தமிழில்: கான் பாகவி
ஃக
|
ஸ்ஸா, ஃபாலஸ்தீனத்தின் கடற்கரை நகரம். மத்தியத் தரைக்கடலுக்குத் தென்கிழக்கே அமைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இஸ்லாமிய
மண். ஜெருசலேமிற்குத் தென்மேற்கே 78 கி.மீ. தொலைவில் உள்ளது. ஏழு லட்சம்
மக்கட்தொகை கொண்ட ஃகஸ்ஸா மாகானம், 56 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டதாகும். அரபு
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஃகஸ்ஸாவில், சில ஆயிரம் அரபு
கிறித்தவர்களும் உள்ளனர்.
ஃகஸ்ஸா (‘காஸா’ அல்ல) முதல் கலீஃபா அபூபக்ர்
(ரலி) அவர்கள் காலத்தில் வெற்றி கொள்ளப்பட்டது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்
முப்பாட்டனார் ஹாஷிம் பின் அப்து மனாஃபின் அடக்கத் தலம் அங்குதான் உண்டு. இதனாலேயே ‘ஃகஸ்ஸா ஹாஷிம்’ என்றும்
இந்நகரம் அழைக்கப்படுவதுண்டு. இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள் பிறந்த பூமி.
1967ஆம் ஆண்டு இஸ்ரேல் ஃகஸ்ஸாவை
ஆக்கிரமித்தது. பின்னர் நீண்ட இடைவெளிக்குப்பின் 2006ஆம் ஆண்டு சுதந்திரமான தேர்தல் நடந்தது. மறைந்த யாசிர்
அரஃபாத்தின் ‘ஃபத்ஹ்’ கட்சி தோற்று,
எதிர்க்கட்சியான இஸ்லாமியக் கட்சி (ஹமாஸ்)
வென்றது. ஆயினும், ‘ஃபத்ஹ்’
கட்சி அதிகார மாற்றத்திற்கு மறுக்கவே உள்நாட்டுப்போர் மூண்டது.
இதைப் பயன்படுத்தி, இஸ்ரேல் ஒரு பக்கமும் எகிப்து இன்னொரு பக்கமும் ஃகஸ்ஸாவை முற்றுகையிட்டன.
இஸ்ரேல், ஆயிரக்கணக்கில் யூதக் குடியிருப்புகளை
அங்கு உருவாக்கியது; ஆக்கிரமிப்பை நீட்டித்தது. 2012 நவம்பரில் ஹமாஸைத் தீர்த்துக்கட்ட ஃகஸ்ஸாமீது இஸ்ரேல் தாக்குதல் தொடுத்தது.
இப்போதைய போர்
2014 ஜூன் 12ஆம் தேதி ‘அல்கலீல்’ குடியேற்றப்
பகுதி மக்களில் (யூதர்கள்) மூன்றுபேர் காணாமல்
போய்விட்டனர். அவர்களில் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு
காவல்துறை அதிகாரிகளுடன் (இஸ்ரேல்) பேசியுள்ளார்.
உரையாடலின்போது துப்பாக்கி சுடும் சப்தம் கேட்டுள்ளது. “நாங்கள் கடத்தப்பட்டுள்ளோம்” என்று சொல்லியிருக்கிறார்.
மூன்று யூதர்கள் ஒரே நேரத்தில் கடத்தப்பட்டதை
சியோனிஸ்டுகளால் தாங்க முடியவில்லை. இதற்குமுன் நடக்காத விபரீதம்!
அடுத்த 24மணி நேரத்திற்குள் சியோனிஸ்டு தரப்பு
பரபரப்பானது. இத்தனைக்கும் கடத்தியவர்கள் யார்? அவர்களின் நிபந்தனைகள் என்ன? எங்கே கடத்திவைத்துள்ளார்கள்.
என்ற எந்தத் தகவலும் இஸ்ரேலுக்குத் தெரிந்திருக்கவில்லை.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைத்
தொடர்புகொண்ட யூத ஆக்கிரமிப்பாளர்களிடம், நம் மக்களை மீட்ட தாக்குதல்
தொடுங்கள் என்று அவர் உத்தரவிட்டார். ஃகஸ்ஸா மாகாண நகரங்கள்,
கிராமங்கள், வயல்வெளிகள், அடக்கத் தலங்கள், கிணறுகள், பள்ளிவாசல்கள்
என வித்தியாசமே பாராமல் எல்லா இடங்களையும் ஆயிரக்கணக்கான இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தாக்கி
அழித்தனர்.
முதல் ஐந்து நாட்கள் மட்டும் 600 மில்லியன் டாலர் சியோனிச தரப்புக்குச் செலவாயிற்று. இருந்தும்
துப்புக் கிடைக்கவில்லை. எனவே, தேடுதல்
வேட்டையை நிறுத்தியது. இது தோல்வியை ஒப்புக்கொண்டதாகவே கருதப்படுகிறது.
இதையடுத்து இஸ்ரேல் அரசாங்கத்திற்குள் ஒருவர்மீது ஒருவர் குற்றம் சுமத்தவும்
அரசியல் சண்டை பிடிக்கவும் ஆரம்பித்தனர்.
இதற்கு நேர்மாறாக, பாலஸ்தீனர்கள் தரப்பில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் எல்லா இடங்களுக்கும் பரவியது.
சில நாட்களுக்குப்பின் கடத்தப்பட்டவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
ஆத்திரத்தின் உச்சிக்குப்போன ஆக்கிரமிப்பாளர்கள், ஜெரூசலேம் முஸ்லிம் இளைஞர் (16) ஒருவரைக் கடத்திச் சென்று
சித்திரவதை செய்தனர். உயிரோடு எரித்துக் கொன்றனர்.
முஹம்மத் அபூகுளைர் என்ற அந்த இளைஞரின்
கொலை, மேற்குக் கரை, ஜெருசலேம் உள்ளிட்ட ஆக்கிரமிப்புப்
பகுதிகளில் முஸ்லிம்களிடையே கோபக்கனலை மூட்டியது. பதிலடியில்
ஈடுபட்டனர். ஒரே நாளில் பாலஸ்தீனப் போராளிகள் 240 பேர் தாக்கப்பட்டனர்! 270 பேர் கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டனர்.
இது பாலஸ்தீனரிடையே பேரெழுச்சிக்கு
வித்திட்டது; ஹைஃபா, அகா, நாஸிரத்,
லுத்து, கம்ரா, சக்னைன் ஆகிய
பகுதிகளில் வாழும் மக்களை உசுப்பிவிட்டது.
இரு வேறு கணக்குகள்
‘ஃகஸ்ஸா’ பகுதிக்கு எதிரான தாக்குதலைத் தீவிரப்படுத்த வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்
திட்டமிடுகிறார். இதற்கு அவர் தரப்பில் காரணங்கள் பல உள்ளன.
ஆக்கிரமிப்பு பூமியில் தனது இராணுவத்தின் மீதும் பாதுகாப்பு ஏற்பாடுகள்மீதும்
நம்பிக்கையை எற்படுத்தியாக வேண்டும்; அரசு கட்டுப்பாட்டை காப்பாற்றியாக
வேண்டும்; சியோனிஸ சமூகத்தை அமைதிப்படுத்த வேண்டும்! ஹமாஸ் இயக்கத்திற்கு மோசமான சேதங்களை ஏற்படுத்த வேண்டும். (யூதர்களைக் கடத்திக் கொன்றது ஹமாஸ்தான் என இஸ்ரேல் குற்றம் சாட்டுகிறது.)
பாலஸ்தீனர்களை பழிவாங்க வேண்டும்.
இதனால் ஃகஸ்ஸா பகுதிமீது வன்மமான, வரம்பு மீறிய தாக்குதல்களை சியோனிஸ ஆகிரமிப்பாளர்கள் தொடர்ந்துவருகின்றனர்.
ஆனால், இங்கேதான், நெதன்யாகு
தவறு செய்கிறார். சிவிலியர்களைத் தாக்குவது, எதிர்க்கட்சிகளைக் கொலை செய்வது, ஒரே நாளில் ஹமாஸ் இயக்கத்தார்
பலரையும் ஜிஹாதி கட்சியினர் பலரையும் கொன்று குவித்தது என அடுக்கடுக்கான பல குற்றங்களை
அரங்கேற்றிவருகிறார் இஸ்ரேல் பிரதமர்.
அதைவிட பெஞ்சமின் போடும் தவறான மனக்கணக்கு
என்ன என்பதைப் பாருங்கள்: ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஃகஸ்ஸா பகுதியில்
ஹமாஸ் இயக்கத்திற்கு ஆதரவில்லை என்றும் பலவீனமாக அது இருக்கிறது என்றும் அவர் தப்புக்
கணக்குப் போடுகிறார். ஹமாஸுக்கு எதிராகவே இன்றைய எகிப்து ஆட்சியுள்ளது;
மாகாண அளவில் ஹமாஸ் தொடர்புகள் அறுந்துகிடக்கின்றன. ஃபத்ஹ் கட்சியுடன் சமரசம் செய்துகொண்டதே ஹமாஸின் பலவீனம்தான் என்றெல்லாம் கருதி,
ஹமாஸை அழிக்க அவர் திட்டமிடுகிறார்.
ஆனால், ஹமாஸ் இயக்கத்தின் கணக்கு வேறு. அரசியல் முன்னுரிமைத்
திட்டங்கள் சிலவற்றை சில ஆண்டுகளாகவே ஹமாஸ் முன்வைத்து, மக்களுக்கும்
அவற்றை வெளியிட்டுவந்துள்ளது. ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவுத்
தலைவர் காலித் மிஷ்அல் வாயிலாக இதை அது செய்துவருகிறது.
அத்திட்டங்களில் முக்கியமானவை: 1. பாலஸ்தீனக் கைதிகளை இஸ்ரேல் விடுவிக்க வேண்டும். 2. ஃகஸ்ஸா
பகுதியிலிருந்து முற்றுகையை அகற்றிவிட்டு இஸ்ரேல் வெளியேற வேண்டும். 3. மேற்குக் கரை பகுதியில் எதிர்க்கட்சிக்கு உரிமை வழங்க வேண்டும்.
அத்துடன் 2012ஆம் ஆண்டு முதல் ஏற்பட்டுள்ள புரிந்துணர்வு அடிப்படையில் சிவிலியர்களைத் தாக்கக்
கூடாது; படுகொலைகளைத் தடுக்க வேண்டும்; விவசாயிகள்
பணியாற்றவும் மீனவர்கள் 15கி.மீ.
வரை சென்று மீன்பிடிக்கவும் அனுமதிக்க வேண்டும். ஆனால், நெதன்யாகு இதையெல்லாம் மீறி மீன்பிடி கடல் எல்லையை
3 கி.மீ. ஆகக் குறைத்துவிட்டார்.
சியோனிஸ்டுகளின்
சேதங்கள்
பாலஸ்தீனர்கள் தரப்பில் இதுவரை
2000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் சிறார்கள் மட்டும் 500பேர்.
10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். நூற்றுக்கணக்கான கட்டடங்கள்
தரைமட்டமாகியுள்ளன. கோடிக்கணக்கான டாலர் மதிப்புள்ள உடைமைகள் அழிக்கப்பட்டுள்ளன.
தரைவழி தாக்குதலில்
பாலஸ்தீனர்கள் ஈடுபட்டிருக்க, வான்வழி தாக்குதலை சியோனிஸ்டுகள்
தொடுத்துவருகின்றனர். ஆரம்ப 6 நாட்களில் மட்டும் 1200 முறை தாக்கியுள்ள இஸ்ரேல், அதற்காக
3 ஆயிரம் டன் வெடிமருந்துகளைப் பயன்படுத்தியுள்ளது. 250 வீடுகளைத் தரைமட்டமாக்கிய
எதிரிகள், 12,500 வீடுகளைச் சேதமாக்கியது. 220 பேர் கொல்லப்பட்டனர்; 2 ஆயிரம்பேர் காயமடைந்தனர்.
ஆனால், இதற்காக சியோனிஸ்டுகள் கொடுத்த விலை அதிகம். அது வெளியே
தெரியவில்லை. இதுவரை 70 பேர் சாவு என்று
இஸ்ரேல் கூறிவந்தாலும் சாவு எண்ணிக்கையும் காயம்பட்டோர் எண்ணிக்கையும் யூதர்கள் அணியில்
மிக அதிகம். பொருளிழப்பு ஏராளம். 1. ஃகஸ்ஸாமீது
தாக்குதல் தொடுக்க சியோனிஸ ராணுவம் இஸ்ரேல் அரசிடமிருந்து பெற்ற தொகை ஒன்றரை பில்லியன்
டாலர். (ஒரு பில்லியன் 100 கோடி.)
இதில் ஒரு விழுக்காடு அளவுக்கு ஆரம்ப நாட்களிலேயே அந்த ராணுவத்திற்கு
இழப்பு ஏற்பட்டது. ஆரம்ப நாட்களில் மட்டும் நஷ்டஈடு கேட்டு
100 மனுக்கள் சியோனிஸ அரசுக்குச் சென்றன.
2. தொழிற்சாலைகள்,
உற்பத்தி நிறுவனங்கள், வேளாண்மை ஆகியவை நிறுத்தப்பட்டதால்
பல பில்லியன் டாலர்கள் இழப்பு. 3. ஆக்கிரமிப்பாளர்கள் பாதுகாப்புக்காக
அழைத்த 40 ஆயிரம் வீரர்களுக்கு நாளொன்றுக்கு 7 மில்லியன் டாலர் சம்பளம். 4. எதிரியின் ராக்கெட்டை இடைமறித்து
அழிக்கப் பயன்படும் ஒவ்வொரு ராக்கெட்டிற்கும் தலா 50 ஆயிரம் டாலரை
ஆக்கிரமிப்புத் தரப்பு செலுத்துகிறது.
5. ஃகஸ்ஸாமீதான தாக்குதலுக்கு
நாளொன்றுக்கு 100 மில்லியன் டாலர்களைச் செலவழித்து வருகிறது இஸ்ரேல்.
6. சியோனிஸ இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு இரண்டு நாட்களில் மட்டும்
600 மில்லியன் டாலர் இழப்பு. 7. ஃகஸ்ஸாவைச் சுற்றி
40 கி.மீ. சுற்றளவிற்குள்ள
500 தொழிற்சாலைகளுக்கு நிதியுதவி அளிக்க இஸ்ரேலிய வர்த்தக மற்றும் தொழில்
சேம்பர் உறுதியளித்துள்ளது.
8. சுற்றுலா துறையில் இஸ்ரேலுக்குப்
பெருத்த நஷ்டம். இது அக்டோபர்வரை நீடிக்கும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, இப்போரில் சியோனிஸ்டுகளுக்குத் தோல்விதான். அவர்களுக்குள்
அரசியல் மோதல் ஏற்பட்டு, பெஞ்சமினின் அரசியல் வாழ்வுக்கு மிகப்பெரும்
சவால் ஏற்பட்டுள்ளது. ஹமாஸின் பலத்தை எடைபோட சியோனிஸ்டுகள் தவறிவிட்டனர்.
போரின் முடிவு ஹமாஸிற்குச் சாதகமாகவே அமையும் என அரசியல் நோக்கர்கள்
கருதுகின்றனர்.
அதனாலேயே, தற்போதைய நிலவரப்படி போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் சம்மதித்துள்ளது.
ஹமாஸ் அறிவித்த நிபந்தனைகளில் சிலவற்றை இஸ்ரேல் ஏற்றுள்ளது. முக்கியமாக, ஹமாஸை அரசியல் கட்சியாக (தீவிரவாதிகளோ பயங்கரவாதிகளோ அல்ல) அங்கீகரித்துள்ளது;
மீன்பிடி கடல் எல்லையை அதிகமாக்கியது. அண்டை நாடுகளிலிருந்து
நிவாரணப் பொருட்கள் வருவதற்கு வசதியாக எல்லைகளைத் திறந்துவிட்டிருக்கிறது.
(‘பலஸ்தீன்’ மாத இதழ் ஆசிரியர் ரஃபத் மர்ரா)