அ. முஹம்மது கான் பாகவி
இ
|
ந்தியாவின் 16ஆம் நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் நடந்து முடிந்து,
முடிவுகளும் தெரிந்து, பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சியும்
மத்தியில் வந்துவிட்டது. கருத்துக் கணிப்புகளையும் தாண்டி அறுதிப்
பெரும்பான்மை பெற்று பா.ஜ.கட்சி ஆட்சிக்
கட்டிலில் அமர்கிறது.
மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பா.ஜ.கட்சி மட்டுமே 282 இடங்களை லாவகமாகக் கைப்பற்றியிருக்கிறது.
ஆட்சியமைக்கத் தேவைப்படும் 272 இடங்களைவிடப் பத்து
இடங்களை அக்கட்சி கூடுதலாகப் பெற்றிருக்கிறது. கூட்டணிக் கட்சிகள்
வென்ற இடங்களையும் சேர்த்தால் பா.ஜ.க.
அணியின் பலம் 337. இது, மூன்றில்
இரு பங்குக்கு 25 இடங்களே குறைவு.
மதவாதக் கட்சி; சிறுபான்மையினருக்கு எதிரான வலதுசாரிக் கட்சி; அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளைக்கூட சிறுபான்மையினரிடமிருந்து
அது பறிக்கப்போகிறது; இனி இந்தியாவில் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும்
நிம்மதியாக வாழ முடியாது… என்றெல்லாம் புலம்பிக்கொண்டிருப்பதை
விட்டுவிட்டு, இனி ஆகவேண்டியதைப் பற்றிச் சிந்திப்பதே அறிவுடைமை
ஆகும்.
மசோதாக்களின் நிலை
நாடாளுமன்றத்தில்
நிதி மசோதாக்களை நிறைவேற்ற, அவையில் பாதிக்குமேலான
உறுப்பினர்களின் ஆதரவு இருக்க வேண்டும். பா.ஜ.கட்சி, தன் சொந்த பலத்திலேயே
–கூட்டணிக் கட்சிகளின் ஆதரவின்றியே- நிதி மசோதாக்களை
மக்களவையில் நிறைவேற்றிட முடியும்.
ஆனால், நிதி மசோதாக்கள் ராஜ்ய சபா எனப்படும் மாநிலங்களவையிலும் நிறைவேறினால்தான்,
செயல்பாட்டுக்கு வர முடியும். மாநிலங்களவையின்
மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 245. இதில் பாதிக்குமேல்
–அதாவது 123 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே
நிதி மசோதா நிறைவேறும். தற்போது மாநிலங்களவையில் காங்கிரஸ் கூட்டணிக்கு
80 உறுப்பினர்களும் பா.ஜ.க. கூட்டணிக்கு 64 உறுப்பினர்களும்
உள்ளனர்.
எனவே, நிதி தொடர்பான மசோதாக்களை மாநிலங்களவையில் வெற்றிகரமாக நிறைவேற்றிட
பா.ஜ.க.வுக்கு இன்னும்
59 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. மாநிலங்களவையில்
அ.தி.மு.க.விற்கு 10 உறுப்பினர்களும் பிஜு ஜனதா தளத்திடம்
9 உறுப்பினர்களும் உள்ளனர். பற்றாக்குறைக்கு உதிரிக்
கட்சிகளின் ஆதரவைப் பெறுவது பா.ஜ.க.வுக்குச் சிரமம் அல்ல.
ஆனால், சட்டம் தொடர்பான மசோதாக்கள் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் நிறைவேற
வேண்டுமானால், அந்தந்த அவைகளின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில்
இரு பங்கினரின் ஆதரவு வேண்டும். இதன்படி மக்களவையில் 362
உறுப்பினர்களின் ஆதரவும் மாநிலங்களவையில் 164 உறுப்பினர்களின்
ஆதரவும் இருக்க வேண்டும். பா.ஜ.கட்சிக்குக் கூடுதலாக 25 உறுப்பினர்களின் ஒத்துழைப்பு
மக்களவையிலும் 100 உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மாநிலங்களவையிலும்
கட்டாயம் தேவைப்படுகிறது.
இந்த ஆதரவுகளையும்
வெளியிலிருந்து பெறுவது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குச் சாத்தியமான ஒன்றுதான். இதற்காகவே, மத்திய அமைச்சரவையில் மானசீக
நட்புக் கட்சிகளுக்கும் இடமளிக்க பா.ஜ.க.
தலைமை திட்டமிடுகிறது. இருப்பினும் பஞ்சாப்,
குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சீமாந்திரா
ஆகிய மாநிலங்களிலிருந்து மாநிலங்களவைக்கு விரைவில் 50 உறுப்பினர்கள்
தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அவர்கள் பா.ஜ.க.வுக்குக் கைகொடுப்பார்கள்.
ஆக, உடனுக்குடன் இல்லாவிட்டாலும் ஓரிரு ஆண்டுகளில், தேர்தல் அறிக்கையில் பா.ஜ.க.
அறிவித்த திட்டங்களைச் செயல்படுத்த முயலும் என்பதில் ஐயமில்லை.
பா.ஜ.கட்சி தயங்கினாலும்
அதன் தாய்ச் சபையான ஆர்.எஸ்.எஸ்.
சும்மா விடாது என்பதிலும் ஐயமில்லை.
தேர்தல் அறிக்கை
- பொது சிவில் சட்டம்
- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம்
- மதமாற்றத் தடைச் சட்டம்
- பசுவதைத் தடைச் சட்டம்
- பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு
- மதரசாக்களை நவீனப்படுத்துதல்
நாடாளுமன்ற அவையில் அடியெடுத்து வைக்கும்போது, மண்டியிட்டு வணங்கிய மோடி. (படம்: தி இந்து) |
என்பன போன்ற
பா.ஜ.க.வின் திட்டங்களைச் சட்டத் திருத்தம் மூலமே செயல்படுத்த இயலும் என்று கூறப்படுகிறது.
அதற்கான இயைந்த சூழ்நிலையை உருவாக்க பா.ஜ.கட்சி வியூகம் வகுத்துவருகிறது. பா.ஜ.க. கூட்டணிக்கு வெளியே உள்ள ஒரு
சிறிய கட்சி அமைச்சரவையில் இடம்பெற சம்மதித்துவிட்டால், பெரிய
கட்சிக்கு ஒத்துப்போக வேண்டிய நெருக்கடி அதற்கு ஏற்படும். அதைப்
பயன்படுத்தி இந்தச் சட்டங்களை எளிதாக நிறைவேற்றிவிடலாம் என்பது பா.ஜ.க.வின் கணக்கு.
ஆர்.எஸ்.எஸ்.ஸின் நீண்டநாள்
கனவான இராமர் கோயில் கட்டும் திட்டத்தைக்கூட இதே பாணியில் சட்ட அனுமதியோடு செயல்படுத்த
முயன்றாலும் வியப்பதற்கில்லை.
நீதிமன்றத் துணை
இந்நிலையில், பாதிக்கப்படும் சிறுபான்மை சமுதாயம் என்ன செய்ய வேண்டும்?
நீதிமன்றத்தின் துணையை நாட வேண்டும். ஏனெனில், சட்டம் இயற்றுவதற்கும் சட்டத் திருத்தம் கொண்டுவருவதற்கும் மக்கள் பிரதிநிதிகளின் சபைகளுக்கு அதிகாரம் இருப்பதைப் போன்றே, அச்சட்டம் இந்திய அரசியல் சாசனத்திற்கு
(Constitution) முரண்படும்போது அதற்கெதிராக வழக்குத்
தொடுக்கவும் வாதாடவும் குடிமக்களுக்கு உரிமையுண்டு. அச்சட்டம் செல்லாது எனத் தீர்ப்பளிக்கின்ற அதிகாரம் நீதிமன்றத்திற்கு உண்டு.
பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவோடு அச்சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தாலும்
நீதிமன்றம் தலையிட முடியும்.
இதற்குச் சிறுபான்மை
மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டாக வேண்டும். அந்த விழிப்புணர்வை சமுதாய அறிவுஜீவிகள், சமூக ஆர்வலர்கள், மார்க்க அறிஞர்கள் உருவாக்கிட வேண்டும். அறிவுபூர்வமாகச் சிந்தித்து, சட்டரீதியில் அவர்கள் தங்களின் உரிமைகளைக் காக்கப் பாடுபட முன்வர வேண்டும். இதை விடுத்து, பீதியடைந்து, அச்சப்பட்டு, கூனிக்குறுகி நிற்க வேண்டிய துர்நிலை சிறுபான்மையினருக்கு இல்லை என்பதை முதலில் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
சொந்த முயற்சி
சரி! நீதிமன்றத்திலும் நாம் எதிர்பார்த்த நீதி கிடைக்கவில்லை என்றே வைத்துக்கொள்ளுங்கள்.
எடுத்துக்காட்டாக, முஸ்லிம் தனியார் சட்டம் செல்லாது;
பொதுக் குடியுரிமை சட்டமே இனி நடைமுறைப்படுத்தப்படும் என்று நாடாளுமன்றம்
தீர்மானிக்க, நீதிமன்றமும் அதையே ஏற்றுத் தீரப்பளிக்கும் நிலைக்கு
வந்துவிடுகிறது. இந்தச் சூழ்நிலையில் சமுதாயம் விழிப்படைந்து,
நீதிமன்றம் செல்லாமல் ஷரீஅத் சமரச மன்றங்களை உருவாக்கி, அதன்மூலமே பிரச்சினைக்குத் தீர்வு காணும் முடிவை ஏகமனதாக மேற்கொள்ள முன்வர
வேண்டும்.
இப்போதும்
சமரச மன்றங்கள்மூலம் தீர்வு காணும் மரபு பல இடங்களில் இருந்துவருகிறது. அதைப் பரவலாக்கச் சமூக ஆர்வலர்களும் மார்க்க அறிஞர்களும் முயல
வேண்டும். குடியுரிமை (சிவில்) சட்டங்களைப் பொறுத்தவரையில், அவை இரு முஸ்லிம்களுக்கிடையிலானவை.
திருமணம், மணவிலக்கு, பாகப்பிரிவினை, வஸிய்யத் (இறுதி விருப்பம்) போன்ற
விஷயங்களில் இஸ்லாம் அளிக்கும் தீர்வுகளை அவர்களே ஏற்க முன்வருகையில், அரசாங்கம் தலையிட்டு நீ உன் மார்க்கச் சட்டத்தையெல்லாம் பின்பற்றக் கூடாது;
நாங்கள் சொல்லும் பொதுச் சட்டத்தைத்தான் ஏற்று நடக்க வேண்டும் என்று
திணிப்பதற்கு என்ன உரிமையிருக்கிறது?
சம்பந்தப்பட்ட
இருவர் –வாதியும் பிரதிவாதியும்- நீதிமன்றத்தை அணுகினால்தானே இந்தத் திணிப்பு நடக்கும்? சமுதாயத்திற்குள்ளேயே மார்க்கச் சட்டப்படி சமரசத் தீர்வு கண்டால், வேறு யாரும் தலையிட முடியாதுதானே!
இவ்வாறே, பா.ஜ.க. அறிவித்துள்ள சிறுபான்மை விரோதத் திட்டங்கள் ஒவ்வொன்றும் நடைமுறைக்கு வருமானால்,
நீதிமன்றத்தின் வாயிலாகவும் அதையடுத்து சுயக் கட்டுப்பாடு, சமூக வழிகாட்டல், சுய முனைப்பு ஆகிய வழிகளில் தீர்வு
காணும் உறுதிப்பாட்டை முஸ்லிம்கள் மேற்கொள்ள வேண்டும். இதைப்
பற்றிய விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்த வேண்டும்.
காங்கிரஸின் பரிதாப நிலை
கடந்த அறுபது
ஆண்டுகளாக இந்திய முஸ்லிம்கள் காங்கிரஸை மலைபோல் நம்பினார்கள். ஆனால், காங்கிரஸ் முஸ்லிம்களின் நம்பிக்கையை
வீணடித்துவிட்டது; அல்லது நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டது.
பாபர் மசூதி சர்ச்சைக்குரியதாக்கப்பட்டது, மசூதியின்
வாயில் மூடப்பட்டது, மீண்டும் சிலைவழிபாட்டிற்காகத் திறக்கப்பட்டது,
இறுதியாக இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது என எல்லா அக்கிரமங்களும் நடந்தது
மத்தியில் காங்கிரஸ் ஆண்டபோதுதான் என்பதை முஸ்லிம்களால் எப்படி மறக்கவோ மன்னிக்கவோ
முடியும்?
சச்சார் கமிட்டியை
நியமித்த ஒன்றை மட்டுமே தன் சாதனையாகக் கூறிக்கொள்ளும் காங்கிரஸ், சச்சாரின் பரிந்துரைகளில் எதையேனும், குறிப்பாக
10 விழுக்காடு இடஒதுக்கீட்டினைச் செயல்படுத்தியதா? பயங்கரவாத முத்திரை குத்துவதில் உளவுத்துறை முனைப்புக் காட்டியது, ஆயிரக்கணக்கான இளைஞர்களை –குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமலேயே
- சிறையில் வாட்டிவதைத்தது, முஸ்லிம்களின்
பொருளாதார வளர்ச்சியிலும் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதிலும் அக்கறை காட்டாதது,
ஆட்சியிலும் முஸ்லிம்களுக்குரிய பிரதிநிதித்துவம் வழங்காதது…
எனத் தேசிய காங்கிரஸ் கட்சியின் மாற்றாந்தாய் மனப்பான்மைக்கு நிறைய எடுத்துக்காட்டுகளைக்
கூறலாம்.
அதனால்தான், உ.பி., ராஜஸ்தான்,
பீஹார், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா,
ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு
முதலான மாநிலங்களில் காங்கிரஸை முஸ்லிம்கள் அடியோடு கைகழுவிவிட்டார்கள். காங்கிரஸ் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 44 தொகுதிகளில்
மட்டும் வெற்றி பெற்று, எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட அடைய முடியாத
இழிநிலைக்கு அது தள்ளப்பட்டுவிட்டது. பல இடங்களில் மாநிலக் கட்சிகளுக்குச்
சிறுபான்மை வாக்காளர்கள் மாறிவிட்டார்கள் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
உ.பி. வெற்றிக்கு உழைத்த அமித்ஷா
மோடியின் நெருங்கிய நண்பர்
|
எண்பது மக்களவைத்
தொகுதிகளைக் கொண்ட உ.பி.யில் முப்பது தொகுதிகளில் வெற்றி-தோல்வியை நிர்ணயிப்பவர்கள்
முஸ்லிம்கள்தான். அந்த மாநிலத்திலேயே 70க்கும் அதிகமான இடங்களை பா.ஜ.க.
கைப்பற்றியிருக்கிறது என்றால் என்ன அர்த்தம்?
நண்பனும் பகைவன்
ஆவான் ஒருநாள்; பகைவனும் நண்பன் ஆவான் ஒருநாள்.
நம்பிக்கைத் துரோகியைவிட எதிரியே மேல் என்று எண்ணிவிட்டார்களோ!
___________________________
No comments:
Post a Comment