Saturday, January 29, 2022

பன்முக வித்தகர் டிஜேஎம் ரியாஜி மறைவு

பன்முக வித்தகர் டிஜேஎம் ரியாஜி மறைவு
∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆

திருநெல்வேலி பேட்டை என்றவுடன் எங்களுக்கெல்லாம் நினைவில் வருவது மெளலானா TJm சலாஹுத்தீன் ரியாஜி அவர்கள் தான்.

பேட்டை மத்ரஸா வில் கல்வி கற்று பட்டம் வாங்கியதுடன் அங்கேயே ஆசிரியராகப் பணியாற்றி, பின்னர் தனியாக ஒரு மத்ரஸா தொடங்கி நடத்தியதுடன், எழுத்து, பேச்சு ஆகிய துறைகளிலும் சிறந்து விளங்கிய மூத்த மார்க்க அறிஞர் தான் அவர்.

மாணவர்களுக்கு மட்டுமன்றி, இளம் ஆலிம்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உற்சாகமும் நம்பிக்கையும் ஊட்டி, ஊக்கத்தோடு செயல்பட வழிகாட்டிய பெருமகனார் இன்று மறைந்துவிட்டார்.

இத்தகைய தகுதிவாய்ந்த பெரியவர்கள் ஒவ்வொருவராக விடைபெறும் போதெல்லாம், எதிர்காலம் பற்றிய அச்சம் நம்மைத் தொற்றிக்கொள்வதைத் தவிர்க்க முடிவதில்லை. 

அன்னாரின் மறுமை வாழ்வு வசந்தமிக்கதாக அமைய அல்லாஹ் அருள் புரிவானாக எனப் பிரார்த்திப்போம்.

அத்துடன் அவர்கள் விட்டுச்சென்ற பணிகளைச் சிரமேற்கொண்டு சீராகவும் சிறப்பாகவும் செயல்படுகின்ற நல்வாய்ப்பை நமக்கெல்லாம் இறைவன் வழங்குவானாக! எனவும் பிரார்த்திப்போம். 

அல்லாஹ் கருணை புரிவானாக!

அன்புடன் உங்கள்
கான் பாகவி
28.01.2022

Tuesday, January 11, 2022

இன்றைய தினமணியில் (10.01.22) வெளிவந்துள்ள செய்தி

இன்றைய தினமணியில் (10.01.22) வெளிவந்துள்ள செய்தியால் எந்த முஸ்லிமும் அதிர்ச்சி அடையப் போவதில்லை. காரணம், 15 நூற்றாண்டு நெடிய வரலாற்றில் இதுபோன்ற எத்தனையோ வித்தைகளை முஸ்லிம்கள் கண்டுள்ளனர். ஏனெனில், இஸ்லாத்தில் இவர்கள் இருந்ததாகக் கருதப்படும் நாட்களிலும் இவர்கள் முஸ்லிம்களாக வாழ்ந்தோர் அல்லர்.

இவர்கள் அமைப்பு தொடங்குவதற்குச் சொல்லும் காரணம்தான் வேடிக்கையானது. ஆம்! முஸ்லிம்களிடமிருந்து இன்னல்களைச் சந்திக்கிறார்களாம்.அவை அளவுக்கு அதிகமாக உள்ளதாம்.உடலளவிலும் மனத்தளவிலும் அச்சுறுத்தப்படுகிறார்களாம்! இதையெல்லாம் விட, சமூகத்தில் வாழ்வதற்கான அனைத்து நிலைகளிலும் புறக்கணிக்கப்படுகறார்களாம்!
இது உண்மையாகவே இருந்தாலும், இஸ்லாத்திலிருந்து வெளியோறிவிட்டு, முஸ்லிம்களின் அடையாளமான இஸ்லாமியப் பெயர்களிலேயே இருந்துகொண்டு, சமூகத்தோடு உறவாடிக்கொண்டே இருந்தால், பிறப்பு, இறப்பு, திருமணம் போன்ற நிலைகளில் , நீங்கள் முஸ்லிம்கள் என்று நம்பி மற்றவர்கள் ஏமாந்து போவார்களா இல்லையா?

ஆகவே, நீங்கள் செய்ய வேண்டியது , பெயர் உட்பட முஸ்லிம் அடையாளங்களைத் துறந்து விடுங்கள். சமயமே வேண்டாம் என்றான பிறகு சமய அடையாளம் மட்டும் எதற்கு?
அவ்வாறு மட்டும் நீங்கள் செய்துவிட்டால் , உங்களை யாரும் சீண்டமாட்டார்கள்; சீந்தவும்மாட்டார்கள்.

நீங்களே சொல்லிவிட்டீர்கள்: முன்னாள் முஸ்லிம்கள்- என்று. அப்படியானால் இன்னாள் முஸ்லிம்கள் அல்லர். பிறகு எதற்கு பெயரும் அடையாளமும் முன்னாள்?

Thursday, January 06, 2022

மூத்த மார்க்க அறிஞர்கள் தலைமுறை விடைபெற்றது

மூத்த மார்க்க அறிஞர்கள்
தலைமுறை விடைபெற்றது
~~~~~~~~~~~~~~~~~~~~
2022 ஜனவரி 6ஆம் தேதி வியாழக்கிழமை அதிகாலை வேளையில் , பிரபல மூத்த இஸ்லாமிய மார்க்க அறிஞர் மெளலானா பி.எஸ்.பி. ஸைனுல் ஆபிதீன் பாகவி அவர்கள் இறந்துவிட்டார்கள். 

சென்னையில் அன்னாரின் புதல்வர் மெளலவி பரகத் அலி பாகவி இல்லத்தில் அன்னாரது உடலைப் பார்த்தபோது ஏனோ தெரியவில்லை; தேம்பித்தேம்பி அழுதேன். வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியின் முன்னாள் பேராசிரியரான பிஎஸ்பி ஹழள்ரத் அவர்களிடம் பயின்ற பல்லாயிரம் மாணவர்களில் இந்த எளியோனும் ஒருவன்.

கல்லூரியில் நான் கற்றபோதும் சரி; அதே கல்லூரியில் 18 ஆண்டுகள் ஆசிரியராக நான் பணியாற்றிய போதும் சரி! என்மீது தனி அக்கறை காட்டிய பெருமகனார் அவர். குறிப்பாக பேச்சுத் துறையில் எனது தயக்கத்தைப் போக்கி ஊக்கமளித்து முன்னுக்கு வர ஊக்குவித்த ஆசிரியர் தந்தை அவர்.

அவ்வாறே, எழுத்துத் துறையில் என்னை ஊக்குவித்துச் சிறந்த  சில வழிகாட்டுதல்களை வழங்கிய பயிற்சியாளர் அவர். சுருஙகக்கூறின்  அக்கறையுள்ள ஒரு தந்தையின் இடத்தை வகித்தவர் என்பதாலோ என்னவோ அறியாமல் வந்தது கண்ணீர்.

ஆக, பேச்சு, எழுத்து, மொழிபெயர்ப்பு...எனப் பல்துறை வழிகாட்டுதல்களை வழங்கிய வள்ளல் மறைந்துவிட்டார் என்பேன்.

இப்போது என்னவென்றால், தமிழகத்தில் வாழ்ந்த மூத்த தலைமுறை மார்க்க அறிஞர்கள் வரிசை முற்றுப்பெற்றுவிட்டதோ என்ற அச்சம் என் போன்றோரை வாட்டுகிறது. 

ஆம்! எது குறித்துக் கேட்டாலும் விளக்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களைப் பார்ப்பதே அரிதாகிவருகிறது. அதுமட்டுமன்றி, நாலு எழுத்து கற்றவுடனே எல்லாம் அறிந்துவிட்டோம் எனும் மனப்பான்மை இன்று அதிகமாகவே காணப்படுகிறது.ஆனால், அந்த நிறைகுடங்கள் எப்போதும் ததும்பியதில்லை.

மறைந்த மேதைகளின் மறுமை வாழ்வு செழிக்க வல்லமையும் மாண்புமிக்க இறைவன் அருள் புரிவானாக எனப் பிரார்த்திப்போம். அவர்களின் அறிவாற்றல், அடக்கம், எளிமை, புகழ் விரும்பாமை, சமூக அக்கறை, இறையச்சம் முதலான உயர் தன்மைகளை நமக்கும் அருள அல்லாஹ்வைப் பணிந்து வேண்டுவோம்.

அன்புடன் உங்கள்
கான் பாகவி
06.01.2022