Thursday, August 18, 2016

இஸ்லாமிய வாழ்க்கை முறை

மௌலவி, அ.முஹம்மது கான் பாகவி

ஸ்லாம் மதமல்ல; அது ஒரு மார்க்கம் என்கிறோம். இதற்குக் காரணம், இஸ்லாம் சில தத்துவங்களின் தொகுப்போ, சில சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்கச் சொல்லும் அமைப்போ அல்ல; மாறாக, அது ஒரு வாழ்க்கை நெறி; இருபத்து நான்கு மணிநேர வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஓர் உன்னதக் கோட்பாடு. நாளொன்றுக்கு ஐந்து வேளைகள் இறைவனைத் தொழுதுவிடுவதனால் மட்டும் ஒருவர் உண்மை முஸ்லிமாகிவிட முடியாது. பிறப்பு முதல் இறப்புவரை, காலை எழுந்தது முதல் இரவில் உறங்கும்வரை மனிதனின் எல்லாப் பருவங்களிலும் அவன் பின்பற்றி ஒழுக வேண்டிய நடைமுறைகள், குணநலன்கள் அடங்கிய வாழ்க்கை முறையே இஸ்லாம்.

இஸ்லாம் காட்டுகின்ற இந்த வாழ்க்கை முறை மனிதனைப் படைத்து இரட்சித்துக் கொண்டிருக்கும் ஏக இறைவனாம் அல்லாஹ்வினால் கட்டளையிடப்பட்டு, அல்லாஹ்வின் தூதர் அண்ணல் முஹம்மத் (ஸல்) அவர்களால் வாழ்ந்து காட்டப்பட்டு, நபித்தோழர்கள் மற்றும் நல்லோர்களால் அனுபவித்து உறுதி செய்யப்பட்டதாகும். இந்த அருமையான வாழ்க்கை முறையை நம்மில் பலர் அறிந்தேயிருக்கவில்லை; அறிந்தவர்களும் சொந்த வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துவதில்லை. இதனால் இஸ்லாம் பலரால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது.

இந்தச் சிறு கட்டுரை இஸ்லாமிய நடைமுறை வாழ்க்கை என்ன என்பதைப் பல தலைப்புகளில் சுருக்கமாக விவரிக்கிறது. இரத்தினச் சுருக்கமாக, அதே நேரத்தில் ஆதாரபூர்வமாக  அமைய வேண்டும் என்பதற்காக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் கூறியுள்ள கருத்துகளை மட்டுமே இதில் இடம்பெறச் செய்துள்ளோம். இதனை நீங்களும் படியுங்கள்; மற்றவர்களுக்கும் படிக்கக் கொடுங்கள். படித்த்தோடு நின்றுவிடாமல் இயன்றவரை சொந்த வாழ்க்கையில் இப்போதே, இந்த நிமிடத்திலிருந்தே பின்பற்ற ஆரம்பித்துவிடுங்கள். உங்களின் வாழ்க்கையில் மட்டுமன்றி, ஒட்டுமொத்த சமுதாய அமைப்பிலேயே பெரும் மாற்றத்தைக் காண்பீர்கள். அல்லாஹ் அனைவரையும் தனது நேரிய வழியில் செலுத்துவானக!

ஒன்றே குலம்; ஒருவனே தேவன்

இதுதான் இஸ்லாத்தின் தாரக மந்திரம். நாம் வசிக்கின்ற இந்தப் புவியை மட்டுமன்றி பிரபஞ்சம் முழுவதையும் படைத்து பரிபாலித்துக்கொண்டிருக்கின்ற தெய்வம் ஏக இறைவனாம் அல்லாஹ் ஒருவனே. அவனே அனைத்துலக மக்களுக்கும் ஆண்டவன். அவனுக்கு இணை துணை இல்லை. மனைவி மக்கள், உற்றார் உறவினர், ஊண் உறக்கம், ஆசாபாசங்கள் எதுவும் கிடையாது.

திருக்குர்ஆன் கட்டளையிடுகிறது: (நபியே! மனிதர்களை நோக்கி) கூறுக: இறைவன் (அல்லாஹ்) ஒருவனே. அவன் எவரது தேவையுமற்றவன். அவன் யாரையும் பெறவும் இல்லை; அவனும் யாராலும் பெற்றெடுக்கப்படவும் இல்லை. அவனுக்கு நிகராக எவருமில்லை. (112:1-4)

இதே போல உலகத்தில் வாழும் அனைவரும் ஒரே தாய் தந்தைக்குப் பிறந்த ஒரே குடும்பத்தின் உறுப்பினர்கள் ஆவர். இன, மொழி, மத, சாதி, நிறம், வட்டாரம் ஆகிய எந்த வேறுபாடுகளும் மனிதர்களிடையே இல்லை.

அல்லாஹ் திருக்குர்ஆனில் தெரிவிக்கன்றான்: மனிதர்களே! உங்களை நாம் ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம். பின்னர் ஒருவர் மற்றவரை அடையாளம் கண்டுகொள்ளும் பொருட்டு உங்களை நாம் பல இனங்களாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கனோம். இறைவனிடம் உங்களிலேயே கண்ணியத்திற்குரியவர் யாரென்றால், இறைவனை அஞ்சி (தீமைகளைக் கைவிட்டு) நடந்துகொள்கின்றவரே ஆவார். (49:13)

ஹஜ்ஜத்துல் வதா எனும் விடைபெறும் ஹஜ்ஜின்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களே! உங்களுடைய இறைவன் ஒருவனே. உங்களுடைய தந்தையும் ஒருவரே. எந்த அரபியருக்கும் அரபியரல்லாதவரைவிட, எந்த அரபியரல்லாதவருக்கும் அரபியரைவிட எந்தச் சிறப்பும் கிடையாது; எந்த வெள்ளையருக்கும் கருப்பரைவிடவோ, எந்தக் கருப்பருக்கும் வெள்ளையரைவிடவோ எந்தச் சிறப்பும் கிடையாது; தீமைகளைக் கைவிட்டு இறைவனுக்கு அஞ்சி வாழ்வதில் தவிர! (அஹ்மத்)

குழந்தைப் பருவ வாழ்க்கை

திருமணமான தம்பதியர் அடுத்து ஆவலுடன் எதிர்பார்ப்பது குழந்தைச் செல்வத்தைத்தான். ஆனால், குழந்தைச் செல்வம் என்பது அனைவருக்கும் கிடைத்துவிடக்கூடியதன்று. இறைவன், தான் நாடுகின்றவர்களுக்கு மட்டுமே இந்தச் செல்வத்தை வழங்குகின்றான்.

திருக்குர்ஆன் தெரிவிக்கின்றது:

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. தான் நாடுகின்றவற்றை அவன் படைக்கின்றான். தான் நாடுகின்றவர்களுக்கு பெண்மக்களை மட்டும் அருள்கின்றான். தான் நாடுகின்றவர்களுக்கு ஆண்மக்களை மட்டுமே அவன் அருள்கின்றான். அல்லது ஆண்களையும் பெண்களையும் கலந்து வழங்குகின்றான். தான் நாடுகின்றவர்களை குழந்தைப் பேறற்றவர்களாக அவன் ஆக்கிவிடுகின்றான். (42:49,50)

இதனால் குழந்தைகளை, அதிலும் நல்ல குழந்தைகளை வழங்கிடுமாறு தம்பதியர் அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக்கொண்டே இருக்க வேண்டும். இறைத்தூதர் ஸகரிய்யா (அலை) அவர்களுக்குக் குழந்தைச் செல்வம் தாமதமாகிக்கொண்டே போனபோது, இவ்வாறு அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள் எனத் திருக்குர்ஆன் கூறும்: ரப்பி ஹப் லீ மின்லதுன்க ஃதுர்ரிய்யத்தன் தய்யிபத்தன்; இன்னக்க சமீஉத் துஆ. (இறைவா! உன் அருளால் எனக்குத் தூய்மையான சந்த்தியைத் தந்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையை செவியேற்பவனாக இருக்கின்றாய்.) (3:38)

குழந்தைச் செல்வம் கிடைத்த பிறகு அது நல்ல தலைமுறையாக வளர்ந்து ஆளாக வேண்டும் எனவும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்துகொண்டே இருக்க வேண்டும். நல்லவர்கள் செய்கின்ற பிரார்த்தனை பற்றி திருக்குர்ஆன் குறிப்பிடுகையில் அவர்கள் இப்படி பிரார்த்திப்பார்கள் என்று தெரிவிக்கின்றது: ரப்பனா ஹப் லனா மின் அஸ்வாஜினா வ ஃதுர்ரிய்யாத்தினா குர்ரத்த அஃயுனின் வஜ்அல்னா லில் முத்தகீன இமாமா (எங்கள் இறைவா! எங்களுக்கு எங்களுடைய துணைகளிலிருந்தும் சந்ததிகளிலிருந்தும் கண் குளிர்ச்சியை வழங்குவயாக! இன்னும் எங்களை இறையச்சமுள்ளோருக்கு வழிகாட்டியாக ஆக்குவாயாக!) (25:74)

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்தவுடன் குழந்தையின் காதில், அஃதான் (பாங்கு) சொல்வது சுன்னத் (நபிவழி) ஆகும். பின்னர் குழந்தை பிறந்த ஏழாவது நாளில் அகீகா விருந்து கொடுத்து, பெயர் சூட்டி, தலைமுடி இறக்குவதும் சுன்னத் ஆகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குழந்தை பிறந்த ஏழாவது நாளில் அகீகா கொடுத்து, பெயர் சூட்டி, தலைமுடி களையப்பட வேண்டும். (திர்மிதி, அபூதாவூத் அஹ்மத், நஸயீ)

நபி (ஸல்) அவர்களுடைய புதல்வி ஃபாத்திமா (ரளி) அவர்கள் ஹசன் (ரளி) அவர்களைப் பெற்றெடுத்தபோது ஹசனின் காதில் நபியவர்கள் தொழுகைக்கான பாங்கைச் சொன்னார்கள். இதை நான் பார்த்தேன் என அபூராஃபிஉ (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (திர்மிதி, அபூதாவூத்)

ஆண் குழந்தைக்கு இரண்டு ஆடுகளும் பெண் குழந்தைக்கு ஓர் ஆடும் அறுத்து, அகீகா விருந்து கொடுங்கள். அதன் மூலம் குழந்தையை ஆபத்திலிருந்து அகற்றுங்கள் என நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (திர்மிதி, அபூதாவூத், நஸயீ)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: உங்களின் பெயர்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான பெயர் அப்துல்லாஹ் மற்றும் அப்துர் ரஹ்மான் (போன்றவை) ஆகும். நபிமார்களின் பெயர்களைச் சூட்டுங்கள். (அபூதாவூத்)

டுத்து குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களைச் சொல்லித் தரவேண்டும். எப்படி பேச வேண்டும்; எப்படி சாப்பிட வேண்டும்; எப்படி குடிக்க வேண்டும்; பிறருடன் எப்படிப் பழக வேண்டும் என எல்லா விஷயங்களையும் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுத்து பழக்கப்படுத்திட வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சிறுவராக இருந்த உமர் பின் அபீசலமா (ரளி) அவர்களிடம் கூறினார்கள்: சாப்பிடும்போது அல்லாஹ்வின் பெயர் சொல்ல வேண்டும். வலது கரத்தால் சாப்பிட வேண்டும். உணவுத் தட்டில் முன்பக்கத்திலிருந்து எடுத்து உண்ண வேண்டும். (புகாரீ, முஸ்லிம்)

உண்ணும் உணவில் பரக்கத் (வளம்) ஏற்பட வேண்டுமானால், சாப்பிடுவதற்கு முன்பும் சாப்பிட்ட பிறகும் இரு கைகளையும் கழுவிக்கொள்வதுடன் வாயைக் கொப்புளித்துக்கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள். (திர்மிதி, அபூதாவூத்)

மேலும், நபி (ஸல்) அவர்கள் மூன்று விரல்களால் சாப்பிடுவார்கள். சாப்பிட்டு முடித்து கைவிரல்களைத் துடைப்பதற்குமுன் சூப்பிக்கொள்வார்கள். (முஸ்லிம்)

சிறுவர்களைத் தொழச்சொல்லியும், நோன்பு வைக்கச்சொல்லியும் பழக்க வேண்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்: உங்கள் மக்கள் ஏழு வயதினராக இருக்கும்போது தொழச்சொல்லி தூண்டுங்கள்; பத்து வயதினராகியும் தொழுகையை அவர்கள் நிறைவேற்றாவிட்டால் அவர்களை அடியுங்கள். படுக்கையில் அவர்களைப் பிரித்து வையுங்கள். (அபூதாவூத்)

ஆண் குழந்தைகளானாலும், பெண் குழந்தைகளானாலும் அவர்களுக்கு வேண்டிய மார்க்க மற்றும் உலகவியல் கல்வியைப் பெற்றோர்கள் வழங்கிட வேண்டும். ஏனெனில் கற்ற்றிந்தவர்களாலேயே அல்லாஹ்வை அஞ்சி வாழ முடியும். திருக்குர்ஆன் கூறுகிறது: நிச்சயமாக அல்லாஹ்வுடைய அடியார்களில் அவனை அஞ்சி நடப்பவர்களெல்லாம் கற்றறிந்தவர்கள்தான். (35:28)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கல்வியைத் தேடுவது அனைத்து முஸ்லிம்களுக்கும் கடமையாகும். (பைஹகீ). மற்றொரு நபிமொழி இவ்வாறு கூறுகிறது: ஒரு தந்தை தம் பிள்ளைக்கு வழங்கும் பரிசுகளில் நல்லொழுக்கத்தைவிடச் சிறந்த பரிசு இருக்க முடியாது. (திர்மிதி)

குழந்தை வளர்ப்பிலும் அன்பு காட்டுவதிலும் ஆண் குழந்தை, பெண் குழந்தை என்ற பாகுபாடு கூடாது. எல்லாக் குழந்தைகளின் நலனிலும் எதிர்கால வாழ்க்கையிலும் கவனம் செலுத்துவது பெற்றோரின் கடமையாகும். நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்: யாருக்கு ஒரு பெண் குழந்தை இருந்து, அக்குழந்தையை உயிருடன் புதைத்துவிடாமலும் இழிவுபடுத்தாமலும் அதைவிட ஆண்குழந்தைக்கு முதலிடம் அளிக்காமலும் வளர்த்து ஆளாக்குகின்றாரோ அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் நுழையவைப்பான். (அபூதாவூத்)

இளமைப் பருவ வாழ்க்கை

மனிதனின் வாழ்க்கையில் அவனது இளமைப் பருவமே முக்கியமானதாகவும் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கக்கூடியதாகவும் இருக்கிறது. இதனால்தான் இளமைப் பருவத்தை இறைவழிபாட்டிலும் பொதுத் தொண்டிலும் நற்குணங்களைப் பேணிநடப்பதிலும் செலவிட வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது. தவறான வழிகளில் செல்ல இப்பருவம் அதிக வாய்ப்பளித்துவிடுவதால் எச்சரிக்கையோடு இளைஞர்கள் நடந்துகொள்ள வேண்டும் என இஸ்லாம் அறிவுறுத்துகிறது.

நபி (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள்: நாளை மறுமையில் அல்லாஹ்வின் (அர்ஷ்) நிழலைத் தவிர வேறு நிழலே இருக்காது. அந்நாளில் ஏழு பேருக்கு அல்லாஹ் தன் நிழலைத் தருவான். அவர்களில் ஓர் இளைஞனும் அடங்குவான். அவன் இறை வழிபாட்டிலேயே வளர்ந்திருப்பான். (புகாரீ, முஸ்லிம்)

இளைஞர்கள் தங்களை ஆபத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ளத் தேவையான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் இஸ்லாம் கூறுகிறது. நபித்தோழர் கலீஃபா உமர் (ரலி) அவர்கள் இது தொடர்பாக்க் கூறுகையில், “உங்களுடைய மக்களுக்கு நீச்சல், அம்பெய்தல் ஆகியவற்றைக் கற்றுக்கொடுங்கள் என்று குறிப்பிட்டார்கள். (அஹ்மத்)

இளைஞர்கள் மட்டுமன்றி அனைவருமே நற்குணங்களைக் கட்டிக்காப்பவர்களாகவும், கெட்ட குணங்களிலிருந்து தம்மைக் காத்துக்கொள்ளக்கூடியவர்களாகவும் இருத்தல் அவசியம். பொறுமை, சகிப்புத் தன்மை, பிறருக்கு விட்டுக்கொடுத்தல், பிறர் நலம் நாடுதல், நாணம், நிதானம், மென்மை போன்ற நற்குணங்களைப் பேணி நடக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள்: உங்களிலேயே சிறந்தவர் யாரெனில், நல்ல குணங்களைக்கொண்டவர்தான். (புகாரீ, முஸ்லிம்)

இதே போல கோபம், பொறாமை, கோள் சொல்லுதல், கர்வம், பேராசை, பிறருக்குக் கேடு நினைத்தல் போன்ற கெட்ட குணங்களிலிருந்து விலகி வாழ வேண்டும். “உண்மையான இறைநம்பிக்கையாளர் பிறரைக் குறைகூறக்கூடியவராகவும், சபிக்கக்கூடியவராகவும், கெட்ட குணங்கள் உடையவராகவும் இருக்கமாட்டார் என நபி (ஸல்) அவர்கள் தெரிவித்துள்ளார்கள். (திர்மிதி, பைஹகி)

இல்லற வாழ்க்கை

இல்லறம் நல்லறமாக மாறுவது நல்ல துணை அமைவதைப் பொருத்தே உள்ளது. எனவேதான், ஆணாயினும் பெண்ணாயினும் நல்ல துணையைத் தேர்வு செய்ய வேண்டும் என இஸ்லாம் வழிகாட்டுகிறது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பெண்ணை நான்கு நோக்கங்களுக்காக மணமுடிக்கப்படுகிறது. அவளிடமுள்ள செல்வத்திற்காக, அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக, அவளது அழகிற்காக, அவளிடமுள்ள மார்க்க ஒழுக்கத்திற்காக. இவற்றில் மார்க்க ஒழுக்கமுள்ள பெண்ணை மணந்து (வாழ்க்கையில்) வெற்றி பெறுங்கள். (புகாரீ, முஸ்லிம்)

நல்ல பெண், அல்லது ஆணைத் தேர்ந்தெடுத்த பிறகு திருமணத்தை சுன்னத்தான முறையில் நடத்திட வேண்டும். மணப்பெண்ணுக்கு மஹ்ர் எனும் மணக்கொடை செலுத்துவது கட்டாயமாகும். “நீங்கள் (மணமுடித்துக்காள்ளும்) பெண்களுக்கு அவர்களின் மஹ்ரை மனமுவந்து அளித்துவிடுங்கள் எனத் திருக்குர்ஆன் கட்டளையிடுகின்றது. (4:4)


மணமகளுக்கு அளிக்க வேண்டிய சுன்னத்தான மஹ்ர் எவ்வளவு என்பதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடைய துணைவியருக்கும் சரி; பெண் மக்களுக்கும் சரி 12 ஊக்கியாவைவிட (1468 கிராம் வெள்ளி) அதிகமாக மஹ்ர் வைத்ததில்லை என்பதை நான் அறிவேன் என உமர் பின் கத்தாப் (ரளி) அவர்கள் தெரிவித்துள்ளார்கள். (திர்மிதி, அஹ்மத், அபூதாவூத், நஸயீ)

Monday, July 04, 2016

சொர்க்கம் நோக்கிய பயணம் - الرَّحْلة إلى الجنَّةல்வியைத் தேடிச் செல்வதன் மகிமை குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடும்போது ஒரு நீண்ட ஹதீஸில் இப்படிச் சொன்னார்கள்:
ومن سلك طريقا يلتمس فيه علما سهّل الله له به طريقا إلى الجيّة.

கல்வியைத் தேடி ஒருவர் ஒரு பாதையில் நடந்தால், அதன்மூலம் அவருக்குச் சொர்க்கம் செல்லும் பாதையை அல்லாஹ் எளிதாக்குகின்றான். (முஸ்லிம் - 5231)

இதிலிருந்து, கல்வி நோக்கிய பயணம், சொர்க்கம் நோக்கிய பயணமாகும் என்று அறியமுடிகிறது.

இதற்குக் காரணம் என்ன? இறைவேதத்தையும் இறைத்தூதரின் வழிமுறையையும் கற்றறிந்து, இறைவன் படைத்துள்ள இயற்கைச் செல்வங்களை நுணுகி ஆராயும்போது, அது மனிதனுக்கு இறையச்சத்தை ஊட்டும்; நற்பண்புகளை வளர்க்கும்; ஒழுக்கமிக்க உயர் வாழ்க்கைக்கு வழிகாட்டும்.

அந்த வழியில் நடப்பவர் சொர்க்கத்தை அடைவார் என்பதில் என்ன சந்தேகம் இருக்க முடியும்? சொல்லுங்கள்!

என்ன நடக்கிறது?

ஆனால், இன்று என்ன நடக்கிறது? உலக நடப்பைச் சற்று ஆழமாக நோக்கினால் ஒரு உண்மை வெளிச்சத்திற்கு வரும். ஆம்! இன்று உலக நாடுகளை ஆள்வது மன்னர்களோ பிரதமர்களோ அல்லர்.

அவர்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் மூன்று பிரதான சக்திகளே அவர்களை இயக்கிவருகின்றன. 1. அறிவியல் (العلوم); 2. தொழில் நுட்பம் (تِقْنِيّة); 3. கார்ப்பரேட் கம்பெனிகள் (شركات متّحدة). இவை ஒவ்வொன்றிலும் நன்மைகள் இருந்தாலும் தீமைகளே அதிகம். பயன்படுத்தும் நோக்கம், பயன்பாட்டு முறை ஆகியவற்றைப் பொறுத்தே பலனைத் தீர்மானிக்க முடியும்.

அறிவியலை எடுத்துக்கொள்வோம். அறிவியல் என்றால் என்ன? நிரூபணத்தின் அடிப்படையிலும் பரிசோதனை முறைகளைக் கொண்டும் இயற்கை உட்பட உலகத்திலுள்ள அனைத்தின் அமைப்பு, இயக்கம் ஆகியவற்றை விளக்கும் அறிவுத் துறையே அறிவியல். அல்லது விஞ்ஞானம் எனப்படுகிறது.

அதாவது இறைவனின் படைப்புகளை, அவை படைக்கப்பட்ட முறையை, அதன் இயக்கத்தை இயக்க விதியை ஆராய்ந்து அறிவதுதான் அறிவியல். படைப்புகளின் நுணுக்கங்களை அறியும்போது படைப்பாளனின் பேராற்றல் மனிதனை வியக்கவைக்கும். அவனுடைய ஆணைகளுக்கு மாற்றமாக நடந்தால், கடுமையாகத் தண்டித்துவிடுவான் என்ற அச்சம் பிறக்கும். அது மனிதனைப் பக்குவப்படுத்தும்; புனிதனாக்கும்.

திருக்குர்ஆன் கூறும் அழகைப் பாருங்கள்:

வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறிமாறி வருவதிலும் அறிவுடையோருக்குச் சான்றுகள் பல உள்ளன. அவர்கள் நின்ற நிலையிலும் அமர்ந்த நிலையிலும் ஒருக்களித்துப் படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைவுகூருவார்கள். -அதாவது நின்று தொழுவார்கள்; முடியாவிட்டால் அமர்ந்து தொழுவார்கள்; அதற்கும் முடியாதபோது படுத்துக்கொண்டு தொழுவார்கள்-

வானங்களும் பூமியும் படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள். (இறுதியில் இவ்வாறு கூறுவார்கள்:) எங்கள் இறைவா! இவற்றை நீ வீணாகப் படைக்கவில்லை; நீ தூயவன்; நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக! (3:190,191)

ஆராய்ச்சி, மனிதனை ஆன்மிகத்திற்குக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும். படைப்புகளை ஆராய்ந்து, படைப்பாளனிடம் சரணடைய வேண்டும். அறிவியல் ஆன்மாவைத் தூய்மைப்படுத்த வேண்டும். அதுதான், அறிவியலால் விளையும் உன்னதமான பலன்.

எனவேதான், “இந்த வசனங்களை ஓதிவிட்டு, அவை தொடர்பாகச் சிந்திக்காதவருக்குக் கேடுதான்என நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (ஸஹீஹ் இப்னு ஹிப்பான்)

இன்றைக்கு, புதிய கோள் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார்கள் அறிவியலாளர்கள். அதன் நீள-அகலத்தையும் தட்ப வெப்பத்தையும் தோராயமாக அளந்து கூறுகிறார்கள். அதுவும் செயற்கைக் கோளின் துணையோடு!

அத்தோடு முடிந்து, அவர்களது ஆராய்ச்சியின் பலன். படைத்தவனைப் பற்றி எண்ணிக்கூடப் பார்ப்பதில்லை. சொல்லப்போனால், விஞ்ஞானிகளில் கணிசமானோர் கடவுள் மறுப்பாளர்கள். தங்களின் சுய ஆற்றலாலேயே சாதனை படைத்தோம் என்ற இறுமாப்பாளர்கள். இந்த அறிவியலால் என்ன இலாபம்?

தொழில் நுட்பம்

இன்று வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தால் மனிதன் நேரத்தை மிச்சப்படுத்த முடிகிறது; உடலுலைப்பு குறைகிறது. அரசவை முதல் அடுப்பங்கரை வரை வேலைகள் சுலபமாகின்றன. நினைத்தவுடன் நினைப்பவருடன் பேச முடிகிறது. நொடிப்பொழுதில் நம் எண்ணங்கள் உலகைச் சுற்றிவர முடிகிறது.

ஆனால், உறவுகள் உறங்குகின்றன. பாசம் பழுதாகிப்போய் கிடக்கிறது. பெற்ற பிள்ளையைத் தூக்கிக் கொஞ்ச நேரமில்லை. எதிரில் இருப்பவன் சொல்லும் சலாமுக்குப் பதில் இல்லை; யாருடனோ கருவியில் சலாம், கலாம், மனாம் எல்லாம் நடக்கிறது. இயந்திரமே வாழ்க்கையாகி, இவனே இயந்திர மனிதனாகிவிட்டான். நிஜம் நிழலாகி, நிழல் நிஜமாகிவிட்ட இந்தத் தொழில்நுட்பம், உண்மையில் நுட்பம்தானா?

தந்தை ஸ்மார்ட்போன் வாங்கித் தரவில்லை என்பதற்காகத் தற்கொலை செய்ய தூக்குக் கயிறை கழுத்தில் மாட்டிக்கொண்டிருக்கும் பத்து வயது சிறுவனைப் பார்க்கிறான் ஓர் இளைஞன். பார்த்தவுடன் காப்பாற்ற கால்கள் ஓடாமல், படம் பிடித்து வாட்ஸ்அப்பில் இறக்கிவிட ஸ்மார்ட்போனைத் தேடுகின்றன இளைஞனின் கைகள். மனிதம் எங்கே போயிற்று?

கார்ப்பரேட் கம்பெனிகள்

வணிகக் குழுமமும் அக்குழுமத்தின் மனைவி மக்களும் உல்லாச வாழ்க்கை வாழ வேண்டும் என்பதுதான் கார்ப்பரேட்களின் ஒரே இலக்கு. நுகர்வோர், நோயாளிகள், குழந்தைகள், ஏழைகள் என யாரைப் பற்றியும் அவர்களுக்குக் கவலை இல்லை.

நச்சு கலந்த உணவுகள், ரசாயணம் கலந்த தானிய விதைகள், பயங்கரமான பக்க விளைவுகளை உண்டாக்கும் மருந்துகள், அணுக்கதிர்களை வெளியிடும் தொழிற்சாலைகள், சுற்றுச் சூழலைக் கெடுக்கும் வாகனங்கள்... என எந்தப் படுகொலையும் செய்ய இந்தக் கம்பெனிகள் அஞ்சுவதில்லை.

பணம்! பணம்! பணம்! அது ஒன்றுதான் இவர்களின் இலட்சியம். மனசாட்சியே இல்லாமல் இயற்கை மருத்துவம், இயற்கை விவசாயம், இயற்கைச் செல்வங்களான நிலம், நீர், காற்று ஆகிய அனைத்தையும் அழித்துக் கொள்ளையடிக்கும் இவர்களிடம் மனித நேயம் எப்படி இருக்கும்?

ஆக, அறிவியலாகட்டும்! தொழில் நுட்பமாகட்டும்! பெரு வணிகங்களாகட்டும்! எல்லாமே இறையச்சத்தின் அடிப்படையில் அமையும்போதுதான் நன்மை பயக்கும்! சொர்க்கத்தை நோக்கி அழைத்துச் செல்லும்.

இதனாலேயே, மார்க்கக் கல்வி கலந்த உலகக் கல்வியை நம் குழந்தைகளுக்கு ஊட்ட வேண்டும் என்கிறோம்.

___________________________