கான் பாகவி
‘முஸ்லிம்
நாடுகளில் என்ன நடக்கிறது?’
எனும் ஒரு கட்டுரையில்,
அரபு வசந்தத்தின் பலனை முஸ்லிம் நாடுகள் அறுவடை செய்யவிடாமல் தடுக்க எல்லா
முயற்சிகளையும் தீய சக்திகள் மேற்கொண்டு வருகின்றன என்று சுட்டிக்காட்டியிருந்தோம்.
வசந்தத்திற்கு
வித்திட்ட அதே எகிப்தில் இன்று தீயோரின் சதி ‘இராணுவப் புரட்சி’ என்ற பெயரில் அரங்கேறத் தொடங்கிவிட்டது. நபிவழியான
தாடியுடன் எழிலாகக் காட்சியளித்த அதிபர் முர்சி எங்கே? மழித்த
முகத்துடன் காட்சிதரும் இடைக்கால இன்றைய ஆட்சியாளர்கள் எங்கே? ஏணி வைத்தாலும்
எட்டாது.
அடப் பாவிகளா? ஜனநாயக முறைப்படி
தேர்ந்தெடுக்கப்பட்டு, சரியான
ஆட்சியை நடத்தத் தொடங்கி,
எகிப்து குடிமக்கள் ஒவ்வொருவரும் இழந்த அடையாளத்தை மீட்டெடுக்க வழிகண்டு
சமாதான பெருவாழ்வை வழங்க இருந்த ஒரு நல்ல ஆட்சித் தலைவரை அநியாயமாக
அகற்றிவிட்டீர்களே!
உள்ளூர்
கிப்தியரான ஆர்த்தோடக்ஸ் கிறித்தவர்கள் ஒரு பக்கம்; இவர்கள்தான், இராணுவப்
புரட்சிக்கு முன்பு நடந்த கிளர்ச்சியில் கலந்துகொண்டோரில் 50 விழுக்காடாக
இருந்தனர். இடதுசாரிகள் இன்னொரு பக்கம்; சியோனிஸ யூதர்கள் மறுபக்கம்; காலனி ஆதிக்க வெறியர்கள்
இன்னொரு பக்கம். இவர்கள் எல்லாரும் இராணுவத்தில் இருந்த கறுப்பு ஆடுகளை நன்கு
பயன்படுத்திக்கொண்டனர் என்பது புரிகிறது.
‘அந்நூர்’ கட்சிக்கு என்ன
வந்தது?
ஆனால், சலஃப்
ஸாலிஹீன்களைப் பின்பற்றுவதாகச் சொல்லிக்கொள்ளும் கட்சியான ‘அந்நூர்’ கட்சிக்கு என்ன
வந்தது? எகிப்தில்
நடந்த இராணுவப் புரட்சிக்கு அந்தக் கட்சியின் தலைவர்களும் பச்சைக்கொடி
காட்டியுள்ளனரே! அதைத்தான் புரிந்துகொள்ள முடியவில்லை.
ஷைகு அப்துல்
காலிக் அவர்கள் அக்கட்சியைக் கடுமையாக இப்படிச் சாடினார்; கலீஃபா உஸ்மான்
(ரலி) அவர்களுக்கெதிராகக் கிளம்பிய கவாரிஜ்களுக்கும் உங்களுக்கும் என்ன வேறுபாடு?
ஷைகு அப்துல்
மக்ஸூத் அவர்கள் கூறினார்: எகிப்து இராணுவம் அந்நூர் கட்சியின் உறுப்பினர்களையும்
பயன்படுத்தியே முர்சியை வீழ்த்தியுள்ளனர்; இக்வான்களை மறுபடியும் சிறைச்சாலைகளுக்கு
அனுப்பிவருகின்றனர்.
அத்துடன்
அக்கட்சியை ‘ஹிஸ்புஷ்
ஷைத்தான்’ (ஷைத்தானின்
கட்சி) என்று அவர் சாடினார்.
‘இமாம் முஹம்மத்
பின் சஊத்’ இஸ்லாமியப்
பல்கலைக் கழகத்தின் ஹதீஸ் பேராசிரியர் டாக்டர், பன்தர் ஷுவைகீ கூறுகிறார்: ‘அந்நூர்’ கட்சியினர், மதச்சார்பற்ற
சக்திகளுக்கு வளைந்துகொடுக்கின்றனர் என்று நான் சொன்னபோது என்னைச் சிலர்
விமர்சித்தனர். இப்போது உண்மை வெளிவந்துவிட்டது.
டாக்டர் ஷைகு
கர்ளாவி அவர்களின் ஆதங்கம் இதோ: 90 ஆண்டுகால முடிச்சுகளை ஒரே ஆண்டில் எவ்வாறு அவிழ்க்க
முடியும்? இவ்வளவு
காலம் பொறுத்தவர்கள் இன்னும் சிறிதுகாலம் ஏன் பொறுக்கக் கூடாது? முர்சிக்குப்பின், மோசமானவர்களே
அந்த இடத்தில் அமரப்போகிறார்கள்!
மீண்டும்
பாதாளத்தில்
இந்த இராணுவப்
புரட்சியின் மூலம் நாட்டை ஒரு நூற்றாண்டுக்குப் பின்னோக்கித் தள்ளிவிட்டார்கள் என ‘அல்முஜ்தமா’ வார ஏடு
தலையங்கத்தில் வேதனை தெரிவித்துள்ளது. கடந்த நூற்றாண்டின் ஐந்து மற்றும் ஆறாவது
தசாப்தங்களின் காலத்தில் நடந்த இராணுவப் புரட்சிகளையே இது நமக்கு
நினைவுபடுத்துகிறது.
எகிப்தில்
அப்துந் நாஸிர், இராக்கில்
சத்தாம் ஹுசைன், சிரியாவில்
ஹாஃபிள் அசத், யமனில்
அலீ ஸாலிஹ், அல்ஜீரியாவில்
ஹவாரீ ஆகியோரின் ஆட்சியில் மக்கள் சந்தித்த அதே நாசத்தை இப்போது எகிப்தியர்
சந்திக்கப்போகிறார்கள் என அல்முஜ்தமா அச்சம் தெரிவித்துள்ளது.
அடக்குமுறை, சிறை, கொடுங்கோன்மை, ஒட்டுமொத்த
படுகொலை... இதைத்தான் மக்கள் அங்கே கண்டார்கள். இந்த ஆட்சியாளர்கள் தங்கள் நாடுகளை
மேற்கத்திய காலனி ஆதிக்கத்திற்கு விற்றுவிட்டார்கள்.
இந்தக்
கொடுங்கோலர்களின் புரட்சிகள், வரலாற்றின் குப்பைக் கூடைகளுக்குச் சொந்தமாகிவிட்டன. ஆம்!
எகிப்தில், சியோனிஸ்டுகளின்
கரத்தால் படுதோல்வி கண்ட அப்துந் நாசிர் வீழ்ந்தார். அமெரிக்கர்களின்
கொடுங்கரத்தால் இராக்கில் சத்தாம் வீழ்த்தப்பட்டார்.
இதோ இப்போதும்
சிரியாவில் அசத் ஆட்டம் காண ஆரம்பித்துவிட்டார். ஆனாலும் யூதர்களும்
மேலைநாட்டினரும் அவருக்குத் தோள் கொடுத்துவருகின்றனர். சிரியா மக்களோ அசதை
வீழ்த்தாமல் ஓயமாட்டோம் என்ற உறுதியில் போராடிவருகின்றனர். யமன், லிபியா, துனூசியா ஆகிய
நாட்டு மக்கள், தங்களின்
கொடுங்கோல் மன்னர்களை விரட்டியடித்துவிட்டனர்.
ஆக்கப்பூர்வ
திட்டங்கள்
அவ்வாறுதான், எகிப்தில்
சர்வாதிகாரி ஹசனீ முபாரக்கை மக்கள் வீழ்த்தினர். எகிப்து வரலாற்றிலேயே
முதன்முறையாக சிவிலியன் ஒருவர் முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது
இப்போதுதான். அவர்தான் முர்சி அவர்கள். அவர் ஆக்கப்பூர்வமான செயல்திட்டங்களைச்
செயல்படுத்த விரிவாக ஆலோசித்தார்.
இத்திட்டங்கள்
மட்டும் நடைமுறைக்கு வந்திருக்குமானால், மறைமுகக் காலனிவாதிகளை வெளியேற்றிவிட்டு, எகிப்தியரே தம்
நாட்டின் தலைவர்களாக மாறியிருப்பார்கள்; எகிப்தின் சிக்கல்களுக்குத் தீர்வு கிடைத்திருக்கும்.
சூயெஸ் கால்வாயை
ஆழப்படுத்தும் திட்டம், சினாய்
புணரமைப்பு, கோதுமை
உற்பத்தியில் தன்னிறைவு ஆகிய திட்டங்களை எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம். இவை, எகிப்து
வரலாற்றில் எந்த ஆட்சியாளரும் நெருங்க முடியாமல்போன திட்டங்களாகும்.
இத்திட்டங்கள், காலனி
வெறியர்களுக்குச் சிம்மசொப்பனமாக இருந்தவையாகும். இத்திட்டங்கள் நிறைவேறிவிட்டால், எகிப்தியர் சுய
காலில் நிற்கத் தொடங்கிவிடுவர்; எழுச்சியைத் தொட்டுவிடுவர் என்பதே காரணம்.
எதிரிகள் கிழித்த
இந்த சிவப்புக் கோட்டை அதிபர் முர்சி தாண்டினார். ஆக்கபூர்வமான அத்திட்டங்களைச்
செயல்படுத்த வலுவான தேசிய திட்டத்தை நெஞ்சுரத்தோடு வகுத்தார். இதுவே எகிப்தின்
எதிரிகளை நடுங்கவைத்தது. வெளிப்படையில் திட்டங்களை வரவேற்பதைப் போன்று எதிரிகள்
நடித்தார்கள். முர்சிக்கு எதிராகக் கலவரங்களை மூட்டிவிட்டார்கள். இராணுவம் வந்தது.
வழக்கமான நடைமுறைகள் அரங்கேறுகின்றன.
மீண்டும்
வருவார்கள்
முர்சியும்
இக்வான் நிர்வாகிகளும் வீட்டுக்காவலில். இந்த அக்கிரமத்தை வாழ்த்தி வரவேற்றவர்கள்
யார் யார் தெரியுமா? ஆர்த்தோடக்ஸ்
கிறித்தவர்களின் போப் டோல்ரூஸ்; இஸ்ரேல்; சியோனிஸ்டுகள்; எகிப்து இடதுசாரிகள். மேற்கத்திய நாடுகள் எதிர்த்தாலும்
அந்தரங்கத்தில் வரவேற்கின்றன.
ஆனால், இக்வான்கள்
இதைவிடப் பெரிய கொடுமைகளை அனுபவித்தவர்கள். மீண்டும் வருவார்கள் இன்ஷா அல்லாஹ்.