Saturday, August 30, 2014

ஃகஸ்ஸா – மறைக்கப்படும் உண்மைகள்

தமிழில்: கான் பாகவி

ஃக
ஸ்ஸா, ஃபாலஸ்தீனத்தின் கடற்கரை நகரம். மத்தியத் தரைக்கடலுக்குத் தென்கிழக்கே அமைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இஸ்லாமிய மண். ஜெருசலேமிற்குத் தென்மேற்கே 78 கி.மீ. தொலைவில் உள்ளது. ஏழு லட்சம் மக்கட்தொகை கொண்ட ஃகஸ்ஸா மாகானம், 56 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டதாகும். அரபு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஃகஸ்ஸாவில், சில ஆயிரம் அரபு கிறித்தவர்களும் உள்ளனர்.

ஃகஸ்ஸா (‘காஸாஅல்ல) முதல் கலீஃபா அபூபக்ர் (ரலி) அவர்கள் காலத்தில் வெற்றி கொள்ளப்பட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முப்பாட்டனார் ஹாஷிம் பின் அப்து மனாஃபின் அடக்கத் தலம் அங்குதான் உண்டு. இதனாலேயே ஃகஸ்ஸா ஹாஷிம்என்றும் இந்நகரம் அழைக்கப்படுவதுண்டுஇமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள் பிறந்த பூமி.


1967ஆம் ஆண்டு இஸ்ரேல் ஃகஸ்ஸாவை ஆக்கிரமித்தது. பின்னர் நீண்ட இடைவெளிக்குப்பின் 2006ஆம் ஆண்டு சுதந்திரமான தேர்தல் நடந்தது. மறைந்த யாசிர் அரஃபாத்தின்ஃபத்ஹ்கட்சி தோற்று, எதிர்க்கட்சியான இஸ்லாமியக் கட்சி (ஹமாஸ்) வென்றது. ஆயினும், ‘ஃபத்ஹ்கட்சி அதிகார மாற்றத்திற்கு மறுக்கவே உள்நாட்டுப்போர் மூண்டது.

இதைப் பயன்படுத்தி, இஸ்ரேல் ஒரு பக்கமும் எகிப்து இன்னொரு பக்கமும் ஃகஸ்ஸாவை முற்றுகையிட்டன. இஸ்ரேல், ஆயிரக்கணக்கில் யூதக் குடியிருப்புகளை அங்கு உருவாக்கியது; ஆக்கிரமிப்பை நீட்டித்தது. 2012 நவம்பரில் ஹமாஸைத் தீர்த்துக்கட்ட ஃகஸ்ஸாமீது இஸ்ரேல் தாக்குதல் தொடுத்தது.

இப்போதைய போர்

2014 ஜூன் 12ஆம் தேதிஅல்கலீல்குடியேற்றப் பகுதி மக்களில் (யூதர்கள்) மூன்றுபேர் காணாமல் போய்விட்டனர். அவர்களில் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு காவல்துறை அதிகாரிகளுடன் (இஸ்ரேல்) பேசியுள்ளார். உரையாடலின்போது துப்பாக்கி சுடும் சப்தம் கேட்டுள்ளது. “நாங்கள் கடத்தப்பட்டுள்ளோம்என்று சொல்லியிருக்கிறார்.

மூன்று யூதர்கள் ஒரே நேரத்தில் கடத்தப்பட்டதை சியோனிஸ்டுகளால் தாங்க முடியவில்லை. இதற்குமுன் நடக்காத விபரீதம்! அடுத்த 24மணி நேரத்திற்குள் சியோனிஸ்டு தரப்பு பரபரப்பானது. இத்தனைக்கும் கடத்தியவர்கள் யார்? அவர்களின் நிபந்தனைகள் என்ன? எங்கே கடத்திவைத்துள்ளார்கள். என்ற எந்தத் தகவலும் இஸ்ரேலுக்குத் தெரிந்திருக்கவில்லை.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைத் தொடர்புகொண்ட யூத ஆக்கிரமிப்பாளர்களிடம், நம் மக்களை மீட்ட தாக்குதல் தொடுங்கள் என்று அவர் உத்தரவிட்டார். ஃகஸ்ஸா மாகாண நகரங்கள், கிராமங்கள், வயல்வெளிகள், அடக்கத் தலங்கள், கிணறுகள், பள்ளிவாசல்கள் என வித்தியாசமே பாராமல் எல்லா இடங்களையும் ஆயிரக்கணக்கான இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தாக்கி அழித்தனர்.

முதல் ஐந்து நாட்கள் மட்டும் 600 மில்லியன் டாலர் சியோனிச தரப்புக்குச் செலவாயிற்று. இருந்தும் துப்புக் கிடைக்கவில்லை. எனவே, தேடுதல் வேட்டையை நிறுத்தியது. இது தோல்வியை ஒப்புக்கொண்டதாகவே கருதப்படுகிறது. இதையடுத்து இஸ்ரேல் அரசாங்கத்திற்குள் ஒருவர்மீது ஒருவர் குற்றம் சுமத்தவும் அரசியல் சண்டை பிடிக்கவும் ஆரம்பித்தனர்.

இதற்கு நேர்மாறாக, பாலஸ்தீனர்கள் தரப்பில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் எல்லா இடங்களுக்கும் பரவியது. சில நாட்களுக்குப்பின் கடத்தப்பட்டவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆத்திரத்தின் உச்சிக்குப்போன ஆக்கிரமிப்பாளர்கள், ஜெரூசலேம் முஸ்லிம் இளைஞர் (16) ஒருவரைக் கடத்திச் சென்று சித்திரவதை செய்தனர். உயிரோடு எரித்துக் கொன்றனர்.

முஹம்மத் அபூகுளைர் என்ற அந்த இளைஞரின் கொலை, மேற்குக் கரை, ஜெருசலேம் உள்ளிட்ட ஆக்கிரமிப்புப் பகுதிகளில் முஸ்லிம்களிடையே கோபக்கனலை மூட்டியது. பதிலடியில் ஈடுபட்டனர். ஒரே நாளில் பாலஸ்தீனப் போராளிகள் 240 பேர் தாக்கப்பட்டனர்! 270 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இது பாலஸ்தீனரிடையே பேரெழுச்சிக்கு வித்திட்டது; ஹைஃபா, அகா, நாஸிரத், லுத்து, கம்ரா, சக்னைன் ஆகிய பகுதிகளில் வாழும் மக்களை உசுப்பிவிட்டது.

இரு வேறு கணக்குகள்

ஃகஸ்ஸாபகுதிக்கு எதிரான தாக்குதலைத் தீவிரப்படுத்த வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் திட்டமிடுகிறார். இதற்கு அவர் தரப்பில் காரணங்கள் பல உள்ளன. ஆக்கிரமிப்பு பூமியில் தனது இராணுவத்தின் மீதும் பாதுகாப்பு ஏற்பாடுகள்மீதும் நம்பிக்கையை எற்படுத்தியாக வேண்டும்; அரசு கட்டுப்பாட்டை காப்பாற்றியாக வேண்டும்; சியோனிஸ சமூகத்தை அமைதிப்படுத்த வேண்டும்! ஹமாஸ் இயக்கத்திற்கு மோசமான சேதங்களை ஏற்படுத்த வேண்டும். (யூதர்களைக் கடத்திக் கொன்றது ஹமாஸ்தான் என இஸ்ரேல் குற்றம் சாட்டுகிறது.) பாலஸ்தீனர்களை பழிவாங்க வேண்டும்.


இதனால் ஃகஸ்ஸா பகுதிமீது வன்மமான, வரம்பு மீறிய தாக்குதல்களை சியோனிஸ ஆகிரமிப்பாளர்கள் தொடர்ந்துவருகின்றனர். ஆனால், இங்கேதான், நெதன்யாகு தவறு செய்கிறார். சிவிலியர்களைத் தாக்குவது, எதிர்க்கட்சிகளைக் கொலை செய்வது, ஒரே நாளில் ஹமாஸ் இயக்கத்தார் பலரையும் ஜிஹாதி கட்சியினர் பலரையும் கொன்று குவித்தது என அடுக்கடுக்கான பல குற்றங்களை அரங்கேற்றிவருகிறார் இஸ்ரேல் பிரதமர்.

அதைவிட பெஞ்சமின் போடும் தவறான மனக்கணக்கு என்ன என்பதைப் பாருங்கள்: ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஃகஸ்ஸா பகுதியில் ஹமாஸ் இயக்கத்திற்கு ஆதரவில்லை என்றும் பலவீனமாக அது இருக்கிறது என்றும் அவர் தப்புக் கணக்குப் போடுகிறார். ஹமாஸுக்கு எதிராகவே இன்றைய எகிப்து ஆட்சியுள்ளது; மாகாண அளவில் ஹமாஸ் தொடர்புகள் அறுந்துகிடக்கின்றன. ஃபத்ஹ் கட்சியுடன் சமரசம் செய்துகொண்டதே ஹமாஸின் பலவீனம்தான் என்றெல்லாம் கருதி, ஹமாஸை அழிக்க அவர் திட்டமிடுகிறார்.

ஆனால், ஹமாஸ் இயக்கத்தின் கணக்கு வேறு. அரசியல் முன்னுரிமைத் திட்டங்கள் சிலவற்றை சில ஆண்டுகளாகவே ஹமாஸ் முன்வைத்து, மக்களுக்கும் அவற்றை வெளியிட்டுவந்துள்ளது. ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் காலித் மிஷ்அல் வாயிலாக இதை அது செய்துவருகிறது.

அத்திட்டங்களில் முக்கியமானவை: 1. பாலஸ்தீனக் கைதிகளை இஸ்ரேல் விடுவிக்க வேண்டும். 2. ஃகஸ்ஸா பகுதியிலிருந்து முற்றுகையை அகற்றிவிட்டு இஸ்ரேல் வெளியேற வேண்டும். 3. மேற்குக் கரை பகுதியில் எதிர்க்கட்சிக்கு உரிமை வழங்க வேண்டும்.

அத்துடன் 2012ஆம் ஆண்டு முதல் ஏற்பட்டுள்ள புரிந்துணர்வு அடிப்படையில் சிவிலியர்களைத் தாக்கக் கூடாது; படுகொலைகளைத் தடுக்க வேண்டும்; விவசாயிகள் பணியாற்றவும் மீனவர்கள் 15கி.மீ. வரை சென்று மீன்பிடிக்கவும் அனுமதிக்க வேண்டும். ஆனால், நெதன்யாகு இதையெல்லாம் மீறி மீன்பிடி கடல் எல்லையை 3 கி.மீ. ஆகக் குறைத்துவிட்டார்.

சியோனிஸ்டுகளின் சேதங்கள்

பாலஸ்தீனர்கள் தரப்பில் இதுவரை 2000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் சிறார்கள் மட்டும் 500பேர். 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். நூற்றுக்கணக்கான கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளன. கோடிக்கணக்கான டாலர் மதிப்புள்ள உடைமைகள் அழிக்கப்பட்டுள்ளன.

தரைவழி தாக்குதலில் பாலஸ்தீனர்கள் ஈடுபட்டிருக்க, வான்வழி தாக்குதலை சியோனிஸ்டுகள் தொடுத்துவருகின்றனர். ஆரம்ப 6 நாட்களில் மட்டும் 1200 முறை தாக்கியுள்ள இஸ்ரேல், அதற்காக 3 ஆயிரம் டன் வெடிமருந்துகளைப் பயன்படுத்தியுள்ளது. 250 வீடுகளைத் தரைமட்டமாக்கிய எதிரிகள், 12,500 வீடுகளைச் சேதமாக்கியது. 220 பேர் கொல்லப்பட்டனர்; 2 ஆயிரம்பேர் காயமடைந்தனர்.

ஆனால், இதற்காக சியோனிஸ்டுகள் கொடுத்த விலை அதிகம். அது வெளியே தெரியவில்லை. இதுவரை 70 பேர் சாவு என்று இஸ்ரேல் கூறிவந்தாலும் சாவு எண்ணிக்கையும் காயம்பட்டோர் எண்ணிக்கையும் யூதர்கள் அணியில் மிக அதிகம். பொருளிழப்பு ஏராளம். 1. ஃகஸ்ஸாமீது தாக்குதல் தொடுக்க சியோனிஸ ராணுவம் இஸ்ரேல் அரசிடமிருந்து பெற்ற தொகை ஒன்றரை பில்லியன் டாலர். (ஒரு பில்லியன் 100 கோடி.) இதில் ஒரு விழுக்காடு அளவுக்கு ஆரம்ப நாட்களிலேயே அந்த ராணுவத்திற்கு இழப்பு ஏற்பட்டது. ஆரம்ப நாட்களில் மட்டும் நஷ்டஈடு கேட்டு 100 மனுக்கள் சியோனிஸ அரசுக்குச் சென்றன.

2. தொழிற்சாலைகள், உற்பத்தி நிறுவனங்கள், வேளாண்மை ஆகியவை நிறுத்தப்பட்டதால் பல பில்லியன் டாலர்கள் இழப்பு. 3. ஆக்கிரமிப்பாளர்கள் பாதுகாப்புக்காக அழைத்த 40 ஆயிரம் வீரர்களுக்கு நாளொன்றுக்கு 7 மில்லியன் டாலர் சம்பளம். 4. எதிரியின் ராக்கெட்டை இடைமறித்து அழிக்கப் பயன்படும் ஒவ்வொரு ராக்கெட்டிற்கும் தலா 50 ஆயிரம் டாலரை ஆக்கிரமிப்புத் தரப்பு செலுத்துகிறது.

5. ஃகஸ்ஸாமீதான தாக்குதலுக்கு நாளொன்றுக்கு 100 மில்லியன் டாலர்களைச் செலவழித்து வருகிறது இஸ்ரேல். 6. சியோனிஸ இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு இரண்டு நாட்களில் மட்டும் 600 மில்லியன் டாலர் இழப்பு. 7. ஃகஸ்ஸாவைச் சுற்றி 40 கி.மீ. சுற்றளவிற்குள்ள 500 தொழிற்சாலைகளுக்கு நிதியுதவி அளிக்க இஸ்ரேலிய வர்த்தக மற்றும் தொழில் சேம்பர் உறுதியளித்துள்ளது.

8. சுற்றுலா துறையில் இஸ்ரேலுக்குப் பெருத்த நஷ்டம். இது அக்டோபர்வரை நீடிக்கும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, இப்போரில் சியோனிஸ்டுகளுக்குத் தோல்விதான். அவர்களுக்குள் அரசியல் மோதல் ஏற்பட்டு, பெஞ்சமினின் அரசியல் வாழ்வுக்கு மிகப்பெரும் சவால் ஏற்பட்டுள்ளது. ஹமாஸின் பலத்தை எடைபோட சியோனிஸ்டுகள் தவறிவிட்டனர். போரின் முடிவு ஹமாஸிற்குச் சாதகமாகவே அமையும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

அதனாலேயே, தற்போதைய நிலவரப்படி போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் சம்மதித்துள்ளது. ஹமாஸ் அறிவித்த நிபந்தனைகளில் சிலவற்றை இஸ்ரேல் ஏற்றுள்ளது. முக்கியமாக, ஹமாஸை அரசியல் கட்சியாக (தீவிரவாதிகளோ பயங்கரவாதிகளோ அல்ல) அங்கீகரித்துள்ளது; மீன்பிடி கடல் எல்லையை அதிகமாக்கியது. அண்டை நாடுகளிலிருந்து நிவாரணப் பொருட்கள் வருவதற்கு வசதியாக எல்லைகளைத் திறந்துவிட்டிருக்கிறது.


(‘பலஸ்தீன்மாத இதழ் ஆசிரியர் ரஃபத் மர்ரா)

Monday, August 18, 2014

பிரபஞ்சத்தின் எல்லை தெரியுமா?

அ. முஹம்மது கான் பாகவி


நா
ம் வாழும் இந்தப் பூமி சூரியக் குடும்பத்தில் ஒரு கிரகம் அல்லது கோள் என்பது நமக்குத் தெரியும். நிலா பூமியின் துணைக் கோள். இதுவரை மனிதன் கண்டுபிடித்துள்ள சூரியக் குடும்பத்துக் கோள்களையே இன்னும் மனிதனால் முழுமையாக அறிய முடியவில்லை. செயற்கைக் கோள்கள் அனுப்பும் புகைப்படங்களிலிருந்து சில தகவல்களை மனிதனால் ஊகிக்க முடிந்திருக்கிறதே தவிர, அறுதியிட்டுச் சொல்ல ஒன்றும் இல்லை.

கோள்களின் எண்ணிக்கை, அவற்றில் உயிரினம் வாழ்வதற்கு வேண்டிய வசதிகள் குறித்த தகவல்கள் போன்ற சிறுசிறு விஷயங்களே. தெளிவற்ற அனுமானங்களாகவும் விஞ்ஞானிகளின் கருத்துவேறுபாட்டிற்கு இலக்கானவையாகவும்தான் இன்றுவரை நீடிக்கின்றன. பில்லியன் கணக்கில் டாலர்களைச் செலவழித்த பிறகுதான் இந்தச் சின்னச் சின்ன விஷயங்கள்கூட மனிதனுக்குத் தெரியவந்துள்ளன.

சூரியக் குடும்பத்தைத் தாண்டி நூற்றுக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன. அவை சூரியக் குடும்பக் கோள்களைக் காட்டிலும் பன்மடங்குப் பெரியவை என்றும் சொல்கிறார்கள். இந்த நட்சத்திரங்களில் உயிரினம் ஏதேனும் இருக்கிறதா என்ற ஆராய்ச்சியிலும் மனிதன் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றானாம்!

மனிதன் வசிக்கும் பூமிக்கும் பக்கத்திலுள்ள விண்மீன்களுக்கும் இடையிலேயே பல ஒளியாண்டுகள் தொலைவு இருக்கிறது. ஓர் ஒளியாண்டு என்பது, சுமார் 94.6 இலட்சம் கோடி கி.மீ. ஆகும். (அதாவது ஓராண்டில் ஒளி கடக்கும் தூரம்.) அந்த நட்சத்திரங்களில் ஒன்றில் இருந்து ஒரு சமிக்ஞை நம்மை வந்தடைய 4 ஆண்டுகளாகுமாம்! பிற நட்சத்திரங்களைச் சுற்றிவரும் கிரகங்களில் ஏறத்தாழ 1800 மட்டுமே கருவிகளின் உதவியால் அடையாளம் காணப்பட்டுள்ளன.

வேற்றுக் கிரகங்களிலிருந்து உயிரினங்களின் குரலோ ஒளி அடையாளமோ வேறு எந்தச் சமிக்ஞையோ வருகிறதா என நவீனக் கருவிகள்மூலம் மனிதன் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றான். ஆனால், சிறு முனகல்கூட எங்கிருந்தும் இதுவரை கேட்கவில்லை.

பிரபஞ்சம் என்பது அவ்வளவுதானா?

ஆக, சூரியன், சூரியனை மையமாகக் கொண்டு சுழலும் பூமி உள்ளிட்ட கோள்கள், அக்கோள்களுக்கான நிலா போன்ற துணைக்கோள்கள், சிறு நட்சத்திரக் கூட்டம், சூரியக் குடும்பத்தைத் தாண்டி இருக்கும் நூற்றுக்கணக்கான நட்சத்திரங்கள் ஆகியன வரைதான் மனித அறிவு எட்டியுள்ளது; அதுவும் அரைகுறையாக!

அப்படியானால், இவைதான் பிரபஞ்சமா? பிரபஞ்சத்தின் எல்லை இத்துடன் முடிந்துவிட்டதா? இவற்றுக்கு அப்பால் ஒன்றுமே கிடையாதா? கிடையாது என மனித ஆராய்ச்சியில் தீர்மானமாகத் தெரிந்துவிட்டதா? விடை தெரியாத வினாக்கள் இவை.

உண்மையில், பிரபஞ்சம் அல்லது பேரண்டம் (Universe) என்பது, நட்சத்திரங்கள் (Stars). கோள்கள் அல்லது கிரகங்கள் (Planets), துணைக்கோள்கள் (கிரகத்தைச் சுற்றும் சிறிய கோள்கள்) (Natural Satelites) முதலிய அனைத்தையும் உள்ளடக்கிய எல்லை காண முடியாத பரந்து விரிந்திருக்கும் பெருவெளி ஆகும்.

அணுக்களும் அணுத்துகள்களும் அவற்றால் அமைந்திருக்கும் எல்லாப் பொருட்களும் பிரபஞ்சத்தின் பகுதிகளாகும். நிறை விசை (Strong Force), அலை குன்றிய விசை (Weak Force), மின்காந்த விசை (Electromagnetic Force), ஈர்ப்பு விசை (Gravitation) ஆகிய நான்கு அடிப்படை விசைகளுக்குள் அடங்கியதே பிரபஞ்சம்.

ஒரு பொருளின் நிலையைத் தொடர்ந்திருக்கச் செய்யவோ, மாற்றவோ, உருவேறுபடுத்தவோ செய்யும் செயலுக்கேவிசை(Force) எனப்படுகிறது. ஒரு நியூட்டன் அளவுள்ள விசையானது, ஒரு கி.கி. எடையுள்ள பொருளில் ஒரு மீட்டர்/1 வினாடி/வினாடி முடுக்கத்தை உண்டாக்கும்.

இந்நிலையில், நம் அறிவுக்கு எட்டியுள்ள பிரபஞ்சத்தின் பகுதிகளுக்கு அப்பால் அணுக்களோ அணுக்களால் அமைந்திருக்கும் பொருட்களோ நான்கு அடிப்படை விசைகளுக்குக் கட்டுப்பட்டவையோ இல்லை என்ற முடிவுக்கு மனிதனால் வர முடியுமா? இல்லை என்பதற்கு அறிவியல் ஆதாரம் உண்டா?

இறைமறையில் பிரபஞ்சம்


உலகம் எவ்வாறு படைக்கப்பட்டது என்பது குறித்து ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் விளக்கினார்கள்:

(ஆதியில்) அல்லாஹ் மட்டுமே இருந்தான். அவனைத் தவிர வேறெந்தப் பொருளும் இருக்கவில்லை. (பிறகு தண்ணீரைப் படைத்தான். அடுத்து தன் அரியணையைஅர்ஷை படைத்தான்.) அவனது அரியணை தண்ணீரின் மேல் இருந்தது. பிறகு (‘லவ்ஹுல் மஹ்ஃபூழ்எனும் பாதுகாப்புப் பலகையைப் படைத்து,) அதில் எல்லா விஷயங்களையும் எழுதினான். பின்னர் வானங்களையும் பூமியையும் படைத்தான். (புகாரீ)

திருக்குர்ஆன் கூறுகிறது: உங்கள் இறைவன் அல்லாஹ் ஆவான். அவனே வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அரியணைமீது அவன் நிலை கொண்டான். அவன் இரவால் பகலை மூடுகிறான். பகல் இரவை வேகமாகப் பின்தொடர்கிறது. சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியவற்றையும் அவனே படைத்தான். அவை அவனது கட்டளைக்குப் பணிந்துள்ளன. (7:54)

அத்துடன் ஏழு வானங்களைப் படைத்ததாகப் பல இடங்களில் அல்லாஹ் அறிவிக்கின்றான். (2:29; 17:44; 23:17; 23:86; 41:12)

ஓரிடத்தில், ‘‘ஏழு வானங்களை அல்லாஹ் எவ்வாறு அடுக்கடுக்காகப் படைத்தான் என்பதை நீங்கள் காணவில்லையா? அவற்றில் சந்திரனை ஒளியாக அமைத்தான்; சூரியனை விளக்காக அமைத்தான்” (71:15,16) என்று கூறுகிறது குர்ஆன்.

இது மட்டுமன்றி, நபி (ஸல்) அவர்கள் மேற்கொண்ட விண்வெளிப் பயணம் ஆதாரபூர்வமான நபிமொழித் தொகுப்புகளில் பதிவாகியுள்ளது. அப்பயணத்தின் சுருக்கம் இதோ: மக்காவிலிருந்து பைத்துல் மக்திஸ் (ஜெருசலேம்); அங்கிருந்துபுராக்வாகனத்தில் விண்வெளி. அங்கு ஏழு வானங்களில் இறைத்தூதர்களுடன் சந்திப்பு. அடுத்துஅல்பைத்துல் மஅமூர்எனும் இறையில்லம் (விண்ணுலக கஅபா). ஒவ்வொரு நாளும் அங்கு 70 ஆயிரம் வானவர்கள் உள்ளே நுழைகிறார்கள்; இறையை வழிபடுகிறார்கள்.

அதையடுத்து வான் எல்லையானசித்ரத்துல் முன்தஹாஎனும் இடம். அங்குதான் அல்லாஹ் தன் இறுதித் தூதருக்கு ஐங்காலத் தொழுகையின் கடமையை அறிவித்தான். அதையடுத்து சொர்க்கம் மற்றும் நரகம்.

ஏழு வானங்கள் எவை?

திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் குறிப்பிடப்படும் இந்தஏழு வானங்கள்என்பது எதைக் குறிக்கிறது என்பதற்குத் தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை. நம் கண்களுக்குத் தென்படும் வானம் ஒரு வெட்ட வெளியாகும். மேகம், சந்திரன், சூரியன், நட்சத்திரங்கள் தெரியும் கருநீல வெளியேவானம்’ (Sky) எனப்படுகிறது. இது ஒரு சடப் பொருள் அல்ல. ‘ஏழுஎன்ற எண்ணிக்கையும் இதற்குப் பொருந்தாது.

அரபி மொழியில்வானம்என்பதைசமாஉஎன்பர். இதற்குமேலே உள்ளதுஎன்ற பொருளும் உண்டு. எனவே, நமக்கு மேலேஅல்லது நம்மைச் சுற்றியுள்ள- பொருளுக்கும்சமாஉஎனலாம் இந்த அடிப்படையில், ஏழு வானங்கள் என்பது ஏழு கோள்களான புதன், வெள்ளி, பூமி, சந்திரன், செவ்வாய், வியாழன், சனி ஆகியவற்றைக் குறிக்கும் என்றும் சூரியன் தனியானது என்றும் சிலர் விளக்கம் அளிப்பதுண்டு. அப்படியானால், சூரியக் குடும்பத்தில் புதிதாகச் சேர்ந்துள்ள யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகிய மூன்று கோள்களைச் சேர்க்கும்போது வானங்களின் எண்ணிக்கை பத்து ஆகுமே என்ற கேள்வி எழும்.

அது மட்டுமன்றி, சந்திரன் பூமியின் துணைக்கோளே தவிர தனிக்கோள் அல்ல. இக்கோள்களில் உயிரினம் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதா என்பதும் உறுதி செய்ப்படவில்லை. நபிமொழியில் குறிப்பிடப்படுகின்றஅல்பைத்துல் மஅமூர்எனும் இறையில்லம், வான் எல்லையானசித்ரத்துல் முன்தஹாஆகிய பகுதிகள் இக்கோள்களில்தான் உள்ளனவா என்பதற்கும் விடை கிடையாது. அப்புறம் சொர்க்கம் மற்றும் நரகம் பற்றிய கேள்வியும் எழும்.

இதனால், ஏன் இப்படி இருக்கக் கூடாது என்பது அறிஞர்கள் சிலரது கருத்தாகும்! அதாவது மார்க்கம் சொல்கின்ற ஏழு வானங்கள், அவற்றுக்கப்பால் உள்ள இடங்கள் ஆகியனவெல்லாம் இதுவரை மனிதனால் கண்டுபிடிக்கப்படாத, இந்தக் கோள்களுக்கும் விண்மீன்களுக்கும் அப்பால் உள்ள பிரமாண்டமான ஏழு அடுக்குகளைக் குறிக்கும் என்று சொல்லலாம்தானே! (அல்லாஹ்வே அறிந்தவன்)

அப்படியானால், பிரபஞ்சத்தின் எல்லையை அறிய மனிதன் வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது என்பதுதானே நிஜம்!

_______________________

Saturday, August 09, 2014

கருணைக் கொலையும் கொலைதானே!

- அ. முஹம்மது கான் பாகவி

‘காமன் காஸ்’ என்ற தொண்டு நிறுவனம் அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தது. “இனிமேல் மருந்துகளால் குணப்படுத்திக் காப்பாற்ற முடியாது என்ற நிலைக்குச் சென்றுவிட்ட நோயாளிகளை அவர்களது விருப்பத்தின்பேரில் சட்டப்பூர்வமாகக் கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்” என்பதே அந்த வழக்காகும்.


தலைமை நீதிபதி உள்ளிட்ட ஐவர் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு இம்மனு விசாரணைக்கு வந்தது. “கருணைக் கொலையும் தற்கொலைதான்; தற்கொலைக்கு முயற்சிப்பதோ தூண்டுவதோ குற்றமாகும்” என்று அட்டர்னி ஜெனரல் வாதிட்டர்.

எனினும், கருணைக் கொலை செய்ய அனுமதிக்கலாமா என்பது குறித்து அனைத்து மாநில அரசுகளும் 8 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கருணைக் கொலை?

அருணா செண்பகம் கோமா நிலையில்...
1973 நவம்பர் 27ஆம் தேதி மும்பை மருத்துவமனை ஒன்றில் செவிலியராகப் பணியாற்றிவந்த அருணா செண்பகம், மருத்துவமனை ஊழியரால் பலாத்காரம் செய்யப்பட்டு, சங்கிலியால் கழுத்து நெரிக்கப்பட்டு கோமா நிலைக்குத் தள்ளப்பட்டார். 37 ஆண்டுகளாக ‘கோமா’ நிலையில் படுத்த படுக்கையாகக் கிடந்த அவரைக் கருணைக் கொலை செய்ய சட்ட அனுமதி கோரிய மனுவை, 2011ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அப்போதிருந்தே கருணைக் கொலை தொடர்பான விவாதம் இந்தியாவில் சூடு பிடித்துவிட்டது. இனிமேல் குணப்படுத்த முடியாது என மருத்துவர்களால் கைவிடப்பட்டுவிட்ட நோயாளி வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல் தானும் வேதனையில் உழன்று, மற்றவர்களுக்கும் பாரமாக இருக்க வேண்டுமா? அவர்மீது கருணை காட்டி, சாத்வீகமான முறையில் கொன்றுவிட்டால் என்ன?

அதாவது உணவையும் மருந்தையும் நிறுத்திவிடலாம்; அல்லது நோயாளி மூச்சுவிட உதவும் கருவிகளை அகற்றிவிடலாம்; அல்லது டயாலிசிஸ் செய்தாக வேண்டிய நோயாளிக்கு அதைச் செய்யாமல் இருந்துவிடலாம். இதையெல்லாம் அவரது விருப்பத்தின்பேரில், அல்லது விருப்பம் தெரிவிக்க அவரால் இயலாதபோது காப்பாளர்களின் வேண்டுகோளின்பேரில் செய்துவிட்டால், நோயாளி தானாகவே மெல்ல உயிரிழந்துவிடுவார். இதுதான் ‘கருணைக் கொலை’ (Euthanasia) எனப்படுகிறது.

1980களில்தான் கருணைக் கொலை உலகின் கவனத்தை ஈர்த்தது. இதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுவதுண்டு. ஊடகங்கள் அளித்த முக்கியத்துவம், நெதர்லாந்தில் பரவிவரும் கருணைக் கொலை, எய்ட்ஸ் போன்ற நோய்களுக்கு மருந்து இல்லாமை, செல்வாக்குமிக்க மன்றங்களும் அமைப்புகளும் அரசுகளுக்குக் கொடுத்துவரும் நெருக்கடி ஆகியவை அவற்றில் அடங்கும்.

மேற்கின் அடிச்சுவட்டில்

வழக்கம்போல், மேற்கு உலகமே கருணைக் கொலைக்கும் வழிகாட்டி. பழங்காலத்து கிரேக்க தத்துவ ஞானிகள் விதைத்துவிட்டுப்போன சிந்தனைதான் இக்கொலைக்குக் காரணம் என்று சொன்னால், அது தவறாகாது.

பிளாட்டோ தமது ‘ஜனநாயகம்’ எனும் நூலில் எழுதுகிறார்: உடலும் அறிவும் நலமாக இருக்கும் குடிமக்களுக்கே எல்லாவற்றிலும் முன்னுரிமை தர வேண்டும்; உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை, அப்படியே சாக விட்டுவிட வேண்டும்.

சாக்ரடீஸ் கௌரவ மரணத்தையே தேர்ந்தெடுத்தார். சிறையிலிருந்து தப்பிக்க அவருடைய மாணவர்கள் செய்த ஏற்பாட்டை ஏற்க மறுத்து, விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். எஸ்கிமோ போன்ற பழங்குடி இனத்தாரிடையே –தண்டனையை அனுபவிக்காமல் கௌரவமாக இறந்துபோகும்- இப்பழக்கம் இன்றும் தொடர்கிறதாம்!

13ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேய தத்துவ ஞானியும் பாதிரியுமான ஃபிரான்க் பக்கோன் கருணைக் கொலை முறையை ஆதரித்த முதல் அறிஞர் (?) ஆவார். ஆங்கிலேய சிந்தனையாளர் தாமஸ் மூர், ஜெர்மனி தத்துவ அறிஞர் நீட்ஷா போன்றோரும் இக்கொலையை ஆதரித்து எழுதினர்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கங்களில் ஜெர்மனியில் கருணைக் கொலையை வலியுறுத்தும் இயக்கம் தொடங்கப்பட்டது. 1939இல் ஹிட்லர் வெளியிட்ட அரசாணை இதை உறுதிசெய்தது. மனநிலை பாதிக்கப்பட்டோர், உடல் ஊனமுற்றோர், தள்ளாமையில் சிரமப்படும் முதியோர் ஆகியோரைக் கொன்றுவிட அந்தச் சட்டம் அனுமதித்தது. இத்தாலியிலும் அந்தச் சிந்தனை பரவியது.

முதல்முதலாக ரஷியாதான், கருணைக் கொலைக்குத் தண்டனை இல்லை என்று அறிவித்தது. இது 1922இல் நடந்தது. விளைவு பாதகமாக இருந்ததால் சில மாதங்களிலேயே சட்டத்தைத் திரும்பப்பெற்றது. அமெரிக்காவில் ஒஹாயு மாநிலத்தில் 1906ஆம் ஆண்டு கருணைக் கொலைக்கு ஆதரவான சட்டம் கொண்டுவரப்பட்டது. பின்னர் அமெரிக்காவின் பிரதிநிதிகள் அவையின் எதிர்ப்பால் அந்தச் சட்டம் கைவிடப்பட்டது.

இருப்பினும், 1930இல் கருணைக் கொலைக்கு ஆதரவாக அமெரிக்க மன்றம் ஒன்று தொடங்கப்பட்டது. அதற்குமுன் 1823ஆம் ஆண்டிலேயே இது தொடர்பான முதலாவது வழக்கு அமெரிக்க நீதிமன்றத்திற்கு வந்தது. அதில் குற்றவாளி தன் மூன்று குழந்தைகளைத் தண்ணீரில் மூழ்கடித்துக் கொலை செய்தார். அவர்கள் நேரடியாகச் சொர்க்கம் செல்வார்கள் என்று காரணம் கூறினார். 1920இல் அமெரிக்கர் ஒருவர், நோயாளி மனைவி கேட்டுக்கொண்டதன்பேரில் விஷம் கொடுத்து மனைவியைக் கொன்றார்.

ஆக, அமெரிக்காவிலும் ஜரோப்பாவிலும் கிறித்தவப் பேராயர்கள், சிந்தனையாளர்கள், மருத்துவர்கள், முற்போக்கு (?) எழுத்தாளர்கள் எனப் பலரும் கருணைக் கொலைக்கு ஆதரவாகத் தீவிரமாகக் குரல் கொடுத்துவருகின்றனர். அமெரிக்காவில் 80 விழுக்காடு மருத்துவர்கள், குணப்படுத்த இயலாத நோயாளிகளை அவர்களுக்கோ குடும்பத்தாருக்கோ தெரியாமலேயே கருணைக் கொலை செய்துவிடுவதாக ஒரு கருத்துக் கணிப்பில் (1960) தெரிவித்திருந்தனர்.

சில புள்ளிவிவரங்கள்

  • பிரிட்டனில் ஓராண்டில் 18 ஆயிரத்திற்கும் குறைவில்லாத கருணைக் கொலைகள் நடக்கின்றனவாம்!
  • நெதர்லாந்தில் ஆண்டிற்கு 2 ஆயிரம் முதல் 10 ஆயிரம்வரை கருணைக் கொலைகள் நடக்கின்றன!
  • பெல்ஜியத்தில் ஆண்டொன்றுக்கு 203 கருணைக் கொலைகளும் சுவிட்சர்லாந்தில் (1800 அழைப்புகள் வந்தாலும்) 300 கருணைக் கொலைகளும் நடக்கின்றன.
  • மேற்கைப் பார்த்து முஸ்லிம் நாடுகளிலும் இக்கொடுமை நடப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. எகிப்தில் இஸ்கந்தரிய்யா பல்கலைக் கழக மருத்துவமனையில் ஒரேயொரு செவிலி மட்டுமே 13 கருணைக் கொலைகளை ஒரு கட்டத்தில் செய்துள்ளார்.
  • துனூசியாவில் 18 வயது இளம்பெண், நான்கு வயதே ஆன தம்பியைக் கருணைக் கொலை செய்தார். அப்பெண்ணுக்குத் தண்டனை தீர்ப்பானபோது கடும் எதிர்ப்பு கிளம்பியது.

கருணைக் கொலை ஏன்?

நோயாளியைக் குணப்படுத்தி வாழவைக்க முடியும் என்ற நம்பிக்கை அடியோடு இல்லை. இயற்கையான மரணமும் கண்ணுக்கு எட்டும் தூரத்தில் இல்லை. வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல் ஒருவர் ஆண்டுக் கணக்கில் உயிருள்ள சடமாகக் கிடந்து தானும் அவதியுற்று, சுற்றியிருப்போரையும் விரக்தியும் வெறுப்பும் அடையச்செய்துகொண்டு எத்தனை நாட்கள்தான் இருப்பது?

அவரது சம்மதத்தைப் பெற்று, சாத்வீகமான முறையில் அவரைச் சாக விட்டுவிட்டால், எல்லாருக்கும் நிம்மதியல்லவா? பணம் மிச்சம்; நேரம் மிச்சம்; மனித ஆற்றல் மிச்சம்! இனி அவர் உயிருடன் மட்டும் இருந்துதான் யாருக்கு என்ன லாபம்?

இந்தக் கருணைக் கொலைக்குச் சட்ட அனுமதி கொடுத்தால் என்ன? என்பதே மேற்கைப் பின்பற்றும் கிழக்கின் ஆதங்கம்! இதில் ஆன்மிகம், தார்மிகம், சமயம், பண்பாடு, கலாசாரம் என்றெல்லாம் கவனிக்கவோ பாவம்-புண்ணியம் பார்க்கவோ இடமில்லை என்பது இந்த இடதுசாரிகளின் வாதமாகும். இதுதான் முற்போக்கு; இதை மறுப்பது பழமைவாதம் என்றும் இவர்கள் விமர்சிக்கத் தயங்குவதில்லை.

உண்மை என்ன?

  1. கொலை என்பதே கொடுமையானது; இதில் கருணைக்கு எங்கே இடம் உண்டு?
  2. நோயாளியே விரும்புகிறாரே என்று வாதிடலாம். தற்கொலை செய்பவனும் விரும்பித்தானே மரணத்தை வலிந்து தேடிக்கொள்கிறான்! தற்கொலைக்கும் சட்ட அனுமதி வழங்கலாமா?
  3. உறவினர் விரும்பிக் கேட்டுக்கொண்டாலும் மருத்துவர்கள் பரிந்துரை செய்தாலும் கொலை கொலைதானே!
  4. மரண தண்டனையே கூடாது என்று ஆர்ப்பாட்டம் நடத்தும் முற்போக்குவாதிகள் கருணைக் கொலையில் மட்டும் கருணையில்லாமல் நடந்துகொள்ளலாமா?
  5. கருணைக் கொலைக்குச் சட்ட அனுமதி கிடைத்துவிட்டால், சொத்துக்காகவும் சுயநலத்திற்காகவும் உறவினர்களே கொலை செய்துவிட்டு, கருணைக் கொலைதான் என்று சட்டத்தை நம்பவைக்க எவ்வளவு நேரமாகும்? இதற்கு மருத்துவர்கள் துணைபோகமாட்டார்கள் என்று உங்களால் அடித்துச்சொல்ல முடியுமா?
  6. பெற்றோரையே விஷ ஊசிபோட்டு கருணைக் கொலை செய்யும் பிள்ளைகளைத்தான் இந்தச் சட்ட அனுமதி உருவாக்கும்! இல்லையா?
  7. எல்லாவற்றையும்விட, அன்பு, பாசம், உறவு, நட்பு, மனிதநேயம் ஆகிய உயர் பண்புகள் ஏற்கெனவே நலிந்து மெலிந்து காணப்படுகின்றன. ஒரேயடியாக அவற்றையும் கருணைக் கொலை செய்யவே சட்ட அனுமதி உதவும்!

இஸ்லாம் சொல்வதென்ன?

1. அடிப்படையில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். மனிதனின் உயிர் அவனுக்குச் சொந்தமல்ல; அவனைப் படைத்த இறைவனுக்குச் சொந்தமானது. படைத்தவனே ஆணையிடுகிறான்:

உங்கள் உயிரை நீங்களே மாய்த்துக்கொள்ளாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்கள்மீது கருணையுள்ளவனாக இருக்கின்றான். (4:29)

2. உயிர்வாழ்வது சிரமம் என்பதற்காக யாரும் சாகத் துணியக் கூடாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் யாரும் தமக்கு ஏற்பட்ட துன்பத்தின் காரணத்தால் மரணத்தை விரும்பி வரவேற்க வேண்டாம்! (புகாரீ)

3. அறியாமைக் கால மக்கள் சிலர் வறுமை, அவமானம், அடிமைத்தளை ஆகியவற்றை அஞ்சி சிசுக்களை கொலை செய்துவந்தார்கள். இந்தக் கொடுஞ்செயலுக்கு குர்ஆன் தடை விதித்தது.

இல்லாமையை அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவாதாரம் அளிக்கிறோம். (17:31)

ஆக, காரணம் எதுவாக இருந்தாலும் உயிரை அழித்துக்கொள்ள மனிதனுக்கு உரிமையோ அதிகாரமோ கிடையாது என்பதே இஸ்லாத்தின் நிலையாகும்.

மார்க்கத் தீர்ப்பு

1. அனுமதிக்கப்பட்ட உயிரிழப்பு (கொலை) என்பது சத்தியத்திற்காக உயிர்நீப்பது மட்டுமே. உயிர், பொருள், மானம், மார்க்கம் ஆகியவற்றைக் காப்பதற்காக உயிரை இழப்பது, இறைவழியில் அறப்போரில் உயிரை இழப்பது ஆகியவை எடுத்துக்காட்டுகளாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று காரணங்களில் ஒன்று இருந்தால் மட்டுமே ஒரு முஸ்லிமின் உயிரைப் பறிப்பதற்கு அனுமதியுண்டு. 1. திருமணமானவர் விபசாரம் செய்தல். 2. அநியாயமாக ஒருவரைக் கொலை செய்தல். 3. மதம் மாறி, சமூகக் கட்டமைப்பைப் பிரிந்து செல்லல். (புகாரீ, முஸ்லிம்)

ஒரு நோயாளி –எந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும், அந்த நோயின் நிலை எப்படியிருந்தாலும்- குணமடைவார் என்ற நம்பிக்கை இல்லை என்பதற்காகவோ அடுத்தவருக்கு அவரது நோய் பரவுவதைத் தடுக்க முடியாது என்பதற்காகவோ அவரைக் கொலை செய்வது கூடாது. இறப்பு அல்லாஹ்வின் கையில் உள்ளது. நோயாளியைக் குணப்படுத்தும் ஆற்றல் அவனுக்கு உண்டு.

இந்நிலையில், குணப்படுத்தும் நம்பிக்கை இல்லாத கட்டத்தில்கூட நோயாளி தற்கொலை செய்துகொள்வதோ அவர் அனுமதியின் பேரில் மற்றவர் அவரைக் கொல்வதோ இரண்டுமே ‘ஹராம்’ ஆகும். முந்தியது தற்கொலை என்றால், பிந்தியது படுகொலை ஆகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள்: முற்காலத்தில் ஒருவர் வாழ்ந்தார். அவருக்கு ஒரு காயம். வலி தாங்காமல் துடித்தார். எனவே, ஒரு கத்தியை எடுத்துக் கையை கீறிக்கொண்டார். குருதி கொட்டத் தொடங்கியது. இறுதியாக, அவர் இறந்துபோனார். அப்போது உயர்ந்தோன் அல்லாஹ் கூறினான்: என் அடியான் தன் உயிர் விஷயத்தில் அவசரப்பட்டுவிட்டான். அவனுக்குச் சொர்க்கத்தை நான் தடை செய்துவிட்டேன். (புகாரீ, முஸ்லிம்)

ஆக, குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை அற்றுப்போன நோயாளியைக் கொலை செய்வது மார்க்கச் சட்டப்படி ‘ஹராம்’ ஆகும். நோயாளியே அனுமதித்தால் அது தற்கொலையில் சேரும்; அவரது அனுமதியின்றி நடந்தால் அது படுகொலையாகும். உயிர் என்பது இறைவனின் உடைமை; அதை அவன் அனுமதித்த வகையில் மட்டுமே இழக்கலாம். (‘அல்அஸ்ஹர்’ மார்க்கத் தீர்ப்பு)

2. சாத்வீக முறையில் கருணைக் கொலை செய்வது மார்க்கச் சட்டப்படி ‘ஹராம்’ ஆகும். எந்த வழியிலும் நோயாளியைச் சாகவிடுவது உறுதியாகத் தடை செய்யப்பட்டதாகும். அதைச் செய்யத் துணிந்தவர் திட்டமிட்டுக் கொலை செய்த குற்றவாளி ஆவார். மனித உயிரைக் கொல்வது ஹராம் என்று குர்ஆனும் ஹதீஸும் உறுதிப்பட தெரிவிக்கின்றன. (‘குவைத்’’ மார்க்கத் தீர்ப்பு)