Wednesday, January 16, 2013

அமெரிக்கா விரும்பும் மத்திய கிழக்கு வேறு


கான் பாகவி
த்திய கிழக்குப் பகுதிதான், அகிலத்தின் இதயம் என்பர். இயற்கை வளங்கள் நிறைந்த சொர்க்க பூமி என்பர் இன்னும் சிலர். மனித இனங்களில் பிரபலமானவை ஒன்றாக வாழும் பகுதி. இந்த இனங்கள்தான் வரலாறு படைத்த மனிதப் பிரிவுகள். அரபியர், துருக்கியர், பாரசீகர், குர்து இனத்தவர், ஆப்கானியர் ஆகியோரின் கலாசாரமும் பண்பாடுகளும் செழித்த மத்திய பூமி.

முக்கியப் பகுதி

இப்பகுதியில்தான் முப்பெரும் மார்க்கங்கள் தோன்றின. யூதம், கிறித்தவர், இஸ்லாம் ஆகியவை பிறந்த மண் இதுதான். இதனாலேயே இப்பகுதி மட்டும் உலகில் ஓயாத சண்டைக்களமாக இருந்தும்வருகிறது. குறிப்பாக இஸ்ரேல் என்ற ஒரு தேள் கொடுக்கு அப்பகுதியில் முளைத்தபின் சண்டைக்குப் பஞ்சமில்லாமல் போனது.

அவ்வாறே, பெட்ரோல் உள்ளிட்ட இயற்கை வளங்கள் கண்டுபிடிக்கப்பட்டபின், காலனி ஆதிக்க நாடுகளின் ஆசைக் களமாக இப்பகுதி முன்பும் இருந்தது; இப்போதும் இருந்துவருகிறது.

பூகோள அடிப்படையில் பார்த்தால் மத்தியக் கிழக்கு என்பது மிகவும் விசாலமானது; பரந்து விரிந்தது. சோமாலியா, எத்தியோப்பியா, எரித்ரியா, சூடான் உள்ளிட்ட ஆப்பிரிக்க கண்டத்தையும் அட்லாண்டிக் கடல்வரை உள்ளடக்கியது. அரபு வளைகுடா, துருக்கி, ஈரான், ஏன் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியாவரைகூட இது நீள்கிறது.

மத்திய கிழக்கு பல்வேறு பெரும் மோதல்களைக் கண்ட நிலப்பகுதி. சில மோதல்கள் இன்றும் தொடர்கின்றன. இப்பகுதி நாடுகளை நீண்டகாலமாக ஆக்கிரமித்திருந்த மேற்கத்திய காலனி வெறியர்களிடமிருந்து இந்நாடுகளை விடுவிக்க நடந்த விடுதலைப் போர் அவற்றில் முக்கியமானது. தங்களின் படைகளுக்கும் பொருளாதாரத்திற்கும் முதலீடு செய்யும் நிலமாக மேற்குலகம் இன்றும் மத்திய கிழக்கை நடத்திவருகிறது.

பிரிட்டன், ஃபிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், ரஷியா, இறுதியாக அமெரிக்கா ஆகிய நாடுகள் இதில் முன்னணியில் உள்ளன. துருக்கியருடனும் ஆப்கனியருடனும் நடந்த மோதல்களில் ரஷியா பெரும் பங்காற்றியதை மறக்க முடியாது.

உள்நாட்டுப் போர்

வெளித் தாக்குதல்கள் ஒருபுறம் என்றால், மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்று மற்றொன்றைத் தாக்கிக்கொண்ட சகோதர யுத்தங்களுக்கும் குறைவில்லை.

பாலஸ்தீனை ஆக்கிரமித்த இஸ்ரேலுடன் இதுவரை நான்கு முறை அரபு நாடுகள் போரிட்டுள்ளன. 1948, 1956, 1967, 1973 என சராசரி பத்தாண்டுகள் இடைவெளியில் இப்போர்கள் நடந்திருக்கின்றன.

அடுத்து யமன் (ஓமன்) போர்; மன்னர் குடும்பத்தின் ஆதரவாளர்களுக்கும் குடியரசு ஆதரவாளர்களுக்கும் இடையே இப்போர் நடந்தது.

துருக்கி-குர்துகள், சிரியா-இராக் இடையே நடந்த போர். அரபு-யூதர்கள் யுத்தத்திற்கு அடுத்து மத்திய கிழக்கில் நடந்த பெரிய போர்களாகும் இவை.

ஈரான்-வளைகுடா நாடுகள் மத்தியில் நடந்த கடும் மோதல். குறிப்பாக மூன்று தீவுகள் தொடர்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் ஈரான் தொடுத்த போர். அரபு வளைகுடாவைக் கைப்பற்றுவதும் ஈரானின் நோக்கமாக அப்போது இருந்தது.

ஈரான்-இராக்; இராக்-குவைத்; எண்பதுகளில் நடந்த தீபகற்ப நாடுகளிடையிலான போர், ஆப்பிரிக்க கண்டத்தில் சோமாலியா-எத்தியோப்பியா; எரித்ரியா-எத்தியோப்பியா, சூடானில் தார்ஃபோர் மாகாணத்தில் நடந்த சண்டை, தெற்கு சூடான் சண்டை.

எழுபதுகளின் இறுதியில் எகிப்து-லிபியா எல்லைத் தகராறு, லெபனான் உள்நாட்டுப் போர், தென்பகுதியில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு. ஆப்கானிஸ்தானில் சோவியத் ரஷியா பின்வாங்கியபின் நடந்த உள்நாட்டு மோதல்.

அமெரிக்காவின் சதி

இரண்டாம் உலகப் போருக்கு முன்பும் பின்பும் நடந்த நிகழ்வுகளைக் கண்காணித்துவந்த அமெரிக்கா, மத்திய கிழக்குப் பகுதியின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்தது. உலகின் மீது அதிகாரம் செய்ய வேண்டுமானால், முதலில் மத்திய கிழக்கின் மீதான அதிகாரம் நிலைபெற வேண்டும் என்பதை அமெரிக்கா புரிந்துகொண்டது.

பழைய காலனி சக்திகளான பிரிட்டன், ஃபிரான்ஸ், சோவியத் ரஷியா ஆகியவற்றின் ஆதிக்க மோகம் கலைந்தபின், இப்பகுதிமீது ஆளுமையும் அதிகாரமும் செய்ய அமெரிக்கா நீண்டகாலமாகத் திட்டமிட்டுச் செயல்படத் தொடங்கியது. இதன்மூலம், உலகையே ஆட்டுவிக்கலாம் என்பது அமெரிக்காவின் கனவுத் திட்டமாகும்.

இதையடுத்து, யூதர்களுக்கு வேண்டிய எல்லா விதமான ஒத்துழைப்புகளையும் அமெரிக்கா அளிக்க ஆரம்பித்தது. இன்றும் அவை தொடர்கின்றன. பொருளாதார ஒத்துழைப்பு, இராணுவ உதவி, ஊடகம் மற்றும் கலாசார உதவிகள் இதில் அடங்கும்.

இஸ்ரேல் வழியாக இப்பகுதியில் கால் வைக்க அமெரிக்காவுக்கு இது வழிவகுத்தது. சில பொருளாதார உதவிகளைக் கொடுத்து, இப்பகுதியின் ஆட்சியாளர்கள் சிலரையும் அமெரிக்கா வளைத்துப் போட்டது.

அரபு நாடுகளில், அமெரிக்கா தன் செல்வாக்கை நிலைநிறுத்திக்கொள்ளவும் தன் திட்டங்களைச் செயல்படுத்திக்கொள்ளவும் முதலில் தேர்ந்தெடுத்தது, அங்குள்ள மதச்சார்பற்ற அதிகார வர்க்கத்தைத்தான். இவர்கள் ஆட்சி பீடத்தில் அமர்ந்துவிட்டால், எளிதாகக் காரியத்தைச் சாதித்துவிடலாம் என எண்ணி மதச் சார்பற்றவர்களை -மார்க்கப்பற்று இல்லாதவர்களை- ஆட்சியில் அமர்த்தியது அமெரிக்கா.

ஆனால், ஆண்டுகள் பல உருண்டோடியும் அந்நாடுகளில் பொருளாதார வளம் ஏற்படவில்லை. பொருளாதாரம் சரிந்துபோனது. ஆட்சியாளர்கள் நாட்டின் வளங்களைக் கொள்ளையடித்தார்கள்; சுரண்டினார்கள். இதனால் மக்களின் ஆதரவை இழந்தார்கள்.

நினைத்தது ஒன்று

இதைக் கண்ட அமெரிக்கா, அந்த ஆட்சியாளர்களைக் கை கழுவியது. மக்களின் ஆதரவையும் அன்பையும் பெற்ற ஆட்சியாளர்கள் இப்போது அமெரிக்காவுக்குத் தேவைப்பட்டனர். எனவே, அண்மையில் அரபுலகில் ஏற்பட்ட புரட்சிகள் அமெரிக்கா மற்றும் சியோனிஸ்டுகளின் தூண்டுதலால்கூட ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு.

ஆனால், அமெரிக்கா எதிர்பார்த்ததற்கு நேர்மாறாகப் புரட்சி அதன் கையைவிட்டு விலகி, வேறுபக்கம் திசைமாறியது; இஸ்லாமியர்கள் ஆட்சிக்கு வரக் காரணமாகியது. அமெரிக்காவின் எண்ணம் ஈடேறவில்லை. அது எதிர்பார்த்த சேதங்களும் நாசங்களும் அங்கு விளையவில்லை. எகிப்தும் துனூசியாவும் இதற்கு உதாரணங்கள். ஆக, இப்புரட்சிகளே, மத்திய கிழக்கில் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் சமாதி எழுப்ப உண்மையான தொடக்கமாக இருக்கலாம்.

அமெரிக்காவின் விருப்பம்

அமெரிக்காவின் சதித் திட்டம் வேறுவிதமாக இருந்தது. மத்திய கிழக்கைத் துண்டாடி குட்டி நாடுகளை உருவாக்கி, அவற்றுக்கிடையே இன, குழு, மார்க்கம் சார்ந்த மோதல்களை உருவாக்குவதுதான் அத்திட்டம். சிலநாடுகளில் இதில் அமெரிக்கா வெற்றியும் கண்டுள்ளது. எடுத்துக்காட்டு: சூடான். லெபனான் மற்றும் இராக்கிலும் பிரிவினை தெரிகிறது.

சூடானை ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளாகப் பிரிப்பதே அமெரிக்காவின் திட்டம். தென் சூடானைப் பிரித்துத் தனி நாடாக்கிவிட்டது. எதிர்காலத்தில் தார்ஃபோர் (டார்ஃபர்) மாநிலத்தைப் பிரிக்கத் திட்டமிட்டிருக்கிறது. இறுதியில் ஏழு நாடுகளாக சூடானைப் பிரிப்பதே அமெரிக்காவின் இலக்கு.

லெபனானில் அமெரிக்காவும் இஸ்ரேலும் உள்நாட்டுச் சண்டையை மூட்டிவிட்டிருக்கின்றன. லெபனானை நான்கு நாடுகளாகப் பிரித்து கிறித்தவர்களுக்கு ஒன்று, துரூஸுகளுக்கு ஒன்று, சன்னி முஸ்லிம்களுக்கு ஒன்று, மற்றவர்களுக்கு ஒன்று. பின்னர் இக்குட்டி நாடுகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்கையில் அந்தச் சந்தில் அமெரிக்கா நுழைந்து நாட்டாண்மைத்தனம் செய்யலாம்.

அவ்வாறே, இராக்கை மூன்று துண்டுகளாக வெட்ட அமெரிக்கா விரும்புகிறது. ஷியாக்களுக்கு ஒரு நாடு, சன்னிகளுக்கு ஒரு நாடு, குர்து இனத்தாருக்கு ஒரு நாடு. இராக் ஆக்கிரமிக்கப்பட்டபின் குர்துகள் அமெரிக்காவுடனும் இஸ்ரேலுடனும் நெருங்கிய உறவு கொண்டிருப்பது குறிப்பிடத் தக்கது.

சோமாலியாவுக்கெதிரான போரில் எத்தியோப்பியாவிற்கு அமெரிக்காவின் ஆதரவு உண்டு. ஆப்பிரிக்கா கண்டத்தில் கிறித்தவத்தைப் பலப்படுத்த இது உதவும். இறுதியாக, சோமாலியாவை கினியாவுக்கும் எத்தியோப்பியாவிற்கும் பங்கு போட்டுவிடலாம் என்பது அமெரிக்காவின் திட்டம்.

லிபியாவைப் பல்வேறு குழுக்களுக்கிடையே பிரித்துக் கொடுப்பதும் அமெரிக்காவின் திட்டத்தில் உள்ளது. குறிப்பாக பனூஃகாஸீ மற்றும் திரிபோலியை இவ்வாறு பிரிக்கலாம். பஹ்ரைன் நாட்டை, ஷியாக்களுக்கு ஒன்று, சன்னிகளுக்கு ஒன்று எனப் பிரிப்பதும் அதன் திட்டம்.

எகிப்தை பல நாடுகளாக்குவது அமெரிக்காவின் விரைவுத் திட்டத்தில் உள்ளது. எகிப்தின் தெற்கே கிறித்தவர்களுக்கென ஒரு தனி நாட்டை உருவாக்கிவிட்டு, மீதியை முஸ்லிம்களுக்கும் மதச்சார்ப்பற்றவர்களுக்குமாகத் தனித்தனியாகப் பிரிப்பது அதன் நோக்கம்.

இதுதான், அமெரிக்க விரும்பும் மத்திய கிழக்கு. இதன்மூலம், அப்பிராந்தியத்தில் தன் நலன்கள் காக்கப்படும்; இஸ்ரேலின் கை மேலோங்கி இருக்கும் என்பது எதிர்பார்ப்பு. இஸ்ரேல் அப்பகுதியில் குட்டி நாடுகளுக்கு மத்தியில் வலுவான நாடாகிவிடுமல்லவா?

மத்திய கிழக்கு நாடுகள் விழிப்புணர்வு பெற வேண்டும். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆசையில் மண்ணைப்போட வேண்டும்.

ஆக, மத்திய கிழக்கு புரட்சி, உலகத்திற்கோர் அழகிய முன்மாதிரி!

(‘ஆலுகாஇணையதளம்)

No comments:

Post a Comment