Wednesday, January 07, 2015

உறவுகள் எனும் பொற்கூண்டு

உங்களுடன் நான் மனம்விட்டு... - 06


னிதன் கூட்டமாக வாழும் உயிரினம். பிறக்கும்போதே ஒரு குடும்பத்தின், சமூகத்தின், ஊரின், நாட்டின் உறுப்பினராக, குடிமகனாகவே பிறக்கின்றான். அவ்வாறே, ஒருவரின் பிள்ளையாக, ஒருவரின் உடன்பிறப்பாக, பேரனாக, பேத்தியாக, தாய் மாமனின் மருமகன் அல்லது மருமகளாக... இப்படி உறவின் பல்வேறு முகங்களோடுதான் பிறக்கின்றான்.

மனிதனுக்குத் தாயையோ தந்தையையோ அண்ணனையோ தம்பியையோ அக்காளையோ தங்கையையோ சித்தப்பாவையோ பெரியப்பாவையோ தாத்தாவையோ பாட்டியையோ இன்னும் பல உறவுகளையோ தன் விருப்பத்திற்கேற்பத் தேர்ந்தெடுக்கும் உரிமை இல்லை. ஏற்கெனவே அந்த உறவுகள் நிச்சயம் செய்யப்பட்டுவிட்டன. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்களைத்தான் உறவுகளாக ஏற்றாக வேண்டும்.

இவன் பிறந்தவுடன், முகம் பார்த்திராத அந்த உறவுகள் இவன்மீது பொழியும் பாசமழை இருக்கிறதே! அதுதான் இரத்தத்தின் அடையாளம்! பிறப்போடு கலந்து வரும் ஈரம்! கல்நெஞ்சையும் கரையவைக்கும் அதிசய மருந்து! என் மகன்! என் மகள்! என் தம்பி! என் தங்கை! என் மருமகன்! என் மருமகள்! என் பேரன்! என் பேத்தி என்று அன்பெனும் அருவியில் நீராடவைக்கும் மாயம்!

இந்தப் பாசத்தின் வேர் பின்னாளில் தெரியும். இவனுக்கு ஒரு சோதனை என்றால், ஓடோடி வந்து கை கொடுப்பார் உண்மையான உறவுக்காரர்; இவன் சந்தோஷப்படும தருணங்களில் அவரும் மகிழ்ந்துபோவார். நாம் அழும்போது அவரும் அழ, நாம் சிரிக்கும்போது அவரும் சிரிக்கக் காரணமாக இருப்பது என்ன? உறவு என்ற இயக்கிதான்! அவன் ஆடாவிட்டாலும் தசை ஆடும் என்பார்களே! தசை ஏன் ஆட வேண்டும்? அந்த இரத்தத்தால் உருவானதே தசை.

இதனாலேயே, இரத்த உறவையும் முத்த உறவையும் தன் அருட்கொடை என அல்லாஹ் குறிப்பிடுவான்:

அவனே மனிதனை நீரால் படைத்தான். அவனுக்குச் சொந்தங்களையும் பந்தங்களையும் ஏற்படுத்தினான். உம்முடைய இறைவன் பேராற்றல் உடையவன். (25:54)

இங்குசொந்தம்’ (நஸப்) என்பது இரத்த உறவையும்பந்தம்’ (ஸிஹ்ர்) என்பது திருமணத்தால் ஏற்படும் உறவையும் குறிக்கிறது. இவ்விரு உறவுகளுமே மனிதனுக்குப் பலம்தான். தாய், தந்தை, மகன், மகள் எனப் பிறப்பால் வரும் சொந்தங்களின் வகைகள் 26. மாமனார், மாமியார் என மணப் பந்தத்தால் வரும் உறவுகளின் வகைகள் 12. இந்த 38 வகை நேரடி உறவுகள் மட்டுமன்றி, வேறுவகை மறைமுக உறவுகளும் உண்டு. இந்த உறவுகள் எல்லாமே மனிதனுக்குக் கிடைத்த பலம், ஆறுதல், உதவிக் கரம்.

மற்றொரு வசனம் இப்படிச் சொல்லிக்காட்டுகிறது: துணைகளிடம் நீங்கள் அமைதியைப் பெறுவதற்காக, உங்களிலிருந்தே உங்களுக்குத் துணைகளை அவன் படைத்து, உங்களிடையே அன்பையும் பரிவையும் ஏற்படுத்தியிருப்பது அவனுடைய சான்றுகளில் அடங்கும். (30:21)

இரத்த உறவால் பாசமும் பாதுகாப்பும் கிடைப்பதைப் போன்றே, மண ஒப்பந்தத்தால் அன்பு, காதல், பரிவு, இரக்கம், அக்கறை எல்லாமே கிடைக்கின்றன என்பதற்கு இவ்வசனம் சாட்சி. வாழ்க்கைத் துணை கணவனோ மனைவியோ- சொந்தமாகவும் இருக்கலாம்; அந்நியமாகவும் இருக்கலாம். எங்கெங்கோ இருந்த இரண்டு உள்ளங்கள் உனக்காக நான்; எனக்காக நீ என்று மாறுவது மிகப் பெரும் வேதியியல் மாற்றம்.

ஒருவரை அண்டி மற்றவர் வாழ வேண்டிய ஒரு கட்டாயத்தைத் திருமண ஒப்பந்தம் உருவாக்கிவிடுகிறது. அவனது சுக துக்கங்களில் இவளும் இவளது நன்மை தீமைகளில் அவனும் சரிபாதி பங்கெடுத்து, வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்ளும் சட்ட அனுமதியை இந்த ஒப்பந்தம் வழங்குகிறது. எனவேதான், திருமண ஒப்பந்தத்தைவலுவான ஒப்பந்தம்’ (மீஸாக் ஃகலீழ்) என அல்லாஹ் வர்ணிக்கின்றான். (4:21)

ஆனால், இன்றைக்குச் சொந்தங்களின் எண்ணிக்கையே குறைந்துபோய், உறவுகளின் வகைகள் சுருங்கிப்போய்விட்டன. காரணம், ஒவ்வொரு குடும்பத்திலும் குழந்தைகளின் எண்ணிக்கை இரண்டாக, அல்லது ஒன்றாகக் குறைந்துபோனதுதான். அந்த ஒன்றையும் இரண்டையும்கூட வேண்டாவெறுப்பாக இன்றைய இளம் தம்பதியர் பெற்றுக்கொள்கின்றனர். முதலில் பிறந்த இரண்டும் பெண்களாகப் போனதால், ஆண் குழந்தைமீது ஆசைப்பட்டு மூன்றாவதாக ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்வோரும் உண்டு.

ஆஸ்திக்கு ஓர் ஆண்; ஆசைக்கு ஒரு பெண் என்ற கணக்கில் ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாகவே இன்றைய பெரும்பாலான குடும்பங்களில் காணமுடிகிறது. இதனால் அண்ணன் இருந்தால் தம்பி இல்லை; தம்பி இருந்தால் அண்ணன் இல்லை; அக்காள் இருந்தால் தங்கை இல்லை; தங்கை இருந்தால் அக்காள் இல்லை. பிறந்தது இரண்டுமே ஆணாக இருந்துவிட்டால், அக்காளும் இல்லை; தங்கையும் இல்லை. இரண்டும் பெண்ணாக இருந்துவிட்டாலோ அண்ணனும் கிடையாது; தம்பியும் கிடையாது.

இங்கேயே, அடுத்த தலைமுறையின் உறவுகள் மேலும் இளைத்துவிடுகின்றன. தாய்மாமன், சின்னம்மா, அல்லது பெரியம்மா, அத்தை போன்ற முதல்கட்ட உறவுகளே அற்றுப்போகின்ற பரிதாப நிலை. எனக்கெல்லாம் அண்ணன், தம்பி, அக்காள் என எல்லா உறவுகள் இருந்தாலும் பாசம் காட்ட, செல்லம் பாராட்ட ஒரு தங்கை இல்லையே என்ற ஏக்கம் பல தடவை ஏற்பட்டதுண்டு.

குடும்பங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் இன்றைக்கெல்லாம் பல உறவுகளைக் காண முடிவதில்லை. உறவுகள் இருந்தால்தானே கலந்துகொள்ள..? உறவுகளின் எண்ணிக்கை மட்டும் குறையவில்லை; தம்பதிகளின் எண்ணமும் அவர்கள் சஞ்சரிக்கும் உலகத்தின் வட்டமும் குறுகிப்போய் நாட்கள் பல ஆகிவிட்டன. இளைய தலைமுறை குடும்பங்கள் தங்கள் வட்டத்தை நான், என் மனைவி, என் மகன், என் மகள் என்று குறுக்கி, முள்வேலி போட்டு தனிக் காடாக வாழ்ந்துவருகின்றனர்.

ஈன்ற தாயை, ஈந்த தந்தையை உடன் வைத்துக்கொள்வதைப் பெரும் பாரமாக, சகிக்க முடியாத தொல்லையாக இளசுகள் நினைக்கின்றனர். பையன் ஏதோ முன்வந்தாலும் படித்த மனைவி உடன்படுவதில்லை. ‘தலைமுறை இடைவெளிஎன்று கருதி, இல்லங்களில் சேர்த்துவிட்டு, ‘ஹாய்யாக வாழ்க்கையை என்ஜாய்பண்ணவே விரும்புகிறார்கள். பாவம்! பெற்றோர்கள் தள்ளாத வயதில் தனிமையில் வாடுகின்றனர். ‘ஏன்!’ என்று கேட்க மூன்றாவது மனிதர்!

இதனால், குழந்தைகளுக்குப் பாட்டியின் பாசமோ தாத்தாவின் தாயன்போ கிடைப்பதில்லை. கணவன்-மனைவிக்கிடையே சண்டை சச்சரவு என்றாலோ குழந்தைகளுக்கு நோய்நொடி என்றாலோ ஆறுதலாக நாலு வார்த்தை பேச அங்கே நாதி இல்லை. முதலுதவி செய்ய மூத்த கரம் இல்லை. இல்லறத்தில், தொழிலில், சமையலில், கொடுக்கல் வாங்கலில் ஒரு பிரச்சினை என்று வரும்போது, முடிச்சை அவிழ்க்க பட்டறிவு அங்கே கிடையாது. நாளைக்கு இந்தத் தம்பதி பழையதாக மாறும்போது, இவர்களின் குழந்தைகள் குடித்துவிட்டு இவர்களைத் துரத்துவார்களே என்ற அச்சமோ தொலைநோக்கோகூட இவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை. நாம் எப்படியோ! அப்படியே நம் வாரிசுகள்!

சொந்தங்களை மதித்து வாழ்வதும் தேவைப்பட்டால் உதவிகள் புரிவதும் உறவுக்கு உரம் சேர்க்கும். நெருங்கிய உறவுகளை அடிக்கடி சந்தித்து, அல்லது வெளியூரில் இருந்தால் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரிப்பது அன்பைப் புதுப்பிக்கும். பெருநாட்களில் வாழ்த்துக் கூறுவதும் திருமணத்தில் துஆ செய்வதும் இழப்புகளில் ஆறுதல் சொல்வதும் உறவுகளை ஊக்குவிக்கும்; புண்பட்ட மனதிற்கு ஒத்தடம் கொடுக்கும். உறவுகளைப் பேணி வாழ்வது குறித்து குர்ஆனும் ஹதீஸும் நிறையப் பேசியிருக்கின்றன. உறவுகளுக்கு உதவுமாறு பத்துக்கும் மேற்பட்ட வசனங்களில் இறைவன் கட்டளையிடுகின்றான்ஒரு வசனம் இப்படிக் கூறும்:

நீதி செலுத்துமாறும் நன்மையே செய்யுமாறும் உறவுக்காரர்களுக்குக் கொடுத்து உதவுமாறும் நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகின்றான். ஈனச் செயல்கள், தீமை, எல்லைமீறல் ஆகியவற்றுக்கு அவன் தடை விதிக்கின்றான். (16:90)

அவ்வாறே, உறவின் முக்கியத்துவம் குறித்தும் உறவைத் துண்டிப்பதன் ஆபத்து குறித்தும் பேசுகின்ற நபிமொழிகள் பல உள்ளன.

ஒருவர், தமது வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதையும் தமது வாழ்நாள் (ஆயுள்) நீட்டிக்கப்படுவதையும் விரும்பினால், அவர் தமது உறவைப் பேணிவாழட்டும்என்கிறது ஒரு நபிமொழி. (புகாரீ)

தன் குடும்பத்திற்கு மட்டுமன்றி உறவுகளுக்கும் கொடுக்க வேண்டுமானால், அதற்கேற்பக் கூடுதலாக உழைக்க வேண்டியது வரும்; வருமானம் பெருகும். உடலுழைப்பால் ஆரோக்கியமும் கிடைக்கும். இந்த நபிமொழியிலிருந்து இன்னொரு கருத்தும் வெளிப்படுகிறது. வாழ்வாதாரம் விசாலமாக வேண்டுமென்றும் வாழ்நாள் நீட்டிக்கப்பட வேண்டும் என்றும் ஒருவர் விரும்புவது தவறாகாது என்பதே அக்கருத்து.

உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கம் செல்லமாட்டான்என எச்சரிக்கின்றது ஒரு நபிமொழி. (புகாரீ)

மறுமையில் தண்டனை கிடைப்பதுடன், இம்மையிலும் துரிதமாகத் தண்டனை அளிக்கப்படுவதற்கு ஏற்ற பாவம் அநீதியும் உறைவை முறிப்பதுமாகத்தான் இருக்க முடியும். (அபூதாவூத்)

போதும் என்று நினைக்கிறேன். நல்ல மாட்டிற்கு ஒரு சூடுஆரம்பமாக, உறவு முறிவதே சகோதரர்களுக்கு இடையில்தான்! சொத்துப் பிரிவினையின்போது இழைக்கப்படும் துரோகம், வருமானம் குறைவாக உள்ளவனை ஏளனமாகப் பார்ப்பது, வருமானம் சற்றுத் தூக்கலாக இருப்பவன் சகோதரனிடமே தலைக்கனத்தோடு நடந்துகொள்வது, அண்ணன்-தம்பியின் மனைவிமார்களால் எழும் குழப்பங்கள், ஈகோ எனப்படும் தன்முனைப்புஎனக் காரணங்களை அடுக்கலாம். ஒரு சிறு துரும்பு பெரிய பூகம்பமாகி ஜென்மப் பகையாகிவிடுவதும் உண்டு.

பெரும்பாலான சண்டைகளுக்குக் காரணம், புரிந்துணர்வில் ஏற்படும் இடைவெளிதான். அதென்ன? ஒருதாய் மக்களில் நீ பெரியவனா? நான் பெரியவனா என்ற ஈகோ! உறவுகளுடன் பேசும்போதுகூட எச்சரிக்கை தேவை! வார்த்தையில் நளினம் தேவை! தடித்த வார்த்தை உறவைக் கடித்துவிடும். தவறான புரிதல் இருந்துவிட்டால், சாதாரண சொல்கூட காயப்படுத்திவிடும். நாளடைவில் காயம் விரவி சீழ்பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அண்ணன்தானே பேசிவிட்டார்! அதனாலென்ன என்று தம்பி நிதானிக்க வேண்டும். தம்பிதானே இப்படி செய்துவிட்டான்! பக்குவம் வசப்படவில்லை. அதனாலென்ன என்று அண்ணன் பெருந்தன்மை காட்ட வேண்டும். குரல்கள் உயரும்போது ஒரு பக்கம் வாய் மூடிவிட்டால், சற்று நேரத்தில் மற்றொரு வாயும் தானாக மூடிவிடும். இல்லாவிட்டால், ஊர் வாய் திறந்துகொள்ளும்.

ஒருவர்மீது ஒருவர் அதிகாரம் செலுத்த வேண்டும் என எண்ணும்போது அங்கே பிளவுதான். ஒரே இரத்தத்திற்கிடையே உயர்வு-தாழ்வு பார்ப்பது எவ்வளவு பெரிய அறியாமை! நாளைக்கே அவன் உயர்ந்த நிலைக்கு வந்து, அதிகாரம் செலுத்தியவர் நிலை கீழாகிவிட்டால் என்ன செய்வது? பொருளாதார நிலையும் சமூக அந்தஸ்தும் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

நீங்கள் பெரிய மனது பண்ணி, சிரமப்படும் சகோதரனுக்கோ சகோதரிக்கோ உதவப்போகிறேன் என்றுபோய் வம்பில் மாட்டிக்கொள்ளவும் கூடாது. பிரஸ்டீஜ் பார்க்கும் இந்த உலகில், உங்கள் உதவியை உறவினர் ஏற்பாரா என்பதையும் பார்த்து ஆராய்ந்தபின்பே கையை நீட்ட வேண்டும். இல்லையேல், கை சுட்டுவிடும்; உதவப்போய் உபத்திரவமாகிவிடும்.

நீங்கள் வெளியூரிலிருந்து ஊருக்குப் போகிறீர்கள். உறவுகளைச் சந்திக்க அவர்களின் இல்லங்களுக்குச் செல்கிறீர்கள். உள்ளூரில் இருக்கும் உறவுகளுக்கு மத்தியில் அடிக்கடி புகைச்சல் ஏற்படுவது சகஜம். உங்களிடம் ஒருவர் மற்றவரைப் பற்றி தம் மனக் குறைகளைக் கொட்டித் தீர்ப்பார். அடுத்தவரிடம் செல்லும்போது, அவர் இவர்மீது நெருப்பை உமிழ்வார். இரண்டு பேருக்கும் தனித்தனியாக சமாதானம் சொல்லிவிட்டு, அவர்கள் மணிக்கணக்காகப் பட்டியலிட்ட அடுத்தவரின் குறைகளை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிட வேண்டும். தப்பித்தவறிகூட அடுத்தவரிடம் அவற்றைச் சொல்லிவிடக் கூடாது.

 பிரிந்த உறவுகளை ஒட்டவைக்க நம்மாலான முயற்சிகளைச் செய்யலாமே தவிர, பிரிக்க நாம் காரணமாகிவிடக் கூடாது. பிரிந்திருப்பவர்களும் ஈகோபார்ப்பதைக் கைவிட்டு, ஏதேனும் தக்க தருணம் வரும்போது சேர வழிதேட வேண்டும். சொந்தங்களிடையே வீராப்பு காட்டக் கூடாது. பிரிந்த உறவுகள் சேரும் சாட்சிகளைத் திரையில் காணும்போது கண் கலங்கும் நீங்கள், பிரிந்தவர்முன் நிஜத்தில் கண்கலங்கி ஏன் இணையக் கூடாது.

பதிலுக்குப் பதில் உறவாடுகின்றவர் (உண்மையில்) உறவைப் பேணுகின்றவர் அல்லர்; மாறாக, உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைகின்றவரே உறவைப் பேணியவர் ஆவார்’’ என்பது நபிமொழி. (புகாரீ)

ஆக, உறவு என்பது பொன் போன்றது; ஆனாலும், கட்டுப்பாடும் தன்னடக்கமும் இருக்க வேண்டிய ஒரு கூண்டு. எனவே, உறவுகள் ஒரு பொற்கூண்டு எனலாம்!
_______________________

No comments:

Post a Comment