Monday, January 28, 2013

விஸ்வரூபம் அல்ல; விஷமரூபம்


கான் பாகவி

கான் சாஹிப் (மருதநாயகம்) படத்தை எடுக்க வக்கில்லாத கமல், தன் பெயரிலேயே இஸ்லாத்தை (கமால் ஹசன்) ஒட்டிக்கொண்டு முஸ்லிம்களுக்கு வேட்டு வைக்கிறார் விஸ்வரூபத்தில்.


`விஸ்வரூபம்எனும் எழுத்தே அரபி ஸ்டைலில் வெளிவந்தபோதே இதில் ஏதோ வில்லங்கம் இருக்கிறது என்பது பலருக்கும் புரிந்தது. கதையும் காட்சிகளும் அரசல் புரசலாக வெளிவந்த வேளையில் தமிழக முஸ்லிம் கூட்டமைப்பு கமல் வட்டாரத்தைத் தொடர்பு கொண்டு, படத்தை எங்களுக்குப் போட்டுக்காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

அப்போதெல்லாம் தத்துவம் பேசிய கமல் தரப்பினர், படத்தைப் போட்டுக்காட்டுவதை இழுத்தடித்தனர். முஸ்லிம்களை உயர்வாகக் காட்டியிருக்கிறேன் -அதாவது இந்திய உளவுத்துறையான `ராவின் உயர் அதிகாரியான ஒரு முஸ்லிமாக நடித்துள்ளேன்- என்றும் இதற்காக நீங்கள் சந்தோஷப்படுவீர்கள்; அப்போது பிரியாணி விருந்து நடத்தப்போகிறீர்கள் என்றும் நக்கலாகப் பதிலளித்தார் கமல்.

இறுதியாகவேறு வழியின்றி 21.01.2013 அன்று போட்டுக் காட்டியுள்ளார்கள். படத்தைப் பார்த்த முஸ்லிம் தலைவர்கள், முஸ்லிம்களின் மத உணர்வுகளையும் சமூக மரியாதையையும் கடுமையாகப் பாதிக்கக்கூடிய பல காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளன என்பதைச் சுட்டிக்காட்டினார்கள். இக்காட்சிகளை அகற்றிவிட்டே படத்தை வெளியிட வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார்கள்.

அத்துடன் தமிழக அரசிடமும் முஸ்லிம்களின் கூட்டமைப்பு முறையிட்டது. உடனே தமிழக அரசு இரண்டு வார காலத்திற்குப் படத்தை வெளியிட தடை விதித்தது.

அதையடுத்து படக்குழுவினர் சென்னை உயர்நீதிமன்றத்தில், தடையை நீக்க உத்தரவிடுமாறு வழக்குத் தொடுத்தனர். நீதிபதி சனிக்கிழமை (26.01.2013) விஸ்வரூபம் படத்தைப் பார்த்திருக்கிறார். இனி விசாரணை நடைபெறும். தீர்ப்பு வெளியாகும்.

பல இடங்களில் தடை


இதற்கிடையில் படம் வெளியாகி சில இடங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. பல மாநிலங்களில் பல நகரங்களில் படம் வெளியிட தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத் போன்ற முஸ்லிம் நாடுகளில் விஸ்வரூபத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பல ஊர்களிலும் படத்திற்குத் தடை உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தின் அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்படத் துறையினர், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் விஸ்வரூபம் தொடர்பாகக் கருத்துகளை வெளியிட்டுவருகின்றனர்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி, வி.சி. தலைவர் தொல்திருமாவளவன் போன்றோர் படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். வழக்கம்போல் பா.ஜ.க. படத்திற்கு ஆதரவு. நடிகர் ரஜினிகாந்த்கூட படத்தை முழுமையாகத் தடை செய்யாமல், ஆட்சேபகரமான காட்சிகளை நீக்கிவிட்டு வெளியிட வேண்டும் என்றுதான் கூறியிருக்கிறார்.

ஆனால், முஸ்லிம்களின் நண்பனாக நடித்து அரசியலில் வளர்ந்த பா.ம.க. தலைவர் ராமதாஸ் பா.ஜ.க.வைப்போல் அதிரடியாகப் படத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதை முஸ்லிம்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். படத்திற்குத் தடை விதித்திருப்பது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானதாகும்! ராமதாஸ் சொல்கிறார்.

சினிமாக்காரர்கள் பொதுவாக, 100 கோடி செலவு செய்யப்பட்டிருக்கிறதே என்றுதான் கவலைப்படுகிறார்களே தவிர, உலகின் 161 கோடி முஸ்லிம்களின் மதஉணர்வு காயப்படுத்தப்பட்டிருப்பதை ஒருவரும் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. இயக்குநர் சங்கத் தலைவர் பாரதிராஜா ரொம்பவே பேசியிருக்கிறார்.

படத்தில் என்னதான் இருக்கிறது?


படத்தின் கதையை இங்கே நான் விவரிக்க விரும்பவில்லை. கதையோட்டமும் கதையின் கருவும் என்ன சொல்கிறது என்பதையே இங்கு சுட்டிக்காட்ட விழைகிறேன். இதோ சில காட்சிகள்:

பின்னணிக் குரலில் படத்தின் தொடக்கத்தில் ஒலிக்கும் குரல் அரபிமொழியில் பேசுகிறதாம்! அதன் பொருள்: முஸ்லிம் அல்லாதோரைக் கொல்ல வேண்டும். இப்படிச் சொன்னபிறகே, முஸ்லிம்களில் ஒருவர் மற்றவரை நலம் விசாரிக்கிறாராம்!

இந்திய உளவுத் துறையான `ராவின் உயர் அதிகாரியாக கமல் என்ற முஸ்லிமை அமெரிக்காவிற்கு இந்திய அரசு அனுப்புகிறது. ஆனால், அவர் ஒரு கட்டத்தில், நான் முஸ்லிமாகவும் இருப்பேன்; இந்துவாகவும் இருப்பேன் என்று வசனம் பேசுகிறார். (இதைத்தான் முஸ்லிம்களுக்குப் பெருமை சேர்த்திருக்கிறேன் என்று கமல் சொன்னார்போலும்.)

தாலிபான்களின் தலைவர் முல்லா உமர் நச்சு மாத்திரைகளை புறா காலில் கட்டிவிட்டு நியூயார்க் அனுப்புகிறாராம்! அது நகரமெங்கும் சுற்றி கிருமிகளைப் பரப்புகின்றதாம்! (அந்தப் புறாவை கிருமி தாக்கவில்லை என்பதுதான் பெரிய ஜோக்.)

நியூயார்க் நகரில் அணுகுண்டு வைத்து அழிக்க முஸ்லிம்கள் (தாலிபான்கள்) திட்டமிடுகின்றனராம்! நைஜீரியாவைச் சேர்ந்த அப்பாசி அதை வெடிக்கவைக்க முனையும்போது கமல் கண்டுபிடித்துவிடுகிறார். கும்பகோணம் பாப்பாத்தியான அவரது காதலி கமலுடன் சேர்ந்து அணுகுண்டை அழிக்க முயல்கின்றனர்.

இந்த அரும்பெரும் தொண்டைப் பார்க்கும் அமெரிக்க அதிகாரி ஒருவர் பேசும் டயலாக்தான் உச்சகட்டம். அவன் சொல்கிறான்: இஸ்லாம் என்ற தீவிரவாதத்தை அழிக்கப் பிறந்தவர்கள்தான் நாங்களும் நீங்களும். நீங்கள் எங்கள் ஜீன். (அதாவது அமெரிக்க யூத வமிசாவளியில் வந்தவர்கள்தான் ஆரியர்கள் என்ற பார்ப்பனர்கள்.)

ஆப்கனில் புகுந்து தீவிரவாதிகளைத் தீர்த்துக்கட்ட முயலும் கமல் தாலிபான்களிடம் சிக்கிவிடுகிறார். அப்போது முல்லா உமர் தடுக்கிறார். அவர் சொல்கிறாராம்: இவன் (கமல்) தமிழ் ஜிஹாதீ; 5 லட்சம் பெறுமானமுள்ளவன். (அதாவது தமிழ்நாட்டில் தாலிபான்கள் தமிழ் முஸ்லிம்களிடம் ஜிஹாதைப் பரப்புகின்றனர்.)

தமிழ் பேசும் முல்லா உமரிடம் (நம்புங்கள் இந்தப் பொய்யை) கமல் கேட்கிறாராம்! உங்களுக்கு எப்படி தமிழ் தெரியும்? அதற்கு உமர் சொன்ன பதில்தான் விஷமத்தனமானது: நான் தமிழகத்தில் மதுரையிலும் கோவையிலும் 2 ஆண்டுகள் தங்கியிருந்தேன். (புரிகிறதா? மதுரையிலும் கோவையிலும் தாலிபான்களிடம் பயிற்சி பெற்ற தமிழ் முஸ்லிம்கள் உள்ளனராம்!)

சுருங்கக் கூறின் இந்திய `ராஅமைப்பின் அதிகாரியான கமல், அமெரிக்காவின் சி.ஐ.ஏ.வின் ஏஜெண்டாக (கைப்பாவையாக) செயல்பட்டு முஸ்லிம் தீவிரவாதிகளை அழிக்கிறார். உண்மையிலேயே தீவிரவாதிகளை அழிக்கும் எண்ணம் இருந்தால் சினிமாவில் `டூப்போடுவதை விட்டுவிட்டு, பக்கத்திலுள்ள ஆப்கானிஸ்தான் சென்று அவர்களை வீழ்த்துவதுதான் உண்மையான வீரம்! உண்மையான விஸ்வரூபம்.

படத்தின் வெளியீட்டு விழாவிற்காக அமெரிக்கா சென்ற கமல் தன் இரு மனைவியருடன் (கதாநாயகிகளுடன்) செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ளார்.

அதில் கமலின் வீர வசனங்கள் இதோ:

அன்புதான் அல்லாஹ். அன்பின் காரணமாகவே இப்படத்தை எடுத்தேன்; வெறியில் எடுக்கவில்லை. சொத்துகளை விற்றுத்தான் இப்படத்தை எடுத்திருக்கிறேன். கேரளாவில் உள்ள தம்பிமார்கள் (முஸ்லிம்கள்) என்னை ஏற்றுக்கொண்டார்கள்; தமிழ்நாட்டில்தான் எதிர்க்கிறார்கள்.

ஆனால், எர்ணாகுளம், இடுக்கி, பாலக்காடு முதலிய பகுதிகளில் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தியதால் அப்பகுதிகளில் படம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

இன்னொரு விஷயம்: தீவிரவாதிகள் பயன்படுத்தும் சங்கேத மொழியே `அல்லாஹு அக்பர்தானாம்! இம்மொழி உலகெங்கும் ஒலிக்கும்போது இதை இரகசியம் என்று காட்டுவதன்மூலம் என்ன சொல்ல வருகிறார் கமலஹாசன்? ஆக, இது விஸ்வரூபம் அல்ல; விஷமரூபம்.

4 comments:

  1. விஸ்வரூபம்

    விஸ்வரூபம் பற்றி எழுத வேண்டாம் என்று இருந்தேன். அதற்குப் பல காரணங்கள். கஷ்டத்தில் இருப்பவரை மேலும் கஷ்டப்படுத்தக் கூடாது என்ற நல்லெண்ணமும் ஒரு காரணம். இன்னொரு காரணம், நான் இப்போது சினிமாத் துறையில் உள்ளே இருக்கிறேன். அதனால் நான் ஏதாவது சொல்லி வைத்து அது என்னோடு சம்பந்தப்பட்டிருப்பவர்களை எந்த விதத்திலும் பாதித்து விடக் கூடாது. என்னை எதிரியாக நினைப்பவர்கள் அங்கே மிகவும் அதிகம். ஆனால் இதையெல்லாம் மீறி இப்போது எழுதியே ஆக வேண்டும் என்ற எண்ணம் தோன்றிக் கொண்டே இருக்கிறது.

    ஹே ராம், உன்னைப் போல் ஒருவன் என்ற இரண்டு படங்களுக்கும் நான் உயிர்மையில் எழுதியுள்ள விமர்சனங்களே விஸ்வரூபம் படத்துக்கும் பொருந்தும். தெரிந்தோ தெரியாமலோ அறிந்தோ அறியாமலோ கமல்ஹாசனின் படங்களில் இஸ்லாமிய விரோதப் போக்கு மிக மோசமாக வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதை நான் விரிவாக என் மதிப்புரைகளில் உயிர்மையில் எழுதியிருக்கிறேன். விஸ்வரூபத்தில் அந்த இஸ்லாமிய விரோதம் உச்சக் கட்டத்தில் உள்ளது. நான் ஆஃப்கானிஸ்தானைப் பற்றித்தானே எடுத்தேன் என்பதெல்லாம் வாதம் ஆகாது. அல் குரானின் வசனங்களைச் சொல்லிக் கொண்டே கொலை செய்கிறார்கள் என்றால் இந்தப் படத்தைப் பார்க்கும் non muslims-க்கு என்ன தோன்றும்? அல்லாஹ் அக்பர் என்று சொல்லிக் கொண்டே குண்டு வெடிக்கிறார்கள் என்றால் உங்கள் பக்கத்து வீட்டுக்காரரும் அல்லாஹ் அக்பர் என்று சொல்லும் போது உங்களுக்கு என்ன தோன்றும்? இது ஆஃப்கனிஸ்தானில் நடக்கிறது என்றால் அதை ஏன் தமிழில் வெளியிடுகிறீர்கள்? அல்லாஹ் அக்பர் என்றால் இறைவனே பெரியவன் என்று பொருள். ஆனால் அல்லாஹ் அக்பர் என்று சொல்லிக் கொண்டே இந்தப் படத்தில் குண்டு போடுகிறார்கள் என்றால் அது பாமர சினிமாவை மட்டுமே பார்த்து வெறும் பாமர ரசனையை மட்டுமே வளர்த்துக் கொண்ட பாமர ரசிகனுக்கு என்ன பொருளைத் தரும்? கருத்துச் சுதந்திரம் என்றால் என்ன? ஒரு மதத்தை அவமானப்படுத்துவதும், கொலைகாரர்களாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரிப்பதும்தான் கருத்துச் சுதந்திரம் என்றால் அதைத் தடை செய்வதும் சரிதான். கருத்துச் சுதந்திரத்தை விட மனித உயிர்கள் உயர்வானவை. பொறுப்பு (Responsibility) இல்லாத கருத்துச் சுதந்திரம் மனித குலத்துக்கே விரோதமானது. அதற்கும் கலைக்கும் சம்பந்தம் கிடையாது.

    இதற்கு மேல் நான் எதுவும் எழுத விரும்பவில்லை. ஒரு எழுத்தாளன் என்பவன் கூடு விட்டுக் கூடு பாய்பவனாக இருக்க வேண்டும் என்று பலமுறை நான் சொல்லி இருக்கிறேன். நான் ஒரு ஆணாக இருந்தாலும் ஒரு பெண்ணைப் பற்றி எழுதினால் நான் பெண்ணாக மாறியாக வேண்டும். அந்தப்படியே விஸ்வரூபத்தை நான் ஒரு இஸ்லாமியனாகவே பார்த்தேன். அப்படிப் பார்த்த போது அது என்னை மிகவும் கேவலப்படுத்தியது. வார்த்தைகளால் விளக்க முடியாத அளவுக்கு இஸ்லாத்தின் மீது வெறுப்பை அள்ளி வீசியது. சிறு குழந்தைகள் கூட கை விரல்களால் துப்பாக்கி பிடித்தபடி சுடுகிறார்கள் படத்தில். ஆனால் அமெரிக்கா ஈராக்கையும் ஆஃப்கனிஸ்தானையும் சுடுகாடு ஆக்கியது பற்றி விஸ்வரூபத்தில் எதுவுமே இல்லை. ஏதோ அமெரிக்க ஏஜண்ட் எடுத்தது போல் இருக்கிறது. ஆஃப்கனிஸ்தானில் கை இழந்த கால் இழந்த குழந்தைகள் ஆயிரக் கணக்கான பேர் இருக்கிறார்கள். அமெரிக்க குண்டு வீச்சினால் என் ஐந்து வயது குழந்தைக்கு கை கால் போனால் என் மனநிலை எப்படி இருக்கும்? நினைத்துப் பாருங்கள். ஆஃப்கனிலும் ஈராக்கிலும் அப்படி உடல் உறுப்புகளை இழந்த குழந்தைகள் ஆயிரக் கணக்கானோர்.

    விஸ்வரூபத்தைப் போல் இதுவரை ஹாலிவுட்டில் 50 கமர்ஷியல் படங்கள் வெளியாகி உள்ளன. ஒரு வியாபார மசாலா சினிமாவை இங்கே ஏதோ ஒரு மகத்தான கலைப் படைப்பைப் போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

    முஸ்லீம்களை அவமதித்து, அவர்களை பயங்கரவாதிகளைப் போல் சித்தரித்துப் படம் எடுத்து விட்டு நான் தெருவுக்கு வந்து விடுவேன், நாட்டை விட்டுப் போய் விடுவேன் என்று சொல்வதெல்லாம் மிக மிகக் கீழ்மையான தந்திரம். மகாநதி போன்ற ஒரு படத்தைக் கொடுத்த ஒருவர் இப்படி மாறிப் போனது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது…

    நன்றி: http://charuonline.com/blog/?p=167

    ReplyDelete