாக இருக்குமோ அதை இவர்கள் பெறுவார்கள். சொத்துக்குரியவர் இறக்கும்போது அரவானியின் பால் நிலை என்ன என்பதைக் கவனத்தில் கொண்டே அரவானிக்குப் பங்கு பிரிக்கப்பட வேண்டும்.
அரவானியின் பால் நிலை தெளிவாகத் தெரிவதற்குமுன், ஆண்-பெண் இடையே வித்தியாசப்படும் விதிமுறைகளில் மிகக் கவனத்துடனேயே அரவானியை நடத்த வேண்டும். அதாவது ஆண்கள் மத்தியில் அவள் ஒரு பெண்ணாகப் பாவிக்கப்படுவாள்; பெண்கள் மத்தியில் அவன் ஓர் ஆணாகப் பாவிக்கப்படுவான். எனவே, தெளிவுக்குமுன் அந்நிய ஆணுடனோ, அந்நியப் பெண்ணுடனோ அரவானி தனித்திருக்க அனுமதியில்லை.
திருநங்கை
அரவானிகளில் இன்னொரு வகை உள்ளனர். இவர்களே எண்ணிக்கையில் அதிகம். ஆணுறுப்புடன் மட்டும் பிறக்கும் ஒரு குழந்தை, பருவ வயதை நெருங்க நெருங்க பெண்ணின் குணாதிசயங்களை அடைந்துவிடும். ஆண்மீது ஈர்ப்பு ஏற்படும். பெண்களுடன் இருப்பதையே விரும்பும். இதைத்தான் இன்று ‘திருநங்கை’ என்கின்றனர். இவர்களை ஷரீஆவின் வழக்கில் ‘முகன்னஸ்’ என்பர்.
மென்மை, பேச்சு, பார்வை, அசைவு, நடை ஆகியவற்றில் பெண்ணுக்கு ஒப்பாக இருப்பவரே ‘முகன்னஸ்’ ஆவார். ஆணுறுப்போடு பிறந்த ஒருவனுக்கு இந்த மாற்றங்கள் இயற்கையாகவே தோன்றுமானால் அவன் அரவணைக்கப்பட வேண்டியவன்; அனுதாபத்திற்குரியவன்; அது அவனுடைய குற்றமோ குறையோ ஆகாது.
ஆனால், ஆணாகப் பிறந்த சிலர் வேண்டுமேன்றே செயற்கையாகப் பெண்ணைப்போல் நடந்துகொள்வதும் ஆணுறுப்பை அகற்றிவிடுவதும் உண்டு. இதற்கு இஸ்லாத்தில் அனுமதி கிடையாது. ஒரு நபிமொழியில் இத்தகையோரை நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்.
நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: பெண்களைப்போல் ஒப்பனை செய்யும் ஆண்களையும், ஆண்களைப்போல் ஒப்பனை செய்யும் பெண்களையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள். இத்தகையவர்களை உங்கள் இல்லங்களிலிருந்து வெளியேற்றிவிடுங்கள் என்றும் சொன்னார்கள். அவ்வாறு சிலரை நபியவர்கள் வெளியேற்றவும் செய்தார்கள். (புகாரீ)
இதேபோல் இன்னொரு நிகழ்ச்சி. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு சலமா (ரலி) அவர்களிடம் அரவானி ஒருவர் அமர்ந்திருந்தார். இவர், உம்மு சலமா (ரலி) அவர்களின் சகோதரர் அப்துல்லாஹ் பின் அபீஉமய்யா (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் அடிமையாவார்.
அந்த அரவானி அப்துல்லாஹ் (ரலி) அவர்களிடம், “அப்துல்லாஹ்! நாளை தாயிஃப் நகரம் வெற்றிகொள்ளப்பட்டுவிட்டால், ஃகைலானின் மகளை நீர் மணமுடித்துக்கொள்வீராக! ஏனெனில், அவள் முன்பக்கம் நான்கு சதைமடிப்புகளுடனும் பின்பக்கம் நான்கு சதைமடிப்புகளுடனும் வருவாள்” என வர்ணிப்பதை நபி (ஸல்) அவர்கள் கேட்டுவிட்டார்கள்.
அப்போது, “இந்த அரவானிகள், (பெண்களாகிய) உங்களிடம் ஒருபோதும் வர (அனுமதிக்க) வேண்டாம்!” என்று சொன்னார்கள். (புகாரீ)
ஆணாகப் பிறந்த இந்த அரவானி (முகன்னஸ்) தன்னைப் பெண் போன்று ஒப்பனை செய்துகொண்டிருந்ததால் தம்முடன் அமர உம்மு சலமா அனுமதித்திருந்தார்கள். ஆனால், ஆணின் அறிகுறியும் பெண்மீதான ஈர்ப்பும் அவர் பேச்சில் வெளிப்பட்டதால் இத்தகையவர்கள் பெண்களிடம் வந்துபோவதற்கு நபியவர்கள் தடை விதித்தார்கள். ஆக, இவர் தன்னை வேண்டுமென்றே பெண்ணாக வரித்துக்கொண்டவர் என்று தெரிகிறது.
உண்மையான திருநங்கைகள்
ஆனால், ஆணுறுப்புடன் பிறந்துவிட்டுப் பின்னர் இயல்பாகவே பெண்ணாக மாறிவிடும் திருநங்கைகளைப் பற்றியே நாம் அதிகமாக அறிந்துகொள்ள வேண்டும். காரணம் இவர்கள்தான் மக்களோடு மக்களாக வாழ்ந்துவருகின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் 30 ஆயிரம் திருநங்களைகள் உள்ளதாக ஒரு கணக்கு உண்டு. திருநங்கைகளை 163 நாடுகள் அங்கீகரித்துள்ளனவாம்!
பிறப்புறுப்பால் ஆண் என்று கருதப்பட்டு, பின்னர் தன்னையும் அறியாமலேயே பெண்ணாக உணர்ந்து, பெண்ணாகவே வாழ முற்படுவோர்தான் உண்மையான திருநங்கைகள். இந்த மாற்றம் இயற்கையாகவே ஏற்படுகிறது என்றும், அதற்கு அறிவியல்பூர்வமான காரணம் உண்டு என்றும் சிலர் கூறுவர்.
கருப்பையில் கரு உருவாகும்போது ‘குரோமோசோம்கள்’ எனப்படும் நிறமூர்த்தங்கள் அல்லது இனக்கீற்றுகளே சிசுவின் பாலினத்தைத் தீர்மானிக்கின்றன. குரோமோசோம்கள் ஆணில் XYயும் பெண்ணில் XXம் இருக்கும். பெண்ணின் X உடன் ஆணின் Y சேர்ந்தால் (XY) சிசு ஆணாகப் பிறக்கும். பெண்ணின் X உடன் ஆணின் X சேர்ந்தால் (XX) சிசு பெண்ணாகப் பிறக்கும் என்பது நாமெல்லாம் அறிந்த அறிவியல் உண்மை.
ஆனால், மூன்றாவது ஒரு சேர்க்கையும் இருப்பதாகக் கூறப்படுகிறது. XXY அல்லது XYY சேர்ந்தால், அது மூன்றாவது பாலினமாகப் பிறக்கிறதாம்! முந்தியது பெண்ணுறுப்புடன் பிறந்து ஆணாக மாற வல்லது; பிந்தியது ஆணுறுப்புடன் பிறந்து பெண்ணாக மாற வல்லது. இந்த இரண்டாவது வகையினரே திருநங்கைள் என்பது கணிப்பு.
ஆணுறுப்புடன் பிறக்கும் சிறுவன் ஹார்மோன்கள் சுரக்கும் பருவத்தை, அல்லது 13 வயதை அடையும்போது, உடலில் பெண்மைக்கான குணாதிசயங்களைத் தன்னை அறியாமலேயே உணர்வான். பெண்களைப்போல் பேசுவது, பெண்களைப்போல் நடப்பது, பெண்களுக்கே உரிய ஆசைகள், எண்ணங்கள் மனதிலே அரும்புவது ஆகிய மாற்றங்கள் ஏற்படும். அப்போதுதான் அச்சிறுவனுக்குப் பாலியல் தடுமாற்றம் ஏற்படும். தான் ஆணா? அல்லது பெண்ணா என்று குழப்பம் அடைவான்.
நாள் செல்லச்செல்ல தன்னை முழுவதுமாகப் பெண்ணாகவே தீர்மானித்து, பெண்ணுக்குரிய தன்மைகளோடே நடந்துகொள்வான். பார்ப்பவர்கள் நையாண்டி செய்ய, அவனோ தனக்குள் புழுங்கிக்கொண்டிருப்பான். பெற்றோர், உறவினர், நண்பர்கள் ஒதுக்க ஆரம்பித்துவிடுவார்கள். இவனுக்கு இருக்கும் ஒரே ஆறுதல், இவன் போன்ற திருநங்கைகள் மட்டுமே!
உண்மையில் இது ஒரு நோய்; ஊனம் என்றே கூறுகிறார்கள். மற்ற நோயாளிகளையும் மாற்றுத் திறனாளிகளையும் எவ்வாறு அணுகுகிறோமோ அவ்வாறே இந்த திருநங்கைகளையும் அணுக வேண்டும்; பரிவுகாட்ட வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
திருநங்கைகள் பெண்களா?
ஆணுறுப்புடன் பிறந்தாலும், அது செயல்பட வேண்டிய பருவ வயது வரும்போது, அது முற்றாகச் செயலிழந்துவிட்டால், வெறும் சிறுநீர் வெளியேறும் குழாயாக மட்டுமே கருதப்பட வேண்டும்; பாலின உறுப்பாகக் கருதப்படாது. எனவே, கூடுதலான கட்டி ஒன்று உடலில் இருந்தால், அதை அறுவை சிகிச்சைமூலம் அகற்றுவதைப் போன்று அகற்றிவிடலாம். அத்துடன் மறைந்துள்ள பெண்ணுறுப்பை அறுவை சிகிச்சைமூலம் வெளிவரச் செய்யலாம்.
மருத்துவரின் ஆலோசனைப்படியும் அச்சிறுவனின் விருப்பப்படியும் 18 வயதிற்குமேல் பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டால், அச்சிறுவன் திருநங்கையாக மாறுவான். இது உலக நாடுகளின் முடிவாக இருந்துவருகிறது. மருத்துவ ஆய்வும் இதை உறுதி செய்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது.
மார்க்கத் தீர்ப்பு என்ன என்று ஆராய்ந்து தேடியதில் கிடைத்த தகவல் இதோ:
எகிப்து நாட்டின் தாருல் இஃப்தா அளித்துள்ள ஃபத்வாவை அப்படியே கீழே தருகிறோம்:
- ஆணுறுப்புடன் பிறந்த சிறுவன் பருவம் அடைகின்றபோது ஹார்மோன் மாற்றத்தின் விளைவால் பெண்ணின் குணாதிசயங்களை வெளிப்படுத்தத் தொடங்கினால், அதை இயன்றவரை மாற்ற முயலுமாறு சொல்ல வேண்டும்.
- மாற்றிக்கொள்ளவே முடியாத அளவுக்கு இயல்பாகவே இந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பது தீர்க்கமாகத் தெரியும்பட்சத்தில், நம்பிக்கையான மருத்துவரிடம் ஆலோசனை கலந்து அதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
- மருத்துவப் பரிசோதனையில் அவை இயல்பான மாற்றங்கள்தான் என்பது முடிவாகும்போது, அது நோய் அல்லது ஊனம் என்பது இறுதியாகிவிடும். அப்போது பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம்.
(அல்மக்தபத்துஷ் ஷாமிலா)
ஐந்து வகை
ஆக, ‘அலி’களின் எல்லா வகையினருக்கான மார்க்கத் தீர்ப்பும் இந்த ஆய்வுமூலம் கிடைக்கிறது. அதன் சுருக்கம் வருமாறு:
- ஆணுறுப்புடனும் பெண்ணுறுப்புடனும் பிறந்த ஒரு மனிதருக்கு, பருவத்திற்குப்பின் எந்த உறுப்பு செயல்படுகிறதோ அந்த இனத்தைச் சேர்ந்தவர் என்று முடிவு செய்வோம். மற்றோர் உறுப்பை அறுவை சிகிச்சைமூலம் அகற்றிவிட வேண்டும். இதில், ஆண் அல்லது பெண் என்ற ஓர் இனமே முடிவாக அமையும்.
- இரு உறுப்புகளில் எதுவும் பருவ வயதை அடைந்த பின்பும் செயல்பாட்டுக்கு வராத நிலையில், அல்லது இரண்டுமே செயல்படுகின்ற நிலையில் உள்ள ‘சிக்கலான அலி’ (குன்ஸா முஷ்கில்). இவர்கள் ஒரு விழுக்காடு அளவிற்குக்கூட இருக்கமாட்டார்கள். இவர்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி, மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இரு உறுப்புகளில் ஒன்றை மட்டும் அகற்றிவிட்டு, மற்றொன்றை செயல்பாட்டிற்குக் கொண்டுவர இயன்றால், அவ்வாறு செய்யலாம். இதிலும் ஆண், அல்லது பெண் என்ற ஓரினமே முடிவாக அமையும்.
- ஆணோ, பெண்ணோ வேண்டுமென்றே பாலியலை மாற்றிக்கொள்வது. இதற்கு மார்க்கத்தில் அனுமதி கிடையாது.
- ஆணுறுப்புடன் பிறந்த ஒருவன், உண்மையிலேயே பெண்பாலுக்குரிய மாற்றங்களைக் காணும்போது ஆணுறுப்பை அகற்றிவிட்டுப் பெண்ணுறுப்பை வெளிவரச் செய்யலாம். இந்த திருநங்கை பெண்ணாகவே கருதப்படுவாள்.
- பெண்ணுறுப்புடன் பிறந்த ஒருத்தி, பருவத்திற்குப்பின் ஆண்பாலின் தன்மைகளை உண்மையிலேயே கண்டால், பெண்ணுறுப்பை அகற்றிவிட்டு ஆணுறுப்பை வெளிப்படுத்திக்கொள்ளலாம். இவன் ஆணாகவே கருதப்படுவான்.
_______________________
அலிகலை பற்றி தெளிவான விளக்கம் அல்ஹம்து லில்லாஹ்
ReplyDeleteபாடம் கேட்பது போன்ற சுகம்.
ReplyDelete