Tuesday, January 14, 2014

வாசிப்பே நம் சுவாசிப்பு

- அ. முஹம்மது கான் பாகவி



பிறக்கும்போது எதுவும் அறியாதவனாகவே மனிதன் பிறக்கிறான். வாசிப்பின் மூலமே அறிஞனாகிறான்; ஆராய்ச்சியாளனாகிறான்.

ஆம்! தொடக்கத்தில் அன்னையின் முகத்தை ஆவலோடு வாசிக்கிறான். அவள் சொல்லி, தந்தையின் முகத்தைப் படிக்கிறான். வண்ணங்களை வாசிக்கிறான். வானத்தை வாசிக்கிறான்.

மண்ணைப் படிக்கிறான். மனிதர்களை, அவர்களின் நாடியை, மனத்தை, குணத்தைப் படிக்கிறான். சுவையை, மணத்தை, ஒலியை, ஒளியை, நடையை… இவ்வாறு ஒவ்வொன்றையும் பார்த்து, தொட்டு, செவியுற்று, நுகர்ந்து படிக்கத் தொடங்கும் மனிதன் புத்தகத்தைப் படித்து, நூல்களை வாசித்து மேதையாகிறான்.

முதல் கட்டளை


வாசிப்பின் வாடையைக்கூட நுகராத இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு இறைவன் பிறப்பித்த முதல் ஆணை ‘வாசிப்பீராக!’ (‘இக்ரஃ’) என்பதுதான். இது, வரலாற்றில் நடந்த ஒரு சுவையான முரண். அவர்கள் சந்தித்த முதல் சமுதாயமும் வாசிப்பு அரிதாகவே காணப்பட்ட ‘உம்மீ’ சமுதாயம்தான்! (அல்குர்ஆன், 62:2)

(நபியே!) படைத்த உம்முடைய இறைவனின் பெயரால் ஓதுவீராக! அவன் மனிதனை, (பற்றித்தொங்கும்) கருமுட்டையிலிருந்து படைத்தான். ஓதுவீராக! உம்முடைய இறைவன் மிகவும் கண்ணியமிக்கவன். அவன்தான் எழுதுகோலால் கற்றுக்கொடுத்தான். மனிதனுக்கு –அவன் அறியாதவற்றைக் கற்றுக்கொடுத்தான். (96: 1-5)

தொகுக்கப்பெற்ற வரிசையில் இது 96ஆம் அத்தியாயமாக இருந்தாலும் அருளப்பெற்றதில் இதுவே முதலாம் அத்தியாயம். அதிலும் 19 வசனங்களைக் கொண்ட இந்த அத்தியாயத்தில் இந்த ஐந்து வசனங்கள் மட்டுமே முதலாவதாக அருளப்பெற்றன.

இங்கு இறைவன் தன் திருத்தூதருக்கு இட்ட முதல் கட்டளையே ‘ஓதுவீராக!’ (இக்ரஃ) என்பதுதான் என அறிகிறோம். முதல் வசனத்தில் குறிப்பிட்ட இந்த ஆணையை மூன்றாம் வசனத்தில் மீண்டும் ஒருமுறை குறிப்பிட்டு அழுத்தம் தருகின்றான் இறைவன். இது, மனிதனின் வாழ்க்கையில் வாசிப்பிற்கு உள்ள முக்கியத்துவத்தை உணர்த்தவில்லையா?

‘படைத்த உம்முடைய இறைவனின் பெயரால்’ என்று குறிப்பிடும்போது ‘ரப்பு’ எனும் சொல்லே ஆளப்படுகிறது. ‘படைத்துப் பரிபாலிப்பவன்’ என்பதே இதன் பொருளாகும். வளர்ப்பு அல்லது பராமரிப்பு என்பது வாசிப்பைக் கொண்டே தொடங்க வேண்டும் என்பதை இது குறிப்பதாக இருக்கலாம்.

பேனாவால் மனிதனுக்குக் கற்பித்ததாக இறைவன் இங்கு குறிப்பிடுவதும் கவனிக்கத் தக்கது. பேனாவால் எழுதுவதே வாசிக்கத்தானே! மனிதன் அறியாதவற்றை அவனுக்குத் தான் கற்றுக்கொடுத்ததாக இறைவன் சொல்வதும் கவனிக்க வேண்டியது. கற்றலும் கற்பித்தலும் வாசிப்பாலேயே நடப்பவை என்பது தெரிந்ததே!

ஆக, அறிவின் திறவுகோல் வாசிப்பே! வாசிப்பின் மூலமே அறிவை அடைய முடியும். அறிவு இருந்தால்தான் மனிதனாக வாழ முடியும். வாசிப்பைக் கொண்டே கற்க இயலும்; கற்பிக்கவும் இயலும். கற்றால்தான் அறிவு வளரும். அறிவு வளரவளரத்தான் உயர்வு, கண்ணியம், வாழ்வாதாரம் –எல்லாம் வசப்படும்.

அது மட்டுமா? படைத்தவனை அறிந்து, அவன் ஆற்றல்களைப் புரிந்து, அவனைக் கெஞ்சவும் அஞ்சவும் வழியுண்டாகும். அறிவும் புத்திசுவாதீனமும் இருந்தால்தான் வழிபாடுகளைக்கூட முறையாக நிறைவேற்ற இயலும்.

ஏன் வாசிக்க வேண்டும்?

பள்ளி, கல்லூரியில்தான் படிக்கிறோமே! பிறகென்ன வாசிப்பு? இப்படி சிலர் எண்ணக்கூடும். அங்கு கற்பது துறைசார்ந்த நூல்கள். அவை ஆராய்ச்சிக்கும் தொழிலுக்கும் உதவலாம். பொதுவான அறிவு வளர்ச்சிக்கும் அனுபவ அறிவுக்கும் வேறு புத்தகங்களை வாசித்தே ஆக வேண்டும்!

பள்ளிப் படிப்பு ஏட்டுப் படிப்பு; பணம் பண்ண துணை நிற்கும். நாம் சொல்வது பண்பாட்டுப் படிப்பு. மனிதனாக வாழ வழிகாட்டும்! அது தொழில்; இது வாழ்க்கை.

அவ்வாறே, அனுபவங்கள் அழிந்துபோகாமல் காக்கப்பட, பதிவுகளே பயன்படும். பதிவுக்குப் புத்தகமே சரியான கருவி. கடந்த காலத்தை அறியுவும் நிகழ்காலத்தை உணரவும் புத்தகமே வழியாகும். பதினைந்து நூற்றாண்டுகள் ஆகிவிட்ட பின்பும் திருக்குர்ஆன் ஓர் அச்சரம்கூட மாறாமல் அப்படியே பாதுகாக்கப்பட்டுவருகிறது என்றால், அதற்குப் புத்தக வடிவமே காரணம்!

வேதங்கள், உலக இலக்கியங்கள், வரலாறுகள், சமூகக் கலாசாரங்கள், ஆய்வுகள், அறிவியல் கண்டுபிடிப்புகள்... என எல்லாம் அவை தோன்றிய காலம்தொட்டு இன்றுவரை மக்களை அடைந்துள்ளதற்குக் காரணம் பதிவுகள்தான்.

சொல்லப்போனால், புத்தகமே உண்மையான செல்வம்; செலவாகாத சொத்து. இதனாலேயே நேரு இப்படிச் சொன்னார்: புத்தகம் வாங்குவதற்காக நான் செய்கின்ற செலவுகளைப் பார்த்து யாரும் என்னை ‘ஊதாரி’ என்று விமர்சித்தாலும் அதற்காக நான் வருந்தப்போவதில்லை; அதைப் பொருட்படுத்தப்போவதில்லை.

சாதாரண அண்ணாதுறை, அறிஞர் அண்ணவாக மாறியது, வாழ்நாளில் பெரும்பகுதியை நூலகத்தில் கழித்ததால்தான். நூல்கள் இல்லாத வீடு உயிரற்ற சடலம் –என்பது எகிப்திய பழமொழி. நூலகம்தான் மூளைக்கான மருத்துவமனை.

ஒரு சமூகத்தின் கலாசாரத்தை அழிக்க விரும்பினால், வாசிப்பை நிறுத்திவிட்டாலே போதும்; நூல்களைக்கூட எரிக்க வேண்டியதில்லை.

வாசிப்புதான் சமூகங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிரஞ்சீவி; அறிவின் வளர்ச்சி; பார்வையற்றவனின் பார்வை; அறிஞர்கள் மற்றும் மேன்மக்களுடனான தொடர்பு; நட்பு. பலவற்றையும் படித்தால் பண்டிதராகலாம் –என்பர்.

குறிப்பாக, ‘தாஈ’கள் (பரப்புரை செய்வோர்) அதிகம் வாசிக்க வேண்டும். புதுமையைத் தேட வேண்டும். இத்துறையில் நீண்ட அனுபவமும் முதிர்ச்சியும் உள்ளவர்களின் நூல்களை ஆழமாக வாசிக்க வேண்டும்.

வாசிப்பின் பயன்கள்

நூல்களை வாசிப்பதால் எத்தனையோ நன்மைகள் உண்டு. பார்வைக்கேற்ப பலன்களும் அமையும்; நோக்கத்திற்கேற்ப நன்மைகள் கிடைக்கும்.

1. தகவல் அறிவு. வாசிக்கும் நூல் உங்களுக்குப் புதியது என்றால், நீங்கள் இதுவரை அறிந்திராத புதிய கருத்துகளை அறிந்துகொள்ளலாம். முன்பே தெரிந்த தகவலாக இருப்பின், அதை உறுதி செய்துகொள்ளலாம். இரண்டுமே பயன்கள்தான்.

அடுத்து படிக்கும் தகவல், அல்லது கருத்து நல்லதாக இருப்பின் உங்களுக்கு அது உதவும். நினைவு வங்கியில் சேமித்துக்கொள்ளலாம். இருப்பு (Amount) கூடும். தவறாக இருப்பின், அதைத் தவிர்க்க உதவும். இப்படியும் ஒரு கருத்து உண்டு என அறிந்து, அதிலிருந்து விலகிவிடலாம்.

இத்தகைய என் அடியார்களுக்கு (நபியே!) நற்செய்தி கூறுக! அவர்கள் சொல்லைச் செவியுற்று, அதில் அழகானதைப் பின்பற்றுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் நல்வழி காட்டினான். அவர்களே அறிவாளிகள். (39:18)

அதாவது எல்லா வகையான சொற்களையும் கேட்பார்கள். ஆனால், நல்லதை மட்டுமே பின்பற்றுவார்கள். இவ்வாறே சில விரிவுரையாளர்கள் விளக்கமளித்துள்ளனர். அப்போதுதான் அறிவிலும் பார்வையிலும் விசாலம் ஏற்படும்; பரந்தசிந்தனை பிறக்கும்.

2. மொழி அறிவு. எந்த மொழி நூலை வாசித்தாலும் அந்த மொழியைப் பற்றிய அறிவும் தெளிவும் வாசிப்பவருக்குக் கிடைக்கும். அந்த மொழியிலுள்ள புதிய சொற்கள், சொல்லாடல், மரபுத்தொடர், உரைநடை போன்ற ஞானம் கிடைப்பது எளிதான நன்மையன்று; பெரிய பயனாகும்.

3. எழுத்துப் புலமை. நல்ல நடையும் பிழையற்ற எழுத்தும் உள்ள நூலாக இருந்தால், எழுத்துக் கலையைக் கற்க வாசகனுக்கு அது உதவும். எழுத்தாற்றல் என்பது மாபெரும் செல்வம். அது படிக்கப் படிக்க, எழுத எழுதத்தான் கைவந்த கலையாக மாறும். எழுத்து ஒரு சுகமான அனுபவம். அது கைவரப்பெற்றவர், நான்கு சுவர்களுக்கு இடையே தனிமையில் அமர்ந்து எழுதினாலும் ஆயிரமாயிரம் உள்ளங்களோடு உரையாடுகிறார்.

4. இலக்கண இலக்கியப் புலமை. ஒரு மொழியின் வளமே அதன் இலக்கண கனமும் இலக்கிய அடர்த்தியும்தான். வாசிப்பால் இவற்றை அடைய முடியும். செம்மொழிக்கான முதல் தகுதியே, அம்மொழியின் இலக்கண வரையறைகளும் இலக்கியப் பதிவுகளும் என்பதை மறந்துவிடலாகாது.

திருக்குர்ஆன் அரபு இலக்கியத்தின சிகரமாகத் திகழ்வதும் இலக்கண வரைவுகளுக்கு முன்னோடியாக விளங்குவதும் அதன் அற்புதத் தன்மைக்கு (இஃஜாஸ்) முக்கிய அம்சங்களாகும். எனவேதான்,

“நம் அடியாருக்கு நாம் அருளிய (இவ்வேதத்)தில் நீங்கள் ஐயம் கொண்டவர்களாக இருந்தால், இதைப் போன்றதோர் அத்தியாயத்தையேனும் நீங்கள் உண்மையாளர்களாயின் கொண்டுவாருங்கள் (பார்ப்போம்)” (2:23)

என்று குர்ஆனால் சவால் விடுக்க முடிந்தது. குர்ஆனில் நிறைந்துள்ள இலக்கிய எடுத்துக்காட்டுகளை விவரிக்கத் தனி நூலே வேண்டும். சில வசனங்களின் எண்களை மட்டும் தருகிறேன்; முயன்றுபாருங்கள்: 9:61; 18:77; 50:30.

5. பட்டறிவு. நல்ல எழுத்தாளன் தன் அனுபவங்களையும் உணர்வுகளையும் தனது எழுத்தில் வெளியிடுவான். எழுத்துதான் உணர்வுகளுக்கு வடிகால். எழுத்தாளனின் அகவைக்கும் தகுதிக்கும் தக்கவாறு அனுபவங்களும் கனமாக இருக்கும். ஒருவரின் அனுபவம் அடுத்தவருக்குப் பாடம். பல நேரங்களில் ஏட்டறிவு வாழ்க்கைக்கு வழிகாட்டத் தவறிவிடும். ஆனால், பட்டறிவு நிச்சயமாகக் கை கொடுக்கும்.

ஒரு அனுபவத்தைப் பெற அனுபவசாலி தன் ஆயுளில் எத்தனை வருடங்களைச் செலவழித்திருப்பான்! எத்தனை முட்கள் அவனைக் குத்திக் காயப்படுத்தியிருக்கும்! எத்தனை சுகங்களை இழந்திருப்பான்! யார் யாருடைய வசைவுகளுக்கெல்லாம் ஆளாகியிருப்பான்! அவன் அனுபவங்களை எழுதும்போது இந்தப் புண்கள் ஏதுமின்றி வாசகன் ஒரு நொடியில் அறிந்துகொள்ள முடிகிறேதே! எழுத்து எத்துணை பெரும் ஆயுதம்!

இதனால்தான், சுயசரிதை என்பது இலக்கியத்தின் ஓர் அங்கமாகவே வளர்ச்சி கண்டுள்ளது. பெரிய மனிதர்களின் தன் வரலாறு அனுபவமில்லாத சிறியவர்களுக்கு உண்மையிலேயே ஓர் ஒளிவிளக்கு! இதனாலேயே, “தத்துவ அறிஞரிடம் (யோசனை) கேட்காதே! அனுபவசாலியிடம் கேள்!” என்பார்கள்.

6. நல்ல துணை. தனிமையில் இருக்கும்போது புத்தகம் உங்களுக்கு ஒரு சிறந்த துணையாக இருக்கும். பயனுள்ள வகையில் பொழுதும் போகும். வீணான அரட்டை, புறம் பேசுதல், பிறர் குறை ஆராயுதல், கண்டதையும் சிந்தித்து மன அழுத்தத்தை விலைக்கு வாங்கிக்கொள்ளல் போன்ற தீமைகளிலிருந்து புத்தகம் உங்களைக் காக்கும்.

ஆறறிவு நண்பன் இல்லாத குறையை புத்தகம் போக்கிவிடும். நண்பன்கூட நல்லவனாக இருந்தால்தான் ஆயிற்று! நூலோ அப்படியல்ல. மிக அரிதாகவே அற்பத்தனமான நூல்கள் வெளிவருகின்றன.

வாசிப்பின் முறைகள்

வாசிப்பே நம் சுவாசிப்பை அர்த்தம் பொதிந்ததாக ஆக்கும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. அதேநேரத்தில், அதற்கும் சில ஒழுங்குமுறைகள் உண்டு. அவற்றைக் கவனத்தில் கொள்ளும்போதுதான் வாசிப்பால் நாம் எதிர்பார்க்கும் பலனை அடைய முடியும்.

1. நூல் தேர்வு. பலரும் இலக்கியம் மட்டுமே வாசிப்புக்கு ஏற்றது என எண்ணுகின்றனர். இது ஒரு தவறான கருத்து. பல்துறை நூல்களை வாசிக்கும்போதுதான் ஒருவரது வாசிப்பு வளமாகும். பயனுள்ள, காலத்துக்கேற்ற நல்ல நூல்களைத் தேர்ந்தெடுப்பது வாசகனின் முதற்கடமையாகும்.

சிறுகதையாகவோ நாவலாகவோகூட இருக்கலாம். ஆனால், அதன் உள்ளடக்கமும் நடையும் தரமானவையாக இருப்பின், அதுவும் பயன்தான். சமய நூல்களைப் பொறுத்தவரை, சரியான நம்பத் தகுந்த ஆதாரபூர்வமான செய்திகள் அடங்கிய நூல்களையே தேர்வு செய்ய வேண்டும்.

நபித்தோழர் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுவார்கள்: உரைகளில் உயர்வானது இறைவேதமே! நடத்தைகளில் நயமானது முஹம்மது (ஸல்) அவர்களின் நடத்தையே! (புகாரீ – 7277)

2. நோக்கம். நம்முடைய எந்தவொரு செயலுக்கும் ஒரு நோக்கமும் குறிக்கோலும் இருக்க வேண்டும். குறிக்கோலோ இலட்சியமோ இல்லாத வாழ்வு வாழ்வு அல்ல; தாழ்வு. புத்தகத்தின் பொருள், அதன் மொழிநடை ஆகிய இரண்டுமே தரமான வாசகனின் நோக்கமாக இருக்க வேண்டும். நல்ல செய்திகளைத் தாமும் அறிந்து, பிறருக்கும் தெரிவிப்பது இலட்சியமாக இருக்க வேண்டும். அத்துடன் படித்த நல்ல கருத்துகளை வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும் என்ற உறுதியும் இருக்க வேண்டும்.

அதுவெல்லாம் இல்லாமல் தகவல்களை மண்டையில் மட்டும் ஏற்றிக்கொண்டால் போதாது. சுவடிகளைச் சுமக்கும் கால்நடைகளுக்கு, அவற்றின் அருமை எப்படிப் புரியும்?

‘தவ்ராத்’ வேதத்தை ஏற்க மனமே இல்லாமல் நிர்ப்பந்தத்தின் பேரில் ஏற்ற இஸ்ரவேலர்கள், ஏற்ற பின்னரும் அதன்படி செயல்படவில்லை. இவர்கள் கையில் அப்புனித நூல் இருந்தாலென்ன? கழுதைமீது ஏற்றி வைக்கப்பட்டால் என்ன? இரண்டும் ஒன்றுதானே!

‘தவ்ராத்’ ஏற்றிவைக்கப்பட்டு, பின்னர் அதை (மனமார) ஏற்காதவர்களின் எடுத்துக்காட்டு, ஏடுகளைச் சுமக்கும் கழுதையைப் போன்றதாகும். (அல்குர்ஆன், 62:5)

3. கவனம். ஒரு பொருளை வெளியிட நூலாசிரியர் எந்த இடத்தில் எந்தச் சொற்களை எவ்வாறு கையாள்கிறார் என்பதில் வாசகனுக்குக் கவனம் இருக்க வேண்டும். வாசகனைக் குழப்பமடையச் செய்யாமல், சொல்லாக்கமும் வாக்கிய அமைப்பும் எவ்வாறு அமைந்துள்ளது என்பதை உன்னிப்பாகக் கவனித்தல் வேண்டும்.

தமிழைப் பொறுத்தவரை வார்த்தைகளிடையே இருக்க வேண்டிய இடைவெளி (ஸ்பேஸ்)கூடப் பார்க்கப்பட வேண்டும். இல்லையேல் பொருள் சிதைவும் கருத்துப் பிழையும் உருவாகிவிட வாய்ப்பு உண்டு.

எடுத்துக்காட்டு: புத்தகத்தைப் படித்துக்கொண்டு சென்றபோது புத்தகம் கைநழுவியது. இதையே புத்தகத்தைப் படித்து கொண்டுசென்றபோது புத்தகம் கைநழுவியது. படிக்கும்போது புத்தகம் கையிலிருந்து கீழே விழுந்தது என்கிறது முந்தியது. படித்துவிட்டு எடுத்துச் சென்றபோது புத்தகம் கீழே விழுந்தது என்கிறது பிந்தியது.

ஏன்? ‘எடுத்துக்காட்டை’யே எடுத்க்காட்டாகக் கூறலாம். ‘எடுத்துக்காட்டு’ என்பதற்கு உதாரணம் என்று பொருள். ‘எடுத்துக் காட்டு’ என்பதற்கு ‘(துணியை) தூக்கிக் காட்டு’ என்று பொருள். முந்தியது பெயர்ச்சொல்; பிந்தியது வினைச்சொல்! தேவையா இந்த விபரீதம்?

4. அடிக்கோடிடல். புதுமையான தகவல்கள், ஆழமான கருத்துகள், அவசியமான செய்திகள் என்று தெரிந்தவுடன் பென்சிலால் அடிக்கோடிட்டு அடையாளப்படுத்த வேண்டும். அல்லது டைரியில் குறிப்பெடுத்துக்கொள்ள வேண்டும். நாளைக்கு உதவும்!

சில வேளைகளில் இப்படியும் நடந்துவிடுவதுண்டு. சொன்னவரைவிடக் கேட்டவர் ஒரு தகவலை நன்கு காப்பவராகிவிடலாம்; எழுத்தாளரைவிட வாசகன் ஒரு கருத்தை அதிகம் பரப்புகின்றவராகிவிடலாம்!

‘விடைபெறும் ஹஜ்’ஜின்போது நபி (ஸல்) அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க உரையில் குறிப்பிட்டார்கள்:

இங்கே வந்திருப்பவர் வராதவருக்கு (என் உரையை) எட்டச்செய்யட்டும்! அவ்வாறு எட்டச்செய்பவரைவிட, அவரிடம் கேட்பவர் இச்செய்தியை நன்கு நினைவில் கொள்பவராக இருந்துவிடலாம்!

அவ்வாறுதான் நடந்தது. நினைவாற்றல் குறைந்த ஒருவர், தம்மைவிட அதிக நினைவாற்றல் உள்ளவரிடம் இச்செய்தியைக் கொண்டுசேர்த்தார். (புகாரீ – 7078)

5. நல்ல உவமைகள், பழமொழிகள், மரபுத்தொடர்கள் கிடைத்தால் உடனே குறித்துக்கொள்ள வேண்டும். நல்ல பொருள் கொண்ட கவிதை வரிகளையும் குறித்து வைக்கலாம். பின்னால் என்றாவது பயன்படும்.

6. பயணங்கள், காத்திருப்புகள், தனிமை, ஓய்வு ஆகிய நேரங்களில் அவசியமாகப் புத்தகம் ஒன்றைக் கையில் வைத்திருங்கள்! பயனுள்ள வகையில் நேரமும் கழியும்; மனஉளைச்சலும் இராது.

7. ஒரு நூலைப் படித்து முடித்தவுடன் டைரியில் அதன் விவரத்தை எழுதி, தலைப்பு வாரியாகப் பட்டியலிட்டு வைத்துக்கொண்டால், தேவைப்பட்டும்போது சிரமம் இல்லாமல் நூலை எடுத்துப் பயன்படுத்த வசதியாய் இருக்கும்.

8. மேலோட்டமாக எதையும் படிக்கக் கூடாது. அதற்குப் படிக்காமலே இருந்துவிடலாம். நாவு மட்டுமே வாசிக்க, மனம் எங்கோ திரிந்தால் படிப்பதில் என்ன பயன்? ஆழமாக, கருத்துகளை உள்வாங்கி, ஒரு நிமிடமேனும் அசைபோட்டுப் பார்த்து வாசிக்க வேண்டும்.

நூல் வாசிப்புக்கும் உரை கேட்பதற்கும் உள்ள வித்தியாசமே இதுதான். உரையில், யோசிக்க நேரம் கிடைக்காது. வாசிப்பில், அது கிடைக்கும். அப்படியிருக்க, வரிகளில் கண்விழிகளை மட்டும் ஓடவிடுவதில் என்ன புண்ணியம்?

நூலாசிரியர் முன்வைக்கும் பொருள், மார்க்க அடிப்படையில் சரியா, தவறா என்பதையும் வாசகன் தீர்மானிக்க வேண்டியது அவசியம். புரியாத இடங்களில் ஒன்றுக்குப் பல தடவை வாசிக்கலாம்! விளங்காதபோது தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்!

ஆக, பயனுள்ள வாசிப்பு என்பது, வாசிக்கும்போது மனத்தை தென்றல் வருட வேண்டும்; ஆனந்தம் பிறக்க வேண்டும். மனம் அங்கே இருக்க வேண்டும்! ஆர்வம் கொப்பளிக்க வேண்டும்! இதமான சூழல் நிலவ வேண்டும்!

யாருக்கு உள்ளம் உள்ளதோ, அல்லது (மனம் கொடுத்து) கவனமாகச் செவியுறுகிறாரோ அவருக்கு நிச்சயமாக இதில் பாடம் உண்டு. (அல்குர்ஆன், 50:37)

9. இணையதளம், வலைத்தளம் போன்ற நவீன ஊடகங்களில் பதிவேற்றப்படும் சிறந்த கட்டுரைகள், நூல்கள் ஆகியவற்றையும் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்!

சில பரிந்துரைகள்

1. புத்தக வாசிப்பின் அவசியத்தை எல்லா இடங்களிலும் உணர்த்த வேண்டும். வீடு, அலுவலகம், பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்ற இடங்களில் இதற்கான விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற வேண்டும்!

வாசிப்பே நம் சுவாசிப்பு; பேசாத நல்ல நண்பன் புத்தகம்; புத்தகம் செலவாகாத செல்வம்; வாசிப்பு அறிவின் திறவுகோல் –போன்ற வாசகங்களை ஒட்டிவைக்கலாம்!

2. வீடு, பள்ளிவாசல், அலுவலகம் ஆகிய இடங்களில் நூலகம் உருவாக்கலாம்!

3. பெரிய நூலகங்களுக்குச் செல்லும் பழக்கத்தை மேற்கொள்ளலாம்!

4. நாள்தோறும் அரைமணி நேரமாவது வாசிக்க நேரம் ஒதுக்கலாம்!

5. நாம் வாசிப்பதோடு மற்றவர்களையும் வாசிக்கத் தூண்டலாம்!



(12.01.2014 அன்று சென்னை ரஹ்மத் பதிப்பக
ஆய்வரங்கத்தில் ஆற்றிய ஆய்வுரையின் எழுத்து வடிவம்)

No comments:

Post a Comment